ஆலின் உலர்ந்த இலையொன்று சிமிரிலிருந்து காம்பு பிரிந்து, அந்தர வெளியில் அசைந்தாடி மண்ணில் விழுந்து தவித்து அடங்கியது. உடனே காற்று ஓடிவந்து அதனைச் சீண்டி குதுகலித்தது. ஆலிலை கெஞ்சிப் புரண்டது. கருவறைக்குப் பின்னே புன்னை மரத்தடியிலிருக்கும் கல்லிருக்கையின் மேல் உட்கார்ந்திருந்த மைதிலியின் பார்வை எங்கோ நிலைகுத்தி இருந்தது. கரியதும் பெரியதுமான விழிகள். முகத்தில் கடுமை உறைந்து சற்றே பருத்த கன்னங்களையும் வட்ட வடிவான முகத்தையும் விறைக்கச் செய்திருந்தது. ஒழுங்காக அள்ளி முடிக்கப்படாத நீண்ட கூந்தலின் முடிக்கற்றைகள் முகத்தில் புரண்டன. காற்று அவற்றை இழையிழையாக நெகிழ்த்தி ஆடியது. மைதிலி கூந்தல் இழைகளின் இடுக்குகள் வழியாகப் பார்த்தாள்.
அப்படியே நெடுநேரம் கல்லாய்ச் சமைந்து இருந்த அவள் முகத்தை எதுவோ சடாரென உரசிக்கொண்டு பறந்தது. விதிர்ப்புடன் உடல் சிலிர்த்து நோக்கினாள். எதிரில் அடர்ந்திருக்கும் ஆலின் கிளையில் சென்றமரும் வல்லூறு. அதன் அலகில் சிக்கித் தவிக்கின்ற சிற்றுயிரி எலி. அவள் அண்ணாந்து பார்க்கும் அதேகணம் எலியின் கீச்சிடலும், வல்லூறின் செட்டையடிப்பும் இணைந்து காதருகில் கேட்டுச் சுழன்று வியாபித்தன. சில கணம் மட்டுந்தான். அது அடங்கியதும் மீண்டும் மௌனம்.
அந்தக் கோயிலுக்கு அவர்கள் வந்து சில நாட்கள் ஆகியிருந்தன. ராமமூர்த்தியும், ஜெயபாரதியும் எங்கெங்கோ சுற்றிக் களைத்த பின்னரே அங்கு வந்தார்கள். எவரெவரையோ விசாரித்தார்கள். சுற்றுப் பக்கத்தில் இருக்கும் ஒரு கோயிலையும் விடவில்லை. சிலநேரங்களில் கிருஷ்ணனும், சரவணனும் அவர்களுடன் போவார்கள். இல்லையென்றால் அவர்கள் இருவர் மட்டுமே மைதிலியைக் கூட்டிக் கொண்டு செல்வார்கள்.
காற்று சிலுப்பிடும் கூந்தலை அள்ளி முடித்த மைதிலி அப்படியும் இப்படியும் தலையைத் துலுக்கிப் பார்த்தாள். வந்த சில நாட்களாக அங்கு அவளுடன் கழிந்த கணங்கள் முழுவதும் பறவைக் குரல்கள். காகங்கள், மைனாக்கள், வல்லூறுகள், பருந்துகள், பனங்காடைகள், வாலாட்டிகள். எப்போதாவது புட்டம் சிவந்த சில கொண்டலாத்திகள்.
நெருக்கத்தில் வந்து உட்காரும் காகங்களின் கருங்கண் சுழல்கள் இப்படியும் அப்படியும் அலை மோதி அவளை இழுத்துக் கொள்வதற்கு வகை பார்க்கின்றன. அவற்றின் கூர்மையான வளைந்த அலகுகளில் பூச்சிகளையும், வயல் எலிகளையும், தவளைகளையும் காணத் துடிக்கிறது. இரையிலிருந்து சொட்டும் ரத்தம் கண்களின் வழியே பாய்ந்து அவள் உடலை நிறைக்கிறது. வயல் தவளைகளைக் கவ்விக் கொணர்ந்து கிளைகளில் வைத்து ஒரு காலால் அழுத்திக் கொண்டு, திமிரும் அவற்றின் சதையைத் துள்ளத் துடிக்க கூரலகால் பிய்த்துச் சுவைக்கின்றன காகங்கள். சதையுண்ட களிப்பில் வானத்தை அண்ணாந்து எழுப்பும் கடுங்குரல் மரக் கூட்டங்களைக் கடந்து மேலேறி வான பரியந்தத்தில் எக்காளச் சுழலாகச் சுற்றுகிறது.
மைதிலி வானத்தை அண்ணாந்து இமைகளை மூடினாள். சிறு புன்னகை முகிழ்த்துக் கன்னங்கள் பூரிதம் கொண்டன. சற்றே தடித்த உதடுகள் அகண்டு பற்கள் மின்னின. காற்று முகத்தை வருடி விளையாடி சற்றே பிளவுண்ட தாழ்வாய் வெட்டில் இறங்கியது. சில கணங்கள் அப்படியே இருந்தவள் தலைநிமிர்ந்து திரும்பி தொலைவில் அமர்ந்திருக்கும் ஜெயபாரதியைப் பார்த்தாள். அந்தத் தருணத்துக்குக் காத்திருந்தவளைப் போல அவள் கேட்டாள்.
“பசியெடுக்குதா?”
தலையை அசைத்தாள் மைதிலி. அதை இன்னதென்று விளங்கிக் கொள்ள முடியாமல் ஜெயபாரதி மௌனமாய் இருந்து கொண்டாள். இன்றுதான் ஓரளவுக்கு அந்த நில அமைப்பு மைதிலிக்கு பிடிபடத் தொடங்கியிருந்தது.
தனிமையில் நீண்டு படுத்திருக்கும் நெடுஞ்சாலை. அதிலிருந்து தெற்குப் பார்த்து இறங்கினால் அடர்ந்த சாமிக்காடு. அதன் நடுவில் பழமையான சாமுடியம்மன் சன்னதி. நுண்ணிய வேலைப்பாடுகளும் புடைப்புச் சிற்பங்களும் உடைய கல்தூண்கள் தாங்கிடும் பிரகாரம். தொடர்ந்து கருவறை. சுற்றுச் சுவர் இல்லாத கோயிலுக்கு விருட்சங்களே அரண். ஆல், அரசு, வில்வம், நாவல், புன்னை, புளியன் இன்ன பிற. கருவறைக்கு வலப்புறத்தில் சற்றுத் தள்ளி அல்லி பூத்த குளம். பலகைப் பாறைகளால் பாவப்பட்ட படித்துறை. காற்று வீசாதிருப்பின் செவ்வல்லி மலர்களுக்கிடையே நீந்திடும் மீன்களின் ஓசையைக் கேட்கலாம்.
சாமிக்காட்டைச் சுற்றி கண்ணுக்கெட்டிய தொலைவுக்கு விளைநிலங்கள். அங்கங்கு பார்வைக்குத் தென்படும் சில வீடுகள். நெடுஞ்சாலைக்கு அப்புறத்தில் கோயிலைப் பார்த்த மாதிரியிருக்கும் சொற்ப வீடுகளும், அவளைப் போல் வருகின்றவர்கள் தங்கிடும் ஓலைக் குடில்களும். நாடிவரும் மனிதர் மட்டுமே அம்மனுக்குப் பேச்சுத் துணை. உறைந்த அமைதியே அம்மனாய் திரண்டு இருப்பதாக நினைத்தாள் மைதிலி.
வீட்டிலிருந்து கிளம்பியபோது ஒன்றுமே தோன்றவில்லை. அவளுடைய மனம் வெறுமையாக இருந்தது. எவருடைய சொற்களும் நிலைகொள்ளாமல் சிறிது நேரமே தங்கிச் சுழன்றன.
“அங்கியே பதனஞ்சி நாள் தங்கணுமாம். அத்தினி நாளுக்கு வேண்டியத எல்லாம் நிதானிச்சி எடுத்துக்கிணியா ஜெயா?”
ராமமூர்த்தியின் விசாரிப்புக்கு ஜெயபாரதி மூச்சிரைக்கப் பதில் சொன்னாள். அவள் வீட்டுக்கும் வாசலுக்கும் நடந்த வண்ணமிருந்தாள்.
“என்னென்னா ஓணும்னு கொஞ்சம் நீங்கக்கூட எடுத்து வெக்கிலாம். ஆளாளுக்கு அப்பிடியே அசாத நின்னுக்கிணா, நா ஒருத்தி மட்டும் என்னா பண்ணுவேன்?”
அதைக் கேட்டுக் கொண்டு பெரிய வாசலில் நின்றிருந்த காரின் நடுப்புற இருக்கையில் சலனமின்றி உட்கார்ந்திருந்தாள் மைதிலி. காரின் பின்புறத்தைத் திறந்து பயணப் பைகளையும், பொருட்களையும் வைத்தான் சரவணன். கோயில் பிரகாரத்திலேயோ குடிலிலோ ஆட்களோடு ஆட்களாய் மைதிலியும் ஜெயபாரதியும், தங்கிக் கொண்டால், போகும் இடத்துக்குப் பதினைந்து கிலோமீட்டர் தள்ளி இருக்கும் சிறு நகரத்தில் வாடகைக்கு அறையெடுத்துத் தங்கியபடி தினமும் சென்று மைதிலியையும் ஜெயபாரதியையும் சரவணன் கவனித்துக்கொள்வது, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ராமமூர்த்தி வந்து பார்த்துவிட்டுச் செல்வது என்று அவர்கள் பிசிரில்லாமல் முன்கூட்டியே பேசி வைத்திருந்தார்கள்.
காரை ஓட்டிக்கொண்டே ராமமூர்த்தியுடன் சரவணன் பேசிடும் சொற்களும், பக்கத்தில் உட்கார்ந்தபடி ஜெயபாரதி பேசிடும் சொற்களும் வந்த வேகத்திலேயே திரும்பி அவரவர்களின் வாய்களுக்கே சென்று விடுவதைக் கண்டு மைதிலி சிரித்துக்கொண்டாள். தனக்குத் தானே சிரித்துக்கொள்ளும் மைதிலியைப் பார்த்து அவர்கள் திகைத்தார்கள். அவர்களின் திகைப்பு அவளின் சிரிப்பை மேலும் ஊக்கியது. மைதிலியை தன்னிலைக்குக் கொண்டுவரும் நோக்கில் ஜெயபாரதி அவளிடத்தில் அவ்வப்போது எதையேனும் விசாரித்தாள். எல்லாவற்றுக்கும் சிரிப்பே விடையாக வெளிப்பட்டதால் மிரண்டார்கள்.
நெடுஞ்சாலையின் இருபுறங்களிலுமிருந்த நிழல் தருக்கள் காணாமல் போய் எண்ணற்ற தேநீரகங்களும், சாப்பாட்டுக் கடைகளும் முளைத்திருந்தன. ஒரு தேநீர்க்கடையின் மேசையில் அவர்கள் அமர்ந்திருந்த சமயத்தில் ஜெயபாரதி தன் வியப்பை ராமமூர்த்தியிடம் பகிர்ந்துகொண்டாள்.
“இந்த வழியில எத்தினியோ வாட்டி வந்துக்கிறோம். எவ்ளோ மரங்க! இப்ப ஒன்னக் கூடக் காணுமே? மனுசன் தின்னு தீக்கிறதில தப்பில்ல. ஆனா தகிச்ச வெய்யிலுக்கு எங்க போயி ஒக்காருவோம்னு யோசிக்கிறதில்லையா?”
“மரமோ மனுசனோ, நமக்குத் தோது படலேன்னா கழிச்சிக் கட்ட வேண்டியதுதான்! இதப் போயி பெருசா பேசிக்கிணு?”
ராமமூர்த்தியின் பதிலுக்குச் சிற்றமைதி உருவாகியது. தேநீர்க் கோப்பையின் விளிம்பில் வாயை வைத்திருந்த மைதிலி அதைப் பருகாமல் மேசையில் வைத்து இறுகப் பற்றிக்கொண்டு தலையைக் கவிழ்த்துக்கொண்டாள். உடல் விறைத்தது. நீண்ட பெருமூச்சை எறிந்தாள். அவளின் உடலில் ஏற்படும் மெல்லிய மாற்றத்தை அனுமானித்தவளாக ஜெயபாரதி கேட்டாள்.
“எதானா… பிஸ்கேட்டு கிஸ்கேட்டு சாப்பிட்றயா எம்மாடி?”
மைதிலி வேண்டாமெனத் தலையை மாத்திரம் அசைத்தாள். மீளவுமங்கு அமைதி உருவானது. சரவணன் ஒன்றும் பேசாமல் இருந்தான். அவன் என்ன சிந்திக்கிறான் என்பதை மனதுக்குள் வாங்குபவளாகச் சிலபோது மைதிலி காணப்பட்டாள். அவ்வப்போது அவன் பக்கமாகத் திரும்பியும் பார்த்துக்கொண்டாள். முகத்தை இறுக்கிக் கட்டிய வைராக்கியத்தை அவிழ்க்காமல் உட்கார்ந்திருந்தான் அவன்.
“என்ன எதுக்கு இப்பிடி கூப்டுணு திரியறீங்க? நா நல்லாதானேமா இருக்கிறேன்?”
அதைக் கேட்ட ஜெயபாரதிக்குக் கண்கள் கலங்கின. அவள் மைதிலியின் கைகள் மேல் தன் உள்ளங்கையை வைத்துப் பற்றியபடி வாஞ்சையுடன் அவளைப் பார்த்தாள்.
“நீ நல்லாதான் எம்மாடி இருக்கிற? ஆனா, உன்னுங் கொஞ்சம் சரிபடுணும். உன்னாண்ட சேந்துக்கீற கொஞ்ச நஞ்சம் கெட்டதெல்லாம் உட்டுப் போயிடுச்சியான தெளிவாயிடுவ. நீ நல்லாயிருந்தா நாங்கெல்லாம் நல்லாயிருந்தமாரி எம்மாடி”
காரை செலுத்துகையில் சரவணன் பெரிதாக எதையும் பேசிக்கொள்ளவில்லை. பரசுராமன்பட்டி சாமுடியம்மன் கோயிலுக்குச் சென்று சேரும் வரை அவர்கள் மௌனம் காத்தார்கள்.
மைதிலியைப் பேய்பிடித்திருக்கிறது என்று முதலில் சொன்னவள் ஜெயபாரதிதான். அவள் தனிமையில் இருக்க விரும்புவதும், அந்தத் தனிமையில் அழுவதும், பிதற்றுவதும், பேசிக்கொள்வதும் ஜெயபாரதிக்குக் கலக்கத்தைக் கொடுத்தன. மணிக்கணக்கில் தென்னை மரங்களினடியிலும், மொட்டைமாடியிலும் சாய்ந்து வானத்தை வெறித்து அமர்ந்திருக்கும் மைதிலியை ஜெயபாரதியோ, ராமமூர்த்தியோ, கிருஷ்ணனோ தேடிச் சென்று அழைத்துவரத் தொடங்கினார்கள்.
இரவில் தனியே நடந்து மலையடிவாரம் வரைக்கும் போகும் அவளைக் கைவிளக்குடன் சென்று மடக்கிப் பிடித்தார்கள். கோபத்தில் அவளை அடிப்பதற்கு ஓங்கிய ராமமூர்த்தியின் கையை ஒருநாள் ரத்தம் வரும்வரை கடித்தாள் மைதிலி. கிருஷ்ணனின் கையை முறுக்கினாள். இரவு முழுவதும் அறைவிளக்கை ஒளிரவிட்டபடி உறங்காமல் உட்கார்ந்திருந்தாள். சமயங்களில் சத்தம் போட்டுச் சிரித்தாள்.
நிலைமை கைமீறிப் போவதாய் நினைத்த ராமமூர்த்தி எல்லாவற்றையும் மாற்ற முற்பட்டான். மலையடிவாரத்தில் நிலத்துக்கு நடுவில் ஒதுக்கமாய் இருந்த குடித்தனத்தை ஊருக்குள் மாற்றினான். ஊரிலிருக்கும் பூர்வீக வீட்டை அவசர அவசரமாக வாஸ்து ஆலோசணைகளின்படி திருத்தியமைத்தான். மைதிலி செய்யும் செயல்களுக்கு நிலத்தில் இருப்பதுதான் நல்லது என்று கிருஷ்ணன் சொன்னதைக் கேட்டு ஊருக்கும் நிலத்துக்குமாக அவர்களை ஊடாட வைத்தான்.
மைதிலியின் விவசாயப் படிப்பை நிறுத்திய ராமமூர்த்தி அவளைப் பிடித்திருக்கும் பேயை ஓட்டுகின்ற வேலையையும், அவளுக்கு மாப்பிள்ளைப் பார்க்கின்ற வேலையையும் ஒருசேர செய்யத் தொடங்கினான். அவனும் ஜெயபாரதியும் ஊருக்குக் கிட்டத்தில் இருக்கின்ற பெரிய கோயில்களுக்குத் தொடர்ந்து சென்று அர்ச்சனை செய்துவந்து, விபூதியையோ குங்குமத்தையோ அவளுக்குப் பூசினார்கள். மைதிலி இருக்கும் நிலையில் திருமணம் தேவையில்லை என்று தொடக்கத்தில் தடுத்த ஜெயபாரதி, மெதுவாக ராமமூர்த்திக்கு உடன்பட்டு வழிவிட்டாள். சில மாதங்களுக்குப் பிறகு அவனுக்கு ஒரு யோசனையையும் சொன்னாள்.
“பேசாம எந்தம்பி சரவணன கட்டி வெச்சிட்டா என்னா? மைதிலியவிட ரெண்டு மூணு வயிசுதான் பெரியவன். அவனும் பொண்டாட்டி புள்ளைய பறிகுடுத்துட்டு நிக்கிறான். அசல்ல தேடினா, என்னா ஏதுன்னு விசாரிப்பாங்க. ஒருத்தர் இல்லேன்னாலும், ஒருத்தர் மைதிலியோட நெலவரத்தப் பத்தி சொல்லத்தான் செய்வாங்க. இதுன்னா, ஒன்னுக்குள்ள ஒன்னு. நாமே அவனக் கூப்டு எல்லாத்தியும் சொல்லிடலாம். அவனும் ஏத்துக்குணு அனுசரிச்சிப் போவான். கடல் மாரி வீடு. நம்பளதப் போல ரெண்டு மடங்கு நெலபொலம். எனக்கென்னாவோ, இதுதான் சரியாப் படுது”
ராமமூர்த்திக்கும் ஜெயபாரதி சொல்வதே சரியெனப் பட்டது. திருமணப் பேச்சுவார்த்தைகள் துரிதமாக நடைபெற்றன. இடையிடையே சுற்றுப்பக்கச் சாமியாடிகளிடம் மைதிலியை அழைத்துச் சென்றார்கள். அவள் அடம் பிடித்தாள். மூர்க்கமானாள். அவளைச் சாந்தப்படுத்தும் நோக்கில் ராமமூர்த்தி பலவகையான மருந்து மாத்திரைகளை வாங்கி வந்து கொடுத்தான். பெரும்பாலான நேரங்களில் அரை மயக்கத்தில் கிடந்தாள் மைதிலி. அந்த மயக்கத்திலேயே அவளுக்குத் திருமணம் நடந்தேறியது. மலையடிவாரத்தில் தனித்திருக்கும் பெருமாள் கோயிலில், உறவுக்காரர்கள் முன்னிலையில் சரவணன் மைதிலிக்குத் தாலி கட்டினான்.
குணமாகும்வரை மைதிலியை அவளுடைய வீட்டிலேயே விட்டுவைத்த சரவணன், அவ்வப்போது வந்துபோய்க்கொண்டிருந்தான். எப்போதும் மௌனமாகவே இருக்கும் அவனை ஜெயபாரதி கடிந்தாள்.
“எதுக்குடா தம்பி நீ உன்னும் இப்பிடியே இருக்குற? செண்டதெல்லாம் போச்சி. நெனச்சிட்டிருந்தா மட்டும் எதுவும் வரப்போகுதா சொல்லு? பழசையெல்லாம் மறந்துட்டு கெலிப்பா இரு! மைதிலிய கூப்டுணு எங்கியாவது அப்பிடி இப்பிடின்னு போய் வா!”
திருமணம் நடந்த ஒரு வருடத்திலேயே இரண்டு முறை மைதிலிக்குப் பெரும்பாடு கண்டது. அவளைப் பிடித்திருக்கும் ஆவிதான் அவளின் கருக்களைத் தின்பதாக எண்ணிக் கொண்டாள் ஜெயபாரதி. அடுத்த வருடம் வைசாக அமாவாசை இரவில், காதல் தோல்வி என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, பாறைகளும் சரளைக் கற்களும் நிறைந்த வெள்ளாமை கிணற்றில் விழுந்து கிருஷ்ணன் உயிரை மாய்த்துக்கொண்டதும் அந்த வீட்டில் நிரந்தரமான அமைதி குடிகொண்டுவிட்டது. மைதிலி மீண்டும் தொந்தரவு செய்யத் தொடங்கிடும் வரைக்கும் ஜெயபாரதியும் ராமமூர்த்தியும் மகனையே நினைத்துக் கொண்டு இருந்து விட்டார்கள்.
நெடுஞ்சாலையிலிருந்து இறங்கி ஒரு மரத்தடியில் காரை நிறுத்திவிட்டு சரவணனும், ராமமூர்த்தியும் கோயில் பக்கமாகப் போவதைப் பார்த்தாள் மைதிலி. ஒரு புன்னையின் அடியில் கல்லிருக்கையின் மேல் அமர்ந்திருந்த அவள், அங்கு புதராய் மண்டி பூத்திருக்கும் அந்திமந்தாரைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அவளைப் போலவே அந்தப் பரந்த சாமிக்காட்டில் மரங்களின் அடியிலும், கல்லிருக்கைகளின் மீதும், குளத்துப் பக்கத்திலும் பரவலாக ஆட்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் நிலங்களுக்காய் திரிந்தார்கள். சிலர் குளத்துக்கு அருகிலேயே நாவல்மர நிழலில் அனாதரவாகக் கிடக்கின்ற சிமெண்டு களத்தில் போர்வைகளை விரித்துப் படுத்திருந்தார்கள்.
சற்று முன்னர்தான் சாமியார் வந்திருந்தார். அவருடன் நான்கு பேர் இருந்தார்கள். அதில் இரண்டு பேர் வாட்டசாட்டமான இளைஞர்கள். ஒத்தாசைக்கு வந்தவர்களின் கைகளில் பூசைப் பொருட்களும் பைகளும் இருந்தன. நடுவயதைக் கடந்திருந்த சாமியாருடைய முடி சிட்டம் கட்டி திரித்திரியாய்த் தொங்கியது. ஒடிசலான தேகம் கொண்ட அவர் மீசையை நன்றாக முறுக்கி விட்டிருந்தார். கூம்பிய அவரது முகத்துக்குப் பெரிய விழிகள் மிரட்சியைக் கொடுத்தன. நெற்றி முழுக்க நீறுபூசி அதன் மீது குங்குமத்தைப் பெருவட்டமாக இட்டிருந்தார். மேலுடம்பில் எதுவுமில்லை. இடுப்பில் மட்டும் மொடமொடப்பான காடாவேட்டி. கைகளிலும் கழுத்திலும் வகைவகையான கயிறுகளும், மாலைகளும், பூண்களும்.
நான்கு வருட அலைச்சலில் ஊரிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தள்ளியிருந்த இந்தச் சாமுடியம்மன் சாமிக் காட்டையும், பேயோட்டியையும் ராமமூர்த்தி கண்டு பிடித்திருந்தான். நண்பர் ஒருவரின் வழியாக சாமியாரை சந்திக்க வந்திருந்த போதே எப்படி அவர் ஆவிகளை விரட்டுகிறார் என்பதைப் பார்க்கப் பிரம்மிப்பாக இருந்தது.
“இங்க வந்துட்டா நெனச்சது நடக்கும்னுதான் எங்கெங்கிருந்தெல்லாமோ வர்றாங்க. வர்றவங்க எல்லாருமே ஒரே தரமான ஆளுங்க கெடையாது. இப்ப என்ன பாக்குறதுக்கு நீங்க கார்ல வந்திருக்கீங்க. ஆனா சிலரு பஸ்லயும், கால்நடையாவும் கூட வர்றாங்க. ஒவ்வொருத்தர் வளந்த விதமும், வாழ்மொறையும் வேறயா இருக்கு. அதனால நாம எந்த ஒடம்பையும் போட்டு அதிகமா வதைக்கிறதில்ல. சிட்சிக்கிறதெல்லாமே இந்தச் சாமுடியம்மா தான்! அதுவா வந்தா தான் நான் அத ஓட்டுவேன். அது வர்ற வரைக்கும் பொறுமையா நீங்க காத்திருக்கணும். அதுக்குதான் இங்கியே பதினைஞ்சி நாள் தங்கணுமின்றது. இங்க வந்துட்டா அது வெளியேறி ஓடியே தீரும்!”
ஒவ்வொரு நாளும் களத்தில் இறங்கி கோயில் பிரகாரத்தை நோக்கி சாமியார் போகின்ற போதே சில பெண்கள் ஆடத் தொடங்குவது மைதிலிக்கு வேடிக்கையாகத் தெரிந்தது. அப்பெண்களை மைதிலி கூர்ந்து கவனித்தாள். அவளும் இப்படி ஆடத் தொடங்கி, உள்ளிருப்பது வெளிப்பட்டு விட்டால் சீக்கிரமாய் வீட்டுக்குத் திரும்பிவிடலாமே என்று ஜெயபாரதி வாஞ்சைப்பட்டாள். அவ்விதம் எதுவும் நடவாதது அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. அந்த ஏமாற்றத்தை ராமமூர்த்தியும் சரவணனும் வருகின்ற போதெல்லாம் வெளிப்படுத்தினாள்.
“கெணத்துல போட்ட கல்லாட்டம் கெடக்குது. அசர மாட்டேந்து!”
“அதுக்குன்னு பொறப்பட்டு வந்துட்டோம். எதுக்கு அவசரப்பட்டுணு? கொஞ்சம் பொறுமையா இருப்போம்”
ஜெயபாரதி சலித்துக்கொள்கையில் ஒவ்வொரு முறையும் சரவணன்தான் சமாதானப்படுத்தினான். அங்கு வரும்போதெல்லாம் தவறாமல் சாமியாரிடம் பேசிவிட்டு ராமமூர்த்தியும் சரவணனும் நேரே ஜெயபாரதியிடம் வந்து அவர்களின் இன்மையில் நடந்தவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் விசாரித்துத் தெரிந்துகொண்டார்கள். ஒருநாள் அவர்களிடம், கிருஷ்ணனைப் போலவே ஒருவனைப் அங்கு பார்த்ததாகச் சொல்லி ஜெயபாரதி அழுதாள். அப்போது அருகில் அமர்ந்திருந்த மைதிலி சலனமில்லாமல் வேறுதிசையில் திரும்பி எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தாள்.
கிருஷ்ணன் கிணற்றில் விழுந்து இறந்தபோது அவர்கள் மலையடிவார நிலத்து வீட்டில் இருந்தார்கள். அன்று வைசாக அமாவாசை என்பதால் ஊரிலிருக்கும் வீட்டுக்குச் செல்லாமல் அங்கேயே இருந்துவிடலாம் என்றும், மைதிலியை அவளுடைய அறையில் விட்டு வெளியே பூட்டிவிடலாமென்றும் கிருஷ்ணன் ஜெயபாரதியிடம் கமுக்கமாய்ச் சொல்லிவைத்திருந்தான்.
முன்னிரவு நேரம் ஆகியிருந்தது. பூசை அறையின் விளக்குகளை ஏற்றி முடித்துவிட்டு வெளியே வந்த ஜெயபாரதி, வீட்டில் ராமமூர்த்தி இல்லாததைச் சொல்லிச் சலித்தபடி மைதிலியின் அறையை வெளிப் பக்கமாகப் பூட்டினாள். ராமமூர்த்தி கொடுத்துவிட்டுப் போன மாத்திரையைச் சாப்பிட்டு அரை மயக்கத்தில் படுத்திருந்தாள் மைதிலி. ஜெயபாரதி சமையல் கட்டுக்குள் நுழைவதற்குள் திடீரென்று மின்சாரம் போனது. மைதிலியை அறையில் வைத்துப் பூட்டியதை எண்ணி நிம்மதி கொண்டவளாய் மகனைக் கூப்பிட்டாள்.
“கிருஷ்ணா, மொளுகுபர்த்திங்கள தேடி எடுத்துணு கிச்சனுக்கு வாயெப்பா. கரண்டு போயிடுச்சி”
“இதோ பாக்கிறேன் இருமா”
கைபேசி வெளிச்சத்தில் மெழுகுவர்த்திகளைத் தேடத் தொடங்கிய கிருஷ்ணன், தன் அறையில் எதுவும் கிடைக்காததால், மைதிலியின் அறையைத் திறந்து தேடினான். அந்த அறை மேசையில் பிரிக்கப்படாத மெழுகுவர்த்திப் பொட்டலமொன்று கிடந்தது. மெழுகுவர்த்திகளை ஜெயபாரதியிடம் கொடுத்துவிட்டு வாசலுக்கு வந்தபோது அவன் கைபேசி பாடியது. புதிய எண்ணைக் குழப்பத்துடன் பார்த்தபடியே பேசினான் கிருஷ்ணன். அழைப்பில் ஓர் இளம் பெண்ணின் குரல் கிசுகிசுத்தது.
“கெணத்துப் பக்கம் நிக்கிறேன். பயமாகீது, சீக்கிரமா வா. இங்க என்ன வரச்சொல்லிட்டு தொரைக்கி ஊட்டுக்குள்ள என்னா வேல?”
“ஏய்… சாரி சாரி! இதோ வந்துட்டேன். ஆமா, இது என்ன புது நம்பரு?”
“இன்னிக்கிதான் வாங்கினேன். நேர்ல வா சொல்றேன்!”
கைபேசி விளக்கை எரியவிட்டபடி பெருவிருப்புடன் கிணற்று மேட்டை நோக்கி நடந்தான் கிருஷ்ணன். அவன் உடல் கிளர்ச்சியடையத் தொடங்கியிருந்தது. கிணற்றுக்கு நெருக்கத்திலிருக்கும் தென்னையின் பின்னால் ஒரு பெண் நின்றிருப்பது மங்கலாகத் தெரிந்தது. தென்னைக்கு அருகில் சென்றதும் அவன் குழைவான குரலில் அங்கிருந்தவளைக் கூப்பிட்டான்.
“ஏய், சாரி! ரொம்ப நேரமா வெயிட் பண்றியா?”
“இல்ல!”
தென்னையின் மறைவிலிருந்து சடாரென வெளிப்பட்ட மைதிலி மூர்க்கமுடன் அவனைக் கிணற்றில் தள்ளினாள்.
கருவறைக்குப் பின்னால் கைப்பிடிச்சுவரின் மீது அமர்ந்து வெய்யிலைச் சுகித்தாள் ஜெயபாரதி. நிலத்தையும் வீட்டையும் விட்டு இப்படி வந்திருப்பது அவளுக்குச் சிறு மகிழ்வையும், கொஞ்சம் ஓய்வையும் அளித்தன. அதை அறிந்துகொண்ட ராமமூர்த்தி ஒருமுறை கள்ளச் சிரிப்புடன் அவளிடத்தில் கேட்டான்.
“என்னா பாரதி, ஊட்டப் பத்தியோ, பொளப்பப் பத்தியோ விசாரிக்க மாட்டேன்ற? இங்க வந்தது உனுக்கு ரொம்ப ஜாலியா பூட்ச்சோ?”
“ஆமா, ஒங்க தொரபுத்தி போகுமா பின்ன? காலத்துக்கும் அதிகாரம் பண்ணியே பொளைக்கிறவங்க இல்லியா? உன்னும் எங்க வருத்தம் எங்க வௌங்கப் போகுது?”
ராமமூர்த்தியும் சரவணனும் அன்றைக்குக் காலம்பரமே வந்திருந்தார்கள். வரும் வழியில் ஒரு கிராமத்துக் கடையிலிருந்து சுடச்சுட வாழையிலையில் இட்டலிகளைக் கட்டி வந்திருந்தான் ராமமூர்த்தி. அவற்றைத் தின்றபடியே மைதிலி அமர்ந்திருக்கும் மரத்தடியைக் காண்பித்து எதையோ விவரித்துக்கொண்டிருந்தாள் ஜெயபாரதி. அவள் சொல்வதைக் கேட்டவாறு ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கேயே இருந்தான் ராமமூர்த்தி.
சரவணன் மட்டும் ஜெயபாரதியிடம் சொல்லிவிட்டு மைதிலியின் அருகில் வந்து உட்கார்ந்துகொண்டான். அவள்மீது வீசிய அடர்ந்த விபூதி வாசம் ஓர் அந்நிய மனநிலையை அவனுள்ளே உருவாக்கியது. அவனை ஏறிட்டுப் பார்க்காமல் கீழே பார்த்து அமர்ந்திருந்தாள் மைதிலி.
“சாப்டியா? ராத்திரி நல்லா தூங்குனியா? இந்தத் திருநீற எடுத்து வச்சிக்க. காலையில கோயிலுக்குப் போயிட்டு வந்தேன்”
அப்போது மட்டும் சரவணனை ஏறிட்டுப் பார்த்து, அவன் நீட்டிய தாளிலிருந்து சிறிது நீறையெடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டாள் மைதிலி. அவன் கேள்விகளுக்கு விடை சொல்லவில்லை. அவன் திடீரென அவளுடைய கையை எடுத்துத் தன்னுடைய கைகளில் பதுக்கிக் கொண்டான். அவள் அதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
மைதிலி தன்னுடைய கையை விடுவித்துக் கொள்ள எண்ணிய கணத்தில் சரவணன் தன்பாட்டுக்குப் பேசத் தொடங்கினான். அவள் முகத்தைப் பார்க்கவில்லை. அவன் தன் எதிரில் இருக்கும் பரந்த வெளியிடம் எதையோ முறையிடுவதைப் போலிருந்தது. என்னையா அவன் இப்பரந்த வெளியென்று கருதுகிறான்? நான் இத்தனை விசாலமானவளா? இத்தனை நாளாய் நான் என்னையே குறுக்கிக் கொண்டிருந்தேனா? மைதிலி சிலிர்த்தாள். நானே வெளி. நானே மண்டலம். நானே பிரபஞ்சம். நானே அண்டம். அவள் மனதில் பிதற்றினாள். அவளுள் எதுவோ நிறையத் தொடங்கியது.
“இன்னிக்கிதான் என்னோட மனசு கொஞ்சம் சமாதானம் ஆனமாதிரி இருக்குது மைதிலி. ரெண்டு மூணு நாளா நான் இங்க வரலேல்ல? கோர்ட்டுக்குப் போயிருந்தேன். நேத்து தான் தீர்ப்பு சொன்னாங்க. என்னோட அழகு நிலாவையும், மோனாவையும் அடிச்சிக் கொன்னவங்களுக்கு வெறும் மூணு வருஷந்தான் தண்டனையாம்”
அவள் அதிர்ச்சியுடன் அவனை ஏறிட்டாள். சரவணனின் கைகள் தன்னுடைய கையை இறுக்குவதையும், அவன் உடலில் மெல்லிய நடுக்கம் உண்டாவதையும் மைதிலி உணர்ந்தாள். அவன் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்ததும் அவளுக்குப் பதற்றம் உண்டானது. ஆனால், அவனை எப்படித் தேற்றுவது என்று தெரியவில்லை. திருமணம் முடிந்த இரண்டு ஆண்டுகளில் அதிகபட்சமாக நூறு வார்த்தைகளைக் கூட அவள் அவனிடத்தில் பேசியதில்லை. மூச்சுக் காற்றும் உரசியதில்லை.
“என் விஷயந்தான் உனக்குத் தெரியுமே. ஆனா அதுல, உனக்குத் தெரிய வேண்டியது இன்னும் நெறைய இருக்குது. அதச் சொன்னா எல்லாமே செதஞ்சிடும். உன்னோட நம்பிக்கைங்க நொறுங்கிப் போயிடும். நமக்கு நெருக்கமானவங்க செய்யிற துரோகத்தோட அடர்த்தி அதிகம் மைதிலி. அது ஒரு உறுப்பா மாறி நம்ம ஒடம்போட சேர்ந்துக்கும். காலத்துக்கும் நாம அத சுமந்துதான் சாகணும்…”
மைதிலிக்குச் சுரீரென்றது. இவன் யாருடையதைக் குறித்துப் பேசுகிறான்? இருவரின் விவகாரங்களும் ஒன்றா? ஒன்றெனில் நானும் இவனும் ஓருடலா, ஓருயிரா? சரவணனின் முகத்தைப் புதிதாகப் பார்ப்பதைப் போல மைதிலி ஆழ்ந்து பார்த்தாள்.
“அழகு நிலாவ நான் சந்திச்சது நான் வேலபாத்த அதே கோயம்பத்தூர் நூற்பாலையில தான். என்ன மாதிரியே நிலாவும் எஞ்சினியரிங் படிச்சிருந்தாங்க. ரெண்டு வருஷம் லவ் பண்ணோம். அவங்க வேற ஆளுங்கன்னு சொல்லி எங்க வீட்டுல கல்யாணத்துக்கு ஒத்துக்கல. மூணாவது வருசம் நாங்களே கல்யாணம் செஞ்சிக்கிட்டோம். ஒரு வருசத்திலியே மோனா பொறந்துச்சி. வீட்ல அண்ணனும் அண்ணியும் கூப்டாங்கன்னு சொல்லித்தான் மூணு வருசம் கழிச்சி நிலாவையும், மோனாவையும் ஊருக்குக் கூட்டிட்டு வந்தேன். அது தீபாவளி சமயம். நிலாவுக்கு மட்டும் ஒருவாரம் லீவு வாங்கிக் குடுத்துட்டு நான் கோயம்பத்தூர் போயிட்டேன். சரியா ஒரு வாரம் கழிச்சி வீட்டுலேர்ந்து போன் வந்துச்சி. எங்க அண்ணிதான் பேசுனாங்க…”
சரவணன் சடாரென மைதிலியின் மடியில் முகம் புதைத்து அழத்தொடங்கினான். அவன் குலுங்கிக் குலுங்கி அழுதான். ஒரு கணம் அதிர்ந்த மைதிலி அவன் பின்னந் தலையில் கைவைத்து முடியைக் கோதியபடி பேச முயன்றாள். அவன் கண்ணீர் ஆடையை நனைத்துத் தொடையில் வெம்மையாக இறங்கியது.
“அழாதீங்க… பிளீஸ்… கண்ட்ரோல் பண்ணிக்குங்க…”
“கோவையிலேர்ந்து அடிச்சி புடிச்சி வந்தேன். எப்பிடி வந்தேன்னு எனக்கே தெரியல மைதிலி. வந்து பாத்தா… என்னோட நிலாவும், மோனாவும் மார்ச்சுவரியில கெடந்தாங்க. ரெண்டு பேரையும் தலையிலயே அடிச்சி கொன்னிருக்காங்க. என்னால பாக்க முடியல”
சரவணன் நிமிர்ந்து உட்கார்ந்து தேம்பினான். கைக்குட்டையால் கண்களைத் துடைத்தான். வாயை இறுக்கமாக மூடிக்கொண்டான். மைதிலி தொலைவில் இருக்கும் ஜெயபாரதியிடம் எழுந்து சென்று தண்ணீர் பாட்டிலை கொண்டுவந்து அவனைக் குடிக்க வைத்தாள்.
ஜெயபாரதியுடன் பிறந்த கடைக்குட்டி சரவணன். அம்மா ஆணாய் பிறந்திருந்தால் ஒருவேளை இப்படித்தான் இருந்திருப்பார் என்று அவனைப் பார்க்கும்போதெல்லாம் நினைத்துக்கொள்வாள் மைதிலி. அவளை விடவும் ஒருசில வயதே மூத்தவன் என்பதால் அவனை மாமா என்று அழைப்பதற்கு அவளுக்கு எப்போதுமே தயக்கம். ஜெயபாரதிதான் அவனை மாமா என்றே அவள் அழைக்க வேண்டுமென வற்புறுத்துவாள். ஆனாலும் சரவணனுடனான மைதிலியின் உரையாடல்கள் நீ, வா, போ என்றே நிறைவு பெறும்.
ஊருக்கு அருகிலேயே புதிதாய் அமைந்த தனியார் வேளாண்மைக் கல்லூரியில் மைதிலி விவசாயம் படிக்கச் சேர்ந்த சமயத்தில், ஒருமுறை அவன் அவர்களின் வீட்டுக்கு வந்திருந்தபோது தன்னுடைய காதல் செய்தியை அவளிடத்தில் பகிர்ந்துகொண்டதாக அவளுக்கு நினைவு.
சரவணன் பேசிக்கொண்டே இருந்தான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிவது அவளுக்குப் பொறுக்க முடியாததாய் இருந்தது. சரவணன் காதலித்துத் திருமணம் செய்த பெண், குழந்தையுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக ஜெயபாரதி சொல்லியிருக்கிறாள். இதில் எதற்கு வழக்கு? யாருக்குத் தண்டனை?
“அம்மா வேற மாதிரியில்ல சொன்னாங்க?”
“உனக்குத் தெரியவேணான்னு எங்க அக்கா ஒருவேள மறச்சிருக்கலாம். சம்பவம் நடந்தப்போ அக்காவும் அங்கதான் இருந்திருக்காங்க… ஆனா போலீஸ் விசாரணையில தனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லிட்டாங்க… தீபாவளி முடிஞ்சி நிலாவும், மோனாவும் எங்க வீட்டுல இருந்ததே ஒரு வாரந்தான். அதுக்குள்ள நிலாவுக்கும், எங்க ஊர்ப்பையன் ஒருத்தனுக்கும் தப்பான உறவு இருந்ததாகவும், அதப் பாத்த கோபத்துல அடிச்சதாகவும் வாக்குமூலம் குடுத்து எங்க உறவுக்காரப் பொம்பளைங்க ரெண்டுபேர போலீஸ்ல சரண்டர் ஆக வச்சிட்டாங்க. இதெல்லாம் எங்க அண்ணன், அண்ணியோட திட்டம்னு எனக்கு அப்புறமா தெரிஞ்சது. குற்றம் செஞ்சதா போலீஸ்ல சரண்டரான ரெண்டு பொம்பளைங்களுக்கும் ஆளுக்கு ஒரு ஏக்கர் நெலத்த எங்க அண்ணன் ரகசியமா எழுதி வச்சிருக்காரு. நான் கல்யாணம் செஞ்சிக்கிட்டத அவருக்குப் போன்ல சொன்னப்பவே, எனக்கு எந்தச் சொத்தும் வேணாம். எங்கள வாழவிட்டா போதும்னு சொன்னேன் மைதிலி… நிலாவுக்கு இவங்களோட கௌரவம் பத்தித் தெரியும். ஆனா, ஒரு வயசு கொழந்தை… எம்மோனாவுக்கு என்ன தெரியும், சொல்லு?”
சரவணனுக்கு அழுகை பொங்கிப் பொங்கிவந்தது. மைதிலி அவனுடைய கையை எடுத்துத் தன்னுடைய உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டாள். சிறிது நெருங்கி உட்கார்ந்தாள். இருவரும் நெடுநேரமாக அப்படியே அமர்ந்திருந்தார்கள். பறவைகள் எழுப்பிய சப்தங்களைத் தவிர வேறு எந்தச் சப்தங்களும் அங்கு இல்லை. ஒரு பனக்காடை மட்டும் தொடர்ந்து கிறீச்சிட்டுக்கொண்டேயிருந்தது.
“உனக்கும் அமைதியில்லேன்னு எனக்குத் தெரியும். அரசல் புரசலா செலத கேள்விபட்டிருக்கிறேன். மத்தபடி பெருசா எதுவும் தெரியாது. நீ எப்போ சாந்தமடையிறயோ அப்போ இங்கேர்ந்து போலாம். எல்லாம் உன் விருப்பந்தான். எனக்கு நீ நல்லபடியா கெடச்சா போதும்! நாம ரெண்டு பேருமே எழந்தவங்க. பறிகொடுத்தவங்க. ரெண்டு பேருமா சேந்துதான் ஒருத்தர ஒருத்தர் தேத்திக்கணும். ஒருத்தரோட இழப்ப, இன்னொருத்தரால நெரப்பிக்கணும்”
சரவணன் இறுதியாகச் சொன்ன சொற்களைக் கேட்ட மாத்திரத்தில் எழுந்து நின்று முதன் முதலாக அவன் முகத்தை நேர்கொண்டு பார்த்தாள் மைதிலி. பின்னர் அவனிடம் மெல்லிய குரலில் சொன்னாள்.
“எழுங்க… நாம எங்காவது கொஞ்ச தூரம் போயிட்டு வரலாம்”
ஜெயபாரதியிடமும் ராமமூர்த்தியிடமும் சொல்லி விட்டு அவர்கள் இருவரும் காரில் புறப்பட்டபோது ஜெயபாரதி மனம் நிறைந்து புன்னகைத்தாள். கோயில் பக்கம் திரும்பி கும்பிட்டுக் கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.
“சந்தோஷமா போயிட்டு வாங்க. ஆனா, சீக்கிரம் வந்துடுங்க”
நெடுஞ்சாலையில் வாகனங்களின் போக்குவரத்தும், ஆட்களின் நடமாட்டமும் குறைவாகவே இருந்தன. சில இடங்களில் அதுவும் இல்லை. இரு புறங்களிலும் விளை நிலங்களும், காடும், குன்றும் வந்துகொண்டே இருந்தன. எதிரில் பெரிய மலைத் தொடரொன்று தென்பட்டது. அந்த மலைத் தொடரைத் தாண்டியதும் வரும் அந்தர வெளியில் சரவணன் தன்னை வைத்துக் கொண்டு காருடன் அப்படியே பறக்கப் போகிறான் என்று நினைத்தாள் மைதிலி. அவளுக்கு மெல்லிய புன்னகை உண்டானது.
ஓவியம்: அமிர்தலிங்கம்
சரவணனுடன் என்ன பேசுவது என்று மைதிலிக்குத் தடுமாற்றம் ஏற்பட்டது. மொழித் தயக்கம் எப்போது உடைகிறதோ, அப்போது பேசிக்கொள்ளலாம் என்று அவள் மௌனம் காத்தாள். சரவணன் மட்டும் அவ்வப்போது ஓரிரண்டு வார்த்தைகளை அவளிடத்தில் பேசியபடி காரை ஓட்டினான். அவர்கள் ஓர் ஏரிக்கரையில் காரை நிறுத்தினார்கள். தொலைவில் மலைத்தொடர்கள் தெரிந்தன. அதுவரையிலும் ஏரியின் நீர் விரிந்திருந்தது. நீரின் விளிம்பில் தென்னை மரத்தொகுதிகளும் மரக்கூட்டங்களும் தென்பட்டன. வானில் அங்கங்கு மிதந்த வெண்மேகங்களை நீர் பிரதிபலித்தது. சிறு துரிதமுமின்றிச் சில பறவைகள் காற்றில் நீந்தியவாறிருந்தன. கரைக்கு வெகு அருகில் ஒரு வட்டப்படகு அசைந்தாடியது.
ஏரியைப் பார்த்தபடி இருவரும் எதுவும் பேசாமல் நின்றனர். சரவணனின் கண்கள் மலைத்தொடரை நோக்கின. காற்று அவன் முடியைக் கலைத்தது. பின்னிருந்து அவனை நெருங்கித் தழுவிய மைதிலி காது மடல்களைக் கடித்தாள். அனல் காற்றுடன் முத்தம் அவன் புறங்கழுத்தில் பதிந்தது. சரவணன் அவளைத் தூக்கிச் சென்று, காரில் கிடத்திப் புணர்ந்தான்.
அவர்கள் நடுப்பகலுக்கெல்லாம் சாமுடியம்மன் சாமிக்காட்டுக்குத் திரும்பிவிட்டனர். மைதிலியின் முகத்தில் அதுவரைக் கண்டிராததொரு நிறைவையும், தணிவையும் காண்பதாக ஜெயபாரதி எண்ணிக் கொண்டாள். அங்கு அவளை அழைத்துவந்தது வீண் போகவில்லை என உள்மனம் சொல்லிக்கொண்டது. வந்ததும் வராததுமாய் ஜெயபாரதியின் அருகில் அமர்ந்து காலையில் சரவணன் வாங்கி வந்திருந்த தின்பண்டங்களில் பெரும்பகுதியைத் தின்று தீர்த்தாள் மைதிலி. அந்தப் பையில் இருந்த அரிசிப்பொறி பொட்டலத்துடன் எழுந்தவள் குளத்துப் பக்கமாகச் சென்று கீழ்ப்படியில் இறங்கி உட்கார்ந்து மீன்களுக்கு இரைபோடத் தொடங்கினாள். அவள் வீசும் பொறிகளைக் கவ்வி தின்பதற்கு மொலுமொலுவென மீன்கள் முண்டியடித்தன. அவளைப் பின்தொடர்ந்த சரவணன் செவ்வல்லியின் முன்னிலையில் ஒளிச் சித்திரங்களாக அவளைத் தன் கைபேசியில் பதிய வைக்கத் தொடங்கினான்.
பத்து நாட்கள் கடந்திருந்தன. தினமும் அவர்கள் வித விதமான ஆவிகளையும், வகை வகையான சாமிகளையும் பார்த்து வந்தனர். சாமியென்றால் கோயில் பிரகாரத்துக்குள் இறங்கி பாதி தொலைவை கடக்கையில் அமரிக்கையாக ஆடும். அதை முன்பிரகாரத்துக்கு உள்ளாக அழைத்து அந்தச் சாமியார் உட்காரவைப்பார்.
“என்னோட எடத்துக்கு நீங்க என் உத்தரவில்லாம வரக்கூடாது. சரி வந்துட்டீங்க, என்னா ஓணுமோ அந்தப் பூசைய செய்யிறோம். அத ஏத்துக்குணு இந்த எடத்த விட்டுப் போயிடுங்க!”
அந்தச் சாமிகளும் அப்படியே போய்விடும். ஆனால், ஆவிகள் அடிவாங்கிக் கொண்டும் அவமானப்பட்டும்தான் போகும். வந்திருப்பது ஆவிதான் என்பது அவை சாமிக்காட்டுக்குள் இறங்கிய நொடியில் ஆடும்போதே தெரிந்துவிடும். அதை வரிசையில் அமர்த்தி எலுமிச்சை உருட்டி யாரென்று விசாரித்து ஓட்டுவார்கள். அடம் பிடிக்கும் ஆவிகளுக்கு மட்டும் சாமியாரின் சாட்டையில் அடிவிழும். ஆவிகள் சாராயம் கேட்டன. சுருட்டுப் பிடித்தன. வெற்றிலை பாக்கையும் புகையிலையையும் கோரின. பால் வேண்டுமெனக் கேட்டு, சாணக்கரைசலைக் குடித்தன.
அங்கு ஜெயபாரதியுடன் நெருக்கமாகியிருந்த ஒரு பெண்ணின் மகளை மது அருந்தும் நபரின் ஆவி பிடித்திருந்தது. அதை ஓட்டுவதற்காகக் கொடுக்கப்பட்ட அதிகப்படியான மதுவை அருந்தி அந்தப் பெண் நினைவிழந்து மயங்கினாள். அவளைச் சாமியாருடன் இருந்த இளைஞர்கள் தனிப்பூசை குடிலுக்குள் கிடத்திவிட்டு வந்தனர்.
ராமமூர்த்தியும், சரவணனும் புறப்பட்டுச் சென்ற பிறகு நீண்ட நேரம் உறக்கம் வராமல் புரண்டாள் மைதிலி. சாமிக்காட்டில் அடித்திடும் பம்பையும், சாமியாரின் அதிகார கட்டளைகளும், ஆவிகளின் கூக்குரலும் அடங்கி சிறிது நேரமே ஆகியிருந்தது. இரவு நடுஜாமத்தை எட்டியிருந்தது. குடிலுக்கு வெளியில் சில்வண்டுகளின் நச்சரிப்பைத் தவிர பிற சத்தமில்லை. ஜெயபாரதி எப்போதோ தூங்கியிருந்தாள்.
குடிலின் ஓலைக்கூரை மீது தகரம் வைத்து அடிக்கப்பட்டிருந்தது. ஆயினும் சிறு இடுக்குகளின் வழியாக ஒளி உள்ளே சொட்டியது. சிறு புள்ளிகளாகத் தெரிந்த ஒளியின் முகங்கள் இரவின் உருவென மேல் அழுந்தியது. மைதிலிக்குப் பகலில் தனித்திருப்பதை விடவும் இரவில் தனித்திருப்பது பிடிக்கும். நிலத்து வீட்டின் மொட்டை மாடியில் நேரம் போவது தெரியாமல் படுத்திருப்பாள். விண்மீன்களை எண்ணுவாள். மிகவும் நெருக்கத்தில் இருக்கும் மலையின் ஆபரணங்களாய் மின்மினிப் பூச்சிகள் பறக்கும். இரவுகளில் தீப்பற்றும் மிருகங்களின் கண்களைத் தரிசிப்பாள். மனிதர்களின் அச்சமாகவும் நம்பிக்கையாகவும் இரவுகளே இருக்கின்றன. வனாந்திர வெளியில் இரவைப் பார்க்கிறவர்கள் உலகைப் புரிந்துகொள்கிறார்கள் என்பது மைதிலியின் நம்பிக்கை. அவள் உலகைப் புரிந்திருந்தாள்.
சரவணன் போகாமல் அங்கேயே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமென எண்ணினாள் மைதிலி. அந்த நினைவைப் பழிக்கிற வகையில் திடீரென ஒரு குற்றவுணர்வு மேலோங்கி அவளை வதைத்தது. பிற்பகலில் கிளம்பும்போது ராமமூர்த்தி ஜெயபாரதியிடம் சொல்லிக்கொண்டு இருந்தது அவள் ஞாபகத்துக்கு வந்தது.
“நாளைக்கு ஆடி அமாவாச. மைதிலியப் புடிச்சிணு இருக்கிறது எப்பிடிப் போயும் நாளைக்கு வந்தே தீரணும் பாரதி. நானு ஒரு மத்தியானம் மாதிரி வந்துட்றேன். பாக்கலாம். ஒருவேள நாளைக்கே எல்லாம் சீராயிட்டா, எல்லாரும் இங்கியே ராத்திரி தங்கிட்டு வெடிஞ்சதும் பெறபுட்டுட்லாம்”
மைதிலியும் ஆடி அமாவாசையையே மனதுக்குள் குறித்துக்கொண்டாள். அவள் நினைவைப் பழித்திடும் குற்ற உணர்வு வாதையாக மாறி கனவுக்குள் நுழைந்தது. நடுக்கமும் பீதியும் அவளை ஆட்கொண்டன.
காலை முதலே மைதிலிக்கு உக்கிரம் கூடியிருப்பதையும், அவளின் உடல் நிலையாமையில் தவிப்பதையும் அறிந்துகொண்டாள் ஜெயபாரதி. மைதிலி அன்றைக்குப் பொழுது சாயும்வரை யாருடனும் பேசாமலிருந்தாள். உடனிருப்பவர்கள் அவளை நெருங்கத் தயங்கினார்கள். சரவணன் தள்ளி இருந்தபடியே அவளைக் கவனித்தான். நடுப் பகலுக்குப் பின்னர் மைதிலியின் தகிப்பு அதிகரித்தது. அவள் கூக்குரலிட்டபடியே சாமியாரின் முன்னால் போய் விழுந்து பம்பையின் ஒலிக்கு மேலெழுந்து ஆடத் தொடங்கினாள். சரவணனும் ஜெயபாரதியும் அவளைப் பிடித்து வரிசையில் அமர்த்தினார்கள்.
அவளைப் போலவே அங்கு இருபதற்கும் மேற்பட்டோர் ஆடிக்கொண்டு இருந்தார்கள். உடன் வந்தவர்கள் அங்கங்கே நின்றிருந்தார்கள். சாமியார் சுழற்றும் வீரசாட்டை காற்றைக் கிழித்து ஒலி உண்டாக்கியது. ஆவி பிடித்தவர்களை அடிப்பதாய் மிரட்டியும், அவர்கள் கேட்பதைக் கொடுத்தும் வாக்குறுதி வாங்கிக்கொண்டு சாமிக்காட்டின் தென்கிழக்கு மூலைக்கு உதவியாளர்களுடன் அனுப்பிவைத்தார் சாமியார். அவர்கள் அங்கிருக்கும் புளியமரத்தில் பேயாடிகளின் முடியை ஆணியால் பிணைத்துக் கத்தரித்தனர்.
எலுமிச்சை பழத்தை நெற்றிக்கருகில் வைத்து முணுமுணுத்த சாமியார், அதைக் குங்குமத்தில் புரட்டி மைதிலியின் தலையில் வைத்து அதட்டினார். ராமமூர்த்தியும் சரவணனும் நெருங்கி வந்து நின்றார்கள். அந்தச் சூழல் ஜெயபாரதிக்கு அழுகையை உண்டு பண்ணியது. அவள் சற்றுத் தள்ளி நின்று கலங்கினாள்.
“நீ யார்? ஒழுங்காச் சொல்லிடு. இல்லே, ஒடம்பு புண்ணாகிடும்”
“நான் இளவழகன். வேலூருக்குப் பக்கத்திலிருக்கும் வழித்துணைநாதர் குப்பத்தைச் சேர்ந்தவன். என்ன கழுத்தறுத்துக் கொன்னுட்டாங்க. நான் அரச மரத்தில் தங்கியிருந்தேன்”
அதைச் சொல்லிக்கொண்டே மூர்க்கத்துடன் ராமமூர்த்தியைப் பார்த்தாள் மைதிலி. அவளின் குரல் முற்றிலுமாக மாறியிருந்தது. அதைக் கேட்டதும் ராமமூர்த்தி அங்கிருந்து விலகி சாமியாடியின் அருகில் வந்து நின்று, அவர் காதில் எதையோ சொன்னான். அவன் முகத்தில் வெறுப்பும் கடுமையும் மண்டின. சற்று நிதானித்த சாமியார் மீண்டும் தொடர்ந்தார்.
“இந்தப் பொண்ண எதுக்குப் புடிச்சிக்கிட்ட?”
“உயிரோட இருந்தப்பவும் மைதிலிய பிடிச்சிருந்தது. செத்தப்பவும் மைதிலிய பிடிச்சிருந்தது. வாழ்ந்தா இதோடதான் வாழணும்னு தோணுச்சி. அதனால புடிச்சிக்கிட்டேன். காதலுக்குக் குணம், வடிவம் எதுவும் கெடையாது. லவ் ஈஸ் எட்டர்னல்”
“நீ என்னா ஆளு?”
“நான் காற்றான பிறகும் என்ன ஆளுன்னு என்னைக் கேக்கிறியே, உனக்கு அறிவில்ல? உன்னப் போல அறிவிலிகளுக்குத்தான் ஆளு, ஆஸ்தி, கௌரவம் எல்லாம். காற்றுக்கு அதெல்லாம் கெடையாது. நீ சாமியாடுற. உங்கப்பாவும் சாமியாடியா? பரம்பரை பரம்பரையா இதே தொழிலதான் செஞ்சிட்டு வர்றீங்களா?”
“நீ அதிகம் பேசுற… ஒடம்பு புண்ணாகப் போது”
“வீரம் வீரம்னு பேசிட்டு, மறைஞ்சிருந்து கொல்றது கோழைத்தனம். மைதிலியோட கருத்தக் கேட்டிருக்கலாம். என்னோட கருத்தக் கேட்டிருக்கலாம். எங்கள யோசிக்கவும் விடல. பேசவும் விடல. நான் அவளோட சினேகமா இருக்கிறேன்னு தெரிஞ்ச உடனே பின்னாடி வந்து கழுத்தறுத்து வீசிட்டீங்க. அன்னைக்கி நான் ஏமாந்துட்டேன். இன்னைக்கி என்னை நீ அடிச்சா, உன்ன நான் விடமாட்டேன். இங்கியே தல செதறி சாவ! இப்ப எனக்குச் சட்டம், கேசு, கோர்ட்டு எதுவும் கெடையாது. என்ன உங்களால ஒன்னும் செய்ய முடியாது!”
சாமியாடி தன் அருகில் வைத்திருந்த நீரை பதற்றத்தோடு எடுத்துக் குடித்தார். சுற்றி நிற்பவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சுதாரித்துக்கொண்டவாராக மைதிலியை முறைத்தார். அவள் கேலிச் சிரிப்புடன் பேசினாள்.
“சாமியாடி… நீயும் உங்கூட நிக்கிறவங்களும் படிக்காதவங்க. வெத்து அதிகாரத்துல உயிர் பிழைக்கிறவங்க. ஆனா நான் படிச்சவன். புத்தியோடு இயங்கறவன். மைதிலியோட கிளாஸ்லயே ஒன்னா அக்ரி படிச்சவன். பிளஸ் டூ, எண்ட்ரென்ஸ், எல்லாத்திலியும் ஸ்டேட் ரேங்க் எடுத்தவன். என்ன நீங்க விசாரிப்பீங்களா? என்ன நீங்க கொல்லுவீங்களா?”
“சரி சரி… பேச்ச வளக்காத! நீ பேசி ஆகப்போறது ஒன்னுமில்ல! உனக்கு என்னா தேவன்னு சொல்லு குடுக்கறோம். வாங்கிக்கிட்டு இந்தப் பொண்ண உட்டுட்டு ஓடிப்போயிடு”
“பெரியக்கறி வேணும். தர்றியா?”
“அதெல்லாம் இங்கக் கேக்கக்கூடாது. இந்த நெறியில கேக்கக் கூடாது. நீ உட்டுட்டுப் போறல்ல, அங்க நீ கேக்குற ஜீவங்க மேயும். கடிச்சிக் கடிச்சித் துன்னுணே ஓடு”
“பிராந்தி குடு”
“குடுக்கறோம். குடிச்சிட்டு அதோ தெரியிற புளிய மரத்துக்குப் போணும். திரும்பிக் கிரும்பிப் பாத்த சூலத்துலயே குத்திடுவோம். கொடலு வெளியே வந்துடும்!”
சாமியாடி கொடுத்த பிராந்தி பாட்டிலைத் திருகி மூடியை வீசியெறிந்து அலட்சியமாக முழுவதையும் குடித்து முடித்தாள் மைதிலி. ராமமூர்த்தியிடம் சாமியார் சூலத்தைக் கொடுத்தார். ஜெயபாரதியை அழைத்து மந்திரித்த எலுமிச்சை பழத்தைத் தந்தார்.
“அது பின்னாடியே போங்க. ஒண்ணும் பண்ணாது. இதவிட கில்லாடியான ஆவிங்களை எல்லாம் பாத்தவன் நான். அது திரும்பிப் பாக்காம நடக்கணும். திரும்பினா இந்தப் பழத்த உங்கக் கையில வச்சி நுமுட்டுங்க. அதுக்கு ஒடம்பெல்லாம் வலியெடுக்கும். அதையும் மீறி திரும்பினா, சூலாயுதத்தாலியே நெட்டித் தள்ளுங்க. புளிய மரம் வரைக்கும் போயிட்டா போதும். அங்க சிஸ்யனுங்க பாத்துக்குவாங்க”
பெரிய பாராங்கல் ஒன்றைத் தலையில் சுமந்து நடந்தாள் மைதிலி. அவள் பின்னாலேயே ராமமூர்த்தியும் ஜெயபாரதியும் போனார்கள். சரவணன் கடைசியாக நடந்தான். மைதிலி திரும்பிப் பார்க்கவில்லை. அவளுடைய நடை நிதானமாக இருந்தது. மூச்சு இரைந்தது. வியர்வையும் கண்ணீரும் வழிந்தன.
வேளாண்மைக் கல்லூரியில் தன்னுடைய வகுப்பறையில் முதன்முதலாக இளவழகனைப் பார்த்தாள் மைதிலி. தன் மகரந்தச் சேர்க்கை, அயல் மகரந்தச் சேர்க்கை குறித்த விவாதம் எழுந்தபோது அவனுடைய முகம் அவளுக்கு நன்றாகப் பதிந்தது. பின்னர் கலை இலக்கியம் தொடர்பான போட்டிகளிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் அவர்கள் நெருக்கமாகச் சந்தித்துக் கொண்டனர். இரண்டாம் ஆண்டிலிருந்து அவர்கள் காதலிக்கத் தொடங்கினார்கள். அவனுக்கு அம்மா மட்டுமே இருப்பதாகவும், அவர்கள் குடும்பத்திலேயே அவன் முதல் தலைமுறை பட்டதாரியாகப் போகிறவன் என்றும் அறிந்தபோது அவளுக்கு வியப்பு உண்டானது.
முதல் முறையாக அவனை மைதிலி தன்னுடைய வீட்டுக்கு அழைத்திருந்தாள். உடன் படிக்கிறவன் என்று சொல்லி எப்படியாவது சமாளித்துக்கொள்வதாகச் சொல்லியிருந்தாள். பேருந்தில் வந்து, நெடுஞ்சாலையில் இறங்கி, நிலத்துக்குச் செல்லும் இணைப்புச் சாலையில் இளவழகன் நடந்தால், மைதிலியே எதிர்கொண்டு வந்து அழைத்துக்கொள்வதாக முடிவுசெய்து கொண்டார்கள்.
திட்டமிட்ட நாளன்று வெய்யில் இதமாகக் காய்ந்தது. பேருந்திலிருந்து இணைப்புச் சாலை நிறுத்தத்தில் இறங்கிய இளவழகன், மைதிலிக்குக் கைபேசியில் தகவலைச் சொல்லிவிட்டுக் கன்ணுக்கெட்டிய தொலைவுக்கு விளைநிலங்களும், மலைத் தொடருமாக இருந்த அந்த நிலக்காட்சியைப் பார்த்தான். நிலத்துக்குச் செல்லும் இணைப்புச் சாலை முன்பு எப்போதோ நன்றாக இருந்ததாகவும், தொடர்ந்த மழையால் அறுப்புண்டு மணல் தேறி காட்டோடை ஆகி விட்டதாகவும் நிலவிய கதையை அறியாமல் அச்சத்தோடு நடக்கத் தொடங்கினான். ஓடையின் இரு கரைகளிலும் ஆளுயரத்துக்குப் பலவகையான செடிகள் புதர்களாய் மண்டியிருந்தன. பெரும்பாலும் மஞ்சுப்புற்களே அடர்ந்திருந்தன. ஓடையின் குறுக்கே சில நேரங்களில் மலைப் பாம்புகள் படுத்திருக்கும் என்று மைதிலி சொன்ன சம்பவங்கள் அவன் நினைவுக்கு வந்து பீதியை ஊட்டின.
சிறிது தூரம் சென்றதும் புதர்ச்செடிகள் மறைந்து சமவெளி தோன்றியது. அங்கு இளவழகன் சில வினாடிகள் நின்றான். அவன் முன்னால் எதிர்கொண்டு வரும் மைதிலியின் உருவம் தூரத்தில் மங்கலாகத் தெரிந்தது. அதே நொடியில் பின்னால் மிக நெருக்கமாக இருவரின் காலடியோசை மணல் நொறுங்கிட கேட்டது. இளவழகன் திரும்புவதற்குள் ராமமூர்த்தி துண்டால் அவன் முகத்தை மூடியிறுக்கி, நெஞ்சில் குத்தி, தன்னுடைய தொடையின் மீது மல்லாக்கச் சாய்த்துக் கொண்டு கத்தினான்.
“அறுடா இவன”
கிருஷ்ணன் சடாரென இளவழகனின் குரல்வளையை அறுத்ததும் ரத்தம் பீறிட்டடித்தது. துடிக்கும் அந்த உடலை ஓடைக்கரையிலிருந்த புதர்மண்டிய பாழ்க் கிணற்றில் தள்ளினார்கள். எதிரில் கத்திக்கொண்டு ஓடிவரும் மைதிலியைத் தடுத்து அறைந்த ராமமூர்த்தி அவளை அப்படியே வீட்டுக்குத் தூக்கிச் சென்றான். அன்றிலிருந்து பேச்சற்ற நிலையில் கிடந்த மைதிலி சிலநாட்களுக்குக் கத்திக் கொண்டும், மூர்க்கமாகவும் இருந்தாள்.
இளவழகனைத் தள்ளிய கிணற்றில் அன்றே ஒரு மாட்டையும் அறுத்துப் போட்டான் ராமமூர்த்தி. இளவழகனின் சட்டைப்பையிலிருந்து எடுத்த கைபேசியைப் பிரித்து, சில்லுச் சில்லாக உடைத்து அழித்தான் கிருஷ்ணன். இளவழகனின் படத்தை, காணவில்லை அறிக்கையில் பத்திரிகைகளுக்குக் கொடுத்தபிறகு அமைதியானது காவல்துறை.
சாமிக்காட்டின் தென்கிழக்கு மூலை புளிய மரத்துக்கு அருகில் சென்றதும் சுமந்துவந்த கல்லைக் கீழே வீசினாள் மைதிலி. அங்கு நின்றிருந்த சாமியாரின் உதவியளர்கள் இருவர் அவள் தலைமுடியைப் பற்றியிழுத்து மரத்தடியில் அமர்த்தினர். ஒரு மயிர்க் கற்றையைப் பிடித்துச் சுற்றி அடிமரத்தில் வைத்து ஆணி அடித்தனர். மரத்துடன் பிணைந்திருந்த முடிக்கற்றை வெட்டி விடப்பட்டதும் மைதிலி மயங்கிச் சரிந்தாள். உடனே அவளை மடியில் கிடத்தி தண்ணீர் தெளித்துக் குடிப்பதற்குக் கொடுத்தாள் ஜெயபாரதி.
மைதிலி இயல்பாகி சிரித்ததைக் கண்ட ஜெயபாரதி உன்மத்தம் தாளாமல் மகளைக் கட்டிக்கொண்டு அழுதாள். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவள் சிரிப்பதாக நினைவு சொன்னது. மூவரும் அவளைக் கைத்தாங்கலாகக் குடிலுக்கு நடத்திக்கொண்டு போனார்கள். இரவு உணவை முடித்த பிறகு ராமமூர்த்தியும் சரவணனும் கோயில் பிரகாரத்துக்குக் கிளம்பினார்கள்.
“சாமியார் கிட்ட மேக்கொண்டு என்னா சமாச்சாரம்னு பேசிட்டு, நாங்க அங்கியே படுத்துக்கிறோம். நீங்க நல்லா தூங்குங்க. காத்தால எழுந்து தயாரானதும் வீட்டுக்குக் கௌம்பிடுவோம். போற வழியில டிபன் சாப்டுக்கலாம்”
காலையில் நேர்த்தியாக தயாராகி நிற்கும் மைதிலியை பார்த்ததும் சரவணன் பிரம்மித்தான். அவள் வெளுத்த நீலத்தில் செம்மஞ்சள் கரையுடைய பருத்திப் பட்டுப் புடவையைக் கட்டி பொலிந்தாள். அவனைப் பார்த்ததும் அருகில் சென்று “மாமா” என அழைத்துச் சிரித்தாள். ராமமூர்த்தியும் ஜெயபாரதியும் அத்தருணத்தை மகிழ்ச்சி பொங்கச் சிலாகித்தனர். காற்றை வெய்யில் உலர்த்தியிராத பொழுதிலேயே அவர்கள் கிளம்பினார்கள். காரில் சரவணனுக்கு அருகிலேயே முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டாள் மைதிலி.
பாதி தொலைவில் நெடுஞ்சாலை ஓரமிருக்கும் ஓர் உணவகத்தில் காரை நிறுத்தினான் சரவணன். நிறைய மரங்களோடும் செடிகளோடும் இருந்தது உணவகம். முகப்பில் நின்ற இரண்டு பனைமரங்கள் தனித்த அழகை அதற்கு வழங்கின.
“இங்க பாத்ரூம் அவுட்டர்ல இருக்கும். மொதல்ல எல்லாரும் போயிட்டு வந்துடுங்க. நா அப்பிடி ரோட்டுக்கா நின்னுட்டு வந்துட்றேன்”
அவர்கள் காரிலிருந்து இறங்கியதும் சொன்ன ராமமூர்த்தி, சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டே நெடுஞ்சாலைக்குச் சென்றான். மற்ற மூவரும் கழிவறைகளை நோக்கி நடந்தார்கள். ஜெயபாரதி வெளியே வரும்வரை கழிவறைக்கு வெளியே மைதிலி நின்றிருந்தாள். உணவகத்துக்குள் நெடுஞ்சாலையைப் பார்க்கும்படியான கண்ணாடித் தடுப்புக்கு அருகில் அமர்ந்து உணவுக்குச் சொன்னார்கள்.
“மாமா வந்துட்டுங்கா”
“அவரு வருவாரு. நீ எல்லாருக்கும் இட்லி சொல்லுப்பா”
சரவணன் சொன்னதற்கு மறுத்தாள் ஜெயபாரதி. மூவரும் முதல் விள்ளலைத் தின்று முடித்திருந்தபோது உணவகத்தின் வேலைக்காரச் சிறுவன் கத்திக்கொண்டு ஓடிவந்தான்.
“ரேட்டுல ஒருத்தரு அடிப்பட்டுக் கெடக்குறாரு”
எல்லோரும் எழுந்து ஓடினார்கள். நெடுஞ்சாலையின் நடுவில் ராமமூர்த்தி இரத்த வெள்ளத்தில் அசைவற்றுக் கிடந்தான். ஜெயபாரதி பெருங்கதறலுடன் உடலின் அருகில் ஓடினாள். மைதிலி சரவணனைப் பார்த்தாள். இருவரும் சிரித்துக்கொண்டார்கள்.