தலித் வரலாற்று மாதம் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இந்திய அளவில் கொண்டாடப்படுகிறது. தமிழ்ச் சூழலில் தலித்துகளின் எழுத்துப்பூர்வமான வரலாறு என்று எடுத்துக்கொண்டால் நூற்றைம்பது வருடங்களுக்கும் மேலாகிறது. அரசியல் தளத்திலும் அறிவார்ந்த விவாதத்திலும் தலித்துகளின் பங்களிப்புக் குறித்த நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இவை, ஆவணக் காப்பகச் சான்றுகளின் அடிப்படையிலானவை. கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் வரலாற்றை எழுதுவது காலனியக் காலத்திற்குப் பிந்தைய முறைமை. இதிலிருந்து விலகி தலித் வரலாறு குறித்த ஆர்வமும் பிரக்ஞையும் ஆய்வாளர்களுக்கு இங்கில்லை என்பதே யதார்த்தம். இத்தகைய சூழலில்தான் தலித் வரலாற்று மாதம் என்கிற தனி வகைமை தேவைப்படுகிறது. அது பொதுச் சமூகத்திலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு புதியதோர் அத்தியாயத்தைப் படைப்பதற்கான ஏற்பாடல்ல. மாறாக, பலராலும் புறக்கணிக்கப்பட்ட வரலாற்றுக்கென்று பிரமாண்டத் தளத்தை அமைத்துக் கொடுப்பதாகும்.
‘தலித் பிரச்சினைகளைப் பேசும் சில முற்போக்குப் பத்திரிகைகள் இருந்தாலும் அவர்களால் அதற்கெனச் சில பத்திகளை மட்டுமே ஒதுக்க முடிகிறது. அவை போதுமானவையாக இல்லை’ என்று மூக்நாயக் பத்திரிகையில் பாபாசாகேப் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். அண்ணலின் கூற்றுக்கு ஏற்ப தலித் தொடர்பான உரையாடல்களுக்கு இன்னமும் போதுமான தளம் அமையவில்லை என்பதே யதார்த்தம். இத்தகைய சூழலில் அரசியல் ரீதியான உரையாடல் மூலமாகவும் தலித் விமர்சனங்கள் மூலமாகவும் நாம் கணிசமான முன்னேற்றத்தை அடைந்திருக்கிறோம் என்பதை மறுப்பதற்கில்லை. அதேவேளையில் தலித்துகளின் வரலாறு என்பது வெறும் அரசியல் கோரிக்கைகளாகவும் நின்று விடக்கூடாது. மறுக்கப்பட்ட உரிமைகளை அரசியலமைப்புச் சட்டத்தின் துணைகொண்டு போராடிப் பெறும் வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களாகத் தலித்துகளை முன்னிறுத்துவதில் இங்கு யாருக்கும் சிக்கலில்லை. ஆனால், அவை மட்டுமே தலித் வரலாறு அல்ல.
இந்தியச் சமூகத்தில் தலித்துகள் பண்பாட்டு ரீதியாகப் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியவர்கள். அதிகாரத்திலிருந்த வைதீக நம்பிக்கைகளை எதிர்ப்பவர்களாகவும் புறந்தள்ளுபவர்களாகவும் தலித்துகள் இருந்திருக்கின்றனர். நிலத்தில் ஆரம்பித்து அடிப்படைத் தேவையான உணவு வரை இங்கு புகுத்தப்பட்ட ஆதிக்கங்களுக்கு எதிராகத் தலித்துகள் கிளர்ந்தெழுந்த நிகழ்வுகள் வரலாறு நெடுகிலும் காணக்கிடைக்கின்றன. அறத்தின் அடிப்படையில் இயங்கும் சமூகத்திற்கும் நம்பிக்கைகளின் அடிப்படையில் இயங்கும் சமூகத்திற்குமான வரலாறுதான் இந்திய வரலாறு என்று பாபாசாகேப் அம்பேத்கர் நிறுவுகிறார். அவையே பௌத்தம் ஜ் பார்ப்பனியம் என்கிற இருமை கட்டமைப்பாகிறது. இவை இரண்டிலும் இழையோடியிருக்கும் பண்பாட்டு அரசியலை அயோத்திதாசப் பண்டிதர் கட்டுடைக்கிறார். இத்தகைய பார்வைகளிலிருந்து வரலாற்றை நோக்கும்போது தலித்துகள் இங்கு பெரும் பண்பாட்டுப் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார்கள். நாம் மேலே சொன்னதைப்போல உரிமைக்கோரல் அரசியலோடு இந்தப் பண்பாட்டு அரசியலையும் உள்ளடக்கி தலித் வரலாற்றை நேர் செய்ய வேண்டியிருக்கிறது. தலித் உரிமைகள் என்பது பெறப்படுவதல்ல ; மீட்கப்படுவதற்கான தொடர்ப் போராட்டம் என்கிற வரலாறே நம் காலத்தின் தேவை.
அரசியல் என்கிற வார்த்தையிலேயே நாம் பேச முனையும் யாவும் அடக்கம். ஆனால், அரசியல் என்பது தேர்தல் அரசியலாகச் சுருங்கிப் போயிருக்கும் காலத்தில் நாம் பண்பாட்டு அரசியலுக்குத் தனிக் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு காலச் சூழலிலும் பண்பாட்டு அரசியலின் முக்கியத்துவம் குறித்து நாம் பேசி வருகிறோமென்றாலும் அவ்வப்போது அரசியலின் புறவயச் சூழலால் அவை தேக்கமடையவும் செய்கிறது. அரசியல் மற்றும் கலைச் செயல்பாடுகளில் தலித்துகளுக்கு நீண்ட நெடியதொரு பண்பாட்டு வெளி இருப்பதை இனங்கண்டு அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு அடையாளம் காட்ட வேண்டிய பெரும்பணி நமக்கிருக்கிறது. வரலாற்றில் தன்னைத் தேடும் ஒவ்வொரு தலித்தும் ஆற்றல்மிக்க தன் வரலாற்றை இனம்காணும்போது கிடைக்கும் உளவியல் பலம் வேறு எதைக் கொண்டும் ஈடு செய்ய இயலாதது. பாடுகளும் அழுகையும் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடி மாண்டு போவது மட்டுமே தன் வரலாறு என்று நம்பிக் கொண்டிருக்கும் சமூகத்திற்கு விடுபட்ட பக்கங்களை நிரப்புவதற்கான ஏற்பாடே தலித் வரலாற்று மாதம்.
வரலாறு என்பது பெரும்பான்மையோரின் விருப்பமாக இருக்கும் இந்தியாவில், மறைக்கப்பட்ட அல்லது இவையெல்லாம் வரலாறே கிடையாது என்று ஒதுக்கப்பட்ட கோப்புகளை, கபளீகரம் செய்யப்பட்ட பண்பாட்டு விழுமியங்களை, புறக்கணிக்கப்பட்ட தலைவர்களை, ஏளனம் செய்யப்பட்ட வாழ்வியலைச் சமகால மக்கள் முன் நிறுத்தி அந்த வரலாற்றைப் பொதுமைப்படுத்த விழைவோம்.