கறுப்புத் திரை

ஜா.தீபா

ஷா ரேக்கு (Issa Rae) அமெரிக்காவில் பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. இவரைத் தங்களது முன்மாதிரியாகக் கொண்ட பலர் இருக்கிறார்கள். இயக்குநர், ராப் பாடலாசிரியர், பாடகி, திரைக்கதையாசிரியர், நடிகை எனப் பல வகைகளிலும் தனது பங்களிப்பைத் தொடர்ந்து தந்துவருகிறார். “எதையும் வித்தியாசமாக யோசிக்க வேண்டும்” என்பதுதான் இஷா ரேயின் மந்திரம். அதை அவர் தொடர்ந்து செய்துவருவதால்தான் இன்று அமெரிக்க ஊடகத்தில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார்.

டைம்ஸ் இதழ் சிறந்த நூறு ஆளுமைகளில் ஒருவராக இஷா ரேயைத் தெரிவுசெய்தது. இவர் எழுதிய ‘Misadventures of an Awkward Black Girl’ புத்தகம் அனைத்துத் தரப்பினராலும் விரும்பி வாசிக்கப்படுகிறது. முன்னணித் தயாரிப்பு நிறுவனங்களின் படங்களிலும் நடித்துவிட்டார். சமீபத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்ற ‘பார்பி’ படத்திலும் நடித்திருக்கிறார். இந்தப் பயணம் அவருக்குச் சாதாரணமாக அமைந்துவிடவில்லை. பல தோல்விகள், சறுக்கல்களுக்குப் பின்னரே தனக்கென ஓர் அடையாளத்தைப் பெற்றிருக்கிறார்.

அப்பா மருத்துவர், அம்மா பள்ளி ஆசிரியை. சட்டம் அல்லது வர்த்தகம்தான் இஷா படிக்க வேண்டும் என்பதே பெற்றோர் ஆசை. ஆனால், இஷாவின் கவனம் இலக்கியத்தின் பக்கம் இருந்தது. மேற்படிப்புக்கு ஆப்பிரிக்க இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்தார். ஸ்டான்ஃபோர்ட் கல்லூரியில் சேர்ந்தபோது தனக்கு நிகழ்ந்ததைக் கதையாக எழுதித் தனது குறிப்பேட்டில் மட்டும் வைத்துக்கொண்டிருந்தார். அக்கதைகளை உடன் படிக்கும் தோழியான ஓலிவர் ட்ரேசியிடம் சொல்ல, அவர் அதனை வீடியோவாக எடுக்கலாமே என்றார். அப்படித்தான் தனது அனுபவங்களை ஓலிவர் ட்ரேசியின் உதவியோடு குறும்படங்களாக மாற்றினார். Dorn Dairies என்ற பெயரில் யூடியூப்பில் வெளிவந்த அந்தத் தொடர் இஷா எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், மற்ற பல்கலைக்கழக மாணவர்கள் அதனைப் பெரிதும் வரவேற்றார்கள். அதிலிருந்து இஷாவுக்கு இரண்டு விஷயங்கள் தெரியவந்தன. ஒன்று, தன்னுடைய படைப்புகள் பலரைப் போய்ச் சேர வேண்டுமென்றால், பொதுவான பார்வையாளர்களை நோக்கி அது செல்ல வேண்டும் என்பது. Dorn Dairiesஐ பொறுத்தவரை அது மாணவர்களை மையமாகக் கொண்டது. அதனால் வெகுஜனங்களை ஈர்க்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டார். இரண்டாவது, தனது நகைச்சுவை உணர்வு பலராலும் ரசிக்கப்படுகிறது என்பது. எதையும் மெல்லிய நகைச்சுவையோடு சொல்வதே ரேயின் பெரும் பலம்.

90களில் அமெரிக்கத் தொலைக்காட்சி வெவ்வேறு விதமான நிகழ்ச்சிகள், தொடர்களைக் கொண்டிருந்தது. புதிய சிந்தனைகளுக்குப் பெரும் வரவேற்பு இருந்தது. மற்ற ஊடகங்களைக் காட்டிலும் கறுப்பின மக்களை அது தன்னோடு இணைத்துக்கொண்டது. அவர்கள் நடித்து வெளிவந்த தொடர்கள் பரவலான கவனம் பெற்றன.

இஷா ரே அவற்றை விரும்பிப் பார்த்தார். ஆனால், அவர் மனதில் ஓர் உறுத்தல் இருந்தது. “இவ்வளவுதானா நம் மக்கள் குறித்துச் சொல்ல இருக்கின்றன? நகைச்சுவை என்ற பெயரில் சகிக்க முடியாத ஜோக்குகள் அல்லது ஒடுக்கப்பட்ட வரலாற்றைச் சோகமாகச் சொல்வது. இவற்றைக் கடந்தவொரு வாழ்வியலை ஏன் பதிவு செய்வதில்லை?” என்கிற கேள்வி இருந்தது.

இஷா ரே சிறுவயதில் வசித்த இடத்தில் அவர் குடும்பம் மட்டுமே ஆப்பிரிக்க வம்சாவளியினராக இருந்தனர். அவர் படித்த பள்ளியிலும் இவர் ஒருவரே கறுப்பினத்தவர். மற்றவர்களுடன் சகஜமாகப் பழகினாலும் நாம் இவர்களை விட வேறானவர்கள் என்கிற எண்ணம் அவருக்குள் இருந்தது. அதனால்தான் இந்தத் தொலைக்காட்சித் தொடர்கள் அவரை ஈர்த்திருந்தன. ‘இவை நன்றாக இருந்தாலும் கூட ஏதோ ஒன்றைத் தவறவிடுகிறார்கள். அந்தப் போதாமையை நாம் ஏன் நிரப்பக் கூடாது’ என்று நினைக்கத் தொடங்கினார். ஆனால், எப்படி என்றுதான் அவருக்குத் தெரியவில்லை. கல்லூரியில் சேர்ந்தபோது சமூக வலைத்தளங்கள் பரவலாக ஆரம்பித்தன. தான் நினைத்துக்கொண்டிருந்ததைச் செயல்படுத்தத் தொடங்கினார்.

தனக்கான யூடியூப் சேனலைத் தொடங்கி, அதில் வெளியிட்ட தொடரும் அதற்கு அவர் வைத்திருந்த பெயரும் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தன. இந்தமுறை தனது தொடரைப் பரவலாக்க வேண்டும் என இஷா முயற்சி எடுக்கவேயில்லை. ஆனால், அது தன் வேலையைச் செய்தது. தொடரைப் பார்த்த யாரும் அது குறித்துப் பேசாமல் இருந்ததேயில்லை. கலை விமர்சகர்களும் அத்தொடர் குறித்து எழுதினார்கள். தொடரின் பெயர் ‘An Awkward Black Girl’. அதற்குக் கிடைத்த வரவேற்பும், இஷா ரேயினுடைய கற்பனைத்திறனும் அவருக்குப் பெரும் ரசிகர் கூட்டத்தினை உருவாக்கியது. தனக்குத் தெரிந்தவர்களையே அதில் நடிக்க வைத்தார். அவர்கள் பெரும்பாலும் கறுப்பினத்தவராக இருந்ததால் அது கறுப்பின மக்கள் மட்டும் நடிக்கும் தொடர் என்ற அடையாளத்தையும் பெற்றுக்கொண்டது.

ஜே என்கிற பெண் எதிர்கொள்ளும் அனுபவங்களே An Awkward Black Girl தொடர். இக்கதாபாத்திரத்தில் ரே நடித்திருந்தார். “நான் ஜே. நான் ஒரு பெண், கறுப்பினத்தவள். உலகத்தின் மிக மோசமான இரண்டு விஷயங்கள் இவை என யாரோ ஒருவர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்கிற குரலோடு தொடர் தொடங்கும்.

வேலை செய்யும் இடத்தில், கார் ஓட்டும்போது, காதல் முறியும்போது, உணவுக் கூடங்களில், தெருக்களில், பக்கத்து வீட்டினருடன் இப்படிப் பல அனுபவங்களை ஜே எதிர்கொள்வதே இத் தொடர். சிரிப்புக்கு உத்தரவாதங்கள் உண்டு. நமக்கு ஒருவர் போன் செய்திருப்பார், நாம் பேச வேண்டாம் என நினைத்து இணைப்பைத் துண்டிப்போம். அதே நபர் நமக்குப் பின்னாலேயே நின்றுகொண்டு ‘ஹலோ’ என்று குரல் கொடுத்தால் அவரை எப்படி எதிர்கொள்வோம்? கையில் அந்த நேரம் போனை வைத்துக்கொண்டிருக்கும் நம்முடைய முகம் என்னவாக மாறும்? என்னவெல்லாம் உளறிச் சமாளிப்போம்? இதைத்தான் கதையாக மாற்றியிருப்பார் ரே. மற்றொரு சூழல்.  வேலையை விட்டுவிடலாம் என்று ஜே நினைக்கும் சமயம், அலுவலகத்துக்கு ஓர் இளைஞன் வருகிறார். பார்க்க அழகாக இருக்கிறார். இனி இந்த அலுவலகத்தில்தான் வேலை செய்யப்போகிறார் என்று தெரிந்ததும் ஜே சட்டென்று தனது முடிவை மாற்றிக்கொள்கிறாள். உணர்ச்சிவசப்பட்டு எல்லோரிடமும் இனி என்னுடைய உடல் பொருள் ஆவி எல்லாம் இந்த நிறுவனத்துக்குத்தான் என்று பெருமையுடன் சொல்லிவிட்டு அமரும்போது உடன் பணி செய்யும் பெண் ஜேயிடம், “இவன் எனக்காகத்தான் இங்கு வேலைக்குச் சேர்ந்திருக்கிறான். நாங்கள் டேட்டிங் செய்ய இருக்கிறோம்” என்றதும் ஓர் அவலமான சூழல் ஏற்படும் இல்லையா… இப்படித்தான் ஒவ்வொரு கதையிலும் பல தருணங்களை இஷா ரே வைத்திருக்கிறார்.

கல்லூரிப் படிக்கும் காலத்தில் ராப் இசைப் பாடல்கள் எழுதி இசையமைத்துச் சிறிய இசைக் குழு ஒன்றையும் நடத்திவந்தார் இஷா. ஒருவர் மீது எழும் கோபத்தை ராப் பாடலாக எப்படி மாற்றுவது என்று இத் தொடரில் வரும் ஒரு குறும்படம் நம்மை வெகு நேரத்துக்கு நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கும்.

இவருடைய அப்பா செனகல் நாட்டைச் சேர்ந்தவர். அம்மா அமெரிக்காவில் வாழ்ந்த கறுப்பினத்தவர். இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள். இஷா தனது ஆறு வயதுவரை அப்பாவின் நாடான செனகலில் வாழ்ந்தார். பிறகு அமெரிக்காவில் குடியேறினார். தனது இளமைக் காலத்தில் மீண்டும் செனகலில் சிறிது காலம் தங்கியிருக்கலாம் என்று விருப்பத்தோடு செல்கிறார். பிறகுதான் தனக்குள் ஓர் அமெரிக்கப் பெண் எப்போதும் விழித்துக்கொண்டே இருக்கிறாள் என்று தெரிந்திருக்கிறது. தன்னை ஓர் அமெரிக்கராகவே அவர் அங்கு நினைக்க வேண்டியிருந்தது. அப்பாவின் நாடு என்றபோதிலும் அங்குள்ள கலாச்சாரம் அவருக்குப் புதிதாக இருந்தது. அமெரிக்காவில் தான் ஓர் ஆப்பிரிக்கப் பூர்வகுடியாகவும், செனகலில் அமெரிக்கராகவும் வாழ்ந்துகொண்டிருக்கும் விந்தையையும் சுற்றியுமுள்ளவர்கள் தன்னை என்ன மாதிரியான அடையாளத்தோடு பார்க்கிறார்கள் என்பதையும் யோசித்துப் பார்த்தார். இதுபோன்ற சிந்தனைகள்தாம் பெரும்பாலான கறுப்பினப் படைப்பாளிகளுக்கு இருந்திருக்கிறது. இஷா ரே இச்சிந்தனையைத் தனது படைப்பூக்கமாக மாற்றிக்கொண்டார். ஆனால், எங்குமே தனது நிலையினைப் புலம்பலாக வெளிப்படுத்தக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். அதனால்தான், DORN DAIRIES தொடங்கி அவரது எல்லாப் படைப்புகளிலும் சொல்லவரும் கருத்து எத்தனை கனமானதாக இருந்தாலும் அதைக் கூர்மையாகவும் நகைச்சுவையாகவும் அவரால் சொல்ல முடிந்தது.

தொடர்ந்து தன்னுடைய தொடருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்த நம்பிக்கையில் கல்லூரிப் படிப்பு முடிந்ததும் திரைக்கதை எழுத்தாளராகலாம் என முடிவு செய்து ஸ்டூடியோக்களின் கதவுகளைத் தட்ட, அவர்களில் பலரும் இஷா ரேயின் ரசிகர்களாக இருந்தபோதும், பலனேதுமில்லை. “சரி போகட்டும்… வாய்ப்பு வரும்போது பார்த்துக்கொள்ளளலாம். இனி யாரையும் அணுக வேண்டாம். நாம் நமது வேலையைச் செய்வோம். நம்மை விலக்கியவர்கள் ஒருநாள் திரும்பிப் பார்ப்பார்கள்” என அடுத்தடுத்துக் குறும்படங்களை எழுதி இயக்கிக்கொண்டிருந்தார்.

அவர் எதிர்பாராத தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. “Awkward Black Girlஐ முழுநீளத் தொடராகச் செய்துகொடுங்கள்” என HBO இஷாவை அணுகியது. யாருடைய ‘yes’- க்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை. நம்முடைய இடத்தை நாமே உருவாக்குவோம் என்று அவர் நினைத்தது நடந்திருந்தது. HBOக்காக INSECURE என்கிற தொடரை எழுதினார். அதற்குக் கிடைத்த பாராட்டில், தொடர்ந்து ஐந்து சீசன்கள் வெளிவந்தன. அந்த வருடத்தின் சிறந்த தொலைகாட்சித் தொடராகப் பெயர் பெற்றது.

அதோடு அவர் கதைக்களமாக எடுத்துக்கொண்ட தெற்கு அமெரிக்காவில், இந்தத் தொடரின் விளைவாகக் கறுப்பர்களின் வர்த்தகம் அதிகரித்தது. ஹூர்ரே என்கிற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி அதன் எல்லாத் துறைகளிலும் கறுப்பர்களுக்கு இஷா முக்கியத்துவம் கொடுத்தார். இந்நிறுவனம் வார்னர் நிறுவனத்தோடு இணைந்து பல வெற்றிகரமான தொடர்களைத் தயாரித்திருக்கிறது. அமெரிக்க ஆப்பிரிக்க வம்சாவளியினரின் சட்ட உதவிக்கென்று ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை இஷாவின் நிறுவனம் ஒதுக்கிவருகிறது. அதோடு சிறையில் தண்டனைப் பெறும் கறுப்பர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவுகளையும் இவரது நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இஷா ரேயினுடைய குரல் சர்வதேச அளவில் முக்கியமானது. தன்னுடைய பிரபலத்தன்மையை, புகழைத் தன் இன மக்களுக்காகவே பயன்படுத்துகிறார். தனக்குக் கிடைக்கும் ஊடகம் எதுவொன்றிலும் தன்னுடைய முத்திரையைப் பதித்துக்கொண்டே இருக்கிறார். புத்தகம் எழுதுகிறார், யூடியூப் சேனல் நடத்துகிறார், திரைக்கதை எழுத்தாளராக இருக்கிறார், ஒரு நிறுவனத்தை நடத்திவருகிறார். இவற்றையெல்லாம் இவர் தனக்காகச் செய்யவில்லை, தன் இனத்துக்காகச் செய்கிறார். இதனை அமெரிக்கா அறியும்.

எம்மி விருது நிகழ்வுக்குச் சென்றிருந்தபோது பத்திரிகையாளர்களிடம் “I am rooting for everybody Black” என்றார். சில நிமிடங்களில் அது வைரலானது. அந்த வாரமே இந்த வாசகத்தை எழுதிய டிஷர்ட்டுகள் விற்பனைக்கு வந்தன. 

இப்படியாக எல்லோரும் கவனிக்கும், பின்தொடரும் நபராக இருக்கையில் பதற்றம் ஏற்படும் இல்லையா என்று இஷாவிடம் கேட்டால், “எதற்குப் பதற்றம்… இயல்பாக இருப்பதும் உண்மையாக இருப்பதும் ஒன்றுதான். இயல்புக்கும் பதற்றத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இருக்கவியலாது” என்கிறார்.

ஊடகத்தில் சிறு கல்லை எரிந்து பேரலையை உருவாக்கியவர் இஷா ரே. அவருக்கு மட்டும்தான் தொடக்கத்திலேயே தெரியும், தான் எறிந்தது எரிகல் என்று.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger