“ஓன் வயசு இருக்கப்ப இந்தக் கடையவே நான்தான் நடத்துனேன். நீ என்னனா நாலு பொட்டலம் கட்டவே சலிச்சிக்கிற…” மகன் மனோஜிடம் சொல்லிக்கொண்டே எண்ணெய் கொதிக்கும் பெரிய கடாயில் அரைத்து வைத்திருக்கும் மாவை எடுத்து வடை சுட்டுக்கொண்டிருந்தான் நடராஜன். காலை நேரம் என்பதால் வழக்கம் போல கூட்டம் அதிகமாக இருந்தது. நடராஜனின் மனைவி வேக வேகமாக டீ போட்டு வைக்க வைக்க பெஞ்சில் அமர்ந்திருந்த சிலர் எடுத்துக் குடிக்கத் துவங்கினார்கள். காத்திருந்த அனைவருக்கும் டீ சென்ற பிறகு, பொட்டலம் மடித்துக்கொண்டிருக்கும் மகனிடம் சென்றாள். “அப்டியே யாருக்கோ செய்றத போல உம்முனு மூஞ்ச வச்சிக்குவான்…” எனச் சொல்லிக்கொண்டே கச்சிதமாக வெட்டப்பட்டு அடுக்கி வைத்திருந்த பேப்பரை எடுத்து, அவளும் பொட்டலம் கட்டத் துவங்கினாள். அதுவரை எதுவும் பேசாமல் முகத்தை இறுக்கமாக வைத்திருந்த மனோஜ், “அம்மா, நீ போமா… நான் கட்றேன்” எனக் கூற, “ஆமா… நீதான் பொட்டலம் கட்டுன்னு சொன்னவுடனே மூஞ்ச உம்முனு வெச்சிக்கிட்டியே” எனச் சொல்லிக்கொண்டே மகனுக்கு உதவிக்கொண்டிருந்தாள்.
டீ குடித்துக்கொண்டிருந்த பெருசு ஒண்ணு, “அட என்னப்பா நீ… ஓன் வயசு இருக்கும்போதெல்லாம் உங்கப்பா இந்தக் கடையில பம்பரமா சொழலுவாப்ல. நீ என்னனா இப்படி இருக்க…” என்றதும் மனோஜுக்கு அந்தப் பெரியவர் மீது கோபம் வந்துவிட்டது. நிமிர்ந்து அவர் முகத்தைச் சற்றுக் கடுப்போடு பார்த்தான். தூரத்தில் ஒலிபெருக்கியில் ஏதோ இரங்கல் செய்தி சொல்வதுபோல சத்தம் கேட்டது. என்ன செய்தியா இருக்கும் என எல்லோருமே கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்கள். நடராஜன் வடைகளைத் திருப்பிக்கொண்டே மீசையை முறுக்கிக்கொண்டு அமர்ந்திருந்த சுப்பையாவிடம் கேட்டான், “என்னாச்சி மீச… யாரா இருக்கும்?” பேப்பர் படித்துக்கொண்டிருந்த சுப்பையா, “மொதல்ல என்ன சொல்றானுவோனே புரிபடல. ஆராச்சிம் செத்துட்டாங்களா, இல்ல இந்தக் கொல்லிமல செட்டுக்காரனுங்க வண்டியான்னே தெரியல. வண்டி கிட்ட வரட்டும், பாப்போம்” என்றார். டீ கடையினுள்ளே பேச்சுகள் இப்படி இருக்க… வெளியே ஒரு ஸ்கூட்டி வேகமாக வந்து நின்றது. அதன் முன்னே மாட்டியிருந்த பால் வாளியை எடுத்துக்கொண்டு முத்து உள்ளே வந்தான். “என்ன முத்து, மைக் சத்தம் மாரி கேக்குது” என்றார் நடராஜன். “ஆமாண்ணே… மணி முத்து தாத்தா செத்துட்டாரு.” “ஐயோ!” என்ற நடராஜன் “எப்டிப்பா?” என்றார், கூடவே மற்றவர்களும் அதிர்ச்சியடைந்தனர். “எனக்கும் தெரியாது, பால் கறந்துக்கிட்டு இருக்கும்போது குன்னாயி அழுதுகிட்டு ஓடுனது. சரி என்னவா இருக்கும்னு போய் பாத்தா மணிமுத்து தாத்தா செத்துட்டாருங்கறாங்க… நான் அப்டியே வெளியிலேயே நின்னு பாத்துட்டு வந்துட்டேன். இந்தப் பால குடுக்கணுமேனுதான் நான் இன்னும் போகல. இனிமேதான் போகணும். கரிகாலன் மாமாவுக்குச் சொல்லிட்டாங்க போல, கார்ல கௌம்பிட்டதா சொன்னாங்க. இப்போ எல்லாத்தையும் மில்ட்ரிகாரு மாமாதான் செய்றாரு” என்றான். அவன் நடராஜனிடம் சொல்லிக்கொண்டிருந்தாலும் அந்த டீ கடையே முத்துவை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then