அஞ்சலி: ரமேஷ் பிரேதன் (1964 – 2025)
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் புனைவெழுத்தைப் பின்நவீனத்துவ எழுத்தாக மாற்றி – புனைவெழுத்தின் ஆழ் பரிமாண நுட்பங்களை அநாயாசமாக வெளிக்கொணர்ந்து தமிழ்க் கலக எழுத்தின் அடையாளமான ரமேஷ் – பிரேம் எனும் இரட்டையர்களில் ஒருவராகிய ரமேஷ் பிரேதன், அந்த இரட்டைத் தன்மை எனும் அடையாளத்தில் இருந்து ஒரு விபத்தைப் போல விலக அல்லது விலக்கப்பட நேர்ந்தது.
புதுச்சேரியின் தமிழ்ப் புனைவெழுத்து வரலாறு என்பது தனக்கான தனித்துவமான பிரெஞ்சு அரசியல், பண்பாட்டு வாசனையுடன் தமிழ்த் தன்மையும் முயங்கிய ஒரு புதிய மரபின் அடையாளம் கொண்டது. பாரதியின் புதுச்சேரி வாசம், அவருடைய இந்தியத் தேசியம் என்பவற்றுடன் பாரதிதாசனின் தமிழ்த்தேசியச் சிந்தனை மரபு, திராவிட உணர்வு எனும் முரண் தன்மை கொண்ட கருத்தியல்கள், கவிதையியல் என்னும் புள்ளியில் இணங்கிச் செல்லும் தன்மை கொண்டவையாக இருந்தன. பிரபஞ்சன் எனும் எழுத்தாளுமை தமிழகத்துக்கும் புதுவைக்கும் இடையிலான பொதுவான படைப்பாளராக அறியவருகிறார். கலை இலக்கிய விமர்சனத் துறையில் தனித் தடம் பதித்த இந்திரன், புதுவை மண்ணின் பண்பாட்டு அடையாளங்களைப் புனைவுகளாக்கிய பாவண்ணன், பாரதி வசந்தன் போன்றோரும் இவர்களுடன் இணைகின்றனர். தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களில் இருந்து புதுவை வந்து தங்கிய கி.ராஜநாராயணன், ராஜ் கௌதமன், க.பஞ்சாங்கம், து.ரவிக்குமார், தலித் சுப்பையா எனும் வளமான மாற்றுச் சிந்தனைகளின் களமாக புதுச்சேரி மண் தமிழ்நாட்டின் அறிவுஜீவிகளால் வியப்புடன் பார்க்கப்பட்டது. அவ்வாறு, மாற்றுச் சிந்தனை மரபை உருவாக்குதல், புது எழுத்து முறையைத் தமிழ்ப் புனைவு, திறனாய்வுக் களத்தில் முயன்று பார்த்தல் எனும் புதுச்சேரியின் தொண்ணூறுகளின் காலத்தில் அந்த வியப்பான கவனிப்புக்குக் காரணமாக ரமேஷ் – பிரேம் இரட்டையர்களும் இருந்தார்கள்.
நிறப்பிரிகை இதழில் வெளிவந்த புதிய முயற்சிகளில் து.ரவிக்குமார், அ.மார்க்ஸ், வே.மு.பொதியவெற்பன் ஆகியோருடன் ரமேஷ் – பிரேம் அல்லது பிரேம் – ரமேஷ் இரட்டையர்களின் பங்களிப்பும் இருந்தது. இக்காலகட்டத்திலேயே இவர்களின் புதுமுறைப் புனைவெழுத்துகளும் வெளிவரத் தொடங்குகின்றன. அமீபா என்னும் இதழையும் இவர்கள் தொடங்குகின்றனர்.
புனைவெழுத்து, விமர்சனம், மொழிபெயர்ப்பு என்னும் மூவகை எழுத்துத் துறைகளிலும் இவர்களின் பயணம் தொடர்ந்தது. புனைவெழுத்தில் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் எனவும் விமர்சனத்தில் கட்டுரைத் தொகுப்புகளாகவும் இவர்களுடைய எழுத்துகள் பரவலாக கவனம் பெறுகின்றன.
‘இருபது கவிதைகளும் இரண்டாயிரம் ஆண்டுகளும்’, ‘கருப்பு வெள்ளைக் கவிதை’, ‘சக்கரவாளக் கோட்டம்’, ‘கொலை மற்றும் தற்கொலை பற்றி’, ‘அதீதனின் இதிகாசம்’ போன்ற கவிதை நூல்களும் ‘முன்பு ஒரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன’, ‘கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள்’, ‘பரதேசி’, ‘மகாமுனி’ போன்ற சிறுகதைத் தொகுப்புகளும், ‘சொல் என்றொரு சொல்’, ‘புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும்’ போன்ற நாவல்களும் ரமேஷ் – பிரேம் இரட்டையர்களால் எழுதப்பட்டுக் கவனம் பெற்றன.
‘சிதைவுகளின் ஒழுங்கமைவு’, ‘கட்டுரையும் கட்டுக் கதையும்’, ‘பேச்சு மறுபேச்சு’ ஆகிய கட்டுரை நூல்களும் இரட்டையர்களின் குறிக்கத்தக்க நூல்கள் ஆகும். இவர்களின் எழுத்தில் வெளிப்படும் உலகளாவிய தன்மையிலான பாசிசத்துக்கு எதிரான கலகக் குரலானது மிக இயல்பான தன்மையில் பின்நவீனத்துவப் பிரதியாக்கம் பெற்றது. தமிழ் மரபின் செழுமையான ஆக்கக் கூறுகளைத் தொல்குடி மரபிலிருந்து மறு ஆக்கம் செய்யும் பணியில் இந்த எழுத்துகள் உலகளாவிய கலை இலக்கிய அரசியல் சமூக, மானிடவியல் கோட்பாடுகளைப் பின்புலங்களாகக் கொண்டு எழுந்தன. ஒடுக்கப்படும் மக்களின் சார்பு நிலையில் பாசிச எதிர்ப்பைச் சுமந்து நிற்கும் இவர்களின் எழுத்துப் பிரதிகள், தொல்குடிகள், தமிழ்க் குடிகள், தலித்துகள், பெண்கள், குழந்தைகள், மூன்றாம் பாலினர், ஏதிலிகள், மனப் பிறழ்வு கொண்டவர்கள் ஆகியோரை எழுத்தாக்குகின்றன. இந்த எழுத்து முயற்சிகள் இயல்பாக இவர்களை அனர்க்கிசக் கலக எழுத்தாளர்களாக முன்வைக்கின்றன.
இந்தியாவின் தாந்திரீக மரபு, பௌத்தம், சமணம் போலும் மதவாத எதிர்ப்பரசியல் சமயத் தத்துவங்களின் கோட்பாட்டுத் துணைக் கூறுகள் இவர்கள் படைப்புகளில் தூலமாகத் தெரிந்தன.
தமிழ்ப் புனைவெழுத்து, விமர்சனம், சிற்றிதழ் வட்டாரம், கலை அரங்குகள் இவற்றில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய இவர்களின் எழுத்தியக்கம், இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைச் சித்திரங்களின் அடிப்படையிலும் பெருத்த சர்ச்சைகளையும் விவாதங்களையும் வரவேற்பையும் சரிவிகிதமாகப் பெற்றன.
பிரேம் – ரமேஷ் என்னும் இணை உடைந்து ரமேஷ் தனிமைப்பட்டபின் உண்டான உளவியல் நெருக்கடிகள், அவருடைய எழுத்து வாழ்வு தொடர்ந்து பயணமாவதற்குப் பெருத்த தொந்தரவாகவே இருந்தன. பொருளாதார, வசிப்பிடச் சிக்கல்களில் உழன்ற அவர், எழுத்தாள தோழைமைகள், தனிப்பட்ட தோழமைகளின் நட்பில் சிக்கல்களில் இருந்து ஓரளவு மீண்டு வந்தார். உடல்நலம் பாதிப்புற்று சவாலான சூழ்நிலையில் எழுத்துப் பணியைத் தனியே தொடர்ந்தார்.
பிரெஞ்சு, ஆங்கில மொழிகளை நன்கு அறிந்திருந்த அவர், சிறந்த மொழிபெயர்ப்பு அறிஞராகவும் உலகளாவிய அரசியல், கலை இலக்கியக் கோட்பாட்டு அறிஞராகவும் இருந்தார். சவாலான வாழ்விருப்பு எனும் சூழ்நிலையில் தொடர்ந்து எழுதுவதைத் தனது இருப்பின் வலிமையாகவும் நியாயமாகவும் கொண்டார்.
‘ஐந்தவித்தான்’, ‘சாராயக்கடை’, ‘அவன் பெயர் சொல்’, ‘காந்தியைக் கொன்றது தவறுதான்’, ‘நல்ல பாம்பு: நீல அணங்கின் கதை’, ‘அயோனிகன்’, ‘மார்கழி பாவியம்’, ‘ஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து’, ‘அருகன் மேடு’, ‘காமத்துப் பா’, ‘ரமேஷ் பிரேதன் சிறுகதைகள்’, ‘சூன்யதா’, ‘பொந்திஷேரி’ எனக் கவிதைகளும் கதைகளும் நாவல்களுமான புனைவெழுத்துகளை ஒரு பத்து ஆண்டுகளுக்குள் எழுதி முடித்தார்.
அவர் தனித்து எழுதியவற்றில் முன்னர் எழுதிய பின்நவீனத்துவப் பிரதியாக்கக் கூறுகளுடன் புதுச்சேரி மண்ணின் அறியப்படாத விளிம்பு மனிதர்களின் பாடுகளும், புதுச்சேரி எனும் தனித்த நிலத்தின் வரலாறுகளும் புதுமுறை எடுத்துரைப்பில் தனிக் கவனம் பெற்றன. அவருடைய எழுத்துகள் அவர் பாவிக்கும் உடல் அரசியல் என்பதன் பன்மைத்துவத்திலும், அதன் விளிம்பு, பித்தஜால யதார்த்த மீறலிலும், ஒழுங்குக்குள் அடங்கி ஓயாத நூதனமான உடற்காமத் துய்ப்பிலும் இதுவரையில் இல்லாத பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கின்றன.
வரலாற்றை இடைமறிக்கும் இவரின் புனைவுகள் சமகாலத்தினதும் எதிர்காலத்தினதுமான புதுப் பாசிசச் சக்தி உருவாக்கங்கள் குறித்தும் எச்சரிக்கை செய்கின்றன.
“பாராளுமன்றம் மட்டுமா பல்கலைக்கழகங்களும் பன்றித் தொழுவங்கள் தாமோ’’ (ப.19, மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன்)
பாபாசாகேப் அம்பேத்கரின் நீலவியத்தை இங்கு தனக்குள் காண்கிறான் கவிஞன், பிரபாகரனை மகாத்மா என அறிவிக்கிறது இவருடைய கவித்துவம். ஈழம் குறித்த வலி நிறைந்த கொடும் நினைவுகள் இவர் புனைவுகளில் பரவலாகச் சிதறிக் கிடக்கின்றன.
தினம் ஒரு திருக்குறளைப் படித்தால் போதும், ஒருவருக்குப் பிள்ளைப் பேறு வாய்க்கும் என்கிறான் இவர் நாவலின் ஒரு கதைப் பாத்திரம்.
‘உலகப் பைத்தியக்காரர்களே ஒன்றுபடுங்கள்’ என்பது இவர் பிரதியொன்றில் அதிர்ந்து வெளிப்படும் பிரகடனம்.
கொஞ்சமேனும் உலக அரசியல், தமிழ்த் தொல்மரபு, கலை இலக்கியக் கோட்பாட்டு அறிவு கொண்ட வாசகர்களே ரமேஷின் புனைவெழுத்துகளில் காணப்படும் மௌனங்களை, அரசியலை, எதிர் அழகியலின் கலகத் தன்மையை, பிரதியாக்கத்தின் பகடியாட்டத்தை வாசிக்க முடியும். ஆனால், காட்டில் தன் பாட்டுக்கு ஊறும் ஊற்றுப் போல இவரிடம் மொழி தன்னை ஒப்புக்கொடுத்துவிடுகிறது. எளிமையான சொற்கள், எளிமையான சொல்முறை. ஆனால், பல்வேறு புலங்களில் புகுந்து விகசிக்கும் ஆழமான நுண்மையான பொருண்மைப்பாடுகள். அவ்வகையில் இவருடைய புனைவுகள் அவரை நெருங்கி வாசித்தவர்கள் சொல்வது போல ‘ஏமாற்றும் எளிமை’யாக உள்ளன.
தமிழ் அறிவு, அரசியல், பண்பாட்டுப் புலத்தில் ஆழமான அறிவுத் தேடல் உருவாக வேண்டும் என்று ரமேஷ் விரும்பினார். அந்த முயற்சிக்கு அவர் படைத்துச் சென்றுள்ள புனைவுப் பிரதிகள் அடிப்படை ஆதாரங்களாக அமையும் தகுதி உடையவை. அவர் ஆக்கங்களை இனியேனும் கல்விப் புலங்களும் சமூக, அரசியல், இலக்கியக் களங்களும் சரிவரப் பயன்கொள்ள வேண்டும்.
புதுவையில் நிகழ்ந்த ரமேஷ்-க்கான அஞ்சலிக் கூட்டத்தில், பதிப்பாளர் ஜீவ கரிகாலன் பேசும்போது, “ரமேஷ் விருப்பப்படியும் அவர் தன் இறுதி நேர்காணலில் வலியுறுத்தியதன்படியும், அவரது நூல்களின் பதிப்புரிமை, அவர் கடும் உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டுத் துயர்ப்பட்ட காலங்களில் அவருடன் இருந்து அவரைக் காத்த தோழி பிரேமாவைச் சாரும்” என்றார். அசல் கலைஞனுக்கும் அசலான நட்புக்கும் கைவிடப்படுதல் இல்லைதானே?





