2021ஆம் ஆண்டிற்கு விடை தந்து 2022ஆம் ஆண்டு பிறந்திருக்கிறது. கடந்த இரண்டாண்டுகளாக மனிதச் சமூகம் கடும் நெருக்கடியைச் சந்தித்தது. அந்த நெருக்கடி முற்றிலும் முடியவில்லையென்றாலும் அவற்றை மனிதச் சமூகம் எதிர்கொண்டு முன்னேறி வந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக இந்தியா, அந்தச் சவாலைப் போதுமான பாதுகாப்போடு சமாளித்திருக்கிறது. எல்லா வேறுபாடுகளையும் தாண்டிய கூட்டுணர்வை மனிதச் சமூகம் வெளிப்படுத்தியது. அந்தக் கூட்டுணர்வே இனிவரும் காலத்திற்கும் தேவை. நோயற்ற – சுகாதாரமான வாழ்வே முதன்மையானது. மனிதச் சமூகம் அந்தப் பேற்றை இனிவரும் ஆண்டுகளில் பெறட்டும். கொரோனா நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படுத்திச் சென்றிருக்கும் பாதிப்புகளிலிருந்து உலகம் முற்றிலும் விடுபட்டும்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் மத்தியில் பாஜக அரசே நீடித்துவருகிறது. மதவாதம் ஓங்கியிருக்கும் அதேவேளையில் கார்ப்பரேட்மய அரசியலுக்கு இணங்கியும் செயல்பட்டுவருகிறது. சிவில் சமூகம் மேலும் மேலும் சிக்கலாகிக்கொண்டிருக்கிறது. நீதிமன்றங்கள் கூட இந்தச் சூழலின் எல்லைக்குள் சுருங்குகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 2021ஆம் ஆண்டு நடந்த தேர்தல் மூலமாக திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சி ஏற்படுத்திய விளைவுகளிலிருந்து மீள எழுவதே அதன் முக்கியப் பணியாக இருக்கிறது. ஆனால், தன் கட்சியின் அடையாளங்களை நிலைப்படுத்தும் வேலைகளிலேயே அதிக கவனம் செலுத்துகிறது. சமூக வலைதளங்கள் சார்ந்து அழுத்தம் பெறும் விசயங்களுக்கு முக்கியத்துவம் தந்து நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் ஓர் அரசாக தமிழக அரசு நீண்டகாலப் பயன் தரும் விசயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதனை இனிவரும் காலங்களில் அரசு பரிசீலிக்க வேண்டும். குறிப்பாகக் கொரோனாவிற்குப் பிறகு கல்வித்துறையில் நடந்திருக்கும் பாரதூரமான மாற்றங்களையொட்டிச் சிறப்புக் கவனம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாகக் கற்பித்தல் முறை, கற்பித்தலில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு, உள்வாங்கும் திறன், தேர்வு முறை, மதிப்பெண் போன்றவற்றில் ஏற்பட்ட மாற்றங்களை யொட்டி உருவாகியிருக்கும் போக்குகளை ஆராய வேண்டும்.
எந்தப் புதிய ஆண்டு வந்தாலும் தங்களின் வாழ்வில் மாற்றமில்லை என்ற எளிய மக்களின் எண்ணங்களில் மாற்றம் நிகழ வேண்டும். பெருநகர விரிவாக்கம் என்னும் பேரில் பூர்வகுடி மக்கள் வெளியேற்றப்படுவது நிற்கவில்லை. அவர்களுக்காகப் போராட ஓர் அமைப்பு கூட இல்லை. ஆணவக்கொலை உள்ளிட்ட உள்ளூர்ப் பாகுபாடுகள் நிற்கவில்லை. அவற்றில் அரசிற்கு உறுதியான நிலைப்பாடு தேவை. அரசியல் அதிகாரம் மட்டுமே வழியல்ல. அனைத்துத் தளங்களிலும் இடம்பிடிப்பதும் நிறுவுவதும் கூட அதிகாரம்தான். அந்த வாய்ப்பு பெண்களுக்கும் ஒடுக்கப்பட்ட மற்றும் எண்ணிக்கை குறைந்த அதிகாரமற்ற சாதிகளுக்கும் சென்று சேர வேண்டும்.
அரசு மட்டுமே எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்க முடியாது. அரசை உருவாக்குவதே சமூகம்தான். எனவே, சமூகத்தின் அங்கங்களாக உள்ள கல்வியமைப்பு, ஊடகங்கள், நீதித்துறை, கலை இலக்கியத் துறை என யாவற்றிற்கும் இவற்றில் பொறுப்புண்டு. இனி இவற்றில் கூட்டுணர்வும் நற்பயனும் வாய்க்க வேண்டும்.
2022ஆம் ஆண்டே வருக.