“சிறுத்தையின் கண்களைப்போல்
நிறம் கொண்ட மலர்
ஆற்றின் மறுகரையில்தான் இருக்கிறது;
அந்த மலர் இல்லையேல்
ஆந்தைகளின் குரலுக்கு
நாம் நடுங்க வேண்டியிருக்கும்;
என் பண்டுவத்துக்கு அடங்காத நோய்
ஊரில் பரவியிருக்கிறது;
நம் வாழ்நிலப் பகுதியின் தாவரங்கள்
நோயோடு போராடித்
தோற்றுக்கொண்டே இருக்கின்றன;
இந்தப் புதிய நோயின்
கிளைகளை முறிக்க முடிகிறது
வேர்களை அழிக்க முடியவில்லை;
ஊரின் வடக்கு நிலத்தை
மேடாகாமல் தடுக்க
அந்த மலரால் மட்டுமே முடியும்;
ஆற்றைக் கடப்பது யார்?”
கணியன் கேட்டார்; பின்பு
அவரே கூறினார்:
“நீரோட்டம் அதிகமிருக்கும் ஆற்றை
நீந்திக் கடப்பதற்குச் சாத்தியமில்லை;
குறுக்கே போடத்தக்க
நீளமான மரங்களை
உடனே வெட்ட வேண்டும்;
மரங்களை இறுக்கிக் கட்டுவதற்கு
காட்டுக்கொடிகளை அறுக்க வேண்டும்;
பலம் பொருந்திய இளையோர்
காட்டில் பரவுக;
அணைப்புக்கு அடங்காதவாறும்
அண்ணாந்து பார்க்கின்றவாறும்
கனமும் உயரமும் கொண்ட மரங்களைக் கொணர்க”
♦
காடு திமிலோகப்பட்டது;
பல்லுயிர்ச் சூழலின் அமைதி கலைந்தது;
கரேலென்ற வளமான பனைகள்
ஆற்றின் குறுகலான கரைப்பகுதிக்கு
வந்து சேர்ந்தன;
இரண்டு கரைக்குமான தூரத்தை
கண்களால் உற்றறிந்த மூப்பன்
நான்கு பனைகளைப் பிணைக்கச் சொன்னார்;
மரங்களைத் தழுவும் மறவர்களின் உடம்பில்
ஆற்றினும் அதிகமாய் நீர் புரண்டது;
இரும்பினும் வலிய கொடிகளால்
வடுப்பட பனைகளை இறுக்கினர்;
நாற்புறமும் ஆட்கள் நின்று
நீண்ட கவைகளால் முட்டித் தூக்கினர்;
நிமிர்ந்த பனைகளின் உச்சியைக்
கட்டியணைத்துக்கொண்டிருந்தான் கரியன்;
அவனுக்கும் கீழே
நுரைத்து ஓடியது ஆறு;
நூறடிக்கு மேல் வளர்ந்துவிட்ட
ஒரு ராட்சச விலங்கைப்போல்
ஆற்றின் குறுக்கே பாய்ந்தது மரம்;
ஊரும் ஆறும் ‘ஹோ’வென்று கத்த
மறுகரையில் குதித்தான் கரியன்;
♦
அடர்ந்த புதர்கள்;
புடைத்த வேர்கள்;
கூர்மையான முட்கள்;
மண்ணின் குருதி நாளங்கள்;
குன்றுகள்; பாறைகள்;
மேடுகள்; பள்ளங்கள்; சரிவுகள்;
அனைத்தையும் கடந்து போனான் கரியன்.
வழிமறித்த கழுதைப்புலி
வால் சுருட்டிப் பதுங்கியது;
கனத்த மரமொன்றின் கறுத்த கிளை
சதைக்கோளமாய் நகர்ந்தது;
கொடி சுற்றிக் கிடந்த கல்
அதிர்ந்தாடியது;
பிடறி சிலிர்க்க நோக்கிற்று சிங்கம்;
இரையைத் தவறவிட்டது
கவனம் பிசகிய புலி;
தெறித்து ஓடி
மரத்தில் முட்டிக்கொண்ட பன்றி
சரிவில் உருண்டது;
பாட்டை இல்லாத காடெனினும்
பாய்ந்து சென்றான் கரியன்.
அவன்
தேடி வந்த மலரின் குணத்தைக்
கணியன் சொன்னபோது
நம்ப முடியவில்லை; வியந்தான்;
இனிப்பு குறைந்தும்
துவர்ப்பு நிறைந்துமாய்ச்
சுவை கொண்ட மலரின்
விரிந்த மடலை
நாவால் தீண்டினால்
மூளையைத் துவளச் செய்யும்
நறுமணம் பிறக்கும்;
நிறத்தை வெறித்தால் கண்கள் சொக்கும்;
மேலும், அம்மலரின் விதையை
மனிதரால் விதைக்க முடியாது;
விதைத்தாலும் முளைக்காது;
விதைக்க…
ஒரு பறவை வரவேண்டும்
அந்தப் பறவையை
எல்லோராலும் பார்த்துவிட முடியாது.
♦
நீலத்தில் இறகுகள்
கறுத்த வால் பகுதி
சாம்பல் நிறத்தில் கழுத்து
கழுகுகள் நடுங்கும் குரல்
உயரமான மரங்களின் காதலன்
அந்தப்
பறவையைக் குறித்த அறிமுகம்
கரியனின் ஆவலைத் தூண்டிய வயதில்
அவனது தொடைக்கறியில்
உடும்பின் திடம் ஏறியிருக்கவில்லை;
மணல் பிதுங்கிய கோடையில் ஒருநாள்
ஆற்றைக் கடந்த தந்தையின் பின்னே
ஆவல் பொங்கிட கரியன் போனான்;
எல்லைக்கு வெளியே
முதன்முறைச் சென்றான்;
மற்றொரு காட்டை
முதன்முறைக் காமுற்றான்;
தாய் நிலம் போலொரு
உணர்வு பிறந்தது;
பாதங்கள் வைத்ததும்
உடம்பு சிலிர்த்தது;
தந்தை
புதிய காட்டைப் பயிற்றுவித்தார்;
மரங்கள் பலவும் புதிதாய் இருந்தன;
விலங்குகள் பறவைகள்
அறிந்தவையாயினும்
புதியவை கூடுதல் கவனம் பெற்றன;
அதிலொரு பறவை
கரியனைக் கவர்ந்தது;
தந்தையைக் கேட்டான்
“அப்பா.. !
மூப்பனும் கணியனும்
மொழிந்தது இப்பறவையைத்தானே?
இந்தப் பறவையால் மட்டுமே
விதைக்க முடிந்த மரத்தைத்தானே
நாம் பார்க்க வந்தோம்”
“ஆம் மகனே..!
வலசைப் பழக்கமில்லாத இப்பறவையையும்
நம்மால் விதைக்க முடியாத
இம்மரத்தையும்
உனக்குக் காட்டுவதன் நோக்கம்…
மூலம் எதுவென்றறியாத நோயால்
இனம் தீதுறும் காலத்தில்
குமுகாயம் காக்கும் பொறுப்பு
உன் தோளில் இறங்கும்;
அப்போது நீ…
இடர் வரினும் இங்கு வரவேண்டும்;
இயற்கையே மறித்தாலும்
எதிர்த்துப் புக வேண்டும்;”
♦
சிறுத்தையின் கண்களைக்
கரியன் பறித்துச் சென்றான்;
ஊரில் முழங்கியது முரசு;
இனக்குழு பிழைத்தது…
(தொடரும்….)