18.01.1951இல் சென்னையில் பிறந்த ‘எஸ்.கே. மதுசூதன்’ என்கிற ‘ஆத்மாநாம்’, 06.07.1984இல் பெங்களூருவில் முப்பத்து நான்கு வயதுகூட முடியாமல் அற்பாயுளிலேயே இறந்துபோனார். நவீனத் தமிழ்க் கவிதைக்குப் பெரும் பங்களித்த ஆத்மாநாமின் தாய்மொழி கன்னடம். அம்பத்தூர் சர் ராமசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியிலும் அரும்பாக்கம் து.கோ.வைணவக் கல்லூரியிலும் (பி.காம்.) பயின்றார். சதர்ன் சுவிட்ச் கியர்ஸ், கோரமண்டல் கார்மெண்ட்ஸ், ரெங்கா அப்பாரெல்ஸ் ஆகிய கம்பெனிகளில் வேலை செய்தார். டாப் டென் (1978) என்ற ரெடிமேட் ஆடை உற்பத்தி நிறுவனத்தைப் பெருங்கனவுகளுடன் தொடங்கினார். ஆனால், இதில் அவர் வெற்றி பெறவில்லை. கைகூடுவதுபோல் தோன்றிச் சட்டென்று நழுவிப்போய்விட்ட ஒரு காதலும் சேர்ந்து உறுத்தியதால், அவர் வாழ்வு முற்றிலும் நிலைகுலைந்தது. இதற்கிடையில், நவீனக் கவிதைக்காக, ழ என்ற இதழைத் தொடங்கி, இருபத்து நான்கு இதழ்களைக் கொண்டுவந்தார். இது இன்று ஒரு முன்னோடிப் பரிசோதனை முயற்சியாகக் கொண்டாடப் படுகிறது. அகச்சிக்கலாலும் புறநெருக்கடிகளாலும் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்ட ஆத்மாநாம், Affective disorder என்ற மன முறிவு நோய்க்குள்ளாகிக் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். ஆயினும், ஆத்மாநாமின் கவிதைகளில், சோர்வையும் விரக்தியையும் கழிவிரக்கத்தையும் கசப்பையும் காணவே முடியாது. குழப்பத்திற்கிடையில் தெளிவையும் பரபரப்புக்கிடையில் நிதானத்தையும் நுனிப்புல் மேய்ச்சலுக்கிடையில் ஆழ்ந்தகன்ற தீவிரத்தையும் நிரூபணங்களுக்கிடையில் சும்மாயிருத்தலையும் வலியுறுத்தியவரான ஆத்மாநாமுக்குச் சமூகக் கோபமுண்டு. இக்கோபத்தைப் பதிவு செய்வதால் படைப்புத் தீட்டுப்பட்டுவிடாது என்ற தத்துவக் கூர்மையும் உண்டு.
இயன்றவரை கலையின் தனிமையைச் சமூகப் பொதுமைக்கு விரித்துப் பெருங் காட்சிகளை ஆத்மாநாம் திறந்துவைத்தார். இந்திரா காந்தியின் நெருக்கடிநிலையை எதிர்த்துத் தமிழில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் அரசியல் தெளிவுடன் கவிதையாக்கத்தில் ஈடுபட்ட வெகு சிலருள் முதன்மையான ஒருவரான ஆத்மாநாம், நியாயமான எதிர்ப்புணர்வின் வலிமையான நவீனக் குரலாகப் புதுக்கவிதையைப் புதுக்கியவராவார். அகத்தில் புறத்தையும் புறத்தில் அகத்தையும் ஒருங்கிணைத்துக் கவிதையின் நிர்ணய எல்லைகளை அகண்டமாக்கினார். குழப்பத்தின் சிதறல்கள் அல்ல; தெளிவின் திரளல்தான் கவிதை என்பதைத் தம் விரிந்த வாழ்நோக்குவழி வலியுறுத்தினார். வடிவத்தையும் உத்தியையும்விட உண்மையின் உரத்த குரலையே கவிதையாகக் கண்டெழுதினார். கவித்துவமான சொற்களில், ‘அசாதாரணத்தைக் காட்டிலும் சாதாரண அனுபவ நூதனங்களையே” அதிகமும் பகிர்ந்துகொண்டார். இலக்கியத்தைத் தனித்ததோர் அறிதல் முறையாகப் பார்த்துத் தனித்துவ ஒளியில் உன்னதப் பிரமைகளைக் கட்டியெழுப்பிப் பொதுச் சமூகத்திலிருந்து தம்மைத் துண்டித்துத் தம் உள்முகத்தேடல்களில் தம்மைத் தாமே தொலைத்து விடாதிருந்தார்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then