“ஆதிக்க வகுப்பு என்ன சாதிக்க முடியும் என்பது, அதனுடைய அரசு அதிகாரத்தின் அளவைப் பொறுத்ததல்ல; அந்த அரசு அதிகாரத்திற்குள்ள வெளிப்புற, உட்புற வரம்புகளையே பொறுத்தது. இவை இரண்டில், நன்மை செய்யத் தவறுவதற்கு வெளிப்புற வரம்புகள் காரணமாக இருக்குமானால், ஆதிக்க வகுப்பினரை யாரும் குறை கூற முடியாது. வெளிப்புற வரம்புகள் முன்னேற்றத்தைத் தடுக்கின்றன என்கிற அச்சம் வேண்டியதில்லை. ஏனெனில், ஆளும் வர்க்கத்தின் உள் வரம்புகளுக்குத்தான் வெளிப்புற வரம்புகளை விட தீர்மானிக்கும் சக்தி அதிகம். முன்னேற்றம் என்பது வெளிப்புற வரம்புகளை விட ஆளும் வர்க்கத்தின் உள் வரம்புகளைச் சார்ந்துள்ளது” என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர். (டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு 09, பக்கம் 214.)
ஜல்லிக்கட்டுப் போட்டியில் தங்களுடைய வீரத்தை நிரூபிக்கும் வீரர்களையும் அவர்களுக்கு அடிபணியும் காளைகளையும் கொடூரமான முறையில் தாக்குகிற நிலை நீடிப்பதற்குப் பொதுச் சமூகமும் அரசும் வெட்கப்பட வேண்டும். உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் 2022 – 2023ஆம் ஆண்டில் முதல் பரிசை வென்ற தமிழரசன், இவ்வாண்டு போட்டியில் கலந்துகொள்ளுவதற்காக விதித்திருந்த அனைத்து நடைமுறைகளையும் முறையாகப் பின்பற்றியிருந்தும் அவர் பறையர் சமூகத்தைச் சார்ந்தவர் என்கிற ஒரே காரணத்திற்காக, பாலமேடு கிராமப் பொது மகாலிங்க சுவாமி கமிட்டியாலும் அங்கு பாதுகாப்பிற்காக நின்றிருந்த தமிழக காவல்துறையாலும் கடுமையாகத் தாக்கப்பட்டுத் தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது பற்றிப் பாதிக்கப்பட்ட வீரரே வாக்குமூலம் கொடுத்திருப்பது வேறெந்த நாட்டிலும் நிகழாத படுபாதகமான செயல். மேலும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிகமான காளைகளைப் பிடித்த சிவகங்கை மாவட்டம், பூவந்தியைச் சேர்ந்த அபிசித்தர் என்பவரும் பட்டியல் சமூகமான தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் (பள்ளர்) சேர்ந்தவர் என்பதாலேயே ‘ஆண்டப்பரம்பரை’ திமுக அமைச்சர் மூர்த்தியின் தலையீட்டால் இரண்டாம் இடம் பிடித்தவராக அறிவிக்கப்பட்டார். இது தொடர்பாக நேரடியாகப் போட்டியை நடத்தியவர்களிடமும் அமைச்சர் மூர்த்தியிடமும் அபிசித்தர் கேட்டதற்கு, அமைச்சர் தகாத வார்த்தைகளால் அவரைப் பொதுவெளியில் அவமானப்படுத்தியிருக்கிறார். காவல்துறையினரும் அவரைத் தாக்கியிருக்கின்றனர். இது குறித்து பத்திரிகை செய்தி ஒன்றில் அவர் குறிப்பிடுகையில், “நான் காலையில ரெண்டாவது பேட்ஜில வந்தேன். ரெண்டாவது பேட்ஜிலிருந்து மூணாவது பேட்ஜ் வரைக்கும் மாடு பிடிச்சேன். 13 மாடு பிடிச்சேன்” என்றவர், ‘எனக்கு முதல் பரிசாக கார் எல்லாம் வேண்டாம். காருக்காக நான் போட்டியில் பங்கேற்கவில்லை. நான் முதலிடம் பிடித்ததாக அறிவித்தாலே போதும்’ என்று தெரிவித்தார். ஆயினும், போட்டியை நடத்தியவர்கள் அவர் 11 மாடுகளைப் பிடித்ததாகக் கூறி, அவர் இரண்டாம் இடம் என்று அறிவித்தனர். முதல் இடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டவர் அமைச்சர் ஊரைச் சேர்ந்தவர் என்பதால் ஐந்தாவது பேட்ஜ் முதல் எட்டாவது பேட்ஜ் வரைக்கும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது பின்னர் விவாதப் பொருளாக மாறியதால் அபிசித்தருக்கே முதல் பரிசு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் ‘சுதந்திர தேசத்தில்’ தொடர்ந்து நடப்பதற்கு தேசாபிமானிகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then