மீந்த பகுதியொன்று
உண்மையில் நம்பிக்கை என்பது
குளிரடுப்பின் நெருப்பினருகில் இருக்கும்
அலங்கார மேசையைக் குறித்த,
அதில் அசைவற்றிருக்கும் குவளைகள் குறித்த
சிறிய விவரங்களைப் பாடக்கூடிய
முழுமையற்ற கதை.
அதன் எல்லாமுமாக
ஒரு வடிவத்தில் முழுமையற்றிருக்குமது
நீடித்ததும் தினமும் பாடப்படுவதுமான
துதிப்பாடலாய் நிறைவடைவதற்கு
இன்னும் கொஞ்சம்
மற்றொரு நாளில் சேமிக்கப்பட்ட
சாத்தியக்கூறு போதுமாயிருக்கிறது.
வேறொன்றுமில்லை.
¤
Illustration : Deanna Mance
இக் கணம்
அந்தியில்
ஓர் அருகிடம்.
விஷயங்கள் பார்வைக்கப்பால்
செல்லத் தயாராகின்றன.
நட்சத்திரங்களும் விட்டில்களும்.
பழத்தைச் சுற்றித் தோலும் படிகிறது.
ஆனால் இன்னும் இல்லை.
ஒரு மரம் கருப்பாயிருக்கிறது.
ஒரு சன்னல் வெண்ணெய் போல
மஞ்சளாயிருக்கிறது.
இக் கணத்தில்
அவள் கைகளை நோக்கி ஓடுகிற குழந்தையை
பிடிப்பதற்காய்
ஒரு பெண் குனிகிறாள்.
நட்சத்திரங்கள் உதிக்கின்றன.
விட்டில்கள் சிறகடிக்கின்றன.
ஆப்பிள்கள் இருட்டில் கனிகின்றன.