கவிதைகள்

தமிழில்: இந்திரன்

மாயா ஏஞ்சலோ

கசப்பான திரிக்கப்பட்ட பொய்களால்
வரலாற்றில் நீங்கள் என்னைத் தாழ்த்தி எழுதலாம்.
தூசியில் போட்டு என்னை நீங்கள் மிதிக்கலாம்.
ஆனாலும் தூசியைப் போல நான் மேலே எழுவேன்.

எனது மரியாதையற்ற தன்மை உங்களை நிலைகுலையச் செய்யலாம்.
எனது விருந்தினர் அறையில்
எண்ணெய்க் கிணறுகள் இறைத்துத்துக்கொண்டிருப்பது போல
நான் நடப்பதால் ஏன் நீங்கள் கவலைப்படுகிறீர்கள்?

சூரியன் சந்திரன் போல
அலைகளின் நிச்சயமற்றத்
தன்மையுடன் நம்பிக்கைகள் உயர்கின்றன.
இருப்பினும் நான் மேலே எழுகிறேன்.

எனது இறுமாப்பு உங்களை
மன வருத்தம் அடையச் செய்கிறதா?
எனது புழக்கடையில் தங்கச் சுரங்கங்கள் தோண்டப்படுவது போல
நான் சிரிப்பதனால் பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்குக்
கடினமாக எடுத்துக்கொள்கிறீர்களா?

நீங்கள் என்னை வார்த்தைகளால் சுடலாம்.
உங்கள் கண்களால் என்னை வெட்டலாம்.
உங்களின் வெறுப்பினால் என்னை நீங்கள் கொலை செய்யலாம்.
ஆனாலும் ஒரு காற்றைப் போல நான் மேலே எழுவேன்.

காமத்தைக் கிளரும் எனது கவர்ச்சி
உங்களை நிலைகுலையச் செய்கிறதா?
நான் எனது தொடைகளுக்கு நடுவே வைரங்களை வைத்துக்கொண்டிருப்பது போல
நடனம் ஆடுவது உங்களுக்கு ஆச்சரியத்தைத் தருகிறதா?

வரலாற்றின் அவமானகரமான
குடிசைகளிலிருந்து நான் எழுவேன்.
வழியில் மேற்கொள்ள பழமையிலிருந்து நான் எழுவேன்.
நான் அலைகளில் அகலமாக எகிறி குதித்துப் பெருகி வழியும் ஒரு கருப்புச் சமுத்திரம்.

என் மூதாதையர்கள் கொடுத்த பரிசுகளை எனக்குக் கொடுங்கள்.
நான் அடிமைகளின் கனவும் நம்பிக்கையும் ஆவேன்.
நான் எழுகிறேன்.
நான் எழுகிறேன்.
நான் எழுகிறேன்.

புகைப்படம்: நவீன்ராஜ் கௌதமன்

அலைஸ் வாக்கர்

அவர்கள் உங்கள் தாயைத் துன்புறுத்தும்போது
ஒரு மரம் நடுங்கள்.
அவர்கள் உங்கள் தந்தையைத் துன்புறுத்தும்போது
ஒரு மரம் நடுங்கள்.
அவர்கள் உங்கள் சகோதரனையும் சகோதரியையும் துன்புறுத்துகிறபோது
ஒரு மரம் நடுங்கள்.
அவர்கள் உங்கள் தலைவர்களையும்
காதலர்களையும் கொலை செய்யும்போது
ஒரு  மரம் நடுங்கள்.
அவர்கள் உங்களை மோசமாகப் பேசி துன்புறுத்தும்போது
ஒரு மரம் நடுங்கள்.
அவர்கள் மரங்களைத் துன்புறுத்தத் தொடங்கியபோது
காட்டை வெட்டி வீழ்த்துங்கள்.
அவர்கள் இன்னொன்று தொடங்கச் செய்திருக்கிறார்கள்.

 

[email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger