தமிழக அரசியல் சூழலில் பாசிசம் என்பது கடந்த பத்தாண்டுகளுக்கும் மேல் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதாவை எதிர்ப்பது மட்டுமே என அதன் வரையறையைச் சுருக்கிவிட்டதின் விளைவைத்தான், நாம் அண்மைக்காலமாகப் பார்த்துவருகிறோம்.
The Casteless Collective குழுவால் இசைக்கப்பட்டு, பாடகர் இசைவாணியால் பாடப்பட்ட ‘ஐ யாம் சாரி ஐயப்பா’ என்கிற பாடல், ஆறு வருடங்களுக்கு முன்பு இயற்றப்பட்டு, பல்வேறு மேடைகளில் பாடப்பட்டது. கடந்த பதினைந்து நாட்களுக்கு முன், சபரிமலை கோயிலுக்குப் போகும் காலகட்டத்தில், அந்தப் பாடலின் முதல் வரியை மட்டும் கத்தரித்துச் சமூகவலைதளத்தில் திட்டமிட்டுப் பரப்பப்பட்டது. அதன் விளைவாய் பாடகர் இசைவாணி கடும் நெருக்கடிக்கு உள்ளானார். அவரைக் கொலை செய்ய வேண்டும் என்கிற கோஷத்தோடும், ஆபாசமாகச் சித்திரித்தும், அவரது அலைபேசி எண்ணைப் பொதுவெளியில் பகிர்ந்தும் அவரை நூற்றுக்கணக்கானவர்கள் மிரட்டினர். சூழல் மோசமாவதை உணர்ந்த இசைவாணி, எல்லா ஆதாரங்களையும் தொகுத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றைச் சமர்ப்பித்தார். இந்த நேரம் வரை, அவரை மிரட்டியவர்கள் குறித்த நேரடி ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றும், தமிழக அரசோ சென்னை காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, “ஒரு மதத்தினர் இன்னொரு மதத்தினரைப் புண்படுத்துவதைத் தமிழக அரசு ஏற்காது” என்றும், “விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. சங் பரிவார் அமைப்புகள் இசைவாணிக்கு எதிராகச் செய்த மோசமான பரப்புரைகளில் ஒன்று, அவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர், அவருக்கு இந்து மதத்தை விமர்சிக்க உரிமை இல்லையென்பதாகும். இந்தப் பரப்புரையை அமைச்சர் சேகர் பாபு ஏற்றுக்கொண்டதின் வெளிப்பாடே அவரது கருத்து.
இசைவாணி பாடியது பெண் விடுதலையைக் கோரும் பாடல். 2018ஆம் ஆண்டு பெண்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பையொட்டி, அந்தப் பாடல் சம உரிமையைக் கோரி துவங்குகிறது. மற்றபடி அது முழுமையாக சபரிமலை சம்மந்தப்பட்ட பாடலே அல்ல. ஒருவேளை அப்படி இருந்தாலும், அதை இயற்றுவதற்கும் பாடுவதற்கும் இங்கே உரிமை மறுக்கப்படக் கூடாது, அதுவே ஜனநாயகம். இந்த அடிப்படை உரிமை எதன் பொருட்டு மறுக்கப்பட்டாலும், சம்மந்தப்பட்டவர்கள் மிரட்டப்பட்டாலும் அது பாசிசமே.
பாசிசத்தின் இந்த அளவுகோலை மறந்து, தங்கள் அரசியல் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கு ஏற்பச் செய்யப்படும் அரசியல் சாகசங்களைக் கொண்டு இங்கு பாசிசம் வரையறுக்கப்படுகிறது. இசைவாணி தன்னைப் பெரியாரின் பேத்தியாக உருவகப்படுத்திக்கொண்டே அந்தப் பாடலைப் பாடியிருக்கிறார். பெரியாரையும் அவரது அரசியல் கோட்பாட்டின் நீட்சியாகவும் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் திராவிட மாடல் அரசில், சட்ட ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாத ஒரு பாடகர், இவ்வளவு மோசமாகக் குறிவைக்கப்பட்டது பெரும் முரண்.
பெரியார் ஒரு சுதந்திரச் சிந்தனையாளர். ஒரே விடயத்திற்குப் பல கால சூழல்களில் வெவ்வேறு நிலைப்பாடுகளை அவர் எடுத்திருக்கிறார். இந்த முரண் குறித்து அவர் கவலைப்பட்டதே இல்லை. அந்தந்த நேரத்து நியாயத்தை எந்த முன்யோசனையும் இல்லாமல், அதன் விளைவுகளைக் குறித்து யோசிக்காமல் செயல்பட்டுவந்தவர் பெரியார். மேற்கத்திய நாடுகளில் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக உருவாகிவந்த கடவுள் மறுப்புக் கொள்கையை, இந்திய நிலப்பரப்பு பிரச்சினையான சாதியோடு இணைத்துச் செயல்பட்டுவந்தவர் பெரியார். ஆத்திகர்களுக்கு இங்கே இருக்கும் கட்டற்ற சுதந்திரத்தைப் போலவே, கடவுள் மறுப்புக் கொண்டவர்களுக்கும் அந்த உரிமை இருக்க வேண்டும் எனப் பேசிவந்தவர். அதன்படி பிற்போக்கான சமய நம்பிக்கைகளை மிகக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.
இது ஒரு தொடர் செயல்பாடாகக் தொடர முடியாதபடி, தமிழ்நாட்டில் கடவுள் மறுப்புக் குறித்துப் பேசுவதும் செயல்படுவதும் முழுமையாகத் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இன்று முழுமையான தோல்வியைச் சந்தித்திருக்கிறது திராவிட அரசியல்.
கடந்த அதிமுக ஆட்சியில், கந்த சஷ்டி குறித்துக் கறுப்பர் கூட்டம் வெளிப்படுத்திய கருத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாகினர். அவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டது. இன்றுவரை அந்த இழப்பிலிருந்து அவர்களால் மீள முடியவில்லை. அன்றைய எதிர்க்கட்சியான திமுகவும் அதிமுகவின் நிலைபாட்டையொட்டிதான் இருந்தது. கடவுள் மறுப்புப் பேசியே இயக்கம் வளர்த்த திராவிடர் கழகமும் அவர்களைக் கை விட்டது. சில இடது முற்போக்கு இயக்கங்கள் மட்டுமே அவர்களுடன் இருந்தன.
சமய நம்பிக்கைகளில் ஒளிந்திருக்கும் புனிதங்களைக் கட்டுடைக்கும் உரிமையும் இங்கு நிலைநிறுத்தப்பட வேண்டும். மாறாக, அரசியலமைப்புச் சட்டம் ஏற்கெனவே உறுதி செய்த அடிப்படை உரிமைகளைக் கோருவதற்குக் கூட இயலாத சூழலை இன்று தமிழ்நாடு வந்தடைந்திருக்கிறது.
ஒரு ஒப்பீட்டுக்காக, சில அளவுகோலின்படி பார்த்தோமேயானால், வைரமுத்துவின் ஆண்டாள் குறித்த சர்ச்சை, கறுப்பர் கூட்டத்தின் கந்தசஷ்டி குறித்த சர்ச்சை ஆகியவற்றில் கூட மத நம்பிக்கைகள் கேலிக்குரியதாக்கப்பட்டிருக்கிறது என்று சட்டம் ஒப்புக்கொள்ள வாய்ப்புண்டு, தார்மீக ரீதியாக அந்த உரிமையும் இருக்க வேண்டும் என்று நாம் கோரினாலும் கூட. ஆனால், இசைவாணி பாடிய பாடலில் அத்தகைய சர்ச்சைக்கான இடம் எதுவுமே இல்லாமல், அவர் இந்த அளவு மிரட்டப்பட்டது தமிழ்நாடு மோசமான சூழலை நோக்கி ஏற்கெனவே நகர்ந்துவிட்டது என்பதற்கான அறிகுறிகள். இந்தவேளையில்தான், பாசிசத்திற்கான வரையறைகள் குறித்து நாம் ஓர் உடையாடலைத் துவங்க வேண்டியிருக்கிறது.
இசைவாணி உண்மையிலேயே கிறிஸ்தவராக இருந்தாலும், நம்பிக்கைகளின் மீதும் புனிதங்களின் மீதும் கேள்வியெழுப்பினாலும், அவருக்கான உரிமை அளிக்கப்பட்டே ஆக வேண்டும். அதை முடக்குவதும், முடுக்குபவர்களின் குரலுக்கு ஆதரவாக இருப்பதும் பாசிசம்தான்.
இசைவாணி என்கிற தனிநபரோடு இது முடிந்துவிடாது. இன்று அவருக்கு நேர்ந்த நெருக்கடிகள், மிரட்டல்களைப் பார்த்து, இத்தகைய சர்ச்சைகளுக்குப் பயந்து, தன் உரிமைக் குரலை மத புனித தன்மைக்கு உட்பட்டு ஒருவர் தன்னைச் சுருக்கிக்கொள்வாரேயானால், அதுவே பாசிசத்தின் வெற்றி.
இசைவாணி என்கிற தனிநபரின் மாண்பு உறுதிசெய்யப்பட வேண்டும், அவர் பாடலுடனும் நாம் உடன் இருக்க வேண்டும். இந்த இரண்டுக்கும் வெவ்வேறு காரணங்கள் தேவையில்லை. அது நம் ஒவ்வொருவரின் எதிர்காலம் சம்மந்தப்பட்டது.