எப்ஸ்டீன் கோப்புகள்: அதிகாரத்தைப் பாதுகாக்கும் மௌனம்

கவிதா முரளிதரன்

மிழ்நாட்டிற்கும் எப்ஸ்டீன் கோப்புகளுக்கும் (Epstein files) என்ன தொடர்பு? அமெரிக்கத் தொலைக்காட்சிகளிலும் வெகுஜன ஊடகங்களிலும்கூட மிகப்பெரிய அளவில் விவாதங்களைக் கிளப்பாத எப்ஸ்டீன் கோப்புகள், நம்மைப் பொறுத்தவரை இறக்குமதி செய்யப்பட்ட ஒரு சர்ச்சையாகத் தோன்றலாம். ஆனால், எப்ஸ்டீன் கோப்புகளுக்கும் அதனைச் சுற்றியுள்ள போக்குகளுக்கும் ஓர் உலகளாவிய தன்மை உண்டு. எப்ஸ்டீன் கோப்புகள் என்பது ஜெப்ரி எப்ஸ்டீன் என்கிற தனிமனிதனின் குற்றங்களைப் பற்றியது மட்டுமல்ல. எல்லைகளைக் கடந்து அதிகாரம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பற்றியதும்கூட. அரசியல் செல்வாக்கு அல்லது அதிகார ரீதியிலான செல்வாக்கு என்பது இதுபோன்றதொரு மிகப்பெரிய குற்றத்தின் விசாரணையை, அதன் போக்கை எப்படி மென்மையாக்குகிறது என்பது பற்றியதும். பொறுப்புக்கூறலை இல்லாமலாக்குகிறது. அதிகாரத்துக்கு நெருக்கமாக இருப்பதன் மூலம் தண்டனையற்ற தன்மையை இயல்பாக்குகிறது.

தமிழ்நாட்டில், இந்தியாவில் பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். சமீபத்தில் மீண்டும் பேசுபொருளாகியிருக்கும் வாச்சாத்தி வன்கொடுமை தொடங்கி குஜராத்தில் உனாவ் பாலியல் குற்றம் வரையிலும் அதைத் தாண்டியும்கூட நீளும் பட்டியல் அது.

நிதி ஆலோசகராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய எப்ஸ்டீன், அரசியல்வாதிகள், அரசு குடும்பத்தினர், பணக்காரர்கள், கல்வியாளர்கள் என உலகின் மிகச் சக்திவாய்ந்த நபர்களுடன் உறவுகளை வளர்த்துக்கொண்டார்.

ஜூலை 2019இல்தான் அமெரிக்க ஃபெடரல் வழக்கறிஞர்கள் அவர் மீது சிறார்களைப் பாலியல் கடத்தலில் ஈடுபடுத்தியதாகக் குற்றம் சுமத்தினார்கள். 2002 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் ஃபுளோரிடாவிலும் நியூயார்க்கிலும் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகள் உட்பட பலரை வேலைக்கென்று அமர்த்தி பாலியல்ரீதியிலான சுரண்டலில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், இது 2019இல் தொடங்கிய கதை அல்ல.

2008இலேயே எப்ஸ்டீன் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். ஃபுளோரிடாவில் சர்ச்சைக்குரிய ‘குற்ற ஒப்புதல் ஒப்பந்தத்தைப்’ (plea agreement) பெற்றார். ஒரு குழந்தையைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதை அவர் ஒப்புக்கொண்டார். இதற்குச் சுமார் 13 மாதங்கள் சிறையில் இருந்தார். அதில் பெரும்பகுதி வேலைவிடுப்பு அடிப்படையில் அமைந்தது. அதாவது, பகல் நேரத்தில் சிறையைவிட்டு வெளியேற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இப்படிப்பட்ட ஒப்பந்தம் மூலமாக அவருடன் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்குப் பாதுகாப்பு கிடைத்ததுடன், கடுமையான ஃபெடரல் விசாரணைகளிலிருந்து அவரையும் காப்பாற்றியது.

செல்வமும் செல்வாக்கும் இருந்தால் நீதி எப்படி வளையும் என்பதற்கு அடையாளமாக இன்று இந்த ஒப்பந்தம் அடையாளப்படுத்தப்படுகிறது.

அடிப்படையில் ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ என்பது குற்றவியல் விசாரணைகள் மற்றும் சிவில் வழக்குகளின் மூலம் வெளிவந்த ஆயிரக்கணக்கான பக்க ஆவணங்களைக் குறிக்கிறது:

  • எப்ஸ்டீனின் தனியார் விமானத்தின் பயணப் பதிவுகள் (Flight logs)
  • சக்திவாய்ந்த நபர்களின் பெயர்கள் அடங்கிய தொடர்பு புத்தகங்கள்
  • பாதிக்கப்பட்டவர்களின் சத்தியப் பிரமாண வாக்குமூலங்கள்
  • உள்நிலைத் தொடர்புகள், மின்னஞ்சல்கள்
  • நிதிப் பதிவுகள்
  • நீதிமன்ற விசாரணைப் பிரதிகள்

அமெரிக்காவில் எப்ஸ்டீனுக்கு என்று தனித் தீவு இருந்தது. 1990களில் எப்ஸ்டீன் வாங்கிய இந்தத் தீவுக்குத் தனி விமானம் அல்லது படகு மூலமாகத்தான் செல்ல முடியும். தனிமையான இந்தத் தீவில்தான் சிறார்களின் கடத்தலும் பாலியல் சுரண்டலும் நடந்ததாகப் பின்னர் வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினார்கள். எப்ஸ்டீன், அவரது சகாக்கள், ஏகப்பட்ட விருந்தினர்கள் ஆகியோர் இந்தத் தீவுக்கு வந்துசென்றிருப்பதை எப்ஸ்டீனின் விமானப் பயணப்பதிவுகள் காட்டுகின்றன. 2019இல் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டு அதே வருடம் அவரது மர்மமான மரணத்துக்குப் பிறகு அதிகாரிகள் தங்களது விசாரணையின் ஒருபகுதியாக இந்தத் தீவைச் சோதனை செய்தார்கள்.

இந்தத் தீவு ஏன் இந்தக் கதையில் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது? பணமும் செல்வாக்கும் அதிகாரமும் இருந்தால், உங்களுக்கென்று தனிமையை உருவாக்கிக்கொள்ளலாம், சமூகம் எட்டிப்பார்க்க முடியாத தொலைவில் நின்றுகொள்ளலாம், யாரும் தொட முடியாத தூரத்தில் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்பதன் அடையாளமாக இந்தத் தீவு இருக்கிறது.

எப்ஸ்டீனைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்கள். 2021இல் அவரது நீண்டகால சகாவான கிஸ்லேன் மேக்ஸ்வெல் (Ghislaine Maxwell) பாலியல் கடத்தல் தொடர்பான குற்றங்களுக்காக அமெரிக்க நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, 20 வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றார்.

எப்ஸ்டீனின் பதிவுகளில் பல முக்கியப் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் தனது அறக்கட்டளையின் பணிகளுக்காக எப்ஸ்டீனின் விமானத்தில் பலமுறை பயணித்திருப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால், சட்டவிரோதமான நடவடிக்கைகள் பற்றி எதுவும் தெரியாது என்றிருக்கிறார்.

இன்றைய அதிபரான டொனால்ட் டிரம்பின் பெயர் கிட்டத்தட்ட 38,000 முறை எப்ஸ்டீனின் கோப்புகளில் இடம்பெற்றிருக்கிறது. எப்ஸ்டீன் கைது செய்யப்படுவதற்குப் பல வருடங்களுக்கு முன்பே அவரது தொடர்பைத் துண்டித்துவிட்டதாக டிரம்ப் சொல்லியிருக்கிறார்.

தனது 17ஆவது வயதில் தன்னைப் பாலியல் வல்லுறவு செய்ததாக விர்ஜினியா ஜூஃப்ரே தொடர்ந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் 2022இல் சமரசத்தின் மூலம் முடித்துக்கொண்டார் முன்னாள் இளவரசர் ஆண்டிரூ. சிறுமியுடன் பாலியல் வல்லுறவு கொண்ட சட்டவிரோத செயலுக்காக ஆண்டிரூவுக்குக் கிடைத்திருக்கும் அதிகபட்ச தண்டனை அவர் இனி இளவரசர் என்கிற பட்டத்தைப் பயன்படுத்தக்கூடாது என்பதுதான். மிகச் சமீபத்தில் எப்ஸ்டீனிடம் இரகசிய அரசத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டிருக்கலாம் என்கிற அடிப்படையில் இங்கிலாந்து காவல்துறையால் ஆன்டிரூ கைது செய்யப்பட்டு உடனடியாக விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், இங்கிலாந்தின் அரசப் பரம்பரையில் கைதாகியிருக்கும் முதல் நபராக அவர் இருக்கிறார்.

இவர்கள் மட்டுமல்ல, பில் கேட்ஸ், நோம் சாம்ஸ்கி உள்ளிட்ட பல முக்கியமான பெயர்கள் எப்ஸ்டீனின் கோப்புகளில் இடம்பெற்றிருக்கின்றன.

சமூக ஊடகங்களில், வெகுஜன ஊடகங்களில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவது போல விமானப் பதிவிலோ, அல்லது புகைப்படத்திலோ ஒரு பெயர் இடம்பெறுவதாலேயே அவர்கள் குற்றவாளியாகிவிட மாட்டார்கள்தான். ஆனால், பெரிய கேள்வி ஒன்று இருக்கிறது. பாலியல் சுரண்டலில், பாலியல் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் எப்படிப் பல பத்தாண்டுகளாக உலகின் முக்கியமான நபர்களுக்கிடையில் அவ்வளவு வசதியாக நடமாட முடிந்தது?

இதற்கான பதில் ஆவணங்களில் இல்லை. எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட சிறார்களின் குரல்களில் இருக்கிறது.

‘நோபடிஸ் கேர்ள்’ (Nobody’s Girl): தலைப்புச் செய்திகளுக்குப் பின்னால் இருந்த அந்தச் சிறுமி விர்ஜினியா ராபர்ட்ஸ் ஜூஃப்ரே, பிறக்கும்போது தலைப்புச் செய்தியில்லை. சொல்லப்போனால் அவரது குடும்பத்தில் சிறுவயதில் அவர் புறக்கணிப்பையே எதிர்கொண்டார். அவரது தற்கொலைக்குப் பின்னால் வெளியாகியிருக்கும் சுயசரிதையான நோபடிஸ் கேர்ள் (யாருமற்றவள்), அவரது வாழ்க்கையின் பல கட்டங்களைப் பேசுகிறது. மகளாக, கைதியாக, பாதிக்கப்பட்டவராக, போராடுபவராக எனப் பல கட்டங்கள். எப்ஸ்டீன் என்கிற நபரின் மிக மோசமான கதையில் அடிக்குறிப்பாக மட்டுமே இருப்பதை விர்ஜினியா விரும்பவில்லை.

வீட்டில் மிக மோசமான சூழலில் வாழ்ந்துவந்த விர்ஜினியா, தனது பதின்பருவத்தில் அங்கிருந்து வெளியேறி ஒரு காப்பகத்தில் தஞ்சமடைகிறார். பதினைந்து வயதில் முன்பின் தெரியாத ஒருவனால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படும் அவர், உடலில் காயங்களுடன்  ஃபுளோரிடாவின் நடைபாதை ஒன்றில் தனியாக அமர்ந்திருக்கும்போது ஒரு லிமோசின் கார் அவர் முன்பு வந்து நிற்கிறது. அதிலிருக்கும் வயதான நபர், உதவுவதாகச் சொல்கிறார்.

அந்தத் தருணத்தைத் தனது மீட்சி என்று குறிப்பிடுகிறார் விர்ஜினியா. ஆனால், அந்த மீட்சி வேறொரு விஷப்பின்னலுக்கு அவரைத் தயார் செய்வதாக மாறுகிறது.

விர்ஜினியாவின் சுயசரிதை ஒன்றைத் தெளிவாக்குகிறது. வேட்டையாடுபவர்கள் வன்முறையோடு தொடங்குவதில்லை. அங்கீகாரத்தோடு தொடங்குகிறார்கள், பலவீனங்களைக் கண்டறிகிறார்கள். தங்குவதற்கு இடம், பணம், அன்பை வழங்குகிறார்கள். பின்னர் தேர்ந்தெடுத்து வாழும் உரிமையை நிதானமாகப் பறிக்கிறார்கள்.

எப்ஸ்டீனின் பிடியில் இரண்டாண்டுகளுக்கும் மேலாக பாலியல் கடத்தலுக்கும் சுரண்டலுக்கும் பயன்படுத்தப்படுகிறார் விர்ஜினியா. எப்ஸ்டீன், மேக்ஸ்வெல் போன்றவர்களோடு பிற சக்திவாய்ந்த மனிதர்களிடத்திலும் விர்ஜினியா அனுப்பப்படுகிறார். அதிலொருவர்தான் முன்னாள் இளவரசர் ஆண்டிரு.

விர்ஜினியாவின் சுயசரிதை பரபரப்பாக எதையும் பேசவில்லை. பரபரப்புக்காக எதையும் பேசவில்லை. ஆனால், இதெல்லாம் நடந்து பல பத்தாண்டுகளுக்குப் பிறகும்கூட லூவ்ரே அருங்காட்சியகத்தின் ஒரு சிவப்புச் சுவர் முன்பு அதன் வடுக்கள் எப்படி panic attack ஆக மேலெழுந்து வரும் என்பதைப் பேசுகிறது.

அசலான பரிதாபத்துக்குரிய நபர் (perfect victim) என்கிற பிம்பத்தை முன்வைக்க மறுக்கிறது ‘நோபடிஸ் கேர்ள்’ புத்தகம். தனது பதின்பருவ கோபம், போதைப்பொருள் பயன்பாடு போன்றவற்றை விர்ஜினியா ஒப்புக்கொள்கிறார். பாதிக்கப்பட்டவர்களை நம்ப வேண்டும் என்றால் அவர்கள் தார்மீக ரீதியில் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும் என்கிற சமூகப் பண்பாட்டு எதிர்பார்ப்பை உடைத்து நொறுக்குகிறது இந்தப் புத்தகம்.

அமைப்புரீதியிலான தோல்வியையும் பதிவு செய்கிறது விர்ஜினியாவின் புத்தகம். சிறுவயதில் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்படும் பலர், தங்களது நாற்பதுகளிலோ அதற்குப் பிறகோதான் அதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. Statutes of limitation போன்ற விதிகள் அதாவது, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது போன்ற விதிகள் குற்றவாளிகளைப் பாதுகாக்கக் கூடும்.

சமூகக் கட்டமைப்பில் பாலியல் தொடர்பான இழிவு, பாதிக்கப்பட்டவர்களை மௌனமாக்குகிறது; அதிகாரம் மிரட்டல் விடுக்கிறது. காலம் ஆதாரங்களை அழிக்கிறது.

எப்ஸ்டீனின் கோப்புகளைப் பொறுத்தவரையில் பெயர்கள், தேதிகள், விமானங்கள், சந்திப்புகள் எனக் கிட்டத்தட்ட எல்லாமே இயந்திரத்தனமானவை.

ஆனால், விர்ஜினியா போன்ற பெண்களின் குரல் பதிவுச் செய்யப்படும்போது அது மனச்சிதைவு, பீதி, உடைந்த நம்பிக்கை என்கிற மனித மனதின் பல்வேறு பரிமாணங்களைக் காட்டுகிறது.

2019இல் எப்ஸ்டீன் சிறையில் இறந்தார். அதிகாரப்பூர்வமாகத் தற்கொலை என்று அறிவிக்கப்பட்டது. விர்ஜினியா திருமணம் செய்துகொண்டார். குழந்தைகள் பிறந்தன. ஆனாலும் ஏப்ரல் 2025இல் தற்கொலை செய்துகொண்டார். அதற்குப் பிறகுதான் புத்தகம் வெளிவந்தது.

எப்ஸ்டீனின் மரணத்துக்குப் பிறகு முழுமையான விசாரணை நடக்காது என்றுதான் பலரும் கருதினார்கள். அவருக்குக் கிடைக்க வேண்டிய தண்டனை கிடைக்காமல் போனது. மேக்ஸ்வெல்லுக்குக் கிடைத்த தண்டனை முக்கியமானதுதான். ஆனால், எப்ஸ்டீன் அவருக்குரிய தண்டனையை எதிர்கொள்ளாமல் இறந்ததும், தனக்கான நீதியைப் பெறாமல் விர்ஜினியா இறந்ததும் நீதி மற்றும் அமைப்பு பற்றிய வலுவானதொரு செய்தியைச் சொல்கிறது.

சொல்லப்போனால் இந்த ஒட்டுமொத்தக் கதையும் எழுப்பும் தீவிரமான கேள்வி ஒன்றுதான்: இவ்வளவு நடந்துகொண்டிருக்கும்போது பார்த்தும் பார்க்காதது போல எத்தனை பேர் விலகிச் சென்றார்கள்? அவர்களுடைய மௌனமும் – நம்முடைய மௌனமும்கூட, கிட்டத்தட்ட இணையான ஒரு குற்றம்தான்.

இந்தியத் தொடர்பு

எப்ஸ்டீனின் வழக்கை அமெரிக்காவின் மேல்தட்டு வர்க்கப் பிரச்சினையாகப் பார்ப்பது எளிது. ஆனால், பணமும் செல்வாக்கும் அதிகாரமும் சேரும்போது பாதிக்கப்படுபவர்களின் பாடு என்பது உலகளாவியது.

சர்வதேச அதிகார வட்டாரங்களில் எப்ஸ்டீனால் சாதாரணமாக நடமாட முடிந்தது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்ட பெயர்கள் எப்ஸ்டீனின் கோப்புகளில் இடம்பெற்றிருக்கின்றன. பெயர்கள் இடம்பெற்றதாலேயே குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாதுதான். ஆனால், பொறுப்புக்கூறல் என்பது நீதிமன்றத் தீர்ப்புகளுடன் தொடங்குவதுமில்லை, முடிவதுமில்லை. எப்ஸ்டீன் கோப்புகள் பற்றிய விவாதங்களில் எதிர்வினை பெரும்பாலும் மௌனமாகவே இருக்கிறது.

‘கேரளா ஸ்டோரி’, ‘பெங்கால் ஃபைல்ஸ்’, ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்று திரையில் கற்பனையாகச் சொல்லப்படும் பரப்புரையைப் பற்றிப் பேசித் தீராத நமது சமூக ஊடகங்களில் உண்மையாக நம் முன் நிற்கும் எப்ஸ்டீன் கோப்புகள் பற்றிய உரையாடல்களையோ, விவாதங்களையோ பார்க்க முடிவதில்லை.

நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் பற்றிப் பேச அனுமதி இல்லை. இது பற்றிய கேள்விகளுக்கு வரும் பதில்களும் எதிர்வினைகளும் அதிர்ச்சியளிக்கின்றன. ஊடகச் சந்திப்பு ஒன்றில் ‘நான் எப்ஸ்டீனைச் சந்தித்தபோது அவர் மீது ஒரேயொரு குற்றச்சாட்டு இருந்தது –  வெறும் குழந்தைகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளியாக மட்டுமே இருந்தார்’ என்கிற தொனியில் பேசியிருக்கிறார் ஹர்தீப் சிங் பூரி.

இன்னொரு தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தன்னைப் பார்த்துக் ‘கண்ணடித்து’ சுவாரஸ்யமான இடங்களிலெல்லாம் உங்கள் பெயர் வந்திருக்கிறதே என்று கேட்டதாகவும் தான் அதற்குப் பொறுப்புடன் பதிலளிக்க முனைந்ததாகவும் சொல்கிறார் அவர். அதாவது, இப்போது பிரச்சினை ஹர்தீப் சிங் பூரி எப்ஸ்டீனைச் சந்தித்தது அல்ல, அதுபற்றி ராகுல் காந்தி கண்ணடித்து விசாரித்ததாகச் சொல்லப்படுவதுதான்.

இப்படி எல்லாம் பூரி பேசிக்கொண்டிருந்தபோது நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் புகாரளித்திருந்தார்கள், மேக்ஸ்வெல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தார். பல்லாயிரக்கணக்கான ஆவணங்கள் பொதுவெளிக்கு வந்திருந்தன. இது எதுவுமே வதந்தி இல்லை. ஆனால், இது எதுவும் பூரிக்கு ஒரு பொருட்டும் இல்லை.

கிட்டத்தட்ட ஒரு நிறுவனமாகச் செயல்பட்ட குழந்தை கடத்தல் வழக்கை, பூரியின் அணுகுமுறையும் இந்திய அதிகார வர்க்கத்தின், இந்தியச் சமூகத்தின் அணுகுமுறையும் மீண்டுமொரு நீர்த்துப் போகச் செய்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் எதிர்கொண்ட கடத்தலும் சுரண்டலும் ஒரு வலி என்றால், சமூகத்தின் அலட்சியமும் மௌனமும் குற்றங்களை எளிமைப்படுத்துதலும் இன்னொரு வலி.

ஒரு பேச்சுக்கு மோடி அல்லது பூரியின் பெயரில்லாமல் எப்ஸ்டீன் கோப்புகளில் ராகுல் காந்தியின் பெயர் இடம்பெற்றிருந்தால் என்ன மாதிரியான எதிர்வினை இருந்திருக்கும்? நம் அதிகார வர்க்கத்தைப் போன்ற, சமூகத்தைப் போன்ற நீதிமான்களைப் பார்த்திருக்க முடியாது.

எப்ஸ்டீனின் தொடர்பில் இந்தியர்கள் யாரும் குற்றம் செய்தார்கள் என நிரூபிக்கப்படவில்லை. ஆனால், வெளிப்படைத்தன்மை என்பது இப்போதும் ஜனநாயக விழுமியம்தான். இரண்டு அதிகார கட்டமைப்புகளுக்கிடையில் நெருக்கம் இருந்தால், அதைப் பற்றிய விளக்கம் தேவை. தார்மீகத் தெளிவு தேவை.

பிளவுப்படுத்தப்பட்ட இந்திய அரசியல் பண்பாட்டில், நமது கோபங்கள் எப்போதும் நீதியின் பக்கம் இல்லை.

ஆனால், உலகின் எந்தவொரு மூலையிலும் ஒரேயொரு குழந்தை பாதிக்கப்பட்டிருந்தால்கூட அதற்கான எதிர்வினை தார்மீக அடிப்படையில் இருக்க வேண்டும், அரசியல் அடிப்படையில் இல்லை.

அடிப்படையில் எப்ஸ்டீனின் வழக்கு, நம் முன்பு ஒரு பெரிய உண்மையை நிறுத்துகிறது. அதிகார வர்க்கம், மேல்தட்டு வர்க்கம் தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்ளும். செல்வாக்கு மிக்கவர்கள் ஓர் அறையில் கூடும்போது அவர்களுக்கு இயல்பாகவே ஒரு பாதுகாப்பு அரண் உருவாகிறது.

இந்தச் சூழலுக்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.

அரசியல்வாதிகள், ஆன்மீகத் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் எனச் சக்திவாய்ந்த நபர்கள் பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட பல வழக்குகளை நாம் இந்தியாவிலேயே பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்டுப் போராடிக்கொண்டிருந்தவர்களுக்கு எஞ்சியதெல்லாம் நம்பிக்கையின்மை, அவதூறு, சமூகத் தனிமைப்படுத்துதல் மட்டுமே. விசாரணைகள் பல வருடங்கள் நீடித்தன. ஊடகங்கள் அடுத்த விஷயத்திற்கு நகர்ந்தன.

வாசிக்கும்போது நோபடிஸ் கேர்ள் புத்தகத்தில் வெளிப்பட்ட மிகவும் கூர்மையான ஒரு விஷயம் சொகுசு விமானங்கள் அல்லது தீவுகளைப் பற்றியது அல்ல. அது ‘எதற்கும் உதவாத உணர்வைப்’ (worthlessness) பற்றியது. ஒரு சிறு குழந்தை தான் எதற்கும் உதவாதவள் என்று எப்படி நம்பவைக்கப்படுகிறாள் என்பது பற்றியது. அந்த நம்பிக்கையே அவளைச் சுரண்டுபவர்களின்  மிகப்பெரிய ஆயுதம். அமைப்புரீதியிலான தயக்கம் அதை இன்னும் வலுப்படுத்துகிறது.

இந்தியாவின் அதிகாரப்பூர்வ குற்றத் தரவுகள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மனிதக் கடத்தல் வழக்குகளைப் பதிவு செய்கின்றன. அவற்றில் பல பெண்கள் மற்றும் குழந்தைகளை உள்ளடக்கியவை. புகார் அளிக்கப்படாத காரணத்தால் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று ஆர்வலர்கள் கூறுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் சமூகத்தில் களங்கத்தையும், நீதித்துறையில் தாமதத்தையும் எதிர்கொள்கிறார்கள்.

இந்தச் சூழலில்தான் எப்ஸ்டீன் போன்ற வழக்குகளைப் பற்றிய அலட்சியம் ஒரு செய்தியைச் சொல்கிறது: இந்தத் துயரக் கதைகள் வெறும் இரைச்சல்தான் என்று.

ஆனால், உண்மையில் அவை அப்படி அல்ல.

எப்ஸ்டீன் கோப்புகள் யார் யாரைச் சந்தித்தார்கள், என்ன நடந்தது என்பது பற்றி மட்டுமல்ல. செல்வாக்குக்கும் பொறுப்புக் கூறலுக்குமான உரையாடல் பற்றியது. கட்சிகள், தொழில்நலன்கள், எல்லைகள் என எல்லாப் பேதங்களையும் கடந்து  ஜனநாயகச் சமூகங்கள் தார்மீக தீவிரத்தை அமல்படுத்துகின்றனவா என்பது பற்றியது அது.

எப்ஸ்டீனோடு தொடர்புடையவர்களை இந்தியாவில் வைத்து விசாரிக்கவோ குற்றம் சாட்டவோ முடியாதுதான். ஆனால், அதிகாரத்தின் எல்லாத் தரப்பிடமும் நாம் அறம் சார்ந்த நிலைப்பாடுகளைக் கோருகிறோமா என்பதுதான் கேள்வியே. ஆளும் கட்சி, எதிர்கட்சி, தொழிலதிபர், அதிகாரி என யாராக இருந்தாலும் நாம் எப்படி எதிர்வினை ஆற்றுகிறோம் என்பதில்தான் நமது அறவுணர்வு இருக்கிறது.

அடிப்படையில், எப்ஸ்டீனின் கதை அமெரிக்கக் கதை இல்லை. அது உலகளாவிய கதை.

உலகின் ஏதோவொரு மூலையில், சமூகத்தின் ஏதோவோர் இடுக்கில் பாதிக்கப்படக்கூடிய ஒரு குழந்தை தனது பாதுகாப்புக்காக அல்ல, தான் எவ்வளவு தூரம் உபயோகமாக இருக்கிறோம் இருப்பாள் என்பதற்காக இந்த நொடிக் கூட மதிப்பிடப்பட்டுக்கொண்டிருப்பாள். ஏதோவொரு மூலையில் இப்போதும் செல்வாக்கு, மனசாட்சியுடன் பேரம் பேசிக்கொண்டிருக்கிறது. கோப்புகள் பரணில் தூங்க வைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அப்போது மௌனம் என்பது உலகின் அகண்ட காதுகளை அடைக்கும் பேரிரைச்சலாக இருக்கும்.

 

l kavithamuralidharan@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger