அலட்டிக்கொள்ளத் தேவையற்ற அன்றாடம்
அவன் பிராய்லர் கோழிகள் வளர்ப்பவன்
ஐந்தெழுத்தில், நான்கெழுத்தில்
அல்லது மூன்றெழுத்தில்
உங்களுக்கு ஏதேனும் பெயர் தோன்றினால் அதனால்
நேரும் புண்ணியம் உங்களையே சாரும்
கோழிகள்
வெள்ள வெளேரென்று
இளமஞ்சள் அலகுடன்
குட்டியாய்ச் சிவந்த கொண்டையுடன்
கொழு கொழுவென…
ஆத்தாடி
என்ன அழகு
என் கண்ணே பட்டிடும் போல் இருக்கிறது
நகரத் தேவையில்லை
உட்கார்ந்த இடத்திலேயே
உணவும் நீரும்
இரவில் பகலொப்ப ஒளிரும் விளக்குகளும்
என்னா… வாழ்க்கடா…
வென்கொற்றக் குடையின் கீழ்
படிமமா உருவகமா உவமையா
அந்த அணியா இந்த அணியா
என்ன எழவோ
ஒவ்வொரு கோழியின் முதுகிலும்
ஒரு மைல்கல்லும்
ஒரு திசை காட்டும் கருவியும்
அதன் மேல் ஒரு பிளேடும்.
இவை இலவச மோட்சத்திற்கான
கடவுச்சீட்டு எனக் கொள்க
மற்றபடி
தீர்ப்பிடலும் தீர்த்துக்கட்டப்படுதலும்
உச்சுக் கொட்டத்தக்க
அதிசய நிகழ்வன்று அது
அன்றாடத்தின் தொடர் வினை
கொல்வதற்கே
வாழ்விக்கப்படும் சமூகத்தில்
பிராய்லர் கோழிகள்
பறப்பன? ஊர்வன?
உடலெங்கும் மசால் தடவி
எண்ணெய்ச் சட்டியில் மிதப்பன
தீக்குளிப்பன
அட்டைப் பெட்டிக்குள் அடைப்பன
தின்பன…
பல் இலகும் பானம் பருகிய பின்
ஒரே…
ஏ…..ப்….ப…ம்
எல்லோரும் எழுந்து நிற்க
தேசிய கீதம்
வெண் சுண்ணப்பறவைகள்
ஓவியத் தார்ச்சாலையைக் கடக்கிறது
பறவைகளின் மாலை நிழல்கள்
அவை சிந்திய தானிய மணிகளை
அவசர அவசரமாக அள்ளும்
கருவிழிகளின் மீது ஏறும்
கனரகச் சக்கரங்களை விரைந்து|
ரப்பர் கொண்டு அழித்துக்கொண்டிருந்தாள் சிறுமி.
சென்ற உயிர்க்கூடு திரும்பியது
கொக்கே கொக்கே வெள்ளைப்போடு என்று
வான் நோக்கும் சிறுமியின் விரல்கள் பற்றி நகக்கண்களில்
சாக்பீஸில் புள்ளியிடுகிறேன்
பறவைகளுக்குக் கிடைத்தது பத்து வானம்.
முழு நிலவை விழுங்கும் பூரான்கள்
அன்று வெள்ளிக்கிழமை
கெண்டைக்காலில் வழிந்த
இரத்தத்தை அலசியவள்
சாமி படங்களுக்குச் சாம்பிராணி போடவில்லை.
என்னை மடியில் கிடத்திக்கொண்டு
தலை வருடவுமில்லை.
பாம்பென நெளிந்து ஓடிய
அரணைப் புகுந்த கிழிந்த சேலையைக்
கிடுகுச் சந்தில் காணவுமில்லை.
பௌர்ணமி வெளிச்சம் இருளைப் போர்த்தப் போர்த்த
சாலகத்தில்
அம்மாவின் பாவாடையைச் சுற்றி மொய்த்தன
சங்கிலிப்பூரான்கள்.
அன்று முதல்
ஏதேன் தோட்டத்து ஆப்பிள் போல்
சிவந்து தொங்குகிறது முழுநிலா நாள்.