இந்தியா தன்னுடைய 75ஆவது சுதந்திர தினத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. அதற்குப் பிறகு இந்தியா பல துறை சார்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்குத் திட்டமிட்டு வந்திருக்கிறது. எனினும் இந்திய அடித்தளச் சமூகங்களின் அதிகாரம்தான் சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்கும் என்பதை முன்னோடிகள் பற்பல வார்த்தைகளில் வெளிப்படுத்தி வந்துள்ளனர். ஆனால், இந்தியா தன்னுடைய ஐம்பதாவது பொன்விழா ஆண்டில்தான் குடியரசுத் தலைவராக ஒரு தலித்தைத் தேர்வு செய்துகொள்ள முடிந்தது. இன்னும் இந்தியப் பிரதமராக ஒரு தலித் வர முடியாத நிலைதான் இருக்கிறது. குடியரசுத் தலைவராகத் தலித் ஒருவர் வந்ததை இந்தியாவின் சாதனையாகக் கொண்டாடிய தருணத்தில்தான் தமிழகத்தில் மேலவளவில் பஞ்சாயத்துத் தலைவரானதற்காக ஏழு தலித்துகள் வெட்டிப் படுகொல்லப்பட்டனர். இதையட்டி சில தலித் அமைப்புகள் அப்போது சுதந்திர தினத்தையே கூடப் புறக்கணித்தன.
புற அளவில் தலித்துகளை அதிகாரத்திற்குக் கொணர முடிந்து விட்டாலும் உள்ளார்ந்த அளவில் அவர்களை ஏற்கும் அளவிற்கு இந்தியச் சமூகம் மாறவில்லை என்பதைத் தெரிந்துகொள்வதற்கான சான்று போல மேலவளவு சம்பவம் அமைந்துவிட்டது. இது இந்தியாவின் முகத்தில் அறைந்த எதார்த்தம். பொன்விழா கொண்டாடப்பட்ட நேரத்திலிருந்த இத்தகைய நிலை 75ஆவது ஆண்டு சுதந்திர விழா கொண்டாடப்பட்ட தருணத்திலும் கூட மாறிவிடவில்லை. சில மாற்றங்களோடு வேறு வடிவில் சாதியம் செயற்படுவதையே பார்க்க முடிகிறது.
அண்மையில் கிராமப்புற ஊராட்சிகளில் நிலவும் தீண்டாமை வடிவங்கள் குறித்த கள ஆய்வு அறிக்கையன்றைத் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வெளியிட்டிருக்கிறது. அதில் பல அதிர்ச்சியளிக்கும் எதார்த்தங்கள் சொல்லப் பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் 24 மாவட்டங்களில் 386 ஊராட்சிகளில், பயிற்சியளிக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களைக் கொண்டு கள ஆய்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் கிராம ஊராட்சித் தலைவர்களில் சிலர் சாதியப் பாகுபாடுகளின் காரணமாகத் தேசியக் கொடியை ஏற்றிட முடியவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. தலைவர்களில் சிலர் தரையில் அமர வைக்கப்பட்டிருக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எடுத்தவாய் நத்தம் கிராமத்தில் பட்டியலினத் தலைவர் சுதா தேசியக் கொடியை ஏற்றமுடியாத சூழ்நிலை உள்ளதாகப் புகாரளித்ததால், சின்னசேலம் வட்டாட்சியர் சமாதானக் கூட்டம் நடத்தி, பெற்றோர் ஆசிரியர்க் கழகத்தின் தலைவர் தேசியக் கொடியை ஏற்றுவார் என அறிவித்துள்ளார். 42 ஊராட்சிகளில் பட்டியலினத்தலைவர் பெயரைக்கூட பெயர்ப் பலகையில் எழுத முடியாமல் இருக்கின்றனர். சுதந்திர தினம், குடியரசுத் தினங்களில் மிரட்டலோ, பாகுபாடோ இல்லாமல் தேசியக்கொடி ஏற்றுகிற ஜனநாயக உரிமையை உறுதி செய்திட வேண்டிய நிலைதான் இன்னும் இருக்கிறது.
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் பயன்படுத்தும் முறைமைகள் குறித்தும் அவர்களின் கடமைகள், உரிமைகள் குறித்தும் தலைவர்களுக்குப் பயிற்சியளிக்காமல் இருக்கின்றனர். ஊராட்சி நிர்வாகம் செய்வதற்கு ஒத்துழைப்பு தர மறுக்கிற அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. பெண்கள் என்ற முறையில் இழைக்கப்படும் பாகுபாடுகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வதில்லை. தாக்குதல் நடத்துபவர் மீதும், இழிவாகப் பேசுவோர் மீதும், கட்டாயப்படுத்தி காசோலையில் கையப்பம்மிடச் சொல்வோர் மீதும் காசோலை மற்றும் பதிவேடுகளை ஒப்படைக்காமல் இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான முகாந்திரங்கள் இல்லாமல் இருக்கின்றன.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசினால் அமைக்கப் பட்டுள்ள எஸ்.சி, எஸ்.டி ஆணையத்திற்குப் புகார் தரும் சூழலோ, விழிப்புணர்வோ இல்லாமல் இருக்கின்றன. இதுபோன்ற செயல்களில் தானாக நடவடிக்கை எடுக்கும் சூழலுமில்லை. அதேபோல தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதிருப்பதாகத் தேசியக் குற்ற ஆவண மையத்தின் 2021ஆம் ஆண்டு அறிக்கை கூறியிருக்கிறது. 2019, 2020 ஆண்டுகளைக் காட்டிலும் 2021ஆம் ஆண்டு வன்முறைகள் அதிகரித்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இந்திய அளவிலான தலித் படுகொலைகளில் 2020ஆம் ஆண்டு ஐந்தாவது இடத்திலிருந்த தமிழ்நாடு 2021ஆம் ஆண்டில் ஏழாவது இடத்திற்கு நகர்ந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல தலித்துகளுக்கெதிரான வன்கொடுமை வழக்குகளை விசாரிப்பதில் தமிழகக் காவல்துறை சுணக்கமாக இருப்பதாகவும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. 2020ஆம் ஆண்டைக் காட்டிலும் 2021ஆம் ஆண்டில் கூடுதலான வழக்குகள் விசாரணையின்றி இருப்பதாகக் கூறியுள்ளது.
மொத்தத்தில் தலித்துகள் மீதான வன்முறைகள் தொடர்வதும், உரிய நடவடிக்கைகள் எடுக்க முடியாமல் இருப்பதும் நீடிக்கின்றன. ஒருவகையில் இவை புள்ளி விவரங்கள். கவனத்திற்கு வந்தவை மட்டுமே புள்ளி விவரத்திற்குள் அடங்கும். புறத் தாக்குதல்களும், புற அவமானங்களும் மட்டுமே வன்முறைகளாகப் பார்க்கப்படுகின்றன. கவனத்திற்கு வராத தாக்குதல்களும், கண்ணுக்குத் தெரியாத வன்முறைகளும் புள்ளிவிவரமாவதில்லை. அந்த வகையில் புள்ளி விவரங்களைத் தாண்டி பார்த்தால் தலித்துகள் மீதான வன்கொடுமையின் அளவும் எண்ணிக்கையும் நீளும். எனவே, சாதியப் பிரச்சினைகளைப் புள்ளிவிவரமாகப் பார்க்காமல் சீரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.