அரபு இலக்கியத்தில் நோபல் பரிசுக்காகப் பலமுறை பரிந்துரைக்கப்பட்ட, ஈராக் நாட்டைச் சேர்ந்த சமகால எழுத்தாளர் வஃபா அப்துல் ரஸ்ஸாக் கவிதை, சிறுகதை, நாவல் என இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இதில் புதிய முன்னெடுப்பாக, சமீபத்தில் அவர் எழுதிய நுண்கதைகளின் தொகுப்பை அரபியிலிருந்து நேரடியாகத் தமிழில், ‘புயல் முட்டை’ எனும் பெயரில்
அ.ஜாகிர் ஹுசைன் மொழிபெயர்த்திருக்கிறார். இது அரபியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட முதல் நுண்கதைத் தொகுப்பு ஆகும், இப்புத்தகம் பல்வேறு பரிமாணங்களைக்கொண்ட சிறிய அளவிலான கதைகள் வழியே நம்மை எங்கெங்கோ அழைத்துச் சென்றுவிடுகிறது.
சமூகக் கட்டமைப்புகள், மனித வாழ்க்கையின் எதிர்ப்புணர்வுகள், கலாச்சாரத்தின் அவலங்கள் ஆகியவற்றை ஆழமாக விவரிப்பது மட்டுமின்றி, சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் சிக்கல்களைக் குறைந்த சொற்களின் வடிவத்தில் தனித்துவமாக வெளிப்படுத்துகிறது. கதைகளின் பின்னணியில் மனிதர்கள் எவ்வாறு சமூகத்தால் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதையும், அவர்களது வாழ்க்கையில் நிகழும் சிக்கல்களையும் நுணுக்கமாக விவரிக்கிறது. வைதீகமான கதைச் சொல்லல் உத்திகளில் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட அம்சங்களைத் தகர்த்தெறிந்து படிமங்கள், உவமைகள், உருவகங்கள் எனப் பல வடிவங்களிலும் கதைகள் வாசகர்களுக்குக் கடத்தப்படுகின்றன.
மழைக்குக் கண் தெரியாதென்று சொல்லும் சேறு, நாவலில் இருந்த குடும்பம் புத்தகத்திலிருந்து வெளியேறுவது, மரக்கிளையை வெட்டிச் செய்யப்படும் குதிரை, கண்ணாடியில் இருந்த முகம் திருடு போவது, தபால் நிலைய வாசலில் தொலைந்து போகும் கடிதம், பாராளுமன்றத்தின் சாவியைப் பெற்றுக்கொள்ளும் வேட்பாளர், தெருவைச் சுத்தம் செய்யும் வெடிகுண்டுகள், கனவில் வரும் உப்பில்லாத ஏரி, தனக்குத் துரோகம் செய்த கால்கள் போன்ற மாய எதார்த்தங்கள் புத்தகம் முழுவதும் இருக்கின்றன.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு அடுத்து அதிக போரைச் சந்தித்த தேசம் ஈராக். அதிலும் குறிப்பாக சதாம் உசேனின் சர்வாதிகார ஆட்சிக்கும், அதைத் தரைமட்டமாக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் மாண்ட மக்கள் ஏராளம். எங்கெல்லாம் இழப்புகள் ஏற்படுகிறதோ, எங்கெல்லாம் போர்கள் வெடிக்கிறதோ, அங்கே கலைஞர்களும் வெடித்தெழுகிறார்கள். கலைஞர்களிடமிருந்து தப்பிக்காத போர்களே இல்லை. எப்படியோ மறைக்க முயன்று, ஆனால் ஏதோவொரு வழியில் உலகிற்குத் தெரியவரும் படைப்புகளின் முன்னால் கைகட்டி நிற்கின்றன, போரும் அதன் வரலாறும் (உ-ம்: ஆனி ஃபிராங்கின் டைரி). அந்த வகையில் ஈராக்கின் அரசியல் மீதான தனது விமர்சனங்களைக் கதைகளின் வாயிலாகவும், படிமங்களின் வாயிலாகவும் மறைமுகமாக நமக்கு விளக்குகிறார் எழுத்தாளர் வஃபா.
பணம் மீதான தீராத நோய் பிடித்து, நுகர்வுக் கலாச்சாரம் மூலம் தொடர்ந்து மக்களைத் தலைகுனிந்த படியே வைத்திருக்கும் முதலாளித்துவ நிறுவனங்கள், ஏகாதிபத்தியர்கள், இராணுவ அரசு போன்றவற்றின் அகச்சிந்தனையை வரைபடமாக்குகிறது இப்புத்தகம். ஏதோ ஒன்றின் மீது பைத்தியமாக இருக்கும் அளவுக்கு மனநோய் பிடித்தவர்களாக்கி அவர்களைக் குணமடைய விடாமல் தங்கள் தேவைகளுக்கு எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்கிறார்கள், எப்படியெல்லாம் பலி இடுகிறார்கள் என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறது.
செய்யுள் வடிவில், ‘திருக்குறள்’ என்ற பெயரில் இரண்டே அடியில் இருக்கும் நன்னெறிகள் நாம் ஏற்கெனவே அறிந்ததுதான். ஆனால், கதைகளைச் சொல்லும் விதத்தில் இது புதிது. இரண்டே வரிகளில் இருக்கும் கதைகள்கூட பெரும் செய்தியை மறைமுகமாகச் சொல்கின்றன. நீண்ட நெடிய வர்ணனைகளுக்கும் உவமைகளுக்கும் பழகிப்போனவர்களுக்கு இதுபோன்ற நுண்கதைகள் ஒரு புது வரவு.
குறைவான வார்த்தைகளைக் கொண்டு ஒரு கதையைச் சொல்வது சிறுகதையை விட சவாலான ஒன்று. அதேசமயம் குறைவான சொற்கள் வாசகர்களிடையே ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது. உதாரணமாக, தொனதொனவென்று பேசிக்கொண்டிருக்கும் உங்கள் நண்பர் சட்டென்று மிகக்குறைவாக அல்லது அளவான வார்த்தைகளோடு பேசினால், அவரது அமைதி உங்களை நிறையவே குழப்பும். இதைவிட, அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் உங்களுக்கு நினைவில் இருக்கும். அந்த வகையில் குறைவான வார்த்தைகள் கொண்டு நம்மைச் சிந்திக்க வைப்பதன் மூலம், புதிதாக ஒரு கதையைக்கூட நம்மளவில் உருவாக்க முடிகிறது.
முன்பிருந்த தலைமுறைக்கு நீண்ட நெடிய நாவலைப் படிக்க நேரம் இருந்தது. பின்னாளில் அலுவலகம் செல்லும் பயண நேரத்தில் பேருந்தில் வாசிக்க ஏதுவாக சிறுகதைகள் இருந்தன. ஒரு தேநீர் இடைவேளையில் சட்டென்று சில நிமிடங்களில் வாசிக்கப்படும் சிறுகதைகள் அதன் பின்னர் அறிமுகமாயின. சில சமயம் அரிதிலும் அரிதாக ஒரு பக்கத்தில் இருந்தாலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடிய கதைகள் வெளியாகின.
இன்ஸ்டாகிராம் ரீல்கள், டிஸ்கார்ட் (Discord) செய்திகள், வாட்சாப் உடையாடல்கள் என எப்போதும் அலைபேசித் திரையைக் குனிந்தபடியே பார்த்து வளரும் அடுத்த தலைமுறை, அலைபேசியை விட்டுச் சில நிமிடங்கள் புத்தகங்களைப் பார்த்தாலே மிகப்பெரிய சாதனை என்றாகிவிடுகிறது. ஆனால், இக்குறைபாட்டை நீக்குவதற்கு இதுபோன்ற நுண்கதைகள் பெரும் வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்.
கிரிக்கெட் துவங்கிய காலகட்டத்தில் டெஸ்ட் மேட்ச் என்று சொல்லக்கூடிய ஐந்து நாட்கள் நிகழும் ஆட்டங்கள் மட்டுமே நடப்பில் இருந்தன. பின்னர் அது சுருங்கி ஒருநாள் போட்டியாக மாறின. காலமாற்றத்தில் அவை இன்னும் சுருக்கப்பட்டு, இப்போது உலக கிரிக்கெட்டின் முதன்மை வடிவமாக ஜி20 ஆட்டங்கள் இருக்கின்றன.
அதுபோல, வருங்காலத்தில் பெரும்பான்மை வாசகர்களைக் கொண்ட ஓர் இலக்கிய வடிவமாக நுண்கதைகள் இருக்கும் எனவும், அதன் மூலம் வாசிப்பவர்களில் சிலர் சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் கூட நகர்ந்து செல்ல வாய்ப்புள்ளது எனவும், சாகித்ய அகாடமி, யுவபுரஸ்கார் போன்ற விருதுகளில் ‘நுண்கதைகள்’ எனும் புதுவடிவமும் இடம்பெறும் எனவும் நான் கணிக்கிறேன். தமிழில் மட்டுமின்றிப் பல்வேறு மொழிகளில் வெளியான நுண்கதைகளுக்கு உலகெங்கும் கிடைத்திருக்கும் வரவேற்பும் இதற்கோர் உதாரணம்.
இந்நூலைப் புதிதாக வாசிக்கும் வாசகர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணி பொருத்த வேண்டியுள்ளது. எளிமையான எழுத்துகளை வாசிக்கும் வாசகராக நீங்கள் இருக்கும் பட்சத்தில் இப் புத்தகம் உங்களை நிறையவே சோதிக்கும். இதில் வரும் கதைகள் மீண்டும் மீண்டும் வாசிக்கையில் மட்டுமே ஓரளவுக்குப் பிடிபடுகிறது. கதைகளில் அத்தனை நுண்ணிய அடுக்குகள் உள்ளன. வெறும் ஏழு வார்த்தைகளில் ஒரு கதை இருக்கிறது. ஆனால், அது புரிவதற்குக் கூடுதலாகச் சிலமுறை படிக்க வேண்டியிருக்கிறது. படிப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பரிமாணம் கிடைப்பது ஒருபுறம் இருந்தபோதிலும், இதன் எதார்த்தமான வடிவம் என்ன என்பதை அறிய வாசகன் விரும்புகிறான்.
அரபி மொழியில் தன் நிலத்திற்கான கதைகளை வஃபா எழுதியிருந்தாலும், அதை அவரவர் பிராந்திய மொழிகளுக்கு நெருக்கமான படைப்பாக்க முயல்வது என்பது பெரும் சவால். ஆனாலும், அதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார் ஜாகிர் ஹூசைன்.
செவ்விலக்கியங்கள் உட்பட, தமிழில் கொண்டாடப்படும் பெரும்பாலான உலக இலக்கியங்களை நாம் ஆங்கில மூலத்தின் வழியேதான் மொழிபெயர்த்திருக்கிறோம். ஆனால், மூல மொழியில் அக்கதையை எப்படி அணுகியிருக்கிறார்கள், எத்தனை சதவிகிதம் மொழி மாற்றத்தில் தொலைந்து போயிருக்கிறது என்பதை நாம் அறிய வாய்ப்பில்லை. அதேசமயம், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பவர்கள் எல்லோராலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்க முடியாது. இரு மொழிகளிலும் புலமை வாய்ந்தவர்கள் என்பது அரிதிலும் அரிது.
அப்படிப் பார்க்கையில், தமிழ் – அரபி என இரு மொழிகளிலும் புலமை கொண்டிருக்கும் ஜாகிர் ஹுசைன், மொழிபெயர்ப்பாளராக வாய்த்தது தமிழ் இலக்கியச் சூழலுக்கு ஆரோக்கியமான ஒன்று.
பெரும்பாலும் வேறு மொழிகளிலிருந்து தமிழுக்கு இறக்குமதி மட்டும் செய்துகொண்டிருந்த காலகட்டத்தில், தமிழில் இருக்கும் ஆகச்சிறந்த படைப்புகளை அரபி மொழியில் மொழிபெயர்த்ததன் மூலம் தமிழ்மொழியின் பெருமையையும் சிறப்புகளையும் பெர்சிய தேசம் முழுதும் பரவச் செய்யும் அவரது முயற்சிகள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவை.
தமிழில் இதுவரை வெளியாகியிருக்கும் நுண்கதைகள் மிகக்குறைவு. இது அடுத்தடுத்த புத்தகக் கண்காட்சிகளில் அதிகரிக்கும் என நினைக்கிறேன். அதன் பொருட்டு மொழிபெயர்க்கப்படும் நுண்கதைகளின் வருகைக்கும் ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.
புயல் முட்டை (நுண்கதைகள் – மொழிபெயர்ப்பு)
வஃபா அப்துல் ரஸ்ஸாக்
தமிழில்: அ. ஜாகிர் ஹுசைன்
எதிர் வெளியீடு
விலை – ரூ. 150