கருப்பாசுரசாமியைப் பெயர்த்து அகற்றும் வழி பிடிபடவில்லை. குமராசு யார் யாரிடமோ யோசனை கேட்டான். ஒருவருக்கும் தெரியவில்லை. ‘சாமி காரியமப்பா’ என்று தவிர்த்துப் போனார்கள். சிலர் ரொம்பவும் யோசிப்பது போலப் பாவனை செய்தார்கள். ‘சாமியத் தூக்க ஓசன சொல்ற நாக்கு அழுகிப் போயிருமப்பா’ என்று பின்வாங்கினார்கள். உடல் குறுகிக் கட்டிலோடு கிடக்கும் நூற்றுக் கிழங்களும் கைவிரித்தன. ‘கருப்பன எப்படி அனுப்பறது?’ குமராசு சளைக்காமல் எல்லோரிடமும் கேட்டான். ‘கருப்பனக் காட்ட உட்டு அனுப்ப முடியுமா?’ என்று பதற்றத்துடன் எதிர்க்கேள்வியும் வந்தது.
காட்டின் வடமூலையில், அடர்ந்த பாலமரத்தின் அடியில் மொழுக்குக் கல்லாகக் குடி கொண்டிருந்தான் கருப்பாசுரன். அவனுக்குக் காலமில்லை. மழை, வெயில், பனி, குளிர் எத்தனையோ பார்த்திருந்தான். பாலமரம் தன் சந்ததியை அந்த இடத்திலேயே பெருக்கியிருந்தது. இப்போது இருப்பது மூலமரம் அல்ல. எத்தனாவது சந்ததி என்றும் தெரியவில்லை. கூம்பாச்சியாய் மேலேறிச் சடையை விரித்து விட்டிருந்தது. அடிமரச் செதில்களில் பூச்சிகள் ஏராளம் குடியிருந்தன. எறும்புகள் வரிசை கட்டி ஏறின. பாலப்பூ மணக்கும் தருணத்தில் வண்டுகளும் ஈக்களும் மொய்த்து எந்நேரமும் ‘ஙொய்’யென்று சத்தம் சூழும். காய்கள் சடைந்து இலைகள் கொட்டி எலும்புக்கூடாய் நிற்கையில் பரிதாபமாகத் தோன்றும். காய்கள் முதிர்ந்து வெடித்துப் பஞ்சுடன் விதைகள் சிறுகுஞ்சுகளாய்ப் பறக்கும். எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு இல்லாதது போலக் கல்லாய்ச் சமைந்திருந்தான் கருப்பன்.
குமராசுவின் பல தலைமுறைக்கு முந்தைய தாத்தா ஒருவர் இந்த நிலத்தை உருவாக்கினார். கரட்டோரம் புதராகக் கிடந்த வனாந்தரத்தைப் பண்படுத்தி வேளாண்மை செய்தார். இன்னும் எவ்வளவோ நிலம் வேண்டும் என்று மனம் ஆசைப்பட்டாலும் அவ்வளவுதான் முடிந்தது. ஒரு குடும்பத்திற்கு இதுவே பெரும்பரப்பு. உழும்போது கிடைத்த மொழுக்குக் கல் ஒன்றை எடுத்து நீராட்டி வடதிசையில் முளைத்திருந்த பாலச்செடியின் அடியே மண் கொட்டிச் சிறுதிட்டாக்கிக் கிழக்குப் பார்த்துக் கருப்பனைக் காடு காவல் தெய்வமாகக் குடியேற்றினார். அசுரலோகத்தை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் நில அளவீடு செய்து வரி போட்டார்கள். நிலம் முழுவதும் குமராசுவின் முன்னோருக்கு அதிகாரப்பூர்வமாகச் சொந்தமாயிற்று. இப்போதைய கணக்கில் முப்பத்தைந்து ஏக்கர்.
காடு முழுவதையும் காவல் காப்பது கருப்பனின் வேலை. பயிர்களை அழித்துவிடச் சினம் கொண்டு பெருங்காற்று ஊளையிட்டுச் சூழும்போது அதன் வேகம் தணித்துத் தென்றலாக்குவான். மழை பொழிந்து அணப்புகளில் நீர் பொங்கி வேர்கள் அழுகத் தொடங்குகையில் வரப்புடைத்து வெளியேற்றுவான். பயிர்கள் வளர்கையில் புழு பூச்சிகளைப் பெருக்குவான். அவை பெருகி அழிவேலையில் இறங்கினால் பறவைகளை வரவழைப்பான். கடலைக்காய்களைக் கிளற வரும் பன்றிகளைக் கையில் வேலேந்தி எதிர்நின்று விரட்டுவான். ஆட்டுக்குட்டிகளின் குரல்வளை கடிக்க வரும் குள்ளநரிகளை வாலிடுக்கி ஓடச் செய்ய நாய்களை ஏவுவான். மாடுகளுக்கு வரும் அபூர்வ நோய்களைப் போக்கும் மூலிகைகளைப் பாதுகாத்துத் தருவான். கருப்பனுக்கு அலகிலா வேலைகள்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then