நான் ஒரு கனவு காண்கிறேன்

மார்டின் லூதர் கிங் | தமிழில்: ஜி.ஏ.கௌதம்

ஆகஸ்ட் 28, 1963 அன்று, வேலைவாய்ப்பு மற்றும் சுதந்திரத்திற்காக நடைபெற்ற வாஷிங்டன் பேரணியின்போது, லிங்கன் நினைவகத்தின் படிக்கட்டுகளில் இருந்து டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆற்றிய பேருரையின் முழுமையான, திருத்தப்படாத வடிவம் இது.

மது தேசத்தின் வரலாற்றில், சுதந்திரத்திற்கான மாபெரும் பேரணியாக வரலாற்றில் இடம்பெறப்போகும் இந்தத் தருணத்தில், இன்று உங்களுடன் இணைந்திருப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

ஈரைம்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மகத்தான அமெரிக்கர் – யாருடைய தத்துவ நிழலின் கீழ் இன்று நாம் நிற்கிறோமோ – அந்த ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், இலட்சக்கணக்கான அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்குச் சுதந்திரத்தை வாக்குறுதியாக அளித்த விடுதலைப் பிரகடனத்தில் கையொப்பமிட்டார். அந்த முக்கியமான சட்டம், அடிமைத்தனத்தின் கொடும் அநீதியின் தழலில் கருகிக்கொண்டிருந்த இலட்சக்கணக்கான அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை ஒளி வீசும் ஒரு கலங்கரை விளக்கமாக இருந்தது. அது, அவர்களின் நீண்ட, இருண்ட சிறைவாச இரவை முடிவுக்குக் கொண்டுவரும் மகிழ்ச்சிகரமான விடியலாக அமைந்தது.

ஆனால், நூறாண்டுகள் கடந்த பின்பும் கறுப்பின மக்கள் உண்மையான சுதந்திரத்தைப் பெறவில்லை. அவர்களின் வாழ்க்கை, இன ஒதுக்கல் மற்றும் பாகுபாடு எனும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, இன்னும் கைவிலங்குகளில் கட்டப்பட்டது போலவே முடங்கிக் கிடக்கிறது. நூறாண்டுகள் கடந்த பின்பும், கறுப்பின மக்கள் பொருள்வளம் எனும் பெருங்கடலின் நடுவே வறுமை எனும் தனித்தீவில் வாழ்கிறார்கள். நூறாண்டுகள் கடந்த பின்பும், கறுப்பின மக்களாகிய நாம் அமெரிக்கச் சமூகத்தின் மூலைகளில் நலிவுற்று, நம் சொந்த மண்ணிலேயே அந்நியர்களாக நடத்தப்படுகிறோம். ஆகவே, இந்தக் கொடிய அவல நிலையை உலகறியச் செய்யவே, இன்று நாம் இங்கே கூடியுள்ளோம்.

ஒருவிதத்தில், நாம் ஒரு காசோலையைப் பணமாக்கவே நம் தேசத்தின் தலைநகருக்கு வந்துள்ளோம். நமது தேசத்தை உருவாக்கிய தலைவர்கள், அரசியலமைப்பையும் சுதந்திரப் பிரகடனத்தையும் எழுதியபோது, ஒரு சத்திய வாக்குறுதியை அளித்தார்கள்; அதாவது, ஒவ்வொரு அமெரிக்கரும் சுதந்திரம், சமத்துவத்திற்கான உரிமைகளை வாரிசாகப் பெறுவார்.

அந்த வாக்குறுதியின் அர்த்தம் என்னவென்றால், கறுப்பர்கள், வெள்ளையர்கள் என அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் உண்டு என்பதே. ஆனால் இன்று, கறுப்பினக் குடிமக்களைப் பொறுத்தவரை, அமெரிக்கா இந்த வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறிவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. தனது புனிதக் கடமையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, அமெரிக்கா நமக்கு ஒரு செல்லாத காசோலையைக் கொடுத்துள்ளது; அதாவது, “நிதிப் பற்றாக்குறை” என்று திரும்பி வரும் ஒரு காசோலை.

ஆனால், நீதியின் வங்கி திவாலாகிவிட்டது என்பதை நாங்கள் நம்ப மறுக்கிறோம். இந்தத் தேசத்தின் வாய்ப்புகளெனும் பெரும் பெட்டகங்களில் நிதி போதாது என்பதை நாங்கள் நம்ப மறுக்கிறோம். ஆகவே, கேட்ட மாத்திரத்தில் சுதந்திரத்தின் செல்வங்களையும், நீதியின் பாதுகாப்பையும் வழங்கக்கூடிய அந்தக் காசோலையைப் பணமாக்கவே நாம் இங்கு வந்துள்ளோம்.

நாம் இப்போதே செயலாற்ற வேண்டும் என்ற தீவிரமான உண்மையை அமெரிக்காவிற்கு நினைவூட்டவே இந்தப் புனிதமான இடத்திற்கு வந்துள்ளோம். இது ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் நேரமல்ல; படிப்படியான முன்னேற்றம் எனும் பொய்யான ஆறுதலில் மயங்கிக் கிடக்கும் நேரமும் அல்ல. இதுதான், ஜனநாயகத்தின் வாக்குறுதிகளை நிஜமாக்க வேண்டிய தருணம்!

இது நல்ல தருணம்! இனவொதுக்கல் எனும் இருண்ட பள்ளத்தாக்கிலிருந்து மேலேறி, இனநீதி எனும் ஒளிமயமான பாதையில் நடைபோட வேண்டிய தருணம்.

இது நல்ல தருணம்! அநீதி எனும் புதைகுழியிலிருந்து நம் தேசத்தை மீட்டெடுத்து, சகோதரத்துவம் எனும் திடமான பாறையின் மீது நிலைநிறுத்த வேண்டிய தருணம்.

இது நல்ல தருணம்! எவ்விதப் பாகுபாடும் இன்றி நாம் அனைவருக்கும், சமநீதியை நிலைநிறுத்த வேண்டிய தருணம்.

இந்தத் தருணத்தின் தீவிர அவசியத்தைத் தேசம் புறக்கணிப்பது பேராபத்தில் முடியும். கறுப்பின மக்களின் நியாயமான ஆத்திரம் எனும் சுட்டெரிக்கும் கோடைக்காலம், சுதந்திரம் – சமத்துவம் எனும் புத்துயிர் தரும் இலையுதிர் காலம் வரும்வரை ஓயாது. 1963 என்பது நமது போராட்டத்தின் முடிவல்ல, மாறாக அது உண்மையான மாற்றத்தின் தொடக்கம். கறுப்பின மக்கள் தங்கள் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்ப்பதற்காகவே போராடினார்கள் என்றும், இனி அமைதியாகிவிடுவார்கள் என்றும் நினைப்பவர்கள், தவறாகக் கணக்குப் போடுகிறார்கள். அநீதியைப் புறக்கணித்து அமெரிக்கா மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பினால், அவர்கள் கடுமையான அதிர்ச்சியூட்டும் விழிப்புணர்வைச் சந்திக்க நேரிடும். கறுப்பின மக்களுக்கு, குடிமக்களாக அவர்களின் முழு உரிமைகளும் வழங்கப்படும்வரை அமெரிக்காவில் அமைதியோ, நிம்மதியோ ஒருபோதும் இருக்காது. நீதி எனும் ஒளிமயமான நாள் உதயமாகும் வரை, போராட்டத்தின் புயல் காற்று இந்தத் தேசத்தின் அஸ்திவாரங்களைத் தொடர்ந்து உலுக்கிக்கொண்டே இருக்கும்.

ஆனால், என் மக்களுக்கு நான் இதைக் கூறியாக வேண்டும்: இறுதியாக உள்ளே நுழையும் தருவாயில், நாம் நீதி எனும் அரண்மனையின் வாசற்படியில் நின்றுகொண்டிருக்கிறோம். நமக்கு உரிமையான இடத்தைப் பெறும் போராட்டத்தில், நாம் தவறான செயல்களைச் செய்தோ அல்லது பதிலுக்குத் தீமை புரிந்தோ குற்றவாளிகளாகிவிடக் கூடாது. சுதந்திரத்தின் மீதான நமது ஆழ்ந்த தாகத்தை, கோபம் வெறுப்பு போன்ற கசப்புணர்வால் தீர்த்துக்கொள்ள நாம் முயலாதிருப்போம். அதற்கு மாறாக, நாம் கண்ணியம் மற்றும் சுயக்கட்டுப்பாட்டின் மேன்மையான தளத்தில் நின்று நமது போராட்டத்தை நடத்த வேண்டும். நமது ஆக்கப்பூர்வமான எதிர்ப்பை, வன்முறையாகத் தரம் தாழ்த்த ஒருபோதும் நாம் அனுமதிக்கக்கூடாது. மீண்டும் மீண்டும், உடல் ரீதியான தாக்குதல்களுக்கு நமது ஆன்ம பலத்தால் எதிர்கொள்வதன் மூலம், நாம் உன்னத நிலைக்கு உயர்ந்தாக வேண்டும். கறுப்பின மக்களிடையே ஏற்பட்டுள்ள அபாரமான இந்தப் புதிய போராட்ட குணம், நம்மை அனைத்து வெள்ளையர்களிடமும் அவநம்பிக்கை கொள்ளும் நிலைக்கு இட்டுச் செல்லக் கூடாது. ஏனெனில், நமது வெள்ளை சகோதர சகோதரிகள் பலர், அவர்களது எதிர்காலம் நமது எதிர்காலத்தோடு பிணைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்திருப்பதாலேயே இன்று நம்முடன் இருக்கிறார்கள். நாம் மட்டும் தனியாக முன்னேற முடியாது; சமூக நீதி மற்றும் சுதந்திரத்திற்கான பயணம் அனைவரின் ஒற்றுமையால் மட்டுமே சாத்தியம்!

இந்தப் பயணத்தைத் தொடரும் நாம், எப்போதும் முன்னோக்கிச் செல்வோம் என்று உறுதியேற்க வேண்டும். நம்மால் ஒருபோதும் பின்வாங்க முடியாது. குடியுரிமைகளுக்காகப் போராடும் நம்மைப் பார்த்துச் சிலர் கேட்கிறார்கள், “நீங்கள் எப்போதுதான் திருப்தி அடைவீர்கள்?”

காவல்துறையின் கொடூர வன்முறைக்குக் கறுப்பின மக்கள் பலியாகும் வரை…

பயணக் களைப்பால் தளர்ந்த எங்களுக்கு நெடுஞ்சாலை விடுதிகளிலும், நகரங்களின் தங்கும் விடுதிகளிலும் அறைகள் மறுக்கப்படும் வரை…

ஒரு சிறிய சேரியிலிருந்து மற்றொரு பெரிய சேரிக்கு இடம்பெயர்வது மட்டுமே எங்கள் வாழ்க்கையாக இருக்கும் வரை…

‘வெள்ளையர்களுக்கு மட்டும்’ என்ற பலகைகளால் எங்கள் குழந்தைகளின் சுயமரியாதை பறிக்கப்பட்டு அவர்களின் கண்ணியம் சூறையாடப்படும் வரை…

மிசிசிப்பியில் ஒரு கறுப்பர் வாக்களிக்க முடியாமலும், நியூயார்க்கில் ஒரு கறுப்பர் வாக்களிக்க ஒன்றுமில்லை என்று நம்பும் வரை…

எங்களால் ஒருபோதும் திருப்தியடைய முடியாது.

இல்லை இல்லை, நாங்கள் திருப்தியடையவில்லை; நீதி ஒரு பெரும் நதியைப் போலவும், நேர்மை ஒரு வற்றாத ஓடையைப் போலவும் பெருக்கெடுத்துப் பாயும்வரை நாங்கள் திருப்தியடையப் போவதில்லை.

உங்களில் பலர் பெரும் சோதனைகளையும் வேதனைகளையும் கடந்து இங்கு வந்துள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். உங்களில் சிலர் குறுகிய சிறைக் கொட்டடிகளிலிருந்து இப்போதுதான் வெளிவந்துள்ளீர்கள். சுதந்திரத்திற்கான தேடலில், உங்களில் சிலர் வன்முறையாலும் காவல்துறையின் கொடூரத்தாலும் தாக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள், உங்கள் துன்பத்தையே வலிமையாக மாற்றிக்கொண்ட அனுபவ வீரர்கள். நியாயமற்ற துன்பம்கூட மாற்றத்தைக் கொண்டுவரும் என்று தொடர்ந்து நம்புங்கள். மிசிசிப்பி, அலபாமா, தென் கரோலினா, ஜார்ஜியா, லூசியானா போன்ற இடங்களுக்கும், நமது வடக்கத்திய நகரங்களின் ஏழ்மையான பகுதிகளுக்கும் திரும்பிச் செல்லுங்கள். இந்த நிலை நிச்சயம் மாறும், மாற்றப்படும் என்பதை அறிந்து செல்லுங்கள். நம்பிக்கையின்மை எனும் படுகுழியில் நாம் விழுந்துவிடாமல் இருப்போம்.

என் நண்பர்களே, நாம் இன்றும் நாளையும் இடர்களை எதிர்கொண்டாலும், எனக்கு இன்னமும் ஒரு கனவு இருக்கிறது. அது, அனைவருக்கும் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் அளிப்பதே அமெரிக்காவின் உண்மையான லட்சியம் என்ற நம்பிக்கையில் ஆழமாக வேரூன்றிய ஒரு கனவு.

நான் ஒரு கனவு காண்கிறேன், ஒருநாள் நமது தேசம் நிமிர்ந்து நின்று, ‘எல்லா மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டவர்களே’ என்ற தனது அடிப்படைக் கொள்கையை உண்மையாக வாழ்ந்து காட்டும் என்று.

நான் ஒரு கனவு காண்கிறேன், ஒருநாள் ஜார்ஜியாவின் செங்குன்றுகளில், முன்னாள் அடிமைகளின் பிள்ளைகளும், முன்னாள் உரிமையாளர்களின் பிள்ளைகளும் சகோதரத்துவத்தின் மேசையில் சமமாக ஒன்றாக அமர்ந்திருப்பார்கள் என்று.

நான் ஒரு கனவு காண்கிறேன், ஒருநாள் அநீதியின் வெப்பத்தாலும் அடக்குமுறையின் அனலாலும் தவித்துக்கொண்டிருக்கும் மிசிசிப்பி மாநிலம் கூட, சுதந்திரமும் நீதியும் நிறைந்த சோலைவனமாக மாறும் என்று.

நான் ஒரு கனவு காண்கிறேன், ஒருநாள் எனது நான்கு சின்னஞ்சிறு குழந்தைகளும், அவர்கள் தோலின் நிறத்தால் அல்லாமல், அவர்களின் குணத்தின் பண்புகளால் மதிப்பிடப்படும் ஒரு தேசத்தில் வாழ்வார்கள் என்று. அந்த நாளை நான் கனவு காண்கிறேன்!

நான் ஒரு கனவு காண்கிறேன், ஒருநாள் கொடிய இனவெறி நிறைந்த, இனவாதிகளையும், “இண்டர்போசிஷன்” (கூட்டாட்சிக்கு எதிராக மாநில அரசே தலையிடுவது), “நலிபிகேஷன்” (கூட்டாட்சி சட்டத்தைச் செல்லாததாக்குவது) போன்ற அந்த வார்த்தைகள் தன் உதடுகளிலிருந்து விஷமென வழிந்தோடும் ஆளுநரைக் கொண்ட அலபாமா மாநிலத்தில் கூட, கறுப்பினக் குழந்தைகளும் வெள்ளையினக் குழந்தைகளும் சகோதர சகோதரிகளாகக் கைகோக்கும் நாள் வரும். அந்த நாளை நான் கனவு காண்கிறேன்.

நான் ஒரு கனவு காண்கிறேன், ஒருநாள் பள்ளத்தாக்குகள் எல்லாம் உயர்த்தப்பட்டு, குன்றுகளும் மலைகளும் தாழ்த்தப்பட்டு, கரடுமுரடான இடங்கள் சமமாக்கப்பட்டு, கோணலான இடங்கள் நேராக்கப்படும். அப்போது, இறைவனின் மகிமை வெளிப்படும், மக்கள் அனைவரும் அதை ஒருசேரக் காண்பார்கள்.

இதுவே எங்கள் நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடன்தான் நான் தெற்கிற்குத் திரும்பிச் செல்கிறேன். பற்றுறுதி எனும் வலிமையால், விரக்தி எனும் பெரும் மலையைக்கூட நம்பிக்கை எனும் சிற்பமாக நம்மால் வடித்தெடுக்க முடியும். இந்த நம்பிக்கையைக் கொண்டு, நம் தேசத்தின் சச்சரவு மிக்க அபஸ்வரங்களைச் சகோதரத்துவத்தின் அழகான இன்னிசையாக நம்மால் மாற்ற முடியும். ஒருநாள் நாம் விடுதலை அடைவோம் என்ற உறுதியான நம்பிக்கையுடன், நம்மால் ஒன்றாக உழைக்க, ஒன்றாகப் பிரார்த்திக்க, ஒன்றாகப் போராட, தேவைப்பட்டால் ஒன்றாகச் சிறை செல்லவும், சுதந்திரத்திற்காக ஒன்றிணைந்து நிற்கவும் முடியும். அந்த நாள் வரும். அன்று, மக்கள் எவ்விதப் பாகுபாடும் இன்றி, சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் கொண்ட பேரானந்தத்துடன் ஒரு புதிய பாடலைப் பாடுவார்கள்:

நான் நேசிக்கும் என் சுதந்திர பூமியே, உனக்காக நான் பாடுகிறேன்.

எங்கள் முன்னோர்கள் மரித்த நிலமே, தீரர் தம் பெருமை கொண்ட தேசமே,

நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் சுதந்திர முழக்கம் ஒலிக்கட்டும்!

அமெரிக்கா ஒரு மகத்தான தேசமாக விளங்க வேண்டுமென்றால், இங்கு அனைவருக்கும் சுதந்திரமும் சமத்துவமும் நிஜமாக வேண்டும்.

ஆகவே, நியூ ஹாம்ப்ஷயரின் உயர்ந்த குன்றுகளிலிருந்து சுதந்திர முழக்கம் ஒலிக்கட்டும்.

நியூயார்க்கின் வலிமைமிகு மலைகளிலிருந்து சுதந்திர முழக்கம் ஒலிக்கட்டும்.

பென்சில்வேனியாவின் அலெகெனி மலைத்தொடர்களில் இருந்து சுதந்திர முழக்கம் ஒலிக்கட்டும்.

கொலராடோவின் பனிபடர்ந்த ராக்கி மலைத்தொடர்களில் இருந்து சுதந்திர முழக்கம் ஒலிக்கட்டும்.

கலிபோர்னியாவின் வளைந்து நெளியும் சரிவுகளிலிருந்து சுதந்திர முழக்கம் ஒலிக்கட்டும்.

அது மட்டுமல்ல:

ஜார்ஜியாவின் ‘ஸ்டோன் மவுண்டென்’ என்ற இனவாதக் கோட்டையின் மீதிருந்தும் சுதந்திர முழக்கம் ஒலிக்கட்டும்.

டென்னசியின் லுக்அவுட் மலையிலிருந்தும் சுதந்திர முழக்கம் ஒலிக்கட்டும்.

மிசிசிப்பியின் ஒவ்வொரு மலையிலிருந்தும், சிறு மேட்டிலிருந்தும் சுதந்திர முழக்கம் ஒலிக்கட்டும்.

ஆம், அமெரிக்கத் தேசமெங்கும் சுதந்திர முழக்கம் ஒலிக்கட்டும்!

அமெரிக்காவின் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும், ஒவ்வொரு குக்கிராமத்திலிருந்தும், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும், ஒவ்வொரு நகரத்திலிருந்தும் சுதந்திர முழக்கம் ஒலிக்கும் அந்த நாள் வரும்போது, எவ்விதப் பாகுபாடும் இன்றி அனைத்து மக்களும் – கறுப்பின மக்களும் வெள்ளையின மக்களும், யூதர்களும் பிற இனத்தவரும், புராட்டஸ்டன்ட்டுகளும் கத்தோலிக்கர்களும் – ஒன்றாகக் கைகோத்து, கறுப்பின மக்களுக்கான அந்தப் பழைய பாடலைப் பாடுவார்கள்:

“விடுதலை! இறுதியில் விடுதலை!
சர்வ வல்லமையுள்ள இறைவா, நன்றி!
நாம் இறுதியில் விடுதலை அடைந்துவிட்டோம்!”

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger