சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தின் அழகப்பா தொழிற்நுட்பக் கல்லூரியில் இரண்டாமாண்டு தோல் தொழிற்நுட்பம் படித்துவந்த சபரீஸ்வரன் (19) கடந்த ஜூலை 24ஆம் தேதி கல்லூரி விடுதியில் தன் உயிரை மாய்த்துக்கொண்டது கடும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அருந்ததியர் இளைஞர்களுக்கு இன்றும் கல்லூரிகளில் படிப்பது பெரும் சவாலாக இருக்கிறது.
முதற்கட்ட விசாரணையில், இந்தக் கல்லூரியில் படிப்பது பிடிக்கவில்லை என்று சபரீஸ்வரன் தன் நண்பர்களிடம் சில நாட்களாகச் சொல்லிவந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டாமாண்டு கல்லூரி திறந்த இரண்டு வாரங்களில் இத்துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கல்லூரி தரப்பில் இந்தத் தற்கொலைக்கான காரணம் பற்றி எந்த விளக்கமும் தரப்படவில்லை. தேர்வின் தோல்விகளும் காரணமாகப் பதியப்பட்டுள்ளது. உண்மையான காரணத்தைக் கண்டறிவது அரசின் கடமை. கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் தலித் மாணவன் தற்கொலை என்பது எளிதில் கடந்து போகக் கூடிய ஒன்றல்ல.
அழகப்பா தொழிற்நுட்பக் கல்லூரியில் இதுபோன்ற சம்பவம் கடந்த ஆண்டுகளில் நடைபெற்றது இல்லை. ஐஐடிகளில் மட்டுமே இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது உண்டு. முதன்முறையாக அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது மிகவும் அதிர்ச்சிகரமாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கு மாணவர்களின் முதன்மைத் தேர்வாக இருக்கும் இந்தக் கல்லூரியில் இது நடந்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது.
இத்தகைய துயர சம்பவம் மற்ற மாணவர்களையும் மனதளவில் பெரிதும் பாதிக்கும். எதனால் இந்த முடிவை சபரீஸ்வரன் எடுத்தார் என்பதைத் தீர விசாரிக்க வேண்டிய கடமையும் கல்லூரி நிர்வாகத்திற்கு உண்டு. வரும் காலங்களில் இதுபோன்ற துயரம் நடக்கக் கூடாது என்பது எல்லோர் விருப்பமும் கூட. பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று கனவு கண்டுகொண்டிருக்கும் பெற்றோருக்கும் அது மிகப் பெரிய ஆறுதலைத் தரும்.
கல்விச் சுமை
அனிதாவின் மரணமும், ரோஹித் வெமுலாவின் மரணமும் இந்தியக் கல்வித் துறையின் குறைகளைச் சுட்டிக்காட்டியது மட்டுமல்லாமல், அதன் செயற்பாட்டை மேம்படுத்தவும் உதவின. இதுவும் எதிர்கால மாணவர்களின் நலனுக்கான விவாதத்தை முன்னெடுக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகம் ஒரு புதிய சிக்கலைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்விகளில் 7.5% இடஒதுக்கீடு என்பது தமிழகத்தின் சமூகநீதிக் கொள்கைகளுக்கு மிகச் சிறந்த உதாரணம்.
ஆனால், அரசுப் பள்ளி மாணவர்கள் பெரும்பான்மையானோர் தமிழ்வழிக் கல்வியில் படிப்பவர்கள். அவர்களுக்குப் பொறியியல் – மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டைக் கடப்பது மிகப் பெரிய சவால். முதல் பருவத் தேர்வுகளில் அரியர்ஸ் பெற்றால், நம்மால் பட்டம் வாங்க முடியுமா என்ற பயத்தைப் பலருக்கும் ஏற்படுத்தும். நம்பிக்கை தர வேண்டியது கல்லூரி நிர்வாகமே.
அரியர்ஸ் சிக்கல்களைக் கடக்கக் கிராமப்புற மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி தர வேண்டும். இதுபோன்று இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து உதவிட முன்வர வேண்டும்.
சபரீஸ்வரன் எந்தவித மன உளைச்சலுக்கு உள்ளானார் என்பதைக் கண்டறிய வேண்டியது நம் அனைவரின் கடமை ஆகும். இது கிண்டி வளாகத்தில் இயங்கிவரும் கல்லூரிகளுக்கு மட்டும் அல்லாமல், அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் அனைத்து கல்லூரிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
Amit Kumar vs Union Of India on 24 March, 2025
கல்லூரிகளில் அதிகரித்துவரும் தற்கொலைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்த உச்ச நீதிமன்றம், கடந்த மார்ச் மாதம் அது குறித்த வழக்குகளைத் தன்னிச்சையாக விசாரித்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா, ஆர்.மாதவன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு வந்த இந்த வழக்கு, ஐஐடி கரக்பூரில் கடந்த ஏழு மாதங்களில் நான்கு தற்கொலைகள் நடந்திருப்பது குறித்து அந்தக் கல்வி நிறுவனத்தின் மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. அது மட்டுமல்லாமல், பத்துபேர் கொண்ட குழுவை அமைத்து விசாரித்து, அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொண்டது.
அதன்படி மத்திய கல்வி அமைச்சகம் பத்துபேர் கொண்ட தேசியப் பணிக்குழுவை (National Task Force) அமைத்தது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ரவீந்திர பட் இதன் தலைவராக இருப்பார். உயர்கல்வி, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல், சட்ட விவகாரங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகங்களின் செயலாளர்கள் அலுவல் ரீதியான உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்தப் பணிக்குழுவிற்குப் பின்வரும் பணிகள் வழங்கப்பட்டன:
மாணவர் தற்கொலைக்கான காரணிகளைக் கண்டறிதல்; தற்போதைய விதிகளை மதிப்பாய்வு செய்தல்; மேம்பாட்டிற்கான பரிந்துரைகளை வழங்குதல்; பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் திடீர் சோதனைகளை நடத்துதல்.
அதன் அடிப்படையில் தேசியப் பணிக்குழு பின்வரும் விவரங்களைச் சமர்ப்பித்தது.
2018 முதல் முன்னணி கல்வி நிறுவனங்களில் 98 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதில் ஐஐடி-களில் 39 பேர், என்ஐடி-களில் 25 பேர், மத்திய பல்கலைக்கழகங்களில் 25 பேர், ஐஐஎம்-களில் நான்கு பேர், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் (ஐஐஎஸ்இஆர்) மூன்று பேர், ஐஐஐடிகளில் இரண்டு பேர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் பின்வரும் கருத்துகளை முன்மொழிந்தனர்:
இந்தத் துயர சம்பவங்கள் கல்லூரி அமைப்பின் தோல்வியாகும் (failure of the system). கல்லூரிகளின் பொறுப்பற்றத் தன்மையையும் வெளிப்படுத்துகின்றன. கல்விச் சூழலில் நிலவும் பாகுபாடுகள், துன்புறுத்தல், மனக் கவலைகள் ஆகியவற்றைப் பல்கலைக்கழகங்கள் திறம்பட நிவர்த்தி செய்யத் தவறும்போதும், மாணவர் நலனில் அக்கறை இல்லாமல் செயல்படும்போதும் அவை எதிர்காலத்தில் பேரழிவுகளை ஏற்படுத்தும்.
விவசாய நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கையை விட, மாணவர் தற்கொலைகளின் எண்ணிக்கை இப்போது அதிகமாக உள்ளது, NCRB அறிக்கையின்படி 2024ஆம் ஆண்டில் மட்டும் இது நான்கு சதவீதம் அதிகரித்துள்ளது.
மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களில் கூட சாதி அடிப்படையிலான பாகுபாடு பரவலாக இருக்கிறது. விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் மீதான அந்நியப்படுத்தல் உணர்வு அதிகரித்திருப்பதாகப் பல செய்தி அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. கல்லூரி வளாகங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடு என்பது, அரசியலமைப்பின் 15ஆவது பிரிவைத் தெளிவாக மீறுவதாகும்.
பல்கலைக்கழகங்கள் வெறும் கற்றல் மையங்களாக மட்டுமல்லாமல், மாணவர்களின் நல்வாழ்வு மற்றும் முழுமையான வளர்ச்சிக்குப் பொறுப்பான நிறுவனங்களாகவும் தங்கள் பங்கை ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதில் உச்ச நீதிமன்றம் உறுதியாக இருக்கிறது. அவ்வாறு செய்யத் தவறுவது என்பது கல்வியின் நோக்கமான வாழ்க்கையை மேம்படுத்துதல், அதிகாரம் அளித்தல், முன்னேறுதல் ஆகியவற்றைத் தோல்வியடையச் செய்வதாகும். ஒரு மாணவர் தனது வீட்டைவிட்டு வெளியேறி பல்கலைக்கழக வளாகத்தில் படிக்க வரும்போது ‘லோகோ பேரன்டிஸ்’ என்ற கொள்கையின்படி, பல்கலைக்கழகங்கள் பெற்றோரின் பங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பிரிவு 32 (குடிமக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளை அமல்படுத்துவதற்காக நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுக முடியும்) டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இதயம் என்று சொல்லப்பட்டது. அதை மீண்டும் ஒருமுறை இந்தத் தீர்ப்பு நிரூபித்துள்ளது. சபரீஸ்வரன் இறந்த ஜூலை 24 அன்றுதான் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
உயர்கல்வி குறித்த அகில இந்தியக் கணக்கெடுப்பு (2021 – 2022)
AISHE (ALL INDIA SURVEY ON HIGHER EDUCATION) REPORT 2021 – 2022 மொத்தம் 4.33 கோடி மாணவர்களில் SC மாணவர்கள் 15.3%, ST மாணவர்கள் 6.3%.
எஸ்.சி. சேர்க்கை: 2021 – 22 ஆண்டில், எஸ்.சி. மாணவர்கள் சேர்க்கை 66.23 லட்சத்தை எட்டியது. இது 2014-15 உடன் ஒப்பிடும்போது 44% அதிகரித்துள்ளது.
எஸ்.டி. சேர்க்கை: 27.1 லட்சமாக உயர்ந்தது. இது 2014-15 முதல் 65.2% அதிகரித்துள்ளது.
பெண்கள் சேர்க்கை: எஸ்.சி. பெண்கள் சேர்க்கை 31.71 லட்சத்தையும், எஸ்.டி. பெண்கள் சேர்க்கை 13.46 லட்சத்தையும் எட்டியுள்ளது.
மொத்த சேர்க்கை விகிதம் (GER): SC GER 27.2%, ST 25.8%.
மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழ்நிலையில் அதற்கான உள் கட்டமைப்பை நிறுவ வேண்டும்.
கல்வி உதவித்தொகை
கல்லூரி மாணவர்களுக்கு உரிய நேரத்தில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறதா என்பதையும் அரசு கண்காணிக்க வேண்டும். பல தனியார் பொறியியல் கல்லூரிகள் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகைகளைக் கையாடல் செய்தது அனைவரும் அறிந்த ஒன்று. அரசாங்கம் விழித்துக்கொண்ட பின்பு தற்போது மாணவர்களின் வங்கிக் கணக்கில் அது செலுத்தப்படுகிறது.
மாநில உதவித் தொகை மட்டுமல்லாமல், மத்திய அரசின் உதவித் தொகை என்று பல்வேறு நலத் திட்டங்கள் இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் பல்கலைக்கழகங்களின் உதவித் தொகை, தனியார் மையங்களின் உதவித் தொகை என்று பல உண்டு. அவற்றை முறையாகச் சேர்க்க ஒரு முழுநேர அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும். மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் நேரடியாக அந்த அலுவலகம் சென்று விண்ணப்பிக்க வழி செய்ய வேண்டும். இன்று எல்லாமே ஆன்லைன் என்றாகிவிட்டாலும், அதைப் புரிந்துகொள்வதற்கும் ஒரு வழிகாட்டி தேவை. அரசு வழங்கக் கூடிய உதவிகள் குறித்து தலித் மாணவர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது கல்லூரிகளின் கடமை.
எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கான மெட்ரிக் மற்றும் அதற்கு முந்தைய உதவித்தொகைகளுக்கான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பைத் தற்போதைய ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும். பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான (EWS) வருமான உச்சவரம்பை மத்திய அரசு 8 லட்சமாக வைத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கிவருவது ஒருங்கிணைந்த எஸ்.சி/எஸ்.டி செல் ஆகும். ஒவ்வொரு கல்லூரிக்கும் தனியாக இயங்கக் கூடிய அமைப்பை உருவாக்க வேண்டும்; அதன் மூலம் பல்வேறு வழிகாட்டி நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பட்டியல் சமூக மாணவர்கள் தங்கள் குறைகளை முறையிட உருவாக்கப்பட்டது எஸ்.சி/எஸ்.டி செல். அந்த அமைப்பே கல்லூரிகளில் செயலாற்றவில்லை என்றால் எங்கு சென்று முறையிடுவது என்பது தெரியவில்லை. பல மாணவர்கள் பட்டம் பெற வேண்டும் என்று ஒரே காரணத்திற்காகத் தங்கள் வலிகளையும் அவமானங்களையும் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு நாள் – பிறந்த நாளில் அவரது புகைப்படத்திற்கு மரியாதை செய்வதோடு, பட்டியல் சமூக மாணவர்களை இணைத்துப் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். பல்வேறு சிக்கல்களைத் தாண்டிப் படிக்கும் கடைக்கோடி மாணவர்களுக்கு நம்பிக்கை ஒளி தர, பட்டியில் சமூகத்திலிருந்து கல்வி மட்டுமே ஆயுதமாய் ஏந்திப் போராடி வெற்றி பெற்ற, வெற்றி பெறப் போகும் பல்துறை நிபுணர்களை அழைத்து ஊக்கமளிக்க வேண்டும். இத்தகைய முன்னெடுப்புகள் தலித் தற்கொலைகளைத் தடுக்கும்.
தேசியப் பட்டியல் சமூக ஆணையம், மாநிலப் பட்டியல் சமூக ஆணையம் சார்ந்த அரசு அதிகாரிகளையும் அழைத்து உரையாடல் நடத்த வேண்டும். மாணவர்களுக்குத் தங்களின் அடிப்படை உரிமை என்னவென்றாவது தெரிய வேண்டும். அவ்வாறு வருபவர்கள் பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள், பதிவாளர்கள், பேராசிரியர் பெருமக்களை மட்டும் சந்தித்துவிட்டுச் செல்லாமல், அனைத்துப் பட்டியல் சமூக மாணவர்களிடமும் கலந்துரையாடினால் அவர்களின் மனக் குறையைத் தீர்க்க முடியும். இந்தக் கூக்குரல் வெறும் தலித் மாணவர்களுக்காக மட்டுமல்ல அனைத்துச் சமுதாய மக்களுக்கும் பொருந்தும். தற்கொலையில் சாதி என்ன? மதம் என்ன? பிரிவு என்ன?
மாநிலங்களவையில் கேள்வி நேரம்
29 மார்ச் 2023 அன்று மாநிலங்களவையில் ஐந்து ஆண்டுகளில் ஐஐடிகளில் எத்தனை எஸ்சி/எஸ்டி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்தார்கள் என்ற கேள்விக்கு (கேள்வி எண். 3240) கல்வித்துறை அமைச்சகத்தால் விளக்கம் அளிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளில் பதினான்கு எஸ்சி/எஸ்டி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதாவது, ஆண்டிற்கு மூன்று பேர் இறந்துகொண்டிருக்கிறார்கள். படிப்புச் சுமை, குடும்பக் காரணங்கள், தனிநபர் காரணங்கள், மனநலம் சார்ந்த பிரச்சினைகள் ஆகியவையே தற்கொலைக்குக் காரணம் என்று அறிக்கை அளித்தனர். ஐந்து ஆண்டுகளில் எந்த ஐஐடி-களிலும் பாகுபாடு காரணமாகப் புகார் எதுவும் பெறப்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
முன்னாள் மாணவர் சங்கம்
மாணவர் நலனுக்காகத் திரட்டப்படும் நிதி உண்மையில் சரியான நபர்களுக்கு வழங்கப்பட வேண்டும். தன்னிச்சையாகச் செயல்படாமல் கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து செயல்படும்போது பயனாளர்களைச் சீக்கிரம் சென்றடைய முடியும். கல்லூரிகளில் முன்னாள் மாணவர் சங்கங்கள் தன்னிச்சையாகச் செயல்படுவது மாணவர்களிடம் குழப்பத்தை உண்டாக்குகிறது. தேவையற்ற எதிர்பார்ப்புகளை உருவாக்கி, கிடைக்காத பட்சத்தில் மிகப் பெரிய ஏமாற்றத்தை அவர்களுக்கு அளிக்கிறது. கல்லூரியின் அனுமதி இல்லாமல் அவர்கள் சந்திப்பதும் நடந்தேறியுள்ளது. தங்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்துக் கல்லூரிகளிலும் இதை அரசு கண்காணிக்க வேண்டும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் பற்றிய புரிதல்
கல்லூரியில் வேலை செய்யும் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் இந்திய அரசமைப்புச் சட்டம் பற்றிய புரிதல் வேண்டும். தற்போது அரசியலில் மட்டும்தான் ஜனநாயகம் இருக்கிறது, சமூகத்தில் ஜனநாயகம் வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும். ஜனநாயகத்தின் அடிப்படை சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
இந்தக் கல்வி, அனைத்து மாணவர்களுக்கும் (குறிப்பாக, தலித் அல்லாத மாணவர்களுக்கும்) தெளிவாகப் பதியும்படி கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடத்தப்பட வேண்டும். முடிந்தால், இந்தியச் சமூகம் பற்றியும் ஜனநாயகம் பற்றியுமான பிற ஆக்கங்களை நான்கு ஆண்டுகளிலும் பாடமாக்க வேண்டும்.
“சாதி என்பது ஒரு மனநிலை, அது மனதின் ஒரு நோய்” என்கிறார் அண்ணல் அம்பேத்கர். எனவே, தங்களைப் பீடித்திருக்கும் நோயைப் பற்றித் தெரிந்துகொண்டு, அதற்குச் சிகிச்சை எடுத்து, குணமாக முன்வர வேண்டும்.
உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு உதவுவது, தலித் மாணவர்களுக்குச் சிறப்பு உதவிகள் செய்வது எல்லாம் குறுகிய கால செயலாக முடிந்துவிடும். தலித்துகளுக்குத் தேவை உதவியும் பரிதாபமும் அல்ல, தலித் அல்லாதவர்கள் தங்களது மனநோயில் இருந்து வெளிவருவதுதான்.
பல்கலைக்கழக மானியக் குழு
இந்தியாவில் பல்கலைக்கழகக் கல்வியினை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், தரக்கட்டுப்பாடு செய்யவும் 1956ஆம் ஆண்டு இந்திய நடுவண் அரசால் நிறுவப்பட்ட அமைப்பான பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission), கடந்த 27 பிப்ரவரி 2025 அன்று (F. No.1-7/2011(SCT)) ஒரு மசோதாவைக் கொண்டுவந்தது.
ரோஹித் வெமுலா மற்றும் பயல் தத்வி வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், பொதுமக்களின் ஆலோசனைக்காகப் பல்கலைக்கழக மானிய ஆணையம் (UGC) (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துதல்) விதிமுறைகள், 2025ஐ வெளியிட்டுள்ளது. மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாட்டைக் கட்டுப்படுத்துவதையும், உயர்கல்வி நிறுவனங்களுக்குள் சமத்துவத்தை மேம்படுத்துவதையும் இந்த ஒழுங்குமுறை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2012ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட நெறிமுறையில் யுஜிசி 20 வகையான துன்புறுத்தல்களைப் பட்டியலிட்டது.
கூடுதலாகப் புதிய விதிமுறைகள், சம வாய்ப்பு மையங்களின் கீழ் ஒரு சமத்துவக் குழுவை அமைக்க முன்மொழிகின்றன. இது பாகுபாடு குறித்த புகார்களை ஆராய்வதற்கான முதல் அதிகாரமாகும். சமத்துவக் குழுவில் சிவில் சமூகத்திலிருந்து பொருத்தமான அனுபவத்தைக் கொண்டிருக்கக் கூடிய குறைந்தபட்சம் இரண்டு பிரதிநிதிகள் இருக்க வேண்டும்; இரண்டு மாணவர் பிரதிநிதிகள் சிறப்பு அழைப்பாளர்களாக இருக்க வேண்டும்; நான்கு ஆசிரிய உறுப்பினர்கள் மற்றும் நிறுவனத் தலைவர் பதவி வழித் தலைவராக இருக்க வேண்டும்.
அழகப்பா தொழிற்நுட்பக் கல்லூரியில் இந்தச் சம வாய்ப்பு மையம் ஏன் அமைக்கப்படவில்லை என்பது பெரும் கேள்விக்குறியாக விளங்குகிறது. மேலும், ஒவ்வொரு கல்லூரியும் சமத்துவப் படை என்ற ஒன்றை நிறுவி தொடர்ந்து கண்காணிக்கவும், களத்தில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் வலியுறுத்தியுள்ளது. ஒவ்வொரு துறையிலும் சம வாய்ப்புத் தூதுவர் என்ற ஒருவரை நிறுவி சம வாய்ப்பு மையம் முன்னெடுக்கும் அனைத்து நிகழ்வுக்கும் முன்னோடியாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இந்த அமைப்புகள் வெறும் கண்துடைப்பாக இல்லாமல் உண்மையான காரணத்தைக் கண்டறிந்து மாணவர்களிடையேயான பிரிவினையைத் தடுக்கும். தமிழகத்தின் தலைநகரில் இயங்கும் கல்லூரிகளில் இது நடைமுறைக்கு வராதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
1996இல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர் நாவரசு, ராக்கிங் கொடுமைக்காளாகி கொலை செய்யப்பட்ட பின் கடுமையான சட்டங்கள் நடைமுறைக்கு வந்து தற்போது ராக்கிங் ஓரளவிற்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் தீண்டாமை மற்றும் சாதியப் பாகுபாடுகள் அழிந்தொழிய பலரும் சேர்ந்து போராட வேண்டும். இந்தச் சாதியக் கொடுமை அரக்கன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தொடங்கி என்ஐடி, ஐஐஎம் என்று பல இடங்களில் மாணவர்கள் மட்டும் அல்லாமல் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என்று எவரையும் விட்டு வைக்கவில்லை. பள்ளிகளின் கதை தனி.
உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களையும், யுஜிசி அறிவுறுத்திய நெறிமுறைகளையும் பல்கலைக்கழகங்கள் நடைமுறைப்படுத்தினாலே போதும். இதுபோன்ற தலித் மாணவர் மரணங்கள் தவிர்க்கப்படலாம். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்களம் ஊரிலிருந்து அண்ணா பல்கலைக்கழகம் என்று ஒற்றைப் பெயரை நம்பி வந்த மாணவரின் கனவும் அவரது பெற்றோரின் கனவும் கானல் நீராய்ப் போயின. எதிர்காலத்தில் இதுபோல் நடக்கவிடக் கூடாது என்பதில் அனைவரின் கவனமும் இருப்பது அவசியம்.
உசாத்துணைகள்
- https://www.dtnext.in/news/tamilnadu/tamil-nadu-engineering-student-found-dead-in-hostel-room-841099#:~:text=CHENNAI%3A%20A%2019%2Dyear%2D,by%20suicide%2C%20the%20police%20said.
- https://newstodaynet.com/2025/07/25/anna-university-student-ends-life-in-campus/
- https://www.thehindu.com/news/cities/chennai/firstyear-student-at-anna-university-commits-suicide/article3325338.ece
- https://www.youtube.com/watch?v=VctTw-9-Zrc