அஞ்சலி: பாரதி வசந்தன் (1956 – 2024)
கடவுள் இல்லையென்று எவனாவது சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும். அப்பாவும் அம்மாவும்தான் எங்களுக்கு ஆயிரம் காலத்துத் தெய்வம். அதற்கடுத்த தெய்வம் அம்பேத்கர்.
– பாரதி வசந்தன்
தமிழ்நாட்டை ஒரு கையளவு நிலமாகப் பாவித்தால் அதனோடு ஆறாம் விரலாய் தனியே தெரிவது புதுச்சேரி. பிரெஞ்சுக் கலாச்சாரத்தின் ‘ஒடிக்கொலான்’ வாசனையைத் தன் வீதிகளில் மிதக்கவிடும் தனித்துவத்தைக் கொண்டவை புதுச்சேரியின் கடற்கரைத் தெருக்கள், இணையாக சாதி அடுக்குகளையும் வடதமிழகத்தின் பேச்சு வழக்கையும் கொண்ட சிறு தெருக்கள்.
பெரிய வாய்க்காத் தெரு என பிரெஞ்சியர் வாழும் ஆளுகைப் பகுதியையும், சின்ன வாய்க்காத் தெரு என தமிழர் வாழும் அடுக்குமுறைச் சாதிய வாழ்வின் பகுதியையும் பிரித்து நிற்கக்கூடிய முரண்பட்ட பண்பாடுகளின் பிளவுண்ட நிலப்பகுதியே புதுச்சேரி மண்ணின் காலனிய வரலாறாகும்.
புதுச்சேரியின் தனித்துவத்தைத் தொகுத்தெழுதும் இலக்கியப் படைப்பாளிகள் குறைவுதான். அவர்களில் பிரபஞ்சனை தமிழ் படைப்பு – விமர்சன உலகில் உச்சிமேல் வைத்துக் கொண்டாடினர். புதுச்சேரிக்கு அண்மையிலுள்ள வளவனூரைச் சார்ந்த பாவண்ணன், புதுச்சேரியின் நவீன எழுத்தாளர்கள் பிரேம் – ரமேஷ், சங்கராபரணி, புதுச்சேரி நதியின் பெயரில் கவிதைகள் எழுதிய மாலதி மைத்ரி எனச் சிலர் தமிழ்க் கலை இலக்கியப் புலத்தில் அறியப்பெற்ற அளவுக்கு, புதுச்சேரியின் பிரெஞ்சுக் காலனிய வரலாற்றையும், தற்கால நிலைமைகளையும் ஆராய்ந்து தொகுத்து படைப்புகளாக்கிய பாரதி வசந்தன் அறியப்படவில்லை.
பாரதி வசந்தன் புதுச்சேரியின் தனித்துவமான இலக்கிய ஆளுமையாக விளங்கினார். தனித்துவம் என்பதில் தனித்து ஒதுக்கப்பட்ட – தனித்து ஒதுங்கிச் செயல்பட நேர்ந்த எனும் உண்மையும் அடங்கியிருக்கிறது. இந்தச் சூழலில் புதுச்சேரியின் கலை இலக்கிய, சமூக வகிபாகத்தில் பாரதி வசந்தனை எவ்வாறு இடப்படுத்துவது? ‘புதுச்சேரியில் தடுக்கி விழுந்தால் ஒரு கவிஞரின் மீதுதான் விழ வேண்டும்’ என்று நகைச்சுவையாகச் சொல்வார்கள். அந்த அளவிற்குக் கவிஞர்கள் குழுக்களும் தேவையற்ற புகழ்மொழிகளின் மொச்சைவாடையும் காற்றில் கலந்து மாசு உருவாக்கும் மண்ணாகவும் அது இருக்கிறது. பாரதி, பாரதிதாசன், வாணிதாசன், தமிழ்ஒளி எனும் கவிப் பரம்பரையின் அசலான முகிழ்ப்புகள் அங்கு வெகு சொற்பமே. மாறாக, கவிதை யாப்பில் மரபைப் பிடித்துக்கொண்டு அழிச்சாட்டியம் செய்யும் புலவர் கூட்டம், மக்கள் படைப்பாளிகளைப் புறமொதுக்கும் வேலையை மட்டும் ஒன்றிணைந்து செய்தன. இங்கு பாரதி வசந்தன் கிறித்தவராக இருந்ததும், தலித்தாக இருந்ததும் அவரைப் புறந்தள்ள வைத்தன. அத்தகைய கூட்டங்களிலிருந்து அவர் விலகியிருந்ததும் பெருமளவு நன்மைக்குத்தான். ஆனால், பாரதி, பாரதிதாசன் பரம்பரையில் அவர் யாப்பறிந்த மரபுப் பாவலராகவும் இருந்தார். பாரதியை அவருடைய சாதியையும் மதப்பற்றையும் சுட்டிக்காட்டி பலர் விமர்சித்து ஒதுக்கியபோது, அவரிடம் வெளிப்பட்ட கலகக் குரலையும் ஒடுக்கப்பட்டவர் சார்பாகப் பாடியவற்றையும் செயல்பட்டவற்றையும், புதுச்சேரியின் அரசியல் – சமூக வரலாற்றின் ஊடாக இனங்கண்டு பாரதி வசந்தன் பாரதியைப் போற்றினார். பாரதியோடு பாரதிதாசனை இணைத்துக் காண்பதை விடவும் இடதுசாரிப் பாவலர் தமிழ்ஒளியைப் பாரதியோடு இணக்கப்படுத்தி வாசித்தவராக பாரதி வசந்தன் இருந்தார்.
பழைமை பேசும் வெறும் மரபுப் பாவலராக மட்டும் நின்றுவிடாமல், தன் கவிதைகளில் பாபாசாகேப் அம்பேத்கரின் கோட்பாடுகள் – தலித் விடுதலை அரசியல், இடதுசாரி அரசியல் ஆகியவற்றைக் கலந்து புதுக்கவிதை, ஹைக்கூ என்று முன்னேறிச் சென்றார்.
பாரதியின் கலகக் குரலை ஆதரித்ததோடு, தமிழ்ஒளி, புதுவையில் சமூக விடுதலைக்கு வித்திட்ட தோழர் சுப்பையா என்று தலித்தியத்தை விரிவான தளத்தில் வைத்து விளக்க முயன்றார். தலித் ஓர்மை மிக்க அரசியல் கருத்தாக்கம் என்பது புதுச்சேரி மண்ணின் வரலாற்றை உயிர்ப்பாகக் கொண்டிருந்தது. எப்போதும் தலித்திய நோக்கிலான புதுச்சேரி அரசியல், மக்கள் வரலாறு ஆகியவற்றைக் குறித்த தரவுகளைத் தேடித் திரிபவராக இருந்தார். தான் பெற்ற புதிய புதிய செய்திகளைக் கவிதைகளாகவும் தந்தார். அவருடைய ‘தலைநிமிர்வு’ கவிதைத் தொகுதியில் தலித் அரசியலை உரத்தக் குரலில் பதிவு செய்தார். புதுவை சார்ந்து அவர் திரட்டிய வரலாற்றுத் தரவுகள் கவிதையில் சொல்ல முடிந்ததைத் தாண்டி விரிவாகவும் புதுமைகளைத் தாங்கியும் அமைந்திருந்தன. புதுச்சேரியில் அவர் பாதம் படாத தெருக்களே இல்லையென்று சொல்லுமளவுக்கு அலைந்திருக்கிறார். கவிதைகள் மட்டுமல்லாமல் சிறுகதைகளையும் புதினங்களையும் எழுதினார். இவற்றில் புதுவை உழைக்கும் மக்களின் பிரெஞ்சு வாசனை கலந்த தனித்துவமான பேச்சுமொழி பதிவானது. மேலும், ஜென்மராக்கினி மாதா கோயில், அந்தோனியார் கோயில், விண்ணேற்பு அன்னை ஆலயம் எனக் கிறித்தவ தேவாலயங்கள், அவற்றின் வரலாற்றுக் கூறுகள் ஆகியவை இப்படைப்புகளில் இடம்பெற்றன.
பத்தொன்பது – இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரியின் பிரெஞ்சியர் ஆட்சி வரலாற்றில் அரசுக்கும் வெகுமக்களுக்கும் இடையே நடந்த போராட்டங்களும் அடக்குமுறைகளும் உழைப்பாளிகளின் உயிர்ப் பலிகளும் ஆன ஒரு கொடிய வரலாற்றின் துயரங்களை எதிர்த்துப் போராடி வெற்றி கண்ட தோழர் சுப்பையாவைப் புதுச்சேரியின் தலைவராக தம் கட்டுரைகளில் விளக்கினார் பாரதி வசந்தன். அம்பேத்கரிய – தலித்திய ஓர்மை, பாரதியின் கலகப் பரம்பரை, இடதுசாரிப் புரட்சிகர அரசியல் நிலைப்பாடு, எதிர்ப்பிலக்கிச் செயற்பாடு என்று புதுச்சேரி விளிம்புநிலை அரசியலைப் பரந்த தளத்தில் முன்னெடுத்துச் செல்லும் படைப்பாளியாக இருந்தார். சமகால அரசியல் சூழ்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீதும் அதன் தலைவர் தொல்.திருமாவளவன் மீதும் பெரும் மதிப்பையும் அன்பையும் வைத்திருந்தார். தன்னுடைய படைப்புகள் வாசிக்கப்பட, விமர்சிக்கப்பட வேண்டும் என்று எப்போதும் விரும்பினார்.
தொண்ணூறுகளின் கலை இலக்கியக் களத்தில் பெரும் சர்ச்சைகளை உருவாக்கிய தோழர் கவிதாசரணோடும் அவருடைய இதழோடும் நெருங்கிய தொடர்பில் இருந்தார். கவிதாசரண் இதழ்களில் தலித்தியத்தை முன்வைத்து எழுந்த சர்ச்சைகளில் பங்கேற்று, தலித்துகளின் – விளிம்புநிலை மக்களின் சார்பாக நின்று குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்தினார்.
பிற்காலங்களில் அயோத்திதாசப் பண்டிதரின் வரலாற்றிலும் தமிழ்ப் பௌத்த மெய்யியல் அடிப்படையிலான தமிழ்ப் பண்பாட்டு உருவாக்கத்திலும் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தார். புதுச்சேரியின் மறைக்கப்பட்ட வரலாறுகள் பற்றிய தரவுகளை அயோத்திதாசப் பண்டிதரின் தமிழ்ப் பௌத்த வாசிப்பு முறையில் விளங்கிக்கொள்ள முயன்றார். இத்தகைய செயல்தள இயக்கத்தின் விளைவாகக் கண்ட முடிவுகள் பற்றி அவர் தன் வாசகர்கள் சிலருடன் கலந்துரையாடினார்.
வெறுமனே புகழ் பரப்பும் நோக்கில் பாரதியின் வரலாற்றையோ படைப்புகளையோ அணுகியவர் அல்லர் அவர். பாரதியோடு தொடர்புடைய கனகலிங்கம் போன்ற தலித் ஆளுமைகளின் வரலாறுகளோடு தொடர்புபடுத்தியும், பாரதிக்கும் தலித் மக்களுக்கும் இடையிலான உறவுகள் சார்ந்தும் பாரதியை ஒடுக்கப்பட்டோர் கண்ணோட்டத்தில் வாசித்தார். ‘என் குருநாதர் பாரதியார்’ நூல் எழுதிய கனகலிங்கம் எனும் தலித் ஆளுமைக்குப் பிறகு பாரதி மீது இத்தகைய தலித்திய வாசிப்பு முயற்சிகளை பாரதி வசந்தன் தவிர வேறு எவரும் முன்னெடுக்கவில்லை எனலாம்.
எந்த ஒரு வரலாற்று ஆளுமையின் ஆக்கங்களையும் தலித்திய ஓர்மையுடன் புரிந்துகொள்ளும் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் பாரதி வசந்தன். நிறப்பிரிகை போன்ற காத்திரமான இதழ்களின் வளர்ச்சியில் அவருக்கும் பங்கு இருந்தது.
‘என் குருநாதர் பாரதியார்’ நூலில் வ.ரா. குறிப்பிடும் பாரதியின் புதுவை வாழ்க்கை நிகழ்ச்சிகளில் இடம்பெறும் தம்பலா எனும் தோட்டி சமூகத்தின் அடங்க மறுக்கும் பண்பு கொண்ட வரலாற்று மனிதனை முன்வைத்து பாரதி வசந்தன் எழுதிய ‘தம்பலா’ எனும் நெடுங்கதை அவருடைய படைப்பாற்றலின் உச்சத்திற்கு ஒரு சான்று. சாதித் தீண்டாமையை எதிர்த்துக் குரல்கொடுக்கும் ஒருவனின் கலக வாழ்வையும் அவனுடைய அதிரடிச் செயல்பாடுகளில் காணப்படும் ஒடுக்கப்பட்டோர் நியாயத்தையும் புரிந்துகொண்டு அவன் பக்கம் நிற்கும் பாரதியின் நேர்மையைப் பேசும் ‘தம்பலா’, தமிழ் தலித் படைப்பு வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகிறது. இக்கதை வெளிவந்த காலங்களில், அது பேசும் விளிம்புநிலை அரசியல் தர்க்கம் புறக்கணிக்கப்பட்டு, பாரதி வரலாற்றில் இதற்கு ஆதாரம் உண்டா எனக் கேட்கப்பட்டு, சாதிய உணர்வு உள்ளவர்களால் தவிர்க்கப்பட்டது. அதைத் தாண்டியும் இக்கதை பிரபஞ்சன் போன்றவர்களின் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு என மூன்று மொழிகளில் ஒரே நூலாக வெளிவந்த முதல் சிறுகதை எனும் பெருமையையும் ‘தம்பலா’ பெற்றது. புதுச்சேரி அரசின் கலைமாமணி விருது, கம்பன் புகழ் இலக்கியப் பரிசு, ‘பெரியவாய்க்கா தெரு’ என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக தமிழ்நாடு அரசு விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ள பாரதி வசந்தனுக்குத் தன் படைப்புகள், ஆளுமைச் செயல்பாடுகள் குறித்த அங்கீகாரத்திற்கான – விமர்சன முன்னெடுப்புகளுக்கான ஏக்கம் மிகுதியாகவே இருந்தது.
மண்ணின் மைந்தர்கள், பணி நிமித்தமாகக் குடியமர்ந்த தமிழ்நாட்டு ஆளுமைகள் என்னும் இரு நிலைகளில் புதுச்சேரியில் பேராசிரியர் அ.குணசேகரன், தலித் சுப்பையா, பேராசிரியர் ச.பிலவேந்திரன், பாரதி வசந்தன் போன்ற தலித் சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்கள் பெரும்பான்மையும் அவரவர் நிலைகளில் தனித்து இயங்க நேர்ந்தது. இத்தகைய தலித் ஆளுமைகள், ஓர்மையுடன் புறக்கணிக்கப்பட்டதும் புதுச்சேரியில் நிகழ்ந்தது. இவர்களைத் தமிழ்நாடு கண்டுகொண்ட அளவுக்குப் புதுவை மண் வரவேற்றுப் போற்றவில்லை என்பது வரலாற்றுச் சோகம்தான்.