16
விழிப்புணர்வு
பறவைகள் வானில் கரைந்தன
கடைசி மேகமும் வடிந்து இல்லாமலாயிற்று
நானும் மலையும் உட்கார்ந்திருந்தோம்
இப்போது மலை மட்டும் இருக்கிறது.
– லி.போ
பௌத்தம் மானிடர்க்கு அளித்த மிக முக்கியமான கொடை விழிப்புணர்வு. விழிப்புணர்வு என்னும் சொல்லுக்கு விழித்திருத்தல் என்ற நேரிடையான பொருள் இங்கு இல்லை. ஆனால், சகலத்தையும் நோக்குதல் என்னும் பொருளில் இங்கு இயங்குகிறது.
நாம் சாலையில் பயணிக்கிறோம். நமக்குப் பின்னால் என்ன வாகனம் அல்லது யார் வருகிறார்கள், பக்கங்களில் என்ன வாகனம் இருக்கிறது என்று மிகச்சரியாக உற்றுணர்ந்தால்தான் அந்தப் பயணம் பாதுகாப்பாக இருக்கும். எவ்வளவு வேகத்தில் வாகனத்தைச் செலுத்த வேண்டும், எவ்வளவு வேகமாகப் போனால் முன்னால் செல்லும் வாகனத்தை முந்த முடியும் என்பதெல்லாம் நம் கவனத்தோடு தொடர்புடையது. பௌத்தம் சொல்லக் கூடியது அதுவல்ல, அதற்கும் மேற்பட்ட ஒன்று.
பிக்குகளிடம் புத்தர் ஆற்றிய உரையிலிருந்து விழிப்புணர்வு பற்றி நாம் அறிகிறோம்.
மக்களின் துயரத்தை அழிப்பதற்கும், அவர்களைத் துன்பங்களிலிருந்து விடுவிக்கவும், நிப்பாணத்தை அடையும் வழியை அவர்களுக்கு உணர்த்தவும் ஒரே வழி விழிப்புணர்வு மட்டுமே. விழிப்புணர்வு நான்கு நிலைகளில் நிகழ்த்தப்படுவதாக புத்தர் வலியுறுத்துகிறார்.
நம் உடலில் நிகழும் மாற்றங்களை, நிகழ்வுகளை உற்று நோக்கி மனத்தில் நிறுத்தல். இதை பாலி மொழியில் காயானு பஸ்ஸனா என்கிறோம். காயம் என்றால் உடல். உடல்மீதான விழிப்புணர்வு. புலன்களின் வழியாகப் பெறும் உணர்வுகள் மீதான விழிப்புணர்வானது, வேதனானு பஸ்ஸனா என்று பாலியில் சுட்டப்படுகிறது. தமிழில் புலன் விழிப்புணர்வு என்று நாம் மொழியலாம். மனதில் தோன்றும் எண்ணங்கள், அவற்றைக் குறித்த விழிப்புணர்வு சித்தானு பஸ்ஸனா எனப்படுகிறது. மன விழிப்புணர்வு என நாம் விளிக்கலாம். தம்மத்தின் மீதான அல்லது தம்மத்தின் மூலமாகக் கிடைக்கும் அனுபவங்கள் பற்றிய விழிப்புணர்வு தம்மானு பஸ்ஸனா என்றழைக்கப்படுகிறது. இதை நாம் தம்ம விழிப்புணர்வு என்று கூறலாம்.
இந்த நான்கில் நாம் கொள்ளும் விழிப்புணர்வுதான் உண்மையான விழிப்புணர்வு என்று புத்தர் கூறுகிறார். இது ஒருவேளை துறவிகளுக்குச் சொல்லப்பட்டாலும் இல்லறத்தாருக்கும் இது பொருந்தும்.
உடல் விழிப்புணர்வு
மூச்சைக் கவனித்தல். இதை இப்போது பல கார்ப்பரேட் துறவிகள் பெரும் வணிகமாக மாற்றியிருக்கிறார்கள். ஆனால், புத்தர் அவர் வாழ்ந்த காலத்தில் இந்த விழிப்புணர்வை ஊட்டி மக்களை நல்வழிப்படுத்தியிருக்கிறார். தனியாக ஓரிடத்தில் அமர்ந்து உடலை நேராய் நிமிர்த்தி தன்னுடைய மூச்சுக்காற்றின் போக்குவரத்தை ஒருவர் கவனித்தல் என்பது ஆனாபானாசதி என்னும் தியான வகைமை. அப்போது அவர் தன் உடலில், எண்ணத்தில் ஏற்படும் எல்லாவற்றையும் கவனிக்க ஆரம்பிக்கிறார். ஆழ்ந்து மூச்சை இழுத்து வெளியேற்றி நீளமான மூச்சை வெளிவிடும்போது நீளமான மூச்சு வெளிவிடுகிறேன் என உணர்தல், குறுகிய மூச்சை வெளிவிடும்போது குறுகிய மூச்சை வெளிவிடுகிறேன் என உணர்தல் ஆகியவை நிகழ, உடல் முழுவதையும் உணர்ந்து உள் மூச்சையும் வெளி மூச்சையும் கவனித்தல் உடலின் உள்ளை உணர்ந்தவராகிறார்.
உடல்நிலைகளை ஆழமாகக் கவனித்தல், உட்கார்ந்திருத்தல், நடத்தல், ஆகிய நிலைகளில் தன்னுடலை உணர்தல் விழிப்புணர்வின் ஒரு பகுதியாகிறது. அதேபோல் உடலின் ஒவ்வோர் அசைவையும் ஆராய்ந்து, அவற்றை உணர்ந்து, அதை அனுபவித்தல். தண்ணீர் குடிக்கும்போது, உணவு உண்ணும்போது, ஆடை அணியும்போது, கழிவுநீக்கம் செய்யும்போது என உடலின் ஒவ்வொரு செயலையும் உணர்ந்து, அதை அனுபவித்தல் விழிப்பாய் இருத்தல் ஆகும். அதேபோல் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக அறிந்து, அவற்றை உணர்ந்து, ஒட்டுமொத்த உடலையும் உணர்ந்து இப்படி ஓர் உடல் இருக்கிறது என்ற விழிப்புணர்வோடு இருப்பது முழுமையான அறிவைத் தரும் செயலாகும். உடலின் மூலப்பொருட்கள் மண், நீர், நெருப்பு, காற்று ஆகியவற்றாலானது என உணர்ந்து உடலிலிருந்து வெளியேறி நம் உடல் உறுப்புகளைக் கவனித்தல் விழிப்புணர்வின் இன்னோர் அம்சம். இறந்துபோன உடல்களோடு நம் உடலை ஒப்புநோக்கி நாமும் இப்படித்தான் என்பதை உணர்தலும் விழிப்புதான்.
உணர்வுகளின்மீதான விழிப்புணர்வு
ஒருவர் தன்னில் ஏற்படும் உணர்வுகளை உணர்தல். இன்பமாய் இருந்தால் நாம் இன்பமாய் இருக்கிறோம் என உணர்தல். துன்பத்தில் இருந்தால் நாம் துன்பமாய் இருக்கிறோம் என உணர்தல். ஓர் உருவப்பொருளை வைத்துக்கொண்டு இன்பம் அனுபவித்தால் இது உருவத்தால் வந்தது என்றும், அருவத்தால் வந்தால் அருவத்தால் வந்தது எனவும் அறிதல். புலன்களின் வழியாக வரும் உணர்வுகளாகிய சுவை, மணம், தொடுதல் ஆகியவை உணர்வுகளை வெளிப்படுத்தும். இதன்மூலம் கோபம், மகிழ்ச்சி, வெறுப்பு போன்ற உணர்வுகளைப் புலன்வழி வரும் உணர்வுகளை உணர்ந்து விழிப்பாய் இருத்தல்.
மனம் சார்ந்த விழிப்புணர்வு
மனதின் எண்ணங்கள் சார்ந்த விழிப்புணர்வு. மனம் பேராசைக் கொண்டதாக இருந்தால் இது பேராசை மனம் என அறிதல், பேராசை அற்றதாக இருந்தால் பேராசை அற்ற மனம் என அறிதல். கோபம், அலைபாய்தல், மோகம் ஆகிய மனம் சார்ந்த உணர்வுகளோடு இருந்தால் அப்படியே தாம் இருப்பதை உணர்தல் வேண்டும். அப்படியாயின் துக்கத்தில் இருக்கும் மனதையும், துக்கத்தை விட்டகன்ற மனதையும் நம்மால் உணர முடியும். மனதில் தோன்றும் எல்லா மனநிலைகளையும் அறிந்து உற்று நோக்குதல் விழிப்புணர்வு.
தம்ம விழிப்புணர்வு
மனத்தில் ஏற்படும் புலனின்ப நாட்டம், கோபம், சோம்பல், பதற்றம், குழப்பம் ஆகிய ஐந்தினையும் உணர்தல் தம்ம விழிப்புணர்வு அல்லது எண்ணம் சார்ந்த விழிப்புணர்வு. இந்த ஐந்தும் இருந்தால் அவை இருக்கிறது என்று உணர்வதும், அவை நம்மைவிட்டு அகன்றால் அவை இல்லை என்று உணவர்தும் தம்ம விழிப்புணர்வு ஆகும்.
தான் என்னும் எண்ணத்தை உருவாக்குபவை ஐந்து கூட்டுப் பொருட்கள். அவை ‘கந்தங்கள்’ எனப்படுகின்றன. உருவம், புலனுணர்வு, முதல்நிலை அறிவு, மன எழுச்சி, தன்னுணர்வு என இவற்றை உள்ளுணர்ந்து அவை ஏற்படுத்தும் எண்ணங்களை உணர்ந்து செயல்படுவது விழிப்புணர்வு. அதே போல் மனம் உள்ளிட்ட ஆறு புலன்களையும் அவை உணர்த்தும் கட்டுகளையும் அறிந்து அவற்றை நீக்கி, நீக்கப்பட்டவை மீண்டும் உருவாகாமல் பார்த்துக்கொள்வது, கண்ணுக்கு ஒளி, காதுக்கு ஒலி, மூக்குக்கு வாசனை, வாய்க்குச் சுவை, உடலுக்குத் தொடுதல், மனத்திற்கு எண்ணங்கள் இவற்றினால் ஏற்படும் நன்மை, தீமைகளை உணர்தல்; அவற்றினால் ஏற்படும் தடைகளையும் அவற்றை நீக்குவதையும் உணர்தல்; ஆறு புலன்களையும் அவற்றைத் தொடரும் புற ஆற்றல்களையும் உணர்ந்து அதிலிருந்து வெளியேறி விழிப்பாய் இருத்தல்.
மெய்ஞானத்தின் ஏழு அங்கங்கள் எனப்படும் விழிப்புணர்வு, தம்ம விசாரம், ஊக்கம், உடல் மகிழ்ச்சி, மன மகிழ்ச்சி, மன ஓர்மை, சமநிலை ஆகியனவற்றை அறிதல். விழிப்புணர்வு இருக்கும்போது விழிப்புணர்வு என்னிடம் இருக்கிறது. அது இல்லாதபோது விழிப்புணர்வு என்னிடம் இல்லை என்றுணர்ந்து அதற்கான தெளிவை அடையும் விழிப்புணர்வோடு இயங்குதல், தம்ம விசாரம் எனப்படும் தம்மத்தின் கோட்பாட்டை ஐயமற கற்றுத்தேர்ந்து, நன்மை தீமைகளை அறிதல்; அந்தத் தம்ம விசாரம் தன்னுள் இருப்பதை உணர்தல்; உடல் மகிழ்ச்சி எனப்படும் உடலினால் உண்டாகும் நன்மைகளால் உருவாகும் மகிழ்ச்சி தன்னுள் இருப்பதை உணர்தல்; நல்லெண்ணங்களால் உருவாகும் உள்ளத்து மகிழ்ச்சியை உணர்தல்; மன ஓர்மையைத் தெளிவாக உணர்ந்து அதன் இருத்தலை அறிதல்; சமநிலை என்னும் எதையும் சமமாகப் பாவிக்கும் தன்மையினால் இன்பம் துன்பம், வலி மகிழ்ச்சி, வரவு செலவு, புகழ்ச்சி இகழ்ச்சி எல்லாவற்றையும் சமமாக உணர்ந்து அதன்மூலம் விழிப்புணர்வோடு இருத்தல் என விழிப்புணர்வு குறித்து புத்தர் மிகத் தெளிவாகவும் விரிவாகவும் கூறியுள்ளார்.
இத்தகைய விழிப்பிணர்வு ஒருவரிடத்தில் இருக்கும்பட்சத்தில் அவருக்குத் துன்பம் ஏது? இது நாடு, இனம், மதம், மொழி, எல்லை என எல்லா வரையறைகளையும் தாண்டி அனைத்து மக்களுக்கானதாக இருக்கிறது. மனிதர்களை அவர்களின் துன்பங்களிலிருந்து விடுவிக்கும் விழிப்புணர்வு என்னும் தத்துவம் அந்த நொடியில் வாழும் வாழ்வைப் பற்றிப் பேசுகிறது.
தான் என்னும் நிலையிலிருந்து இறங்கி, தன்னிடம் இருக்கும் அல்லது தன்னைச் சூழ்ந்திருக்கும் எல்லாவற்றிலிருந்தும் கரைந்துவிடும் தன்மை விழிப்புணர்வால்தான் வாய்க்கும். இப்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சீனமொழியில் எழுதப்பட்ட மேற்குறிப்பிட்ட லி போ எழுதிய கவிதையை மீண்டும் படித்துப் பாருங்கள். தன்னை உணரும் உணர்வில் பறவைகள் வானில் கரைந்து மறைகின்றன. இறுதியில் தன்னை உணர்ந்த உணர்வில் இயற்கையோடு இயைந்து மலை மட்டும் இருக்கத் தன்னை இழத்தல் நிகழ்கிறது.
இப்படி விழிப்புணர்வோடு ஏழாண்டுகள் இருப்பின் அவர் துன்பமற்று இருப்பார். ஓராண்டு இருந்தாலும், ஏன் ஒருநாள் இருந்தாலும் அவர் இந்தப் பேற்றை அடையமுடியும்.
இந்த நான்கு விழிப்புநிலைகள்தான் மக்களைத் துன்பங்களிலிருந்தும் புலம்பல்களிலிருந்தும் வருத்தங்களிலிருந்தும் விடுதலைப் பெற வைத்து நிலையான இன்பத்தை அளிக்கவல்லன என்பது புத்தரின் போதனை.
] yazhanaathi@gmail.com




