எல்லாம் அவளுக்காகப் படைக்கப்பட்டவை

கனகா வரதன்

வளுக்குப் பொழுது அதிகாலையிலேயே விடிந்திருந்தது, உச்சி வெயிலுக்குப் பல் துலக்கி பழகிப்போன டூத் பிரஷும் எழ வேண்டிய கட்டாயம். அந்த நான்கு நட்சித்திர ஹோட்டலின் இரண்டாவது தளத்தில் திறந்து வைத்திருந்த ஜன்னல் வழியே ஊடுருவும் கண்களைப் பற்றிக் கவலைப்படாமல் குளித்து முடித்து உள்ளாடைகளுடன் நடனமாடிக்கொண்டிருந்தாள். நிர்வாண உடல்கள் சாதாரணமாக்கப்பட்ட நார்டிக் தேசங்களில் இவளை யாரும் பார்க்கப் போவதில்லை, பார்த்தாலும் அவள் கண்டுகொள்வதாக இல்லை. சில வாரங்களாகத் தனிமையிலும், மனச்சோர்விலும் உழண்டுகொண்டிருந்தவள், நேற்று ஆரியிடம் சொன்னதைப் போலவே துள்ளி குதித்தாள். இதெப்படி சாத்தியம், சோர்வையும் கிளர்ச்சியையும் ஒருத்தியால் முன்முடிவிட்டு அனுபவிக்க முடியுமா? அவளால் முடிந்தது. யட்சியின் வரமாக இருக்கலாம்.

ஆரியைச் சந்திக்கும் வரை இப்படியில்லை, ஆரிதான் உந்தியிருக்க வேண்டும். விடுதியில் வழக்கமான வரவேற்பு சம்பிரதாயங்களை எதிர்பார்த்தவளுக்குப் படுக்கையில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த ஆரியைப் பார்த்த மாத்திரத்தில் பிடித்துப் போய்விட்டது. அங்கு பணிபுரிந்த யாரோ ஒருத்திதான் இதைச் செய்திருக்க வேண்டும். ஆரிக்கு இவளைப் போன்ற நீண்ட கால்கள் கிடையாது, மாறாக பெரிய வால். ஆரி, ஓரிகமியால் செய்யப்பட்ட கொக்கு. தனபால் மாமாவை விட உயரமாக வளர்ந்ததிலிருந்து அம்மா அவளை அப்படித்தான் கூப்பிட்டாள், நெட்ட கொக்கு. தோழி ஒருத்தி சலித்துக்கொண்டது ஞாபகம் வந்தது,

“எப்பவும் கொக்கு மாதிரி தேமேன்னு நிக்காம நளினமா போஸ் கொடு, அப்பத்தான் இன்ஸ்டாக்ராமில் லைக் விழும்.” என்னமோ அவளுக்கு நளினம் வாய்க்கவில்லை, அது தேவைப்படவும் இல்லை. ஒருவேளை ஆரி அன்னமாக இருந்திருந்தால் இன்றும் சோர்வாகவே கழித்திருப்பாள். ஆனால் ஆரிதான் கொக்காயிற்றே…

“ஆரி, நாளை நான் மகிழ்ச்சியாக இருப்பேன், இந்த நகரத்தை ஆக்கிரமிப்பேன், தேவைக்கு அதிகமான வெளியை எடுத்துக்கொள்வேன், சந்திக்கும் அனைவரிடமும் உரையாடுவேன், எல்லாமும் எனக்காகவே படைக்கப்பட்டிருக்கும். நீயும் வருகிறாயா வீதி உலாவுக்கு, மகாராணிகளாக உலா வருவோம். மாலை உன்னை நிஹாம் ஏரியில் ஆன்டர்சனின் வீட்டருகில் விட்டுவிடுகிறேன், நீ அவனுடைய தேவதைக் கைதிகளில் கலந்துவிடு.” ஆரி ஆமோதித்தாள். அவளுக்கும் ஆசையாகத்தான் இருந்தது. இருவரும் இன்று கிளம்பிவிட்டார்கள். ஆரி, தோள் பையிலிருந்த பாமாவின் புத்தகத்திற்குள் அமர்ந்துகொண்டாள்.

“முதலில் எங்கு போகப் போறோம்?”

“பூங்காவுக்குப் போகலாம் ஆரி. வசந்த காலம் தொடங்கிவிட்டது. பூக்களை ரசிக்கலாம், யாரும் பார்க்காதபோது பறிச்சு பையில் போட்டுக்கலாம்”

“இது துலிப், இது பெல்லிஸ், இது ஊதாப்பூ, இது மொன்டானா…”

“எதுக்கு எல்லாத்தையும் புகைப்படம் எடுக்கற”

“தெரியாத பூக்களின் பெயரைத் தெரிஞ்சிக்கத்தான்”

“ச்சாட் ஜி.பி.டியில் தேடுவியா?”

“இல்லை கோகுலிடம் கேட்கப் போகிறேன், அவனுக்குப் பூக்களப் பற்றி எல்லாம் தெரியும். இன்று நாம் மனிதர்களுடன் பேசலாம் ஆரி.”

“இந்தச் சின்ன நீலப் பூவின் பெயர் தெரியுமா உனக்கு, என்னை மறந்துவிடாதே forget – me -not.”

“பொய்தான சொல்ற.”

“நிஜமாகத்தான் தோழி, இதுக்குப் பின்னாடி ஒரு கதையே இருக்கு.

“முன்னொரு காலத்தில், ஜெர்மானியப் போர் தளபதி ஒருவன் காதலியுடன் டானூப் நதிக்கரையில் நடந்துகொண்டிருந்தானாம். அப்போது இந்த மலர்களைப் பார்த்திருக்கிறார்கள். காதலி மலர்களைப் பறித்துத் தரச் சொல்லிக் கேட்டிருக்கிறாள். வெள்ளை நிற கவுனில், இடுப்பு வரை வளர்ந்திருந்த பழுப்பு நிற சுருள் கூந்தலுடன் தேவதையைப் போல காட்சியளித்தவளின் ஆசையை நிராகரிக்க மனமின்றி காதலனும் கிளம்பியிருக்கிறான். புரண்டோடிய நதியை முத்தமிட்டு வளர்ந்திருந்த செடியிலிருந்து மலர்களைப் பறித்துக்கொண்டு திரும்பும்பொழுது கால் இடறி நதியில் விழுந்துவிட்டானாம். டானூப்பின் சக்தியை எதிர்த்து நீந்த முடியாமல் அடித்துச் செல்லப்பட்டவன் கடைசியாகக் கையிலிருந்த பூக்களைக் காதிலியிடம் வீசியெறிந்து, ‘என்னை மறந்துவிடாதே’ என்று கத்தியிருக்கிறான். அதுவே காலப்போக்கில் வழக்காறாகவும், இந்த மலரின் பெயராகவும் நிலைத்துவிட்டது. இது மரணத்தின் சின்னமாவாகவும், பிரிவின் சின்னமாகவும் பல சமூகப் பண்பாட்டில் இன்னமும் தொடர்கிறது.”

“ஆனால் ஆரி, இது காதலின் சின்னமாகத்தானே இருந்திருக்க வேண்டும். அவள் அவனை மறக்காமல் இருந்தாளா?”

“நான் இன்னும் இன்க்ரிட்டை மறக்கவில்லை ஆரி. கடைசியாக அவளுக்கு இந்த மலர்களைக் கொடுத்திருக்கலாம்.”

“ஆறு மாசமாகுது சனியனே, கடந்து செல். மணியடிக்குது பார், தேவாலயத்துக்குப் போகலாமா?”

“இல்லை, நான் கடவுளைக் கொன்று இருபது வருடமாகிறது. கடைத்தெருவுக்குப் போகலாம்.

“ஆரி, இதென்ன வினோதம் டேனிஷ் மக்கள் சத்தமாகப் பேசிக்கொள்கிறார்கள், சிரிப்புச் சத்தம் வேறு கேட்கிறது. இவர்கள் மகிழ்ச்சியைக் கூச்சமில்லாமல் வெளிக்காட்டுகிறார்கள். இதெப்படி நார்டிக் கலாச்சாரமாகும்? இவர்கள் ஸ்வீடிஷ், நார்வேஜியன் மக்களிடமிருந்து வெகுவாக வேறுபட்டிருக்கிறார்கள்.”

“ஆம், நங்கள் அவர்களைவிட மேன்மையானவர்கள். நாங்கள்தான் உண்மையான வைக்கிங்குகள். நாங்கள் அவர்களை…”

“வாயை மூடு, இந்தக் கருமத்தைச் சகித்துக்கொள்ள முடியாமல்தான் தமிழ்நாட்டிலிருந்து ஓடி வந்தேன்.”

“சரி, கோபித்துக்கொள்ளாதே. வா, அந்தப் புத்தகக் கடைக்குப் போகலாம்”

“தோழி, இங்கே பார் பஷீரின் புத்தகம். கோப்பென்ஹாகெனில் பூவன் பழம்.”

“உன்னை மாதிரி ஐ.டி வேலைக்கோ, படிக்கவோ வந்த யாராவது கொடுத்திருப்பாங்க.”

“இல்லை இது எனக்காகத்தான் இங்கே காத்துக்கிட்டிருக்கு. காரணம் தேடாதே, இன்று நாம் மாயாஜாலத்தை நம்பலாம்.”

“நீ பாமாவிடமிருந்து கொஞ்ச நேரம் பஷீருக்குத் தாவிக்கிறியா?”

“இப்போ வேண்டாம், அடுத்து என்ன செய்யலாம்”

“எனக்கு ஏதாவது வாங்கணும் போல தோனுது, த்ரிப்ட் ஸ்டோருக்குப் போகலாமா”

“ஆரி, கணவன் மனைவி சண்டையை ஒட்டுக் கேட்பது தனி சுகம்தான். நமக்கு முன்னால் செல்லும் அந்தத் தம்பதிக்கு அம்பது வயதிற்கு மேல் இருக்கும். பேசும் தொனியை வைத்துப் பார்த்தால் கண்டிப்பாக லண்டன் வாசிகள்னு தோணுது.”

“வெட்கமே இல்லையா உனக்கு, கடை வந்துவிட்டது பார்”

“எனக்கு இந்த வெள்ளி கம்மல் பிடிச்சிருக்கு. நூறு க்ரோனார்தான். இதை வாங்கிக்கலாம்”

“பெண்ணே நீ… அழகா இருக்க. இது உனக்குப் பொருத்தமா இருக்கும்.”

“அப்படியா, எனக்குத் தெரியாது.”

“நீ எங்கிருந்து வருகிறாய்?”

“இந்தியாவின் தெற்கிலிருந்து.”

“எனக்குக் கேரளா தெரியும், நான் ஒருமுறை வந்திருக்கிறேன். உன்னைப் போல ஒருத்தியை இரயிலில் சந்தித்திருக்கிறேன்.”

“அவள் என்னைப் போலவென்று உறுதியாக உன்னால் சொல்ல முடியுமா?”

“கோபித்துக்கொள்ளாதே. திரும்பி வா”

“திரும்பி வந்தால் நீ கேட்ட நூறு க்ரோனார் தர மாட்டேன். வெறும் எண்பதுதான்”

“இந்தக் கம்மல் என்னக்கு நல்லா இருக்குல்ல”

“இருக்கு, இருக்கு. அதீத தற்பூசனைதான் உனக்கு”

“ஒப்புதலும் ஒப்பீடும் எனக்குச் சலித்துவிட்டது தோழி. கால் போன போக்கில் போகலாமா”

“ஆரி, இது எதோ சிவப்பு விளக்கு பகுதி போல் தெரியுது. சுத்தியும் அடல்ட் ஸ்டோர், அந்தப் பெண்கள் பாலியல் தொழிலுக்காக நிற்கிறார்கள். நீ இங்குப் பிறந்தவள்தானே, சொல்லமாட்டியா? ஒரு திருநங்கையை இப்படித்தான் சிவப்பு விளக்கு பகுதியில் அலைய விடுவியா?”

“எனக்கு எப்படித் தெரியும். இங்கு நிறைய டேனிஷ் ஆண்கள் இருப்பதால் சைட் அடிக்க வரியோன்னு நினைத்தேன்.”

“இது வேறயா, உன்னைக் கொல்லப் போகிறேன்.”

“டேனிஷ் ஆண்களுக்கு என்ன குறைச்சல், உலகம் முழுக்க எவ்வளோ மவுசு தெறியுமா. பொன்னிற கூந்தலும், நீல நிற கண்களும்… மேட்ஸ் மிக்கெல்சன் புடிக்காது உனக்கு?”

“ஆண்களிடம் தேட ஒன்றுமில்லை ஆரி. இதயத்தைப் பிளந்து ஆன்மாவை வருட ஒருத்தி வேண்டும்.”

“ஒருத்திக்கு நான் எங்கு போவேன்? வேணும்னா அந்தக் கடையில் வைப்ரேட்டர் வாங்கலாம். வைப்ரேட்டர் கூட ஒருவகையில் பெண்ணியப் புரட்சிதான்.”

“அதெல்லாம் வேண்டாம். வீட்டில் ரெண்டு சும்மாதான் கிடக்கு. லேகோஸ் போகலாம், எனக்கு ஜம்போ யானை வாங்கணும்”

“யானை பொம்மையை வச்சி விளையாடும் வயசா உனக்கு”

“வயதில் என்ன இருக்கு, என் எல்லா ஆசைகளும் நியாயமானதுதானே”

“உனக்கு ஜம்போ யானையின் கதை சொல்லவா?”

“இன்னொரு கதையா, ஆளை விடு.”

“பசிக்குது ஆரி, தாய் உணவகம் போவோமா? மூங்கில் சாப்பாடு சாப்பிடனும் போல் தோணுது.”

“மதியம் மூஸ் கறி வாங்காதேன்னு சொன்னேன் கேட்டியா… அப்பிடியே வச்சிட்ட. அதான் இப்பவே பசிக்குது”

“ஆரி, வரேவற்பறையில் ஏன் புத்தர் சிலை வைக்கிறாங்கன்னு உனக்குத் தெரியுமா? எனக்கும் தெரியாது. தொட்டா தீட்டுன்னு கருவறையில் ஒளிய அவன் ராமனோ, கிருஷ்ணனோ இல்லயே. ஒருவேளை அதனால் இருக்கலாம். நாம் கடைசி மேஜையை எடுத்துக்கலாமா?”

“தாய் உணவின் சிறப்பு தெரியுமா உனக்கு? காய்களும், கறியும், மூங்கிலும் அதன் சுயம் மாறாத ருசுயில் சமைக்கப்படுவதுதான். நாம்தான் எல்லாவற்றையும் மசாலாக்களில் ஒழித்துவிடுகிறோம். நான் சமைக்க கற்றுக்கொண்டது தெரிந்தால் அம்மா பெருமைப்படுவாள்தானே. அடுத்த முறை சந்திக்கும்போது அவளுக்குத் தாய் உணவு சமைத்துப் போடலாம் என்றிருக்கிறேன். வருடங்கள் ஒடிவிட்டன. காலையில் ஒப்புக்கொண்டதைப் போல் நீகாம் நதிக்கரையைச் சுற்றிப் பார்த்துவிட்டு உன்னை அங்கு விட்டுவிடுகிறேன். இருட்டிவிட்டது.”

“ஆரி, நீ என்னுடன் வந்துவிடுகிறாயா… உன்னை இறக்கிவிட ஏனோ மனம் வரவில்லை.”

“இது என்ன வம்பாய் போச்சு, என் ஊரைவிட்டு நான் எங்கு வருவது”

“ஸ்டாக்ஹோல்ம் போகலாம், என் வீட்டுக்கு. நான் உன்னைப் பார்த்துக்கொள்கிறேன்.”

“நீ ஏன் என்னைப் பார்த்துக்கொள்ள வேண்டும், நான் இங்கு சுதந்திரமாக நீந்திக்கொண்டிருப்பேன். நாம் ஒருநாள் ஆடிக் களித்ததற்காக இந்த நட்பு தொடர வேண்டிய கட்டாயமில்லை.”

“சரி, என் கதைகளை… கொட்ட நான் வேறொரு காதுகளைத் தேடிக்கொள்கிறேன். வசந்த காலத்தின் முதல் பூ, பூக்கும் பொழுதெல்லாம் உன்னை நினைத்துப் பார்ப்பேன். இந்த நாளின் பசுமைகளைக் கட்டுக்கதையாக ஏதோ ஒருகாலத்தில் நான் வளர்க்கப் போகும் நாய்க்குட்டியிடம் சொல்லி மகிழ்வேன்.”

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். டிப்ரசனுக்குப் பொறந்த மூதேவி, என்னை மறந்துவிட்டு உருப்படும் வழியைப் பாரு. உன் தனிமைக்கும் சோர்வுக்குமானா பதிலை உனக்குள் தேடிக்கொள்”

ஆரியின் குரல் வெகுதூரத்தில் மறைந்திருந்தது. அறைக்குத் திரும்ப மனமில்லாமல் அலைந்துகொண்டிருந்தவளுக்குச் சட்டைப் பையிலிருந்த கஞ்சா பொட்டலம் தட்டுப்பட்டது. சுதந்திர நகரான கிறிஸ்டினாவில் மூதாட்டியிடம் வாங்கியது. கோப்பென்ஹாகெனின் எந்தச் சட்டவிதிகளும் செல்லுபடியாகாத, நகரத்தின் இரைச்சல் இல்லாத, கார்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட, அந்த அனார்க்கி நகரம் ஒருவித வினோதம்தான். ரெகே இசையில் ஆடிப்பாடி மகிழ்ந்திருந்த ஹிப்பி கூட்டத்தில், தான் மட்டும் அலுவல் பணியின் அடையாளத்தோடு இருப்பதை மறைக்கக் கஞ்சா பொட்டாலத்தை வாங்கி ஒப்பேற்றிக்கொண்டாள். நாளை விமான நிலையத்திற்கு இதை எடுத்துச் செல்ல முடியாது, இங்கேயே குடித்தாக வேண்டும். பனிக்காலத்தில் வெடித்துப்போன இதழ்களின் நடுவே கஞ்சா சுருளை வைக்க, எங்கிருந்தோ வந்த ஒரு கை அவளுக்காக லைட்டரைத் திறந்தது. இருளில் ஒளிக்கீற்று பரவியது.

l kanagavarathan@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger