காண்டாமிருகப் பெண்
(யாராலும் விரும்பப்படாதவள்; எல்லோராலும் பயன்படுத்தப்பட்டவள்)
உன்னைப் பைத்தியம் என்கிறார்கள்
மண்டியிடச் சொல்லும்போது மண்டியிடும் அளவுக்கு நீ பைத்தியம் இல்லை என்பதால்.
தலையிலும் இதயத்திலும்
ஆறவே ஆறாத காயங்களைக் கொண்டிருக்கும்
பெருத்தப் பெண்ணே!
நான் உனது ஒளியைப் பார்த்தேன்
அது பிரகாசமாயிருந்தது.
நீ அவர்களுக்கு அன்பைத் தந்தாய்
அவர்கள் உனக்குக் கழிவைத் தந்தார்கள்
நீ அவர்களுக்கு உன்னைத் தந்தாய்.
அவர்கள் உனக்கு ஹாலிவுட்டைத் தந்தார்கள்.
அவர்கள் உன்னைப் பார்த்துப்
பூனையைப் போல உறுமுகிறார்கள்
காரணம், எப்படி கர்ஜிப்பது என்று உனக்குத் தெரியும்
அதைச் செய்துகாட்டவும் தெரியும்.
காண்டாமிருகப் பெண்ணே!
மிகச் சிறிய உலகின் மிகப்பெரிய அன்னை.
நீ கண்களை மூடினாய்.
வெளியே இருண்டிருந்ததால் உன் தலைக்குள் நியான் ஒளி சுழல்கிறது
நீ பைபிள் படித்தாய்,
ஆனால் கடவுள் வரவேயில்லை.
உன் தந்தை உன்னை நேசித்திருப்பார்
ஆனால் அக்கம்பக்கம் இருப்பவர்கள் என்ன சொல்வார்கள்?
உன்னை அவர்கள் வெறுக்கிறார்கள் அம்மா
காரணம் அவர்களது பைத்தியக்காரத்தனத்தையும்
கொடூரங்களையும்
நீ அம்பலப்படுத்துகிறாய்.
அவர்கள் உண்மையாக்கிய ஆயிரமாயிரம்
கொடுங்கனவுகளை
உன் கண்களில் அவர்கள் பார்க்கிறார்கள்
கறுப்புப் பெண். மோசமான பெண்.
உனது பெருத்தத் தன்மையை உனது நெஞ்சில்
ஒரு பதக்கத்தைப் போல அணிந்துகொள்.
காரணம் அதை நீ வென்றிருக்கிறாய்.
வலிமையான பெண். வெல்ல முடியாத ஆதி வீராங்கனை.
உனது தழும்புகளை நகைகளைப் போல அணிந்துகொள்
காரணம், ரத்தத்தை விலையாகத் தந்து அவற்றைப் பெற்றிருக்கிறாய்.
உன்னைப் பைத்தியம் என்றார்கள். நீயும் கிட்டத்தட்ட அதை நம்பிவிட்டாய்.
உன்னை அழகற்றவள் என்றார்கள். நீ உன்னை உனக்குப் பின்னால் மறைத்துக்கொண்டாய்
பின்னர் அவர்கள் சுமத்திய அவமானத்தில் உழன்றுகொண்டிருந்தாய்
காண்டாமிருகப் பெண்ணே
இந்த உலகம் பார்வையற்றது
அறிவுமற்றது
நீ எவ்வளவு அழகென்று
அதற்குப் பார்க்க இயலாது
நான் உனது ஒளியைப் பார்த்தேன்
அது பிரகாசித்துக்கொண்டிருந்தது.
l

இளம் ரத்தம் (ரெமா ஒலுக்பலாவுக்கு)
அவர்கள் உன்னைக் கொன்றுவிட்டதாக
நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்
ஆனால் நான் நேற்று உன்னைப் பார்த்தேன்
பாக்கெட்டுகளில் கைகளை நுழைத்தபடி
காத்துக்கொண்டிருந்தாய்
உன்னைப் பறிக்கும் ஒரு உண்மையான போராட்டத்துக்கு.
ஆக முக்கியமான ஒரு போராட்டத்திற்காக.
உனது ‘பார்த்துக்கலாம் போ’ சிரிப்பை
நீ சிரித்துக்கொண்டிருந்தாய்.
உனது கண்களில் ரத்தத்தோடும்
சுதந்திரம் என்று துடிக்கும் இதயத்தோடும்.
இளம் ரத்தமே!
உன்னைக் கொன்றுவிட்டதாக அவர்கள்
நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நான் நேற்று உன்னை
விளையாட்டுத் திடலில் பார்த்தேன்.
வியர்த்து மினுமினுக்கும் உன் கறுப்புத் தோல்;
வெடிகுண்டைப் போலிருந்த பந்தை
வளையத்துக்குள்
குறி தவறாமல்
நீ வீசிக்கொண்டிருந்தாய்.
அடுத்த முறை இந்த விளையாட்டு இருக்காது
இப்போதெல்லாம் நீ ஆடுவதேயில்லை.
அவர்கள் உன்னைக் கொன்றுவிட்டதாக
நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்
ஆனால் நேற்று நான் உன்னைப் பார்த்தேன்
சுவரில் உன் முதுகு அழுந்த
விலங்குகளில் உன் தசைகள் புடைக்க
கண்கள் உண்மையை உள்வாங்கியபடி
உதடுகள் அதைப் பேசிக்கொண்டிருந்தபடி.
எப்படி நேசிக்க வேண்டும் என்று
உன் இதயம் கற்றுக்கொண்டிருந்தது.
யாரை வெறுக்க வேண்டும் என்று
உன் தலை கற்றுக்கொண்டிருந்தது.
விடுதலையை நோக்கிப் பாயத்
தயாராக இருந்தது
ரத்தம்.
இளம் ரத்தமே!
இளரத்தங்களுக்கு வீணாக்க ரத்தம் இல்லை,
ஊசிகளில், மதுவிடுதிகளின் தரைகளில்,
இன்னொரு இளரத்தத்தின்
விடுதலையைத் தாமதப்படுத்தும்
அன்னிய நிலங்களில்.
எங்களது புதிய உடல்களில்
சோர்வான ரத்தம் வேண்டாம்
சோகை ரத்தம் வேண்டாம்.
உறைந்த ரத்தமும் வேண்டாம்.
உன்னைக் கொன்றுவிட்டதாக
அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நான் நேற்று உன்னைப் பார்த்தேன்
இளரத்தங்கள் எல்லோரும்
உனக்குப் புதிய ரத்தத்தைப்
பாய்ச்சியிருக்க வேண்டும்
எல்லாம் வலிமையான ரத்தம்
எல்லாம் வளமான ரத்தம்
நாளையை நோக்கி
உனது நரம்புகளின்
வழியாகப் பாயும் ரத்தம்.
l
மழையை யாரும் நிறுத்த முடியாது
பாருங்கள், புல் வளர்ந்து கொண்டிருக்கிறது.
பாருங்கள், நீங்கள் பார்ப்பதைக் காட்டிக்கொள்ளாதீர்கள்.
உங்கள் கண்கள் இயல்பாகச் சுழலட்டும், ஆனால்
பாருங்கள்!
சிறையின் எந்த வளாகத்திலும் அதைப் பார்க்க முடியும்
அது வளர்ந்துகொண்டிருக்கிறது.
பிளவுகளில், இடைவெளிகளில்,
எஃகுக்கும் கான்கீரீட்டுக்கும் இடையில்,
செத்த, சாம்பல் புழுதியிலிருந்து,
மிகத் தைரியமாகப் புற்கள் முளைத்துக்கொண்டிருக்கின்றன,
துணிவோடும், உயிர்ப்போடும்.
பாருங்கள். புல் வளர்ந்துகொண்டிருக்கிறது.
விரிசல்களுக்கிடையில் அது வளர்கிறது.
புல் சட்டத்துக்குப் புறம்பானது என்கிறார்கள் காவலர்கள்.
சிறையில் புல் தடை செய்யப்பட்டதென்றும்.
புல் திமிர்பிடித்ததென்று சொல்கிறார்கள் காவலர்கள்.
அது ஆணவப் புல், தீவிரப் புல், பயங்கரவாத புல்,
அடிப்படைவாதப் புல்
அதைக் களை என்கிறார்கள்.
மோசமான களைகள், கறுப்புக் களைகள்,
அழுக்கான, காட்டுமிராண்டி (சிவப்பு) இந்திய, கள்ளத்தனமாகக் குடியேறிய, இடதுசாரி, கம்யூனிசக் களைகள் – பாழாய்ப்போனவை!
எனவே காவலர்கள் புல்லை அழிக்க நினைக்கிறார்கள்.
அதை வேரோடு பிடுங்கி எறிகிறார்கள்
அதை நஞ்சூற்றிக் கொல்ல நினைக்கிறார்கள்
அதைத் தாக்குகிறார்கள், வெட்டிச் சாய்க்கிறார்கள்
சிறைச்சாலைகளில் சில புற்கள்
தூக்கில் தொங்கியிருக்கின்றன;
காயம்பட்ட நிலையில்.
“தற்கொலைகள்”
காவலர்கள் சொல்கிறார்கள்: புல்லுக்கு அனுமதியில்லை, புல் வளர அனுமதிக்காதீர்கள்.
நீங்கள் புல்லை உளவு பார்க்கலாம்
புல்லை அடைத்துவைக்கலாம்
புல்லை வெட்டி எறியலாம், தற்காலிகமாக.
ஆனால் அது வளர்வதை நீங்கள் தடுக்கவே முடியாது.
பாருங்கள். புல் அழகாக இருக்கிறது.
காவலர்கள் அதை வெட்ட யத்தனிக்கிறார்கள்
ஆனாலும் அது வளர்ந்துகொண்டேயிருக்கிறது.
புல் ஒரு கவிதையாக வளர்கிறது.
புல் ஒரு பாடலாக வளர்கிறது.
வாழ்வெனும் வரைதிரையில் புல்
தன்னை ஒரு ஓவியமாகத் தீட்டிக்கொள்கிறது
அந்தப் படம் தெளிவாக இருக்கிறது
அந்தப் பாடல் உண்மையாக இருக்கிறது
மயக்கமூட்டும் அந்தக் குரல்கள்
அவ்வளவு அழகாகப் பாடுகின்றன
தொலைவில் இருக்கும் மக்கள்கூட
அந்தப் புல்லைக் கேட்க முடியும்.
அவ்வளவு அழகாக, அவ்வளவு வலிமையாக.
பின்னர் மக்கள் ஆடத் தொடங்குகிறார்கள்
பின்னர், மக்கள் பாடத் தொடங்குகிறார்கள்.
அது விடுதலையின் பாடல்.
பாருங்கள், புல் வளர்ந்துகொண்டிருக்கிறது.
l
ஆசிரியர் குறிப்பு
வாழ்தல் என்பதே மகத்தான நம்பிக்கை, அதுவும் அசாட்டா ஷகுராக வாழ்தல் என்பது. இனவாதம் தனது மிக மோசமான பரிமாணங்களை அமெரிக்காவின் வாழ்வியலில் வெளிப்படுத்திய ஓர் இருண்ட காலகட்டத்தில்தான் அசாட்டா பிறக்கவும் வளரவும் செய்கிறார். சிறுவயதிலிருந்தே எதிர்ப்பின் வடிவங்களைப் பார்த்து வளர்கிறார். “உன்னை விட யார் சிறந்தவர்?” என்று பாட்டியெழுப்பும் கேள்விக்கு “யாருமில்லை பாட்டி” என்று பதில் சொல்கிறார் அசாட்டா. “அதை உன் மண்டையில் நன்றாக ஏற்றிக்கொள். எப்போதும் தலை நிமிர்ந்து நில், நீ யாரிடமும் அவமானப்படுவதை எப்போதும் நான் விரும்ப மாட்டேன்” என்று சொல்லிச் சொல்லிதான் பாட்டி வளர்க்கிறார். தன்னை ஒரு புரட்சியாளர் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் அசாட்டா, பிளாக் பாந்தர்ஸ், பிளாக் லிபரேஷன் ஆர்மி போன்ற அமைப்புகளில் தீவிரமாகச் செயல்பட்டவர். நியூயார்க் காவல்துறை அதிகாரி ஒருவர் தனது புத்தகத்தில் அசாட்டாவை ‘பிளாக் லிபரேஷன் ஆர்மியின் ஆன்மா’ என்கிறார்.
அசாட்டாவை எப்படியாவது ஒடுக்க வேண்டும் என்று அவர் மீது கொலை, கொள்ளை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை அமெரிக்கா சுமத்துகிறது. 26 முதல் 33 வருடங்கள் வரை தண்டனை விதிக்கப்படும் அசாட்டா, 1979இல் தோழர்களின் உதவியோடு சிறையிலிருந்து தப்பித்து, கியூபாவில் தஞ்சமடைகிறார். அவரை மீண்டும் அமெரிக்காவுக்குக் கொண்டு வரும் முயற்சிகள் பெரிதாகப் பலனளிக்கவில்லை. 2013இல் அவரை மிகத் தீவிரமாகத் தேடப்படும் தீவிரவாதியாக திஙிமி அறிவிக்கிறது. 2025 செப்டம்பர் 25 அன்று கியூபாவில் இறக்கிறார் 78 வயதான அசாட்டா.
அசாட்டாவின் தன்வரலாற்றில் இடம்பெறும் அவருடைய கவிதைகளில் சில இவை. அனைத்துக்குப் பிறகும் வாழ்க்கை மீதான நம்பிக்கை, போராட்டத்தின் உயிர்ப்பான தேவையையும் வாழ்வின் மீதான நம்பிக்கையையும் எளிய மொழியில் ஆனால் வலிமையாக வெளிப்படுத்தும் கவிதைகள் இவை.
ஜொவன் டெபோரா பைரன் என்கிற தன் பெயரை 1971இல் அசாட்டா ஒலுக்பலா ஷகுர் என்று மாற்றிக்கொள்கிறார். மேற்கு ஆப்பிரிக்கப் பெயரான அசாட்டாவின் பொருள் போராடுபவள். ஒலுக்பலா என்பது மக்களுக்கான அன்பையும், ஷகுர் என்பது நன்றியுணர்வையும் குறிக்கும் பெயர்கள்.
அசாட்டா என்பது நம்பிக்கையின் போராட்டம்; போராட்டத்தின் நம்பிக்கை.




