ஒரு காலத்தின் விளக்கு

அவலோகிதன்

அஞ்சலி: சாத்தை பாக்யராஜ் (1963 – 2025)

 

லித் மக்களுக்குப் பல நிலைகளில் மேம்பாட்டுப் பணிகள் நடந்திருக்கின்றன. அவை சில நேரங்களில் நேரடியாகப் பயன்பட்டிருக்கின்றன. சில நேரங்களில் மறைமுகமாகப் பயன்பட்டிருக்கின்றன. அதேபோல அவர்களுக்காகத் தொடங்கப்பட்ட இயக்கங்கள் /  போராளிகள் நீண்ட காலம் செயற்பட்டதும் உண்டு, குறுகிய காலம் செயற்பட்டதும் உண்டு. சில இயக்கங்கள் காலப்போக்கில் மறைந்து இருக்கின்றன. சில இயக்கங்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சில காரணங்களால் முடங்கியிருக்கின்றன அல்லது சமரசம் ஆகியிருக்கின்றன. இந்தப் போக்குகள் எல்லாவற்றையும் இணைத்ததுதான் சமூக இயக்கங்களின் வரலாறு. சமூக இயக்கங்கள் அரசியல், கருத்தியல் சார்ந்து மட்டுமே உருவாவதில்லை. கள எதார்த்தத்திலிருந்து உருவாகும் அமைப்புகளே அதிகம். கள எதார்த்தம் சார்ந்தே இயங்கிய அமைப்புகளும் உண்டு. இந்தப் பின்புலத்தில் தமிழகத்தின் பல்வேறு வட்டாரம் சார்ந்து இயங்கிய சமூக அமைப்புகள் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது மக்கள் தேசம் கட்சி. இதன் நிறுவனர் சாத்தை பாக்யராஜ் கடந்த மாதம் (19.08.2025) காலமானார்.

தென் மாவட்டங்களில் எல்லாப் பட்டியல் சாதியினரையும் உள்ளடக்கிய அமைப்புகளும், தனித்தனி சாதிகளுக்கான அமைப்புகளும் செயற்பட்டிருக்கின்றன. தனித்தனி சாதிகள் தேவையை ஒட்டி ஒருங்கிணைந்தும் சில வேளைகளில் தனித்தும் / முரண்பட்டும் கூட இயங்கியிருக்கின்றன. தென் தமிழகத்தில் ஜான் பாண்டியன், பசுபதி பாண்டியன் ஆகியோரது வருகை தேவேந்திரகுல வேளாளர் மத்தியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை. அதே காலகட்டத்தில் பறையர் வகுப்பினர் மத்தியில் செயற்பட்டுவந்த அமைப்பு பறையர் பேரவை. அதனை நிறுவியவர் சாத்தை பாக்யராஜ்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பிறந்தவர் பாக்யராஜ். பறையர் வகுப்பினர் அடர்த்தியாக வாழ்ந்த அப்பகுதியில், அவர்களுக்கான அமைப்பு தேவை என்பதை உணர்ந்து பறையர் பேரவையை ஆரம்பித்தார். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 1990களில் சாதி வன்முறைகள் தலைவிரித்து ஆடியதை அறிவோம். தூத்துக்குடி மாவட்ட சுற்றுவட்டாரங்களில் இரட்டைக் குவளை முறை, வழிப்பாதையில் பிரச்சினை, சீண்டல், தாக்குதல் போன்றவை நிகழ்ந்த இடங்களில் எதிர் தாக்குதல் என்ற அளவில் சாத்தை பாக்யராஜ் அறியப்பட்டார். தாக்குதல் நடத்தப்பட்டால் உடனே “சாத்தை பாக்யராஜைப் பாருங்கள்”, “சாத்தை பாக்யராஜைக் கூப்பிடுங்கள்” என்று சொல்லும் அளவிற்கு உருவெடுத்து நின்றார். 1990களில் பரமக்குறிச்சி, நாலுமூலைக்கிணறு, விருதுநகர் சுப்பிரமணியபுரம் போன்ற ஊர்களில் நடந்த வன்முறைகளின்போது இந்த அமைப்பே தலையிட்டது. நாலுமூலைக்கிணறு கலவர எதிர்வினையையொட்டி 94 நாட்கள் சிறைவாசத்தையும் அனுபவித்தார் பாக்யராஜ். சமூகத் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது தென் மாவட்டத்தில் இதுவே முதன்முறை. இந்த வன்முறைக்கு எதிராக திருச்செந்தூரில் மிகப்பெரிய பேரணியை நடத்தினார். இது ஆதிக்கத் தரப்புக்கு அச்சத்தையும் தலித் மக்களுக்கு உளவியல் பலத்தையும் தந்தது. அமைப்பை நோக்கிப் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். திருமணம் செய்துகொள்ளாதவர். எப்போதும் ஒரு படையோடு வலம் வருவார். “அவர் பாம் வீசி விடுவார்”, “அவர் வைத்திருக்கும் சூட்கேஸில் பாம் இருக்கும்” என்று அவர் பற்றி பரவலான பேச்சு உண்டு. அப்படியான பேச்சு ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்காக உதவியது.

நாலுமூலைக் கிணறு சம்பவத்தின்போது காவல்துறையின் அடக்குமுறையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. ஆனால், தமிழக காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இறுதியாக உச்ச நீதிமன்றம் ஏறக்குறைய ரூ.57,00,000 (ஐம்பத்தேழு லட்ச ரூபாய்) நஷ்ட ஈடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், உயர் அதிகாரிகள் உட்பட 84 பேரைப் பணியிடை நீக்கம் செய்யச் சொல்லியும், சாத்தை பாக்யராஜை கைது செய்ய முற்படும் முன் பத்துக் கட்டளைகளைக் காட்டி இவற்றைப் பின்பற்ற வேண்டுமென்றும் தீர்ப்பு வழங்கியது. சாத்தை பாக்கியராஜ் விடுதலையானபோது மக்கள் கிராமம் கிராமமாக வந்து பாளையங்கோட்டை சிறைச்சாலை முன்பு திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பறையர் பேரவையை ‘மக்கள் தேசம்’ என்னும் அரசியல் கட்சியாக மாற்றினார். தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் அடர்த்தியாகவும், தமிழகத்தில் பகுதி பகுதியாகவும் அந்தந்த வட்டாரம் சார்ந்த சமுதாயப் பணிகளைச் செய்தது. பம்பாய் தாராவியில் மன்றம் அமைக்கப்பட்டது.  வலம்புரி ஜான் ‘நீலப்புலி’ என்கிற பட்டத்தை அளித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வருகைக்குப் பின் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அமைப்பில் ‘வன்முறை முகமாக’ அறியப்பட்டவர்கள் பல்வேறு சூழல் கருதி புதிய அமைப்புகளில் இணைந்துவிட்டனர். பின்னாட்களில் சாத்தையார் சென்னைக்கு வர வேண்டியிருந்தது. பிறகு, நோயின் கொடூரத்தால் காலமாகியிருக்கிறார். அவர் இறந்த பிறகு பெருந்தலைவர்கள் வரவில்லை. ஆனால், அவர் காலச் செயற்பாடுகளால் பயனடைந்தவர்கள், செயற்பாடுகளை அறிந்தவர்கள் சமூக ஊடகங்களில் பரவலாக அவர் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்திருந்தனர். அவற்றில் சிறு சிறு சம்பவங்கள் இருந்தன. அவர் வாழ்க்கை பற்றிய முழு சித்திரம் யாராலும் தரப்படவில்லை. இதுபோன்ற தலைவர்களுக்கு நிறைய நெருக்கடிகள் இருந்ததால் அவர்கள் தங்கள் வாழ்க்கை பற்றிய தகவல்களைக் கூட விட்டுச் செல்லாமல் போய்விடுகிறார்கள். ஆனால், இவர் போன்றோருக்கான வரலாறு தொகுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger