2026 பலவிதங்களில் முக்கியமான ஆண்டாக இருக்கப்போகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. எல்லா அரசியல் நிகழ்வுகளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்த ஆண்டு தேர்தலை மனதில் இருத்தியே நகர்கின்றன. ஆனால், தலித் மக்களைப் பொறுத்தவரை தேர்தலை மட்டுமே மனதில் வைத்து இயங்க முடியாது. அதைத் தாண்டிய விசயங்களையும் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில், இந்தத் தேர்தலில் தலித் மக்களின் முக்கியத்துவமும் தலையீடும் எவ்வாறு இருக்கப் போகிறது என்பதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இதில் தலித் மக்களின் பிரச்சினைகள் ஏதேனும் பிரதிபலிக்கப்பட வாய்ப்பிருக்கிறதா என்றால், இப்போது வரையில் மைய நீரோட்டத்தைப் பாதிக்கக் கூடிய வகையில் எந்தப் பிரச்சினையும் மாற்றப்படவில்லை. தலித் மக்களுக்குப் பிரச்சினைகளே இல்லை அல்லது தீர்ந்து போய்விட்டன என்பது இதன் பொருளல்ல. தலித் மக்களின் பிரச்சினைகள் அப்படியே இருக்கின்றன; மேலும் தொடர்கின்றன என்பதுதான் உண்மை. ஆனால், அவை மையச் சொல்லாடலாக மாறவில்லை அல்லது மாற்றப்படவில்லை என்பதுதான் இதன் பொருள்.
தலித் அமைப்புகள் களத்தில் இருப்பினும் தலித் பிரச்சினைகளை ‘பொது’ விவாதமாக்க முடியவில்லை. இவற்றைத் தலித் அமைப்புகளின் பிரச்சினையாகச் சுருக்கிவிட நாம் விரும்பவில்லை. இது ஒட்டுமொத்த அரசியல் வலைப்பின்னலோடு தொடர்புடையது. அந்த வகையில் விரிந்த அளவில் இது இச்சமூகத்தின் பிரச்சினையாகும்.
இரண்டு விதமான பிரச்சினைகள் இங்கு தொடர்ந்து இருந்து வருகின்றன. ஒன்று, தலித்துகள் அன்றாடம் சந்திக்கும் சாதிய வன்முறைகள். இது உடைமை அழிப்பு, உடல் வன்முறை, உளவியல் சிக்கல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. காயம் தொடங்கி மரணம் வரை நடந்துவிடுகிறது. இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு சட்டரீதியிலானதே. காவல்துறை தொடங்கி உள்ளூர் நிர்வாக அமைப்புகள், நீதிமன்றம் வரையிலும் சென்று போராட வேண்டியுள்ளது. தனி நபராகப் போராடுவது, நடந்த வன்முறையைக் காட்டிலும் துயரமானதாக மாறிவிடுகிறது. சமரசமின்றியும் தொடர்ச்சியாகவும் போராடக்கூடிய அமைப்புகள் இருந்தால் மட்டுமே இவற்றில் வெகு சொற்பமாகத் தண்டனைகளும் நிவாரணங்களும் கிடைக்கின்றன. ஆனால், எதார்த்தத்தில் வன்முறையைச் சந்திக்கும் தலித் மக்களுக்கு எல்லாச் சூழலும் எதிராகவே இருக்கிறது. அரசின் நிர்வாக அமைப்பு தொடங்கி, கட்சிகள் வரையிலும் இந்த விசயங்களில் தலித் மக்களுக்கு எதிராகவே இருக்கின்றன. பலவிதங்களில் அதிமுக ஆட்சியிலிருந்து மாறுபட்டதாகத் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பும் ‘திராவிட மாடல்’ திமுக ஆட்சியிலும் தலித் மக்கள் விசயத்தில் குறிப்பிடும்படியான மாற்றங்கள் நடைபெறவில்லை. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விட இதனால் ஏற்படும் அதிருப்திகளைச் சரி செய்வதற்கான அடையாள அறிவிப்புகள், சில அங்கீகரித்தல்கள் போன்றவற்றைச் செய்வதற்கு இந்த ஆட்சி கற்று வைத்திருக்கிறது. திமுக ஆட்சிக் காலத்தில் ஆணவக் கொலைகள், வேங்கை வயல் உள்ளிட்ட பிரச்சினைகள் சார்ந்து பெரும் புகார்கள் இருக்கின்றன.
இரண்டாவது பிரச்சினை, பட்டியலின / பழங்குடியின மக்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்கள். பிற மாநிலங்களில் இருப்பதைப் போல தமிழ்நாட்டிலும் எஸ்.சி / எஸ்.டி ஆணையத்தை இந்த அரசு உருவாக்கியது வரவேற்புக்குரியதுதான் என்றாலும் இதன் செயற்பாடுகளுக்கு அரசு மேலும் வழிவகை செய்து தர வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதே போல இம்மக்களுக்குச் செலவிடப்படும் நிதியாதாரம் பற்றி நிலவும் சிக்கலைச் சரி செய்யவும் பதிலளிக்கவும் அரசு முற்பட வேண்டும். இம்மக்களுக்கான திட்டங்களுக்காக மத்திய அரசால் அனுப்பப்படும் சிறப்பு உட்கூறு நிதி முறையாகச் செலவிடப்படவில்லை என்றும், திருப்பி அனுப்பப்படுகிறது என்றும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. இதைப் பற்றி அரசு நிலையான முடிவுக்கு வர வேண்டும். மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் தலித் மக்களுக்காக முன்னெடுக்கப்படும் புதிய முயற்சிகளுக்கான நிதி சிறப்பு உட்கூறு நிதியிலிருந்தே எடுத்துக் கையாளப்படுகின்றன என்று கூறப்படுவதையும் கவனத்தில் எடுத்துப் பார்க்க வேண்டும். அதாவது, அந்த நிதி தலித்துகளுக்கென ஒதுக்கப்பட்ட அரசுத் திட்டங்களில் செலவிடப்படாமல், அரசின் புதிய திட்டங்களாக அறிவிக்கப்படுபவற்றுக்குக் கையாளப்படுவதாகக் கூறப்படுவதைக் குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்.
தலித்துகளுக்கென ஒதுக்கப்பட்ட திட்டங்களிலே இத்தகைய கேள்விகளும் சிக்கல்களும் இருக்கும் பட்சத்தில் தனியார் துறைகளில் இடஒதுக்கீடு, பொதுச் சொத்துகளில் ஏலம், சிவில் உரிமைகளில் பங்கு போன்றவற்றில் இவர்களின் நிலை பற்றி எந்தக் கேள்வியும் எழுப்பக்கூட முடியாத நிலையில் இருக்கிறோம்.
இந்தச் சூழல்களோடு இணைந்ததுதான் தலித்துகளின் சமூகப் பண்பாட்டு வெளியும். தமிழ்நாட்டில் உருவாகியிருக்கும் பண்பாட்டுச் சொல்லாடல்களிலும் ஆய்வுப் பரப்புகளிலும் சாதி பெரும்பான்மைவாதத் தன்மையே விரவிக்கிடக்கிறது. கடுமையான எதிர்ப்பும் போராட்டமும் இருக்கும் பட்சத்தில்தான் இத்தளங்களில் சிறு இடம் அளிக்கப்படுகிறது. அதுவும் புதிய புதிய சொல்லாடல்கள் எழும்போது மறைந்து போகிறது.
தேர்தல் என்பது திருவிழா. பெருங்கூட்டமும் பெருங்கட்சிகளும் வியாப்பித்திருக்கும் சூழலில் எளிய மக்களின் குரல் கேட்கும் நிலை இருக்காது. ஆனால், தலித் மக்களின் குரலை, தலித் பிரச்சினைகள் மீதான பேர சக்தியாக மாற்றினால்தான் அவர்களை இக்கட்சிகள் திரும்பிப் பார்க்கும். இல்லையெனில் வெறும் ஓட்டு வங்கியாகத்தான் பார்க்கும். தலித் மக்களின் எண்ணிக்கை தேர்தலில் பெரும் சக்தி. இந்தியாவில் இத்தகைய காலகட்டத்தில்தான் எண்ணிக்கை காரணமாக தலித் மக்கள் அரசியல் கட்சிகளால் கண்டுகொள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்களை நாடி அரசியல்வாதிகள் வருகிறார்கள். இம்மக்களின் ஆதரவு அவர்களுக்குத் தேவைப்படுகிறது. இந்தச் சூழல்தான் இம்மக்களின் தேவைகள் மீதான அழுத்தங்களை உருவாக்குவதற்கான காலம். ஆனால், இன்றைய தமிழ்நாட்டில் தலித் மக்கள் குறித்தான அத்தகைய நிர்பந்தம் ஏதும் இக்கட்சிகளுக்கு இல்லாமல் போய்விட்டது என்பது துயரம்.




