விலங்கிடப்படாத எனது இதயம் மட்டும் ஒரு சிறிய சிந்தனையை முணுமுணுக்க ஏங்குகிறது

சீ.சிவா

அஞ்சலி: ஜி.என்.சாய்பாபா (1967 – 2024)

டந்த சனிக்கிழமை (12.10.2024) இரவு பத்துமணியளவில் எழுத்தாளர் வ.கீதாவிடமிருந்து ஒரு செய்தி வந்திருந்தது. அதில் “முதலில் ஸ்டான் சுவாமிக்கு நிகழ்ந்தது தற்போது ஜி.என்.சாய்பாபவிற்கு நடந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இரண்டாவது முறையாக மும்பை உயர் நீதிமன்றம் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவை கடந்த மார்ச் 5, 2024 அன்று விடுதலை செய்தது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகிய மகாராஷ்டிரா அரசு, இரண்டாவது முறையாக விசாரித்து விடுதலை செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. அதற்குள் அவரது மரணம் என்கிற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் பித்தப்பை நீக்கம் தொடர்பான அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அறுவை சிகிச்சைக்குப் பிறகான சிக்கலில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஹைதராபாத் நிஸாம் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார். அவருக்கு வசந்தா என்கிற மனைவியும், மஞ்சீரா என்கிற மகளும் உள்ளனர்.

ஜி.என். சாய்பாபா தனது குழந்தைப் பருவத்தில் இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டவர். அவரது இடுப்புக்குக் கீழே உள்ள உறுப்புகள் அனைத்தும் செயலிழந்துவிட்டன. சக்கர நாற்காலியின் மூலம்தான் அவரால் நகர முடியும். அவரது மாற்றுத்திறனின் அளவு என்பது 90 விழுக்காடாகும். டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றிவந்தார். கல்வியாளர், கவிஞர், ஆய்வாளர், மனித உரிமைப் போராளி, சமூகச் செயற்பாட்டாளர். கடந்த முப்பது ஆண்டுகளாகப் பழங்குடிகள், தலித்துகள், பெண்கள், விளிம்புநிலை மக்களுக்காகப் போராடியவர்.

சாய்பாபாவின் தாய் சூர்யவதி, ஆந்திரபிரதேச மாநிலத்தின் அமலாபுரம் அருகே உள்ள ஜானுபல்லே என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு மூன்று குழந்தைகள். மூத்த குழந்தைதான் சாய். அடுத்து கங்கா பவானி, இளையவன் ராம்தேவ். சாய்பாபா மூன்று வயதுவரை எந்தவித குறைபாடுமின்றி இருந்தார். நன்றாக நடக்கக் கூடியவர். தனது நான்காவது வயதில் அவருக்குத் திடீரென நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவர் படிப்பில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். பள்ளியில் அவர் முதல் மாணவன். ஆறு வயதில் ராம்தேவ் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட பிறகு அவன்தான் சாய்யைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வான். சாய்பாபா பத்தாம் வகுப்பில் மாவட்டத்தில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். பிற மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் எடுத்துவந்தார்.

பிறகு, தொழிற்நுட்ப படிப்பை (பாலிடெக்டினிக்) படிப்பதற்காக முயற்சி செய்தார். ஆனால், அங்கிருந்த ஆசிரியர்கள் மாற்றுத்திறனாளிக்குத் தொழிற்படிப்புகள் சரியாக இருக்காது என்று கூறி அனுப்பிவிட்டனர். அறிவியல் படிப்பதற்கு ஆர்வமாக இருந்த சாய், கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ள பிரிவைத் தேர்வு செய்து இண்டிர்மீடியேட் படிப்பை அமலாபுரத்தில் உள்ள எஸ்.கே.பி.ஆர் கல்லூரில் படித்தார். ஆனால், ஆய்வகங்கள் அனைத்தும்  இரண்டாவது மாடியில் இருந்தன. மிகவும் பாதிப்புக்குள்ளான சாய் தனது அறிவியல் கனவிற்கு விடைகொடுத்தார். பிறகு ஆங்கிலப் பட்டப்படிப்பை அதே கல்லூரியில் படித்தார்.

முதுநிலை பட்டப்படிப்பை ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் படித்தார். அப்போதுதான் அவரது வாழ்வில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்தன. மண்டல் கமிஷன் போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்றது. அதன் மூலம் சாதி வர்க்கம், பாலினம், இனம் தொடர்பான பல்வேறு சமூகம் சார்ந்த விஷயங்கள் குறித்து ஆழமான புரிதல்கள் அவருக்கு ஏற்பட்டன. பிறகு ஹைதராபாத்தில் உள்ள மொழிகள் தொடர்பான பல்கலைக்கழகத்தில் (EFLU) எம்.ஃபில் பட்டம் பெற்றார். இந்தச் சூழலில் அவருக்கு வசந்தாவுடன் திருமணம் நடைபெற்றது. பிறகு ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்தனர்.

சாயின் தங்கை பவானி படிப்பை ஏழாம் வகுப்போடு நிறுத்திக்கொண்டு  குடும்பத்தைக் கவனிக்கத் தொடங்கிவிட்டார். சாய்பாபாவிடம் ஊக்கம் பெற்றுப் பெண்கள் அமைப்பு ஒன்றை உருவாக்கிப் போராடிவந்தாள். இறுதியில் பவானி 2000ஆம் ஆண்டு தெலங்கானாவில் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொள்ளப்பட்டார்.

பிறகு, சாய்பாபா தனது ஆய்வுப் படிப்பைத் தொடர டெல்லி சென்றார். டெல்லி  பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி படித்து முடித்தார். அவருக்கு டெல்லி பல்கலைக்கழத்தில் உள்ள ராம் லால் ஆனந்த் கல்லூரியில் பேராசிரியர் பணி கிடைத்தது. ஆங்கிலப் பேராசரியராக 2003 முதல் பணியாற்றிவந்தார்.

கடந்த செப்டம்பர் 7, 2013 அன்று சாய்பாபாவின் வீடு முழுவதும் சோதனையிடப்பட்டு அவரது மின்ணணு ஆவணங்கள் அனைத்தும் எடுத்துச் செல்லப்பட்டது. பிறகு  2014, மே மாதம் 9ஆம் தேதி அன்று ‘மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு’ இருப்பதாகக் கூறி அவரைச் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் ( UAPA Act, 1962) கீழ் (இந்திய தண்டனைச் சட்டம் உள்பட்ட) பல பிரிவுகளில் மஹாராஷ்டிரா காவல்துறை கைது செய்தது . அவருடன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ஹெம் கேசவ்தத் மிஸ்ரா, முன்னாள் பத்திரிகையாளர் பிரசாந்த் ரஹி, மகேஷ் திர்கே, பந்த் போரா நரோத்தே, விஜய் நன் திர்கே ஆகியோரும் மேற்கண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

மேற்கண்ட ஆறு  பேரில் ஐந்து பேருக்கு மராட்டிய மாநிலத்தில் உள்ள காச்சரெல்லி மாவட்ட அமர்வு நீதிமன்றம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 13,18, 20, 38, 39 மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு – 120B ஆகியவற்றின் கீழ் மார்ச் 2017 அன்று “இந்தியாவிற்கு எதிராகப் போர்” செய்ததாக அறிவித்து ஆயுள் தண்டனையும், விஜய் திர்கேவிற்கு மட்டும் பத்தாண்டுகள் சிறை தண்டனையும் வழங்கியது. பந்து நரோத்தே சிறையிலே அதீத காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு 2022ஆம் ஆண்டு இறந்து போனார். அவருக்கு அப்போது வயது 33. உரிய நேரத்தில் மருத்துவச் சிகிச்சை அளித்திருந்தால் நரோத்தே உயிர் பிழைத்திருப்பார்.

மாவட்ட அமர்வு நீதிமன்றம் சாய்பாபாவிற்கு எதிராக மிகச் சிறியளவு சான்றாதாரங்களை நிரூபிக்கவோ அல்லது உச்ச நீதிமன்ற வழக்குகளின் அடிப்படைகளையோ கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. இது முழுக்கப் பொய் வழக்கு என்றும் புனையப்பட்ட குற்றச்சாட்டுகள் என்றும் ஜி.என்.சாய்பாபா முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேயு கட்ஜூவிற்கு 19.8.2018 அன்று நாக்பூர் சிறையிலிருந்து ஒரு கடிதம் எழுதினார். இந்த விசாரணை நேர்மையாக நடைபெறவில்லை என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டார். விசாரணை நீதிமன்றம் சாட்சியங்களை நிரூபிக்கவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைக் கவனத்தில் கொள்ளவும் இல்லை என்று மிக நுட்பமாகவும் விரிவாகவும் உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு முக்கிய வழக்குகளை மேற்கோள் காட்டி அக்கடிதத்தில் அவர் எழுதியிருந்தார். மொத்தம் 23 சாட்சிகள். அதில் 22 பேர் காவலர்கள். ஒருவர் மட்டுமே டெல்லி பகுதியைச் சேர்ந்த குடிமகன். அவருக்கு இந்த வழக்கு குறித்து எதுவும் தெரியாது.

விசாரணை நீதிமன்றத்தில் சாய்பாபாவிற்காக வாதாடினார் என்கிற காரணத்திற்காகவே சுரேந்தர் காட்லிங் என்ற வழக்கறிஞர் பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் நீதிக்காகப் போராடியவர். அவருடன் ஐந்துபேர் கைது செய்யப்பட்டனர். சுரேந்தரின்  மின்னணு சாதனங்களில் சட்டத்திற்குப் புறம்பான சில சொற்கள் செயற்கையான முறையில் திட்டமிட்டு உட்செலுத்தப்பட்டன என்பது தனிக்கதை.

சாய்பாபாவின் முதல் மேல் முறையீட்டு வழக்கு மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் நடைபெற்றது. அதனை ரோகித் தியோ, அனில் பன்சாரே ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அதில் அரசு தரப்பு போதிய பொருண்மையான ஆதாரங்களை நிரூபிக்கத் தவறியதால் பேராசிரியர் சாய்பாபா உட்பட அனைவரும் மேற்கண்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்தத் தீர்ப்பு அக்டோபர் 14, 2022 வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பபட்டது. உடனே மகாராஷ்டிரா அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அப்போது தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித் இரு நீதிபதிகள் கொண்ட ஆயத்தை அமைத்தார். அந்த அமர்வில் எம்.ஆர்.ஷா, பெலா எம்.திரிவேதி ஆகியோர் இடம்பெற்றனர். இந்த ஆயம் சிறப்பு அமர்வாக மறுநாள் சனிக்கிழமை கூடியது. இதுபோன்ற சிறப்பு அமர்வுகள் மிகவும் அரிதாகவே அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணையின் முடிவில் “அந்த மனிதரின் மூளை பயங்கரவாதம் தொடர்புடைய குற்றங்கள் புரிவதில் ஒருங்கிணைந்த பகுதியாகச் செயல்பட்டுள்ளது” என்று கூறி மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையின் உத்தரவை நிறுத்தி வைத்தோடு, இந்த மேல்முறையீட்டு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் கூறியது. பின்னர் புதிய இரண்டு நீதிபதிகள் கொண்ட ஆயம் அமைக்கப்பட்டது.

அப்போது பேராசிரியர் சாய்பாபாவின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவரை வீட்டுச் சிறையில் வைக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். ஆனால், சொலிசிஸ்டர் ஜென்ரல் துஷார் மேத்தா “வீட்டிலிருந்தே அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்” என்று மறுத்துவிட்டார். சாய்பாபாவின் வழக்கறிஞர் “தொலைபேசியின் இணைப்புகளை வேண்டுமானால் துண்டித்துவிடுங்கள்” என்று தனது வாதத்தை  முன்வைத்தார். உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு அதனை ஏற்கவில்லை. அவர் மீண்டும் மனிதத் தன்மைற்ற நாக்பூர் அண்டா சிறையிலயே அடைக்கப்பட்டார்.

அண்டா சிறை (முட்டை வடிவிலான சிறை) என்பது மிகக் கொடூர குற்றங்கள் செய்யும் குற்றவாளிகளை அடைக்க உருவாக்கப்பட்ட சிறப்பு சிறைச்சாலை. இதன் வடிவமைப்பு பெனாப்டிகான் முறையிலானது. அதாவது, ஒரு கிரிக்கெட் ஸ்டேடியம் போன்ற வடிவம் கொண்டது. கண்காணிப்புக் கோபுரம் மையத்திலும் அதனைச் சுற்றி அறைகள் வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. மிகக் குறைவான சிறை அதிகாரிகள் மூலம் அனைத்துக் கைதிகளையும் கண்காணிக்க முடியும். ஒவ்வோர் அறையும் மிகக் குறுகலானது. உயரம் மட்டும் முப்பது அடி கொண்டது.  ஓர் அறையிலிருந்து மற்ற அறைகளைப் பாரத்துக்கொள்ள முடியும். ஆனால், யாரிடமும் பேசக் கூடாது, முடியாது. தனி உரிமை (Right to Privacy) என்பது சிறைவாசிகளுக்குக் கிடையாது. அந்த அறைகளில் ஜன்னல் கிடையாது. ஒளி உமிழும் வானத்தையும் வெளியையும் மட்டுமல்ல எந்தவிதமான பசுமையான மரம் செடிகளைக் கூட பார்க்க முடியாது. வெப்பத்தையும் குளிரையும் வெகுவிரைவாக அனுமதிக்கக் கூடியவை. அந்த அளவிற்கு மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ் காஃப்காவின் ‘தண்டனைக் குடியிருப்பில்’ கதையில் வரும் அலுவலர், புதிய வடிவவிலான ஓர் இயந்திரத்தை வடிவமைத்திருப்பார். அதன் மூலம் புதிய முறையில் எப்படிக் குற்றவாளியைக் கொலை செய்வது, அதாவது மரண தண்டனை அளிப்பது என்பது குறித்து அங்கு வந்திருக்கும் ஆய்வாளரிடம் விளக்கமளிப்பார். ஏறக்குறைய அண்டா சிறையும் அத்தகையதே முதன்முதலில் பிணையில் வெளிந்த சாய்பாபா “14 மாதங்கள் பதினான்கு வருடங்கள் போன்று இருந்தன” என்று குறிப்பிட்டிருந்தார். அண்டா சிறை அவரது மனநிலையை மட்டுமல்ல, அவரது உடலையும் ஏறக்குறைய சிதைத்துவிட்டது.

பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவின் அறையில் கண்காணிப்புக் கேமரா பொறுத்தப்பட்டது. அவரது அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டன. தனிமனித சுதந்திரம், கண்ணியம் ஆகியவை குறித்து எந்தவித அக்கறையும் சிறை நிர்வாகத்திற்கு இல்லை. இந்த நடவடிக்கை இந்திய அரசமைப்புச் சட்டவிதி 21ஐ மீறிய செயலாகும். கண்காணிப்புக் கேமராவை நீக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து சாய்பாபா நான்கு நாள் பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டார். விளைவாக, சிறை நிர்வாகம் கண்காப்புக் கேமராவை அவரது சிறையிலிருந்து நீக்கியது.

தனது தாய்மொழியான தெலுங்கில் பேச முடியாது. சிறை அதிகாரிகள் இந்தி, ஆங்கிலம் தவிர பிற மொழிகள் பேச அனுமதிப்பதில்லை. தனது அன்பான மனைவி வசந்தாவிடம் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும். படிப்பதற்குப் புத்தகம், பார்வையாளர் நேரத்தை நீட்டித்தல், சிறைவாசிகளுக்கு வரும் கடிதங்களை 24 மணி நேரத்திற்குள் வழங்க வேண்டும். அதேபோல சிறையிலிருந்து செல்லும் கடிதங்களும் 24 மணி நேரங்களுக்குள் சென்று சேர வேண்டும், கழிவறை, பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் என எந்த வசதியும் மறுக்கப்பட்டது. இதுபோன்ற பல உரிமைகளுக்காகச் சிறையில் சாய்பாபா போராடினார். ஆனால், சாய்பாபா செய்த குற்றம் என்ன என்பது குறித்து இந்திய குற்றவியல் நீதிமுறை அமைப்புகள் நிரூபிக்கத் தவறிவிட்டன.

ஏறக்குறைய பத்தாண்டுகள் கொடிய சிறையில் அடைத்து வைக்கப்பட்டதன் விளைவாக அவருக்கு  20 வகையான நோய்கள்,  உடல்நலிவு குறைவுகள் ஏற்பட்டன. அவரது இதயம் உள்ளிட்ட முக்கிய உள்ளுறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

ஒருபுறம் கோவிட் தொற்றில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சாய்பாபா, மறுபுறம் அவரது தாய் சூர்யவதி புற்றுநேயால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 1, 2020 அன்று இறந்துபோனார். தாயின் இறுதி நிகழ்விற்குக் செல்லக் கூட அவர் அனுமதிக்கபடவில்லை. அந்தத் துயரம் அவரைவிட்டு இறுதிவரை அகலவில்லை.

தினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்ஸ் தேசத்தில் ராபர்ட் – பிரான்கோ தாமியேன்ஸ் (Robert-François Damiens) என்கிற வீட்டுவேலை செய்யும் தொழிலாளி, பதினைந்தாம் லூயி மன்னனைக் கொலை செய்ய முயற்சித்தான் என்பதற்காகப் பொதுமக்கள் முன்னிலையில் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தண்டனையின் கொடூரம் விவரிக்க முடியாதவை. தாமியேனின் கால்களும் கைகளும் கட்டப்பட்டு அவற்றில் நான்கு குதிரைகள் பூட்டப்பட்டன. இடுக்கியைக் கொண்டு திட்டுத் திட்டாக அவனது உடலில் உள்ள சதையைப் பிய்த்தெடுத்தனர். இரத்தம் வடியும் காயங்களில் காய்ச்சிய ஈயத்தையும், கொதிக்கும் எண்ணெய்யையும் சல்ஃபரையும் ஊற்றினார்கள். பிறகு, பூட்டப்பட்ட குதிரைகளை ஓடச் செய்தனர். தாங்க முடியாத வலியில் துடித்தான் தாமியேன்.

அவனது உடலைத் தனியாகப் பிரிக்க முடியவில்லை என்பதை அறிந்த தண்டனை அதிகாரிகள், இடுக்கிக் கொண்டு மூட்டுகளுக்கு இடையே உள்ள தசைநார்களை நறுக்கி, மேலும் இரண்டு குதிரைகளை இணைத்து, மீண்டும் பல்வேறு திசைகள் நோக்கி ஓடச் செய்தனர். இறுதியில் அவர்கள் நினைத்ததுபோலவே தாமியேனின் கைகளும் கால்களும் தனித்தனியாகப் பிய்த்து எரியப்பட்டு, உடல் சாம்பலாக்கப்பட்டது. இந்தத் தண்டனை நான்கு மணிநேரத்திற்குள் முடிந்துவிட்டது. ஆனால், தாமியேனின் அலறல் சத்தம் இன்றுவரை பிரான்ஸ் முழுவதும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இங்கு பேராசிரியர் சாய்பாபா செய்யாத குற்றத்திற்கு ஏறக்குறைய பத்தாண்டுகள் நாக்பூரில் உள்ள கொடிய ‘அண்டா’ சிறையில் சித்திரவதை செய்யப்பட்டார். தாமியேனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை உடல் மீதானது. ஆனால், சாய்பாபாவிற்கு விதிக்கப்பட்டது உடல் – மன ரீதியானது. தாமியேனுக்கு நிகழ்ந்தது மன்னர் ஆட்சியில், பின்னது நவீன ஜனநாயக – குடியரசு ஆட்சியில்.

கல்லூரிப் படிக்கும் காலத்தில் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாகப் பல்வேறு போராட்டங்களை சாய்பாபா செய்துள்ளார். டெல்லியில் ராம்லால் ஆனந்த் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும்போது இடஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குகளை அரசு மேற்கொள்வதற்காகவும் போராட்டங்கள் நடத்தியுள்ளார். ஆந்திராவிலும் பீகாரிலும் அன்றைக்கு இருந்த அரசு அடக்குமுறைக்கு எதிராக ‘அகில இந்திய மக்கள் எதிர்ப்பு கூட்டமைப்பு’ ஒன்றை ஏற்படுத்தி தலைமை தாங்கினார். 2009ஆம் ஆண்டு ‘ஆப்ரேசேன் க்ரீன் ஹண்ட்’ என்று துணை இராணுவ அமைப்பினரைக் கொண்டு பழங்குடிகள் மீது அரசாங்கம் நிகழ்த்திய வன்முறை செயல்களைக் கண்டித்ததோடு, பழங்குடிகளுக்கு எதிரான வன்முறை குற்றங்களைச் சர்வதேச அளவில் எடுத்துச் சென்றார். இப்படித் தன் வாழ்வை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அர்ப்பணித்த அவரை, மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருப்பதாகப் பொய்க் குற்றம்சாட்டி 2014ஆம் ஆண்டு சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (UPAP) அரசு கைது செய்தது. இந்தியக் குற்றவியல் நீதி அமைப்புகள் முழுவதும் அவரைக் கைவிட்டுவிட்டன. அவருக்காக வாதாடிய வழக்கறிஞர்களும் சிறைபடுத்தப்பட்டனர். அவரது மனைவி வசந்தா அவரை மீட்டெடுக்கும் நீண்ட நெடிய போராட்டத்தில் ஈடுபட்டு அதில் வெற்றிபெற்றார். அவரது போராட்டம் அளவிட முடியாதது.

சிறையில் பழங்குடி சிறைவாசிகள் சாய்பாபாவைக் கவனித்துக்கொண்டார்கள். அதேபோல சாய்பாபாவும் எழுத்தறிவற்ற பழங்குடி சிறைவாசிகளுக்குக் கல்வி கற்றுக்கொடுத்தார். இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அவர்களைப் பட்டங்கள் பெறச் செய்தார்.

தாமியேனின் இறப்புக்குப் பிறகு பொதுமக்கள் மத்தியில் கை கால்கள் துண்டிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் மரண தண்டனை எப்படி பிரான்ஸில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதோ அதேபோல சாய்பாபாவின் மரணத்திற்குப் பிறகு இக் கொடிய பயங்கரவாத நடவடிக்கைகளும் மனிதத் தன்மையற்ற ‘அண்டா’ சிறையும் ஒழிக்கப்பட வேண்டும்.

பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா தனது மனைவி வசந்தாவிற்கு எழுதிய (1 ஜனவரி, 2018) கவிதையோடு இந்த அஞ்சலிக் குறிப்பை நிறைவு செய்யலாம்.

எனக்கு மேலே எந்த வானமும் இல்லை
என் கால்களுக்குக் கீழே பூமியும் இல்லை
எனது கைகளும் கால்களும் கட்டப்பட்டுள்ளன.
விலங்கிடப்படாத எனது இதயம் மட்டும்
ஒரு சிறிய சிந்தனையை முணுமுணுக்க ஏங்குகிறது.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger