பௌத்தம் எந்தத் தனிப்பட்ட இனத்திற்கும் நாட்டிற்கும் மொழிக்கும் சொந்தமானது அல்ல. அது பிரபஞ்சத்திற்கானது. அது ஒரு புரட்சிகரமான வாழ்வு முறை. நடைமுறை வாழ்வின் எல்லாத் தேவைகளையும் பௌத்தம் மட்டுமே பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கிறது. எந்தவிதமான மாயாஜாலமுமின்றி அறிவியலின் பாற்பட்டே மனித வாழ்க்கையைப் பார்க்கிறது என்பதுதான் பௌத்தத்திற்கான அடிப்படைக் கூறாக இருக்கிறது.
புத்தரின் போதனைகள் தம்மம் என்றழைக்கப்படுகிறது. அது வாழ்வின் கட்டமைந்த ஒழுக்கம், சுயவாழ்வின் மீதான அக்கறை. துன்பத்தின் பெருங்கடலைத் தனிமனித வாழ்வு கடந்துவிடுமெனின் சமூகத் துயரம் என்ற ஒன்றிருக்க வாய்ப்பில்லை. சமூகத் துயரங்களைக் களைய தனிமனித வாழ்வின் மேம்பாட்டைப் பௌத்தம் விழைகிறது. தனிமனித மேம்பாடு என்பது செல்வத்தினால் அடைவதல்ல, மனத்தின் நிறைவால் அடைவது.
ஒருவர் தன்னைப் பௌத்தத்தில் இணைத்துக்கொள்ள திரிபிடகத்தை முழுதும் வாசித்திருக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை. அவர் தம்மத்தைப் பின்பற்றினால் போதும். பல பௌத்தப் பிரதிகளை வாசித்து முடித்து எல்லாவற்றையும் கற்றுத்தேர்ந்து அவற்றுக்கெதிராகவே ஒருவர் நடப்பாரென்றால் அவரால் எப்படி உயர்வடைய முடியும். எனவே, உயர்வடைதல் என்பது தம்மத்தைப் பின்பற்றுவதில் இருக்கிறது என்பதைப் புத்தர் தான் செல்லும் இடங்களில் எல்லாம் வலியுறுத்துகிறார்.
பௌத்தத்தின் முக்கியப் பங்களிப்பு என்பது புத்தர் நிகழ்த்திய பல உரையாடல்களில் பொதிந்து கிடக்கிறது. புத்தரைப் போன்ற ஜனநாயகவாதியை நீங்கள் காண்பது அரிது. தன்னை நிந்தித்தவர்களை முழுமையாக நிந்திக்கவிட்டு அதன்பிறகு தன் தரப்பு நியாயத்தை உணர்த்துவார். புத்தரின் பெரும்பான்மையான உரையாடல்கள் இப்படித்தான் இருக்கும். அம்பத்தன் என்னும் பார்ப்பன மாணவருடன் புத்தர் நிகழ்த்தும் உரையாடலை ஆகச்சிறந்த சான்றாகக் கொள்ளலாம்
திரிபிடகத்தின் மூன்று பகுதிகள் சுத்தபிடகம், விநயபிடகம், அபிதம்மபிடகம். இவை புத்தரின் உரையாடல்களால் அமைந்தவை. சுத்தபிடகத்தின் தீகநிகாயம் புத்தரின் பேருரைகள், மஜ்ஜிம நிகாயம் சிற்றுரைகள், சம்யுக்த நிகாயம் கருத்துரீதியான உரையாடல்கள் எனப் பகுக்கப்பட்டுள்ளன. புத்தர் தன்னை ஒரு பிரசித்திப் பெற்ற கடவுளின் அவதாரமாக மாற்றிக்கொள்ளாமல் தன்னைச் சுற்றி ஒளிவட்டம் கட்டிக்கொள்ளாமல் சாதாரண மனிதராக வாழ்ந்து, வாழ்வின் கோட்பாடுகளை உருவாக்கியவர். அதனால்தான் பல மன்னர்களும் செல்வந்தர்களும் தேடிவந்து சந்தித்தாலும், அவர் சாதாரண மனிதர்களைத் தேடிப்போய் தம்மத்தைப் போதித்தார். ஏழைகளையும் ஒடுக்கப்பட்டவர்களையும் சந்தித்து அவர்கள் வாழ்வில் உயர்வடைவதற்கான வழிகளைச் சொன்னார்.
புத்தர்தான் உலகில் அதிகமாக நடந்த மனிதர் என்றொரு செய்தி இருக்கிறது. அவர் நடந்து சென்று இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக வாழ்ந்த மக்களைச் சந்தித்திருக்கிறார். அவர் எப்போதும் பசித்தவர்களிடம் போதனை செய்ததில்லை. ஆனால், அவர்களின் பசியைப் போக்கியிருக்கிறார். தான் வாழ்ந்த காலத்தில் இருந்த நிலப்பரப்பின் அரசியலையும் சமூக அமைப்பினையும் பொருளாதார வேறுபாடுகளையும் முற்றிலும் அறிந்திருந்த காரணத்தால் தன்னுடைய போதனைகளை எப்போதும் மக்களின் விடுதலைக்காகவே செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் இயல்பான மனிதராகவே வாழ்ந்தார். தான்தான் ஆதாரம் என்னும் பீடமற்றவராக இருந்தார். தன்னை மீட்பர் என்று அறிவித்துக்கொள்ளாதவர். தம்மத்திற்கான வழியைக் காட்டுபவராகவே புத்தர் இருந்தார். ஒருபோதும் மோட்சத்தைத் தருபவர் என்று கூறிக்கொண்டவரல்லர். தனக்கோ தம்மத்திற்கோ எந்தவிதமான தெய்வீகத் தன்மையும் இல்லை என்று அறுதியிட்டுக் கூறியவர்.
உலக அறிஞர்கள் பலர் பௌத்தம் மானுடத்திற்குத் தந்த மீட்சியைக் குறித்துப் பேசியிருக்கிறார்கள். எச்.ஜி.வெல்ஸ் பௌத்தம் மானிடத்திற்கு உயர்ந்த நாகரிகத்தினைத் தந்திருக்கிறது என்கிறார். அவர் நாகரிகம் என்று பொதுவான வார்த்தையினைப் பயன்படுத்தியிருக்கிறார். அந்த நாகரிக வரிசையில் மிக முக்கியமானது ஜனநாயகம். இந்தச் சொல் உலக அளவில் ஓர் அரசியல் கோட்பாடாகப் பார்க்கப்படுகிறது. ஜனநாயகம் என்பது கிறிஸ்து பிறப்பதற்கு 450 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கத்தில் பேசப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், சங்கங்களின் மூலமாக 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஜனநாயகத்தை உருவாக்கியவர் புத்தர்.
அரசியலில் நீங்கள் ஜனநாயகத்தைப் பார்க்கலாம். ஆனால், மதங்களில் பார்க்க முடியாது. இந்து மதத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை நம்மால் மிக வெளிப்படையாகப் பார்க்க முடியும், அனுபவித்திருக்கவும் முடியும். ஆனால், பௌத்தம் ஜனநாயகத் தன்மை உடையது. பல ஜென் கதைகள் இதற்குச் சான்றுகளாக உள்ளன.
பௌத்தம் தன்னுடைய சமயத்தின் முதல் நோக்கமாக மனிதரைப் பகுத்தறிவுப் பாதைக்கு வழிநடத்துவது, உண்மையைத் தேடிச் செல்லும் சுதந்திரமுடையவர்களாக மாற்றுவது, மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவர்களாக, எதையும் ஆய்வுக்கு உட்படுத்துபவர்களாக மனிதர்களை மாற்றுவது என இயங்குகிறது.
புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய ‘புத்தமும் அவர் தம்மமும்’ நூலின் பல பகுதிகள் பௌத்தத்தை விளங்கிக்கொள்வதற்கான ஒளிவிளக்காக அமைகின்றன.
புரட்சியாளரின் நூலிலிருப்பதை அப்படியே தருகிறோம்:
- கடவுளை நம்புவதால் என்ன பயன், ஒரு பயனும் இல்லை (2000).
- கடவுளை அடிப்படையாகக் கொண்ட எந்த மதமும் யூகத்தை அடிப்படையாகக் கொண்டதே என்கிறார் புத்தர் (2001).
- எனவே, கடவுளை அடிப்படையாகக் கொண்ட எந்த மதமும் ஏற்பதற்கில்லை (2002).
- அது மூட நம்பிக்கையை உருவாக்குவதிலேயே முடிகிறது (2003).
கடவுளைக் குறித்த தீவிர விவாதங்களைப் பௌத்தம் முன்வைக்கிறது. அப்படியானால் பௌத்தத்தில் கடவுளின் இடத்தை எது வகிக்கிறது. தம்மத்தைத்தான் பௌத்தம் முன்வைக்கிறது. மதம் தம்மத்திலிருந்து வேறுபடுகிறது.
மதம் என்பது கொள்கையில் நிற்றல். அதனால்தான் மதவாதிகள் தங்கள் மதம் மட்டுமே உயர்ந்தது. தங்கள் மதம்தான் ஆள வேண்டும். தங்கள் கடவுளர்கள்தான் உயர்ந்தவர்கள் என்று எப்போதும் கூக்குரலிடுகின்றனர். எதுவுமே மாறாதது எனக் கத்துகிறார்கள், மாறாதவை என அவர்கள் சொன்ன எல்லாமே மாறியிருக்கிறது. வாழ்க்கை முறைகள், நில அமைப்புகள், காலநிலைகள், அண்டத்தில் இருக்கும் பொருட்கள் எல்லாமே மாறிக்கொண்டிருக்கின்றன என்று அறிவியல் நமக்கு உணர்த்துகிறது.
ஆனால், மாறுகின்ற இந்த உலகில் தம்மம் மனிதனுக்கும் மனிதனுக்குமான உறவை விளக்குகிறது என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறுகிறார். அதனால் மதத்தைத் தனிமனிதனின் தேவையாகவும் அது சமூகத்திற்குத் தேவையற்றதாகவும் அவர் வரையறுக்கிறார். அதனடிப்படையில் தம்மம் சமூகத்திற்கு இன்றியமையாததாகிறது. மதம் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியும். ஆனால், தம்மம் இல்லாமல் வாழ முடியாது.
பௌத்தம் கூறும் மற்றொரு மிக முக்கியமான கருத்து, நிலையாமை. இங்கே எதுவும் நிலையானது இல்லை. இன்றைக்கிருக்கும் இந்தத் துன்பம் அல்லது இன்பம் மாறும். இதைப் புரிந்துகொள்வது வாழ்வை மிக எளிமையாக்கிவிடும் செயல். இருப்பதால் மகிழ்வதோ இல்லாமையினால் வருந்துவதோ தேவையில்லை. அப்படியானால் மாறாதது எனச் சொல்லப்படும் சனாதனத்திற்கு நேரெதிரானது பௌத்தம் என்பதை மிக எளிமையாக நம்மால் விளங்கிக்கொள்ள முடியும்.
அதனால்தான் பிரதன்யம் என்று பௌத்தம் பேசுகிறது. எல்லாவற்றையும் மாற்றுவதற்குக் கல்வி தேவை. இன்று மாறியிருக்கும் எல்லாமே கல்வியால்தான். பிரதன்யம் என்றால் கற்றலைப் பொதுவாக்குவது. கற்றல் பொதுவாக்கப்படும் மரபு பௌத்தம். கற்றலைத் தனியுடைமையாக்கியது சனாதனம். பிரதன்யம் என்னும் கற்றல் சீலம் என்னும் ஒழுக்கத்தோடு இருக்கும்போது காருண்யமும் மைத்திரியும் உருவாகிறது. இவையெல்லாம் உள்ள ஒரு சமூக அமைப்பு சமத்துவம் உடையதாக மாறுகிறது. பௌத்தத்தின் உன்னத குறிக்கோளான உலகினை நீதியரசாக்குதல் என்னும் கோட்பாடு வலிமையடைகிறது. நீதியுள்ள சமூகம் சகோதரத்துவம் உடையதாக இருக்கும். பௌத்தத்தின் இந்த அடிப்படைக் கூறுகள்தாம் உலக சமயங்களில் பௌத்தம் மட்டுந்தான் மனித வாழ்விற்கான நாகரிகத்தையும் அறிவியலையும் கட்டமைக்கிறது என்னும் முடிவுக்கு வருவதற்குக் காரணமாக இருக்கின்றன.
நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை என்னுடைய ஆசான் புத்தரிடத்திலிருந்து பெற்றேன் என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறிய உண்மை நமக்கு எப்போதும் ஒளியாக இருக்கும்.