உள்ளூர் பொருளாதாரத்தில் தலித்துகளின் இடம்

விழுப்புரம் நகரத்தை முன்வைத்து ஒரு மீளாய்வு - வாசுகி பாஸ்கர்

ஒரு கிராமத்தையோ வட்டாரத்தையோ முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட சமூக நிலையையோ காலக்கட்டத்தையோ ஆராய்வது ஆங்கிலக் கல்வி புலத்தில் நடந்திருக்கிறது. வெளிநாட்டவர்களான கத்லீன்கவ்வும் ஆன்திரே பேடெலும் தமிழகத்தின் தஞ்சை வட்டார கிராமங்களை அடிப்படையாகக் கொண்டு சாதி, வர்க்கம், நிலம் ஆகியவற்றுக்கு இடையிலான உறவை ஆராய்ந்து எழுதி இருக்கிறார்களெனில்,. உள்ளுரர்காரர்களான நாம் அதைவிட நுட்பமாகச் செய்திருக்க முடியும். ஆனால் நம்மிடமிருந்து அத்தகைய ஆய்வுகள் பிறக்கவில்லை. அந்த அளவிற்கு செய்ய முடியாவிட்டாலும் சிறு தொடக்க வரைபடமாக, விழுப்புரம் நகரத்தை முன்வைத்து தலித்துகளின் சமகால பொருளாதார இருப்பை பேசிப்பார்ப்பது இக்கட்டுரையின் நோக்கம்.

அம்பேத்கர் மறைந்து 64 ஆண்டுகள் நிறைவுகின்றன. தான் இழுத்து வந்த தேரை முன்னோக்கிக் கொண்டுச்செல்லாவிட்டாலும் பின்னோக்கி இழுத்துவிட வேண்டாமென்னும் அவரின் புகழ்பெற்ற கூற்று தலித்துகளையும் தலித் குரல்களையும் நெறிப்பதற்கான ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமூகநீதி, சமத்துவம், சமூக விடுதலை போன்ற உரையாடல்கள் என்னவாக பேசப்பட்டு தற்போது எதுவாக உருமாறி நிற்கிறது என்பதை தலைகீழ் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. அதில் முக்கியமானது தலித்துகளின் பொருளாதார விடுதலை. இந்தியாவைப் போன்றொரு சாதியச்சமூகத்தில் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார விடுதலையென்பது ஒன்றோடொன்று தொடர்புடையது என்னும் அம்பேத்கரின் கோட்பாடுகள் நிறுவப்பட்டே எழுபதாண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால் இன்றைய நிலையில் கல்வியும் வேலைவாய்ப்பும் பெற்ற ஒருவனது உழைப்பில் கிடைக்கும் ஊதியமே பொருளாதார விடுதலை என்று பொருள் கொள்ளப்படுகிறது. இந்த மனநிலையை ஊடுருவிப் பார்த்தால் தலித் ஒருவனது முந்தைய சமூகநிலையைகாட்டிலும் நிகழ்காலத்தில் சாத்தியமாகியிருக்கும் மாற்றம் ஒப்பீட்டளவில் தேவலாம் என்பது கருணை அடிப்படையிலானது. உழைப்புக்கான ஊதியம் எப்படி பொருளாதாரப் பங்கீடாக இருக்க முடியுமென்னும் கேள்வி எழுப்பப்படுவதில்லை. இந்தக் கேள்வியை முன்வைத்து தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் தொழில், நிலம் மற்றும் பொருளாதாரத்தில் தலித்துகளின் பங்கீடு பற்றிய ஒரு நெடிய ஆய்வு மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தின் நில அமைப்பு, வணிக அதிகாரம், வரலாறு மற்றும் தலித் மக்களின் நிலை குறித்து ஆராயும்போது புதியச் சித்திரம் கிடைக்கிறது. வணிகமும் பொருளாதாரமும் சாதியாக இயங்குவதால் நன்மை பெறும் சாதி இந்துக்களின் குற்றவுணர்வற்ற மௌனத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது, ஆனால் இங்கிருக்கக்கூடிய தலித் இயக்கங்களுக்கும் – தலித் செயற்பாட்டாளர்களுக்கும் – அறிவுஜீவிகளுக்கும் கூட இது பற்றி எந்த அழுத்தமான கேள்விகளும் இல்லை என்பதுதான் ஆச்சரியம். தலித் மக்களும் இதுவே நடைமுறையென்று வாழ்ந்துகொண்டிருப்பதும் துயரம். தலித் மக்களின் பொருளாதாரச் சிக்கல்கள் கோரிக்கைகளாகவும் தற்காலிக நிவாரணங்களாகவும் தன்னிறைவு பெறுகிறது. அம்பேத்கரின் தேரை முன்நகர்த்தப் பிரயாசப்படுகிறவர்கள் நியாயமாக பேசுபொருளாக்க வேண்டியது இதைத்தான்.

 

விழுப்புரம் என்னும் நகரம்

விழுப்புரம், தனி மாவட்டமாக அறிவிக்கப்படுவதற்கு முன் தென்னாற்காடு பகுதியின் முக்கிய நகர்ப் பகுதியாகவும் தென் மாவட்டங்களையும் வட மாவட்டங்களையும் இணைக்கும் மையப்பகுதியாகவும் விளங்கியது. 1879ஆம் ஆண்டு விழுப்புரம் ரயில்வே சந்திப்பு கட்டப்பட்ட பின்பு வட இந்திய பகுதிகளுக்கும் விழுப்புரத்துக்கும் நேரடி வணிகம் தொடங்கியது. இதனால் விழுப்புரத்தைச் சுற்றி நாற்பது கிமீ பரப்பளவில் உள்ள சிறுநகரங்களுக்கும் கிராமங்களுக்கும் வியாபார மையப் பகுதியாக திகழ்ந்தது. 1853ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் ரயில் சேவை மும்பை தானேவில் தொடங்கப்பட்டதிலிருந்து மஹாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்லாயிரகணக்கான தலித்துகள் ரயில்பாதை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். விழுப்புரம் ரயில்வே சந்திப்பு கட்டுமானத்திலும் நகர்ப்பகுதி, அதன் சுற்று வட்டார தலித்துகள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டனர். ரயில்வே துறைக்கும் தலித்துகளுக்கும் பண்பாட்டு ரீதியான அடையாளம் மற்றும் உறவு முறை உருவாகுமளவு தொடர்பிருந்தது. விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி போகும் சாலையில் இருக்கும் மருதூர் காலனியில் ஏராளமான ரயில்வே தலித் குடும்பங்கள் இருப்பதை இன்றும் காணலாம். வணிகமயமாக உருமாறி வந்த இந்நகரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களின் விவசாய நிலங்கள் பெருமளவு நிலவுடைமைச் சாதிகளின் பிடியிலிருந்தது. எஞ்சியிருந்த சிறு குறு விவசாயிகள் வணிகத்திற்கும் கூலித்தொழிலுக்கும் விழுப்புரம் நகர்ப்பகுதியை நம்பியிருந்தனர். சாகுபடி, மண்டி, எண்ணெய் உற்பத்தி, மளிகை, ஜவுளி உள்ளிட்ட அனைத்துத் தொழில்களின் முதலாளிகளும் சாதி இந்துக்களாக நிறைந்திருந்த சு+ழலில் சுற்றியிருந்த கிராம தலித்துகளுக்கான ஒரே ஆறுதல் விழுப்புரம் நகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் பெரியகாலனிதான். விழுப்புரம் நகர மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தலித்துகள். பெரியகாலனி என்றழைக்கப்படும் GRP தெரு, சென்னை – திருச்சி சாலையில் இருக்கும் வழுதுரெட்டி காலனி ஆகியவற்றின் கூட்டு மக்கள் தொகை இருபதாயிரத்திற்கும் மேல். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் பெரியகாலனியின் மக்கள் தொகை மட்டும் கிட்டத்தட்ட ஐயாயிரம். சமூக, பொருளாதார பின்புலமற்ற சமூகங்களாக தலித்துகள் இருந்தாலும் திரட்சியான இந்த எண்ணிக்கையால் கிராம தலித்துகள் பாதுகாப்பு உணர்வோடு நகரத்திற்கு வந்து சென்றனர். ரயில்வேயின் வருகைக்குப் பின்னால் நிகழ்ந்த நவீன தொழில் மாற்றத்திற்கு தலித்துகளின் உழைப்பே மூலதனமாய்த் திகழ்ந்தது. ஆனால் தலித்துகளைச் சார்ந்து உருவாகிய இந்நகரத்தில் தலித்துகளுக்கான பொருளாதார பங்கீடு என்னவாக இருந்தது / இருக்கிறது என்பது சுவாரசியமான புதிர்.

 

தலித் கூலிகள்

நகரத்தின் மையப் பகுதியில் திரட்சியான தலித்துகள் வாழும் மாவட்டங்களில் விழுப்புரம் முக்கியமான பகுதி. இரயில்வே நிலையத்திற்கு மிக நெருக்கமாக அமைந்த இக்குடியிருப்புகள் வான்வழி பார்த்தால் சதுர வடிவம் கொண்டது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தலித்துகள் வசிக்கும் அடர்த்தியான இக்குடியிருப்பின் நான்கு திசைகளும் ரொட்டித்துண்டின் ஓரங்களைப் போல வெட்டப்பட்டு சாதி இந்துக்களின் வணிக வளாகங்களாக மாறியிருக்கிறது. கிழக்கு மற்றும் தெற்கு பகுதி முழுக்க நகராட்சிக்குச் சொந்தமான மார்க்கெட்டின் நிரந்தர கடைகளும், வடக்கு மற்றும் மேற்கு சாலைகளில் நகரத்தின் பிரதான வணிக வளாகங்களும் அமைந்துள்ளது. விழுப்புரத்தின் ஒட்டுமொத்த வணிகத்தையே தீர்மானிக்கக்கூடிய அனைத்துக் கடைகளும் தலித் குடியிருப்பைச் சுற்றியிருக்கிறது. அரிசி, உரம், காய்கறி, பலசரக்குக் கடைகள், மீன், இறைச்சி, ஜவுளி, நகைக்கடைகள், தேநீர், பழக்கடை என்று வாழ்வாதார தேவையின் சகலமும் பெரிய காலனியை ஒட்டியபடியே அமைந்திருக்கிறது. தலித் குடியிருப்புகளின் வாசல்களை அடைத்துக்கொண்டு உருவான இந்த வணிகத்திற்கும் தலித்துகளுக்கும் எந்தவொரு நேரடி தொடர்புமில்லை. ஒன்றிரண்டு விதி விலக்குகளைத் தவிர்த்து தலித்துகளுக்கென்று சொந்தமாக டீக்கடைகள் கூட கிடையாது.

மாறாக இந்த வணிகத்திற்குத் தேவையான உபரி கூலி வேலைகளில் பெருமளவு தலித்துகளே நிறைந்திருக்கின்றனர். வேளாண் விற்பனை கூடம் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் சுமை தூக்கும் தொழிலாளர்களாகவும், நிரந்தர கடையில்லாத சாலையோர வியாபாரிகளாகவும், துப்பரவு தொழிலாளர்களாகவும் இருப்பவர்கள் பெருமளவில் தலித்துகளே. சாலையோர வியாபாரிகளுக்கு இப்பகுதியை ஒட்டியே நிரந்தர கடைகளைக் கட்டித் தரவேண்டுமென்பது இன்னமும் கோரிக்கையாகவே இருக்கிறது. செயற்படாமல் இருக்கும் தங்களது ஆற்றாமையை அதிகாரிகளும் காவல் துறையினரும் உணரும் போதெல்லாம் சாலையோர வியாபாரிகளின் மீது அது உக்கிரமாக வெளிப்படுவதும் அவ்வப்போது நடக்கும். போலீசாரால் சூறையாடப்பட்ட வேகத்தில் தொழிலாளர்கள் கூடுவதும் மனு கொடுப்பதுமாக சில்லறை வணிகத்தை தக்க வைப்பதற்கே தலித்துகள் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.

விழுப்புரம் வன்முறை (1978)

சில்லறை வணிகத்தை நம்பியிருக்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தலித்துகளை இப்பகுதிகளில் இருந்து முழுமையாக துடைத்தெறியும் முயற்சிகளும் விழுப்புர வரலாற்றில் நடந்திருக்கின்றன. அதில் குறிப்பிடும்படியான நிகழ்வு விழுப்புரம் கலவரம். 1978ஆம் ஆண்டு ஜூலை 25, 26 தேதிகளில் விழுப்புரம் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட கொலை வெறித்தாக்குதல் இந்திய அளவில் கவனம் பெற்ற வன்முறைகளில் ஒன்று. பெரிய காலனிக்கு வெளிப்புறமிருந்து நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் ராக்கட் வெடிகள் வீசப்பட்டன. இரண்டு நாட்கள் தொடர்ந்த இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான குடிசைகள் எரிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டன, 12 பேர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர். இந்தக் கலவர சு+ழலைப் பயன்படுத்தி நகருக்கு வெளியே உள்ள சேரிகளும் தாக்குதலுக்கு உள்ளானது. அன்றைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் விழுப்புரம் கலவரம் சாதிக் கலவரமல்ல, சமூக விரோதிகளின் மோதல் என்று சாதித்தார். அரசு தரப்பில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனின் அறிக்கையும் எம்.ஜி.ஆரின் அறிக்கையைப் போலவே இருந்ததில் வியப்பேதுமில்லை. அரசின் இந்த அறிக்கையை மறுத்து 1979இல் னு.டேவிட் செய்த கள ஆய்வு அறிக்கையைப் புதிய பின்னிணைப்புகளோடு ‘விழுப்புரம் கலவரம்’ என்னும் நூலாக பதிப்பித்தார் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம். இந்திய வரலாற்றில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட மோசமான வன்முறையில் ஒன்றான விழுப்புரம் கலவரத்தின் பின்னணியைக் குறித்து நமக்கிருக்கும் ஒரே சான்று அந்நூல்தான்.

தலித் மக்கள் மீதான வெறுப்பிற்கு காரணங்கள் தேவைப்படுவதில்லை, சந்தர்ப்பங்களே போதுமானதாக இருக்கிறது. விழுப்புரம் கலவரத்தின் பின்னணியும் அதுதான். இந்த வன்முறைக்கான காரணம் என்பது இரண்டாம் பட்சம்தான். மார்க்கெட் பகுதியில் தலித் பெண்ணை சாதி இந்து சீண்டியதைத் தொடர்ந்து சிறு சலசலப்பு உருவாகி, அது மோதலாக மாறியிருக்கிறது. இக் குழு மோதலில் தலித்தல்லாத வணிக சங்கங்கள் சாதி இந்துக்களுக்கு ஆதரவாக நின்றன. போலீஸ் தரப்பில் சமரசத்திற்கு அழைப்பு விடுத்தபோது குறிப்பிட்ட சங்கங்கள் அதில் கலந்துகொள்ளவில்லை, மாறாக பொதுக்கூட்டம் ஒன்றைக் கூட்டி தலித்துகளுக்கு எதிரான முழக்கங்களை முழங்கியபடியே புறப்பட்ட கூட்டம் அதே வேகத்தில் வன்முறையில் இறங்கியது. மேலதிக விவரங்கள் இக்கலவரம் குறித்த தகவல்களைத் தொகுக்கும் கட்டுரையாக மாற்றிவிடும் என்பதால், இக்கலவரத்தையொட்டி தலித்துகளுக்கு எதிராக அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகளையும் தீர்மானங்களையும் காண்போம். கலவரம் தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்து வைக்கப்பட்ட பல்வேறு தீர்மானங்களின் சாராம்சம் கீழ்வருமாறு:

  1. பெரியகாலனி பகுதியை ஒட்டியுள்ள பேருந்து நிலையம் இடம் மாற்றப்படவேண்டும்.
  2. விவசாயப் பொருட்களைக் கொள்முதல் செய்யும் கமிட்டி இடம்மாற்றப்பட வேண்டும்.
  3. மணிலா மார்க்கெட், காய்கறிகடைகள், மீன் இறைச்சிகடைகள் புதிய இடத்திற்கு மாற்றப்பட வேண்டும்.
  4. அரிசன காலனிகளுக்கு அருகே இவையெல்லாம் இருப்பதால் களவாடுதல், திட்டமிட்டுக் கொள்ளையடித்தல், கற்பழித்தல், யாரையும் எளிதில் தாக்குதல் போன்றவற்றை அரிசன மக்கள் செய்வதால் அவர்களிடமிருந்து பொது மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும். 
நெல் அரிசி வியாபார சங்கம், எண்ணெய் வியாபாரிகள் சங்கம், இறைச்சி வியாபாரிகள் சங்கம், மீன் வியாபாரிகள் சங்கம், வெற்றிலை வியாபாரிகள் சங்கம், ஜவுளி வியாபாரிகள் சங்கம், உணவு விடுதிகள் சங்கம், பேருந்து மோட்டார் தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை இந்த தீர்மானங்களில் கையொப்பமிட்டுள்ளன.

தலித்துகளுக்கு எதிரான இத்தகைய தீர்மானங்களில் கையொப்பமிட்ட மேற்கண்ட சங்கங்களுக்கும் தொழில்களுக்கும் தலித்துகளுக்கும் யாதொரு தொடர்புமில்லை. மென்று உமிழும் வெற்றிலைப் பாக்கு வியாபாரத்தைக் கூட கையிலெடுக்க முடியாத நிலைதான் தலித்துகளுக்கும் வணிக பொருளாதாரத்திற்குமான உறவாக இருந்தது.

பேருந்து நிலையமும் ரயில் நிலையமும் காலனியையொட்டி இருப்பதால் நிரந்தரமற்ற பூ, பழம் உள்ளிட்ட கூடைத் தொழிலாளர்களாக தலித்துகள் இருக்கிறார்கள். விழுப்புரத்தைக் கடந்து போகும் வெளியூர் பயணிகளுக்கு சாதி பார்ப்பதற்கான அவகாசமில்லை என்பதே ஒரே ஆறுதல். உள்ளுரர் மக்கள் சாதியறிந்து வணிகம் செய்யக் கூடியவர்களாக இருப்பதால் தலித்துகள் பெரு வணிகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். தலித்துகள் எந்த வகையிலும் சாதி இந்துக்களுக்குத் தொழிற் போட்டியாளர்களாக இல்லாதிருக்கும்போது எதன் பொருட்டு இந்த வன்மம் தக்கவைக்கப்படுகிறது? நகரத்தின் மத்தியில் அடர்த்தியாக குடியிருக்கும் பத்தாயிரம் தலித்துகளின் கூட்டு நிலம்தான் சாதி இந்துக்களைத் தொந்தரவுக்குள்ளாக்குகிறது. தலித்துகளைச் சுற்றிச் சுழலக்கூடிய பொருளாதாரம் தலித்துகளிடமிருந்து விலக்கிவைக்கப்பட்டிருக்கும் வணிகத் தீண்டாமைக்கும் அதுவே காரணம்.

பொருளாதார அதிகாரமும், சமூக அதிகாரமும்

தலித் மக்களுக்கு பொருளாதார அதிகாரம் கிடைக்காமல் இருப்பதற்கு சமூக அதிகாரமற்ற சமூகங்களாக அவை இருப்பதே முக்கிய காரணம். அவையிரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். சாதி பற்றியான உரையாடல் தொடங்கப்படும் போதெல்லாம், இரண்டாயிர வருட சாதிய வரலாறு என்று சுட்டிக்காட்டுவது சமகால கேள்விகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான யுத்தியாக மாறியிருக்கிறது. வரலாற்றை ஒப்பிடும்போது, தலித்துகள் பெற்றிருப்பது அவர்களின் தகுதிக்குச் சற்று அதிகம் என்னும் மனநிலைதான் இதன் உள்ளடக்கமாக இருக்கிறது. காலனியாட்சிக் காலத்தில், குறிப்பாக 19ஆம் நூற்றாண்டில், நடந்த சாதிய ரீதியான மாறுதல்களே சமகாலத்தையும் தீர்மானித்துக்கொண்டிருக்கின்றன என்கிற ஆய்வுப் பின்புலத்திலிருந்து சாதி ரீதியான உரையாடல்கள் தொடங்கப்பட வேண்டும். இவ்விடத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் மக்கள் தொகையில் சரி பாதியாகவோ அல்லது சற்றுக் கூடுதலாகவோ இருக்கும் வன்னியர் சமூகத்தின் வளர்ச்சி கவனத்தில் கொள்ளப்படவேண்டும். கடைக்கோடி வன்னியர் வரை பலனடைந்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாமல் போனாலும் அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கும்படியான சக்தியாக வளர்ந்திருக்கிறார்கள். கடந்த 2019ஆம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மறைவையொட்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது, சுமார் இரண்டரை லட்சம் வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக ‘நாங்கள் வெற்றிபெற்றால் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொண்டு வரப்படும்’ என்று திமுக அறிவித்தது. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வேண்டுமா வேண்டாமா என்கிற விவாத்திற்குள் நாம் போகத் தேவையில்லை, ஆனால் சட்டமன்ற இடைத் தேர்தலுக்காக இத்தகைய பெரிய அறிவிப்பை ஒரு பேரியக்கம் வெளியிடும்போது அந்த மாவட்ட வன்னியர் சாதியினர் மத்தியில் உருவாகும் உளவியல் என்னவாக இருக்கும் என்பதை நாம் ஆய்வுக்குட்படுத்த வேண்டியிருக்கிறது. வன்னியர்களின் உற்றத் தோழனாக காட்டிக்கொள்ள திமுக, அதிமுக என்னும் இரு பெரிய கட்சிகள் மோதிக்கொள்ளும்போது அசைக்க முடியாத அரசியல் சக்தியாக வளர்ந்து வருவதையெண்ணி சாதிய அதிகாரம் கூர்மையடையும். தனக்குக் கீழ் என்று நினைக்கும் சாதிகளின் மீது அவை அதிகாரமாய் வெளிப்படும். சமூக அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரம் தலித்துகளுக்கு மறுக்கப்படுவதன் தொடர்புப்புள்ளிகளை தொட்டுக்காட்டாமல் நாம் இவ்விவாதத்தை தொடரமுடியாது.

விழுப்புரம் மார்க்கெட் பகுதியிலிருக்கும் 500 கடைகளில் ஒரேயொரு கடை கூட தலித்துகளுக்குச் சொந்தமில்லை என்கிற நிலை ஏன் இந்த பொதுச்சமூகத்தின் மனசாட்சியை உலுக்காமல் இருக்கிறது? வணிக வியாபாரத்தில் நூறு சதவீதம் புறக்கணிப்பட்ட தலித்துகள், 99மூ துப்பரவு பணியாளர்களாக இருக்கும் இந்த சமநிலையற்றச் சமூகத்தில் சமூகநீதிக்கான வரையறை என்ன? தலித் மக்கள் தொழிற்சமூகங்களாக இல்லாதிருப்பதே காரணம் என்கிற பொய்யையும் நாம் இங்கே நிறுவ முடியாது. சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் அட்டை வைத்திருக்கும் 603 பேரில் 400 வியாபாரிகள் தலித்துகள். உறுப்பினர் அட்டை இல்லாதவர்களையும் சேர்த்து 500 என்று வைத்துக்கொண்டாலும் தொழில் செய்ய ஆர்வமுடைய அல்லது தேவையிருக்கும் 500 தலித் வியாபாரிகளைச் சாலையோரங்களில் வீசிவிட்டு 500 சாதி இந்துக்களுக்கு நிரந்தர கடையமைத்து கொடுத்திருக்கும் இந்த சமூக அமைப்பைக் குறித்த எந்த புகாரும் கேள்வியும் இல்லாமல் இருக்கிறோம். சாதி இந்து முதலாளிகளின் அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரத்தைக் கொண்டு சாலையோர வியாபாரிகளை துடைத்தெறிய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கெதிரான சாலையோர வியாபாரிகளின் சட்டப்போராட்டத்தால் 18.09.2018 அன்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியது. விழுப்புரம் மார்க்கெட் பகுதியைச் சுற்றியிருக்கும் சாலையோர வியாபாரிகளுக்கு நிரந்தர கடை அமைத்துக்கொடுக்கும் வரை சாலையோரங்களில் கடை வைத்திருக்கலாம் என்பதுதான் தீர்ப்பு. சென்னையின் பூர்வீக மக்களை செம்மஞ்சேரி, கண்ணகி நகர் பகுதிகளுக்கு விரட்டியடித்ததைப் போல, நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் வணிக பகுதிக்கு வெளியே கடை அமைத்துக்கொடுக்கும் முயற்சியில் இறங்கியது அரசு. இக்கோரிக்கையை நிராகரித்து வணிகப் போக்குவரத்து இருக்குமிடத்திலேயே கடை கேட்கும் வியாபாரிகளின் போராட்டம் இன்றும் தொடர்கிறது.

சாதி இந்து முதலாளிகளின் சமூக அதிகாரத்திற்கு அரசும் அரசு இயந்திரமும் பணிந்து போகிறது தலித் மக்கள் சட்டத்தை நாடுகிறார்கள். அரசியலமைப்புச் சட்டம்தான் தலித்துகளின் குறைந்தபட்ச உரிமையையும் சுயமரியாதையும் காப்பாற்றி வருகிறது என்பது இங்கும் நிரூபணமாகிறது. நீதிமன்ற தீர்ப்புப்படி தலித்துகள் விரும்புமிடத்தில் நாளையே நிரந்தரக் கடைகள் அமைத்துக்கொடுக்கப்படுமானால் அதில் சாதி இந்து சமூகத்திற்கும் அரசுக்கும் எந்தவகையிலாவது பங்கிருக்கிறதா? இப்போராட்டத்தின் முடிவில் கடைகள் கட்டிக் கொடுக்கப்படும்போது ஆட்சியிலிருப்பவர்கள் எந்தவித தயக்கமுமின்றி அதைத் தங்களது சாதனைப்பட்டியலில் சேர்த்துக்கொள்வார்கள். அதற்குப் பின்னால் பன்னெடுங்கால சுரண்டல், இழப்பு, போராட்டம் என தலித்துகளின் உரிமைப் போராட்ட வரலாறு மறைக்கப்பட்டு, சாதி இந்து தனவான்களால் தலித்துகள் வாழவைக்கப்-பட்டவர்களாக வரலாறு மாற்றியமைக்கப்படும். தலித்துகள் முன்நகர்ந்து போக வேண்டுமென்கிற விருப்பம் இங்கே எந்த பெரும்பான்மை சாதி சமூகத்திற்குமில்லை, அதை மீறி தவிர்க்க முடியாத இடத்தை நோக்கி ஒரு தலித் முன்னேறும்போது அந்த வெற்றி சாதி இந்துக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதை நாம் வரலாறு நெடுக காணலாம். சமூகநீதி அடிப்படையில் நிர்பந்தமாக சாதி இந்துச் சமூகங்கள் எதையேனும் இழந்ததாகக் கருதினால் அதை பெருமிதத்தோடு வழங்கப்பட்டதாக மாற்றியமைப்பதன் மூலம் சாதியின் மேல்கீழ் என்னும் கட்டமைப்பு மீண்டும் உறுதிபடுத்தப்படுகிறது.

வெள்ளையர்களின் ஆட்சி முடிவுக்கு வந்து இந்தியாவின் சாதி இந்து சமூகத்திடம் அதிகாரம் குவியும்போது தலித்துகளின் எதிர்கால நிலை குறித்து அவதானித்ததாலவே அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதுவும் அடிப்படை உரிமைகளைச் சேர்க்கவும் செய்தார். அது நடக்காமல் போயிருந்தால் இந்திய தலித்துகளின் நிலையை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்பதே நிதர்சனம்.

 

தலித்துகளும் கல்வியும்

கடந்த இருநூறு வருடத்தில் நடந்த கல்விப்புரட்சி, மிஷனரிகளின் வருகை, மதமாற்றம் உள்ளிட்ட எல்லா வாழ்வாதார மற்றும் பண்பாட்டு மாற்றங்களிலும் தலித்துகள் நவீனத்தோடு இணைந்து வருகிறார்கள். அதில் ஒன்று கல்வி. தலித்துகள் அதை உணராமலில்லை, எப்படியாவது படித்து விடு என்பது இந்தியாவின் ஒவ்வொரு சேரித் தெருக்களின் மந்திரச்சொல். கல்வி மட்டும்தான் நம்மை உயர்த்தும் என்றொரு தலித் சொல்லும்போது சாதியச் சமூகத்தின் மீதான அவநம்பிக்கையும் அதில் அடங்கியிருக்கிறது, கல்வியைத் தவிர அவன் முன்னேற வேறெந்த வழியும் இங்கு இல்லை என்பதே இதன்பொருள். கல்வியும் அறிவும் கலையும் மானுடச் சமூகத்தை மேன்மையடையச் செய்வதில் முக்கிய பங்காற்றுபவை. தலித்துகள் மாத்திரமல்ல, உலகத்தின் எல்லா மனிதனும் அதைப் பெற வேண்டும். ஆனால் தலித்துகளுக்குக் கல்வி என்பது இங்கே வாழ்வாதாரமாக சுருக்கப்பட்டுள்ளது, உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கருவியாக கல்வி பிரகடனப்படுத்தப்படுவதின் மூலம் நுகர்வு பொருளாதாரத்திலும் நிலத்திலும் தலித்துகளின் பங்கீடு பற்றிய உரையாடல் நிகழாத வண்ணம் சாமர்த்தியமாக பார்த்துக் கொள்ளப்படுகிறது.

ஒரு சமூக அமைப்பில் கல்வி பெற்ற அனைவருமே அரசு ஊழியராகவோ, மேலாளர்களாகவோ, தனியார் நிறுவனங்களில் உயர்பதிவு பெறுகிறவர்களாகவோ இருக்கமுடியாது, அது சமூக யதார்த்தமும் அல்ல. இவற்றிலிருந்து வேறுபட்டு தலித் ஒருவர் தொழில் முனைவராக உருவாக விருப்பப்பட்டால் சாதி இந்துக்களுக்கு இருக்கும் கட்டற்ற சமூக, பொருளாதார வாய்ப்புகள் தலித்துகளுக்கு வாய்த்திருக்கிறதா என்பதை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டிய காலத்தை எட்டியிருக்கிறோம். விழுப்புரம் நகர்ப்பகுதியின் பொருளாதாரம் தலித்துகளிடமிருந்து அந்நியப்பட்டிருப்பதென்பது தனித்துவமான வட்டார பிரச்சனையாக கருத வேண்டியதில்லை. தலித்துகள் திரட்சியாகப் புழங்கும் எல்லா நகர்ப்பகுதியிலும் இதே நிலைதான். விழுப்புரம் மாவட்டத்திலேயே சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு நீளும் திண்டிவனம் கடைத்தெருக்களிலும் தலித்துகளுக்கென்று சொந்தமான கடை என்று எதுவுமில்லை. இதில் இரண்டு விஷயங்கள் புலப்படுகின்றன, பாரம்பரியமாக தொடரும் தொழில்களில் தலித்துகளுக்குப் பிரதிநித்துவம் இல்லாத அதே வேளையில் நவீன தொழில் வளர்ச்சியிலும் தலித்துகள் விலக்கிவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைத்தான் விழுப்புரம் நகர பொருளாதார அதிகாரம் நமக்கு உணர்த்துகிறது. இந்தப் பார்வை தமிழக அளவில் விரிந்து தமிழகத்தின் ஒட்டுமொத்த தலித்துகளின் நிலம் மற்றும் வணிகத்தில் அவர்களுக்கான பங்கீடு பற்றி விவாதத்தை முன்னெடுக்க வேண்டும். மத்திய அரசின் SC / ST நிதியை மாநில அரசுகள் கையாளுவதைப் பற்றியும், வங்கிகளில் தலித் தொழில் முனைவோர்களுக்கு கொடுக்கப்படும் கடன்கள் பற்றியும் நெடிய ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. 19.02.2020 அன்று ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் Stigma strips ‘colony ‘ Dalits of employment in Villupuram ‘ னுயடவைள ழக நஅிடழலஅநவெ in ஏடைடரிரசயஅ என்றொரு கட்டுரை வெளியானது. விழுப்புரம் நகர்ப்புற தலித்துகளுக்கு அவர்களின் பிறப்பிடத்தைக் காரணம் காட்டி வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவதையும் வங்கிக்கடன்கள் மறுக்கப்படுவதையும், அதே காரணத்திற்காக தலித்துகள் தங்களது அடையாளத்தை மறைக்க வேண்டிய சூழலையும் சற்று விரிவாக அலசியிருந்தது. இந்தச் சமூகம் இன்னும் எத்தனைக் காலம் தலித்துகளின் சிவில் உரிமைகளைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கப் போகிறது? Personal Loan என்று சொல்லப்படும் தனிப்பட்ட கடன் குறித்தே பேச வேண்டியிருக்கிற சூழலில் பெரு வணிகத்தில் ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் பொருளாதார சாதியம் பேசுபொருளாவது எக்காலத்தில் என்கிற கேள்வி நம்மை அயற்சியில் தள்ளினாலும் அவை தொடர்ந்து பேசப்பட வேண்டியவை.

இதை வர்க்கப் பிரச்சனையாக சுருக்கி வெறும் பாட்டாளிகளாகவும் முதலாளிகளாகவும் அணுகுவதிலுள்ள சிக்கலைப் புரிந்துக்கொள்ள ஆய்வு பின்புலம் கூட வேண்டியதில்லை, நடைமுறைகளைக் கருத்தில் கொண்டாலே போதும். கூலித் தொழிலாளர்களாகவும், நடைபாதை வியாபாரிகளாகவும் தலித்தல்லாத சமூகத்தவர்கள் இருந்தாலும் பெரு வணிகத்தை நோக்கி நகர சாதி அவர்களுக்கு தடையில்லை என்பதே தமிழக சூழ்நிலை. ஆனால் தலித்துகள் பெரும்பான்மையானவர்களாக இருந்தாலும், ஒரு நகர்ப்பகுதியின் வணிக வளர்ச்சிக்கு ஆதாரமாக திகழ்கிறவர்களாக இருந்தாலும், அதே நிலப்பரப்பின் மூத்தக் குடிகளாக இருந்தாலும், வர்க்க வேற்றுமைகளால் அவர்கள் விலக்கி வைக்கப்படுவதில்லை, சாதியே முதலும் கடைசியுமாய் நிற்கிறது. விழுப்புரம் மாவட்ட வரலாற்றுத் தொகுப்பு நமக்குணர்த்துவது அதைத் தான்.

இந்தியாவைப் பொறுத்தவரை பொருளாதார முன்னேற்றத்தை நிவாரணமாகவோ உழைப்பூதியமாகவோ பார்க்க முடியாது, அவை சாதிய அதிகாரத்துடன் பிணைக்கப்பட்டவை. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார விடுதலை ஒரே நேர்கோட்டில் ஒன்றோடொன்றின் துணைக்கொண்டு சுழல்வதே அதன் இயங்கியல் தத்துவம். இவ்வுரையாடலை தொடங்குவதன் மூலம் நிகழப்போகும் நடைமுறை மாற்றங்கள் கேள்விக்குறியாக இருந்தாலும், தலித்துகளிடமிருந்து வணிகமும் பொருளாதார மூலதனமும் விலக்கப்பட்டிருப்பதை முதற்கட்டமாக ஒப்புக்கொள்வதோடு இந்தப் பார்வையை முன்வைக்க ஏன் மீண்டுமொரு தலித் தேவைப்படுகிறான் என்பதையும் நேர்மையோடு சிந்திக்கத் தொடங்கினால் அது மாற்றத்தின் முதல் விதையாக விழும், நாளை அது துளிர்க்கும்.

துப்புரவுத் தொழிலாளர்கள் –
நிரந்தர ஊழியர்கள் – 126
தற்காலிக ஊழியர்கள் – 315

இதில் 5 பேர் மட்டுமே தலித் அல்லாதவர்கள்
வேளாண் கமிட்டி கூலித் தொழிலாளிகள் – 94
இதில் 83 பேர் தலித்துகள்
நகர்ப் புறத்தில் தலித்துகளுக்கு சொந்தமான கடை – 2

சாலையோர வியாபாரிகள் (கார்ட்டு வைத்திருப்பவர்கள் மட்டும்) – 603
(இதில் தலித்துகளின் எண்ணிக்கை – 400)

குறிப்பு: இது பிரதான நகர்ப்பகுதியை ஒட்டி சேகரிக்கப்பட்ட தகவல்கள் மட்டுமே.

உதவிய நூல்: 1978 விழுப்புரம் கலவரம் (D. டேவிட், மறுபதிப்பும் தொகுப்பும் – ஸ்டாலின் ராஜாங்கம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், 19 பிப்ரவரி 2020.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger