மேலவளவில் பற்றி எரியும் நெருப்பு – பொய்யாமொழி முருகன்

மேலவளவு படுகொலை 25 ஆவது நினைவு ஆண்டு  

மேலவளவு படுகொலைகள் நிகழ்ந்து கால்நூற்றாண்டாகிறது. அப்படுகொலையை நினைவுகூர்வதென்பது ஒருவகையில் தலித் மக்கள் வாழ்வில் கால்நூற்றாண்டில் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கணக்கில் கொள்வதாகும். மேலும், தலித் மக்களுக்காகக் களம்கண்ட அமைப்புகள், கட்சிகள் இன்றைக்கு இருக்கின்ற இடத்தையடைய எத்தனை போராட்டங்களையும் தியாகங்களையும் பொருள் மற்றும் உயிர் இழப்புகளையும் சந்தித்திருக்கிறது என்பது புரியும். இராஜீவ்காந்தி தன் ஆட்சிக்காலத்தில் புதிய பஞ்சாயத்துச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். அது நிராகரிக்கப்படுகிறது. மீண்டும் வி.பி.சிங் தலைமையிலான அரசு இச்சட்டத்தைச் செயல்படுத்த முயன்றது. ஆனால், அதற்குள் ஆட்சியை இழந்தது. அதன்பிறகு நரசிம்மராவ் காலத்தில் சில மாறுதல்களுடன் புதிய பங்சாயத்து ராஜ் சட்டம் டிசம்பர் 22ஆம் தேதி நாடாளுமன்றத்திலும் ஏப்ரல் 23ஆம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றி 1993 ஏப்ரல் 24 முதல் செயல்படுத்தியது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மாநிலப் பட்டியலில் உள்ளதால் மத்திய அரசால் எவ்விதச் சட்டமும் இயற்ற இயலாத சூழலில் 73ஆவது சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டத்தை 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழக அரசு கொண்டுவந்தது.

இச்சட்டத்தின்படி கிராமம், ஒன்றியம், மாவட்டம் என்ற மூன்றடுக்குப் பஞ்சாயத்துமுறை உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் பட்டியல் சமூகம், பழங்குடிச் சமூகத்தவருக்கு அவர்களின் மக்கள்தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல் மொத்த இடங்களில் 30 சதவிகிதத்திலிருந்து மூன்றில் ஒரு பங்கிற்கும் குறையாமல் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இது ஏற்கெனவே மரபு என்றும் பாரம்பரிய மரியாதை என்றும் நாட்டார் பஞ்சாயத்து, கிராமப் பஞ்சாயத்து என்றும் அதிகாரம் செய்து வந்த ஆதிக்கச் சாதியினரை ஆட்டம் காணச் செய்தது. மேலும், அதுவரை செலுத்திவந்த அதிகாரம் இச்சட்டத்தின் மூலம் கைவிட்டுப் போவதாகக் கருதினர். இந்தப் பின்புலத்திலேயே மேலவளவு படுகொலையைப் பார்க்க வேண்டியுள்ளது. மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியம், மேலூருக்கும் மேற்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேலவளவு. இது தனி ஊராட்சியாகும். இதனுடன் மந்திப்பிச்சான்பட்டி, ஓட்டக்கோவில், அழகாபுரிபட்டி, காந்திநகர், கைலம்பட்டி, சேமகிரிபட்டி, கண்மாய்பட்டி, ராசினாம்பட்டி, வி.எஸ்.நகரம், செல்லிக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய ஊராட்சியாகும். மேலும் இவ்வூராட்சி மேலூர் சட்டமன்றத் தொகுதியிலும், மதுரை மக்களவைத் தொகுதியிலும் உள்ளடங்கிய பகுதியாகும். இவ்வூராட்சியில் பெரும்பான்மையாகக் கள்ளர் சமூகத்தவரும் (1000 குடும்பங்கள்), முத்தரையர் சமூகத்தவரும் (500 குடும்பங்கள்) வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ஆதிதிராவிடப் பறையர் சமூகத்தவரும் (350 குடும்பங்கள்), இஸ்லாமியரும் (100 குடும்பங்கள்) அதற்கு அடுத்தபடியாக வெள்ளாளர் சமூகத்தவரும் (25 குடும்பங்கள்), செட்டியார் சமூகத்தவரும் (10 குடும்பங்கள்) வசித்து வருகின்றனர். இவ்வூராட்சியில் காந்திநகர் கண்மாய்ப்பட்டி போன்ற பகுதிகளில் அடர்த்தியாகத் தலித் சமூகத்தவர் (பறையர்) வசிக்கின்றனர். மற்ற பகுதிகளில் முக்குலத்தோர்களுள் ஒருவரான கள்ளர்கள், யாதவர்கள், மூப்பனார் என்று சொல்லப்படுகின்ற வலையர்கள் மற்றும் இதரப்பிரிவினர் வசித்து வருகின்றனர்.

காந்திநகரில் உள்ள தலித் மக்கள் மேலவளவில் மந்தைக்கு அருகிலேயே வசித்து வந்தனர். அங்கு பல்வேறு நெருக்கடிகளையும் இன்னல்களையும் பொறுத்துக்கொண்டு வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இத்தகைய இன்னல்களுக்குத் தீர்வாக, காங்கிரஸ் ஆட்சியில் மேலவளவிற்கு அருகில் உள்ள தும்பைப்பட்டியைச் சேர்ந்த கக்கன் அமைச்சரானபோது மேலவளவில் உள்ள தலித் மக்களின் இடர்பாடுகளுக்குத் தீர்வு காணும் முகமாக, மேலவளவிற்கு அருகில் இன்றைய காந்தி நகரில் ஏழு ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர். அவ்வாறு கக்கன் அமைச்சராக இருந்தபோது குடியமர்த்தப் பட்ட காரணத்தினால்தான் காந்திநகர் என்று அப்பகுதிக்குப் பெயர் வைக்கப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தலில் தலித் மக்களுக்கான பிரதிநிதித்துவம்

இந்தியாவில் பல்வேறு காலங்களில் பலவிதமான பஞ்சாயத்து அமைப்புமுறைகள் இருந்துள்ளன. உலகிலேயே இந்தியாவில்தான் வேதகாலம் முதலே பஞ்சாயத்து அமைப்பு நீடித்து வருவதாக வரலாற்றியலாளர்கள் கருதுகின்றனார். சர்.சார்லஸ் மெட்கால்ப் இந்தக் கிராம அமைப்பினைக் ‘கிராமக் குடியரசுகள்’ என்கிறார். இக்குடியரசுகள் பெரும் மாற்றங்களுக்கு உட்படாமல் சுயசார்புடனும் சனநாயகத்துடனும் மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகளாகவும் வேதம், புராணம், மனுஸ்மிருதி, பௌத்த – சமண இலக்கியங்களில் பதியப்பட்டுள்ளன. மேலும் 9, 10, 11 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுகளிலும் இவ்வமைப்புகள் குறித்து குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. (முள்கிரீடம்: ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள் – ஒரு கள ஆய்வு, அ.பகத்சிங், பக்: 22 – 23) வேதகாலத்தில் கிராமத்தின் தலைவரைக் ‘கிராமணி’ என்று அழைத்து அவர் பணியாக அரசிற்காக வரிசூல் செய்வது, பாதுகாவல் செய்வது போன்றவை இருந்துள்ளது. பெரும்பாலும் இதற்குப் பிராமணர்களையோ, சத்திரிய வைசியர்களையோ நியமித்துள்ளனர். அதுபோல சமண, பௌத்த காலத்தில் ‘போஜக்’ என்ற பெயரில் கிராமத்தின் தலைவரை நியமித்துள்ளனர். இவரை கிராம மக்களே தேர்ந்தெடுத்துள்ளனர். இவர் கிராமத்தின் பல நிகழ்வுகள் குறித்து, முடிவெடுத்துச் செயல்படுத்துவதில் முன்னிலை வகித்துள்ளார். குப்தர்கள் காலத்தில் நிர்வாக அமைப்பிற்காகக் கிராம சபை உருவாக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் தலைவரைக் ‘கிராம்பதி’ என்றும் மாகாணத் தலைவரை ‘விஷயபதி’ என்றும் அழைத்துள்ளனர். அதுபோல சுல்தான்களின் ஆட்சிக்காலத்தில் நிர்வாகத்திலும் வரிவசூல் முறையிலும் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளன. “அக்பர் ஆட்சியில் நிர்வாகம் மையப்படுத்தப்பட்டது. மாவட்ட பர்கானாக்கள் உருவாக்கப்பட்டு அதிகாரம் அனைத்தும் மையப்படுத்தப்பட்ட அரசு நியமித்த சுபேதார்கள், சிக்தார்கள், பௌஸ்டார்கள் மற்றும் கிராமத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.” (‘முள்கிரீடம்: ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள் – ஒரு கள ஆய்வு’, அ.பகத்சிங், பக்: 24 – 25) இவ்வாறு பண்டைய காலம் தொடங்கிக் காலனியாட்சிக் காலம் வரையில் வெவ்வேறு முறைகளில் அந்தந்தப் பிரதேசங்களில் அந்தந்த ஆட்சியாளர்கள் தங்கள் வசதிக்கு ஏற்றாற்போல் நிர்வாகம் செய்துவந்துள்ளனர்.

இதன் பின்பு வந்த காலனிய ஆட்சியாளர்கள் தங்களது நிர்வாக வசதிக்காகப் பல்வேறு பிரிவாக பிரித்து நிர்வாகம் செய்தனர். குறிப்பாக ரிப்பன் பிரபு 1882ஆம் ஆண்டு இந்தியர்களையும் நிர்வாகத்தில் உட்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தினை விளக்கி தீர்மானத்தினைக் கொண்டு வந்ததன் மூலம் உள்ளாட்சி அமைப்பில் பெரும் மாற்றத்தினைக் கொண்டுவந்தார்.  காலனிய ஆட்சிக்கும் மாகாண (உள்ளூர்) ஆட்சிக்கும் இடையிலான நிதி மற்றும் நிர்வாக உறவுகள் குறித்தும் அதிகாரப் பரவல் குறித்தும் ஆய்வு செய்ய 1907ஆம் ஆண்டு ராயல் ஆணையம் (Royal Commission) அமைக்கப்பட்டது.  இதன்படி அதிகாரப் பரவலானது கீழிருந்து தொடங்க வேண்டுமே அல்லாமல் மேலிலிருந்து அல்ல என்றது.

காந்தி நகர் முழுதும் இன்னதென்று சொல்ல முடியாத சூழல் நிலவியது. ஆம் ஊர்க்கூட்டத்தில் முதியவர்கள் மந்தையில் அம்பலக்காரர்களின் முன் விழுந்து கும்பிட்டுவிட்டு ‘நாங்கள் இந்தத் தேர்தலில் நிற்க மாட்டோம்’ என்று சொல்ல, கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துக் காந்திநகர் இளைஞர் கூட்டம் ‘ஊர்க்கூட்டத்தைப்’ புறக்கணித்து வெளியேறியது. ‘மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கான தேர்தலை இம்முறை எங்களுக்கு அரசாங்கமே ஒதுக்கீடு செய்துள்ளது. எக்காரணத்திற்காகவும் எங்களுடைய உரிமையை நாங்கள் விட்டுத்தரமாட்டோம்’ என்று கூறிவிட்டே வெளியேறினர். இந்நிகழ்வு அம்பலக்காரர்களுக்குப் பெருத்த அவமானமாக, தங்களுடைய சமூக அந்தஸ்துக்கு விடப்பட்ட சவாலாகவே கருதினார்கள். இதனால் அவர்கள் “நாட்டுக்கு ஒரு பறையன் ஜனாதிபதியாக வந்தாலும் நம்ம ஊருக்கு ஒரு பறையன் தலைவனா வரக்கூடாது” என்று பல்வேறு விதமாகப் பேசத் தொடங்கினர். இந்நிலையில், 10.9.1996 அன்று காந்திநகர் காலனி இளைஞர்களில் துடிப்பான காஞ்சிவனம், முருகேசன் போன்றோர் வேட்புமனு தாக்கல் செய்யும் செய்தி அறியவரவே கள்ளர் சமூகத்தவர்களான அம்பலக்காரர்கள் முதல்நாள் இரவில் காஞ்சிவனம் உள்ளிட்ட ஆறு பேருடைய வீடுகளைத் தீ வைத்துக் கொளுத்துகின்றனர். காஞ்சிவனம் உள்ளிட்டவர்கள் உயிர் தப்பினர். காலையில் மேலவளவு மந்தையில் அம்பலக்காரர்களான பொன்னையா, அய்யாவு, மணிகண்டன் ஆகியோரிடம் தங்களது வீடுகள் தீவைக்கப்பட்டதையும் அதனால் தங்களுடைய வீடுகளும் உடமைகளும் எரிந்துபோனதையும் முறையிட அவர்களின் தீப்பிடித்த வீட்டைப்பழுது பார்க்க ஊர்ப்பணத்தில் இருந்து ரூபாய் 2000 கொடுத்தனர்.

இச்சம்பவத்தால் பயந்து போயிருந்தாலும் திட்டமிட்டது போல கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காஞ்சிவனம், முருகேசன் முதலானோர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்கின்றனர். இச்செய்தி மேலவளவு ஊர் முழுவதும் பரவ கள்ளர்கள் கும்பலாய்த் திரண்டு காந்திநகர் காலனிக்குள் புகுந்து தென்பட்டவர்களை எல்லாம் அடிக்கத் தொடங்கினர். ஏற்கெனவே குடிசைகளும் வீடுகளும் எரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் மீண்டும் அவர்களுடைய மிரட்டல்களையும் தாக்குதல்களையும் தாங்க முடியாத பலரும் காந்திநகரிலிருந்து தப்பிப் பிழைக்க ஊரைக்காலி செய்துவிட்டு ஓடிவிடுகின்றனர். வேறு வழியில்லாத பெரியவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்த காலனி இளைஞர்களிடம் அழுது புலம்பி தங்களுடைய குடும்பங்கள் அந்தல சிந்தலையாகக் கிடப்பதைச் சொல்லி, ‘அவர்களைப் பகைத்துக் கொண்டு உயிர் வாழமுடியாது. ஆகையால் நீங்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ததை வாபஸ் வாங்க வேண்டும்’ என்று கெஞ்சி அழுகவும் நிலைமை தங்களுடைய கைமீறிப் போவதை அறிந்தவர்கள் தங்களுடைய வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்கின்றனர்.

ஆனாலும், நிலைமை சரியாகவில்லை. காலனி மக்களுக்குத் தொடர்ந்து மிரட்டல்கள் வந்துகொண்டே இருந்தன. இதனால் முருகேசன், நமது மக்களின் நிலையை அரசு அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி அதற்குத் தீர்வு காணலாம் என்று பலருக்கும் விண்ணப்பங்களை அனுப்புகிறார். தொடர்ந்து மேலவளவு சாதியப் பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறை பற்றி அரசு அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறார். இந்தச் சூழ்நிலையில், மதுரை கலெக்டருக்கும் தேசிய மனிதஉரிமை ஆணையத்திற்கும் மாநில மனிதஉரிமை ஆணையத்திற்கும் நீதி கேட்டு விண்ணப்பங்கள் செய்கிறார். இதன் விளைவாக மேலவளவு பற்றிய செய்திகள் பத்திரிகைகளில், ஊடகங்களில் வருகின்றன. அதிகாரிகளும் மேலவளவிற்கு விசாரணைக்காக வந்து செல்கின்றனர். இத்தகைய செயல்கள் மேலும் அவர்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்குகிறது.

இந்நிலையில், மேலவளவில் நடக்கவிருக்கின்ற தேர்தலுக்காக வாக்காளர் அடையாள அட்டைக்குப் புகைப்படம் எடுப்பதற்கு அலுவலர்கள் மேலவளவிற்கு வருகின்றனர். அவர்களை அடித்துவிரட்டாத குறையாகத் துரத்துகின்றனர். “நாங்கள்தான் தேர்தலைப் புறக்கணிக்கின்றோமே எங்களுக்கு எதற்கு ஓட்டர் ஐடி” என்று மேலவளவு கிராமமே புகைப்படம் எடுக்க மறுத்துவிடுகின்றனர். “இது ரிசர்வ் தொகுதியாய் இருக்கும்வரை நாங்கள் யாருக்கும் வாக்களிக்க மாட்டோம். எனவே எங்களுக்கு அடையாள அட்டையே தேவையில்லை” என்றனர் (குங்குமம், பக்கம் – 15). அதுபோலவே கூட்டுறவுத் தேர்தலையும் மேலவளவு கிராமமே புறக்கணித்தது. தலித்துகளுள் சிலர் நாங்கள்தான் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்காக வேட்புமனுத் தாக்கல் செய்ததை வாபஸ் வாங்கச் சொல்லிவிட்டோமே. எங்கள் காலனிப் பகுதியில் அடைக்கப்பட்டுள்ள பலசரக்குக் கடையைத் திறக்கலாமே என்று இருதரப்பினரும் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் மூலம் காலனிப் பகுதியில் அடைக்கப்பட்டிருந்த பலசரக்குக் கடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கள்ளர்களின் ஒடுக்குமுறைகளுக்குப் பயந்து வெளியூர்களுக்குச் சென்ற காலனியைச் சேர்ந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குத் திரும்ப ஆரம்பித்தனர்.

டெல்லி அதிகாரிகள் ஆய்வு

மேலவளவு பஞ்சாயத்துப் போர்டு எலக்சன் தொடர்பாக நடந்த பிரச்சினைகளை விசாரிக்க டெல்லியிலிருந்து அதிகாரிகள் குழு ஒன்று 25.09.1996 அன்று வந்தனர். இதில் மக்கள் கண்காணிப்பகம், தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்திற்கு அளிக்கப் பட்டிருந்த புகாரின் அடிப்படையில் நேரில் விசாரிக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் இயக்குநர் பாலகிருஷ்ணன் விசாரணை செய்தார். காலனிப் பொதுமக்கள் பலரும் விதவிதமாகப் பதிலளித்தனர். பெயர், முகவரி அல்லாத மொட்டைக்கடுதாசியின் மூலம் கொலைமிரட்டல்கள் வந்தது, தங்கள் பகுதிக் குடிசைகளுக்குத் தீவைத்தது, பொருட்களைச் சேதப்படுத்தியது, தங்கள் பகுதி மக்களை மிரட்டியது என்று அவர்களிடம் பதிலளித்தனர். வேட்புமனுத் தாக்கல் செய்து அதனைத் திரும்பப் பெற்ற முருகேசன், தான் தயாரித்து வைத்திருந்த ‘சத்தியப் பிரமாண வாக்குமூலத்தை’ கொடுத்தார். இதனுடன் பீப்பிள் வாட்ச் கமிட்டியின் ஆய்வறிக்கையும் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் இக்குழு மேலவளவு மக்களிடமும் முருகேசனுடன் வேட்பு மனுவை வாபஸ் பெற்ற வையன் கருப்பன், காஞ்சிவனம் ஆகியோரிடமும் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் தாங்களாகவே முடிவு செய்து தாக்கல்செய்த வேட்பு மனுவைத் தங்களுள் சிலர் வற்புறுத்தியதால் வாபஸ் பெற்றதாக அவர்கள் இருவரும் கூறினர். அத்தோடு அக்குழு கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையை முடித்த பின்னர் வேட்பாளர்கள் தாங்களாகவே வேட்புமனுக்களை வாபஸ் வாங்கியுள்ளனர். மேலும் அவர்களை யாரும் வற்புறுத்தவில்லை என்றும் புகார் கொடுத்தவர்கள் இவ்விசாரணைக்கு வரவில்லை என்றும் அவ்வதிகாரி கூறினார். இதுபோன்ற பலநிகழ்வுகள் மேலவளவு கள்ளர் சமூக மக்களுக்கு ஆத்திரத்தையும் அவ்வின இளைஞர்களுக்கு வெறியையும் கிளப்பி விடுகிறது. “தேர்தலில் எவனாவது நின்னீங்கன்னா உடம்புல தலை இருக்காது”, “தலை இருந்தால் தானே தலைவனாக இருக்க முடியும் ஜாக்கிரதை” என்று மிரட்டல் கடிதங்களும் மிரட்டல்களும் தொடர்ந்து வந்தன. மேலும் காந்திநகரில் தீவைப்புகளும் பெட்ரோல் குண்டு வீச்சுகளும் அடிக்கடி நடந்து வந்தன. இந்நிலையில் அரசு அதிகாரிகள் காந்திநகர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மீண்டும் தேர்தலில் நிற்க அவர்களைக் கேட்கவும் அம்மக்கள் பயப்படுகின்றனர். “நாங்கள் இருக்கிறோம் நீங்கள் பயப்படாமல் தேர்தலில் நில்லுங்கள்” என்று அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் கூறினர். 29.12.1996 அன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் 8 பேர் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தல் சனிக்கிழமை மதியம் 2 மணி வரை அமைதியாகவே நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஒரு கும்பல் காவலுக்கு நின்ற போலீஸ் மீது ‘மிளகாய் பொடி தூவி விட்டு’ மேலவளவு ஊராட்சி துவக்கப்பள்ளியில் 3 வாக்குச் சாவடியிலிருந்தும், உயர்நிலைப் பள்ளியில் ஒரு வாக்குச்சாவடியில் இருந்தும் ஓட்டுப் பெட்டிகளைத் துக்கிச் சென்று விடுகின்றனர். இதில் ஒரு வாக்குப்பெட்டிளை அருகில் உள்ள கிணற்றில் வீசி விடுகின்றனர். எனவே அங்குள்ள 9 வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஒத்தி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் மேலவளவு ஊராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் நடத்தக் கோரி தலித்மக்கள் மேலூரில் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபடுகின்றனர். முருகேசன் மற்றும் அவரது உறவினர்கள் சிலரும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டதை அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் தெரிவிக்கலாம் என்றும் கருணாநிதி இன்று காரைக்குடி வருகிறார். அங்கு நிகழ்வை முடித்துவிட்டு மதுரை வழியாகச் சென்னை செல்கிறார். எனவே அவரைச் சந்தித்து உண்மை நிலையை எடுத்துச் சொல்லுவதற்குச் செல்கிறார்கள் என அறிந்த காவல்துறை அதிகாரி மேலூரிலிருந்து அவர்களை மேலவளவிற்குத் தமது போலீஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்து வருகிறார். வரும்போதே இடையிடையே வாகனத்தை நிறுத்தி போன் பேசுவது போல நேரத்தைப் போக்குகிறார். எந்த நிலையிலும் இவர்கள் முதல்வரைச் சந்தித்து விடக்கூடாது என்பதில் காவல்துறை அதிகாரி கவனமாக இருந்தார் என்று கருப்பையா கூறுகிறார் (நேர்உரையாடலில்). இந்நிலையில் 29.12.96 அன்று மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் எஸ்பி.விஸ்வநாதன், மதுரை ஆர்டிஓ சின்னத்துரை, டிஆர்ஓ சுடலைகண்ணன், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றனர். மேலவளவில் மீண்டும் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே அங்கு தேர்தலை நடத்தக் கூடிய சூழலே நிலவுகிறது. எனவே அரசு 31.12.96 அன்று தேர்தலை நடத்தலாம் என்று அரசுக்குப் பரிந்துரை செய்கின்றனர் (தினமலர் 30.12.96). இதனை அறிந்து மேலவளவு கள்ளர்கள் 30ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரைச் சந்திக்கின்றனர். சந்தித்து செவ்வாய்க்கிழமை 31ஆம் தேதி நடைபெற இருக்கின்ற தேர்தலை ஒத்திவைக்க வேண்டும், இந்தத் தேர்தலை அடுத்த ஆண்டு நடத்தினால் போதும் என்றும், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 12 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர். மாவட்ட கலெக்டர் காசிவிசுவநாதன் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு இதனை மேலிடத்திற்குத் தகவல் கொடுப்பதாகத் தெரிவிக்கிறார். மேலும், அவர் நாளைக்கு நிச்சயமாகத் தேர்தல் நடைபெறும்; கூடுதலாகப் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். அதனால் தேர்தல் நடப்பதைத் தடுக்க யாராலும் முடியாது என்று கூறிவிடுகிறார்.

மூன்றாவது முறையாக மேலவளவுவில் தேர்தல் 31.12.96 செவ்வாய்க்கிழமை நடக்கிறது. இதில் முருகேசன், வையங்கருப்பன், கொட்டக்கொடியான், செல்லம்மாள், வீரன், சேவகன், கக்கன் ஆகிய எட்டுப் பேர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர். மேலவளவு பஞ்சாயத்தில் மொத்தம் 4,426 வாக்குகள் உள்ளன. இதில் வெறும் 716 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. அன்றைய தினம் பிற்பகல் 2 மணி வரையிலும் மேலவளவு கிராமத்தில் உள்ள இரண்டு வாக்குச்சாவடியில் யாருமே வாக்களிக்கவில்லை. இரண்டு வாக்குச்சாவடியில் 22 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. இந்தச் சூழ்நிலையில் தலித் சமூகத்தவர் தவிர்த்த அனைத்து சமூக மக்களும் தேர்தலையைப் புறக்கணித்து தங்களது வீடுகளைப் பூட்டுப் போட்டு பூட்டிவிட்டு ஊரை விட்டு வெளியேறிவிட்டனர். மேலவளவு கிராமம் முழுதும் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் கிடந்தது. மேலவளவு ஊராட்சியைச் சேர்ந்த அழகிரிபட்டியிலும் யாருமே வாக்களிக்கவில்லை. இந்நிலையில் தேர்தல் முடிந்து வாக்குப்பெட்டிகள் போலீஸின் பலத்த பாதுகாப்புடன் கொட்டாம்பட்டி யூனியன் ஆபீஸ§க்குக் கொண்டு செல்லப்பட்டது.

இரவு 7.30 மணிக்கு அதிகாரிகளின் முன்னிலையில் ஓட்டுப் பெட்டிகள் திறக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இரவு 8 மணி அளவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் மேலவளவு காந்தி நகரைச் சேர்ந்த முருகேசன் 415 வாக்குகள் பெற்று வெற்றி பெறுகிறார். இவரை அடுத்து வையங்கருப்பன் 268 வாக்குகளும், கொட்டகுடியான் 20 வாக்குகளும், செல்லம்மாள் 7 வாக்குகளும், கல்லானை 2 வாக்குகளும், வீரன் 5 வாக்குகளும் பெறுகின்றனர். இதில் சேவுகன், கக்கன் ஆகிய இருவரும் எந்த வாக்குகளையும் பெறவில்லை. 5 வாக்குகள் செல்லாதவை என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியர் தலித் மக்களுக்கு என்று தனியாக ரேஷன் கடை கட்டப்படும் என்றும் அதுவரை காந்திநகர் குடியிருப்பிலேயே ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்க, மேலவளவு கிராமத்தில் சகஜ நிலை ஏற்படும் வரை இரண்டு வாரங்களுக்குப் போலீஸ் பாதுகாப்பில் ஈடுபடுவர் என்று போலீஸ் எஸ்பி தெரிவித்தார். பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையில் மேலவளவு ஊராட்சி மன்றத்தில் மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார் முருகேசன் (தினமலர் – 1.1.1997).

அதன்பிறகு, மேலவளவு ஊராட்சி மன்ற அலுவலகத்தைப் பூட்டு போட்டு அடைத்து விடுகின்றனர் கள்ளர் சமூகத்தினர். இதனால் ஊராட்சி மன்றப் பணிகளை முருகேசனால் சரியாகச் செய்யமுடியவில்லை. ஆனாலும் சற்றும் மனம் தளரவில்லை முருகேசன். தமது காலனியில் உள்ள தொலைக்காட்சி அறையைத் தனது அலுவலகமாகக் கொண்டு தமது பணிகளை ஆற்றி வந்தார். முருகேசன் அடிப்படையில் திமுககாரர். எப்பொழுதும் திமுக கரைவேட்டியுடனேயே இருக்கக்கூடியவர். திமுக மீதும், அதன் தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் மீதும் மாறாத பற்றும், அன்பும் கொண்டவர். இருந்தாலும் மேலவளவு மக்கள் ஊராட்சி மன்றத் தலைவருக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஊராட்சி மன்றத்திற்குச் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்த மறுத்து விட்டனர். ஆனாலும் தனது பணிகளைச் செய்தே வருகிறார். இதனால் ஊராட்சிப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. அது போலவே இரவு நேரங்களிலும் காந்தி நகர் குடியிருப்புகள் மீது கற்களை வீசுவது, தங்களது நிலங்களில் தலித் மக்களுக்கு வேலை அளிக்க மறுப்பது, தங்களுடைய நிலங்களில் அவர்கள் நடக்கக் கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளை விதித்தனர். இதனால் தலித் மக்கள் வேறு வழியின்றி வெளியூர்களுக்குச் சென்று வேலைகள் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலவளவில் உள்ள பள்ளிக் கூடத்தில் ‘பறையர் பிள்ளைகள் படிக்கக் கூடாது’ என்று குழந்தைகளையும் படிக்க விடாமல் அடித்து விரட்டினர். இதனால் பல பெண் குழந்தைகளும் ஆண் குழந்தைகளும் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்த வேண்டிய பரிதாபநிலை ஏற்பட்டது.

முருகேசன் ஆற்றியுள்ள பணிகளும் அவருக்கு வந்த மிரட்டல்களும்

மேலவளவு கிராமத்துப் பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட முருகேசன் கிராமத்தில் பழுதடைந்த மின்சார விளக்குகளைக் கணக்கெடுத்துப் புதிதாகப் போடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் கிராமத்தில் உள்ள இரண்டு பஸ் ஸ்டாப்களிலும் புதிய நிழற்குடைகள் அமைத்துக் கொடுத்துள்ளார். பஞ்சாயத்து அலுவலகத்திற்குப் புதிதாகப் பெயிண்ட் அடித்து, சுற்றுச்சுவர் கட்டிக் கொடுத்துள்ளார். கிராமத்தில் பலர் வரிகட்ட மறுத்து வந்தபோது முருகேசன் சமரசப்பேச்சு மூலம் வரிவசூலிக்க நடவடிக்கை எடுத்தார். ஆதிக்கச் சக்திகள் எனக் கூறிக் கொள்ளும் தலைவர்களைச் சந்தித்து இனி ஒற்றுமையாகச் செயல்படுவோம்; உங்கள் குறைகளை நேரடியாகத் தெரிவித்து அதற்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளலாம்; என்னைச் சந்திக்கத் தயங்கினால் எனது அலுவலகத்தில் உள்ள அலுவலர்களைச் சந்தித்து உங்கள் பிரச்சனைகளைச் சொல்லுங்கள் என்று மக்களோடு சுமுகமாகவே செயல்பட்டு வந்தார். ஆனாலும் பிச்சனைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. பதவியேற்றதிலிருந்து பல்வேறு மிரட்டல் கடிதங்கள் முருகேசனுக்கு அடுத்தடுத்து வந்த வண்ணம் இருந்தன. அதில் “ஒருநாள் இல்லை ஒருநாள் உன் தலையை வெட்டத்தான் போகிறோம்” என்றும் “வெள்ளரிக்காயைச் சீவுவது போல உன் தலையைச் சீவி விடுவோம்” என்றும் பல்வேறு விதமாக மிரட்டல் கடிதங்கள் வந்த வண்ணமிருந்தன. இவற்றையெல்லாம் விளக்கி மனுக்களாக அரசு அதிகாரிகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார் முருகேசன். இதுதவிர பல்வேறு அமைச்சர்களையும் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களையும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்துத் தன்னுடைய நிலையையும், மேலவளவில் நிலவுகின்ற சாதியப் பாகுபாடுகளையும், சூழ்நிலைகளையும், தலைவராகப் பணி செய்வதில் உள்ள இடர்பாடுகளையும், மேலவளவு அம்பலக்காரர்கள் தருகின்ற தொல்லைகளையும், பாதிப்புகளையும் விளக்கிச் சொல்கிறார். நாட்கள் செல்கின்றன. மேலவளவு மக்கள் சிலர் காந்தி நகர் காலனியில் உள்ள தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வந்து தங்களது குறைகளைக் கூற அவற்றை முருகேசன் தன்னுடைய நடவடிக்கையின் மூலம் சரி செய்கிறார்.

இந்நிலையில் காந்தி நகரில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் பெறுவதற்காக மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன், துணைத்தலைவர் மூக்கன் மற்றும் செல்லத்துரை, பூபதி ஆகியோருடன் மதுரை மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க வருகிறார். அன்று வழக்கத்திற்கு மாறாக வெயில் உக்கிரமாக அடிப்பதாகப்பட்டது. மாவட்ட ஆட்சியரைச் சந்திக்கச் சென்ற ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன், ஆட்சியர் இல்லாத காரணத்தினால் தமது சகாக்களில் ஒருவரை மட்டும் இருந்து ஆட்சியரைப் பார்த்து மனுவைக் கொடுத்து நிலவரத்தைக் கூறிவிட்டு வரும்படி சொல்லிவிட்டு ஆட்சியர் அலுவலகத்தை விட்டுப் புறப்படத் தயாரானார். அப்போது யாரோ தம்மைத் தொடர்ந்து நோட்டம் விடுவதைத் தம்முடைய சகாக்களில் ஒருவர் சொல்லவும் திரும்பிப் பார்த்தார். அது மேலவளவில் பால்பண்ணை நடத்திய செட்டியார் சமூகத்தவரான மனோகரன் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு சிறு குழப்பத்துடன் புறப்பட்டார் முருகேசன். மதுரை அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து மேலூர் வழியாக நத்தம் திண்டுக்கல் செல்லக்கூடிய தனியார் பேருந்து கேஎன்ஆர் வண்டி (எண் TN 59 M 9495) நிற்கவே அதில் அனைவரும் ஏறினர். ‘எங்கு சென்றாலும் சேர்ந்துதான் செல்ல வேண்டும். தனியாக எங்கும் செல்லக் கூடாது. அவ்வாறு தனியாக ஊருக்குச் செல்ல வேண்டுமானால் காரிலேயே செல்ல வேண்டும்’ என்று தன்னிடமும் தனது தம்பியிடமும் தனது அண்ணன் கருப்பையா சொன்னது நினைவுக்கு வந்தது. ஆனால் நாம் சேர்ந்துதான் போகிறோமே என்ற எண்ணம் வரவே அதைப் பெரிதுபடுத்திக் கொள்ளவில்லை. பேருந்து புறப்படத் தயாரான பொழுது தங்களை ஆட்சியர் அலுவலகத்தில் நோட்டமிட்ட மனோகரன் என்பவரும் பேருந்தில் ஏறினார்.

பேருந்து புறப்பட்டு மேலூரை நோக்கிச் செல்லும்போது தங்களுக்குள்ளேயே ஒரு இறுக்கம் படர்வதை உணர்ந்த முருகேசன் தனது சகாக்களோடு பேசத்தொடங்கினார். பேருந்து மேலூர்ப் பேருந்து நிலையத்தை அடைந்த போது தம்மூரான மேலவளவைச் சேர்ந்த பலரும் பேருந்தில் ஏறினர். வெளியூர் நபர்களும் பேருந்தில் ஏறினர். உள்ளே மட்டுமல்லாது பேருந்துக்கு மேலேயும் ஏறிக் கொண்டு வந்தனர். அதில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அழகர்சாமி, பொன்னையா, துரைப்பாண்டி, ஜோதி மணிகண்டன், ஜெயராமன் போன்றோரும் ஏறினர். கூடவே காந்திநகர் காலனியைச் சேர்ந்த சின்னையா, குமார், கிருஷ்ணன் ஆகியோரும் ஏறினார். அவர்களைத் தொடர்ந்து அவரது தம்பியும் ஏறினார். ஏனோ தனது அண்ணன் கருப்பையா சொன்னது மீண்டும் நினைவுக்கு வந்தது. நிலைமை மோசமாகவும் அவர்கள் எப்போவென்று தருணம் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் ராஜா அசட்டையாக இருப்பதைப் பார்க்க தம்பி ராஜா மீது முருகேசனுக்குக் கோபம் வந்தது. அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வீட்டில் போய்ப் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார். பேருந்து மில்டன் ஸ்கூல், சுக்கம்பட்டி, எட்டிமங்களம் போன்ற ஊர்களைக் கடந்து சென்றது. சென்னகரம்பட்டிக்கு அருகில் அக்ரகாரம் கள்ளுக்கடை மேட்டிற்கு அருகில் சென்று கொண்டிருக்கும் போது பேருந்தினுள் பெரிய சத்தம் எழுந்தது. என்னவென்று பார்க்கும்போது அந்த ஊரைச் சேர்ந்தவர்தான் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது. முன்பைவிட அதிக சப்தத்துடன் பேருந்தை நிறுத்தச் சொல்லி மேற்கூரையைத் தட்டிக்கொண்டிருந்தார். அப்போது பேருந்து பழைய கள்ளுக்கடை மேட்டிற்கு அருகில் சென்று கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் ஓட்டுநர் பேருந்தைக் கள்ளுக்கடை மேட்டிற்கு அருகில் நிறுத்தினார். அப்போது பெரும் சப்தத்துடன் அருகில் இருந்த வைக்கோல் போரின் பின் புறத்தில் இருந்து 30, 40 பேர் பயங்கரமான ஆயுதங்களுடன் வந்து பேருந்தில் ஏறினர்.

அப்பொழுது ராமர் என்பவரும், மேலவளவு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அழகர்சாமியும் “பறையர்கள் எல்லோரையும் கொன்றுவிடுங்கள்”, ”பறையனெல்லாம் அம்பலக்காரர்களுக்குத் தலைவனா”, “ஈன சாதி நாய்களே உங்களுக்குப் பதவி ஒரு கேடா” என்று சொல்லிச் சொல்லி, அரிவாள், கத்தி போன்ற கொடூர ஆயுதங்களால் வெட்டித் தள்ளினர். முருகேசனது வலது தோள்பட்டையில் அழகர்சாமி கத்தியால் குத்தினார். “மற்றவர்கள் எல்லோரும் பஸ்சை விட்டுக் கீழே இறங்கி ஓடி விடுங்கள்” என்று கூறிக்கொண்டே அரிவாளினை வீசினர். சுதாரித்து முருகேசன் கீழே இறங்கி ஓட முனைகையில் ஒரு கும்பல் சுற்றி வளைத்து வெட்டியது. பேருந்திலிருந்து வெளியே தரதரவென்று இழுத்து வந்து போட்டு மீண்டும் வெட்டினர்.

கொலை செய்த முறை

மேலவளவு படுகொலையானது தற்செயலாகவோ அல்லது அப்போது கைகலப்பிலோ, தற்காப்பிற்காகவோ நடந்தது அல்ல. மாறாக நீண்ட நாட்கள் பின்தொடர்ந்து கண்காணித்து, திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. முருகேசன் உள்ளிட்டோரைக் கொலை செய்த விதமானது பெரும் திட்டமிட்டுச் செய்யப்பட்டது என்கிறார் க.லெனின் சுப்பையா. “கொலை செய்ய வேண்டியவர்கள் தப்பி ஓடாதவாறு வைக்கோல் போர் வாழைத்தோப்பிற்குள் மறைந்திருந்து வந்தவர்கள் பேருந்தைச் சுற்றிவளைத்து அரண்போல் தடுத்திருக்கிறார்கள். கொலை செய்ய வேண்டியவர்களை ரத்தக் காயப்படுத்திக் கூலிப் படைக்கு அடையாளம் காட்டும் வேலையைப் பேருந்தில் பயணம் செய்துவந்த உள்ளூர் கள்ளர்கள் பெறுப்பேற்றுள்ளனர். ரத்தக் காயங்களை அடையாளமாகக்கொண்டு முருகேசன் உள்ளிட்ட 6 தலித்துகளையும் கூலிப்படையினர் வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள். கூலிப்படையினர் மூன்றுவகையான வழிமுறைகளில் கொலையை முடித்திருக்கிறார்கள். கொலை செய்ய வேண்டியவர்களை முதலில் கத்தியால் குத்துவது, குத்துப்பட்டவர்கள் வயிற்றைப் பிடித்துக் குனியும் போது கழுத்தில் அரிவாளால் வெட்டுவது, தப்பியோடாமல் இருக்கக் குதிகால் நரம்பைத் துண்டாக்குவது” (‘தீர்க்கப்படாத கணக்குகள்’, பக் – 49) என்று திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளனர்.  ஐந்து பேர் கொண்ட கும்பல் முருகேசனை வெட்டிக் கொன்ற பின்பு அவருடைய தலையைத் தனியாக அறுத்து எடுத்தனர். அரிவாளிலிருந்தும் தலையிலிருந்தும் வழியும் ரத்தத்தை வெட்டுப்பட்டு இறந்து கிடந்தவர்களின் மீது தெளித்தனர். பின்பு அந்தத் தலையைக் கொஞ்ச தூரம் தள்ளியிருந்த கிணற்றுக்குள் வீசி எறிந்தனர். (‘நொறுக்கப்பட்ட மனிதர்கள்’, பக் – 149) இதனைப் பேருந்தின் இருக்கையின் மறைவில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தார் தலித் சமூகத்தைச் சேர்ந்த குமார். இதை அக்கொலைகாரக்கும்பல் பார்த்துவிட்டது. உடனே அவர் பேருந்தை விட்டு கீழே இறங்கி ஓடினார். அக்கும்பல் குமாரைத் துரத்தி கழுத்துப் பகுதியில் வெட்டியது. இதில் குமாரின் விரல் துண்டானது. இருந்தும் வெட்டுக்காயங்களுடன் அருகில் இருந்த வாழைத் தோப்பிற்குள் ஓடி ஒளிந்துகொண்டார்.

இக்கொலைச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களுள் கேஎன்ஆர் பேருந்தின் ஓட்டுநர் நாகராஜன் கூறும்போது, “மேலூரில் இருந்து 2.45 மணிக்குப் பஸ்சை திண்டுக்கலுக்கு ஓட்டிச் சென்றேன். அப்போது பஸ்சின் உள்ளேயும், மேற்கூரையிலும் 100 ஆட்கள் இருந்தார்கள். பஸ் எட்டிமங்கலம் என்ற இடத்திற்குச் சென்றபோது அலறல் சத்தம் கேட்டது. பஸ்சின் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த சிலரைச் சுற்றி வளைத்து ஒரு கும்பல் வெட்டிச் சாய்த்தது. இந்தச் சூழ்நிலையில் பஸ்சை நிறுத்தி விட்டுத் தப்பி ஓடினோம். இதற்கிடையில் பஸ்சில் பயணம் செய்த மற்ற பயணிகள் வயல்களில் தப்பிச் சென்றார்கள். இந்தச் சம்பவத்தில் பஸ்சின் கம்பிகளில் அரிவாள் வெட்டுச் சத்தம் கணீர் கணீர் என்று கேட்ட போது மிகவும் கோரமாக இருந்தது. இந்தச் சம்பவத்தைத் தடுக்க யாரும் முன்வரவில்லை. கொலைக் கும்பல் தப்பிச் சென்ற பிறகு பஸ்ஸில் காயமடைந்தவர்களை எடுத்துக்கொண்டு மேலூர் வந்து விட்டோம்” என்றார் (தினமலர் மதுரை-1.7.1997). பேருந்து, சாலை எங்கும் ரத்தம் தோய்ந்து தானியங்கள், கொய்யா, வாழைப்பழம் எனப் பொருட்கள் சிதறிக்கிடந்தன. அதுபோலவே சாலையிலும் வயல்வெளிகளிலும் வெட்டுப்பட்ட மனித உடல்கள் கிடந்தன. காயம்பட்டுத் தப்பித்து ஓடிய மக்கள் ஊருக்குச் சென்று தகவல்களைச் சொன்னவுடன் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களுமாய்க் கூடினர். வெட்டுப்பட்டு இறந்து கிடந்த ஒவ்வொரு உடலைச் சுற்றிலும் பெண்களும் ஆண்களும் குழந்தைகளுமாக அழுதுகொண்டிருந்தனர். அவர்களுடைய அழுகுரல் மிகக் கோரமாக அருகில் இருந்த மலைகளிலிருந்து எதிரொலித்தது.

அப்பொழுதுதான் வெட்டுப்பட்டவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது. தலையில்லாமல் கிடந்த கண்ணங்கருப்பன் மகன் முருகேசன் (32), தவிர கோடாங்கி மகன் மூக்கன் (32), சக்கையன் மகன் செல்லத்துரை (40), ஊமையன் மகன் சேவுகமூர்த்தி (30), கண்ணங்கருப்பன் மகன் ராஜா (22), மூக்கன் மகன் பூபதி (20) ஆகிய ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதுதவிர சக்கரைக்கருப்பன் மகன் கிருஷ்ணன் (40), முத்தன் மகன் குமார் (23), பெரியபுலியன் மகன் சின்னையா (35) ஆகிய மூவரும் காயம்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் முருகேசன் மேலவளவு ஊராட்சிமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் இரு பெண் குழந்தையுமாக மூன்று குழந்தைகள். தவிர அவரது மனைவி மணிமேகலை நிறைமாதக் கர்ப்பிணியாகவும் இருந்தார். அதுபோல இக்கொடூரச் சம்பவத்தில் இறந்த மூக்கன் மேலவளவு ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். செல்லத்துரையும் ஊமையனும் மேலவளவு ஊராட்சி துப்புரவுப் பணியாளர்களாகப் பணியாற்றுபவர்கள். அதுபோலவே உயிரிழந்த ராஜா முருகேசனின் உடன்பிறந்த தம்பி. மேலும் பூபதிக்குத் திருமணமாகி 20 நாட்களே ஆன புதுமாப்பிள்ளையாவர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலையானார்கள்.

கொலை நடந்த பிறகு சம்பவ இடத்தில் வெறும் 5 காவலர்களும் ஒரு இன்ஸ்பெக்டர் மட்டுமே காவலுக்கு நின்றிருந்தனர். மதியம் 3 மணிக்குப் படுகொலை நடந்திருந்த போதிலும் இரவு 9 மணி வரை உடல்கள் எடுக்கவில்லை. அங்கிருந்த போலீஸார் நேரம்கடந்து செல்வதை அறிந்து உடல்களை எடுக்க முற்பட்டனர். ஆனால் உறவினர்கள் மதுரை கலெக்டர் வராமல் உடலை எடுக்கவிடமாட்டோம் என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து 4 மணி நேரத்திற்குப் பிறகுதான் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகின்றனர். இவை எல்லாம் முடிய இரவு 10.30 மணியாகிவிட்டது. இதன்பிறகு சடலங்களைப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இப்படுகொலையைக் கண்டித்தும், அதிகாரிகள் அலட்சியமாக நடந்துகொள்வதைக் கண்டித்தும் மேலவளவு காந்திநகர் காலனி மக்கள் மேலூரில் பஸ் மறியலில் ஈடுபடுகின்றனர். அப்போது அருகில் உள்ள கடைகளை அடைக்கச்  சொல்லிக்கொண்டிருக்கும்போதே கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்குகின்றனர். மூங்கில் கம்புகள், கட்டைகள், சோடா பாட்டில்கள், கற்களைக்கொண்டு தாக்குதலில் ஈடுபடுகின்றனர். தாக்குதலுக்குப் பயந்து அருகிலிருந்த சோபியா ஸ்வீட் ஸ்டாலுக்குள் ஓடியவர்களை, “ஏன்டா பறநாய்களா உங்களுக்கு இவ்வளவு திமிரா” என்று விரட்டி அடிக்கின்றனர். ”பறக்கொத்தி மக்களா, இந்தக் பறக்கொத்தி மக்களக் கொல்லுங்கடா. இந்தப் பறப்பயங்க எங்க கடையிலயாட வந்து ஒளியிரீங்க. இத்தோடு செத்துத்தொலைஞ்சு போங்கடா” என்று சொல்லி தாக்குகின்றனர். அதே கும்பல் சோபியா ஸ்வீட் ஸ்டாலையும் அடித்து நொறுக்கியது. இதில் சபாபதி, பாண்டி, சின்னக்கருப்பன், சௌந்திர பாண்டியன் என்பவர்கள் படுகாயமடைகின்றனர். உடனே அவர்களை அருகில் உள்ள மேலூர் அரசு மருத்துவமனையில் பாண்டியை வெளி நோயாளிப் பிரிவிலும் சௌந்தரராஜனை தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கின்றனர். ஏற்கெனவே படுகொலை செய்யப்பட்ட 6 பேருடைய உடல்கள் இரவு பத்துமணியளவில் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டது. மதுரை பெரிய ஆஸ்பத்திரி முழுக்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது. கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் மேலவளவு காந்திநகர் காலனி மக்களும் கத்தி ஓலமிடுகின்றனர். இந்நிலையில் மதியம் 12.00 மணியளவில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. காவல்துறை மற்றும் அரசு சார்பில் 6 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் அங்கிருந்த மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர் பெறப்பட்ட உடல்களைக் காவல்துறையின் பாதுகாப்போடு தனி வண்டியிலும் மற்றவர்களை 6 வண்டிகளிலும் முன்னையும் பின்னையும் காவல்துறையினரின் வண்டிகள் செல்ல உடல்களை மேலவளவு காந்திநகர் காலனிக்குக் கொண்டு சென்றனர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட 6 உடல்களைக் காந்தி நகர் காலனியில் சாலையோரத்தில் இருந்த மந்தையில் ஒரே இடத்தில் 6 குழிகள் தோண்டி அடக்கம் செய்தனர்.

பின்னர் அவ்விடத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கக் குழுக்கள், மனித உரிமை அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், உறவினர்கள், குடும்பத்தினர் எனப் பலரும் மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் பாதுகாப்புக் காரணங்கள் என்று கூறி மேலூர், காரைக்குடி, ராஜபாளையம் போன்ற ஊர்களுக்குச் செல்கின்ற பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால் பெரியார் பேருந்து நிலையம், அண்ணா பேருந்து நிலையம், பழங்காநத்தம் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் என்று அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் மேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

மனித உரிமைக் கட்சித் தலைவர் எல்.இளையபெருமாள் தென்மாவட்டங்களில் நடைபெற்றுவரும் கலவரங்களைப் பார்வையிட விருதுநகருக்கு வந்த வேளையில் மேலவளவு படுகொலை நடந்திருக்கிறது. இச்செய்தியை அறிந்தவர் அங்கு செல்லும்போது அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் போன்ற பகுதிகளில் 10.07.1997 அன்று அப்பகுதி மக்கள் தன்னெழிச்சியாகச் சாலை மறியலில் ஈடுபடுகின்றனர். பல பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டன. சில பேருந்துகள் கல்லெறித் தாக்குதல்களால் சேதமடைந்தன. அப்பகுதி முழுவதும் கலவரம் வெடித்தது. இளையபெருமாள் கைதைக் கண்டித்து ஏராளமான மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளையும், தடியடியையும் நடத்தி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர். சாத்வீக முறையில் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களுக்கு இச்செயலானது மேலும் ஆத்திரத்தை உண்டு பண்ணியது. எனவே, மக்கள் கற்களைக் கொண்டு எதிர்த் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இந்தச் சூழலில் காவல்துறையினர் எவ்வித முன்னறிவிப்பும், எச்சரிக்கையும் செய்யாமல் துப்பாக்கிச்சூடு செய்கின்றனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஆயங்குடியைச் சேர்ந்த ஜெயராம் (50), கிருஷ்ணகுமார் (25) என்ற 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்கின்றனர். இதில் கிருஷ்ணக்குமாரைத் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசாரே அடித்தும், கழுத்தில் கால்வைத்து அழுத்தியும், உதைத்தும் கொலைசெய்கின்றனர். மேலும் பாலமுருகன், செந்தில், அருண்மொழித் தேவன் போன்ற பலர் படுகாயமடைகின்றனர் (‘தென்மாவட்ட கலவர அறிக்கை – 1997’, பக்கம் 57). இரண்டு பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இப்படுகொலையைத் தொடர்ந்து காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பேருந்துகள் ஓடவில்லை. கடைகள் அனைத்தும் அடைக்கப் பட்டிருந்தன. பள்ளிகளும், தனியார் நிறுவனங்களும் திறக்கப் படவில்லை. சிதம்பரம், கடலூர், நெய்வேலி, விருதாச்சலம் போன்ற பகுதிகளுக்கும் எந்தப் பேருந்துகளும் இயக்கப் படவில்லை. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (சைலேந்திரபாபு) இக்கலவரத்தில் வெட்டுப்பட்டார் என்ற வதந்தி அப்பகுதி முழுவதும் பரவியது. ஆனால், உண்மை அதுவல்ல. துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றோரை அப்புறப்படுத்தும் போது அவர்கள்மேல் வழிந்த ரத்தம் இவர் மேல் பட்டுவிட்டதால் அப்படிக் காணப்பட்டது. துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து ‘சிதம்பரம் நந்தனார் பள்ளி மாணவர்கள்’ சாலை மறியலில் ஈடுபட்டனர். அதுபோல மேலவளவு படுகொலை, காட்டுமன்னார்கோவில் துப்பாக்கிச் சூடு ஆகியவற்றில் பலியானவர்களுக்காக அப்பகுதி மக்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து துக்கம் அனுசரித்தனர். 03.07.1997அன்று மதியம் 2 மணிக்குத் துப்பாக்கிச் சூட்டில் படுகொலையான ஜெயராம், கிருஷ்ணகுமார் இருவரது உடல்களும் அவர்களின் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. இரண்டு பேரின் இறுதி ஊர்வலத்தில் மனித உரிமைக் கட்சியின் தலைவர் இளையபெருமாள், மாவட்டத் தலைவர் டி.கே.மூர்த்தி, துணைத் தலைவர் சங்கர், மாணவர் அணித்தலைவர் எம்.வினோபா உள்ளிட்ட ஏராளமானோர் ஊர்வலத்தில் கலந்துகொண்டு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றினர்.

30.06.1997 அன்று மேலவளவு படுகொலையைக் கண்டித்து மேலூரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது கற்கள், சோடாப்பாட்டில்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காயமடைந்த சபாபதி, ஆறுமுகம் மகன் சௌந்தரராஜன் ஆகியோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். இதில் சௌந்தரராஜன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என்று சொல்லப்பட்டது. ஆனால், சாலை மறியலில் ஈடுபட்டுத் தாக்குதல் நடந்த இடத்திலேயே சௌந்தரராஜன் உயிரிழந்திருக்கிறார். அவர் அப்போதே இறந்தார் என்று கூறினால் பலியானோர் எண்ணிக்கை 7 என்று அதிகரிப்பதோடு கடுமையான கலவரங்கள் ஏற்படும் என்று அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் மறைத்து விட்டனர். 06.07.1997 அன்று காலை இறந்துவிட்டார் என்று அரசு மருத்துவமனையில் சொல்லிவிட்டனர். சௌந்தரராஜன் டெய்லர் வேலை பார்த்து வந்தவர். அவருக்கு ஒரு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அவரது உடலை அன்று மாலை 5 மணி அளவில் மேலவளவிற்குக் கொண்டு செல்லப்பட்டு ஏற்கெனவே புதைக்கப்பட்ட ஆறு பேருடைய புதைகுழிக்கு அருகிலேயே ஏழாவது நபராக சௌந்தரராஜன் புதைக்கப்பட்டார்.

மேலவளவு ஊராட்சி மன்றத் தேர்தலை ஒட்டி 30.06.1997 அன்று ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட 6 பேரும், 03.07.1997 அன்று காட்டுமன்னார்கோவிலில் சாலை மறியலில் ஈடுபட்டதற்காக ஆயங்குடியைச் சேர்ந்த இருவர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கும், 06.07.1997 அன்று மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சௌந்தராஜனும் உயிரிழக்கின்றனர். இவ்வாறு மேலவளவு பஞ்சாயத்துத் தேர்தலையட்டி 9 பேரினைப் படுகொலை செய்தனர். இப்படி 9 உயிர்களைப் பலி வாங்கியப் பின்னர் 21.11.1997 அன்று மேலவளவு பஞ்சாயத்திற்கு மறுதேர்தல் நடத்தப்படுகிறது. 23..11.1997 அன்று ஊராட்சி மன்றத் தலைவராக மேலவளவு காந்திநகரைச் சேர்ந்த தலித் சமூகத்தவரான ராஜா தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!