உறைந்த மழையாக நிற்கின்றது என்னுடல்
ஈரப்பசையின் மெச்சுதலில் அத்தனை மாயரூபமும் என்னுள்
எந்தக்காரியப்பாடும் பிளவும் சிறுமீக்கூற்றுமில்லாமல்
மண்ணோடொத்த புதைபொருளாய் ஒன்றானோம்
நானும் மழையும்
துளிநிமிடத்துக்குள்
என்கண்முன் அத்தனை நிறச்சித்திரங்களும் காட்சியாகிக் கிறங்கின
பெரும் ஓங்கரிப்போடு முன்னே வந்த இருட்டு
கொய்தல் மனநிலையைத் தருமென்பதால்
நன்றாகவே அமைதி காத்தேன்
சுற்றும் பார்த்துவிட்டு
ஒரு நீட்டோலையைத் தந்தது
சதைப்படலம் படர்ந்தது போலாகிவிட்ட
கண்ணால் இடுக்கிப் பார்த்ததில்
கடுநோய்பீடித்தது போலானேன்
இருளை விட்டு வெகுதூரம் நடக்க ஆரம்பித்தும்
எங்கும் சூழ்கிறது
தொல்லியல் தடயங்களைச் சேகரிக்கும்
மனநிலையத்துக் காலடிகளைத் தேட ஆரம்பித்தேன்
எங்கோ குலவைச் சத்தம் கேட்கிறது
நகர்ந்து நகர்ந்து போகிறேன்
அதோ….
செங்குத்துக் காலிட்டுத் தானே கருக்கொண்டவளாய்
என் அதகளத்தி தெரிகிறாள்
கலவைச் சேறாய்ப் பலநிறங்கள் அவளிடமிருந்து பீறீட்டுக்கொண்டேயிருந்தன
வழிந்தோடி நின்று…..
இப்பொழுது நானும் நிற்கத் தொடங்கினேன்.
♦
இருட்டு வெளியிலிருந்து என்னைப் பார்க்கிறது
அதனோடு எனக்கு இம்மியளவும் உகந்தசொல் ஏதுமில்லை
எனத் தெரிந்து பாலையின் இடைக்கொள்ளை போலத் தட்டிக்கொண்டேயிருந்தது
சில நாட்களுக்கு முன்பு
இருட்டும் உடலும் நன்னீரில் தேங்கி நிற்கும் பாசி
என வசனம் பேசியதிலும் எவ்வித ஈர்ப்புமில்லை
வெறுமையின் சலசலத்தலான அதனிலிருந்து நகர்ந்து
மனிதரும் இயற்கையும் சேர்ந்த தொடர் இயக்கத்தில்
உற்பத்திக்கான சாதனமாகச் சரக்குகள் விற்பனையாகும்
பெரும்சந்தை ஒன்றில் தன்னிச்சையாய்ச் செல்கிறேன்
சந்தை எங்கும் தீயல்மணம் சுமந்து
கொடிக்கள்ளிபோல இருட்டு மூச்சழுத்திப் பின் தொடர்ந்தது
அதோ எம்பாணன் மொழியில் செப்பமாகப் பாடத் துவங்கிவிட்டான்
எலும்பினை உருக்கும் நல்ல அசரீரியில்
தைலக்காப்பு நறுமணத்தோடு கண்விழித்த அதகளத்தி
பால்கட்டிய வலிநீக்கும் சிறுமகவாய் என்னைத் தாங்கிக்கொள்கிறாள்.
வெளியெங்கும் பரவியிருந்த இருட்டு
தீச்சுடராய் மாறி நகரத் தொடங்கியது.
♦