“தமிழ் இலக்கியத்தை இயங்க வைத்ததே தலித் இலக்கியம்தான்’’ – யாழன் ஆதி

சந்திப்பு : பச்சோந்தி

வட ஆற்காடு மாவட்டம் ஆம்பூரில் உள்ள B கஸ்பாவில் 1970இல் பிறந்தவர் கவிஞர் யாழன் ஆதி. அங்குள்ள கன்கார்டியா மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், இயற்பியலை வேலூர் ஊரிசுக் கல்லூரியிலும் முடித்துள்ள இவர், அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்.

`இசையுதிர்காலம்‘, `செவிப்பறை’, `நெடுந்தீ’, `கஸ்பா’, `போதலின் தனிமை’, `காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும்‘, `யாருமற்ற சொல்’, `நெடுநல்வாடன்’, `ஒளியிருள்’ ஆகிய கவிதை நூல்களையும் `மனிதம் கொன்ற சாதியம்‘, `ஆம்பூர்’ ஆகிய கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார். `தம்மபதம்’ நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். இவருடைய கவிதைகள் ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. `சாம்பல்’ என்னும் குறும்படத்தை இயக்கியிருக்கிறார்.

தலித் முரசு இதழ் ஆசிரியர் குழுவில் பங்கெடுத்து, கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக முதல் பக்கக் கவிதைகளை எழுதினார். மேலும், புதிய தலித் எழுத்தாளர்களைப் பற்றி `மாற்றுப் பாதை’ என்னும் கட்டுரைத் தொடரையும் எழுதி வந்தார்.

‘நீலம்’ இதழுக்காக கவிஞர் யாழன் ஆதியைச் சந்திக்க ஆம்பூர் சென்றிருந்தேன். ஆம்பூரை இரண்டாகப் பிரிக்கும் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலப் பணிகள் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்தன. புழுதிபறக்கும் காற்றைச் சுவாசித்தபடி ஆம்பூர் இரயில் நிலையம் தொடங்கி, காஜா பிரியாணிக் கடை, சந்தைக் கடை, பாலாறு, 3 ஸ்டார் பிரியாணி என நகரின் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று உரையாடினோம்.

A கஸ்பா, B கஸ்பா ஊர் – சேரியாகப் பிரிந்துகிடக்கிறது கஸ்பா. குப்பைகளால் நிரம்பிய பாலாற்றில், ஆலைக் கழிவுகளில் மீன்கள் நீந்தியவண்ணமிருந்தன. கஸ்பாவில் உள்ள மக்கள், இரவு இரண்டு மணிக்கு மாட்டு எலும்புகளை வேகவைத்து விட்டு மீண்டும் உறங்கச் சென்று விடுவதாகவும் அதிகாலை எழுந்து பார்க்கும் போது சூப் தயாராக இருக்கும் என்று தம் நிலத்தின் பொழுதுகளையும் வேலைப் பகிர்மானத்தையும் பகிர்ந்தார் யாழன் ஆதி. பேரணாம்பட்டுக்குச் செல்லும் சாலையின் இருபுறமும் இருந்த கட்டடங்களைச் சுட்டி இது சதுப்பு நிலங்கள் இருந்த பகுதி என்றும் `ஆற்றங்கரையில் இருந்த கோயில்’ என்கிற முன்காலப் பதிவைச் சுட்டி அக்கோயில் நகரத்தின் மத்தியில் வந்துவிட்டது என்கிற வார்த்தைகளில் சிறுத்துப் போன நதியின் பரந்த சித்திரத்தை மனதுக்குள் ஓட்டிப் பார்த்தேன்.

பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தோல் தொழிற்சாலைகளின் கதவுகள் ஒவ்வொன்றாக மூடப் பட்டுக்கொண்டே வருகின்றன என்றார். நிலத்தின் கட்டமைப்பும், உயிர்களின் குணநலன்களும் பண்புகளும் திரியத்தொடங்கி வெகுகாலமாகிவிட்டன; அம்மாற்றங்களை அறிந்தும் அறியாமலும் இருந்தும் இல்லாமலும் போகும் நாம் வாழும் வரை, “ஏதும் மாறவில்லை நாம் என்றும் சாவதில்லை’’ என்கிற மாய உலகிலேயே பெரும்பாலும் உழல்கிறோம்; இவ்வாறிருக்க அரசியலின் தந்திரங்களை, சூழ்ச்சியை, மர்மங்களை, ஊதாரித்தனத்தை, அபகரிப்புகளைக் காலங்காலமாய் எந்தவித அச்சமுமின்றித் தோலுரித்துக் காட்டுவதே கலையின், கலைஞனின் தலையாய கடமையாகும். கலை கலைஞனுடனும், கலைஞன் கலையுடனும், இவ்விரண்டும் சமூகத்துடனும், தீவிர உரையாடலைத் தொடர்ந்து நிகழ்த்த வேண்டும். இப்போது உரையாடலுக்குள் செல்வோம்…

உங்கள் ஆளுமையில் கஸ்பாவின் பங்கும் இங்குள்ள மக்களின் வாழ்வியலைக் கலாச்சாரப் பின்புலத்துடன் கூறுங்கள்?

இது ஒரு வீரஞ்செறிந்த மண். வடாற்காடு மாவட்டத்தின் தலித்துகளுக்கான தாய்மண். ஜாதிய ஆணவத்தை எதிர்த்துப் போராடி ஆதிக்கத்தின் எந்தப் பக்கத்தினையும் தன் பலத்தால் அடக்கிவைத்த தலித்துகள் அடர்ந்து வாழும் ஆளுமை மிக்கப் பகுதி என்று சொல்லலாம். இன்றும் கூட ஆம்பூர் கஸ்பா என்றால் கேட்பவர்களின் நெஞ்சோரத்தில் கொஞ்சம் பயம் இருந்தே தீரும்.

அம்மாவின் வயிற்றில் இருக்கும்போதே நாங்கள் ‘ஜெய்பீம்’ கேட்டு வளர்ந்தவர்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே நாங்கள் வணக்கம் சொல்லும் முறை ஜெய்பீம்தான். ‘தாத்தாவுக்கு ஜெய்பீம் சொல்லு’ என்றுதான் எங்களுக்குச் சொல்லித் தரப்பட்டுள்ளது. அத்தகைய அரசியல் வாய்ந்த ஊர் என்னுடையது. அம்பேத்கரிய அரசியலும் திராவிட அரசியலும் ஒரு சேர வளர்ந்த ஊர். இரண்டும் அக்காலங்களில் எதிர்மைகளில் வேலை செய்தாலும் மக்களுக்கான அரசியலை முன்வைத்தன.

அன்னை ரமாபாய் படிப்பகமும், பன்னீர்செல்வம் படிப்பகமும் எங்கள் படிப்பைச் சமூகத்தின் பக்கம் மாற்றியது. புத்தகமும் கையுமாக அலையும் அண்ணன்களும் அக்காக்களும் எங்களுக்கான முன்மாதிரிகளாக எங்கள் தெருக்களில் நடந்துகொண்டிருப்பார்கள். அவர்கள் படிப்பதற்கான புத்தகங்களையும் நோட்டுகளையும் வாங்குவதற்காக எங்கள் தாய்மார்கள் மல்லிகைப் பூக்களைப் பறித்துக் கூலி வாங்குவார்கள். அதுதான் ஆம்பூர் மல்லி என்று இன்றும் சொல்லப்படுகிறது.

மாலை நேரங்களில் முருகையன் பெரியப்பாவும் மீசைக்கார ஜெயராமன் மாமாவும் ஆர்மோனியமும் டோலக்கும் வாசித்துக்கொண்டிருக்கும் அந்தப் பொழுதில் இசைக்காற்று சூழும் இடமாக எங்கள் ஊர் மாறிவிடும்.

நூற்று இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கப்பட்ட எங்களூர்த் திருவிழா பிரசித்தி பெற்றது. சாதி இந்துக்களின் தெருக்களில் நடக்கத் தடை செய்யப்பட்ட எங்கள் மக்கள், 60 அடி உயரத் தேரைத் தள்ளிக்கொண்டு, ஆம்பூரில் இருக்கும் அனைத்துச் சாதி இந்துக்களின் சந்து பொந்துகளிலும் தள்ளிக்கொண்டுபோய்க் கோபாவேசத்துடன் அத்தெருக்களை மிதித்து மீட்ட உரிமையின்மீதுதான் இன்று நாங்கள் வாழ்கிறோம். நீலக்கொடி பறந்த அத்தேர் பக்திக்குப் பதிலாகச் சுயமரியாதையையும் சாதி எதிர்ப்பையும் எங்கள் உடல் வலுவையும் சுமந்து சென்றது.

இன்று உலகத்தின் அந்நியச் செலாவணியை அதிகம் ஈட்டித்தரும் தோல் தொழிற்சாலைகளின் அஸ்திவாரம் எங்கள் முன்னோர்களின் வியர்வையும் இரத்தமும்தான். அன்று மாட்டுத்தோலின் கொழுப்பைக் கையில் தொடாத சாதி இந்துக்களுக்கு மத்தியில் மாட்டுத்தோலின் முடிகளையும் கொழுப்பையும் நீக்கும் ‘தானா தள்ளும்’ வேலையை எங்கள் முன்னோர்கள்தாம் செய்தார்கள். இன்று தொழிற்நுட்பம் வளர்ந்தபிறகு அத்தொழிலினை அனைவரும் செய்கிறார்கள்.

1909இல் எட்கர் தர்ட்ஸனால் எழுதப்பட்ட ‘Castes and Tribes of Southern India’ என்னும் நூலில் ஆதிக்குடிகளின் ஊராகச் சொல்லப்படும் ஊர் இது. இத்தகைய அரசியல் பின்புலமும் பண்பாட்டு விழுமியமும், தொழில் ஈடுபாடும் கல்வி விழிப்புணர்வும் கொண்ட ஒரு நிலம்தான் எங்கள் கஸ்பா.

மல்லிகைப் பூக்களைப் பறித்து வாங்கும் கூலியில் பாடப் புத்தகங்கள் வாங்கிய அனுபவம் மிகவும் புதுமையாக இருக்கிறது. அங்கு நடைபெற்ற பணிகள், பெற்ற கூலி முதலிய அனுபவங்கள் குறித்துக் கொஞ்சம் விரிவாகச் சொல்ல முடியுமா?

பூவெடுப்பது எங்கள் ஊர்த் தாய்மார்களின் வேலை. எங்கள் ஊரைச் சுற்றிக் கண்ணுக்கெட்டிய தூரம்வரை ஒரு காலத்தில் மல்லிகைத் தோட்டங்கள் இருக்கும். ஆயிரக்கணக்கான மல்லிகைச் செடிகள் வரிசை வரிசையாக இருக்கும். வரிசைக்கு ‘ஜருவு’ என்ற சொல்லும் உண்டு. பூந்தோட்டங்கள் எல்லாம் சாதி இந்துக்களுக்குச் சொந்தமானவை. மல்லிகைப் பூ காலங்களில் மொக்கு பறித்துத் தர வேண்டும். ஒருவருக்கு இத்தனை ஜருவு எனப் பிரித்துக் கொடுக்கப்படும். எடுக்கப்படும் மொக்குகளைக் கிலோ கணக்கில் எடைபோட்டுக் கொல்லிக்காரர்கள் எடுத்துக்கொள்வார்கள். ஒரு கிலோ மொக்கு பறிக்கக் கூலி நிர்ணயித்து இருப்பார்கள். குடும்பமே அவர்களின் ஜருவுக்குப் போய்ப் பறித்துத் தருவார்கள். காலையில் பறித்தது போக மத்திய நேரத்தில் கூலி மொக்கு பறிக்கப் போவார்கள். அதற்குக் கொஞ்சம் காசு அதிகம். மொத்தமாகச் சேர்த்து வெள்ளிக்கிழமை மாலை கூலி தருவார்கள். ‘பூக்கூலி’ என்று பெயர். அந்தப் பணத்தை வாங்கிப் படிக்க வைத்தார்கள் எங்கள் தாய்மார்கள். அப்படிப் படித்துதான் நாங்கள் ‘ஜவுர்ஜெட்’டாக மாறினோம். இப்போது பூக்கொல்லிகள் எல்லாம் வீடுகளாக மாறிவிட்டன. கொல்லியின் வரப்புகளில் மறைந்து அஞ்சு பத்து விளையாடிய நாங்கள் இப்போது அதே கொல்லியில் போடப்பட்ட காங்கிரீட் சாலைகளில் வாகனத்தில் பறந்துகொண்டிருக்கிறோம்.

நீங்கள் பிறந்த ஊரான கஸ்பா வீரம் செறிந்த மண் என்று சொல்கிறீர்கள். மற்றொருபுரம் கஸ்பா என்றால் அரபு மொழியில் இஸ்லாமியர் அதிகம் வாழும் பகுதி என்று அர்த்தம் என்கிறீர்கள். பௌத்தர்கள் அதிகம் வாழ்ந்த நிலப் பகுதியான உங்கள் ஊர் ’கஸ்பா’ என்று எப்போது பெயர் மாற்றமடைந்தது.

இஸ்லாமியர்களால் சூழ்ந்த பகுதி கஸ்பா. கஸ்பா என்னும் பெயர்தான் அதன் ஆதிப்பெயர். பௌத்தத்தில் கஸ்பா என்னும் பெயர் நிறைய இடங்களில் வருகிறது. சம்யுத்த நிகாயத்தில் கஸப்பா என்பவருடன் புத்தரின் உரையாடல் இடம்பெற்றிருக்கிறது. கஸப்பா என்னும் நதி இருந்ததாகக் குறிப்புகள் இருக்கின்றன. ஊரின் தொடக்கத்தில் நூறாண்டுகால அரச மரம் என்று பௌத்தக் குறியீடுகள் நிறைந்தது எங்கள் கஸ்பா.

இலக்கியத்தின் மீதான ஆர்வமும் எழுத்தின் மீதான ஈடுபாடும் உருவான பருவம் குறித்துப் பகிருங்கள்.

பங்காரு பாவலர் என்று ஒருவர் வடாற்காடு மாவட்டம் வாலாஜா பகுதியில் உள்ள சாத்தம்பாக்கம் என்னும் கிராமத்தில் சீர்த்திருத்தங்களைச் செய்தவர். பாடல்கள் புனைவார். அந்தக் காலத்திலேயே ஜெய்பீம் நாட்காட்டி வெளியிட்டவர். திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர். அவருடைய பேத்திதான் என்னுடைய அம்மா. அப்பா கஸ்பாவைச் சார்ந்தவர். 1969ஆம் ஆண்டு சுயமரியாதைத் திருமணம் செய்தவர்கள். அம்மா நான் குழந்தையாக இருக்கும்போதே கதைகளையும் பாடல்களையும் சொல்வார்கள். கஸ்பாவில் இருக்கும் மிஷனரி பள்ளியில்தான் நான் ஆரம்பக் கல்வி கற்றேன். எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, நான் மூன்றாம் வகுப்புப்படிக்கும்போது கஸ்தூரி டீச்சர் பாலர் மன்றத்தில் பேசுவதற்கு எழுதிக் கொடுத்து அதைப் பேசியது இப்படித் துளிர்த்ததுதான் அந்த ஆர்வம். ஒன்பதாம் வகுப்பு வந்த பிறகு ஆம்பூர் கன்கார்டியா மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். இது மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் பணியாற்றிய பள்ளி. என்னுடைய தமிழாசிரியர் ஏசுடையான் ஐயாவின் தமிழைக் கேட்டும் பயின்றும் இலக்கிய ஆர்வம் கொண்டேன். ஒன்பதாம் வகுப்பு விடுமுறையின்போது மாவட்ட நூலகத்தில் அம்மா என்னைச் சேர்த்தார்கள். அவர்கள் படித்து வியந்த நா.பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர் நாவலைத்தான் எனக்கு எடுத்துக் கொடுத்தார்கள். நான் படித்த முதல் நூல் அதுதான்.

தீவிர வாசிப்பை நோக்கி எப்போது நகர்ந்தீர்கள். உங்களைப் பாதித்த நூல்கள் என்னென்ன?

கவிதைகளைத்தான் அதிகம் வாசித்தேன். பாரதியாரும் பாரதிதாசனும்தான் அப்போது கவிதை வாசகர்களின் இலக்கு. இருவரையும் வாசித்தேன். ஆனால் எனக்கு பாரதிதாசன் மிக நெருக்கமாக இருந்தார். `இருட்டறையில் உள்ளதடா உலகம், சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே’ என்னும் பாரதிதாசனின் கோப வார்த்தைகள் என்னுடைய தமிழ் ஐயாவின் குரல் வழியே வந்து என் செவிகளை நிறைத்தபோது பாரதிதாசன் மடியில் நான் உட்கார்ந்து கொண்டேன்.

பிறகு புதுக்கவிதைகளை வாசிக்க வாசிக்க அதன்மீது ஒருபிடிப்பு ஏற்பட்டது. அன்றைக்கு மிக முக்கியமான கவிஞர்களாக இருந்த மு.மேத்தா, நா.காமராசன், மீரா, கவிக்கோ அப்துல் ரகுமான் போன்ற வானம்பாடி கவிஞர்கள் அனைவரையும் வாசித்தேன். இவர்களில் கவிக்கோ அப்துல் ரகுமான் வாணியம்பாடியிலேயே அப்போது இருந்தார். அதற்கடுத்த தலைமுறையாய் அறிவுமணி, அறிவுமதி ஆகியோர்களின் கவிதைகள். தோல் பதனிடும் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு வந்த அறிவுமதி ஆம்பூர் வாணியம்பாடி பகுதிகளில் இயங்கியபோது அவருடன் இருந்தேன். அவரை மிதிவண்டியில் உட்கார வைத்துக்கொண்டு சென்றது இன்னும் நினைவிருக்கிறது. மற்றபடி நான் படித்த எல்லா நூல்களுமே என்னை எதோ ஒரு வகையில் பாதித்தவைதாம்.

மேற்குறிப்பிட்டிருக்கும் எழுத்தாளர்கள் அனைவரும் மூத்தவர்கள். வெவ்வேறு நிலப்பரப்பில் இருந்து இளந்தலைமுறையினரின் பன்முகக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருப்பதை அவதானிக்கிறீர்களா?

இவர்களுக்கு அடுத்த தலைமுறை ஆக்கவாளிகள் வெளிப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் சொல்முறைகளிலும் வெளிப்பாட்டுத்தன்மைகளிலும் புதிய கோணங்களும் வாழ்வியல்களும் நமக்குக் கிடைக்கின்றன. நிறைய இளைஞர்கள் கலைத்தன்மையைத் தாண்டி தலித் அரசியல் என்ற நிலையிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு முன்னோர்களாக என்.டி.ராஜ்குமார், விழி.பா, பாமா, சிவகாமி, அரங்க.மல்லிகா, அரசமுருகு பாண்டியன் தை.கந்தசாமி போன்றோர், எங்களோடு ஆதவன் தீட்சண்யா, அழகியபெரியவன், சுகிர்தராணி, தேன்மொழிதாஸ், உமாதேவி, வெண்ணிலவன் கொற்றவை, பாரதி நிவேதன், ஸ்டாலின் ராஜாங்கம், போன்றோர். எங்களுக்கு அடுத்து பச்சோந்தி, ரகசியன், விடுதலை சிகப்பி போன்றோர் தற்போது முதல் தொகுப்பினை வெளியிட்டிருக்கும் பல இளஞைர்கள் தலித் படைப்புக்களத்தில் இயங்குகிறார்கள் என்பது மிகவும் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று.

தற்போது எழுதும் பல இளைஞர்கள் கோபங்களோடும் பகடிகளோடும் தங்களின் நிலம் சார்ந்த வாழ்வுகளைப் படைப்புகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் தங்களை தலித் படைப்பாளிகளாக வெளிக்காட்டாமல் உதிரிகளாகவும் நவீனப் படைப்பாளிகளாகவும் இருக்கும் பல படைப்பாளிகள் காத்திரமான அரசியலை முன் வைக்கும் தன்மை உடையவர்களாகவும் இருக்கிறார்கள்.

காத்திரமான அரசியல் என்று எதைக் கருதுகிறீர்கள்?

தலித் அடையாளத்தை மறுப்பது அவர்களின் சுய விருப்பத்தின்பேரில்தான். ஆனால் இங்கு அடையாளமற்று இருக்கிறேன் என்று யாராலும் இருக்க முடியாது. பள்ளு பறையனுக்கெல்லாம் கவிதை வராது என்று சொன்ன பெருங்கவிஞர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்களின் அடையாளங்களை அவர்களின் வாக்குமூலங்களே காட்டிக்கொடுத்து விடும். இன்குலாப் ஐயாவின் அடையாளம் என்ன?

தன்னை தலித்தாய் அடையாளப்படுத்திக் கொள்வதை விடுதலையின் கோட்பாடாகப் பார்க்கிறேன். ஆனால், இந்த அடையாள மறுப்புச் செய்கிற அல்லது வேறு அடையாளங்களைச் சுமக்கிற தலித் எழுத்தாளர்கள் தலித் வாழ்க்கையைத்தான் எழுத முடியும். அவர்களை அடையாளப்படுத்த அவர்களின் படைப்புகள் போதும். அந்தப் படைப்புகள் சமூகத்தில் தொடர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன. தமிழுலகமே ஏறுதழுவத் தயாராகிக்கொண்டிருக்கும் போராட்டத்தில் செல்போன் வெளிச்சத்தில் மெரினா கடற்கரையே மூழ்கியபோது இமையத்தின் ‘நன்மாறன் கோட்டைக் கதை’ எல்லாவற்றையும் தகர்த்துவிட்டதல்லவா? அதுதான் தலித் படைப்பின் அரசியல்.

தமிழர் உணவுப் பண்பாட்டில் மாட்டுக்கறியின் முக்கியத்துவம் குறித்தும் மாட்டுக்கறிக்கும் உங்களுக்குமான உறவு குறித்தும்?

மாட்டுக்கறி தமிழரின் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றுதானே? சங்க இலக்கியத்தில் பக்தி இலக்கியத்தில் அதற்கான சான்றுகள் பல இருக்கின்றன. மாடு தெய்வம் என்று கற்பிக்கப்படுவதற்கு முன்பே மாட்டுக்கறி உணவாகத்தான் இருந்தது.

எனக்கும் மாட்டுக்கறிக்குமான உறவு தாய்ப்பாலுக்கும் எனக்குமான உறவுதான். மாட்டுக்கறி தோரணம் இல்லாத வீடு எங்கள் ஊரில் இல்லை. குழந்தைகளுக்கு வசும்பைத் தேய்ப்பார்கள் எங்களுக்கு வறுத்த கறியைத் தேய்த்தார்கள்.

தோல் தொழிற்சாலைகளில் கொழுப்பு நீக்குவது முக்கிய வேலை. அங்கே நீக்கப்பட்ட கொழுப்புகளை எடுத்துவந்து வறுத்துச் சாப்பிட்ட அனுபவங்களும் உண்டு. ஊரின் தொடக்கத்திலும் முடிவிலும் மாட்டுக்கறிக்கடைதான். போகும்போதும் வரும்போதும் எல்லார் சைக்கிள்களிலும் மாட்டுக்கறி பை தொங்கும். அது இல்லாமல் விற்பனைக்கு இருக்கும் மாட்டுக்கால் குழம்பு வறுத்த கறி இவையெல்லாம் எங்கள் ஊனாய் இருப்பவை. அதிகாலை 3.00 மணிவரை விழித்திருந்து கால் குழம்பு வாங்கிக் கொட்டம் கடிப்போம்.

புரட்சியாளர் அம்பேத்கர் கேஜிஎப்க்கு வந்தபோது கஸ்பா மக்கள் தொடர் ஓட்டமாய்ச் சென்று அவரைச் சந்தித்து வந்த அனுபவம் குறித்து?

கேஜிஎப் க்கும் ஆம்பூருக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. பேரணாம்பட்டு வழியாகக் காட்டுவழியில் கேஜிஎப்புக்குச் சென்றுவிடலாம். பல பேர் அந்தக் காலத்தில் கேஜிஎப் சுரங்கங்களில் வேலை செய்யச் சென்றிருக்கிறார்கள். அங்கிருக்கும் தலித் அரசியலின் தாக்கம் எங்கள் கஸ்பாவில் எப்போதும் இருக்கும். கேஜிஎப்பில் யார் எம்எல்ஏ வாக ஆனாலும் அவர்களுக்கு அடுத்த மாதத்திலேயே கஸ்பாவில் கூட்டம் இருக்கும். சி.எம் ஆறுமுகம், ராஜேந்திரன் போன்றவர்கள் நிறைய முறை கூட்டங்களுக்கு எங்கள் ஊர் வந்திருக்கின்றனர்.

இதன் பின்புலம்தான் புரட்சியாளரைச் சந்திக்கச் சென்ற சம்பவம். புரட்சியாளர் கேஜிஎப்க்கு வருகிறார் என்று அறிந்து கஸ்பாவில் அந்தக் காலத்தில் இருந்த இளைஞர்கள் தொடர் ஓட்டமாய்த் தீப்பந்தம் எடுத்து ஓடியிருக்கிறார்கள். ஆனால், அக்காலத்தில் அதற்கான பதிவுகள் ஏதுமில்லை. அந்தத் தொடர் ஓட்டத்தில் பங்குபெற்ற டைலர் மூர்த்தி என்னும் பெரியவரைச் சந்தித்து நான் உரையாடும்போது அவர் கூறிய செய்தி இது. “பாபாசாகேப்பையே பாத்தவன் நான்” என்று அவர் கூறும்போது அவர் கண்களில் தெரிந்த பெருமிதத்தை நான் உணர்ந்திருக்கிறேன்.

இந்தியாவில் விடுதலைப் போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களைவிட அதிகமான பேர் சாதியால் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று எதனடிப்படையில் சொல்கிறீர்கள்?

இந்தியச் சுதந்திரப் போரின் ஆண்டுகளின் கணக்கு 200 என்றால் சாதி ஒழிப்புப் போரின் ஆண்டுகளின் கணக்கு எவ்வளவு இருக்கும்? இன்றுவரை கொலைகள் நடந்துகொண்டேதானே இருக்கின்றன. கொலைகளுக்குப் பெயர்கள் மாறியிருக்கலாம். ஆனால் அத்தனையும் சாதிய பயங்கரவாதக் கொலைகள். இன்னும் ஆழமாகச் சொல்லப்போனால் உடல் கணக்கு மட்டுமல்ல உயிர்க் கணக்கை எடுத்துக்கொள்ளுங்கள்., இப்போது வேங்கைவயலில் மலம் கலக்கப்பட்ட தண்ணீரைக் குடித்தவர்கள் வாழ்பவர்களா? கொல்லப்பட்டவர்களா? நேற்று எம் வீட்டுக் குடத்தில் நான் பிடித்துவந்து என் குழந்தை குடித்துத் தாகம் தீர்த்துக்கொண்ட தண்ணீர் மலம் கலக்கப்பட்ட தண்ணீர் என அறியும் யாரேனும் கொண்டிருக்கும் மனநிலை வாழ்வதற்கானதா? சாவதற்கானதா? இப்படி இந்திய நிலமெங்கும் சாதி பயங்கரவாத இந்துச் சமூகத்தால் கொல்லப்பட்டவர்கள் கோடிக்கணக்கானவர்கள்.

‘ஆதிக்கச் சாதிகள்’ என்று சொல்லாமல் பிற்படுத்தப்பட்ட சாதி என்று தோழர் அருள்மொழி சொல்வதன் உளவியல் காரணமென்ன?

சிபி ராதாகிருஷ்ணன் ஆளுநரானதைப் பாராட்டும் ஆசிரியர் கி.வீரமணியின் மனநிலைதான் அது. தோழர் அருள்மொழிமீது நாம் அளவு கடந்த அன்பையும் மரியாதையையும் வைத்துள்ளோம். அவர்கள் இடஒதுக்கீட்டுப் பயனாளிகள் என்னும் அடிப்படையே அந்த மக்களுக்குத் தெரிவிக்காமல், எதோ தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் ஒன்றுதான் என்று சொல்வதுபோன்ற ஒரு தோற்றம்தான் தெரிகிறது. அவர்கள் இடஒதுக்கீட்டினை அனுபவித்தாலும் அவர்கள் ஊர்களில் வாழ்கிறவர்கள் நாங்கள் சேரிகளில் வாழ்கிறோம். எனவே, அவர்கள் ஆதிக்கச் சாதிகள்தாம். எனவே, அவர்களும் சாதி அமைப்பால் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தாமல் பிற்படுத்தப்பட்டவர்களாய்ப் பிரிப்பதால் அவர்களின் சாதி ஆணவம் கொடுவாட்களாகவும் துப்பாக்கிகளாகவும் அவர்களின் டி சர்ட்டுகளில் இருக்கிறது. எனவே, அவர்களையும் தாழ்த்தப்பட்டவர்களாக்கி இருவரையும் ஒன்றிணைக்கும் உளவியலே சரியானதாக இருக்கும் என நான் எண்ணுகிறேன்.

தலித் இலக்கியம் தேக்கமடைந்து விட்டது என்ற விமர்சனத்தையும் தலித் இலக்கியத்தின் சமகால இயங்கியலையும் பகிர முடியுமா?

தலித் இலக்கியம் தேக்கமடைந்து விட்டது என்று கூறுவது தட்டையான வாதம். எழுதப்படாத வாழ்க்கை இன்னும் அப்படியே இருக்கிறது. ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கியம் தேக்கமடைந்திருந்த காலத்தில் அதன் அடைப்பில் உடைப்பினை ஏற்படுத்தி இயங்க வைத்ததே தலித் இலக்கியம்தான். தலித் இலக்கியத்தின் மீதான விமர்சனப் பார்வைகள் எதுவும் இங்கே சரியானது இல்லை. தலித் அறிவுஜீவிகளே தங்கள் ஆய்வுகளை இன்னும் அயோத்திதாசரிலேதான் வைத்திருக்கின்றனர். இன்னும் அவ்வளவு செய்திகள் அங்கிருக்கின்றன. சமகால தலித் ஆக்கங்கள் குறித்த சரியான ஆய்வுகள் இதுவரை கல்விப்புலம் தவிர்த்து வரவில்லை. கல்விப்புலத்தில் செய்யப்பட்ட ஆய்வுகள்கூட மிகவும் மேலோட்டமானதாகவும், தலித் இலக்கியத்தின் கோட்பாடுகளை முழுமையாகக் கைக்கொள்ளாதவைகளாகவும்தான் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஸ்ரீதரகணேசன் அவர்களின் ‘சடையன்குளம்’ நாவல் குறித்து எந்த விமர்சகராவது ஏதாவது எழுதியிருக்கிறார்களா?

சமகாலத்திலும் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகள் தலித் ஆக்கவாளிகள்தான். அது கவிதை, சிறுகதை, நாவல் என எதை எடுத்துக்கொண்டாலும். ஒருவேளை அவர்கள் தங்களைத் தலித் ஆக்கவாளிகளாக அறிவித்துக்கொள்ளவில்லை என்றாலும் அவர்களின் ஆக்கங்கள் அனைத்தும் தலித் வாழ்வன்றி வேறொன்றுமில்லை.

தலித் இலக்கியம் பொது இலக்கியத்தில் தன்னைக் கரைத்துக்கொண்டுவிட்டது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளை விட இப்போது ஊடக வெளிச்சம் அதிகம். சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படும் விவாதங்களும் குறிப்புகளுமே இலக்கியங்கள் குறித்த கருத்தாடல்கள் ஆனபின்பு, மீண்டும் மீண்டும் ஜெயமோகன்கள் கொண்டாடப்படுகிறார்கள். அந்தச் சப்தத்தில் இன்றும் எழுதிக்கொண்டிருக்கும் புதிய தலித் எழுத்தாளர்கள் யாருக்கும் தெரிவதில்லை.

தற்போது வந்திருக்கும் நிறையத் தொகுப்புகளை என்னால் பட்டியலிட முடியும். ஆனால் அவற்றைப் பொதுச் சமூகத்தின் வாசகர்களோ விமர்சகர்களோ படித்திருக்க மாட்டார்கள் என்பதுதான் அப்பட்டமான உண்மை.

உங்களின் முதல் நூலான `இசையுதிர்காலம்’ வெளிவந்தபோது இலக்கியச் சூழல் எவ்வாறு இருந்தது?

ஹைக்கூ கவிதைகள் எங்கு பார்த்தாலும் பூத்துத் தொங்கிக்கொண்டிருந்த காலம். பாஷோ தமிழ்க் கவிஞர்களின் உதாரணமான நேரம். வண்ணத்துப்பூச்சியும் மலர்களும் கவிதைகளின் கருப்பொருள்களாக மாறித் தேய்ந்துகொண்டிருந்த நேரம், என்னுடைய இசையுதிர்காலம் அண்ணன் அறிவுமதி முன்னுரையோடு வந்தது.

வெறும் மூன்று வரிகளே ஹைக்கூ என அடையாளப்படுத்தப்பட்ட அந்தக் காலகட்டத்தில் அது முக்கியமான தொகுப்பாகக் கருதப்பட்டது. ஆனால், படிமங்கள் அதிகமாக இருக்கின்றன என்று விமர்சிக்கப்பட்டது. ஆனாலும் என்னுடைய முதல் நூலாக நான் கருதுவது `செவிப்பறை’ என்னும் கவிதைத் தொகுப்பைதான். அது ஆங்கிலத்திலும் வரவிருக்கிறது.

தென்றல், நிலாபாரதி ஆகிய புனைபெயர்களிலிருந்து யாழன் ஆதி ஆக உருமாற்றமடைந்தது எப்போது?

நான் பதினோராம் வகுப்புப் படிக்கும்போது என்னுடைய முதல் புனைபெயர் `திராவிடதாசன்’ என்பது. அதற்குப் பிறகு `தென்றல்’ என்னும் பெயரில் என்னுடைய இயற்பெயரோடு சேர்த்து எழுதினேன். ஊரில் நடக்கும் கவியரங்குகள், கல்யாண வாழ்த்து மடல்கள், இரங்கல் நோட்டீஸ்கள் என எழுதினேன். கொஞ்சம் வாசிப்பு அதிகமாகி, செல்வபாரதி, பழனிபாரதி போல நிலாபாரதி என்று வைத்துக்கொண்டேன். அப்பெயரில்தான் என்னுடைய முதல் கவிதை இதயம் பேசுகிறது இதழில் வெளியானது. நூலகரிடம் கேட்டு எடுத்துக்கொண்டு அன்றைக்கெல்லாம் நான் செய்த அலம்பல் எனக்கே இப்போது வெட்கமாக இருக்கிறது.

மனித உரிமை முரசு என்னும் இதழை திரு.புனித பாண்டியன் கொண்டுவந்தார். அதில் கடைசிப் பக்கத்தில் என்னுடைய இயற்பெயரான ‘பிரபு’ என்னும் பெயரிலேயே எழுதி வந்தேன். உயர்திரு மனிதனே, தனம் போன்ற கவிதைகள் அப்போது மிகவும் பரவலாகப் பேசப்பட்டன. அதன் பிறகு தலித் முரசு இதழிலும் அப்பெயரிலே தொடக்கத்தில் எழுதினேன். இதற்கிடையில் என்னுடைய பெயர் தமிழ்ப்பெயர் இல்லை என்று விமர்சனம் எழுந்தது. ஆதலால், யாழன் ஆதி என்று வைத்துக்கொண்டேன்.

அம்பேத்கரின் கருத்தியலை, எண்ணவோட்டத்தைப் பரவலாக்கியதில் தலித்முரசு இதழுக்கு மிக முக்கியப் பங்குண்டு. அவ்விதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய, முதல் பக்கக் கவிதை எழுதிய அனுபவங்கள் குறித்து?

ஆமாம், தலித் முரசு இதழ் ஒரு மிகப்பெரிய களம். அம்பேத்கரிய கருத்துகள் மட்டுமல்லாமல் சம காலத்தின் மிக முக்கிய தலித் அறிவுஜீவிகளின் தளமாக அது இருந்தது. தலித் முரசு இதழ் மட்டும்தான் அக்காலத்தில் தலித் பிரச்சினைகளை மிகச்சரியாக ஆவணப்படுத்தியது. இதழியல் நோக்கில் மிக நேர்த்தியானது. ஒரு எழுத்துப்பிழையுமின்றித் தேவையற்ற இடைவெளிகள் ஏதுமின்றி, வீணான செய்திகளின்றி வெளிவந்தது.

அதில் முதல் பக்கக் கவிதை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தந்த மாதத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள், அவற்றின் தேர்வு அதற்கான கவிதையை எழுதுதல், கவிதையில் நிகழும் மாற்றங்கள் என அந்தக் கவிதைகள் மிகவும் கவனத்துடன் எழுதப்பட்டவை. தலித் முரசு ஆசிரியர் திரு.புனித பாண்டியனை அவ்வளவு எளிதில் சமன்படுத்திவிட முடியாது. அதற்காக உணர்வுகளைக் குவித்து எழுத வேண்டும். என் படைப்பாக்கத்தில் அந்த ஆறு ஆண்டுகள் மிக முக்கியமானவை. அவற்றைத் தொகுத்து ஒரு நூலாகக் கொண்டுவர வேண்டும். உலக அளவில் அரசியல் பேசிய கவிதைகள் அவை. அரசியல் சார்ந்த கவிதைகளை அழகியலோடு சொல்ல எத்தனித்து எழுதப்பட்டவை.

`பிரச்சாரம் செய்கிறது’, `சத்தம் போடுகிறது’, `கவித்துவமும் அழகியலும் கைக்கூடவில்லை’ போன்ற விமர்சனங்கள் தலித் இலக்கியத்தின் மீது தொடர்ந்து வைக்கப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கலையின் பயன்பாடு மக்களுக்கானதுதான். வலியில் துடிப்பவர்கள், போரிட நினைக்கிறவர்கள், கோபத்தில் இருப்பவர்கள் அழகியலாக எப்படிக் கத்துவது? கலைத்தன்மை என்பது தேவைதான். சோற்றைவிட அழகானது எது? நாங்கள் சோற்றுக்குத்தான் கத்துகிறோம். ஆனால் இப்போது அதையெல்லாம் மிதித்துத் தாண்டிவிட்டோம். தலித் அழகியலோடுதான் படைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. பொதுச் சமூகம் கட்டமைத்த சத்தியம் சிவம் சுந்தரங்களை வீழ்த்தித் தலித் இலக்கியம் தனக்கான ஒரு தலைமையிடத்தைப் பெற்றிருக்கிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது. நவீனக் கவிதைகளில் பூடகமாகச் சொல்லப்பட்ட சாதி ஒழிப்பு, மதமறுப்பு, சமத்துவம் இது குறித்த படைப்புகள் பல இப்போது இருக்கின்றன. ஒருவேளை அவற்றைத் தலித் இலக்கிய வகைமைக்குள் அவர்கள் கொண்டுவரத் தயங்கினாலும் அதுதான் உண்மை.

`அய்ந்திணைகளில் அடங்கா

ஒரு கருப்பொருளில் நான் என்னைச்

சொல்ல விழைந்தால்

என் புண்களைத் தேர்ந்தெடுப்பேன்’

என்னும் இந்த வரிகளில் எங்கிருக்கிறது பிரச்சாரம்?

‘எல்லோரும் படித்துவிட்டு ‘ஜவுர்ஜெட்டா’ தான் இருக்கிறோம். ஆனாலும் கஸ்ப்பாவா என்று கேட்பதாக எழுதியிருக்கிறீர்கள். ஜவுர்ஜெட்டா என்பதின் அர்த்தமென்ன? கஸ்ப்பாவா என்று கேட்கும் இழிநிலையின் பின்னுள்ள உளவியலென்ன?

கஸ்பா என்றாலே இஸ்லாமியர்களால் சூழப்பட்ட பகுதி என்று பொருள். பல உருதுச் சொற்கள் எங்கள் வாழ்வில் கலந்தவை. ஆம்பூரில் அக்காலங்களில் இஸ்லாமியர் வீடுகளில் எங்கள் தாய்மார்கள் வேலை செய்வார்கள். அவர்களின் வீடுகளில் எல்லா இடங்களிலும் அவர்கள் புழங்குவார்கள். ஆகையால் ஏராளமான சொற்கள் எங்கள் வழக்கு மொழியில் கலந்திருக்கின்றன. ஏறக்குறைய என்ற சொல்லுக்கு ‘கம்மி ஜாஸ்தி’ என்று சொல்வார்கள். ‘பேஜாரா’ இருக்கு போன்ற சொற்கள். அப்படித்தான் ‘ஜவுர் ஜெட்’ என்ற சொல்லும். படித்து அழகாக உடை உடுத்தி, கல்லூரிக்குச் சென்று முதல் மதிப்பெண் எடுத்து அரசு வேலை வாங்கி ‘கௌரவமாக’, ‘ஜெண்டிலா’ என்றும் சொல்லலாம், வந்தாலும் அந்த ஒருவார்த்தையில் உளவியல்ரீதியாக எங்களை வீழ்த்துவார்கள். காவல் நிலையத்திற்குப் போனாலும், வீடு வாடகைக்குக் கேட்டாலும் ‘கஸ்ப்பாவா’ என்று இளக்காரத் தொனியுடன் அவர்கள் கேட்பார்கள். நாங்கள் ஆமாடா என்று அழுத்திச் சொல்வோம், அஞ்ச மாட்டோம், அடிப்போம். ஆனாலும் அந்தக் கவிதையில் நான் சொன்னது அப்படிக் கேட்கும் சாதிய மனநிலைதான். அது இன்றுவரையும் இருக்கிறது, குறைந்தபட்சம் அவர்களின் மனதிற்குள்ளாவது அந்தச் சொல் சப்தமிட்டுக்கொண்டே இருக்கிறது. ஆதிக்கத்தின் எந்த மென்னியையும் பிடித்து நாங்கள் இறுக்குவோம்.

ஊருக்குச் செல்லும் எல்லா மகள்களுக்கும் வறுத்த கறி கொடுக்கிறார்கள். பாட்டி வீட்டிற்குச் சென்ற பெண்ணை முட்டி எலும்பு என்று கேலி செய்கிறார் ரேணுமாமா. கெங்கம்மா தேரன்று மாவிளக்கில் திரியேற்றி நீ வருகையில் மாடு வெட்டிய ரத்தச் சொட்டுகள், மாட்டுச்சவ்வை கொட்டாங்காச்சியில் மூடி இறுக்கி வெயிலில் காய வைத்திருக்கிறேன் இப்படி ஊர்த்திருவிழா, விளையாட்டு, கேலி கிண்டல் என வாழ்வின் அத்தனை தருணங்களிலும் மாடு இடம்பெறும் பண்பாட்டுச் சூழலைக் கொஞ்சம் விவரிக்க முடியுமா?

எங்கள் பாண்பாட்டின் வேரே மாட்டுக்கறிதான். தலித்துகளின் வாழ்வோடு அது கலந்தது. கறியற்ற ஒரு நாள் எங்களிடமில்லை. சில நிகழ்வுகளுக்குக் கறிபோடாமல் விருந்து வைப்பார்கள். விருந்துக்குச் செல்வதற்கு முன் அண்ணன்கள் கறியா இல்லையா பாரு என்பார்கள். இல்லை என்றவுடன் உடனே காசு கொடுத்துப் போய் வறுத்த கறி வாங்கிடு என்பார்கள். இலைபோட்டுச் சோறு போட்டவுடன் ஆளாளுக்குக் கையில் இருக்கும் வறுத்த கறியைச் சோற்றில் உள்ளே மறைத்து விடுவார்கள். மேலே குழம்பு ஊற்றிப் பிசைய உள்ளிருக்கும் வறுத்த கறி விருந்தின் தன்மையை மாற்றிவிடும், இப்படிப் பல நிகழ்ச்சிகளைச் சொல்ல முடியும். அமெரிக்காவில் இருக்கும் மருமகளுக்கும் இங்கிருந்து நாங்கள் வறுத்தகறியைக் கொடுத்தனுப்புவோம். அதனால் பெரிய பெரிய எலும்புத் துண்டங்கள் விழுந்து கிடக்கும் எங்கள் பகுதிக்கு வரும் வேற்று ஊர் உறவினர்கள் எங்களைப் பார்த்து ‘முட்டி எலும்பு’ என்று கேலி செய்வார்கள். நாங்கள் மாடூறி வாழ்பவர்கள்.

`மாடூறி’ என்பதன் அர்த்தமென்ன?

தமிழர்களின் வாழ்வில் மாடு என்பது உணவாக மட்டுமல்ல. வாழ்வாகவும் இருந்திருக்கிறது. சங்க இலக்கியத்தில் பல பாடல்களுக்கு மாடு பாடுபொருளாக இருந்திருக்கிறது. தினந்தோறும் வாழ்வில் மாடற்றவர்கள் யாருமிருக்க முடியாது. குறிப்பாக தலித்துகளின் உணவில் மாட்டுக்கறி என்பது பசி நீக்கும் உணவாக மட்டுமல்லாமல் பண்பாட்டு விழுமியமாகவும் மாறிப் போர்க்கருவியாகவும் ஆகிவிடுகிறது. ஆடு, மாடு, கோழி பலியிடுவதைத் தடைச் செய்யும் சட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா கொண்டுவந்தபோது ஆம்பூரில் நடு பஜாரில் மேடையமைத்து நாங்கள் மாட்டுக்கறி உண்ணும் போராட்டத்தை நடத்தினோம். என் வாழ்க்கை என்பது மாடூறிய வாழ்க்கைதான்.

அம்பேத்கர், அரசமரம், வறுத்த கறி, தேர் ஆகியவை கஸ்பா கவிதை நூல் முழுக்க விரவியிருக்கின்றனவே!

ஆமாம் அவைதாம் எங்கள் நிலத்தின் வரையறை. அம்பேத்கர் சிலை, அதனடியில்தான் எங்கள் படிப்பு, கல்யாணம், கூட்டம், சண்டைகள், மரணங்கள், திருவிழாக்கள் என எல்லாம். அதற்கெதிரே ஓர் அரச மரம். எங்கள் பகுதியின் ஆதித்தாய். அதன் நிழலில்தான் நாங்கள்.

வறுத்த கறி எங்கள் உணவின் அடையாளம், தேர் எங்கள் சுயமரியாதை.

ஊர்த்தொடக்கத்திலே மாட்டுக்கறிக் கடை, தெருவெல்லாம் மாட்டுக்கறித் தோரணம், வழியெல்லாம் கடிச்சித் துப்பிய மாட்டெலும்பு, தெருவின் முனைக்கு முனை வறுத்த கறி, இவற்றைக் கண்டு அப்போது சேரிப்பக்கம் வராமல் வேறு வழியில் சென்ற சாதிப் பொண்ணுங்க இப்போது மாட்டுத்தோலு ஷூ பேக்டரியில் வேலை செய்வதாகச் சொல்கிறீர்கள், தோலையும் மனிதர்களையும் ஒன்றுசேர்த்த பொருளாதாரம் மனிதனையும் மனிதனையும் ஒன்றுசேர்த்துள்ளதா? சேரியும் ஊரும் அங்கு எவ்வாறு உள்ளது?

வழக்கமாய்ப் பிரிந்தே உள்ளது. பெரும்பாலும் ஜாதிச் சண்டைகள் இல்லை. ஆனால் அரசியல் தொழில் சார்ந்து சாதி தன் இயங்குதளத்தைக் கட்டமைத்துக்கொண்டிருக்கிறது. பொருளாதார மாற்றங்கள் வாழ்வியல் தேவைகளைப் பூர்த்திச் செய்திருக்கின்றன. ஆனால், சமூகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. இப்போதுகூட உங்களால் சாதி இந்துக்கள் வாழும் பகுதிகளில் வீடு வாடகைக்குப் போக முடியாது. அன்றைக்குத் தோல் தொழில் தீண்டத்தகாதது. இன்றைக்குத் தொழிற்நுட்பம் வளர்ந்த பிறகு யாவருக்குமானது. ஆனால் மக்கள் மாறவில்லை. புறவாழ்வில் ஒரு நகரத்திற்கான மாறுதல்கள் இருக்கலாம். ஆனால் சாதிய அகவாழ்வில் அப்படி எந்தவொரு மாற்றத்தையும் காண முடியாது.

பொருளாதார மாற்றங்களினால் சாதியச் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை நீக்க முடியாது என்பது இந்தியச் சமுக அமைப்பில் நமக்குத் தெரிந்ததுதானே. நீங்கள் இல்லாமல் எதுவுமில்லை என்ற நிலையை நீங்கள் உருவாக்கினால் ஒழிய நீங்கள் எங்கேயும் சேர்க்கப்பட மாட்டீர்கள் என்பதுதான் அப்பட்டமான உண்மை. அதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. மற்றவர்களுக்கு மிக எளிமையாகக் கிடைப்பது தலித்துகளுக்குக் கடும் உழைப்பிற்குப் பின்பே கிடைக்கிறது.

`மற்றவர்களுக்கு மிக எளிமையாகக் கிடைக்கிறது’ என்று எவற்றைச் சொல்கிறீர்கள்? `தலித்துகளுக்குக் கடும் உழைப்பிற்குப் பின்பே கிடைக்கிறது’ என்பது தலித் அல்லாதவர்களின் உழைப்பைக் கேள்விக்குள்ளாக்குவதாகாதா?

நான் உழைப்பைச் சொல்லவில்லை. சமூக அங்கீகாரத்தைச் சொல்கிறேன். மற்றவர்களுக்குச் சமூக முதலீடு என்று ஒன்று இருக்கிறது. தலித்துகளுக்கு அது கிடையாது. ஒரு தலித் நவீன வசதிகளோடு ஓர் உணவுக்கடை நடத்துகிறார், ஒரு சாதி இந்து எந்த வசதியுமின்றி ஓர் உணவுக்கடை நடத்துகிறார் எனின், வணிகம் யாருக்கு நடக்குமென்றால் சாதி இந்துவுக்குத்தான் நடக்கும். ஏனென்றால் சாதிய மனம்தான்.

பொது வெளிகளில் ஓர் இலக்கியவாதிக்குக் கிடைக்கும் எந்த அங்கீகாரமும் தன்னைத் தலித் இலக்கியவாதி என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் இலக்கியவாதிக்குக் கிடைக்காது. பல்கலைக்கழகங்களில் சமூகநீதியில் அக்கறை கொண்டவர்கள் பொறுப்புகளில் இருந்தால்தான் தலித் இலக்கியவாதிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். பொதுவான ஓர் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு மற்றவர்களைவிடத் தலித்துகள் அதிக மெனக்கெட வேண்டியிருக்கிறது என்று அதனால்தான் சொல்கிறேன். திரைப்படத்துறையிலும் இதற்கு எடுத்துக்காட்டுகளை என்னால் தர இயலும்.

தனிமைச் சூழல்கள் என்னை நொறுக்கிய காலங்களில் எழுதிய நூல் ‘போதலின் தனிமை’ என்று சொல்லியிருக்கிறீர்கள். அத்தனிமைச் சூழலும் அது உண்டாக்கிய சிதைவும் எத்தகையன? காலப் போக்கில் அவை என்னவாக எஞ்சியிருக்கின்றன?

ஒவ்வொரு மனிதரின் தனி வாழ்க்கையில் அவருக்கான தனிமனித ஆற்றாமைகள் இருக்கத்தானே செய்யும். நான் மனிதர் என்ற சொல்லில் பெண்களையும் உள்ளடக்கித்தான் பேசுகிறேன். சமூகத் துயரைத் தன் துயராக மாற்றிக் கொள்ளலாம். ஆனால் தன் துயரைச் சமூகத் துயராக மாற்ற முடியாது. நான் என் படிப்பை முடித்த காலத்தில் ஜெயலலிதாவின் பத்தாண்டு ஆட்சிக்காலத்தில் வேலை நியமனத் தடைச் சட்டம் போட்டார்கள். அதனால் ஒரு பத்தாண்டு என் வாழ்நாளில் வீணாய்ப் போனது. ஒரு தனியார் பள்ளியில் மிகக் குறைந்த சம்பளத்தில் ஆசிரியராகப் பணியாற்றினேன். அந்தப் பொருளாதார நசிவு மிகக் கொடுமையானது. நான் தனித்துவிடப்பட்ட கையறு நிலைகள் என் வாழ்வில் ஏராளம். மனரீதியிலான தளர்வுகள் வந்து என்னில் குடியேறி வாழ்ந்த காலங்கள் அதிகம். அப்போதெல்லாம் வாசிப்பும் இசையும்தான் என்னுடன் இருந்தன. இன்றைக்கும்.

இசை நிரம்பிய அறை சில நேரங்களில் மௌனமாகிவிடுகின்ற நொடிகள் மிகவும் பயமுறுத்தக்கூடியனவாக இருக்கும். யாருமற்ற சூழலில் இருக்கிறோமோ என்று கண்கள் சுழலும். அப்போது எழுத்தில்தான் என்னைக் கரைத்துக்கொண்டேன். அவமானங்கள் சூழ்ந்தபோது அவற்றை எதிர்த்து நிற்கும் மனதிடத்தை எழுத்தும் வாசிப்பும் எனக்குத் தருகின்றன. வேலையில்லாமல் தவித்த காலங்கள், அகவாழ்வில் ஏற்பட்ட துயர வெளிகள், என அலைவுற்ற காலங்கள், நோய்மையில் தவித்த நாட்கள் என எல்லாவற்றையும் கடந்து வந்திருக்கிறேன். தலித்துகள் மட்டுமல்ல எல்லா மனிதர்களும் கடக்க வேண்டிய கட்டாயங்கள்தாம் அவை.

நோய்மையில் தவித்ததாகக் கூறுகிறீர்கள். வேலூர் நிகழ்வு ஒன்றில் உங்களைச் சந்திக்கும் போது முகங்களில் தடித்த புண்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அது என்ன வகை நோய், எவ்விதமான பாதிப்புகளை உண்டாக்கியது. அதிலிருந்து எப்படி மீண்டு வந்தீர்கள்?

எனக்கு ஆட்டோ இம்யூன் டிஸார்டர் (autoimmune disorder),  அதில் பெம்பிகஸ் என்னும் நோய் வந்தது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் அது நமக்கு எதிராக வேலை செய்யும். அப்படித்தான் என் தோலை அது பாதித்தது. உடல் முழுக்கப் புண்கள், பேண்டேஜே ஒரு படுக்கையைப் போல் என்னுடல் முழுக்கச் சுற்றி இருப்பார்கள். மிகக்கொடுமையான காலமது, மனமும் உடலும் சிதைந்துபோன நேரம். நான்கு ஆண்டுகள் மிகவும் துன்பப்பட்டேன். இப்போது நலமாகி விட்டேன். ஸ்டீராய்டு எடுப்பதால் உடல்பருமன் ஏற்பட்டு விட்டது. வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் 40 நாட்கள் இருந்தேன். நான் மீள்வதற்கான அனைத்துச் சாத்தியங்களையும் ஏற்படுத்தித் தந்த என் இல்வாழ்க்கை இணையர் கீதா அவர்களுக்கு எப்போதும் நான் நன்றியுடைவயவன். நான் உடல் நலமற்று இருந்த காலங்களில் எனக்காக உருகிய அனைவருக்கும் என் பேரன்பு.

குட்டித்திண்ணையில் அவள் தின்னத் தந்த மாட்டுக்கறி உருண்டையும், அவள் இதழ்களும் கலந்த சுவையை இன்னும்கூடவா எங்கும் கண்டதில்லை?

அய்யோ. எங்கள் ஊரின் சின்னச் சின்ன இருட்டுகளும் சிறிய சந்துகளும் திண்ணைகளும் காதலின் சங்கமங்கள் அரங்கேறும் இடங்கள். இரவுச் சாப்பாட்டுக்குத் தொட்டுக்கொள்ள வறுத்த கறி வாங்க அவள் வருவாள், அதே கடைக்கு அவனும் வருவான். இருவரும் வாங்கிய கறியிலிருந்து ஒன்றையெடுத்து இன்னொருவருக்கு ஊட்ட அந்தச் சின்ன இருளில் மின்னலடித்துப் போகும். அவள் வாசனையும் கறி வாசனையும் கலந்து அவன் அடிவயிற்றில் உருவாக்கிய அந்தக் கலக்கம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.

`காதல்’ என்றால் உங்களின் நினைவுக்கு வருவது?

காதல் என்றால் என் நினைவுக்கு வருவது என் காதல்கள்தாம். அதைப் போன்றதோர் அருமையான உணர்வு ஏதுமில்லை. காதலில்லாமல் என் ஒரு நாளுமில்லை. என்னுடைய ‘தொலைதலின் இரகசியங்கள் அடர்ந்த காடு’ தொகுப்பு முழுதும் காதல் கவிதைகளாலானது. ஆனால் எனக்கு இப்போது இளவரசன் நினைவுக்கு வருகிறான்.

உடன்போக்கு சென்றுவிட்ட வகுப்புத் தோழியை மிதிவண்டியில் தேடிச்சென்ற அப்பா, பாலூருக்குப் பக்கத்தில் தாகமெடுத்துத் தண்ணீர் கேட்கப் பளபளத்த பித்தளைச் செம்பில் நீரெடுத்து வந்த மஞ்சள் நிறப்பெண், “ என்ன வர்ணம்” என்கிறாள். பறையரென்றால் தண்ணீர் கிடைக்காதென்று “கிறிஸ்தவங்கோ” என்கிறார் அப்பா. எல்லாம் அந்த பறபாடுங்கதான் கைய நீட்டுங்க என்று அவள் சொல்ல தண்ணீர் குடிக்காமல் தாகத்தோடு திரும்பியிருக்கிறார்கள், தீராத அதே தாகத்தோடுதான் அலைகிறேன் என்று நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். கிறிஸ்தவர் என்றாலே பறையர் என்ற கருத்து எப்படி உருவானது? தாகம் எப்போது தீரும்?

அது ஓர் உண்மையான நிகழ்ச்சி. இறுதிவரிகள் மட்டும் நான் சேர்த்தது. எங்களூரைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் சாதி இந்துக்கள் அதிகம். வடாற்காடு மாவட்டத்தில் அந்தக் காலத்தில் கிறித்தவர்கள் என்றாலே தலித்துகள்தாம். வேறு யாரும் கிறித்தவ மதத்திற்கு மாறவில்லை. தென் மாவட்டங்களில் இருப்பதைப் போல நாடார் கிறித்தவர்களோ, வன்னியர் கிறித்தவர்களோ இங்கில்லை. இந்தப் பகுதியில் வந்து மக்கள் பணியையும் சுவிசேஷப் பணியையும் லுத்தரன் திருச்சபையினர் செய்தார்கள். பல பள்ளிகள், விடுதிகள், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், மருத்துவமனைகள் என அவர்களினால்தான் தலித்துகள் படித்தார்கள்.

ஒவ்வொரு தலித் குடியிருப்பிலும் ஒரு லுத்ரன் ஆரம்பப்பள்ளி இருக்கும். அங்கு ஆரம்பக் கல்வியைப் படித்தவர்கள் நேராக ஆம்பூரில் இருக்கும் கன்கார்டியா மேல்நிலைப் பள்ளிக்கு வருவார்கள். திரு புனித பாண்டியன், திரு.அழகிய பெரியவன் போன்றவர்களெல்லாம் அந்தப் பள்ளியில்தான் படித்தார்கள். இந்துப் பள்ளியிலோ, இஸ்லாமியப் பள்ளியிலோ அவர்களுக்கு அவ்வளவு எளிதாக இடம் கிடைக்காது. ஆனால், இங்கு அவர்களை வாரி அணைத்துச் சேர்த்துக்கொள்வார்கள், அதனால்தான் கிறிஸ்தவர் என்றாலே தலித்துகள் என்று கருதும் உளவியல் தோன்றியது. என் அப்பாவுக்குத் தீராத தாகம் எனக்குத் தீர்ந்திருக்கிறது. ஏனென்றால் நான் ஒரு பௌத்தன். அம்பேத்கர் வழியில் பௌத்த மார்க்கத்தை அடைந்தவன். என்னை சாதியால் எவனாலும் வீழ்த்த முடியாது.

வடாற்காடு மாவட்டத்தில் கிறித்தவர்கள் என்றாலே தலித்துகள்தான் என்பது சரி. ஆனால், தலித்துகள் என்கிற பொதுத் தன்மையின்றிக் கிறித்தவங்க என்றதும் அந்தப் பெண் பறையர்தான் என்று அழுத்தமாகச் சொல்ல என்ன காரணம்?

அவர்களுக்குத் தீண்டத்தகாதார் என்றாலே பறையர்கள் என்றுதான் தெரியும். அப்போது தலித் என்ற பொதுச்சொல் இல்லை. எங்கள் மாவட்டத்தில் பெரும்பாலும் பறையர்கள். பிற பிரிவினர் மிகச் சொற்பம். அதுவும் அந்தக் காலத்தில் உடனடியாகச் சமூகமாற்றத்திற்காக கிறித்தவத்திற்கு மாறியவர்கள் அவர்கள்தாம். ஆகவேதான் பொது உளவியலாக அந்தப் பெண் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்.

புத்தர் படத்துடன் படித்தும் உழைத்தும் புரட்சியாளர் அம்பேத்கரை உள்வாங்கிப் பேசும் கஸ்பாவின் இளைய தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் என்று கஸ்பா கவிதை நூலினைச் சமர்ப்பணம் செய்திருக்கிறீர்கள். முதன்முதலில் அம்பேத்கரை எப்போது வாசித்தீர்கள் அவரின் சிந்தனை, தத்துவம், உங்கள் வாழ்வில், இலக்கியப் பயணத்தில் என்னவிதமான தாக்கங்களைச் செலுத்தின?

நாங்கள் குழந்தைகளாக இருக்கும்போது எங்களுக்கு அம்பேத்கர் அறிமுகம். நான் பத்தாம் வகுப்புப் படிக்கும்போதே அம்பேத்கர் மன்ற மேடைகளில் பேசுவேன். அம்மாவும் அப்பாவும் வந்து கேட்பார்கள். ஆனால் 90இல் புரட்சியாளர் அம்பேத்கர் நூற்றாண்டு ஊர்வலம் நடத்தினோம். மிகப்பெரிய ஊர்வலம். அந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பலர் கலந்துகொண்டார்கள். இந்துத்துவச் சக்திகளை எதிர்த்து முழக்கமிட்டு, மிக பிரமாண்டமாகச் சென்ற அந்த ஊர்வலத்தின் இடையில் ஏற்பட்ட கலவரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவரைப் பலிகொடுத்தோம். நானும் தம்பியும் காயமடைந்தோம். காவல்துறையின் அடக்குமுறைகளுக்குப் பயந்து பதுங்கியிருந்தோம். அதன்பிறகு மிகத்தீவிரமான தலித் இயக்கவாதியாக என்னை மாற்றிக்கொண்டேன். பிறகு தலித் முரசு இதழின் ஆசிரியர் புனித பாண்டியன் அவர்களுடன் நிகழ்ந்த உரையாடல்கள், தலித் தலைவர்களின் பேச்சுகள் என அம்பேத்கரிய இலக்கியம் வாசிக்க வாசிக்க எனக்குள் பெரும் வியப்பையும் தைரியத்தையும் தந்தது. அதனால், என்னுடைய கவிதைப் போக்கும் மாறியது. என் எழுத்துகளுக்கு வன்மையும் வார்ப்பும் அம்பேத்கரிடமிருந்தே கிடைத்தன.

தலித் முரசு இதழின் ஆசிரியர் புனிதபாண்டியனுக்கும் உங்களுக்குமான உறவைப் பற்றியும் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விசயங்கள் குறித்தும்…

திரு.புனித பாண்டியன் எங்களுக்குப் பக்கத்து வீடு. கல்வியால் செழித்த குடும்பம் அவருடையது. ஒழுக்கம், தூய்மை, அறிவு ஆகியவற்றில் எங்கள் பகுதியில் அவர்கள் ஒரு எடுத்துக்காட்டு. புனிதண்ணனப் பாரு எப்படிப் படிக்கிறாரு, அவர மாதிரி படிக்கணும் என்று என் அம்மா என்னை அடிக்கும்போதெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். எப்படியாவது தினமும் அடிவாங்குவேன். தினமும் அவரை எங்களுக்கு எடுத்துக்காட்டிக்கொண்டே இருப்பார்கள். அப்படித்தான் எனக்கு அண்ணனாகி இன்றுவரை என் எல்லா நல்லது கெட்டதுகளிலும் அவரின் வழிகாட்டுதல் இல்லாமல் நானில்லை. நான் கவிதை எழுதுவதைக் கண்டுபிடித்து, ஈழப்போரின்போது பல கவிதைகளை அண்ணன் வெளியிட்டிருக்கிறார். பிறகு தொடர்ந்து இதழியல் பணிக்கு வந்தார். எனக்குமான வாசலை அவர் அகலத்திறந்து வைத்தார்.

அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது. அம்பேத்கரை வாசிப்பதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். ஆழப்படிப்பார். விவாதிப்பார். கொள்கையளவில் எந்தச் சமரசத்தையும் யாரிடமும் செய்து கொள்ளாமையை அவரிடம் கற்றுக்கொண்டேன். எடுத்துக்கொண்ட பணியில் Perfection என்பது அவரிடம் பெற்றதுதான். தன்னை முன்னிறுத்தாத தலைமை என்று தலைவர் திருமா கூறுவார். அதுபோல இத்தனை ஆண்டுகால தலித் முரசு இதழில் தன் படம் வராமல் பார்த்துக்கொள்வார். தலித் முரசு விருது வாங்கியபோது கூட விருதின் படம் போட்டாரே தவிர அவரைப் போடவில்லை. எனவே, புகழுக்காக இறங்காமை அவரிடம் நான் கற்றுக்கொண்டது. நோய்வாய்ப்பட்ட போது எனக்காக அவர் அடைந்த மனத்துயரத்தை நானறிவேன், பல முயற்சிகளை அவர் எடுத்துக்கொண்டார். சில நேரங்களில் நான் அவர் பேச்சைக் கேட்பதில்லை என்ற குற்ற உணர்ச்சி எனக்கு உண்டு.

தலித் முரசு இடையில் ஏன் நின்றுவிட்டது? அவ்விதழ் நின்று போனதற்குப் பொருளாதாரப் பற்றாக்குறை மட்டுமல்லாது தலித்துகளுக்கிடையேயான உட்சாதி முரண் முக்கியக் காரணம் என்கிற கருத்து பொதுவெளியில் பரவுகிறதே!

தலித் முரசு பொருளாதாரப் பற்றாக்குறையால்தான் நின்றுபோனது. சந்தாக்கள் சரியாக வராமை, இதழ்விற்றுப் பணம் தராமை, அச்சகத்தில் பெருகிய நிலுவைத் தொகை என வளர்ந்த பொருளாதாரக் காரணங்களே ஒழிய உட்சாதிக் காரணங்கள் என்று எதுவுமில்லை. ஏனென்றால், சாதி ஒழிப்பிற்கான இதழாகத்தான் அது இருந்தது, உட்சாதி வளர்ப்புக்கோ அல்லது முனைப்பிற்கோ கொஞ்சமும் அங்கே இடமில்லை. தலித் என்னும் ஓர்மையில் அனைவரும் இணைந்த ஓர் உரிமைக் களத்தைத்தான் தலித் முரசு உருவாக்கியிருந்தது. அதன் ஆசிரியருக்கோ ஆசிரியர் குழுவில் இருந்தவர்களுக்கோ அத்தகு எண்ணம் கிஞ்சிற்றும் இல்லை என்பதை உள்ளபடியே நானறிவேன். ஆனால் வெளியில் இருப்பவர்கள் அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்பக் கருத்துருவாக்கங்களைச் செய்து வைத்தனர்.

வருங்காலத்தில் தலித் முரசினை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் தலித் முரசு உட்சாதிக் கூறுகளற்றது என்று ஆய்வு செய்து எழுதுவார்கள்.

தலித் தலைவர்களின் பெயர்களையும் அவர்களின் ஆளுமைகளையும் தெரிந்துகொள்ளலாமா?

மிக நீண்ட இயக்கப் பின்புலம் எனக்கு உண்டு. எங்கள் ஊரில் நடந்த எல்லா அம்பேத்கரியக் கூட்டங்களிலும் நான் பங்கேற்றிருக்கிறேன். ஜி.மூர்த்தி, செ.கு. தமிழரசன்,

பெ.சந்திர சேகரனார், அம்பேத்கர் பிரியன் போன்ற

தலைவர்களுடன் பணியாற்றியிருக்கிறேன். இரண்டா-

யிரங்களின் தொடக்கத்திலேயே நான் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தில் பணியாற்றத் தொடங்கினேன். தலைவர் திருமாவின் உரைகள் இன்றுவரை என்னைக் கற்கவும் இயங்கவும் வைத்திருக்கின்றன.

நான் தலித்தல்ல என் எழுத்தும் தலித் அல்ல. என்கிற அடையாள மறுப்பு மிகத்திட்டமிட்டே மறுக்கும் சூழலில், கஸ்பா கவிதைத் தொகுப்பின் உப தலைப்பாக `தலித் கவிதைகள்’ என்று அறிவிக்கிறீர்களே!

அடையாள மறுப்பு என்பது அவரவரின் விருப்பம். புறத்தோற்றங்களில் அவர்கள் தங்களுக்கான வேறு அடையாளங்களை வெளிப்படுத்தலாம். ஆனால், நான் தலித் அல்ல என்று அறிவித்துக்கொள்ளும் தலித் எழுத்தாளர்கள் பார்ப்பன வாழ்வை எழுதுவதில்லை. அவர்கள் தலித் வாழ்வினைத்தான் எழுத முடியும். அந்தப் படைப்பின் எந்த இடத்திலாவது அல்லது ஒரு சொல்லாவது அவர்களை தலித் என்று அடையாளப்படுத்தி விடும். அதேபோல்தான் நூறு நாற்காலி அல்லது வெள்ளையானையை நீங்கள் தலித் படைப்பாக அடையாளப்படுத்த முடியாது. தலித் பாத்திரங்களைக் கொண்ட படைப்பாக வேண்டுமென்றால் நீங்கள் பார்க்கலாம். ஆனால் அடையாள மறுப்புச் செய்யும் தலித் எழுத்தாளர்களின் படைப்புகள் தலித் படைப்புகளாகும் சாத்தியங்கள் நூறு விழுக்காடு உண்டு.

நான் என்னைத் தலித் கவிஞனாகவே அடையாளப்படுத்திக்கொள்வேன். அதனால் எதுவும் எனக்குக் கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை. மற்றவர்கள் புகழ வேண்டும் அல்லது ஆக்கங்களுக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒருபோதும் பின் வாங்க மாட்டேன்.

“சீன, ஜப்பான் மொழியில் இருந்து மொழிபெயர்ப்பு ஜென் கவிதை நூல்கள் நிறைய வெளிவந்திருக்கின்றன. ஆனால், தமிழில் வெளியாகியிருக்கும் முதல் அசலான ஜென் கவிதைத் தொகுப்பு நான் எழுதிய `காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும்’ தான்’’ என்று சொல்கிறீர்கள். சி.மணி, ஆனந்த், தேவதச்சன், எம்.யுவன், நரன் ஆகியோர் ஜென் கவிதைகள் எழுதியிருக்கும் போது முதல் தொகுப்பாக உங்களின் கவிதை நூலை முன்வைப்பது எதன் அடிப்படையில் என்று தெரிந்துகொள்ளலாமா?

நீங்கள் சொன்னவர்கள் எல்லாம் ஜென் கவிதைகளை, கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர்கள். அவர்களை நான் வாசித்திருக்கிறேன். யுவனின் பெயரற்ற யாத்ரீகன் மொழிபெயர்ப்பு, நரன் சில கவிதைகளை எழுதினார். ஆனால் தனியான தொகுப்பாக வரவில்லை என்றே கருதுகிறேன்.

உடைவுண்ட

மணிநாவைப் போல

அமைதியின் கூர்மையை வரைதல்

வெளியெங்கும் பிரதிபலிக்கும்

நிர்வாணத்தின் மேனியை அடைதல்.

இது என்னுடைய ஜென் கவிதை. நிர்வாணம் என்பது துக்க நிவாரணம், அமைதி என்பது எல்லாப் பற்றுகளையும் துறந்த நிலை, உடைந்த மணி நா, ஆசைகள் அறுத்த மனம். இதுதான் அவர்களுக்கும் எனக்குமான வேறுபாடு. நான் நேரிடையாகப் பௌத்தன். ஜென் தத்துவ மரபை அதன் உள்ளார்ந்த தன்மையோடு என் வாழ்க்கையாக்கிக் கொண்டவன். ஜென்னின் மூலமான பௌத்தத்தை என் வாழ்நெறியாகக் கொண்டிருப்பவன். எனக்குள் அது ஏற்படுத்திய ஆழமான பாதிப்புகளின் பிரதிபலிப்பாக நான் எழுதியவைதான் `காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும்.’

இயற்பியலுக்கும் பௌத்தத்திற்குமான பல ஒருமைகள் இருக்கின்றன. அதன் அடிப்படையில் இயங்கியலும் ஜென்னும் எப்படி இணைகின்றன என்னும் புள்ளியிலிருந்து எழுந்தவைதாம் அவை. அந்த வகையில் தமிழில் வந்த முதல் ஜென் கவிதைத் தொகுப்பு என்னுடையதுதான். இந்த நூலை வெளியிட்ட தோழர்கள் கருப்புப் பிரதிகள் அமுதாவையும் நீலகண்டனையும் நன்றியுடன் நினைக்கிறேன்.

இரண்டாயிம், மூவாயிரம் ஆண்டுக் கவிதை மரபு கொண்ட தமிழ் மொழியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கவிதைத் தொகுப்பைப் பதிப்பிக்கப் பதிப்பகங்கள் முன்வராத சூழல் நிலவியது. தற்போது மாற்றம் நடந்திருப்பினும் கவிதை, கவிஞன் என்றாலே ஒவ்வாத்தன்மை நிலவுகிறது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள். கவிதையைப் பற்றி உங்கள் பார்வை என்ன?

தமிழ்ப்பதிப்புச் சூழல் வணிகமயமானதுதான் அதற்குக் காரணம். கவிதை என்பது மொழியின் செம்மை வெளிப்பாடு. அதற்கான வாசகர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள். புரிதல் – புரிதலின்மை என்னும் இருமைக்குள் கவிதை இன்றும் தவிக்கிறது. இந்த நிலையில் புத்தக வணிகள் கார்ப்பரேட் ஆனபிறகு, விற்காத பொருளை யார் உற்பத்தி செய்வார்கள். ஆனால், மொழியின் ஆகச்சிறந்த உணர்வெழுச்சியான கவிதையைக் கொண்டாடும் மரபினர் தமிழர் என்பதால் கவிதைக்கான இடத்தை எப்போதும் நாம் வைத்திருக்க வேண்டும்.

மெய்நிகர் (virtual) உலகில் `ஆப்’ களுக்கு அடிமையாகிப் போன தலைமுறை நம் மரபான விளையாட்டுகளை முற்றும் மறந்துவிட்டது. உங்களின் பால்ய காலம் எப்படி இருந்தது?

எல்லோரும் தலை கவிழ்ந்து நம் திறன்பேசியில் நம் விரல்களைத் தேய்த்துக்கொண்டிருக்கிறோம். தொழில் நுட்பத்தின் தேவை நமக்கிருக்கிறது. ஆனால் நம் மரபான விளையாட்டுகள் இப்போது இல்லாமல் போய்விட்டது என்பது உண்மைதான். என் குழந்தைப் பருவம் முழுக்க விளையாட்டுகளாலானது, கண்டிப்பான அம்மாவுக்குத் தெரியாமல், நான் விளையாடிய கில்லி கோட்டி, எதரா மேலா, குதிர பத், கோல் தள்ளற விளையாட்டு, நிலா குப்பல் போன்றவை இக்காலக் குழந்தைகளுக்கு இல்லை.

பள்ளிப்பருவத்திலே எங்களூரில் முக்கிய விளையாட்டான கபடியில் நாங்கள் புகுந்து விளையாடுவோம். கபடியின் பல உத்திகள் எங்கள் ஊரில் எல்லோருக்கும் தெரிந்தது. கபடி விளையாடும் போது அண்ணன்களும் வந்து எங்களுக்குச் சொல்லித்தருவார்கள். கஸ்பா பீஆர்ஏ கபடிக்குழு மிகப் பிரபலம். மதுரைக்கு ஜல்லிக்கட்டுபோல எங்களுக்குக் கபடி, மாப்பிள்ள நல்லா கபடி ஆடுவாரு என்று பெண்கேட்ட கதை எல்லாம் எங்கள் ஊரில் உண்டு. அடுத்த கேரம் எங்களின் விளையாட்டு, ஸ்ரைக்கர எடுத்து ஷாட் அடித்து ஒன்பது காய்களையும் போட்டு ஆட்டத்தையே முடிக்கும் திறமை கொண்டவர்கள் எங்கள் ஊரில் இருந்தார்கள். இப்படி நிறையச் சொல்லலாம்.

உங்களின் நண்பர்கள் குறித்து…

நட்பு சூழ் வாழ்க்கைதான் என்னுடையது. சிறுவயதில் யாருடனும் பேசமாட்டேன். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பேசாமல் இருக்க மாட்டேன். பேசிக்கொண்டே இருப்பேன். எனக்கு வாய்த்த எல்லா நண்பர்களும் மிகவும் அற்புதமானவர்கள். நிலா என்னும் கையெழுத்து இதழை நான் நடத்தியபோது நட்பாகியவர்கள் இன்றுவரை அப்படியே தொடர்கிறார்கள். இலக்கியமும் அரசியலும்தான் என் நட்பு வட்டத்தைப் பெரிதாக்கிக் கொண்டே இருக்கின்றன. நண்பர்கள்தாம் என் துயரறிந்தவர்கள்.

இலக்கியத்தில் எல்லா வகைமையினரும் எனக்கு நண்பர்கள்தாம். அது ஒரு பெரும் பட்டியல். எல்லாரிடமும் எனக்கு ஆத்மார்த்த நட்பு உண்டு.

இயற்பியலில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்கிறீர்கள். கல்லூரிக் காலம் எப்படி இருந்தது?

நான் ஊரிசுக்கல்லூரி மாணவன். என்னுடைய ஆங்கிலப் பேராசிரியர் ஐயா அய்.இளங்கோவன். கல்லூரிக் காலம் முழுக்க ஈழவிடுதலைப்போர் ஆதரவுப்பணிகளைத்தான் செய்தேன். அதற்காகக் கல்லூரியில் தண்டிக்கப்பட்டேன். ஆம்பூரிலிருந்து காட்பாடிக்கு இரயிலில் வருவோம். தமிழீழம், தியாகப்பயணத்தில் திலீபனுடன் 12 நாட்கள் ஆகிய புத்தகங்களை விற்பேன். பல அனுபவங்கள் அப்போது. கொண்டாட்டத்திற்கும் பஞ்சமில்லை. கொஞ்சம் சுமாராகப் பாடுபவன் என்பதால், இரயில் பயணங்களில் சில நேரங்களில் பாடுவோம். நாடகம், கவிதைப் போட்டி என்று என் கல்லூரி நாட்கள் அமைந்தன. சென்னை மெஸ்டன் கல்லூரியில் படித்தபோது கல்லூரிச் செயலாளராகத் தேர்தலில் நின்று வென்றேன். பல கவிதைப் போட்டிகளில் வென்று கல்லூரிக்குக் கோப்பைகள் வாங்கி வருவேன். கொஞ்சம் கெத்தாத்தான் இருந்தேன்.

`யாருமற்ற சொல்’ என்னும் கவிதை நூலில் பாலாறு பாழாய்ப் போன அவல நிலையை எண்ணி `பாலி நதி’ என்னும் கவிதை எழுதியிருப்பீர்கள். பாலாற்றங்கரையில் விளைந்த நாணற் பூக்களையும், தேன் குடித்துப் பறக்கும் வண்டுகளையும், மீன் உடல் காட்டும் பொன் மணற் துகள்களையும், நுரை ததும்பிச் செல்லும் செம்மண் நிற வெள்ளமும், அதில் அடித்துச் செல்லும் செத்தையோடு அழுக்கையும் மட்டுமல்லாது இறுதியில் அதில் கலக்கும் ஆலைக் கழிவைப் பற்றியும் அக்கவிதையில் எழுதியிருப்பீர்கள். பாலாற்றுக்கும் உங்களுக்குமான உறவு எத்தகையது? 2021இல் வெள்ளம் கரைபுரண்டோடுகையில் பல ஆண்டுகளாக வறண்ட ஆற்றையே பார்த்த தலைமுறைகளின் மனநிலை எப்படி இருந்தது?

பாலாற்றின் இன்னொரு பெயராகப் பாலி நதியை நாம் கொள்ளலாம். நீரோடி நாகரிகங்களை வளர்த்த நதிகளின் மத்தியில் தன் வேரோடி நாகரிகம் வளர்த்த நதி பாலாறு. பாலாற்றில் நான் உருண்டு நீராடிய நதி நீர்மை என் மனத்தில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாய் வற்றிக்கொண்டிருக்கிறது என் நதி. 2021இல் இருந்து இன்றுவரை தன்மீதான நீராடையைச் சிற்றாடையாய் ஆக்கிப் போய்கொண்டிருக்கிறாள் பாலி. பாலாற்று வெள்ளத்தில் ஆம்பூரின் கவிஞர்களை அழைத்து ‘நடந்தாய் வாழி பாலாறு’ எனக் கவிபாடியது கண்ணாடி நீராய் ஓடுகிறது.

உங்கள் கவிதைகள் மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஆக்கம் பெற்றுள்ளன. அக்கவிதைகளின் சிறப்புக் குணங்களாக மொழிபெயர்த்தவர் ஏதேனும் பகிர்ந்தார்களா?

மலையாளத்தில் மாத்யமம் இதழில் வெளிவந்தது. அதைப் படித்துவிட்டு வாசகர்கள் எனக்குக் கடிதங்கள் எழுதியிருந்தனர். ஆங்கிலத்தில் என்னுடைய கவிதைகளை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வெளியீட்டிற்காக மொழிபெயர்த்திருந்தார்கள். திரு.வசந்தா சூரியா அவர்கள் மொழிபெயர்த்திருந்தார்கள். கடந்த மாதம் கூட பெங்களூரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் அவர்கள் மொழிபெயர்த்த என்னுடைய கவிதைகளைக் குறித்துப் பேசியிருக்கிறார்கள். என்னுடைய கவிதையில் இருக்கும் தலித் வாழ்க்கையையும் எதிர்த்துப் போராடும் எங்களில் நிலம் சார்ந்த பண்பையும் அவர்கள் பேசியிருக்கிறார்கள். என்னுடைய செவிப்பறை நூலை பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியர் திரு.டி.மார்க்ஸ் முழுமையாக மொழிபெயர்த்து வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறது.

சாம்பல் என்னும் குறும்படம் இயக்கி உள்ளீர்கள். இலக்கியப் பயணம் குறும்பட இயக்கம் நோக்கி நகர உந்தியது எப்படி?

அது நீண்டகாலத்திற்கு முன்பு எடுத்தது, வேலையின்மை அதன் கரு. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் ஓர் இளைஞனின் கனவுகள் சமூக யதார்த்தத்தில் எப்படி நசுங்கிப் போகிறது என்பதுதான் அப்படம். காட்சிகளின் வழியே பேசுவது என்னும் அடிப்படையில் வசனங்கள் இல்லாமல் எடுக்கப்பட்டது. ஓவியக் கல்லூரியில் படிப்பை முடித்து விடுமுறையில் வந்த ஓர் ஓவியக்கல்லூரி மாணவர்தான் ஒளிப்பதிவு செய்தார். மிகவும் சிரத்தையோடு அப்பணியை அவர் மேற்கொண்டார். பிற்காலங்களில் இந்திய அளவில் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளராக மாறிய கபாலி, காலா திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் தோழர் முரளிதான் அந்த மாணவர்.

குறும்படங்கள் எடுப்பது ஏறக்குறைய இலக்கியங்களைப் போலத்தானே. அதுவும் அது குறும்படங்கள் என்னும் வடிவம் தொடங்கிய காலம். இப்போது திறன்பேசியிலேயே எல்லாவற்றையும் முடித்துவிடுகிறார்களே!

இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?

பௌத்தம் குறித்து எழுதி வருகிறேன். திரிபீடக நூல்களை அறிமுகம் செய்யும் ஒரு தொடரை எழுதி வருகிறேன். கவிதைகள் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். சிற்றிதழ்களில் என் பங்களிப்பு இருந்து கொண்டே இருக்கிறது. ஒரு நாவல் எழுதுவதற்கான முன் வேலைகளைச் செய்திருக்கிறேன். வழக்கமான என்னுடைய சோம்பலால் அது தடைபடுகிறது. தீவிரமாக எழுத வேண்டும் என்னும் உந்துதல் மனத்தில் இருக்கிறது. பார்க்கலாம்.

பாலி மொழியில் கவிதை வடிவில் இருந்த புத்தரின் போதனைகளை `தம்மபதம்’ என்ற தலைப்பில் தொகுப்பு நூலாக மொழிபெயர்த்து இருக்கிறீர்கள். இந்நூலை உருவாக்கும் சிந்தனை எப்போது தோன்றியது. இதன் பயணம் குறித்து…

தம்மபதம் புத்தரின் போதனைகள் கவிதை வடிவில் பாலி மொழியில் அமைந்தவை. அவற்றை உலகில் மிக முக்கிய ஆளுமைகள் மொழிபெயர்த்துள்ளனர். மேக்ஸ்முல்லர் போன்றவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கின்றனர். ஜெர்மன் பிரெஞ்ச் போன்ற மொழிகளிலும் தம்மபதம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளின் பெரும்பாலான கருத்துகள் தம்மபதத்துடன் ஒத்துப் போகின்றன. மனத்துக்கண் மாசிலன் ஆதல் எல்லாம் தம்மபதத்தின் மொழிபெயர்ப்புதான். தமிழில் உரை நடையில் பிக்கு சோமானந்தா என்னும் இலங்கையர் மொழிபெயர்த்திருந்தார். அது உரைநடை வடிவில் இருக்கிறது. எளிய கவிதை வடிவில் ஆங்கிலத்தில் தம்மானந்தா என்னும் பௌத்தத் துறவி எழுதியதைத் தமிழில் நான் மொழிபெயர்த்தேன். புத்தர் ஒளி பன்னாட்டு மையத்தின் சார்பில் அப்பணி திரு.அன்பன் ஐயா அவர்களால் வழங்கப்பட்டு நான் அதை மொழிபெயர்த்தேன். என் வாழ்வில் நான் செய்த மிகச் சிறந்த பணியாக அதைக் கருதுகிறேன். தலித் எழுத்தின் அடுத்தகட்டம் என்பது பௌத்த இலக்கியங்களையும் சூழல் இலக்கியங்களையும் உருவாக்குவது. சாதி ஒழிந்த சமூகத்தில் பரந்துபட்ட மானுட நேசிப்பும் பிற உயிர்களின்மீது காட்டும் அன்பும்தானே வாழ்க்கை.

நிழற்படங்கள் : கோ.பெ.ரவீந்திரன்

[email protected]

[email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!