“நீக்ரோவின் விடுதலை என்பது அரசியல் விடுதலைக்கும் அப்பாற்பட்டது” – யமே சிசயர்

தமிழில்: ஓவியர் சதீஷ்

யமே ஃபெர்ணன்ட் டேவிட் சிசயர் – Aimé Fernand David Césaire (1913 – 2008). கவிஞர், கட்டுரையாளர், நாடக ஆசிரியர். ஃப்ரெஞ்ச் மொழியில் எழுதிய கறுப்பின அரசியல்வாதி. கருப்பியம் (Negritude) என்ற கலை – இலக்கிய – அரசியல் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். பின்வருவது 1967இல் நடந்த ஹவானா பண்பாட்டுப் பேராயத்தின்போது ஹைதி நாட்டுக் கவிஞரும் போராளியுமான ரெனே தெபஸ்டியரிற்கு (Rene Depestre) யமே சிசயர் அளித்த நேர்காணலின் தமிழாக்கம்.

திறனாய்வாளர் லிலியன் கெஸ்டலூட் உங்களுடைய ‘என் தாய்மண்ணிற்குத் திரும்புதல்’ நூலை ஒரு சுயசரிதை என்று பதிவு செய்திருக்கிறார். அதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

அது சரிதான். சுயசரிதையாக இருக்கும் அதேவேளை என்னை நானே புரிந்துகொள்ள முயல்வதற்கு உதவிய நூலும்கூட. வாழ்க்கை வரலாறு என்பதைவிட ஒருவாறு உண்மைக்கு நெருக்கமானதென எடுத்துக்கொள்ளலாம். அந்நூல் ஓர் இளைஞனின் புத்தகம் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. என்னுடைய படிப்பு முடிந்த சில நாட்களிலேயே நான் அதை எழுதிவிட்டு மார்ட்டினிக் திரும்பிவிட்டேன். பத்துவருட இடைவெளிக்குப் பிறகு என் தேசத்திற்குத் திரும்புவது அதுதான் முதல்தடவை என்பதால் எண்ணற்ற எண்ணங்களும் பிம்பங்களும் என்னைப் பாடாய்படுத்தியதை அப்போது நான் உணர்ந்துகொண்டேன். அதேவேளை மார்ட்டினிக்கின் எதிர்காலத்தை நினைத்துப் பெரும் வேதனைக்கு ஆளானேன்.

அந்த நூல் எழுதியபோது உங்கள் வயது என்ன?

தோராயமாக இருபத்தாறு இருந்திருக்கும்.

இருப்பினும், அத்தொகுப்பின் தனித்துவமே அதில் வெளிப்பட்ட உயரிய முதிர்ச்சிதான் இல்லையா?

அந்த நூல்தான் அச்சில் வெளிவந்த என்னுடைய முதல் படைப்பு என்றாலும், உண்மையில் அதில் இடம்பெற்றிருந்த கவிதைகள் சிறுகச் சிறுகச் சேகரிக்கப்பட்ட அல்லது விரிவாக்கப்பட்ட கவிதைகள். அதற்குமுன் ஒருசில கவிதைகள் எழுதியது மட்டும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

ஆனால், அவற்றில் எதுவும் பதிப்பிக்கப்படவே இல்லை. அப்படித்தானே.

அந்தக் கவிதைகள் எனக்கு அவ்வளவாக மனநிறைவு அளிக்கவில்லை என்பதால் கடைசிவரை வெளியிடவில்லை. அக்கவிதைகளை வாசித்த என் நண்பர்கள் அவற்றில் சுவாரசியத்தைக் கண்டார்கள், நான்தான் பிரியப்படவில்லை.

ஏன்?

எனக்குரிய வடிவத்தை இன்னும் கைக்கொள்ளவில்லை என அன்று நினைத்தது ஒரு காரணம். ஃப்ரெஞ்சுக் கவிஞர்களின் தாக்கத்திலிருந்து விடுபடாத காலம் அது. சுருங்கச் சொல்வதெனில், ‘எனது தாய் மண்ணிற்குத் திரும்புதல்’ தொகுப்பு உரைநடை வடிவத்தில் அமைந்ததும், நிஜமாகவே ஒரு தற்செயல் நிகழ்வுதான். ஃப்ரெஞ்சு இலக்கிய மரபுகளை உதறிவிட விரும்பினேன் என்றாலும், கவிதை எழுதுவதை முற்றாக நிறுத்திவிடலாம் என முடிவெடுக்கும் கடைசி நிமிடம் வரை அதிலிருந்து என்னால் முழுமையாக விடுபட முடியவில்லை. உண்மையில், கவிதையைத் துறத்தலின் வழி நான் கவிஞன் ஆனேன் என நீங்கள் சொல்லிக்கொள்ளலாம். நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? அதாவது, என்னை மூச்சுவிடவிடாமல் திணறடித்துக்கொண்டிருக்கும் பிடியை, அங்கீகரிக்கப்பட்ட (ஃப்ரெஞ்ச்) வடிவத்தைத் தகர்ப்பதற்கான ஒரே வழியாக நான் கவிதையை அடையாளம் கண்டுகொண்டேன்.

சீகர்ஸ் பதிப்பகம் வெளியிட்ட உங்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பிற்கு லிலியன் கெஸ்தலூட் எழுதிய அறிமுகவுரையில், உங்கள் மீது செல்வாக்கு செலுத்திய கவிஞர்களாக மல்லார்மே, க்ளாடல், ரைம்போ, லௌத்ரிமோண்(ட்) போன்றவர்களைப் பட்டியலிட்டிருக்கிறாரே.

என் தலைமுறையைச் சேர்ந்த பல கவிஞர்களுக்கு லௌத்ரிமோண்டும் ரைம்போவும் பெரும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார்கள். அதேபோல கிளாடலையும் நான் சொல்லியாக வேண்டும். குறிப்பாக, அவருடைய ‘தங்கத்தலை’ (Tete d’Or) தொகுப்பில் உள்ள கவிதைகள் என்னுள் பெரும் தாக்கம் ஏற்படுத்தியவை.

அது சிறந்த கவிதைத் தொகுப்பு என்பதில் மாற்றுக்கருத்துக் கிடையாது.

ஆமாம், பொதுவாக அவர் தொடர்பான பல விஷயங்கள் எனக்குக் கோபமூட்டக்கூடியவை என்றாலும், மொழியைக் கையாள்வதில் அவர் ஒரு தேர்ந்த கைவினைஞர் என்பதே எப்போதும் என் கருத்து.

உங்களுடைய ‘தாய்மண்ணிற்குத் திரும்புதல்’ தொகுப்பானது ஒரு மார்ட்டினிக் இளைஞனாக உங்களின் சொந்த அனுபவங்களின் அடையாளத்தைக் கொண்டிருப்பதோடு ஃப்ரெஞ்ச் செல்வாக்கு அவ்வளவாக வேரூன்றாத கறுப்பினத்தவர்களின் பயணக் குறிப்புகள் மீது குறுக்கு விசாரணை செய்வதாகவும் அமைந்திருக்கிறது.

நான் திட்டமிட்டு ஃப்ரெஞ்ச் செல்வாக்கை மறுக்கவில்லை. நான் விரும்பினாலும் விரும்பவில்லையென்றாலும், ஒரு கவிஞனாக ஃப்ரெஞ்ச் மொழியில்தான் என்னை வெளிப்படுத்திக்கொள்கிறேன், மேலும் ஃப்ரெஞ்ச் இலக்கியத்தின் தாக்கத்திற்கு வெளிப்படையாக ஆட்பட்டவன்தான் நான். ஒரு தொடக்கப்புள்ளியாக ஃப்ரெஞ்ச் இலக்கியம் எனக்குப் பல்வேறு கொடைகளை அளித்திருந்தாலும், என்னுடைய ஆப்பிரிக்கப் பாரம்பரியத்தைப் புரியவைக்கக்கூடிய புதிய மொழியை உருவாக்கவே நான் தொடர்ந்து முயன்று வந்திருக்கிறேன் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகிறேன். உணர்வு வெளிப்பாட்டிற்கான ஒரு புதிய பாதையை உருவாக்குவதற்காக நான் பயன்படுத்திக்கொண்ட கருவிதான் ஃப்ரெஞ்ச் மொழி. நான் உருவாக்க விரும்பியது ஒரு ஆண்டிலீய ஃப்ரெஞ்ச் மொழியை, அதாவது ஃப்ரெஞ்ச் வடிவத்தில் கறுப்பினப் பண்பைக் கொண்டிருக்கிற கருப்பு – ஃப்ரெஞ்ச் மொழி.

அத்தகையதொரு மொழியைக் கண்டுபிடிக்கும் உங்களுடைய முயற்சிக்கு சர்ரியலிசம் சகபயணியாக இருந்துவருகிறதா?

சர்ரியலிச கவிஞர்களைப் பாதித்த அதே எழுத்தாளர்களைத் துவக்கப் புள்ளியாகக் கொண்டு எனக்கான சர்ரியலிசத்தை ஓர் எல்லைவரைக்கும் வளர்த்தெடுத்திருக்கிறேன் என்பதால் அதைத் தழுவிக்கொள்ள திறந்த மனதோடு இருந்தேன். எங்கள் இருவருடைய சிந்தனைகளுக்கும் வேர் ஒன்றுதான். உண்மையில் நான் எதை ஒரு தெளிவில்லாமல் தேடிக்கொண்டிருந்தேனோ அதை எனக்கு முறைப்படுத்திக் கொடுத்தது சர்ரியலிசம். இதில் வெளிப்பாட்டைவிட மேலதிகமாக உறுதிப்பாட்டையே கண்டடைந்ததால் நான் அதை ஆனந்தமாக ஏற்றுக்கொண்டேன். ஃப்ரெஞ்ச் மொழியைச் சிதறடித்த ஓர் ஆயுதம் சர்ரியலிசம். அது அனைத்தையும் அடியோடு குலைத்துப் போட்டது. கடினம் நிறைந்த, அதரப் பழசான மரபு வடிவங்கள் என்னைக் கசக்கிப் பிழிவதால் அது எனக்கு அவ்வளவு முக்கியமானதாக இருந்தது.

சர்ரியலிச இயக்கம் உங்களுக்கு உவப்பானதாக இருந்தது இதன் பொருட்டுதானா…

சர்ரியலிசம் ஒரு விடுதலைக் காரணி என்பதால் எனக்கு உவப்பானதாக இருந்தது.

ஆக, சர்ரியலிசக் கொள்கை கொண்டிருந்த விடுதலைப் பற்றிய கருத்தாக்கத்தில் நீங்கள் மிகவும் கூருணர்வோடு இருந்திருக்கிறீர்கள். ஆழ்மன, நனவிலி ஆற்றல்களை வெளிக்கொணர்ந்தது சர்ரியலிசம், இல்லையா.

சரியாகச் சொன்னீர்கள். என்னுடைய சிந்தனையும் இதையொட்டியதுதான்: இதனால், என்னுடைய குறிப்பிட்ட வாழ்நிலையை சர்ரியலிச அணுகுமுறைக்கு உட்படுத்தினேன் எனில் அதன் ஊடாக உள்ளார்ந்த நனவிலி ஆற்றல்களை நினைவுக்குக் கொண்டுவந்துவிட முடியும். என்னைப் பொறுத்தவரை இது ஆப்பிரிக்காவுக்கான ஓர் அழைப்பு. பார்வைக்கு நாங்கள் ஃப்ரெஞ்சுக்காரர்களாகத் தெரிவதும், ஃப்ரெஞ்சு பழக்க வழக்கங்களின் அடையாளங்களைக் கொண்டிருப்பதும் உண்மைதான். கார்ட்டீசிய தத்துவ மரபாலும் ஃப்ரெஞ்சு மொழி சொல்லாட்சியாலும் எங்களுக்கென அடையாள முத்திரை இடப்பட்டிருக்கிறது. இவை யாவற்றோடும் நாங்கள் பிணங்கினோம் எனில், அதன் ஆழத்தைத் தோண்டினோம் எனில் அதனடியில் அடிப்படையான எங்கள் கறுப்புத் தன்மையைக் கண்டெடுப்போம் என எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்.

அதனை ஓர் அந்நோந்யமாக்கும் (Disalienation) செயல்முறை என்றுகூட சொல்லலாம் அல்லவா?

ஆமாம். அப்படித்தான் சர்ரியலிசத்தை நான் பொருள்கொள்கிறேன்.

உங்கள் நம்பகமான இயல்பை மீண்டும் அடைவதற்கானதொரு முயற்சியாகவும், ஒருவகையில் ஆப்பிரிக்கப் பாரம்பரியத்தை மீட்பதற்கானதொரு பிரயத்தனமாகவும்தான் சர்ரியலிசம் உங்கள் படைப்பில் தன்னியல்பாக வெளிப்படுகிறதா?

அப்படிதான்.

மேலும், அது ஒரு நச்சுமுறிப்பு செயல்முறை ஆகும்தானே.

அதை ஆழங்களுக்குள் மூழ்குதல் என்று சொல்லலாம். எனக்கோ அது ஆப்பிரிக்காவிற்குள் முக்குளித்தலாக இருந்தது.

அது உங்களுடைய பிரக்ஞையின் விடுதலைக்கான பாதையாக இருந்ததல்லவா?

உண்மைதான், எந்தவொரு சமூக உயிரியின் அடித்தளத்திலும் அவர் மூதாதைகளின் சகலவிதமான படிவுகளும் வண்டல்களும் படிந்திருக்கும் முழுநிறைவான ஓர் உயிரியைக் கண்டெடுக்கலாம் என்பதை நான் உணர்ந்துகொண்டேன்.

Illustration: Negizhan

நீங்கள் பாரிஸில் வாழ்ந்த காலத்தில், லியோபோல்(ட்) செடார் செங்கோர், லியோன் கோன்றன் தாமஸ் ஆகியவர்களோடு இணைந்து ‘கறுப்பு மாணவன்’ (L’ Étudiant noir) என்ற பெயரில் பருவகால சிற்றிதழை நடத்திக்கொண்டிருந்த காலகட்டத்திற்கு நான் பின்னோக்கிச் செல்ல விரும்புகிறேன். ‘என் தாய் மண்ணிற்குத் திரும்புதல்’ தொகுப்பில் வெளிவந்ததுதான் ‘கறுப்பியத்தின்’ முதற்கட்டமா?

ஆமாம், அன்று அதை நாங்கள் வெளிப்படுத்துவதற்கு முன்பே அது கறுப்பியமாகத்தான் இருந்தது. அப்போது எங்கள் குழுவில் இரண்டுவித போக்குகள் இருந்தன. ஜெ.மோனரோ, இ.லெரோ, ரெனே மெனில் போன்ற இடதுசாரிகள் ஒருபக்கம் இருந்தார்கள். அவர்கள் கம்யூனிஸ்டுகள் என்ற காரணத்தால்தான் நாங்கள் அவர்களை ஆதரித்தோம். ஆனால், அவர்களோ ஃப்ரெஞ்ச் (வெள்ளைக்கார – மொ.பெ) கம்யூனிஸ்டுகளாக இருந்ததால் – அநேகமாக அதற்கு நான் செங்காரிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் – கூடிய விரைவில் நான் அவர்களைக் கண்டிக்க வேண்டிவந்தது. ஃப்ரெஞ்ச் சர்ரியலிசவாதிகளா அல்லது ஃப்ரெஞ்ச் கம்யூனிசவாதிகளா என்று பிரித்தறிய எதுவும் இருக்கவில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், அவர்களின் கவிதைகள் நிறமற்று இருந்தன.

அவர்களின் நடவடிக்கையில் அந்நோந்யமாக்கலுக்கான முனைப்பு இல்லையா?

என்னைப் பொறுத்தவரை அவர்களிடம் அடையாள மாற்றத்திற்கான அறிகுறிகள் தென்பட்டன. அப்போது மார்ட்டினிக்கிய மாணவர்கள், ஃப்ரெஞ்ச் வலதுசாரிகள் அல்லது ஃப்ரெஞ்ச் இடதுசாரிகள் என ஏதாவதொன்றோடு தங்களை அடையாளப்படுத்திக்கொண்டார்கள். ஆனாலும் அதுவோர் அடையாளம் மாற்றும் நடைமுறையாகவே கடைசிவரை இருந்துவிட்டது.

கறுப்பினப் பிரச்சினை தலைதூக்கிக்கொண்டிருந்த காலத்தில் மார்ட்டினிக் கம்யூனிச மாணவர்களிடமிருந்து உங்களைத் தனித்துக் காட்டிய அடிப்படையான கூறு எது?

அது கறுப்பினப் பிரச்சினைதான். கறுப்பினத்தின் தனித்தன்மைகளை அவர்கள் பொருட்படுத்தாததால் நான் அச்சமயம் கம்யூனிஸ்டுகளைக் கடிந்துகொள்ள நேர்ந்தது. அவர்கள் கம்யூனிசவாதிகளைப் போல நடித்தார்கள், அதனால் ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால், அவர்கள் அரூபமான கம்யூனிசவாதிகளைப் போல (Abstract communist) நடித்துவிட்டார்கள். கறுப்பினத்தவர்களான எங்களின் பாடுகளை அரசியல் பிரச்சினையாக அவர்களால் ஒரு முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை என்னும் கருத்தில் நான் தீர்க்கமாக இருந்தேன். பெரும் எண்ணிக்கையில் வரலாற்றுச் சிறப்பம்சங்களைக் கொண்ட கறுப்பினத்தவர்கள் நாங்கள். இந்த விஷயத்தில் நான் செங்காரின் செல்வாக்கிற்கு ஆட்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்போது எனக்கு ஆப்பிரிக்காவைப் பற்றி எதுவுமே தெரியாது. அதன்பிறகு உடனடியாக நான் செங்காரைச் சந்தித்தேன், அவர் எனக்கு ஆப்பிரிக்காவைப் பற்றி நிறைய தகவல்களை எடுத்துச் சொன்னார். அவர் என்னுள் அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். ஆப்பிரிக்காவையும் அதன் தனித்தன்மைகளையும் வெளிச்சமிட்டுக் காட்டியதில் நான் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். தொடர்ந்து என்னுடைய யதார்த்தத்தின் சகல பரிமாணங்களையும் உள்ளடக்கிய ஒரு கோட்பாட்டை உருவாக்க முயற்சித்தேன்.

கம்யூனிசத்தை நீங்கள் இன்னும் துல்லியமாக வகுத்துரைக்க முயன்றீர்களா…?

அது என்னுடைய மிகப் பழைய போக்கு. அப்போதுகூட, நீக்ரோ பிரச்சினை குறித்து நான் பேசுகிறேன் என்பதற்காக அது என்னுடைய இனவாதம் என்றெல்லாம் பழிப்பார்கள். மார்க்ஸ் சரிதான். ஆனால், நாம் அவரை முழுமையாக்கும் தேவையிருக்கிறது என்று அவர்களுக்குப் பதில் சொல்வேன். நீக்ரோவின் விடுதலை என்பது வெறும் அரசியல் விடுதலைக்கும் அப்பாற்பட்டது என்பதை உணர்ந்துகொண்டேன்.

இரண்டு உலகப் போர்களை ஒருங்கிணைத்த ‘கறுப்பு மாணவன்’ (L ‘Etudiant noir), அமெரிக்காவில் தோன்றிய நீக்ரோ மறுமலர்ச்சி இயக்கம், ஹைதியில் நடத்தப்பட்ட சுதேச திறனாய்விதழ் (La Revue indigène), கியூபாவின் நீக்ரிஸ்மோ (Negrismo) இலக்கிய இயக்கம் போன்றவற்றிற்கு இடையில் ஏதேனும் ஒட்டுறவைக் காண்கிறீர்களா?

அந்த இயக்கங்களைப் பற்றியெல்லாம் எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. அதனால் அவற்றின் தாக்கத்திற்கு நான் ஆட்படவில்லை. இருப்பினும் அவையனைத்தும் இணையொத்த இயக்கங்கள் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்துக் கிடையாது.

இரண்டு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் ஹைதி, அமெரிக்கா, கியூபா, பிரேசில், மார்ட்டினிக் மற்றும் இன்ன பிற நாடுகளில் ஆப்பிரிக்கப் பண்பாட்டின் தனித்துவத்தை ஏற்றுக்கொண்ட இதுபோன்ற இணை நிலையான இயக்கங்களின் எழுச்சியை நீங்கள் எவ்வாறு புரிந்துகொள்கிறீர்கள்?

உலக வரலாற்றில் அப்போது கறுப்பினத்தவர்களுக்கு இடையில் ஒருவித ஓர்மை திரும்பிக்கொண்டிருந்தது, அதுவே ஒன்றிற்கொன்று தொடர்பில்லாத இயக்கங்களில் சுயமாக வெளிப்பட்டதாக நான் பார்க்கிறேன்.

எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு தனிப்பெரும் நிகழ்வாக ஜாஸ் இசை அன்று விளங்கியது.

ஆமாம், ஜாஸ் இசையின் தன்னிகரற்ற நிகழ்வு அன்று இருந்தது. மார்கஸ் கார்வே இயக்கமும் இருந்தது. கார்வேவைப் பற்றி மக்கள் பேசிக்கொண்டதைச் சிறுவனாக இருந்தபோதே கேட்டிருக்கிறேன் என்பது நன்றாக நினைவிருக்கிறது.

மார்கஸ் கார்வே ஒரு கறுப்பின தீர்க்கத்தரிசி போன்றவர். அவருடைய பேச்சுகள் அமெரிக்கக் கறுப்பினத்தவர்களைப் பெருந்திரளாகப் புரட்சிசெய்யத் தூண்டின. அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் அனைவரையும் ஆப்பிரிக்காவுக்கு மீண்டும் அழைத்துக்கொண்டு போய்விட வேண்டும் என்பதே அவரின் ஒரே இலக்காக இருந்தது.

ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்திற்கு அவர் ஆதர்சமாக இருந்தார், பல ஆண்டுகளுக்கு அமெரிக்கக் கறுப்பினத்தவர்களுக்கு அவர் இலட்சிய பிம்பமாக விளங்கினார். ‘நீக்ரோக்களின் கூக்குரல்’ (Le Cri des nègres) என்ற பெயரில் ஃப்ரான்ஸில் ஒரு நாளிதழ்கூட நடத்தப்பட்டிருக்கிறது.

ஹைதியைச் சேர்ந்த டாக்டர். ஸோஜௌ (Dr.Sojous), ழாக் ரெளமெய்ன் (Jacque Roumain), ழான் பிரீஸ் மார்ஸ் (Jean Price Mars) போன்றவர்களும் அந்தப் பத்திரிகையில் பணியாற்றியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். மேலும், ரெனே மாரன் (Rene Maran), கிளாட் மெகாய் (Claud Mckay), பிரைஸ் மார்ஸ் (Price Mars), அக்கிளி சகோதரர்கள், ஸோஜௌ உள்ளிட்ட பலரின் எழுத்துகள் பிரசுரமான கறுப்புலகத் திறனாய்விதழின் (La Revue du montle noir) ஆறு பிரசுரங்களும் வெளிவந்திருக்கிண்றன.

அப்போது நாங்கள் லாங்ஸ்டன் ஹக்ஸ், க்ளாட் மெகாய் போன்றோரின் கவிதைகளை வாசித்தது எனக்குத் துல்லியமாக ஞாபகம் இருக்கிறது. 1929 அல்லது 1930களில் அமெரிக்கக் கறுப்பினக் கவிதைகளின் தொகுப்பு ஃப்ரான்ஸில் கிடைக்கும் என்பதால் மெகாயைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. மெர்ஸைலஸில் துறைமுகத் தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் மெகாயின் ‘பேஞ்ஜோ’ (Banjo) நாவல் 1930இல்தான் வெளிவந்தது. ஒரு நூலாசிரியர் நீக்ரோவைப் பற்றிப் பேசியதும் அவருக்குக் கௌரவமான இலக்கிய அந்தஸ்தை வழங்கியதும் உண்மையில் அதுதான் முதல்முறை. என்னதான் எந்தவோர் அமெரிக்க நீக்ரோவிடமிருந்தும் நான் நேரடியாகத் தாக்கம் பெறவில்லை என்றாலும், அமெரிக்கக் கண்டத்தில் உருவான இயக்கங்கள் மீத்தெளிவோடு ஓர்மைகொள்வதற்கு மிக அவசியமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறேன் என்பதையேனும் இங்கு சொல்லியாக வேண்டும். 1920 – 1930களில் மூன்று முக்கியமான செல்வாக்கிற்கு ஆட்பட்டேன் எனத் தோராயமாகச் சொல்லலாம். முதலில், மல்லார்மே, ரைம்போ, லௌத்ரிமோ, க்ளாடல் போன்றவர்களின் படைப்புகள் ஊடாக ஃப்ரெஞ்ச் இலக்கியச் செல்வாக்கு. இரண்டாவது ஆப்பிரிக்கா. ஆப்பிரிக்காவைப் பற்றிய அறிவு எனக்கு அப்போது அவ்வளவாக இல்லையென்றாலும், இனவரைவியல் ஆய்வின் மூலம் எனது அறிவைப் பிற்பாடு விசாலப்படுத்திக்கொண்டேன்.

கறுப்பியம் என்ற கருத்தாக்கம் வளர்ச்சியடைவதற்கு ஐரோப்பிய இனவரைவியலாளர்களின் பங்களிப்பும் இருந்திருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா?

நிச்சயமாக. நேரடியாக என்னைப் பாதிக்காததாயினும் கறுப்பின மக்களின் ஒருமைப்பாட்டை உணர்வதற்குச் சாதகமான சூழலை ஏற்படுத்திய அமெரிக்க நீக்ரோ மறுமலர்ச்சி இயக்கத்தை மூன்றாவது செல்வாக்காகச் சொல்வேன்.

அதே காலகட்டத்தில், உங்களின் சிந்தனைத் தடத்தில் சுதேச திறனாய்விதழை மையமாகக் கொண்டும், ழான் பிரைஸ் மார்ஸ் எழுதிய ‘மாமா இவ்வாறு கூறினார்’ (Ainsi parla l’oncle) நூலைக் கொண்டும் ஹைதியில் ஏற்பட்ட முன்னேற்றங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கவில்லையா?

இல்லை, ஹைதியில் தோன்றிய இயக்கத்தையும் மார்ஸின் புகழ்பெற்ற நூலையும் நான் கண்டடைந்தது கொஞ்சம் தாமதமாகத்தான்.

செங்கார் உடனான உங்கள் சந்திப்பை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள், ஆண்டிலீய கறுப்பியத்திற்கும் ஆப்பிரிக்கக் கறுப்பியத்திற்கும் இடையிலான சந்திப்பாகவா? அது ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் விளைவா அல்லது பிரக்ஞையின் இணைநிலையான வளர்ச்சியா?

அது மிக எளிது. பாரிஸில் அப்போது வெவ்வேறு வேர்களைக் கொண்ட நீக்ரோக்கள் இருந்தார்கள். உதாரணத்திற்கு செங்காரைப் போன்ற ஆப்பிரிக்க நீக்ரோக்கள், கயானிய நீக்ரோக்கள், ஹைதிய நீக்ரோக்கள், வட அமெரிக்க நீக்ரோக்கள், ஆண்டிலீய நீக்ரோக்கள் போன்று எக்கச்சக்கமான நீக்ரோக்கள். அது எனக்கு மிக முக்கியமானதாக இருந்தது.

 

பாரிஸ் நீக்ரோக்களின் வட்டங்களில் ஆப்பிரிக்கப் பண்பாட்டின் முக்கியத்துவத்திற்கான பிரக்ஞை இருந்ததா?

இருந்தது. அதனோடு கறுப்பினத்தவர்களுக்கிடையில் ஒருமைப்பாட்டிற்கான விழிப்புணர்வும் சேர்ந்தே இருந்தது. உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள் நாங்கள். அதுதான் எங்கள் முதல் சந்திப்பாக இருந்தது. நாங்கள் எங்களையே தேடிக்கொண்டிருந்தோம். அது மிக முக்கியமானதாக இருந்தது.

ஆமாம், அது ஆகப்பெரிய முக்கியத்துவம் கொண்டதுதான். கறுப்பியம் என்ற கருத்தாக்கத்தை வளர்த்தெடுக்க நீங்கள் எப்படி வந்தீர்கள்?

அது ஒருவகையான கூட்டு உருவாக்கம் என்றோர் உணர்வு எனக்கு இருக்கிறது. நான் அந்தப் பதத்தை மட்டுமே முதலில் பயன்படுத்தினேன், அதுதான் உண்மை. ஆனால், அது சாத்தியம் என எங்கள் குழுக்களில் பேசிக்கொண்டோம். உண்மையில் அது பண்பாட்டை / அடையாளத்தை மாற்றும் அரசியலுக்கு எதிரான ஒரு எதிர்ப்பு நடவடிக்கையாக இருந்தது. அந்தக் காலம் வரை அதாவது எங்கள் தலைமுறை வரை ஃப்ரெஞ்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும், குறிப்பாக ஃப்ரெஞ்சுக்காரர்கள் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் பண்பாட்டு மாற்றத்தை அரங்கேற்றிவந்தார்கள். ஆப்பிரிக்காவைப் பற்றி எதுவுமே தெரியாமல் நாங்கள் வளர்ந்தோம். ஆப்பிரிக்கா தொடர்பான எதையும் ஐரோப்பியர்கள் வெறுத்தார்கள். நாகரிக உலகு, காட்டுமிராண்டி உலகு பற்றிய கதைகளை ஃப்ரான்ஸில் பேசிக்கொள்வார்கள். காட்டுமிராண்டி உலகமென்றால் அது ஆப்பிரிக்கா, நாகரிக உலகமென்றால் அது ஐரோப்பா. அதனால், ஓர் ஆப்பிரிக்கனுக்குச் செய்யக்கூடிய நன்மை அவனுடைய பண்பாட்டை மாற்றுவதாகத்தான் இருந்தது : கருப்புத் தோலுடைய ஃப்ரெஞ்சுக்காரனாக அவனுடைய அடையாளத்தை மாற்றுவதுதான் அவர்களின் இலட்சியம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஹைதியும் இதே போன்றொரு அடையாள நெருக்கடியை எதிர்கொண்டது. பண்பாட்டு மாற்றத்தை வலிந்து ஏற்றுக்கொண்ட நூலாசிரியர்களால் உற்பத்தி செய்யப்பட்ட முற்றிலும் போலியான ஒருவகை ஹைதி இலக்கியம் இருந்தது. எங்கள் முதல் சுதந்திரமான ஹைதியின் சுதந்திரம் என்பது முதன்மையாக எங்கள் நாட்டில் குடியேறியிருந்த ஃப்ரெஞ்சுக்காரர்களின் மீதான வன்மையான தாக்குதலாக இருந்தது. ஆனால், எங்கள் முதல் தலைமுறை எழுத்தாளர்கள் ஃப்ரெஞ்ச் பண்பாட்டு விழுமியங்களை அதற்குச் சமதையான வலிமையோடு எதிர்த்துக் களமாடவில்லை. தங்களின் பிரக்ஞையைக் காலனிய நீக்கத்தை நோக்கி அவர்கள் நகர்த்தவில்லை.

இதைத்தான் புவாரிசம் என்கிறோம். மார்டினிக்கிலும் இத்தகைய புவாரிசத்திற்கு இடையில்தான் நாங்கள் வாழ்ந்து வந்தோம். மார்ட்டினிக்கைச் சேர்ந்த ஏழ்மையான சின்ன மருந்துக்கடைக்காரர் ஒருவர் ஓய்வுநேரத்தில் கவிதைகள், சோனட்கள் எழுதிவந்தார். பின்னர் அதை டௌலவ்ஸின் ஃப்ளோரல் கேம்ஸ் போன்ற படைப்பிலக்கிய போட்டிகளுக்கு அனுப்பியது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அவருடைய ஒரு கவிதைக்குப் பரிசு கிடைத்தபோது மிகப்பெருமையாக அதைக் கருதினார். அக்கவிதையை எழுதியது ஒரு கறுப்பினத்தவன் என்பதைக்கூட தேர்வுசெய்தவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று என்னிடம் ஒருமுறை சொன்னார். அதாவது, அவருடைய கவிதை பொதுத்தன்மையோடு இருந்ததே அவருடைய சிலாகிப்புக்குக் காரணம். அவரைப் பெருமையடையச் செய்ததை, நானாக இருந்தால் என் மனம்நோகச் செய்யும் கண்டனமாக எடுத்துக்கொண்டிருப்பேன்.

அது முற்றிலும் அந்நியமாதலுக்கான ஒரு காரணியாக இருந்தது.

நீங்கள் பிரச்சினையின் மையப்புள்ளியைத் தொட்டுவிட்டீர்கள். எங்களின் போராட்டம் என்பதே அந்நியமாதலுக்கு எதிரான போராட்டமாகத்தான் இருந்தது. அத்தகைய போராட்டமே கறுப்பியத்தை ஈன்று தந்தது. ஏனெனில், நீக்ரோக்களாக இருப்பதை ஆண்டிலீயர்கள் அவமானமாகக் கருதினார்கள். நீக்ரோவை மாண்போடு விளிக்கும் எல்லாவிதமான இடக்கரடக்கலையும் அவர்கள் அலசி ஆராய்ந்துவிட்டார்கள். கறுப்பர், கருப்புத்தோல்காரர் என்பன போன்ற இன்னும் பல முட்டாள்த்தனங்களிலும் அவர்கள் ஈடுபடுவார்கள்.

ஆமாம் அவை முழுக்க முட்டாள்த்தனங்களே.

அதனால்தான் மறுப்பின் சொல்லாக நீக்ரோ (Negre) என்னும் பதத்தை நாங்கள் தழுவிக்கொண்டோம். எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் சொல்லாக அது இருந்தது. சொல்லப்போனால் அது சீற்றம் கொண்ட இளைஞர்களின் எதிர்வினையாக வெளிப்பட்டது. நீக்ரோ என்னும் வார்த்தை அவமானகரமாகப் பார்க்கப்பட்ட காரணத்திற்காகவே நாங்கள் அந்த வார்த்தையைத் தேர்ந்துகொண்டோம். உண்மையில் ‘கறுப்பு மாணவன்’ இதழை நாங்கள் நிறுவியபோது நான் அதை நீக்ரோ மாணவன் என்று பெயரிடவே ஆசைப்பட்டேன். ஆனால், ஆண்டிலீயர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியதையொட்டி அம்முயற்சி கைவிடப்பட்டது என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

நீக்ரோ என்னும் வார்த்தை புண்படுத்தும்படி இருப்பதாகச் சிலர் நினைத்தார்கள்.

ஆமாம், அதிகக் காயப்படுத்தக்கூடியதாகவும், மிக மூர்க்கமானதாகவும் பார்க்கப்பட்ட பிறகுதான் நீக்ரோயிசத்தை நான் பேசத் துணிந்தேன். அப்போது எங்களிடம் தீரமிக்க நெஞ்சுறுதி இருந்தது. எனவே நாங்கள் நீக்ரோ, நீக்ரோயிசம் போன்ற வார்த்தைகளில் கடுமையான உறுதிப்பாட்டை அடையாளம் கண்டுகொண்டோம்.

‘தாய் மண்ணிற்குத் திரும்புத’லில் ஹைதியை நீக்ரோயிசத்தின் தொட்டில் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் வார்த்தைகளிலேயே சொல்வதென்றால், “நீக்ரோயிசம் தன் சொந்தக் கால்களில் முதன்முதலாக நின்ற இடம் ஹைதி.” பிறகு உங்கள் கருத்தின்படி, நமது நாட்டின் வரலாறு ஏதோவொரு வகையில் நீக்ரோயிசத்தின் முன்வரலாறு என்கிறீர்கள். நீக்ரோயிச கோட்பாட்டை ஹைதியின் வரலாற்றோடு நீங்கள் எப்படிப் பொருத்திப் பார்க்கிறீர்கள்?

நல்லது. வட அமெரிக்க நீக்ரோவையும் ஆப்பிரிக்காவையும் நான் கண்டடைந்த பிறகு கறுப்புலகம் முழுவதையும் நான் ஆய்வு செய்யத் தொடங்கினேன். அந்த வழியில்தான் நான் ஹைதியின் வரலாற்றிடம் வந்து சேர்ந்தேன். மார்ட்டினிக்கை நான் விரும்புகிறேன். ஆனால், அது ஓர் அந்நியமாக்கப்பட்ட நிலம். அதற்கு எதிர்நிலையில் ஹைதி வீரயுக ஆண்டிலீயர்களையும், ஆப்பிரிக்க ஆண்டிலீயர்களையும் எனக்குப் பிரதிநிதித்துவப்படுத்தியது. ஆண்டிலீயர்களுக்கும் ஆப்பிரிக்கர்களுக்கும் இடையில் நான் ஒரு தொடர்பை உருவாக்க முனைந்தேன். ஆண்டிலீயர்களில் அதிக அளவிலான ஆப்பிரிக்கர்களைக் கொண்டதாக ஹைதி இருக்கிறது. அதேநேரம் ஹைதி ஓர் அற்புதமான வரலாற்றைக் கொண்ட நாடாகவும் விளங்குகிறது. ஹைதியைச் சேர்ந்த தௌஸெய்ண்ட் லோவர்ச்சர் (Toussaint L’Ouverture), ஹென்றி கிரிஸ்டோஃப் (Henri Christophe), ழான் ழாக் தெஸலைன் (Jean-Jacques Dessalines) போன்ற ஹைதிய அறிஞர்களால்தான் புதிய உலகின் முதல் நீக்ரோ காவியம் படைக்கப்பட்டது. மார்ட்டினிக்கில் ஹைதியைப் பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரியாது. ஹைதியை அறிந்து அதை நேசிக்கும் ஒரு சில மார்ட்டினிக்கியர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.

ஆக, ஹைதியில் உங்கள் முதல் சுதந்திரப் போராட்டம் நீக்ரோயிசக் கருத்தாக்கத்தை நிகழ்த்திக் காண்பித்து அதை உறுதிப்படுத்துவதாக இருந்தது. நடப்பில் இருக்கும் நீக்ரோயிசமே நமது தேசிய வரலாறு.

ஆமாம், நடப்பில் இருக்கும் நீக்ரோயிசம். ஒரு புதிய, சுதந்திர உலகை வடிவமைக்கும் தீர்மானத்தை உறுதிசெய்யும் கறுப்பின மக்கள் முதன்முதலில் தலைதூக்கிய தேசம் என்றால் அது ஹைதியே.

உலக வரலாற்றுக்கான ஹைதியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுக்க நீக்ரோயிசம் என்ற பதத்தைப் பயன்படுத்தாத ஆளுமைகளும் ஹைதியில் இருந்திருக்கிறார்கள். ஹனீபல் ப்ரைஸ், லூயி ஜோசப் – ஜான்வீர் போன்ற ஹைதிய எழுத்தாளர்கள் கறுப்பினப் பண்பாடு மற்றும் அழகியல் விழுமியங்களை மீட்டெடுக்கும் தேவையைப் பற்றி ஏற்கெனவே பேசியிருக்கிறார்கள். ஆன்டெனெர் ஃபர்மின் போன்ற மேதை பாரிஸில் ‘மனித இனங்களின் சமத்துவம் பற்றி’ (De l’égalité des races humaines) என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதியிருக்கிறார். அதில் ஒட்டுமொத்த கறுப்பின அடையாள அழிப்பை எதிர்த்து வினையாற்றும் பொருட்டு ஹைதியில் ஆப்பிரிக்கப் பண்பாட்டை மறு மதிப்பீடு செய்ய முயன்றிருக்கிறார். அதுவே நம்முடைய ஆரம்பகால எழுத்தாளர்களின் இயல்பாக இருந்தது. ஜஸ்டின் லெரிஸ்ஸன் (Justin Lherisson), ஃப்ரெட்ரிக் மெர்ஸெலின் (Frederic Marcelin), ஃபெர்ணன்ட் ஹிப்பர் (Fernand Hibbert), ஆன்டய்ன் இன்னொசன்ட் (Antoine Innocent) போன்ற ஒருசில ஹைதிய எழுத்தாளர்கள் எங்களுக்கென ஓர் ஆப்பிரிக்கக் கடந்தகாலம் இருந்தது என்ற உண்மையை, நேற்றைக்குப் பிறந்தவரல்ல இந்த அடிமை என்பதை, நம்முடைய தேசியப் பண்பாட்டின் வளர்ச்சிக்கு ஊடு சடங்கு முக்கியக் கூறாக இருந்தது என்பது போன்ற நம் நாட்டின் தனித்துவங்களைக் கண்டறியத் தொடங்கினார்கள் என்று பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியின் துவக்கத்தைச் சொல்லலாம். நீக்ரோயிசக் கருத்தாக்கத்தை இன்னும் நுணுகி ஆராய வேண்டிய தேவை இன்றைக்கு இருக்கிறது. நீக்ரோயிசம் அனைத்து வகையான அபாயங்களையும் கடந்துவந்திருக்கிறது. இந்தக் கருத்தாக்கம் எப்போதும் வெடித்தெழும் அதன் சுயத் தன்மையோடு சேர்த்து சொந்த அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என்று நான் நம்பவில்லை. ‘என் தாய்நாட்டிற்குத் திரும்புத’லை விரும்புவர்ளைவிட பிற நோக்கங்களைக் கொண்டவர்கள் பாரிஸிலும் வேறு சில இடங்ளிலும் இன்றும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஒவ்வொருவருக்கும் தனித்தனி நீக்ரோயிசம் இருந்தது என்று சொல்ல விரும்புகிறேன். நீக்ரோயிசத்தைப் பற்றி ஏராளமான வரையறைகள் இருந்துவருகின்றன. தற்பெருமைக்காக நான் அதை விஞ்ச வேண்டும் என்று எத்தனிக்கவில்லை. ஆனால், நீக்ரோயிசம் பற்றிய என்னுடைய கருத்தியலை யாரேனும் கேட்கும்போது, முக்கியமாக இது அரூபம் அல்லாத பருண்மையான ஓர்மையடைதலைக் குறிக்கிறது எனப் பதிலுரைப்பேன். நான் இதுவரை உங்களிடம் சொல்லிவருவது, எங்களின் கடந்தகால வாழ்க்கைச் சூழலும், நீக்ரோ மக்கள் தங்களைத் தாங்களே இழிவாகக் கருதிக்கொண்ட அடையாள அழிப்புச் சூழலும் அவ்வளவு முக்கியமானதாக இருந்தது என்பதைத்தான். நிராகரிப்பின் சூழலிலேயே நாங்கள் வாழ்ந்துவந்ததால் தாழ்வு மனப்பான்மையை நாங்கள் இயல்பாகவே வளர்த்துக்கொண்டோம். ஒரு கறுப்பர் தன்னுடைய அடையாளத்தை எப்போதும் தேடிக்கொண்டிருந்ததாகவே நான் நினைப்பேன். அப்படியான அடையாளத்தை நிறுவுவதே நம்முடைய தேவையாக இருந்தது என்றால், நாம் யார் என்பதற்கான, அதாவது எங்கள் பாடுகளின் முதன்மையான உண்மைகளைப் பற்றிய, ஒரு தெளிவான பிரக்ஞை கண்டிப்பாக நமக்கு இருந்திருக்கும் என்று எனக்குத் தோன்றியிருக்கிறது : நாங்கள் கறுப்பர்கள், நாங்கள் கறுப்பர்களாக இருந்தோம் என்பதால் எங்களுக்கென ஒரு வரலாறு இருந்தது. மாபெரும் விழுமியங்களைத் தன்னகத்தே கொண்டதொரு பண்பாட்டுக் கூறுகளால் ஆன ஒரு வரலாறு, அழகு வாய்ந்ததும் முக்கியமானதுமான ஒரு கறுப்பு நாகரிகம் இருந்துகொண்டிருக்கிறது என்பதால் நீங்கள் சொல்வதைப்போல நீக்ரோ ஒன்றும் புதிதாய் பிறந்தவரல்ல. நாங்கள் எழுதத் தொடங்கிய காலத்தில், ஆப்பிரிக்கா இந்த உலகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை என்பதைப் போல, ஆப்பிரிக்காவிற்கென ஓர் அத்தியாயம்கூட ஒதுக்காமல், உலக நாகரிகங்களின் வரலாறுகளைப் பற்றி மக்களால் எழுத முடிந்தது. எனவே, நாங்கள் நீக்ரோக்களாக இருந்தோம், அது எங்களுக்குப் பெருமையாக இருந்தது. மேலும், மனிதயின வரலாற்றில் ஆப்பிரிக்கா ஒன்றும் வெற்றுப்பக்கம் அல்ல என்று நாங்கள் நினைத்ததை நடத்திக் காட்டினோம். ஆக, எங்களுடைய நீக்ரோ பாரம்பரியம் மதித்துப் போற்றப்பட வேண்டியது என்பதையும், மேலும் இந்தப் பாரம்பரியம் கடந்தகாலத்தோடு முடிந்துவிடவில்லை என்பதையும், உலகிற்கு மிக முக்கியமான பங்களிப்பை இன்றும்கூட அளிக்கவல்ல விழுமியங்களைக் கொண்டது என்பதையும் நாங்கள் இன்னும் உரத்துக் கூறினோம்.

அதாவது, உலகு தழுவிய விழுமியங்கள் என்கிறீர்களா..?

உலகு தழுவிய, இன்னும் நீர்த்துப்போகாத, உயிர்ப்புள்ள விழுமியங்கள். வறண்டுபோகாத நிலம். நம்முடைய இனிமையால் நாம் அதற்கு நீர்பாய்ச்ச எத்தனித்துப் புதிய விதைகளை ஊன்றினோம் எனில், அது இன்னும்கூட கனி தரக்கூடியதாக இருக்கிறது. ஆக, இதுதான் நிலவரம். உலகத்திடம் சொல்ல ஆப்பிரிக்கப் பாரம்பரியத்தில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஐரோப்பிய நாகரிகத்தைக் கண்டு நாங்கள் திகைத்துப் போய்விடவில்லை. ஐரோப்பிய நாகரிகத்தின் அடையாளத்தை நாங்கள் கொண்டிருந்தோம் என்றாலும் ஆப்பிரிக்காவும் ஐரோப்பாவிற்குப் பங்களிக்க முடியும் என்று நாங்கள் நினைத்தோம். அதுகூட எங்களின் ஒருமைப்பாட்டிற்கான உறுதிப்பாடுதான். அது அப்படித்தான் இருந்தது. அல்ஜீரியாவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் என்னுடைய சகோதரர்களுக்கு ஏதேனும் ஏற்பட்டால் அதன் அதிர்வலைகளை எனக்குள் உணர்ந்திருக்கிறேன் என்பதை நான் எப்பொழுதும் ஒப்புக்கொள்வேன். ஹைதியிலோ அல்லது ஆப்பிரிக்காவிலோ நடந்தவற்றை என்னால் அலட்சியப்படுத்த முடியவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். அதன் பிறகே, ஒருவகையான கறுப்பின நாகரிகம் உலகெங்கும் ஓரளவிற்குப் பரவியிருக்கிறது என்ற கருத்துக்கு மெல்ல வந்து சேர்ந்தோம். ‘நீக்ரோ சூழ்நிலை’ என்ற ஒன்று பூகோளரீதியாக வெவ்வேறு பகுதிகளில் இருந்ததையும், ஆப்பிரிக்காவும் என்னுடைய நாடுதான் என்பதையும் உணர்ந்துகொண்டேன். ஆண்டிலீஸ், ஹைதி போன்ற ஓர் ஆப்பிரிக்கக் கண்டம் இருந்தது. மார்ட்டினிக் நீக்ரோக்கள், பிரேஸிலிய நீக்ரோக்கள் என வெவ்வேறு நீக்ரோக்களும் இருந்தார்கள். இப்படித்தான் நீக்ரோயிசத்தை நான் புரிந்துகொள்கிறேன்.

நீக்ரோயிசம் தோன்றுவதற்கு முன்பே ஓர் இயக்கம் இருந்துவந்தது – இங்கு நான் இரண்டு உலகப் போர்களுக்கு இடையிலான நீக்ரோ இயக்கத்தைப் பற்றிப் பேசுகிறேன் – ஐரோப்பிய ஓவியர்களிடத்தில் காண முடிந்த ஆப்பிரிக்கக் கலை மீதான ஆர்வத்தில் வெளிப்பட்ட அதை நீங்கள் முன் – நீக்ரோயிச இயக்கம் என்று சொல்லிக்கொள்ளலாம். ஐரோப்பியக் கலைஞர்களின் ஆர்வத்திற்கும் நீக்ரோக்களின் ஓர்மை அடைதலுக்கும் இடையில் நீங்கள் ஒட்டுறவைக் காண்கிறீர்களா?

நிச்சயமாக. நம்முடைய பிரக்ஞையின் வளர்ச்சியில் அந்த இயக்கத்தின் பங்களிப்பும் ஒரு காரணியாக இருந்திருக்கிறது. பிக்காஸோ, வ்லாமிங்க், ப்ராக் போன்றவர்களால்தான் நீக்ரோக்கள் ஃப்ரான்ஸில் புதிய பண்பாடாகப் பார்க்கப்பட்டார்கள்.

அதே காலகட்டத்தில் கலை ஆர்வலர்கள் மற்றும் கலை வரலாற்றாளர்கள் – உதாரணத்திற்கு ஃப்ரான்ஸில் பால் கைலம், ஜெர்மனியில் கார்ல் ஐன்ஸ்டைன் – ஆப்பிரிக்கச் சிற்பத்தின் தரத்தைக் கண்டு முற்றிலும் பிரமித்துப் போனார்கள். ‘இருபதாம் நூற்றாண்டு ஆன்மாவின் உயிர்ப்பூட்டும் விந்தணு’ என்று ஆப்பிரிக்கக் கலையை கைலம் பாராட்டினார்.

ப்ளைஸ் சென்ட்ராஸின் நீக்ரோ தொகைநூலும் எனக்கு நினைவிருக்கிறது.

ஆப்பிரிக்க நீக்ரோக்களின் வாய்மொழி இலக்கியத்திற்கென அர்ப்பணிக்கப்பட்ட நூல் அது. ஆப்பிரிக்க முகமூடிகள், சிற்பங்கள் உள்ளிட்ட கலைப்பொருட்கள் மீதான அக்கால கலையுலகின் முன்னணி விமர்சகர்களால் எழுதப்பட்ட எண்ணற்ற கட்டுரைகளை ஏந்திவந்த ஆக்ஷன் என்ற நுண்கலை சஞ்சிகையின் மூன்றாவது இதழ்கூட எனக்கு ஞாபகம் இருக்கிறது. அதுபோல கைலம் அப்போலினையரை நாம் மறந்துவிடக்கூடாது, அவருடைய கவிதைகள் முழுக்க ஆப்பிரிக்காவை நினைவூட்டக்கூடியவை. சுருக்கமாகச் சொன்னால், நீக்ரோயிசக் கருத்தாக்கம் அதன் ஆதரவாளர்களைப் பொறுத்தவரை ஒருவகையான கூட்டுச் சித்தாந்த – அரசியல் நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவானதாக நீங்கள் நினைக்கிறீர்களா? உங்கள் தோழர்களான நீக்ரோயிசத்தின் முதற்கட்ட போராளிகள் உங்கள் தடத்திலிருந்து விலகி மாறுபட்டுச் சிந்தித்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, திறமைமிக்கச் சிந்தனையாளரும் தீவிர கவிஞருமான செங்கார் நீக்ரோயிசக் கருத்தாக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார்.

நம்முடைய இனத்தொடர்புகள் என்பது மிக முக்கியமாக உணர்வு சார்ந்ததாக இருக்கிறது. நீங்கள் கறுப்பராக உணர்ந்திருக்கலாம் அல்லது அப்படி உணராமலும் இருந்திருக்கலாம். ஆனால், அதற்கு ஓர் அரசியல் நோக்கம் இருந்தது. அந்தவகையில் நீக்ரோயிசம் இடதுசாரியின் அங்கமாகத்தான் இருந்தது. நம்முடைய விடுதலை வலது பக்கத்திலிருந்து வரலாம் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை, அது சாத்தியமும் கிடையாது. எங்களுக்கான விடுதலை எங்களை இடதுபக்கத்தில் கொண்டுசேர்த்தது என்று நானும் செங்காரும் ஒரே உணர்வைக் கொண்டிருந்தாலும், கறுப்பினப் பிரச்சினையை வெறும் சமூகப் பிரச்சினையாகப் பார்க்க நாங்கள் இருவருமே மறுத்துவிட்டோம். அனைத்தும் வெறுமனே ஃப்ரான்ஸில் இடதுசாரி அரசியலதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டால் போதும், பொருளாதார நிலைமைகளில் ஏற்படும் மாற்றத்தோடு கறுப்பினப் பிரச்சினையும் மறைந்துவிடும் என்று நினைத்த, இன்றும் நினைக்கின்ற மக்கள் இருக்கவே செய்கிறார்கள். அதில் எனக்கு ஒருபோதும் சிறிய உடன்பாடுகூட இருந்ததில்லை. பொருளாதாரப் பிரச்சினை முக்கியமானது என்பதை நானும் அறிவேன், ஆனால் அதுமட்டுமே பிரச்சினை கிடையாது.

உண்மைதான், ஏனெனில் பிரக்ஞைக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான உறவு அதீத சிக்கல் வாய்ந்ததாக இருக்கிறது. அதனால்தான், நம்முடைய மனதை, அக வாழ்வைக் காலனிய நீக்கம் செய்வதும் அதற்கு நிகரான முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அப்படிச் செய்யும்போது நாம் நம்முடைய சமூகத்தையும் காலனிய நீக்கம் செய்துகொள்கிறோம்.

துல்லியமாகச் சொன்னீர்கள், நீங்கள் சுட்டிக்காட்டியதைப்போல கறுப்பின மக்கள் பாட்டாளி வர்க்கங்களாக உருவாக்கப்பட்டுக்கொண்டே அந்நியமாக்கலுக்கும் தள்ளப்படுகிறார்கள் என்று மார்ட்டினிக்கிய கம்யூனிஸ்டுகளிடம் நான் எடுத்துக்கூறியது நன்றாக நினைவிருக்கிறது: முதலில் தொழிலாளர்களாக மற்றவர்களோடு இணைந்து பொருளாதாரப் பிரச்சினையை எதிர்கொள்ளும் நாங்கள், பின்னர் கறுப்பர்களாக ஒரு மனித இனமாகவே ஏற்றுக்கொள்ளப்படாத இனவாதத்தை எதிர்த்துத் தனியாகவும் போராட வேண்டியிருக்கிறது.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger