அஞ்சலி: வி.டி.ராஜசேகர் (1932 – 2024)
தமிழ் தலித் இலக்கியத்திற்கான முன்னோடி முயற்சிகளென மராத்திக்கு அடுத்து கன்னட தலித் இலக்கியங்களைக் குறிப்பிடுவோம். கர்நாடகாவிலிருந்து தலித் இலக்கியங்கள் மட்டுமல்ல, தலித் அரசியல் தொடர்புகளும் இருந்துவந்தன. அவர்களுள் மூவரைக் குறிப்பிட வேண்டும்: பசவலிங்கப்பா, எம்.சி.ராஜ், வி.டி.ராஜசேகர்.
பசவலிங்கப்பா கர்நாடக அரசியல் தலைவராயிருந்து கன்னட இலக்கியம் மீதான விமர்சனத்தையொட்டி எதிர்ப்பைச் சம்பாதித்தார். அதுவே கன்னட தலித் இலக்கியத்திற்கான தோற்றமாக அமைந்தது. அவர் கர்நாடகத் தமிழ் தலித்துகளோடு மட்டுமல்லாது, தமிழ்நாடு வரையிலும் தொடர்பு கொண்டிருந்தார். தமிழ்நாட்டில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாக்கள், நூல் வெளியீட்டு விழாக்கள், மாநாடுகள் ஆகியவற்றில் பரவலாகக் கலந்துகொண்டார். எம்.சி.ராஜ், கர்நாடகா மாநிலம் தும்கூரில் மாற்று ஆன்மீக இயக்கத்தை ஏற்படுத்திச் செயற்பட்டார். Dalitology என்கிற நூலினைத் தொகுத்தார். தமிழ்நாட்டோடு தொடர்பு கொண்டிருந்தார். மேற்சொன்ன இருவரும் முன்பே காலமாகிவிட்ட நிலையில், வி.டி. ராஜசேகர் தன்னுடைய 93ஆவது வயதில் கடந்த நவம்பர் 21 அன்று மங்களூரில் காலமானார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் பல ஆண்டுகள் பணியாற்றிய வி.டி.ராஜசேகர், 1981ஆம் ஆண்டு தலித் வாய்ஸ் என்ற ஆங்கில மாதமிருமுறை இதழை ஆரம்பித்தார். அதற்குப் பிறகு அவ்விதழே அவரின் அடையாளமாக அமைந்தது. ஒருகாலத்தில் தலித்துகளுக்கென இந்திய அளவில் நடத்தப்பட்ட பத்திரிகையாக மட்டுமல்லாமல், நீண்ட காலம் நடத்தப்பட்ட பத்திரிகையாகவும் அது இருந்தது. இந்தியாவில் பலரும் அதன் வாசகர்களாக இருந்தனர். பிரதானமாக வி.டி.ராஜசேகரின் எழுத்துகளைத் தாங்கியதாகவே அவ்விதழ் வெளியானது. பிறப்பால் தலித் அல்லாத சமூகத்தில் பிறந்த ராஜசேகர், தலித் அரசியலை மையப்படுத்தியே இயங்கி இறந்திருக்கிறார். தலித் – பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமையை முன்வைத்து வர்ணாசிரம சக்திகளைக் கடுமையாகச் சாடி எழுதுவார். இந்த வகையில் அவரது தலையங்கங்களுக்காகவே இதழ் வாசிக்கப்பட்டது. பல நேரங்களில் அதிரடியாக எழுதுவார். மேடைப் பேச்சும் அவ்வாறே அமைந்திருக்கும். இந்துத்துவா கொள்கைகளைச் சாடி அவர் எழுதிய தலையங்கத்திற்காக தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மற்றொருமுறை காலிஸ்தானை ஆதரித்து எழுதியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்தார்கள். தன் எழுத்துக்காகக் கடும் தண்டனைகளைப் பெற்ற பத்திரிகையாளராக வி.டி.ராஜசேகரே இருப்பார். அவருடைய கட்டுரைகளும் உரைகளும் ஆங்கிலத்தில் சிறிதும் பெரிதுமான முற்பதுக்கும் மேற்பட்ட நூல்களாக வெளியாயின. அதேவேளையில், அவருடைய வாதங்களும் கருத்துகளும் தொடக்கத்தில் ஈர்ப்பாக இருந்தாலும், அவர் எந்தப் பிரச்சினையையும் இந்த அளவில்தான் பேசுவார் என்பது தொடர்ச்சியான வாசகருக்குத் தெரிந்துவிடுவதால் விரைவிலேயே தன் கவர்ச்சியை இழந்துவிடும். தன்னார்வ நிறுவனத் தொடர்புகளைத் தாண்டி யோசிக்காமல் போய்விட்டவர்களில் இவரும் ஒருவர். இதழும் 2011ஆம் ஆண்டோடு நின்றுபோனது.
வி.டி.ராஜசேகர் எழுதிய, பேசிய கருத்துகள் தமிழகத்திற்குப் புதிதில்ல. திராவிடர் கழக மேடைகளில் தொடர்ந்து பேசப்பட்டவைதாம். ஆனால், அக்கருத்துகளைத் தலித் அரசியலுக்காகப் பேசினார் வி.டி.ராஜசேகர். பெங்களூர், கோலார் தங்கவயல் தமிழர்களோடு ஏற்கெனவே தொடர்பு கொண்டிருந்த அவருக்கு, தமிழகத்திலும் தொடர்புகள் அமைந்தன. அவரது இதழுக்கும் வெளியீடுகளுக்கும் தமிழகத்தில் வாசகர்கள் உருவாயினர். எழில்மலை, இவருடைய இதழ்களையும் வெளியீடுகளையும் தமிழகத்தில் விற்பனை செய்தார். காந்தி பற்றிய தீவிர விமர்சனத்தால் உந்தப்பட்டு தலித் சாகித்ய அகாடமியைத் தொடங்கி அம்பேத்கர் எழுதிய ‘காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்ததென்ன?’ நூலைத் தமிழில் வெளியிட்டார் எழில்மலை. இதற்குக் கருத்துரீதியான உந்துதலாக ராஜசேகர் இருந்தார். தலித் வாய்ஸ் பத்திரிகையின் தமிழ் வடிவமாக தலித் குரல் என்ற இதழைக் கொணர முயன்றார் எழில்மலை. அதன் காரணமாக தலித் குரல் எழில்மலை என்றானவர், பின்னர் தலித் எழில்மலையாக நிலைத்தார்.
தலித் வாய்ஸ் இதழின் வடிவமைப்பையும் கருத்துகளையும் அப்படியே உள்வாங்கி உருவானது தலித் முரசு. அது வாய்ஸ், இதுவும் வாய்ஸ்தான். அதாவது வாய்ஸை எழுப்பும் முரசு. பின்னர் எழில்மலை தொடர்பு தமிழகத்திற்கும் ராஜசேகரை வரவழைத்தது. 1990களில் நெய்வேலியில் நடந்த இரட்டை வாக்குரிமை மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.
தலித் வரலாறு தொடர்பான விவாதமொன்றின் தொடக்க, மறைமுகக் காரணியாக வி.டி.ராஜசேகர் இருந்தார் என்பது பலரும் அறியாத செய்தியாகும். தலித் வரலாற்றாசிரியர் தி.பெ.கமலநாதன், திராவிடர் கழக வீரமணியின் தலித்துகள் பற்றிய உரிமைக் கோரலை மறுக்கும் முகமாக முக்கியமான நூலொன்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். Mr.K.Veeramani M.A, B.L, is Refuted And Historical Facts About The Scheduled Caste’s struggle for Emancipation in South India என்ற அந்நூல், ஒரு விவாதத்திற்குப் பதிலளிக்கும் கட்டுரையாக எழுதப்பட்டுப் பின்னர் நூலாக விரிக்கப்பட்டது. இந்த விவாதத்தின் தொடக்கம் வி.டி.ராஜசேகர்.
அதாவது, 01.05.1983 நாளிட்ட தலித் வாய்ஸ் இதழில் ‘Why O.B.C. movement is failing’ என்ற தலைப்பில் (ஏனைய பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் இயக்கம் ஏன் தோல்வியுறுகிறது?) தலையங்கத்தை எழுதியிருந்தார் வி.டி.ராஜசேகர். ஓபிசி பிரிவினருக்கான மண்டல் கமிஷன் அறிக்கை தள்ளிப் போடப்படுவதை விமர்சிக்கும் அத்தலையங்கத்தில், ஏனைய பிற்படுத்தப்பட்டோர் மீது கடும் விமர்சனத்தையும் முன்வைத்திருந்தார். ‘பிராமணர்கள் மீது அவ்வப்போது கோபமாக இருக்கும் அவர்கள், பிராமணியத்தையே அதிகமாக நேசிக்கிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், அவர்களே பிராமணியத்தின் காவலர்களாக இருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டிருந்த ராஜசேகர், அவர்கள் தங்களின் எதிரிகளை அடையாளம் கண்டுகொள்ளாமல் தலித்துகளும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும்தாம் எதிரிகள் என்று எண்ணுகிறார்கள் எனச் சாடியிருந்தார். அதில், திராவிடர் கழகம் தமிழக ஓபிசிகளின் நலனை மட்டுமே பிரதிபலிக்கிறது என்ற தலித்துகளின் விமர்சனத்தையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார். இந்தத் தலையங்கத்திற்குப் பதிலளித்து கி.வீரமணி எழுதிய Beware of Brahmin Bid to Divide Dalits & OBC’S (தலித்துகளையும் ஏனைய பிற்படுத்தப்பட்ட சாதியினரையும் பிரித்திட முயலும் பிராமண சதி பற்றி உஷார்!) என்ற பதில் கட்டுரை 1984, சனவரி 1 – 15 தேதியிட்ட தலித் வாய்ஸ் இதழில் வெளியாகியிருந்தது. அவர் என்ன எழுதியிருப்பார் என்பதைத் தலைப்பை வைத்தே தெரிந்துகொள்ளலாம். முரண்பாடுகளைப் பின்தள்ளிவிட்டு பார்ப்பனிய எதிர்ப்பே முக்கியம் என்று வாதிட்டிருந்த கி.வீரமணி, அதோடு நிற்காமல் தலித்துகள் தொடர்பான முக்கியமான உரிமைகோரல் ஒன்றையும் அதில் எழுதியிருந்தார்.
தலித்துகள் இன்று பெற்றுள்ள முன்னேற்றத்திற்கான அடிப்படையை அமைத்ததே திராவிடர் கழகம்தான் என்று அவர் உரிமை கோரியிருந்தார். கி.வீரமணியின் இக்கூற்றை மறுத்து தி.பெ.கமலநாதன் 29 பக்கங்கள் கொண்ட பதிலொன்றை 14.04.1984 அன்று தலித் வாய்ஸ் இதழுக்கு அனுப்பியிருந்தார். அதில் 19ஆம் நூற்றாண்டிலிருந்து ஒடுக்கப்பட்ட முன்னோடிகள் ஆற்றிவந்த மேம்பாட்டுப் பணிகளைச் சுட்டிக்காட்டியதோடு, கி.வீரமணி போன்றோரின் இத்தகைய உரிமை கோரல்கள் அவற்றை இருட்டடிப்புச் செய்கின்றன என்றும் வாதிட்டிருந்தார். ஆனால், இக்கட்டுரையை நீளம் கருதி வெளியிட முடியவில்லை என்று வி.டி.ராஜசேகர் கடிதம் எழுதியிருந்தார். பிறகு, அக்கட்டுரையை விரிவுபடுத்தி நூலாக எழுதினார் கமலநாதன். அது இன்றைக்கும் தமிழ்நாட்டுத் தலித் வரலாற்றில் மைல் கல்லாகத் திகழ்கிறது. அந்நூலின் பின்னிணைப்புகளில் வி.டி.ராஜசேகர் எழுதிய தலையங்கமும், கி.வீரமணி எழுதிய பதிலும் தரப்பட்டிருப்பதை இப்போதும் பார்க்கலாம். ‘தலித் விடுதலையும் திராவிடர் இயக்கமும்’ என்ற தலைப்பில் மதுரை எழுத்துப் பதிப்பகம் வெளியிட்ட அந்நூல், தற்போது நீலம் பதிப்பகத்தின் மறுபதிப்பாகக் கிடைக்கிறது.
வி.டி.ராஜசேகர் மறைவுக்காக கி.வீரமணி வெளியிட்டிருக்கும் இரங்கல் அறிக்கையில் அச்சம்பவம் நினைவுகூரப்பட்டிருக்கவில்லை. கமலநாதனின் நூலை அவர்கள் மறக்க விரும்புவதே அதற்குக் காரணம். ஒருவேளை திராவிடர் கழகத்தின் சாதனை வரலாற்றோடு வி.டி.ராஜசேகரைத் தொடர்புப்படுத்த முடியுமானால் குறிப்பிட்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது. இந்த அளவில் வி.டி.ராஜசேகர் தமிழ்நாட்டுத் தலித் வரலாற்றியல் பணி ஒன்றில் மறைமுகக் காரணமாக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழகத்தோடு எந்த அளவுக்கு அவர் தொடர்பு கொண்டிருந்தார் என்பதையும் இவற்றின் மூலம் அறிகிறோம்.
இந்தியச் சமூகம் குறித்த வி.டி.ராஜசேகரின் புரிதல் கிட்டத்தட்ட திராவிடர் கழகப் புரிதலுக்கு நெருக்கமானதாகும். ஆனால், எஸ்சி & பிசி ஒற்றுமை பேசுகிற தமிழ்நாட்டுத் தலைவர்கள் எவரிடமும் இல்லாத துணிச்சல் வி.டி.ராஜசேகரிடம் இருந்தது. பிற்படுத்தப்பட்டவர்களின் பிழைகளை விமர்சிக்காமல், பார்ப்பனியத்தைக் காட்டி மட்டுமே அவர்களை மீட்டெடுக்க நினைக்கிற ‘சாதி ஒழிப்புப் போராளிகளே’ இங்கு அதிகம். Brahmanism: why Godse killed Gandhi?, Know the Hindu mind ஆகிய நூல்களை இவ்வகையில் எழுதினார்.
தலித் வாய்ஸ் இதழில் வெளியான வி.டி.ராஜசேகரின் தலையங்கங்களும் கட்டுரைகளும் சிறு வெளியீடுகளாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அவை தற்போது கிடைப்பதில்லை. 2003ஆம் ஆண்டு அரச.முருகபாண்டியன் மொழிபெயர்ப்பில் ‘கிறித்தவமும் தலித் விடுதலையும்’ நூல் வெளியானது. அண்மையில் கூட வேர்கள் பதிப்பகம் சார்பாக ‘இந்திய முஸ்லீம்களை வகுப்புவாதத்தின் பக்கம் இழுத்துக்கொண்டிருப்பது யார்?’ என்ற நூல் வெளியானது. இந்திய தலித்துகள், கறுப்பினத்தவர்கள் ஆகியோர் மீதான ஒடுக்குமுறையின் ஒற்றுமை குறித்த அவரின் The Black Untouchables of India என்ற ஆங்கில நூல் குறிப்பிடத்தக்கதாகும். அவை தமிழுக்குக் கொணரப்படவில்லை. 1987ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் தேசிய அளவில் தலித் இலக்கிய மாநாடொன்றை நடத்தினர்.