மாமல்லபுரத்தில் இன்றைக்கு ‘அர்ச்சுனன் தபசு’ எனவும் ‘பகீரதன் தவம்’ எனவும் பரவலாக அறியப்படக்கூடிய சிற்பத் தொகுதிக்குக் கடந்த காலங்களில் வேறு சில விளக்கங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. தமிழறிஞரும் ஆய்வாளருமான மயிலை சீனி.வேங்கடசாமி அச்சிற்பத் தொகுதி ஜைன இலக்கியங்களில் இடம்பெறும் சகர சாகரர் கதையைச் சித்தரிப்பதாகச் சொல்கிறார். அவரின் இவ்விளக்கம் ‘மகாபலிபுரத்து ஜைன சிற்பம்’ எனும் நூலாக பு950ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. ஆனால், மாமல்லபுரத்தைப் பற்றி ஆய்வு மேற்கொண்ட பிற ஆய்வாளர்களால் மயிலையாரின் நூலும் கருத்தும் விமர்சிக்கப்பட்டு மறுதலிக்கப்பட்டிருக்கின்றன. எனினும், ஜைனம் பற்றி சமீபத்திய ஆய்வுகளின் வெளிச்சத்தில் இந்நூல் முன்வைக்கும் சில வாதங்களும் தர்க்கங்களும் முக்கியத்துவம் கொண்டவையாகப் புலப்படுகின்றன. அரை நூற்றாண்டிற்கு முன்பாக எழுதப்பட்டு, தற்போது தமிழ் உலகம் மறந்துபோன நூலை அறிமுகம் செய்ய முயல்கிறது இக்கட்டுரை.
தமிழகக் கலை வரலாற்றில் மாமல்லபுரம்
தமிழகக் கோயில்களின் வரலாறு குறித்தும் கட்டடக்கலை வளர்ச்சி குறித்தும் எழுத முற்பட்ட பலரும், சங்க இலக்கிய காலத்திலேயே (கி.மு.சுஆம் நூற்றாண்டு முதல் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை) இங்குக் கோயில்கள் எழுப்பப்பட்டிருந்தாலும் அவை மரம், செங்கல் போன்ற அழியக்கூடிய பொருட்களில் கட்டப்பட்டதால் இன்றைக்கு அவை காணக் கிடைக்கவில்லை என்று சொல்வார்கள். தமிழகத்தில் இன்றைக்கு நிலைத்திருக்கும் மிகப் பழமையான ஆலயங்களாக முற்காலப் பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட பிள்ளையார்பட்டி குடைவரைக் கோயிலையும் பல்லவ அரசனான மகேந்திர வர்மனால் உருவாக்கப்பட்ட மண்டகப்பட்டு குகைக் கோயிலையும் சுட்டிக்காட்டுவார்கள். இவ்விரண்டில் கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மண்டகப்பட்டு கோயில், பிள்ளையார்பட்டி கோயிலைக் காட்டிலும் பழமையானது என்றும் சிலர் குறிப்பிடுவர். அதற்குக் காரணம், `அழியும் பொருட்களான மரம், செங்கல், சுண்ணம், உலோகம் இன்றி, இந்தக் குகைக் கோயில், சிவன், பிரம்மா, விஷ்ணு தெய்வங்களுக்காக விசித்திரசித்தனால் (மகேந்திர வர்மன்) சமர்ப்பிக்கப்படுகிறது’ என்கிற செய்தி அங்குள்ள சமஸ்கிருதக் கல்வெட்டொன்றில் இடம்பெறுவதே. மண்டகப்பட்டினைத் தொடர்ந்து தனது தலைநகரான காஞ்சியிலும், பல்லவபுரம், மகேந்திரவாடி, சீயமங்கலம், திருச்சிராப்பள்ளி முதலான ஊர்களிலும் மலைகளை வெட்டிக் குடைந்து கோயில்களை அமைத்தான் மகேந்திரன். இவ்வரிசையில்தான், மாமல்லபுரம் எனப் பிற்காலத்தில் பெயர் சூட்டப்பட்ட துறைமுக நகரத்தில் ஆதிவராகர் கோயில் உருவாக்கப்பட்டது.
1984-இல் ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ அமைப்பினால் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட மாமல்லபுரத்தின் முதல் கோயில் மகேந்திரனால் எழுப்பப்-பட்டிருந்தாலும், அவன் வழி தொடர்ந்து, நரசிம்மன், பரமேசுவரன், ராஜசிம்மன் முதலான இடைக்காலப் பல்லவ அரசர்களும் மாமல்லபுரத்தில் கிடந்த கற்பாறைகளைக் கோயில்களாகவும் சிற்பத் தொகுதிகளாகவும் மாற்றி அமைத்தார்கள். ஆக, மாமல்லபுரத்தில் நாம் இன்றைக்குக் காணும் பல்வேறு குடைவரைக்கோயில்களும் கற்றளிகளும் திறந்தவெளிப் புடைப்புச் சிற்பங்களும் வெவ்வேறு பல்லவ மன்னர்களின் காலகட்டத்தில் எழுப்பப்பட்டவை. எனவே, எந்தெந்தக் கோயில், எந்தெந்தப் பல்லவ மன்னனின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது என்பதை உறுதி செய்வதில் ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகளும் குழப்பங்களும் நீடித்துவருகின்றன. உதாரணமாக, இங்குள்ள ஆதிவராகர் கோயில் மகேந்திரனுடைய ஆட்சியில் உருவாக்கப்பட்டது என ஒரு சாராரும், நரசிம்மனுடைய காலத்தைச் சேர்ந்தது என வேறு சிலரும் வாதிடுகிறார்கள். இவ்விரு கருத்துகளுடனும் முரண்பட்டு, ராஜசிம்மனே இங்குள்ள அனைத்தையும் உருவாக்கினான் எனக் கருதுவோரும் உண்டு. இதைத் தவிர, மாமல்லபுரத்தில் இடம்பெற்றுள்ள சில சிற்பங்களும் சிற்பத் தொகுதிகளும் எதைக் குறிக்கின்றன என்பதனைத் தீர்மானிப்பதிலும் ஆய்வாளர்களிடையே முரண்பாடுகள் நிலவுகின்றன. ஆதிவராகர் குகைக்கோயிலில் உள்ள இரு அரச குடும்பத்துச் சிற்பங்களில் மகேந்திரனும் அவன் தந்தை சிம்மவிஷ்ணுவும் தத்தமது மனைவியரோடு சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் எனச் சிலர் சொன்னாலும், அதனை உறுதியாகச் சொல்வதில் குழப்பங்கள் நிலவுவதாக மற்றவர்கள் கருதுகிறார்கள். எனினும் ஆதிவராகர் கோயிலில் இடம்பெற்ற சிற்பங்கள் யாருடையவை என்பதை முடிவு செய்வதைக் காட்டிலும் அறிஞர்களிடையே கருத்துச் சச்சரவு அதிகம் வலுத்துக் கிடப்பது ‘பெருந்தவம்’ எனப்படுகிற திறந்தவெளிப் புடைப்புச் சிற்பத்தை விளக்குவதில்தான்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then