பேரொளிப் பயணம்

யாழன் ஆதி

17

பிக்கு

பௌத்தத்தின் பெரும்பரவல் உலகமெங்கும் நிகழ்வதற்கு பிக்குகள் மிக முக்கியக் காரணம் என்பதை மறுக்கலாகாது. ஏனென்றால் புத்தருக்குப் பிறகு பௌத்தம் உலகத்தின் பல்வேறு நாடுகளில் பரவி செழித்திருந்தது. இன்றைக்கும் சீனா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் பௌத்தம் தன் பங்கை ஆற்றிக்கொண்டிருக்கிறது. அதற்கு அடிப்படைக் காரணம் பிக்குகள்தாம். கடந்த மாதம் சென்னையில் உள்ள புத்த விகாரில் வெளிநாட்டைச் சேர்ந்த பிக்கு ஒருவரின் பிக்குவான 50 ஆம் ஆண்டினைக் கொண்டாடினோம். அவரின்  தோற்றம், அமைதி, அறிவின் ஒளிவீசும் கண்கள் யாவும் ஆளுமையை வெளிப்படுத்தின. இத்தகைய பிக்குகள்தான் பௌத்தத்தின் வேர்களாக இந்தப் பூமி முழுதும் சென்று தம்மத்தைப் பரப்புகிறார்கள்.

இந்தக் காலம் ஆன்மீகத்திலும் கார்ப்பரேட் தன்மை  கலந்துவிட்ட காலம். எத்தனை சாமியார்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், வசதியாகவும், ‘சகல சம்பத்து’களுடனும் இருக்கிறார்கள். ஆனால் பௌத்தத் துறவிகள் அப்படி அல்லர். ஒருவேளை அவர்கள் புத்தம் சொல்வதுபோல் இல்லை என்றால் அவர்கள் பௌத்தத் துறவிகள் அல்லர்.

ஓ… பிக்குகளே
இந்தப் படகினைக் காலி செய்யுங்கள்
காலியானால் படகு வேகமாய்ச் செல்லும்
இச்சையையும் வெறுப்பையும் அழித்து
நிப்பாணத்திற்குச் செல்லலாம்.

என்று தம்மபதம் (369) காட்டுகிறது. போதிசத்துவர் அம்பேத்கர் அவருடைய ‘புத்தரும் அவர் தம்மமும்’ நூலில் ஒரு பிக்கு கிராமத்தில் தேனீயைப் போல் சுற்றி மக்கள் பணியாற்றிட வேண்டும் என்று கூறுகிறார். தம்மபதம் பிக்குவின் தொடக்கம் எப்படி இருக்க வேண்டும் எனக் கூறுகிறது.

புலனடக்கம்
அமைதி
ஒழுக்கம் மாறாமை
ஆற்றலும் தூய்மையும் உடையோரிடம் நட்பு
தூய வாழ்க்கை
இதுவே மேனறிவுடைய
பிக்குவின் தொடக்கம் (தம்மபதம் 376)

ஒருமுறை புத்தர் சாவத்தியில் உள்ள தேஜவனத்தில் அநாதபிண்டிகரின் துறவிகள் மடத்தில் தங்கியிருந்தார். அங்கு குழுமியிருந்த பிக்குகளிடம் உரையாற்றினார்.

தன் மந்தையை மிகவும் பாதுகாப்போடும் சிரத்தையோடும் மேய்க்கும் பொறுப்பான மாடு மேய்ப்பவருடன் பிக்குவை ஒப்புமைப்படுத்தி புத்தர் கூறியவற்றைப் பார்க்கலாம். மாடு மேய்க்கும் மேய்ப்பன் ஒருவன் கொண்டிருக்க வேண்டிய தகுதிகள் திறன்கள் பதினொன்று,

  1. உருவம் பற்றிய அறிவு: எத்தனை கால்நடைகள் இருந்தாலும் அவற்றைத் தனித்தனியாக அதன் உருவ அடையாளங்களுடன் அறிந்திருப்பான்.
  2. பண்புகளை அறிதல்: அவனிடமிருக்கும் கால்நடைகள் அனைத்தின் பண்புகளையும் அவன் அறிந்திருப்பான்.
  3. பூச்சிகள் மற்றும் முட்டைகளை அழித்தொழித்தல்: கால்நடைகளின் உடலில் இருக்கும் உண்ணி முதலான ஒட்டுண்ணிகள் மற்றும் அவற்றின் முட்டைகளை நீக்கி சுத்தம் செய்தல்.
  4. மருந்துகளைப் பற்றிய அறிவு: கால்நடைகளுக்கு ஏதாகிலும் காயம் ஏற்பட்டால் மருந்துகளை உருவாக்கி அவற்றுக்கு இட்டு, கட்டுப்போடுதல்.
  5. கொசு விரட்டுதல்: கால்நடைகள் தங்கியிருக்கும் பட்டிகளில் கொசு அண்டுவதைத் தடுக்க தக்க மூலிகைகளை எரித்துப் புகையிடுதல்.
  6. ஆழம் அறிதல்: கால்நடைகள் ஆற்றையோ ஓடைகளையோ கடப்பதற்கு ஆழமில்லாத பகுதிகளைக் கண்டு அங்கு அவற்றை நடத்தும் அறிவு.
  7. தாகமறிதல்: கால்நடைகள் உரிய காலத்தில் நீரருந்துவதற்கு அவற்றைத் தண்ணீரண்டை நடத்துவது.
  8. வழியறிதல்: கால்நடைகளை நடத்திச் செல்ல பாதுகாப்பான வழிகளை அறிந்திருத்தல்.
  9. புதியன காணுதல்: மேய்வதற்கும் நீரருந்தவதற்கும் புதிய மேய்ச்சல் நிலங்களையும் நீர்நிலைகளையும் கண்டறிதல்.
  10. கரத்தலின்மை: பால் கரக்கும்போது கடைசிச்சொட்டுவரை வறண்டு போகாமல் கரப்பது.
  11. மதிப்பளித்தல்: மந்தையில் இருக்கும் காளைகளில் தலைமை தாங்கும் தகுதியுள்ள காளைகளுக்கு மதிப்பளித்தல்.

இந்தப் பதினோரு தகுதிகள் கொண்டவர்தான் சிறந்த மேய்ப்பராக இருக்க முடியும். இதேபோலப் பதினோரு தகுதிகள் கொண்ட பிக்கு சிறந்த பிக்குவாக முடியும்.

புத்தர் தொடர்கிறார்

ஒரு பிக்கு எப்படி  மேய்ப்பன் தன்னுடைய கால்நடைகளின் உருவத்தை அறிந்துள்ளாரோ அதைப்போல் தன்னுருவத்தை அறிந்திடல் வேண்டும். இந்த உருவம் நான்கு பொருட்களால் (நீர், நிலம், நெருப்பு, காற்று) ஆனது என்பதை அறிய வேண்டும். பிக்குவுக்கு உருவம் பற்றிய அறிவு அவரைத் தம்மத்தின் வழி நடத்தும்.

மேய்ப்பர் தன் கால்நடைகளின் பண்புகளை அறிவதுபோல பிக்குவும் அனைவரின் குணங்களையும் அறிய வேண்டும். நல்லவர்களின் நற்குணங்களையும் தீயவர்களின் தீக்குணங்களையும் அறியும் ஆற்றல் அவருக்கு  இருந்தால்தான் அவர் தம்மத்தைப் பரப்பும் பணியை ஆற்ற முடியும்.

மேய்ப்பன் கால்நடைகளின் உடலிலிருந்து பூச்சிகளை அகற்றுவதைப் போல பிக்கு தன் உள்ளத்தில் எழும் ஆசைகளை, புலனின்ப உணர்வுகளை இல்லாமல் ஆக்குகிறார். அவற்றை அழித்தொழிக்கிறார்.

அடிப்பட்ட கால்நடைகளின் காயங்களுக்கு மேய்ப்பன் கட்டுப்போடுவதைப் போல ஒரு பிக்கு தன்னுள் நுழையும் தம்மத்திற்கு எதிரான எல்லாவற்றையும் தடுத்து நிறுத்த கட்டுப்பாடுள்ளவராக இருக்கிறார். கண்களால் காணப்படும் காட்சிகள் மூலம், காதுகளால் கேட்கப்படும் ஒலிகள் மூலம், மூக்கால் நுகரப்படும் வாசத்தின்மூலம், வாயால் உண்ணப்படும் சுவைகளின்மூலம், உடலால் உணரப்படும் சிற்றின்பத்தின்மூலம் தன்னுள் நுழையும் புலனின்பங்கள்  அனைத்தையும் தடுத்து நிறுத்தும் கட்டுடையவராக பிக்கு இருக்க வேண்டும்.

கொசுக்கள் வராமல் கால்நடையைப் பாதுக்காக்க புகைபோடும் மேய்ப்பர்களைப் போல தம்மத்தைப் பரவ வைக்கிறார் பிக்கு. அவர் பரப்பும் தம்ம புகை வெறும் புகை அன்று. அது  நறுமணப்புகை. துன்பங்களிலிருந்து மக்களை விடுவித்து அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத்  புத்தர் தந்த போதனைகள் எனும் தம்ம நறுமணத்தைக் கொண்ட புகை அது. அப்போது மானுடத்தைத் துக்கக் கொசுக்கள் கடிக்காமல் இருக்கும். அத்தகைய அற்புதப் பணியைச் செய்யவது பிக்குகளின் கடமை.

கற்றல் என்பது பிக்குகளின் கடைசிமூச்சு வரை நிகழ்ந்துகொண்டே இருக்கும். அவர்களின் கற்பித்தலும் அப்படியே. எப்படி மேய்ப்பன் ஆழமற்ற பகுதிகளை ஆற்றிலும் நீரோடைகளிலும் ஆராய்ந்து அறிகின்றாரோ பிக்குகளும் அப்படித்தான். தங்களுக்குத் தெளிவில்லாத  தம்மத்தின் கூறுகளை தன்னின் அறிவுடைய பிக்குகளிடம்  தேடிச்சென்று தன் சந்தேகத்தைத் தீர்த்துக்கொண்டு அவர்களின் தெளிவைப் பெற்று  மக்களுக்குப் போதிக்கிறார்கள். மேய்ப்பர்கள் ஆழமில்லாத பகுதிகளைக் கால்நடைகளுக்குக் காட்டி அதைக் கடக்க அவற்றுக்கு உதவுகிறார்கள். பிக்குகளும் தனக்கு விளங்காத தம்மத்தின் செய்திகளை ஆய்ந்து அறிந்து  அவற்றை மக்களுக்குக் காட்டி துன்பங்களைக் கடக்க உதவுகின்றனர்.

மேய்ப்பதில் முக்கியமானப் பணி மேய்ச்சலுக்குப் பிறகு தன் கால்நடைகளுக்குத் தண்ணீர் காட்டுவது. மிக நீண்ட தூரம் நடந்த களைப்பு நீங்க, உண்ணப்பட்ட உணவு செரிமானமடைய  நீர் மிக அவசியமாகிறது. நீர் அருந்திய கால்நடைகள் நிறைவைப் பெறுகின்றன. அதுபோல் தான் ஒரு பிக்கு புத்தரின் போதனைகளால் நீர் நிலைபோல் இருக்கிறார். அவர் முதலில் தம்ம தாகத்தைத் தீர்த்துக்கொள்கிறார். பிறகு மக்களின் தம்மதாகத்தைத் தீர்க்கும் தடாகமாக அவர் மாறுகிறார். தன்னிடமிருக்கும் அறத்தைப் போதிக்கும் பிக்கு மக்களின் தாகத்தைத் தணிக்கும் வற்றாத ஊற்றாகிறார்.

கால்நடைகள் கடப்பதற்கு நல்ல பாதைகளை மேய்ப்பன் அறிவது போல பிக்குவும் தன் பாதைகளை அறிகிறார். அதைப் பிறருக்கும் தெரிவிக்கிறார். பிக்கு அறியும் பாதை எண்வழிப்பாதை. புத்தர் துக்க நிவாரணத்துக்காக மக்களுக்குக் காட்டிய பாதை. நன்னெறிப்பாதை.

தொடர்ந்து ஒரே இடத்தில் தன் மந்தைகளை மடக்குபவர்  நல்ல மேய்ப்பராக இருப்பதற்கு வாய்ப்பற்றவர். ஆனால் புதுப்புது மேய்ச்சல் நிலங்களைக் கண்டடைந்து  தன் கால்நடைகளுக்குத் தருபவரே சிறந்த மேய்ப்பர். பிக்குகளும் அப்படித்தான் மக்களுக்கு எப்போதும் விழிப்புணர்வு என்னும் புதிய புதிய  தளங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார். அதனால் மக்கள் அறிவைச் சரண்டையக் கூடியவர்களாகின்றனர்.

எப்படி மேய்ப்பன் எல்லா பாலையும் கரந்துவிட மாட்டாரோ அப்படி தன்னை ஆதரிக்கும் இல்லறத்தாரிடம் அவர்களிடமிருப்பதை எல்லாம் ஒரு பிக்கு எடுத்துக்கொள்ள மாட்டார். பிக்குகளுக்குத் தானம் தருவது இல்லறத்தாரின் கடமை. தானத்தில் பல தானங்கள் இருக்கின்றன.  பிக்குவின் தேவையறிந்தும் அவர் மீது  இருக்கும் அன்பு, மரியாதையின் காரணமாகவும் இல்லறத்தார் நிறைய தானங்களைத் தரினும் அவற்றை ஏற்காமல் அன்றைக்குத் தேவையானதைப் பெறுபவரே பிக்கு.

மேய்ப்பன் தன் மந்தையில் இருக்கும்  ஆற்றல் நிறைந்த, தலைமை தாங்கும் தன்மைக் கொண்ட காளைகளை மதிப்பதைப் போல பிக்குவும் தன்னைவிட சிறந்த ஆற்றலுள்ள இல்லறத்தைக் காலத்தால் முந்தியே துறந்த பிக்குகளைப் போற்றி மதிக்கிறார். இத்தகைய  பதினோரு பண்புகளையும் கொண்ட பிக்குகள் ஒளிவீசும் தன்மையுடையவர்களாக மாறுகிறார்கள், தம்மத்தில் நிறைவை அடைகிறார்கள்.

‘புத்தரும் அவர் தம்மமும்’ நூலில் பிக்குகளுக்கு புத்தர் கூறியதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் எழுதியிருப்பதைப் பார்க்கலாம்.

“சீடர்களே நாம் நம்மைப் போராளிகள் என அழைத்துக்கொள்கிறோம். எந்த வழியில் நாம் போராளிகள்? போர்த் தொடுக்கிறோம் அதனால் போராளிகள். எங்கெங்கு,  எதற்காக நாம் போர்த் தொடுக்கிறோம்?

பரந்து உயர்ந்த நன்னெறிகளுக்காக, உயர்ந்த உன்னத நன்முயற்சிகளுக்காக, தேர்ந்து தெளிந்த நல்லறிவிற்காக நாம் போராடுகிறோம். எனவேதான் நாம் போராளிகள்.

எங்கெல்லாம் நன்னெறி அபாயத்தில் உள்ளதோ அங்கெல்லாம் போராடுவதைத் தவிர்க்காதீர்கள், வாயடைத்து நிற்காதீர்கள்.”

l yazhanaathi@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger