இந்தியாவில் நில உரிமை பற்றிய ஆதிக்க உரையாடல்கள் வரலாற்றுச் சான்றுகள் வழி உருவாகாமல், புராண ஒழுக்க விதிகளின் மீது கட்டமைக்கப்படுகின்றன. இவ்வுரையாடல்கள் நிலத்தைப் பொருளாதார வளமாக ஆய்வு செய்யாது, ஒரு நெறி வளமாக (moral resource) மடை மாற்றுகின்றன. அதன் மூலம், நிலம் யாரிடம் இருக்க வேண்டும் என்பது உழைப்பு, உற்பத்தி, அல்லது சமத்துவம் தீர்மானிக்காமல்; தகுதி, புனிதம், மரபு, ஊர்க் கட்டுப்பாடு போன்ற அபத்த கருத்துகள் தீர்மானிக்கின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் பெருங்கதையாடல்கள் (grand narratives), நில அபகரிப்பை அரசியல் குற்றமாகப் பாவிக்காமல்; சமூக ஒழுங்குகளைச் சித்திரிக்கும் கருவிகளாகச் செயல்படுத்தப்படுகின்றன.
இந்தப் பெருங்கதையாடல்களின் அடிப்படை நோக்கம், வரலாற்றைப் புராணமாக மாற்றுவது. உண்மை வரலாறு அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும்; புராணம் இக்கதைகளின் வழியே சமத்துவமின்மையை இயல்பாக்கும். நில உரிமை விவகாரத்தில் புராணங்கள் செய்த முக்கியமான வேலை, “நிலம் எப்போது, எவ்வாறு, யாரால் குவிக்கப்பட்டது?” என்ற கேள்வியை மறைத்து, “எப்போதும் இப்படித்தான்” என்ற காலமற்ற ஒழுங்காக (Unbound Nature Plan) மாற்றியதுதான். இதன் விளைவாக, தலித் நிலமின்மை ஒரு வரலாற்று அரசியல் விளைவு உரையாடலாக முன்னெடுக்கப்படாமல்; விதி அல்லது மரபாகக் காட்டப்படுகிறது.
முதல் பெருங்கதையாடல். “வேத காலத்தில் நிலம் சமமாக இருந்தது” என்பதாகும். இந்தக் கதை, சமகால நில அநீதிகளை ஒரு வரலாற்றுச் சிதைவாகக் காட்டுகிறது. ஆனால், பிந்தைய காலங்களில் உருவான நிலதான (land grant) அமைப்புகளும் அரசியல் – மத அதிகாரமும் இணைந்து நிலக் குவிப்பை உருவாக்கின என்பதை வரலாற்றாசிரியர்கள் தெளிவாகக் காட்டுகின்றனர். நிலம் தானமாக வழங்கப்பட்டது என்பது சமத்துவத்தின் அடையாளம் அல்ல;
அது விசுவாசம் மற்றும் மேலாதிக்கத்திற்கான பொற்கிழி. இந்த அமைப்பில் தலித் சமூகங்கள் உழைப்பாளர்களாக இருந்தன; உரிமை பெறும் குடிகளாக இல்லை.
இரண்டாவது பெருங்கதையாடல், “சாதி என்பது உழைப்பின் இயற்கை பிரிவு” என்பதாகும். இந்தக் கூற்று, உழைப்புக்கும் உரிமைக்கும் இடையிலான அடிப்படையை மறைக்கிறது, மறுக்கிறது. “சாதி என்பது உழைப்பின் பிரிவு அல்ல; உழைப்பாளர்களின் பிரிவே” என்ற அம்பேத்ரின் கூற்று, சமூக விமர்சனம் மட்டும் அல்ல; அது இந்திய விவசாய அரசியலின் மையக் கோட்பாடு. உழைத்தவர்கள் நிலம் பெறவில்லை; நிலம் உள்ளவர்கள் உழைக்க வேண்டியதில்லை. இதை “இயற்கை ஒழுங்கு” என மாற்றுவதே இந்தப் பெருங்கதையாடலின் மைய அரசியல்.
மூன்றாவது பெருங்கதையாடல், “இந்திய கிராமம் ஒரு சுயாட்சி ஜனநாயக அலகு” என்பதாகும். இந்தக் கற்பனை, தேசியவாதத்தாலும் காலனித்துவ நிர்வாகத்தாலும் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால், கிராமம் என்பது சமத்துவத்தின் அலகு அல்ல; அது சாதி அடுக்கமைப்பின் மிகச் சிறிய செயல்பாட்டு அலகு. நிலம், நீர், கோயில், குளம், புறம்போக்கு, பொதுச் சொத்துகள் அனைத்தும் சாதி அடிப்படையில் கட்டுப்படுத்தப்பட்டன. தலித் சமூகங்கள் உற்பத்தியில் மையமாக இருந்தபோதும், வளங்களைப் பகிர்ந்துகொள்ள அல்லது பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. எனவே “கிராம ஜனநாயகம்” என்ற கதை, உண்மையில் சாதி அதிகாரத்தின் மைக்ரோ – ஜனநாயகம்.
நான்காவது பெருங்கதையாடல், “பிராமணர் நிலவுடைமைக்காரர்கள் அல்ல” என்பதாகும். இதை மிக நுணுக்கமான சமூக நினைவகமாகக் (Social Memory) கட்டமைத்தனர். ஏனெனில், இது “நேரடி உழைப்பு இல்லை” என்ற உண்மையை, “அதிகாரம் இல்லை” என்ற பொய்யாக மாற்றுகிறது. கோயில் நிலங்கள், மத நிறுவன நிலங்கள், இடைநிலை உரிமைகள் (intermediary rights) வழியாக, உயர் சாதிகள் நில உற்பத்தியின் மீது கட்டுப்பாடு செலுத்தினர். இந்நிலங்களில் உழைத்தவர்கள் பெரும்பாலும் தலித் சமூகங்களே. ஆகவே, “நிலவுடைமைக்காரர்கள் அல்ல” என்பது உரிமையை மறைக்கும் மொழி சூழ்ச்சி.
ஐந்தாவது மற்றும் மிக ஆபத்தான பெருங்கதையாடல், “நிலம் ஒரு புனித வளம்; அதை மறுபங்கீடு செய்வது சமூக ஒழுங்குக்கு எதிரானது” என்பதாகும். நிலம் புனிதம் என மாற்றப்படும் தருணத்தில், நில மறுசீரமைப்பு அதர்மமாக மாறுகிறது. அம்பேத்கரின் பார்வையில், நிலம் புனிதமல்ல; அது அரசியல் வளம். அது சமமாகப் பகிரப்படாத வரை, ஜனநாயகம் வெறும் மேடைக் காட்சியாகவே இருக்கும்.
இந்தப் பெருங்கதையாடல்கள் இதோடு நிற்கவில்லை. அவை உணவு அரசியலுடன் நேரடியாக இணைகின்றன. இந்தியாவில் food politics பெரும்பாலும் கலாச்சாரம் அல்லது ஊட்டச்சத்து என்ற மொழியில் பேசப்படுகிறது. ஆனால், உணவு என்பது நில அரசியலின் உடனடி, நேரடி விளைவு. யார் நிலத்தைக் கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்களே யார் உணவை அணுக முடியும், யார் எவ்வளவு வாங்க, சேமிக்க முடியும், யார் எந்த உணவை உண்ணலாம் என்பதையும் நிர்ணயிக்கிறார்கள்.
உணவில் அணுகும் உரிமை (Accessibility) என்பது உணவுப் பண்டங்கள் கடையில் கிடைப்பது அல்ல; அதை அடைவதற்கான சமூக – பொருளாதாரப் பாதைகள் திறந்திருப்பது. நிலமில்லாத தலித் சமூகங்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படைகளை அணுகுவது எப்போதும் நிபந்தனைக்குட்பட்டதாகவே இருந்தது. அவர்கள் உற்பத்தியில் பங்கேற்கிறார்கள்; ஆனால் உற்பத்தியின் மீது எவ்வகை உரிமையும் இல்லை. இதனால் உணவு, தலித் மக்களின் உரிமையாக அல்லாமல் சலுகையாக மாறுகிறது.
வாங்கும் திறன் (Affordability) என்பது சந்தை விலையால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. நிலக் குவிப்பு, பொதுச் சொத்துகள், விவசாய உழைப்பின் மதிப்பிழப்பு ஆகியவை உணவை விற்பனைப் பண்டமாக மாற்றுகின்றன. நில உரிமை இல்லாத சமூகங்கள் சந்தையை அல்லது சலுகையை முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றன. உணவு விலை உயர்வுகள் “இயற்கை” எனத் தோற்றமளிக்கப்படுகின்றன; ஆனால் அவை அநீதியான நிலப் பகிர்வின் நேரடி விளைவு.
சமத்துவம் (Equity) என்பது எல்லோருக்கும் ஒரே உணவு கிடைப்பது அல்ல; எல்லோருக்கும் உணவுத் தேர்வு, உணவுப் பாதுகாப்பு, உணவுக் கண்ணியம் (food dignity) கிடைப்பதாகும். இந்தியாவில் உணவுச் சமத்துவம் இல்லை; ஏனெனில் நிலச் சமத்துவம் இல்லை. யார் என்ன உண்ணலாம், எங்கு உண்ணலாம், யாருடன் உண்ணலாம் என்பதையும் சாதி ஒழுக்கமே தீர்மானிக்கிறது. ஆகவே, உணவில் சமத்துவம் என்பது நலவாழ்வு கொள்கை முடிவுகள் (welfare policy) அல்ல; அது அதிகார குவியல்களை மறுசீரமைக்கும் (Power Deconstruct and Restructring) அரசியல் செயற்பாடு.
இந்த மூன்றும் (accessibility, affordability, equity) ஒன்றாகச் சேரும் இடத்தில்தான் un-democratic drama of landஐ கவனிக்க முடியும். நிலம் பற்றிய அடிப்படை ஜனநாயகக் கேள்விகள் தொடர்ச்சியாக மழுங்கடிக்கப்பட்டு, வழக்குகள், நிர்வாகச் சிக்கல்கள், சமூகப் பதற்றம், பண்பாட்டு உணர்வு போன்ற சப்பைக்கட்டுகள் கொண்டு நீர்த்துப் போகச் செய்யப்படுகின்றன. ஆனால், இந்த நாடகங்களில் ஒரு கேள்வி மட்டும் தொடர்கிறது, நிலம் வெகுசிலரிடம் மட்டும் ஏன் குவிந்தது?
நில மறுசீரமைப்பு கோரப்படும்போதெல்லாம், விவசாய உற்பத்தி பாதிக்கப்படும், ஊர் ஒழுங்கு குலையும், பெரும்பான்மை உணர்வு பாதிக்கப்படும் என்ற அரசியல் சொல்லாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதே மொழி உணவு அரசியலிலும் செயல்படுகிறது. மாட்டிறைச்சி, உணவுத் தேர்வு, ஊட்டச்சத்து உரிமை (Nutritional Right) ஆகியவை ஜனநாயக உரிமைகளாக மாறாமல்; கலவர சாத்தியங்களாகச் சித்திரிக்கப்படுகின்றன. இவ்வாறு நிலமும் உணவும் தீர்க்க வேண்டிய அரசியல் பிரச்சினைகளாக முன்னெடுக்கப்படாமல்; நிர்வகிக்க வேண்டிய ஒழுக்கப் பிரச்சினைகளாக மாற்றப்படுகின்றன. இவையனைத்தும் அதிகாரத்தைப் பாதுகாக்கும் அச்சுறுத்தும் மொழிகள்.
இந்த இடத்தில்தான் பாபாசாகேப் அம்பேத்கரின் எச்சரிக்கை முழு அர்த்தம் பெறுகிறது: “பொருளாதார ஜனநாயகம் இல்லாமல் அரசியல் ஜனநாயகம் ஒரு நாடகமே.” நிலமும் உணவும் சமமாகப் பகிரப்படாத சமூகத்தில், வாக்குரிமைச் சமத்துவம் வாழ்வுரிமைச் சமத்துவமாக மாறாது. ஆகவே, நிலம் பற்றிய சாதி மத பெருங்கதையாடல்களை உடைப்பது, உணவு ஜனநாயகத்தின் முதல் படி. நிலத்தைப் புராணத்திலிருந்து மீட்டெடுப்பது மட்டுமல்ல; உணவை ஒழுக்க அரசியலிலிருந்து, ஜனநாயக உரிமையாக மாற்றுவதும் மிக முக்கியமான அரசியல் போராட்டம்.
இந்திய ஜனநாயகம் அரசியல் அமைப்பாக மட்டுமே உயிரோடிருக்கிறது. பொருளாதார – சமூக மாற்றத்திற்கான அமைப்பாக இன்னும் மாறவில்லை. இதற்கான அடிப்படைக் காரணம், நிலமும் உணவும் ஜனநாயகக் கேள்விகளாக மாற்றப்படாததே. தேர்தல்கள், சட்டங்கள், அரசியலமைப்பு ஆகியவை சமத்துவத்தை அறிவிக்கின்றன; ஆனால் நில உரிமையும் உணவுப் பாதுகாப்பும் சமமாகப் பகிரப்படாத வரை, அந்த அறிவிப்புகள் வெற்றுக் கூச்சல்கள் மட்டுமே. இதன் விளைவாக ஜனநாயகம், சமூக மாற்றத்திற்கான இயங்கியலாகச் செயல்படாமல் வெற்றுச் சடங்காகவே நிகழ்கிறது.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இதை மிகத் தெளிவாக உணர்ந்து, “The problem of the Untouchables is fundamentally the problem of landlessness” என்ற அவரது கூற்று, தலித் சமூகத்தின் நிலையை விவரிக்கும் வாக்கியம் மட்டும் அல்ல; இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைப் பலவீனத்தைச் சுட்டிக்காட்டும் அரசியல் அணுகுமுறை. நிலமில்லாத சமூகம் உணவு உற்பத்தியின் மீதான கட்டுப்பாட்டைப் பெற முடியாது; உணவு உற்பத்தியின் மீது கட்டுப்பாடு இல்லாத சமூகம் உணவு பாதுகாப்பையும் மரியாதையையும் பெற முடியாது. ஆகவே, நிலமின்மை என்பது பட்டினிக்கான மூலக் காரணம், பட்டினி என்பது ஜனநாயகத்தின் நேரடித் தோல்வி.
பாபாசாகேப் அம்பேத்கர் இதை இன்னும் கூர்மையாகச் சுட்டிக்காட்டுகிறார், “A hungry man is not a free man.” உணவு அரசியலை நலவாழ்வு (welfare) விவாதத்திலிருந்து வெளியே கொண்டுவந்து, அதைச் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் மையக் கேள்வியாக மாற்றுகிறது. பசியுடன் வாழும் மனிதன் வாக்களிக்கலாம்; ஆனால் அவர் அரசியல் விடுதலை பெற்ற குடிமகனாக வாழ முடியாது. உணவுப் பாதுகாப்பு இல்லாத சமூகத்தில், வாக்குரிமை ஒரு சின்னமாக மட்டுமே இருக்கும்; அது அதிகாரத்தை உண்மையில் மாற்றாது. இந்த நிலைமையை அம்பேத்கர் ஒருவாக்கியத்தில் சுருக்கினார்: “The principle of one man one vote must be accompanied by the principle of one man one value.” வாக்குரிமைச் சமத்துவம், நிலமும் உணவும் சமமாகப் பகிரப்படாத வரை, வாழ்வுரிமை சமத்துவமாக மாறாது. Redistribution இல்லாத ஜனநாயகம், உண்மையில் ஒரு சடங்கு ஜனநாயகம். அது அதிகாரத்தைத் தேர்ந்தெடுக்கிறது; ஆனால் வளங்களை மறுவிநியோகிக்க மறுக்கிறது.
வேளாண் நிலம் பற்றிய அரசியல், உணவு அரசியல் ஆகியவை இரண்டு தனித்தனி விவாதங்கள் அல்ல. அவை ஜனநாயகச் சோதனையின் இரண்டு முகங்கள். நிலத்தை ஜனநாயகமாக மாற்றாமல், உணவை ஜனநாயகமாக மாற்ற முடியாது; உணவை ஜனநாயகமாக மாற்றாமல், குடிமக்களின் சுதந்திரத்தை உறுதி செய்ய முடியாது. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளும் தருணத்தில்தான், இந்திய ஜனநாயகம் உண்மையான விடுதலை நோக்கி நகரத் தொடங்கும்.
l yourbasky@gmail.com




