கலை யாருக்குச் சொந்தம்? – தமிழ் சினிமா சொல்லும் சமகாலப் பாடம்

லீலாதரன்

மிழ் சினிமா ஒரு விசித்திரமான ரசவாதக் கூடம். இங்கே கதைகளும் கதாபாத்திரங்களும் மட்டுமல்ல, மனித உறவுகளும், தொழில்முறை மாண்புகளும் கூடவே உருவாக்கப்படுகின்றன. சில சமயம் சோதிக்கப்படுகின்றன. ஒரு படைப்பின் ஆன்மா அதன் கலைஞர்களிடம் இருக்கும்போது, அதன் உடல் தயாரிப்பாளரின் சட்டப்பூர்வமான சொத்தாகிறது. இந்த உறவு ஆரோக்கியமாக இருக்கும்வரை அதில் எவ்விதச் சிக்கலும் எழுவதில்லை. ஆனால், அதில் குழப்பங்கள் நிகழும்போது, அந்தப் படைப்பின் உண்மையான உரிமையாளர் யார்? அதைப் படைத்தவரா? அல்லது பணம் கொடுத்துப் பதிப்பித்தவரா? இந்தக் கேள்வி உலகம் முழுவதும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

சமீபத்திய தமிழ் சினிமா, இந்த இரண்டு கேள்விகளின் உச்சங்களையும் அடுத்தடுத்து கண்டிருக்கிறது. ஒருபுறம், கலையின் மீதான மரியாதையும், நட்பின் மீதான நம்பிக்கையும் வணிகத்தைத் தாண்டி நின்ற ஒரு தருணம். மறுபுறம், சட்டமும், தனிப்பட்ட உணர்வுகளும் மோதிக்கொண்ட ஒரு கசப்பான அத்தியாயம். இவ்விரண்டையும் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு, தமிழ் சினிமாவில் காப்புரிமையின் வரலாறு, அதன் சட்டப் பின்னணி, பொருளாதார முக்கியத்துவம், அறம் சார்ந்த போராட்டங்கள், தமிழ் சினிமாவின் தொழில்முறை அறம் ஆகியவை குறித்த முழுமையான சித்திரத்தை நமக்கு அளிக்கும் என நம்புகிறேன்.

காப்புரிமை – அடிப்படையும் சட்டமும்

பொது விவாதத்திற்குள் செல்வதற்கு முன், ‘காப்புரிமை’ என்றால் என்ன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியம். காப்புரிமை என்பது ஒரு படைப்பை உருவாக்கியவருக்கு, அந்தப் படைப்பின் மீது வழங்கப்படும் பிரத்யேக, சட்டப்பூர்வமான உரிமை. இந்தியக் காப்புரிமைச் சட்டம் 1957, ஒரு படைப்பாளிக்குக் கீழ்க்காணும் உரிமைகளை வழங்குகிறது.

  • படைப்பை நகலெடுக்கும் உரிமை (Right of Reproduction).
  • அதைப் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் உரிமை (Right of Distribution).
  • படைப்பைத் தழுவி வேறு படைப்புகளை உருவாக்கும் உரிமை (Right of Adaptation).
  • பொதுவெளியில் அதை அரங்கேற்றும் அல்லது ஒளிபரப்பும் உரிமை (Right of Public Performance / Communication).

புத்தகம், ஓவியம், இசை அல்லது திரைப்படத்திற்கு இந்த உரிமைகள் அதன் படைப்பாளியைச் சேரும். இந்தியாவில் பெரும்பாலான படைப்புகளுக்கு, படைப்பாளியின் ஆயுட்காலம் மற்றும் அதற்கடுத்த 60 ஆண்டுகள் வரை காப்புரிமை நீடிக்கும். கெடுவாய்ப்பாக, இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், காப்புரிமை குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவாகவே உள்ளது. இசைஞானி இளையராஜா போன்ற மேதைகள், தங்கள் இசையின் உரிமையைக் கோரும்போது, “இசை பொதுவானது” என்று சமூக ஊடகங்களில் எளிதாக வாதாடும் ஒரு சமூகத்தில்தான் நாம் இருக்கிறோம்.ஆனால், உலகளவில் காப்புரிமை மிகக் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது.

  • பிரிட்டனின் ‘தி வெர்வ்’ (The Verve) இசைக்குழு, தங்களின் புகழ்பெற்ற ‘Bitter Sweet Symphony’ பாடலுக்காக, ‘தி ரோலிங் ஸ்டோன்ஸ்’ (The Rolling Stones) குழுவின் பாடல் ஒன்றின் ஆர்கெஸ்ட்ரா வடிவத்திலிருந்து ஒரு சிறிய இசைப் பகுதியை மட்டும் பயன்படுத்த சட்டப்படி உரிமம் பெற்றனர். ஆனால், உரிமம் பெற்றதை விட அதிகமான இசைப்பகுதியைத் தங்கள் பாடலின் ஆதாரமாகப் பயன்படுத்தியதால், ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி தி வெர்வ் இசைக்குழு மீது வழக்குத் தொடரப்பட்டது. தீர்ப்பு ‘தி ரோலிங் ஸ்டோன்ஸ்’ குழுவிற்குச் சாதகமாக வந்தது. இதன் விளைவாக, ‘Bitter Sweet Symphony’ பாடலின் 100% காப்புரிமையும், அதன் மூலம் வந்த அனைத்து வருமானமும் (ராயல்டி) ரோலிங் ஸ்டோன்ஸ் குழுவிற்குச் சென்றது.
  • 2013இல் வெளியான ‘Blurred Lines’ என்ற பாடல் ராபின் திக், ஃபரேல் வில்லியம்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டு, உலகளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் பாடல், 1977இல் வெளியான புகழ்பெற்ற பாடகர் மார்வின் கே-யின் ‘Got to Give It Up’ என்ற பாடலைப் போல இருப்பதாக, அவரின் குடும்பத்தினர் வழக்குத் தொடுத்தனர். பல கட்ட விசாரணைக்குப் பிறகு, நீதிமன்றம் மார்வின் கே-யின் குடும்பத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. ‘Blurred Lines’ பாடல் மார்வின் கே-யின் பாடலின் காப்புரிமையை மீறியுள்ளது என்று கூறி, சுமார் 5 மில்லியன் டாலர்களுக்கு மேல் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது.
  • ஹாரி பாட்டர் புத்தகங்களில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்கள், இடங்கள், மந்திரங்கள் குறித்த தகவல்களைத் தொகுத்து ‘The Harry Potter Lexicon’ என்ற பெயரில், ஸ்டீவ் வாண்டர் ஆர்க் என்ற நூலகர் ஓர் இணையதளத்தை நடத்திவந்தார். அது ரசிகர்களிடையே பெரும் புகழ்பெற்றது. பின்னர், அந்த இணையதளத்தின் உள்ளடக்கத்தை அச்சுப் புத்தகமாக வெளியிட RDR புக்ஸ் என்ற பதிப்பகம் முயன்றபோது, ஹாரி பாட்டர் புத்தகங்களின் ஆசிரியை ஜே.கே.ரெளலிங், வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் ஆகியோர் காப்புரிமை மீறல் என்று கூறி வழக்குத் தொடுத்தனர். “இதுவோர் ஆய்வுப் படைப்பு, எனவே ‘நியாயமான பயன்பாடு’ (Fair Use) என்ற அடிப்படையில் அனுமதிக்க வேண்டும்” என்று பதிப்பகம் வாதிட்டது. ஆனால், நீதிமன்றம் ஜே.கே.ரெளலிங்கிற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. அந்தப் புத்தகம், மூலப் படைப்பிலிருந்து அதிகமாக நகலெடுத்துள்ளதாகக் கூறி, அதை வெளியிடத் தடை விதித்தது. நம்மூரிலும் இதுபோன்ற காப்புரிமை தொடர்பான நிகழ்வுகள் நிறைய உள்ளன.
  • ‘அலைபாயுதே’ திரைப்படத்தின் தொடக்கத்தில் இயக்குநர் மணிரத்னம், ‘Backstreet Boys’ குழுவின் ஒரு பாடலைப் பயன்படுத்த விரும்பியபோது, அவர்கள் கேட்ட ஒருகோடி ரூபாய் என்ற பெரிய தொகையைக் கொடுக்க முடியாததால், அதற்கு இணையாக ஏ.ஆர்.ரஹ்மான் ‘என்றென்றும் புன்னகை’ பாடலை உருவாக்கினார்.
  • The Hunt for Veerappan (2023) என்ற வீரப்பன் குறித்த ஆவணப்படத்தில், தங்கள் புகைப்படங்களையும் காணொளிகளையும் பயன்படுத்தக்கூடாது என ‘நக்கீரன்’ இதழ் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்குத் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
  • ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ (2018) திரைப்படம், 2007இல் ‘செங்கோல்’ என்ற பெயரில் தான் எழுதிய கதை என்றும், தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் (South Indian Film Writers Association) முறையாகப் பதிவு செய்துள்ளதாகவும் கூறி வருண் ராஜேந்திரன் என்ற உதவி இயக்குநர் வழக்குத் தொடுத்தார். நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் ஏற்பட்டாலும், வருண் ராஜேந்திரனின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, ‘சர்கார்’ திரைப்படத்தின் டைட்டிலில் அவரது பெயர் இடம்பெற்றது.

சினிமாவில் காப்புரிமையின் சிக்கலான வடிவம்: சினிமா என்பது பல்வேறு கலைஞர்கள் ஒன்றிணைந்து தயாரிக்கும் கூட்டுப் படைப்பு (Composite Work). இதில் பல படைப்பாளிகளின் உழைப்பும் கலந்திருக்கிறது.

கதை மற்றும் திரைக்கதை ஆசிரியர்: ஒப்பந்தத்தின் அடிப்படையில் கதையின் உரிமை இவருக்குரியது. பெரும்பாலான இயக்குநர்கள் அவர்களே கதாசிரியர்களாகவும், திரைக்கதை ஆசிரியர்களாகவும் இருப்பதால், திரைப்படத்திலிருந்து ஒருவேளை அவர்கள் விலகும் பட்சத்தில் அவரது கதையையும் திரைக்கதையையும் தயாரிப்பு நிறுவனம் பயன்படுத்த முடியாது.

ஒரு கதை திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டு வெளியான பின், வேறு மொழியில் ரீமேக் செய்யப்படும்போது, அதற்காக காப்புரிமைத் தொகையில் கதையாசிரியர்களுக்கும் பங்குண்டு. ஒருவேளை, முதல் பட வாய்ப்பு கிடைக்கிறதே என்று நினைத்து ஒப்பந்தத்தில் மொத்த உரிமையும் தயாரிப்பாளருக்கே எழுதிக் கொடுத்துவிட்டால் அத்தோடு மொத்தமும் காலி. உஷார்!

இசை: முன்பெல்லாம், பாடல்கள் வெளியாவதற்கும் அதன் பின்னர் திரைப்படங்கள் வெளியாவதற்கும், இடையில் நீண்ட இடைவெளி இருக்கும். அப்படி நீண்ட காலம் கேட்கப்படும் பாடல்கள்தான் படத்திற்குப் பப்ளிசிட்டி. இதனால், பாடல்கள் ‘கேசட்’ வடிவிலும், பின்னர் ‘சிடி’ வடிவிலும் வெளியாயின. எனவே, படப்பிடிப்பு துவங்கும்போதே ஆடியோ நிறுவனம் பெருந்தொகை கொடுத்து உரிமம் பெற்றுக்கொள்ளும் (பாடல்களை முதலில் வெளியிட்டு, அதில் வரும் தொகையை வைத்துப் பின்னர் படத்தை நிறைவு செய்த திரைப்படங்கள் ஏராளம்). இதனால், பெரும்பாலான ஆடியோ உரிமைகள் அந்தந்த ஆடியோ கேசட் நிறுவனங்களிடம் உள்ளன. உதாரணம்: T-Series, Sa Re Ga Ma, Five Star Audio.

இப்போது திரைப்பட பாடல்களின் YouTube, Jio Saavn, Spotify, Apple Music உட்பட முழு இணைய உரிமம், திவி ஆடியோ உரிமம், விமானத்தில் நீங்கள் கேட்கும் பாடல்களின் உரிமம், Caller Tune பாடல்களின் உரிமம், திரைப்படங்களில் பயன்படுத்தும் வேறொரு திரைப்பட பாடலின் உரிமம் என அனைத்தையும் Think Music, Sony Music போன்ற ஆடியோ நிறுவனங்களே வைத்திருக்கும். ஒருவேளை, ‘தங்கலான்’ படத்தின் ‘மினுக்கி மினுக்கி…’ பாடலை உங்கள் படத்தில் பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் செல்ல வேண்டியது இயக்குநர் இரஞ்சித்திடமோ, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடமோ, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷிடமோ அல்ல. Junglee Music எனும் அந்த ஆடியோ நிறுவனத்திடம்.

பாடலாசிரியர்: பாடல் வரிகளின் எழுத்துரிமை இவருக்குச் சொந்தம். இந்தப் பாடலில் இவருக்கும் அதிகாரப்பூர்வமாகப் பங்குண்டு. ஒருவேளை, பாடல் வெற்றி பெரும் பட்சத்தில், வேறு ஒரு புகழ்பெற்ற பாடலாசிரியரின் பெயரில் அந்தப் பாடலைத் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்க முடியாது. அதே சமயம், அந்தப் பாடலுக்குக் கிடைக்கும் ஊடக வெளிச்சத்தில் பாடலாசிரியருக்குக் கிடைக்க வேண்டிய பெயரும் புகழும் வேண்டுமென்றே மறைக்கப்பட்டால் / ஒதுக்கப்பட்டால், சட்டப்படி அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்கவும் அந்தப் பாடலாசிரியருக்கு உரிமை உண்டு. (உதாரணம்: ‘எஞ்சாயி எஞ்சாமி…’ – தெருக்குரல் அறிவு வழக்கு).

இயக்குநர்: படத்தை இயக்கும் படைப்புரிமை இவருடையது. திரைப்படம் என்பது ‘work made for hire’ ஆகக் (ஊதியத்திற்குச் செய்யப்படும் பணியாக) கருதப்படுகிறது. எனவே, இயக்குநர் ஓர் ஊழியராகக் கருதப்பட்டால், படம் மற்றும் அதிலுள்ள அனைத்துப் படைப்புகளின் copyright உரிமை தயாரிப்பாளருக்கே சொந்தமானது. Section 17, Copyright Act, 1957இன் படி, இயக்குநருக்கு இரு வகையான உரிமைகள் உள்ளன.

  1. Paternity Right

“இந்தப் படத்தை நான் இயக்கினேன்” எனக் கூறும் உரிமை

  1. Integrity Right

“அவரது கலைப்பணி திருத்தப்படாமல் இருக்க வேண்டும்” என்ற உரிமை

உதாரணமாக, இயக்குநரின் பெயரைப் படத்தில் குறிப்பிடாமல் இருப்பது அல்லது அவருடைய காட்சி மாற்றங்களை அனுமதியின்றி எடிட் செய்வது சட்ட ரீதியாக அவருடைய உரிமைக்கு எதிரானது. இயக்குநர் நினைத்தால் வழக்கு தொடுக்கலாம் (ஆனால், நம்மூரில் யாரும் அதைச் செய்வதில்லை — விஜய் மில்டன் உட்பட).

நடைமுறையில் பெரும்பாலான தயாரிப்பாளர்கள், இந்த அனைத்துப் படைப்பாளிகளுடனும் ஒப்பந்தங்களை மேற்கொண்டு, அவர்களின் உரிமைகளை ஒரு குறிப்பிட்ட தொகைக்குப் பெற்றுக்கொள்கிறார்கள். இதன் மூலம், இறுதி செய்யப்பட்ட முழுமையான திரைப்படத்தின் (Cinematograph Film) காப்புரிமை தயாரிப்பாளர் வசமாகிறது. அவரே அந்தத் திரைப்படத்தை விநியோகிக்கும், விற்கும், தழுவி எடுக்கும் முழு உரிமையையும் பெறுகிறார். இதுவும் சட்டப்பூர்வமான நடைமுறை. சட்டத்திற்கும் இரு காதுகள் உள்ளன.

தமிழ் சினிமாவில் காப்புரிமையின் வரலாறு: அலட்சியமும் போராட்டமும்

தமிழ் சினிமாவின் நூற்றாண்டுக் காலப் பயணத்தில், அதன் தொழிற்நுட்பமும், கதை சொல்லும் முறைகளும், நட்சத்திரங்களின் செல்வாக்கும் பல பரிமாணங்களில் வளர்ந்துள்ளன. ஆனால், அந்த வளர்ச்சிக்கு இணையாக, ஒரு படைப்பின் மீதான உரிமை குறித்த புரிதலும், அதற்கான போராட்டங்களும் படிப்படியாகவே நிகழ்ந்தன. ‘காப்புரிமை’ என்ற வார்த்தை இன்று பரவலாகப் பேசப்பட்டாலும், அது பொருட்டாகவே மதிக்கப்படாத காலம் ஒன்றும் தமிழ் சினிமாவில் இருந்தது. தமிழ் சினிமாவில் காப்புரிமை குறித்த விழிப்புணர்வு ஒரே இரவில் வந்துவிடவில்லை. அலட்சியத்தில் தொடங்கி, அங்கொன்றும் இங்கொன்றுமாக உரிமைக் குரல்கள் எழுந்து, இன்று சட்டப் போராட்டமாகவும், அறம் சார்ந்த விவாதமாகவும் மாறியுள்ளது. அதன் வரலாறு சுவாரஸ்யமானது.

  1. ஆரம்பக் காலம் (1918 – 1940): உரிமை உணர்வற்ற பொற்காலம்

தமிழ் சினிமாவின் தொடக்கக் காலத்தில், ‘காப்புரிமை’ என்பது கிட்டத்தட்ட இல்லாத ஒரு கருத்தாக்கமாகவே இருந்தது. மௌனப் படங்கள் – ஆரம்பக் காலப் பேசும் படங்களின் சகாப்தத்தில், ஒரு கதையை அல்லது இசையைச் “சொந்தம் கொண்டாடுவது” என்ற எண்ணமே இருக்கவில்லை.

பொதுச் சொத்தான கதைகள்: அக்காலப் படங்களின் கதைகள் பெரும்பாலும் புராணங்கள் (அரிச்சந்திரா, சாவித்திரி), இதிகாசங்கள் (மகாபாரதம், ராமாயணம்), சரித்திர நிகழ்வுகள், பிரபலமான நாடகங்கள் ஆகியவற்றைச் சார்ந்தே இருந்தன. இவை அனைத்தும் மக்களின் பொதுச்சொத்தாகக் கருதப்பட்டதால், கதைக்கான உரிமை கோரப்படவில்லை. உதாரணமாக, இந்தியாவின் முதல் முழு நீள மௌனப் படமான ‘கீசக வதம்’ (1918), மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டது.

நாடகங்களின் நீட்சி: பேசும் படங்கள் வந்தபோது, புகழ்பெற்ற நாடகங்களை அப்படியே படமாக்கினர். நாடகத்தின் கதையாசிரியர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் ஆகியோரின் உழைப்பு, திரைப்படத்தின் வெற்றியின் ஒரு பகுதியாகப் பார்க்கப்பட்டதே தவிர, அவர்களுக்கான உரிமை (Royalty) பற்றி யாரும் சிந்திக்கவில்லை. ஒருமுறை பணம் கொடுத்து வாங்குவதோடு அந்த உறவு முடிந்துவிடும்.

தயாரிப்பாளரே சக்கரவர்த்தி: இந்தக் காலகட்டத்தில், பணத்தைப் முதலீடு செய்யும் தயாரிப்பாளரே ஒரு படத்தின் முழுமையான அதிபதியாக இருந்தார். படைப்பின் அனைத்து அம்சங்களும் அவருக்கே சொந்தம் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது.

  1. ஸ்டுடியோக்களின் சகாப்தம் (1950 – 1970): கட்டமைக்கப்பட்ட உரிமைகளும் மறைக்கப்பட்ட தழுவல்களும்

ஏவிஎம், ஜெமினி, விஜயா-வாஹினி போன்ற மிகப்பெரிய ஸ்டுடியோக்கள் கோலோச்சிய காலம் இது. இங்கு, காப்புரிமை என்பது நிறுவனத்தின் கட்டுப்பெட்டிக்குள் பூட்டி வைக்கப்பட்டது.

சம்பளத்திற்குப் பணியாற்றிய படைப்பாளிகள்: எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள் போன்றோர் ஸ்டுடியோக்களில் மாதச் சம்பளத்திற்குப் பணிக்கான படைப்பு (Work for Hire) என்ற அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் உருவாக்கும் அனைத்துப் படைப்புகளும் ஸ்டுடியோவின் சொத்தாகவே கருதப்பட்டது.

‘இன்ஸ்பிரேஷன்’ என்ற பெயரில் தழுவல்கள்: இந்தி, தெலுங்கு, பெங்காலி மற்றும் ஆங்கிலப் படங்களின் வெற்றிகரமான கதைகளை, அதிகாரப்பூர்வமற்ற முறையில் தழுவி எடுப்பது இந்தச் சகாப்தத்தில் உச்சத்தில் இருந்தது. ‘இன்ஸ்பிரேஷன்’ என்ற பெயரில், சட்டப்பூர்வமான உரிமை பெறாமலேயே பல படங்கள் உருவாயின. தகவல் பரிமாற்றம் மெதுவாக இருந்ததால், இத்தகைய தழுவல்கள் எளிதில் கண்டறியப்படவில்லை.

சட்டம் இருந்தும் செயல்படாத நிலை: இந்தியக் காப்புரிமைச் சட்டம் 1957ஆம் இயற்றப்பட்டாலும், திரைப்படத் துறையின் நடைமுறைகள் அதை உடனடியாக உள்வாங்கிக்கொள்ளவில்லை. தயாரிப்பாளரின் அதிகாரமே இங்கு சட்டமாக இருந்தது.

பிற்காலத்தில், எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், சுஜாதா போன்றோர் தங்கள் படைப்புகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கிய பின்னரே, ‘கதை உரிமை’ என்பது சினிமாவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியது.

  1. இசைஞானியின் உரிமைப் புரட்சி (1980 – 1990): புதிய சகாப்தத்தின் தொடக்கம்

தமிழ் சினிமாவில் காப்புரிமை குறித்த விவாதத்தைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து, மாபெரும் முன்னுதாரணத்தை உருவாக்கிய பெருமை இசைஞானி இளையராஜாவையே சாரும். அதுவரை, இசையமைப்பாளர்களின் பங்கு என்பது படத்திற்கு இசையமைத்துக் கொடுப்பதோடு முடிந்துவிடும் என்பதே வாடிக்கையாக இருந்தது. மற்ற இசையமைப்பாளர் எதுவும் சொல்லாதபோது, இளையராஜா மட்டும் ஏன் காப்புரிமை கேட்டுக் குடைச்சல் கொடுக்கிறார் என்று நீங்கள் கேட்டால்,

இதோ பதில்.

இளையராஜா, ஒரு பாடலின் மெட்டு (Tune), அதன் இசைக்கோவை (Arrangement) ஆகியவை தனது அறிவுசார் சொத்து என்றும், அதன் மீது தனக்குத் தனிப்பட்ட உரிமை உண்டு என்றும் வாதிட்டார். ஒரு படத்தின் இசை, ஒலிநாடாக்களாக விற்கப்படும்போதும், வானொலியில் ஒலிபரப்பப்படும்போதும், அதன் மூலம் கிடைக்கும் ராயல்டியில் இசையமைப்பாளருக்கும் பங்கு வேண்டும் என்று அவர் நடத்திய சட்டப் போராட்டமே, தமிழ் சினிமாவின் முதல் பெரிய காப்புரிமைப் போர்.

இது இசையுலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. தயாரிப்பாளர்கள் – ஒலிநாடா நிறுவனங்கள் – இசையமைப்பாளர் ஆகியோருக்கு இடையேயான ஒப்பந்தங்களில் ‘ராயல்டி’ என்ற அம்சம் முக்கியத்துவம் பெற்றது. ‘இசை உரிமை’ என்பது தனிப்பட்ட சந்தை என்பதை இளையராஜா நிரூபித்தார். இன்று இசையமைப்பாளர்கள் தங்கள் படைப்புகள் மீது கொண்டிருக்கும் உரிமைகளுக்கு அவரே வழிகாட்டி.

அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலான திரைப்படங்களின் பாடல்களை வெளியிட்ட ‘Echo’ என்ற கேசட் நிறுவனமே இளையராஜாவின் பாடல்களை வெளியிடுவதற்காக, அவர் ஆதரவுடன் துவங்கப்பட்டதுதான். (அதன் பின்னர், நிறுனத்திற்குள் நடந்த ஊழல் மற்றும் நீதிமன்ற வழக்குகள் வேறு கதை). அதையும் தாண்டி, அப்போது போடப்பட்ட ஒப்பந்தங்களில் இதுபோன்ற உரிமைகள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. அந்த நேரத்தில், 40 ஆண்டுகளுக்குப் பிறகு நம் பாடல்களைத் திரைப்படங்களில் பயன்படுத்துவார்கள், YouTubeஇல் பாடல்கள் வெளியாகும் என்று யாருக்குத்தான் தெரியும்?

சமகால முரண்கள் : சிம்பு நடிக்கும் ‘வட சென்னை’யில் என்னதான் பிரச்சினை?

வெற்றிமாறனின் கனவுத் திரைப்படம் ‘வடசென்னை’. அதன் முதல் பாகம் தனுஷின் நடிப்பிலும் தயாரிப்பிலும் வெளியாகி, பெரும் வெற்றி பெற்றது. அதன் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், சில படைப்புரீதியான காரணங்களால் தள்ளிப்போனது.

‘வடசென்னை’யின் கதையுலகமும் (Universe), அதன் கதாபாத்திரங்களும் (ராஜன், குணா, செந்தில், அன்பு) வெற்றிமாறனின் சிந்தனையில் உதித்தவை என்றாலும், அதன் தயாரிப்பாளர் என்ற முறையில் தனுஷுக்கு அதன் மீது முழுமையான காப்புரிமை உண்டு. இந்நிலையில், வெற்றிமாறன் ‘வடசென்னை’ கதையின் ஒரு பகுதியுடன் தொடர்புடைய ஒரு புதிய திரைப்படத்தை, நடிகர் சிலம்பரசனை வைத்து இயக்கப் போவதாக அறிவித்தது, பலரின் புருவங்களை உயர்த்தியது. ஏனெனில், ‘வடசென்னை’ கதையுலகின் முழுமையான காப்புரிமையும் தயாரிப்பாளரான தனுஷிடம் இருந்தது. எனவே, இது எப்படிச் சாத்தியம் எனப் பேச்சுக்கள் எழுந்தன? யூடியூப் காணொலிகளில் ஆளாளுக்கு வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டினார்கள்.  ஆனால், நடந்ததோ வேறு.

அடுத்த நாளே வெற்றிமாறன் இதுகுறித்து ஒரு காணொலியை வெளியிட்டார். அதில், இந்தக் கதையை சிம்புவை வைத்து எடுப்பதற்கு தனுஷிடம் முழுச் சம்மதம் பெற்றதாகவும், அதற்கு ஈடாக ஒரு ரூபாய்கூட அவர் பெறவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

தனுஷ் நினைத்திருந்தால், சட்டப்படி அந்த முயற்சியைத் தடுத்திருக்கலாம் அல்லது பெரும் தொகையை உரிமைக்காகக் கேட்டிருக்கலாம் (கேட்டிருந்தாலும் கொடுக்க தயாரிப்பு நிறுவனம் தயாராக இருந்தது). ஆனால், வெற்றிமாறன் மீதிருந்த நட்பின் காரணமாகவும், தொழில்ரீதியாக அவர்களுக்குள் இருந்த தெளிவான புரிதல்கள் காரணமாகவும்  தடையில்லாச் சான்றிதழை (No Objection Certificate) தனுஷ் கொடுத்திருக்கிறார்.

நினைவுகளின் நீதிமன்றம்: நயன்தாராவின் நிலைப்பாடு

நடிகை நயன்தாராவின் திருமணத்தை மையமாக வைத்து நெட்ஃபிளிக்ஸ் தயாரித்த ‘Nayanthara: Beyond The Fairytale’ என்ற ஆவணப்படத்தில், தனுஷின் ‘வுன்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரித்த ‘நானும் ரவுடி தான்’ திரைப்படத்தின் காட்சிகளைப் பயன்படுத்தியது, இந்த மோதலின் மையப்புள்ளி.

சட்டரீதியாக ஒரு தெளிவான காப்புரிமை மீறல். தயாரிப்பாளரான தனுஷின் அனுமதி இல்லாமல், அவருக்குச் சொந்தமான திரைப்படத்தை வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்தியது தவறு. அதற்காக தனுஷ் சட்ட நடவடிக்கை எடுத்தது அவரின் உரிமை.

ஆனால், நயன்தாரா இந்த விஷயத்தைச் சட்டத்திற்குள் மட்டும் சுருக்காமல், அவர் எழுப்பிய ‘அறம்’ என்ற கேள்விதான் சர்ச்சையின் அடுத்த கட்டம். ‘நானும் ரவுடிதான்’ என்பது நயன்தாராவிற்குத் திரைப்படம் என்பதைத் தாண்டி அது அவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் ஒரு திருப்புமுனை. அவருக்கும் விக்னேஷ் சிவனுக்குமான உறவின் தொடக்கப்புள்ளி. அதனால்தான் அவர்களின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரே ‘ரவுடி பிக்சர்ஸ்’. எனவே, தன் திருமணத்தைப் பற்றிய ஆவணப்படத்தில், அந்தப் படத்தின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள அவர் விரும்புவதில் உணர்வுப்பூர்வமான நியாயம் இருக்கிறது — அது சட்ட நியாயம் அல்ல.

நயன்தாரா, அந்தப் படத்தைத் தன் வாழ்வின் ஒரு பகுதியாகப் பார்க்கிறார். தனுஷோ, அதைத் தன் நிறுவனத்தின் ஒரு வணிகச் சொத்தாகப் பார்க்கிறார். இரண்டுமே அவரவர் பார்வையில் சரி.

இதில், நயன்தாரா தன் உணர்வுப்பூர்வமான வாதத்தை முன்வைக்கக் கையாண்ட விதமே, சர்ச்சையை மேலும் சிக்கலாக்கியது. தனுஷின் குடும்பப் பின்னணியைக் குறிப்பிட்டு, தன்னைச் சுயமாக உருவானவள் என்று ஒப்பிட்டது, ஒரு தொழில்முறை சர்ச்சையில் அவசியமற்ற தனிநபர் தாக்குதலாக மாறியது. இது, அவரின் வாதத்தின் வலிமையைக் குறைத்து, அனுதாபம் தேடும் முயற்சியாகப் பார்க்கப்பட்டது.

பொதுவெளி விவாதங்களும், பக்கச்சார்பு நிலைப்பாடுகளும்

நயன்தாராவின் அறிக்கை வெளியானதும், சமூக ஊடகங்கள் போர்க்களமாகவே மாறின. இந்த விவகாரம், காப்புரிமை சார்ந்த சட்டப் பிரச்சினையாக மட்டும் பார்க்கப்படாமல், ஆண் – பெண் அதிகாரப் போட்டியாக உருமாறியது. இதை ஏன் அப்படிப் பார்க்கவேண்டும் என்று கேட்டால் இதோ உதாரணம்.

‘சந்திரமுகி’ திரைப்படத்தின் ‘காட்சி உரிமைகளை’ வைத்திருக்கும் AK International நிறுவனமும், “தங்களிடம் அனுமதி பெறாமல் நயன்தாரா அவரது ஆவணப்படத்தில் ‘சந்திரமுகி’ படத்தின் காட்சிகளைப் பயன்படுத்தியுள்ளார்” என்று 5 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நயன்தாரா மீது வழக்கு தொடுத்தது. தனுஷ் வழக்கு தொடுத்தபோது, திமிரி எழுந்த கூட்டம் இதைக் கண்டுகொள்ளவே இல்லை.

தனுஷ் – நயன்தாரா –  வெற்றிமாறன்

இந்த இரண்டு நிகழ்வுகளையும் இணைத்துப் பார்க்கும்போது, தமிழ் சினிமாவின் தொழில்முறை உறவுகளின் இருவேறு முகங்கள் தெளிவாகத் தெரிகின்றன. இதன் மையத்தில் இருப்பது தனுஷ் என்ற ஆளுமை.

வெற்றிமாறன் நிகழ்வில், அறம் சட்டத்தைத் தாண்டி நின்றது. நயன்தாரா நிகழ்வில், அறத்தைக் காரணம் காட்டிச் சட்டம் மீறப்பட்டது. ஒரு படைப்பின் மீதான தயாரிப்பாளரின் சட்டப்பூர்வமான உரிமை எங்கே முடிகிறது? ஒரு கலைஞரின் உணர்வுப்பூர்வமான சொந்தம் எங்கே தொடங்குகிறது? இந்தக் கேள்விக்கு எளிமையான பதில் இல்லை.இறுதியாக, இந்த நிகழ்வுகள் நமக்கு மிக அவசியமான ஒரு  பாடத்தைச் சொல்கின்றன.

சினிமா என்பது கலை மட்டுமல்ல, அது கோடிக்கணக்கான ரூபாய் புழங்கும் ஒரு தொழில். திரைப்படத்தின் வியாபாரமே காப்புரிமையை நம்பித்தான் இருக்கிறது. ரீமேக் உரிமைகள், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகள் (Satellite Rights), ஓடிடி உரிமைகள் (Digital Rights), இசை உரிமைகள் என ஒரு படத்தின் வருமானம் பல வழிகளில் பிரிக்கப்படுகிறது. இந்த அனைத்து உரிமைகளின் தாய்மடியே காப்புரிமைதான். எனவே, இங்கே ஒப்பந்தங்களும், காப்புரிமைச் சட்டங்களும் தவிர்க்க முடியாதவை.

ஒவ்வொரு படைப்பின்போதும், அதன் உரிமைகள் குறித்த தெளிவான, எழுத்துப்பூர்வமான உடன்படிக்கைகள் இருப்பது, எதிர்காலத்தில் வரக்கூடிய எண்ணற்ற சிக்கல்களைத் தவிர்க்கும். எதிர்காலத் தமிழ் சினிமாவிற்கு, இரும்புக்கரம் போன்ற தெளிவான ஒப்பந்தங்களும், சட்டரீதியான பாதுகாப்பும் தேவை. அதே சமயம், சட்டத்தின் வறட்டுத்தனமான விதிகளைத் தாண்டி, கலைஞர்களுக்கு இடையேயான பரஸ்பர நம்பிக்கையும், மனிதநேயத்துடன் கூடிய தெளிவான உரையாடல்களுமே பல சிக்கல்களைத் தவிர்க்கும் ஒரே வழி.

எதிர்கால சவால்: செயற்கை நுண்ணறிவும் (AI) உரிமைப் போராட்டங்களும்

நாம் இதுவரையில் மனிதர்களுக்கு இடையேயான உரிமைப் போராட்டங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், தொழிற்நுட்பத்தின் வடிவில் ஒரு புதிய, பிரமாண்டமான சவால் திரையுலகின் கதவுகளைத் தட்டுகிறது. அதன் பெயர் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence). இது, ‘படைப்பு’, ‘படைப்பாளி’ என்ற கருத்தாக்கங்களையே உடைத்தெறியக் காத்திருக்கிறது.

இன்று, AI கருவிகளால் படங்கள் (Midjourney) வரைய முடிகிறது, திரைக்கதைகளை (Sudowrite) எழுத முடிகிறது, இசையை (Suno AI) உருவாக்க முடிகிறது, ஏன், திரைப்படங்களுக்கான காட்சிகளைக் கூட (Google Veo) வடிவமைக்க முடிகிறது. அப்படியென்றால், AI செயலி உருவாக்கிய கதைக்கு யார் சொந்தக்காரர்? AI-க்குக் கட்டளைகள் கொடுத்த மனிதரா? அல்லது AI மென்பொருளை உருவாக்கிய நிறுவனமா? அல்லது, மனிதப் பங்களிப்பு இல்லாததால், அது யாருக்கும் சொந்தமில்லாத பொதுச் சொத்தா? அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இது தீர்க்கப்படாத சட்டப் போராட்டமாக உருவெடுத்துள்ளது.

தற்போது வெளியாகியிருக்கும் பாடல்களில், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் குரலை AI மூலம் மீள்உருவாக்கம் செய்த பல பாடல்களை YouTubeஇல் நீங்கள் கேட்டிருக்கலாம் (உதாரணம்: ‘அமுத கடல் உனக்குத்தான்…’ – சித்தா). அந்த வகையில் இதுபோன்ற மறைந்த பாடகர்களின் குரல்களைத் திரைப்படத்தில் பயன்படுத்திவருவது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கலைஞனின் குரல் அல்லது உருவத்தை, அவரின் அனுமதியின்றி அல்லது அவர் மறைவுக்குப் பின் AI மூலம் பயன்படுத்துவது யாருடைய உரிமை? அதற்கான வருவாய் யாருக்குச் செல்ல வேண்டும்? இது, காப்புரிமையைத் தாண்டி, ஒரு கலைஞரின் ‘ஆளுமை உரிமை’ (Personality Rights) என்ற புதிய சட்டப் போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது.

இசைஞானி இளையராஜா தன் இசைக்காகப் போராடிய சூழலில், இன்று ஓர் இசையமைப்பாளரின் பாணியை அப்படியே நகலெடுத்து, சில நொடிகளில் புதிய பாடல்களை உருவாக்கும் கிமி கருவிகள் வந்துவிட்டன. இது சட்டப்படி காப்புரிமை மீறல் ஆகாது என்றாலும், ஒரு கலைஞனின் தனித்துவமான பாணியைத் திருடும் அறமீறல் என்ற குற்றச்சாட்டு வலுப்பெற்று வருகிறது.

AI தொழில்நுட்பம், தயாரிப்புச் செலவுகளைக் குறைத்து, புதிய படைப்பின் சாத்தியங்களுக்கான கதவைத் திறக்கலாம். ஆனால், அதுவே எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், நடிகர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தையும், தனிப்பட்ட உரிமைகளையும் கேள்விக்குள்ளாக்கும் மாபெரும் சக்தியாகவும் உருவெடுத்துள்ளது. இதுவே தமிழ் சினிமா அடுத்து சந்திக்கவிருக்கும் மிகப்பெரிய உரிமைப் போராட்டம்.

எதிர்காலத்திற்கான பாடம்

தமிழ் சினிமா, காப்புரிமை விஷயத்தில் நீண்ட தூரம் பயணித்திருக்கிறது. அலட்சியமான தழுவல்களில் இருந்து, உரிமைகளுக்காகப் போராடும் விழிப்புணர்வு நிலையை அடைந்திருக்கிறது. ஓடிடி, செயற்கை நுண்ணறிவு எனத் தொழிற்நுட்பம் வளர்ந்துவரும் இந்தக் காலகட்டத்தில், காப்புரிமை குறித்த விவாதங்கள் இன்னும் தீவிரமடையும். எனவே, சட்ட அறிவையும், தொழில்முறை அறத்தையும் ஒருசேர வளர்த்துக்கொள்வதே, அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் முன்னால் உள்ள மிகப்பெரிய சவால்.

சட்டமும், தொழிற்நுட்பமும், உறவுகளும் பின்னிப்பிணைந்த இந்த நீண்ட பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் கற்கும் பாடம் ஒன்றுதான். சட்டமும் அறமும் என்பவை எதிரெதிர் துருவங்கள் அல்ல; அவை ஒரு படைப்பின் இரு கண்கள். ஒன்றில் தெளிவான விதிகளும், மற்றொன்றில் பரஸ்பர நம்பிக்கையும் இருக்கும்போதுதான், கலை அதன் முழுமையான பார்வையுடன் மிளிரும். வெற்றிமாறன் – தனுஷ் நிகழ்வில் நம்பிக்கை முதன்மை பெற்றது; நயன்தாரா – தனுஷ் நிகழ்வில் சட்டம் தன் வலிமையைக் காட்டியது. இரண்டுமே நமக்கு அவசியமான பாடங்களே.

[ [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger