அஞ்சலிக் குறிப்பு: அதிவீர பாண்டியன் (1966 – 2025)
மெட்ராஸ் ஓவியக் கலை இயக்கம் கோடுகளை முதன்மைப் பொருளாகக் கையாளும் மரபைக் கொண்டது. இதன் தொடர் இயக்கத்தில் பல ஆளுமைகள் உருவாகினர். ஆனால், அடுத்த தலைமுறை ஓவியர்களின் செயல்பாடுகளிலும் அணுகுமுறைகளிலும் ஒரு தோய்ந்த அல்லது சலிப்பூட்டும் தன்மை தொண்ணூறுகளில் படித்த எங்களுக்குக் கிடைத்தது எனலாம். கலை ஆளுமைகளின் படைப்புகள் குறித்த விவாதங்கள், புதிய கலை வடிவ முயற்சிகள், கலை கலைக்காக – கலை மக்களுக்காக எனக் கலை இலக்கிய அரசியல் சார்ந்த நிலைப்பாடுகளின் தெளிவற்ற மனநிலையில் இருந்த நான், கல்லூரி இறுதியாண்டில்தான் ஓவியர் அதிவீர பாண்டியன் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது.
சென்னை திருவொற்றியூரில் எஸ்.தங்கசாமி – ருக்குமணி அம்மாள் அவர்களின் இளைய மகனாகப் பிறந்த அதிவீர பாண்டியன், பள்ளி நாட்களிலிருந்து படம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். ஓவியக் கல்லூரியில் பயின்ற நாட்களுக்குப் பிறகும் அவர் எப்போதும் நினைவுப்படுத்த விரும்பிய உறவுகள் – சென்னை துறைமுகத் தொழிற்சங்கத்தில் பணிபுரிந்த தந்தை எஸ்.தங்கசாமி, ஓவிய ஆசிரியர் டி.பிரான்சிஸ், மூத்த மாணவர் ஜோதி, சகோதரர்கள் ராஜா, மணவாளன் ஆகியோர். லலித் கலா அகாடமியில் ஆய்வு மாணவராக இருந்து, பிறகு சோழ மண்டல் கலை கிராமத்தில் சக ஓவியர்கள் மரியா அந்தோணிராஜ், போஸ் மருதநாயகம், மைக்கல் இருதயராஜ் ஆகியோருடன் இணைந்து தனது கலைத் தேடலைத் தொடர்ந்து – தன்னை முற்றிலும் ஒரு புதிய கலை வடிவத்திற்கான பிரதிநிதியாக வெளிப்படுத்திக்கொண்டார்.
கலைப் பயிற்சி நாட்களில் சந்தான ராஜ், முனுசாமி, அந்தோணி தாஸ், அல்போன்சோ, ஆதிமூலம், சந்ரு ஆகியோரின் ஆளுமைகளை இணக்கமாக உணர்ந்துள்ளார். மைக்கலாஞ்சலோ, ரெம்ரன், காரவாஜியோ, காகைன், வான்கா, ஜாக்சன் பொலாக் ஆகியோரின் ஓவியங்களை அதிகம் விவாதிப்பார்.
ரியலிஸ்டிக் பாணி ஓவியங்களை மிகத் துல்லியமாக, நேர்த்தியான வண்ணங்களுடன் படைக்கும் ஆற்றல் கொண்டவர். அதிவீர பாண்டியனுக்குப் பின் அத்தகைய ஓவியர் எவரையும் நான் கண்டதில்லை. எனினும், அதிவீர பாண்டியன் அரூப ஓவியராகவே (Abstract) தன்னை முன்னிறுத்திக் கொண்டார். அவர் தன்னிறைவான ஓவியர். அவரைச் சுற்றி இரவு பகலாக எப்போதும் வண்ணங்களும் கித்தான்களும் விரவிக் கிடக்கும். அவர் விரல் இடுக்குகளில் வண்ணங்கள் எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கும்.
ரூபம் – அரூபம் இடையேயான ஓவிய பாய்ச்சல் நிகழும் வெளி, நிபந்தனையற்ற சுதந்திர மனம், சமரசமற்ற வெளிப்பாட்டுத் தன்மை ஆகியவை மிக முக்கியமானது. இதை எந்தவிதமான நெருக்கடியுமின்றி எதிர்கொண்டவர் அதிவீர பாண்டியன். தன்னை முழுமையான சுதந்திரத்திற்கு ஒப்புக்கொடுத்தவர்.
இந்திய அளவில் மிக முக்கியமான அரூப ஓவியர், தனித்துவமான வண்ணங்களுக்கு உரியவர். கலை கலைக்கானது என்று நம்பிய அதிவீர பாண்டியன், சாதி – மத – இனத்திற்கு எதிரான, சமத்துவமின்மைக்கு எதிரான எல்லாக் கலை முகாம்களிலும் எங்களோடு பயணித்தவர். திருமணத்திற்குப் பிறகு, தன் துணைவியார் சூசன் அதிவீர பாண்டியன் (கலை வரலாற்று ஆசிரியர்) உடன் இணைந்து, பலதரப்பட்ட மாணவர்கள், ஓவிய நண்பர்களுடன் உரையாடல் நிகழ்த்தியவர்.
திரும்பிய பக்கமெல்லாம் அதிவீர பாண்டியன் அவர்களுடைய வண்ணங்கள் மிதக்கும் கேன்வாசாகத் தோன்றிக் கொண்டிருக்கும் மனநிலையில் இருந்து இதை எழுதுகிறேன். சென்று வாருங்கள் அண்ணா. உங்கள் ஓவியம், அதன் தாக்கம், வண்ணங்கள், கலை பற்றிய உரையாடல், உங்கள் அன்பு, உங்கள் இருப்பு எப்போதும் எங்கள் நினைவுகளில்…!