13
தாமரைச் சூத்திரம்
இந்துத்துவம் பௌத்தத்திலிருந்து அபகரித்துக்கொண்ட ஏராளமான அறிவின் மூலங்களில் தாமரை மலரும் ஒன்று. தாமரை மலரில் அமர்ந்திருக்கும் நிலையில் பல புத்தர் சிலைகளை நாம் பார்த்திருக்கலாம். பௌத்தக் கலை அம்சங்களில் தாமரைக்கு மிக முக்கியமான இடம் இருக்கிறது. புத்தரின் உவமைகள் மிகவும் புகழ்பெற்றவை. யானை, பாம்பு போன்றவற்றைக் கொண்டு புத்தர் ஏராளமான உரையாடல்களைக் குறியீடாகவே நடத்தியிருக்கிறார். தாமரையைக் கொண்டு புத்தர் கூறியவை எல்லாம் ‘தாமரைச் சூத்திரம்’ எனத் தொகுக்கப்பட்டுள்ளன.
ஒரு பழைமையான உவமை தமிழில் உண்டு. “சேற்றில் முளைத்த செந்தாமரை”. அதை முதன்முதலில் கூறியது புத்தராகவே இருக்க முடியும் என்பது என்னுடைய முடிவு. தாமரை சேற்றிலிருந்துதான் முளைக்கிறது. நீர்நிலையின் அடியிலிருக்கும் சேறு ஆயிரம் அழுக்குகளைக் கொண்டிருக்கலாம். ஆனால், அதிலிருந்து முளைத்திருக்கும் தாமரையில் அந்த அழுக்குகள் ஒட்டியிருக்காது. ஒளிபொருந்திய சூரியனுக்கும் வானுக்கும் தன் காட்சியைத் தரும் ஓர் அற்புத மலராக தாமரை இருக்கும். அதுபோல அழுக்குகளால் சூழப்பட்டிருக்கும் மனித வாழ்வை அவற்றிலிருந்து விலக்கி, தூய மகிழ்ச்சியுடைய வாழ்வை அடைய கூறப்பட்ட ஒன்றுதான் தாமரைச் சூத்திரம். இது மகாயான பௌத்தத்தின் முக்கியக் கூறாகப் பார்க்கப்படுகிறது.
தாமரைச் சூத்திரத்தில் கூறப்பட்டிருக்கும் உவமைகள் அழகானவை. கவித்துவம் மிக்கவை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கூறப்பட்டிருந்தாலும் இன்றும் மணம்வீசக் கூடியவையாக அவை அமைந்திருப்பதே அதன் முக்கியச் சிறப்பு.
தாமரைச் சூத்திரத்தில் உள்ள ஏழு உவமைகளும் மக்களுக்கான வாழ்வியலை மிக எளிமையாகச் சொல்வதற்காகக் கூறப்பட்டவை. ஒவ்வோர் உவமையும் மனித வாழ்வை மேம்படுத்தும் எண்ணங்களை வளர்ப்பவை. அவர்களை உயர்வடையச் செய்வதற்கான தத்துவங்களைக் கொண்டவை. சாதாரண மனிதர்களைப் புத்தர்களாக்குவது என்பதுதான் அதன் அடிப்படை. மற்ற மெய்யியல் தத்துவங்கள் எல்லாம் மனிதர்களை மனிதர்களாக மீட்பதற்காக மட்டுந்தான் கூறப்பட்டன, பின்பற்றப்படுகின்றன. உதாரணத்திற்கு, கிறித்தவத்தில் இயேசுவின் மூலம்தான் ஒருவர் பிதாவை அடைய முடியும். இஸ்லாத்தில் முகமது நபிதான் கடைசி தூதர். அவருக்குப் பின் யாரும் இல்லை. ஆனால், பௌத்தம் மட்டுந்தான் எல்லா மனிதர்களையும் புத்தர்களாக்க முயற்சி செய்கிறது. அதற்கான கோட்பாடாகத்தான் தாமரைச் சூத்திரம் கூறப்பட்டது.
மூன்று முக்கியமான உண்மைகளைக் கூறுவதற்காகவே தாமரைச் சூத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் ஏழு உவமைக் கதைகள் இருந்தாலும் அவை அனைத்தும் அடிப்படையான மூன்று கோட்பாடுகளை நிலைநிறுத்தும் நோக்கத்தில் கூறப்பட்டவையாகும். முதல் நோக்கம், உலகில் இருக்கும் எல்லோருக்குள்ளும் புத்தத் தன்மை இருக்கிறது. எல்லோராலும் புத்தரைப் போல் ஞானத்தை அடைய முடியும். புத்தராகும் திறன் நம்மிடமும் அமைந்திருக்கிறது. இரண்டாவது, புத்தர் என்பவர் எல்லாக் காலங்களுக்குமானவர். மூன்றாவது, புத்தரின் போதனைகளில் ஒரு தனிவழி மட்டுமல்ல, மனிதர்கள் உயர்வடைவதற்குப் பல வழிகள் கூறப்பட்டிருக்கின்றன. அவரவர் சூழலுக்கேற்ப அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மிக எளிமையாகச் சொன்னால், புத்தரின் போதனைகள் ஒரு தொடர் வண்டியைப் போல. அதில் பல பெட்டிகள் இருக்கின்றன. ஒவ்வொரு பெட்டிக்கும் நான்கு வாசல்கள் உள்ளன. எப்படி வாய்ப்பிருக்கிறதோ அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாம் ஏறிக்கொண்டால் சரியான இடத்திற்குப் போகலாம், அதாவது புத்தராகலாம். இவற்றை விளக்கத்தான் ஏழு உவமைகள் கூறப்பட்டிருக்கின்றன.
1
ஒரு பெரிய பணக்காரர் வெளியே சென்றுவிட்டுத் திரும்பும் போது தன் வீடு தீப்பற்றி எரிந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறார். அவருடைய குழந்தைகள் வீடு பற்றி எரிவதை அறியாமல் தங்களிடமிருக்கும் பொம்மைகளை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். இதை அவர் பார்க்கிறார். குழந்தைகளை எப்படியாவது வெளியே அழைத்துவர வேண்டும் என்று பரிதவிக்கிறார்.
குழந்தைகளை நோக்கி, வெளியே வந்துவிடுங்கள் என்று உரக்கக் கத்துகிறார். ஆனாலும், குழந்தைகளுக்கு அவரின் குரல் கேட்கவில்லை. சில கணங்களுக்குப் பிறகு கேட்டாலும் விளையாடும் மயக்கத்தில் வெளியே வர மறுக்கிறார்கள்.
அந்தத் தந்தை வேறு ஒரு வழியை யோசிக்கிறார். குழந்தைகளுக்குக் கேட்கும் வகையில் சத்தமாக, “நீங்கள் உள்ளே விளையாடிக்கொண்டிருக்கும் பொம்மைகளை விட அழகான பொம்மைகள் என்னிடத்தில் இருக்கின்றன. நீங்கள் வெளியே வந்தால் அவற்றை உங்களுக்குத் தருகிறேன்” என்று சொல்ல, அதைக் கேட்ட குழந்தைகள் புதிய பொம்மைகளுக்காக எரிகிற வீட்டிற்குளிருந்து மிகப் பாதுகாப்பாக வெளியே வருகின்றனர். தந்தை அவர்கள் இதுவரைப் பயன்படுத்தாத அழகிய புதிய பொம்மையைத் தந்தார்.
அந்தப் பணக்காரத் தந்தை புத்தர். உள்ளே விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் நாம். தீப்பற்றி எரியும் வீடும் துன்பங்கள் நிறைந்த நம் வாழ்க்கை. தந்தையின் கையிலிருக்கும் புதிய பொம்மை தம்மம். பழைய பொம்மைகள் நம்மைத் தீப்பற்றிய துன்பத்திற்குள்ளேயே வைத்திருக்கின்றன. ஆனால், தம்மம் என்னும் புதிய அழகிய பொம்மை நம்மைத் துன்பத்திலிருந்து வெளியேற்றும்.
2
பணக்காரத் தந்தையும் ஒரு மகனும் இருந்தார்கள். மகன் தந்தையைவிட்டுப் பிரிந்து சென்றான். தன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் செலவிட்டுப் பல இடங்களுக்குச் சென்று, எல்லாவற்றையும் இழந்து, தான் ஒன்றுமில்லை என்று உணர்ந்தவனாகத் துன்பத்தில் வாழ்ந்துவந்தான். அவன் தந்தையோ தன் மகன் எப்படியிருக்கிறானோ என வருந்திக்கொண்டே இருந்தார். தன்னுடைய பணியாளர்களை எல்லாம் அனுப்பி அவனைத் தேடிக்கொண்டே இருந்தார். ஆனாலும் அவன் கிடைக்கவில்லை.
பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்து தன் தந்தை இருக்கும் ஊருக்கே வந்தான். அந்த ஊரில்தான் அவனுடைய பணக்காரத் தந்தை இருக்கிறார் என்று அவனுக்குத் தெரியாது. மேலும், அவன் தந்தையின் அடையாளத்தைக்கூட மறந்தவனாக இருந்தான். அவ்வளவு துன்பம் அவனுக்கு. தந்தையின் பணியாளர்கள் அவனைக் கண்ட பின்பு வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
தந்தை தன் மகனைக் கண்டுகொண்டார். ஆனால், வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. மகனுக்குத் தன் வீட்டில் ஒரு வேலையைப் போட்டுக்கொடுத்தார். தூய்மைப் பணியாளனாக அவன் வேலை செய்தான். அவ்வப்போது தந்தை தன் மகனை வந்து பார்ப்பார். அவன் கடினமாக உழைத்துக்கொண்டிருப்பான். அவன் உழைப்பைப் பார்த்த தந்தை அவனுக்கு வேறோர் உயர்ந்த வேலையைக் கொடுத்தார். இறுதியில் மரணப்படுக்கையில் அந்தப் பணக்காரத் தந்தை, தன் மகனை அழைத்து அவனிடத்தில் உண்மையைக் கூறி தன் சொத்துகளை ஒப்படைத்தார்.
இதில் பணக்காரத் தந்தை புத்தர். தவறி துன்பத்தில் உழலும் மகன் நாம். பணியாளர்கள் புத்தரின் சீடர்கள். அவர் முதலில் கொடுத்த வேலை தம்மத்தில் நம்மால் பின்பற்றக்கூடிய எளிய ஒழுக்கங்கள். அவற்றை மிகச்சரியாக நாம் செய்தால் அவர் நமக்குத் தரும் சொத்து ஞானமடைதல் அதாவது, அவரைப் போலவே புத்தராதல்.
3
மழையில்லாமல் பூமி காய்ந்திருக்கிறது. பூமியின் மேலுள்ள எல்லாத் தாவரங்களும் நீரின்றி வறண்டிருக்கின்றன. தன் இலைகளை எல்லாம் உதிர்த்துவிட்டு வெறும் தண்டுகளாகக் காட்சி அளிக்கின்றன. வானம் மழையைத் தந்தது. எல்லாத் தாவரங்களும் மழை நீரைப் பெற்று மீண்டும் தளிர்க்க ஆரம்பித்தன. ஆழமான வேர்களைக் கொண்டிருக்கும் மரங்கள் நிலத்தடியில் சேர்ந்த நீரை உறிஞ்சி மகிழ்ந்தன. மேற்பரப்பு நீரைப் பற்றி அவை கவலைப்படவில்லை. வேர்கள் சிறிதாக உள்ள தாவரங்கள் மேற்பரப்பு நீரை மட்டுமே நம்பியிருப்பதால், அந்த நீர் இருக்கும் வரை அதை உறிஞ்சித் துளிர்த்தன. மேற்பரப்பு நீர் ஆவியாகிப் போனவுடன் அந்தத் தாவரங்கள் நீரில்லாமல் தவித்தன.
இங்கே மழை புத்தரின் போதனைகள். எல்லோருக்கும் பொதுவாகப் பொழிகின்றன. அவற்றை அவரவர் வேர்களுக்குத் தக்கவாறு உறிஞ்சிக்கொள்கிறோம், அதன்படி வாழ்கிறோம். ஆழமான வேர்கள் நிலத்தடியில் குளிர்ந்திருக்கும் நீரை உறிஞ்சிக்கொள்கின்றன. நீளமற்ற வேர்கள் மேற்பரப்பில் இருப்பதை உறிஞ்சிக்கொண்டு நீரில்லாமல் போனதும் மீண்டும் துன்பத்தில் ஆழ்கின்றன.
4
ஒரு வண்டியில் சிலர் பயணிக்கிறார்கள். அவர்கள் பயணம் செய்வது ஒரு பாலைவனம். ஒரு புதையலைத் தேடி அவர்கள் போகிறார்கள். அவர்களோடு ஒரு ஞானியும் இருக்கிறார். அவர்களின் பயணம் கடுமையானதாக மாறிவிடுகிறது. குடிப்பதற்கு நீரும் இல்லை. ஓய்வெடுக்க நிழலும் இல்லை. எல்லோரும் மிகவும் சோர்வடைந்துவிட்டார்கள். அவர்களால் தொடர்ந்து பயணிக்கும் எண்ணத்தைத் தக்கவைக்க முடியவில்லை. இனி என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் வீட்டிற்குத் திரும்ப முடிவு செய்கிறார்கள். அவர்களிடத்திலிருந்த ஞானி அவர்களுக்கு உற்சாகம் ஊட்டுகிறார். உங்கள் எண்ணத்தைக் கைவிடாதீர்கள். புதையல் கண்டிப்பாகக் கிடைக்கும், வேண்டுமானால் ஒன்று செய்யலாம். இன்னும் கொஞ்சம் பயணம் செய்தால் ஒரு நகரம் வரும். அங்குத் தங்கி நாம் ஓய்வெடுத்துச் செல்லலாம் எனக் கூற, எல்லோரும் இன்னும் கடுமையாக உழைத்துப் பயணித்து அந்த நகரத்தை அடைகிறார்கள். எல்லோரும் மகிழ்ச்சியாக ஓய்வெடுத்து மீண்டும் பயணத்தைத் தொடங்கும்போது அந்த நகரம் காணாமல் போய்விடுகிறது. எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம். என்ன என்று கேட்க ஞானி சொன்னார், “இது ஒரு கற்பனையான மாயையான நகரம். நீங்கள் மிகவும் சோர்வுற்றதனால் நான் அப்படிச் சொன்னேன். நீங்களும் இளைப்பாறினீர்கள். இப்போது நாம் புதையலை நோக்கி நகரலாம்” என்றார்.
அந்த ஞானிதான் புத்தர். பயணிகள் சீடர்கள். அவர்கள் அடைந்த மாய நகரம் நிப்பாணம். இன்னும் செல்ல வேண்டிய இடம் புத்தத் தன்மை. ஒருவர் தனக்குள் இருக்கும் புத்தனை உயிர்ப்பிக்க முடியும் என இந்த உவமை பேசுகிறது. புத்தர், தன் சீடர்களைத் தன்னைப் போலவே புத்தராக மாற்றும் தன்மைக் கொண்டவர்.
5
பணக்கார நண்பனைப் பார்க்க வருகிறார் ஏழை நண்பன். இருவரும் சந்தித்து மகிழ்கிறார்கள். மகிழ்ச்சியை வெளிப்படுத்தக் குடிக்கிறார்கள். ஏழை நண்பன் அதிகமாகக் குடித்ததால் மயங்கித் தூங்கிவிடுகிறான். பணக்காரன் தன் பயணத்தைத் தொடர்கிறான். தூங்கிக்கொண்டிருக்கும் நண்பனுக்குத் தெரியாமல் அவனுடைய மேலங்கியில் வைரம் போன்ற விலையுயர்ந்த கல்லை வைக்கிறான். நண்பன் வருங்காலத்தில் அந்தக் கல்லை விற்று வாழ்க்கையில் உயர்வான் என்னும் நம்பிக்கையுடன் அவன் செல்கிறான். ஏழை நண்பன் சிறிது நேரம் கழித்து எழுந்து, தன் வழக்கமான வேலைக்குச் செல்கிறான். அதே துயரில் உழல்கிறான். சில வருடங்கள் கழித்து இவனைப் பார்க்க பணக்கார நண்பன் வருகிறான். தன் நண்பன் தான் வைத்த விலையுயர்ந்த கல்லை விற்றுப் பெரும்பணக்காரனாகி இருப்பான் என்னும் ஆர்வத்தோடு அவனைக் காண வந்தால், முன்பு இருந்ததைவிட மோசமான வறுமையில் இருக்கிறான். பணக்கார நண்பன் அவன் அங்கியிலிருந்து விலையுயர்ந்த கல்லை எடுத்துக் காட்டுகிறான். “உனக்காக நான் வைத்துப் போனேன். இந்தக் கல் உன்னிடமே இருக்கிறது. நீ அப்படியே ஏழையாக இருக்கிறாய்.” “நான் அந்தக் கல்லைப் பார்க்கவில்லை” என ஏழை பதிலளிக்கிறான்.
புத்தர்தான் அந்தப் பணக்காரர். நாமெல்லாம் ஏழை. நம்மிடத்தில் புத்தத் தன்மை இருக்கிறது, அதை நாம் பார்க்காமல் இருக்கிறோம். புத்தரின் போதனைகள் மூலம் நாம் அதை அடைந்துவிடலாம்.
6
போருக்குச் சென்று வென்றுவரும் வீரர்களுக்கு மன்னர் பரிசுகளை அளிப்பார். தங்கம், வெள்ளி, வீடுகள் என அவர்களுக்கு அவர்களின் வீரத்தைப் பாராட்டிப் பரிசளிப்பார். ஆனால், ஒரு சிறந்த பரிசை அவர் எப்போதும் அவரின் தலைப்பாகையில் வைத்திருப்பார். அது விலையுயர்ந்த முத்து. அதை அவர் அவ்வளவு எளிதில் யாருக்கும் தரமாட்டார். செயற்கரியச் செய்யும் வீரருக்குத்தான் அதைத் தர வேண்டும் என்று இருக்கிறார். ஒருநாள் அத்தகைய வீரரைக் கண்டுபிடித்து அதனை அவருக்குப் பரிசளித்தார்.
இதில் மன்னர் புத்தர். அவரின் பரிசுகள் போதனைகள். நாம் அன்றாடம் அவர் கூறும் போதனைகளைப் பின்பற்றப் பின்பற்ற ஒருநாள் ஞானம் என்னும் முத்தை நமக்களிப்பார்.
7
திறமையான மருத்துவர் அவர். மக்களின் எல்லா நோய்களையும் நீக்க வல்லவர். புதிய நோய்கள் வந்தாலும் அவரால் அவற்றுக்கு மருந்துகளைக் கண்டுபிடிக்க முடியும். ஒருநாள் அவர் வெளியூர் சென்றிருக்க அவரது குழந்தைகள் அவரின் மருந்துகளில் இருக்கும் விஷமருந்துகளை எடுத்துச் சாப்பிட்டுவிடுகின்றனர். இதனால் குழந்தைகள் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுவிடுகின்றனர். அவர் உடனடியாக வீடு திரும்பி விஷ முறிவு மருந்துகளைத் தருகிறார். அதைச் சாப்பிட்டவுடன் குழந்தைகள் குணமடைந்தனர். சில குழந்தைகள் அதைச் சாப்பிட மறுத்துவிட்டனர். அவர்கள் நிலை மோசமானது. அந்த மருத்துவர் என்ன சொல்லியும் அவர்கள் சாப்பிடவில்லை. இதனால் அந்த மருத்துவர் வேறொரு முயற்சியைச் செய்தார். விஷமுறிவு மருந்துகளை அவர்களிடம் தந்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். வேறு ஊருக்குச் சென்று, தான் இறந்துவிட்டதாகச் செய்தி அறிவித்தார். இதனால் துன்பம் அடைந்த அந்தக் குழந்தைகள் தன் தந்தை வைத்திருந்த விஷ முறிவு மருந்துகளைச் சாப்பிட்டனர். நலமானார்கள். தந்தை மீண்டும் வீடு திரும்பினார். குழந்தைகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதில் நோய்த் தீர்க்கும் மருத்துவர் புத்தர். மருந்துகள் அவரின் போதனைகள். அவருடைய போதனைகளைப் பின்பற்றுவதால் துன்பங்களிலிருந்து விடுபடலாம். சிலர் அவர் போதனைகளைப் பின்பற்றுவதில்லை. அவர்களுக்குத் தன் மரணத்தைக் காட்டுகிறார். அதன்மூலம் அவர்கள் தங்களுக்கும் அத்தகைய மரணம் உண்டு என்றெண்ணி தம்மத்தைப் பின்பற்றுவார்கள். புத்தரின் போதனைகள் நம்மை அறியாமையிலிருந்து வெளியேற்றும்.
இவை தாமரைச் சூத்திரத்திலிருக்கும் அடிப்படைக் கதைகள். யார் நினைத்தாலும் அவர்களால் புத்தர்களாக மாறமுடியும் என்னும் நம்பிக்கையைத் தரும் புத்தரின் போதனைகள்.