நீலம் இதழுக்கு இது ஆறாம் ஆண்டு. கொரோனா பெருந்தொற்று காலத்தில் அச்சு ஊடகங்கள் முடங்கியபோது துவங்கப்பட்ட இதழ். தலித் முன்னோடிகளால் தலித்தியச் சட்டகத்தைக் கொண்டு சமூகப் பிரச்சினைகளை அணுகும் முறைமை தொண்ணூறுகளில் முழுமை பெற்றது. வாக்கரசியலே சமூக அரசியலாக மாறிப்போனதின் விளைவாய் தலித்தியப் பார்வைகள் அவ்வப்போது தத்தமது தேவைக்கேற்ப உருமாறின. இந்தச் சூழல் கடும் பின்னடைவைச் சந்திக்கத் தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில் புதிய பாய்ச்சலோடு வெளியானது நீலம் இதழ் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியும்.
நீலம் இதழால் முன்னெடுக்கப்பட்ட உரையாடல்கள், அது உருவாக்கிய விளைவுகள் என்று யோசிக்கும்போது தமிழில் கருதத்தக்கக் காரியங்கள் சிலவற்றை முன்னெடுத்திருக்கிறோம்; ஏற்கெனவே இருந்ததை நினைவுக்குக் கொண்டு வந்திருக்கிறோம்; சிலவற்றைத் தக்க வைத்திருக்கிறோம் என்று கூறலாம். தலித் அடையாளம் பல்வேறு காரணங்களால் வெறும் அரசியலாக மிஞ்சிவிட்ட நிலையில், அவற்றைக் கலை – இலக்கிய – பண்பாட்டுத் தளத்தில் தூக்கிப் பிடிக்கக்கூடிய காரியத்தை நீலம் செய்திருக்கிறது என்று கருதுகிறோம். கிட்டத்தட்ட அவற்றை ஆர்ப்பாட்டம் இல்லாமல் கடைபிடிக்கிறோம் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
சாதிமயமான சமூகத்தில் ஒடுக்கப்பட்டோரின் குரலைப் பிரதிபலிப்பதில் நீலம் இதழ் முக்கியமான பங்களிப்புகளை மட்டுமல்லாது, உரையாடல்களையும் கிளர்த்தியுள்ளது. இவ்விடத்தில் நீலம் இதழோடு சேர்த்து நீலம் பதிப்பகம், அது நடத்தும் கூட்டங்கள், அதன் தொடர்ச்சியில் அமைந்த நீலம் புக்ஸ், அங்கு நடைபெறும் கூடுகைகள் எனப் பலவற்றையும் சேர்த்தே பார்க்க வேண்டும்.
நீலம் இதழ் கருதிய முடிவுகள் பலவற்றைச் சாத்தியப்படுத்தியுள்ளது. பல புதிய எழுத்தாளர்களுக்கான களமாக இருந்துள்ளது. அவர்களில் சிலரது படைப்புகள் நூல்களாகவும் வெளியாகியிருக்கின்றன. கூடுதலாக, எழுதுவதை ஊக்குவிக்க நிதிநல்கை அறிமுகப்படுத்தி மூன்றாண்டுகள் ஆகியிருக்கிறது. அப்படைப்புகளும் நூல்களாகியிருக்கின்றன. பல புதிய தலித்திய உள்ளடக்கங்களைக் கொண்டவை அவை. தலித்தியம் சார்ந்து குறிப்பிட்ட நிலைப்பாடு மட்டுமே பிரசுரிக்கப்படும் என்று தன் வாயிலை நீலம் மூடிக்கொண்டதில்லை. மாறாக, தலித் என்ற அடையாளத்தைப் பரந்துபட்ட தளத்தில் புலப்படுத்தும் எந்தக் குரலையும் ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாட்டையே மேற்கொண்டு வந்துள்ளது. இதழ் பற்றி முன்முடிவு கொண்டு வசைபாடியவர்களாக இருப்பினும், அவர்களின் பங்கெடுப்பையும் அங்கீகரித்துள்ளது. எழுத விரும்புகிறவர்களுக்கான களமாகவே இது இருந்துள்ளது.
படைப்புகள் மட்டுமல்லாது இதுவரை தமிழில் வெளிவராத பல்வேறு கட்டுரைகளை அது பிரசுரித்துள்ளது. குறிப்பாக, நீலம் இதழில் வெளியாகியுள்ள வரலாற்று ரீதியான கட்டுரைகளும், பௌத்தம் தொடர்பான கட்டுரைகளும் இதுவரை வேறு தளங்களில் வெளிவராதவை. அதேபோல படைப்பு சார்ந்தும், வரலாறு சார்ந்தும் தமிழின் கவனம் பெற்ற தொடர்கள் வெளியாகியுள்ளன. தலித் பிரச்சினைகளையும், பிற பிரச்சினைகளையும் தலித் நோக்கிலிருந்து அணுகி எழுதப்பட்ட தலையங்கங்கள் குறிப்பிடத்தக்கவை. முக்கிய ஆளுமைகளின் நீண்ட நேர்காணல்கள் வெளியாகியுள்ளன. ஓவியம் போன்ற நுண்கலைகள் பற்றிய தொடர்களும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகளுக்கும் படைப்புகளுக்கும் தொடர்புடைய புகைப்படங்களும் ஓவியங்களும் உரிய வெளிப்பாட்டுத் தரத்தோடு வெளியிடப்படுகின்றன. தலித் இதழியலுக்கென்று நீண்ட மரபு இருந்தாலும் அதில் நீலம் தனித்து நிற்கிறது என்பதில் இரண்டு கருத்திருக்க முடியாது. தமிழ்நாட்டின் தலித் பிரச்சினைகளை, அரசியல் சிக்கல்களை எதிர்காலத்தில் ஆய்வுக்குட்படுத்தும் யாரொருவருக்கும் நீலம் இதழ் அதன் சமகாலத்தைப் பதிவுசெய்த முக்கிய ஆவணமாக இருக்கும் என உறுதியாகச் சொல்ல முடியும்.
நீலம் இதழ் இளைஞர்களிடையே மட்டுமல்ல அறிஞர்களிடையேயும் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது. ஆனால், பலரும் அதைப் பற்றி மௌனம் காக்கவே விரும்புகிறார்கள். அதைப் பற்றிப் பேசினால் அதன் இயக்கத்தை ஒத்துக்கொள்வது போலாகிவிடும் என்று கருதுகிறார்கள்.
நீலம் எந்த தனிமனிதரின் புகழ் பாடுவதாகவோ, தனிமனிதர்களின் கருத்துகளைத் திணிப்பதாகவோ இருந்தது இல்லை. அது தத்துவத்தை மையமாகக் கொண்டுள்ளது – அம்பேத்கரியம் என்னும் தத்துவம். இயக்குநர் பா.இரஞ்சித் போன்றோர் வெளியிடுவதாலேயே பொருளாதாரக் குறை இல்லாமல் வருகிறது என்று பொருளல்ல. சிற்றிதழ்கள் எதிர்கொள்ளும் எல்லாவிதச் சிக்கல்களையும் கொண்டிருப்பினும் தொடர்ந்து இதழைக் கொண்டு வர வேண்டும் என்னும் வேட்கைதான் இதன் தொடர்ச்சியை இயக்கிக்கொண்டிருக்கிறது.
இப்பணியை நவீன தொழிற்நுட்ப மாற்றங்களை உள்ளடக்கியும், பரந்துபட்ட வாசகர்களைச் சென்றடைய வேண்டியும் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கின்றன. நூறாண்டுக்கு மேலான தலித் அரசியலுக்கும், கலை இலக்கியப் பங்களிப்புக்கும் வெகுஜன தளத்தில் உரிய இடம் கிடைக்காமலிருந்தாலும், வெகுஜன அரசியலை இயக்குவதே தலித் உரையாடல்கள்தான் என்பதில் எந்த ஐயமும் இருக்கத் தேவையில்லை. இந்த உண்மையை உணர்ந்தே ‘பொது’ என்கிற பொய்யில் கரையாமல், கூர்மையான அரசியல் அடித்தளத்தோடு இயங்க வேண்டிய அவசியத்தையும் பொறுப்பையும் உணர்ந்து நீலம் இயங்கிக்கொண்டிருக்கிறது.
இந்தப் பயணத்தில் எங்களோடு இணைந்து பயணிக்கும் வாசகர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் என எல்லா வகையிலும் உறுதியாக உடன்வரும் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இனிவரும் காலங்களில் நீலம் தன் எல்லையை விரிக்க முற்படும்.