உலக வரலாற்றை வர்க்கங்களின் போராட்டம் என்று பிரகடனப்படுத்திய காரல் மார்க்ஸைப் போல, அம்பேத்கர் இந்திய வரலாற்றைப் பௌத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் நடந்த போராட்டம் என்று வரையறுத்தார். இந்திய வரலாற்றில் தீண்டத்தகாதாரின் வரலாறு குறித்து ஆழமான ஆய்வுகளைச் செய்த அம்பேத்கர், இறுதியில் தீண்டத்தகாதார் சமூகத்தின் பூர்வீக அடிப்பரப்பில் பௌத்தப் பண்பாட்டுக் கூறுகள் தெளிவாகப் புலப்பட்டதைக் கண்டுகொண்டார். அவருக்கு முன்பும் கண்டுகொண்டவர்கள் சிலர் உண்டு. அதில் முதன்மையானவராக அயோத்திதாசர் இருந்தார். அம்பேத்கருடைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பண்பாட்டு நடவடிக்கையான பௌத்தம் தழுவலை ஆய்வு செய்யும் எவரும் கட்டாயமாக அயோத்திதாசரின் பங்களிப்புகளோடு பொருத்திப் பார்ப்பதைத் தவிர்க்க இயலாது.
தமிழ்ச் சூழலில் அம்பேத்கரின் நவயானா பௌத்தத்தின் இடத்தை ஆராயத் தொடங்கும் எவரும் அயோத்திதாசரிடமிருந்து ஆரம்பிப்பதே பொருத்தமாக இருக்கும்.
அம்பேத்கரின் பௌத்த மீட்டுருவாக்கப் பணியில் தமிழகத்தின் பங்களிப்பு
அம்பேத்கர் பௌத்தம் குறித்து நூலாராய்ச்சியில் மட்டுமே ஈடுபடாமல் ஆசியக்கண்டத்தின் சில பகுதிகளுக்கும் தென்னிந்தியாவின் சில பகுதிகளுக்கும் சென்று களஆய்வுகளை மேற்கொண்டார். தென்னிந்தியப் பௌத்த இயக்கம் குறித்தும் தகவல்களைச் சேகரித்தார். சென்னையிலுள்ள பெரம்பூர், காஞ்சிபுரம், வடஆற்காடு ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகொண்டா மற்றும் திரிபுரம், வேலூர் மாவட்டத்தில் வெள்ளத்தூர், ராணிப்பேட்டையில் வாணிவேதா, மைசூரில் கோலார் தங்க வயல், பெங்களூருவில் பிரேசர் டவுன் மற்றும் புது மத்தியச் சிறைச்சாலைப் பகுதிகளில் வாழ்ந்துவந்த பௌத்தச் சமூகத்தினரைச் சந்தித்ததையும் விகார்களைப் பார்த்ததையும் அம்பேத்கர் எழுதியிருக்கிறார்.
பௌத்த மறுமலர்ச்சியை உண்டாக்குவதற்காக அயோத்திதாசர், லட்சுமி நரசு இருவரும் பணிசெய்த களங்கள் இவை. அங்கெல்லாம் சென்று தீண்டத் தகாதாரின் பண்பாட்டுப் பூர்வீக மூலங்களைத் தேடி அலைந்திருக்கிறார் அம்பேத்கர். அந்தக் காலகட்டத்தில் பௌத்தம் குறித்துத் தனக்குக் கிடைத்த சிறு சிறு குறிப்புகளையும்கூட அம்பேத்கர் தேடித் தேடி வாசித்தார் என்பதைப் பௌத்தம் தொடர்பான அவரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் தொகுத்துப் பார்ப்பவர்களுக்குப் புரியும். ஆனால், அயோத்தி தாசரின் பௌத்தப் பணிகள் குறித்து அம்பேத்கர் பேசியதாகவோ, எழுதியதாகவோ குறிப்புகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. மிகச் சரியான தேர்வாக அமைந்த அம்பேத்கரின் நவயான பௌத்தத்திற்கு முன்னோடியாக அதே சிந்தனை முறையில் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கிடையில் ஏதேனும் இயக்கங்கள் அவருக்கு முன்பு இந்திய மண்ணில் இருந்ததா என்றால் அது அயோத்திதாசரின் தமிழ்ப் பௌத்த மீட்டுருவாக்க இயக்கம்தான். அயோத்திதாசரைத் தவிர இன்னொரு வழியில் பௌத்த மீட்டுருவாக்கத்தில் தமிழகம் முன்னோடி என்பதை அம்பேத்கரே எடுத்துக்காட்டுகிறார். அது பேராசிரியர் லட்சுமி நரசு வழியாக. அம்பேத்கர் பௌத்தம் குறித்த நீண்ட நெடிய ஆராய்ச்சித் தேடலில் ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் ‘The Essence of Buddhism’ என்னும் நூல் சென்னையைச் சேர்ந்த சீத்தாராமையா மூலமாக அம்பேத்கருக்குக் கிடைக்கிறது. சென்னைக் கிறித்தவக் கல்லூரிப் பேராசிரியராக இருந்து, பௌத்த மதப் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வந்த பேராசிரியர் லட்சுமி நரசு ஆங்கிலத்தில் எழுதிய நூல் அது. அதன் மூன்றாம் பதிப்பை அம்பேத்கர் தானே முன்னுரை எழுதிப் பதிப்பித்து வெளியிட்டார். பௌத்தம் குறித்துத் தான் வாசித்ததில் மிகச் சிறந்த நூல் இதுதான் என்றும் அதன் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார். லட்சுமி நரசுவின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தையும் அதில் எழுதியிருந்தார்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then