உண்மைகளை நீர்த்துப் போகச் செய்யும் கதையாடல்கள்

தலையங்கம்

சென்னை ரிப்பன் மாளிகை வாயிலில், இரண்டு மண்டலங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களின் 13 நாள் தொடர் போராட்டம், திமுக அரசால் அராஜகமான முறையில் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. போராட்டங்கள் சம்பிரதாயமான ஒன்றாக மாறியிருக்கும் சமகாலச் சூழலில், நியாயமான கோரிக்கைகளோடும் நெஞ்சுரத்தோடும் நடைபெற்ற இந்தப் போராட்டம் தனித்த கவனத்தையும் பெற்றிருந்தது. ராம்கி என்கிற தனியார் நிறுவனம் சட்டத்திற்குப் புறம்பாகத் தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்தது, தேர்தல் அறிக்கையில் திமுக கொடுத்த பணி உத்திரவாத அறிவிப்பு, மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி மாநகர ஆணையருக்கு எழுதிய கோரிக்கை உள்ளிட்டவற்றைச் சுட்டிக்காட்டி தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் நிகழ்ந்தேறியது.

இப்போராட்டத்தை, துவக்கத்திலிருந்து தமிழக அரசு சார்பாக மேயர் பிரியா, அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் கையாண்ட விதம் கடும் கண்டத்தை எதிர்கொண்டது. செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக கொடுத்த உத்திரவாதம் குறித்து கேள்வியெழுப்பிய நீலம் சோசியல் செய்தியாளரை மிக மோசமாகக் கையாண்டார் சேகர்பாபு. இரண்டு மண்டலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் போராட்டத்தில் பிற தொழிலாளர்கள் பங்கு பெற முடியாதபடி செய்தது, போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்தவர்களை ஒடுக்கியது, போராடும் மக்களுக்கு மாநகராட்சியின் கழிவறையை மறுத்தது என ஒடுக்குமுறையின் எல்லா வடிவத்தையும் பயன்படுத்தியது தமிழ்நாடு அரசு. இறுதியாக அமைச்சர் பி.கே.சேகர்பாபுவோடு இணைந்து செயல்படும் ஒருவரை வைத்து போராடும் இடத்தை அப்புறப்படுத்தச் சொல்லி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்து நள்ளிரவில் மிக மோசமான வன்முறையை ஏவி, போராட்டத்தை முடித்து வைத்தது காவல்துறை. அதே இரவு, ஆகஸ்ட் 14ஆம் தேதி, அதுவரை போராட்டம் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்காத தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது குடும்ப நிறுவனம் தயாரித்த ‘கூலி’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த புகைப்படங்கள் வெளியானது வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியது.

போராட்டம் முடிந்த அடுத்த நாளே தூய்மைப் பணியாளர்களுக்குச் சில திட்டங்களை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். முந்தைய இரவு காவல்துறையின் அராஜகத்தை மென்மையாகக் கண்டித்த கூட்டணிக் கட்சிகள், முதல்வர் அறிவிப்புகள் வந்த வேகத்திலேயே அவற்றைப் பாராட்டினர். அவை கவர்ச்சிகரமான சலுகைகளாக இருந்ததேயொழிய, தூய்மைப் பணியாளர்களின் அடிப்படை உரிமை சார்ந்த எந்த நியாயமும் அந்த அறிவிப்புகளில் இல்லை. தனியார்மயப்படுத்தியதில் பங்குதாரராக இருக்கும் எதிர்க்கட்சியான அதிமுகவும் அரசைக் குறை சொல்வதற்கான வாய்ப்பாக மட்டுமே இப்போராட்டத்தை எடுத்துக்கொண்டது.  தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையும், அவர்களின் கோரிக்கை குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அதன் தொடர்ச்சியாக சென்னை மாநகராட்சியின் பிற மண்டலங்களைச் சேர்ந்த சில தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, முதல்வருக்கு அவர்கள் நன்றி தெரிவிப்பதைப் போல ஒரு நாடகத்தை நிகழ்த்தினார் சேகர்பாபு. அதன் உச்சமாக, தனியார் முதலாளியான ராம்கியையும் அவர்கள் புகழுமாறு செய்தார். அரசைப் பாராட்டுவதற்கென்று சில ஏற்பாடுகளை ஆளும்வர்க்கம் செய்வது வாடிக்கையானது. ஆனால், எங்கோ ஆந்திராவில் இருக்கும் முதலாளியை உள்ளூர்த் தொழிலாளர்களைக் கொண்டு பாராட்ட வைத்தது வரலாற்றில் இதுவே முதன்முறை.

இத்தகைய சூழலில் போராட்டக்காரர்களின் கோரிக்கை, போராட்டம் முடித்து வைக்கப்பட்ட விதம், போராட்டக்காரர்களையும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களையும் காவல்துறை கைது செய்து அலைக்கழித்தது, திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த பொய்யான வாக்குறுதி உள்ளிட்டவைதாம் பேசுபொருளாகியிருக்க வேண்டும். ஆனால், கடந்த நான்கரை வருடங்களாக திமுக ஐடி விங் துணையோடு உருவாக்கப்படும் கருத்துருவாக்கம் இந்தப் போராட்டத்திலும் நிகழ்ந்தது. போராட்டக்காரர்களுக்கும் அவர்களது கோரிக்கைகளுக்கும் உள்நோக்கம் கற்பிக்கப்பட்டது. இறுதியாக, தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கையே குலத்தொழிலை ஊக்குவிப்பதாகும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் அதியமான் இருவரும் கருத்து தெரிவித்தனர்.

நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தூய்மைப் பணியாளர்கள் யாருமே அந்தப் பணியை விரும்பிச் செய்பவர்கள் அல்லர். தமது அடுத்த தலைமுறை அதைச் செய்ய வேண்டும் என்கிற எண்ணமும் அவர்களிடத்தில் இல்லை. சமூகநீதியைப் பேணும் யாரும், தூய்மைப் பணியைத் தலித் சமூகத்தவர் மட்டுமே செய்ய வேண்டும் எனச் சொல்லப்போவதில்லை. தொழிலாளர்கள் தங்கள் மீது தனியார்மயம் நிகழ்த்தும் சுரண்டலைக் கேள்விக்குட்படுத்தி, பணி நிரந்தரம் கேட்கும் தருணத்தில் இந்த உரையாடலை முன்னிறுத்துவது தவறானது.

60 சதவீதத்திற்கும் மேலான பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாகிக்கொண்டிருக்கும் வேளையில், இந்திய இட ஒதுக்கீடு முறை கேள்விக்குறியாகிறது. இதன் ஆபத்தை உணர்ந்தே தனியார் துறையில் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட வேண்டும் என்கிற குரல் அண்மைக்காலமாக அதிகரிக்கத் துவங்கியிருக்கிறது. குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்களைக் கண்டடைந்து பெரிய லாபம் ஈட்ட வேண்டும் என்பதை விட தனியார் முதலாளிகளுக்கு வேறு என்ன கொள்கையோ, நோக்கமோ இருந்துவிட முடியும்? இத்தகைய சூழலில் தனியார்மயம் குலத்தொழிலை ஒழிப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட கொள்கை அமைப்பைப் போல முன்னிறுத்துவது நாம் இதுவரை பேசிவந்த அரசியலின் மிகப்பெரிய சறுக்கல்.

இந்தியாவில் இரயில் போக்குவரத்து தொடங்கிய பின்னர் அதுவரையிலான தொழில் முறைகள் மாறி முதலாளித்துவம் வளரும், சாதியின் இறுக்கம் தளர்வடையும் என்றார் கார்ல் மார்க்ஸ். ஆனால், இரயில்வே தண்டவாளங்களுக்காக காடு, மலைகளைச் சீர்படுத்தும் பணிகளில் பெருமளவு ஈடுபடுத்தப்பட்டது தலித்துகள்தாம். இரயில் போக்குவரத்து துவங்கப்பட்ட பின்னரும் அதன் தூய்மைப் பணிகளுக்குத் தலித்துகளே பணியமர்த்தப்பட்டனர். சாதியின் தலையீடு இல்லாத நவீன மாற்றம் என நாம் எதையுமே குறிப்பிடுவதற்கில்லை. தலித்துகளின் சமூக, பொருளாதார நிலையே ஆளும் வர்க்கத்தினரின் மூலதனமாக இருக்கிறது. இந்தப் புரிதலில்தான் சமூக – அரசியல் – பொருளாதார நிலையை ஒரே நேர்கோட்டில் நிறுத்திச் சிந்தித்தார் பாபாசாகேப் அம்பேத்கர். அவை இங்கு ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தது என்றார். இதை எதிர்கொள்ள அரசியல் சாசனத்தின் துணையோடு பல திட்டங்களையும் வழிவகைகளையும் செய்ய வேண்டியிருக்கிறது. கல்வியில் இட ஒதுக்கீடு, அரசுப் பணியில் இடஒதுக்கீடு, பணி உயர்வில் இட ஒதுக்கீடு போன்றவை எல்லாம் மேற்சொன்னவற்றை எதிர்கொள்ள நாம் அமைத்துக்கொண்ட ஏற்பாடுகள். இதன் ஊடாகச் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. குறிப்பாக, தலித்துகளில் மத்தியதர வர்க்கம் உருவாக இந்தத் திட்டங்களே வழிவகுத்தது. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், வங்கிக்கடன் உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்த நவீன காலத்திலும் தலித் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வங்கிக்கடன் மறுக்கப்படுகிறது. இத்தகைய சமூக அநீதிகளைப் பணி உத்திரவாதம் உள்ளிட்டவற்றால் மட்டுமே ஓரளவு எதிர்கொள்ள முடிகிறது; அடுத்த தலைமுறையினரின் வாழ்நிலையை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்த்துவதற்குப் பெருமளவு உதவுகிறது. இந்தப் பின்னணியில்தான் நாம் தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரக் கோரிக்கையைப் புரிந்துகொள்ள வேண்டும். பணி நிரந்தரம் என்பது தாம் செய்யும் வேலையைப் பரம்பரை பரம்பரையாக நீட்டிப்பதற்காக அல்ல, மாறாக அடுத்த தலைமுறையினரின் வாழ்நிலையை மாற்றவே.

தூய்மைப் பணியாளர்களின் இந்நிலை மாறி, தூய்மைப் பணிகள் இயந்திரமயமாக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அரசுப் பணி என்கிற உத்திரவாதம் மறுக்கப்பட்டு, தனியார் முதலாளிகள் கொழிக்கவும், இத்தகைய பொறுப்புகளிலிருந்து அரசு தன்னை விடுவித்துக்கொள்வதற்கும் தனியார்மயம் ஊக்குவிக்கப்படும்போது, எல்லா வகையான ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாகி தமது அடிப்படை உரிமையைக் கேட்கும் மக்களை வஞ்சிப்பது எந்த வகையில் நியாயம் என்பதுதான் நமது அடிப்படைக் கேள்வியாகவும், அது சார்ந்த கோரிக்கைகளாகவும் இருந்திருக்க வேண்டும்.

தூய்மைப் பணியாளர்கள் குறித்த எந்த அக்கறையும் தமிழகத்தை ஆண்ட கட்சிகளுக்கு இல்லையென்பதற்கு மலக்குழி மரணத்தில் தமிழ்நாடு முதல்நிலை வகிப்பதே நேரடிச் சான்று. இவையெல்லாம் இத்தருணத்தில் கூடுதல் பேசுபொருளாகியிருக்க வேண்டும்.

இந்தப் போராட்டத்தை அரசு எதிர்கொண்ட விதம், பிரதானக் கோரிக்கையைப் புறந்தள்ளி உருவாக்கப்பட்ட உரையாடல்கள், மாற்றுத் திட்டங்கள் இல்லாத கண்மூடித்தனமான தனியார்மயப் போக்கு மிகப்பெரிய அநீதியை இழைத்திருக்கிறது திமுக அரசு. அதில் தலித் நலன்களுக்காக உருப்பெற்ற இயக்கங்களும் தம்மை இணைத்துக்கொண்டது துரதிர்ஷ்டவசமானது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger