மின்னிமுழங்குகிறது வானம். உடலை ஊசியின் நுனி கொண்டு துளைக்கிறது காற்று. கோணிப்பை மறைப்பைச் சில்லிடச் செய்து நாசியில் படர்கிறது பனி. உள்ளங்கால்கள் வெப்பம் கண்டு வெகு நாட்கள் ஆயின. நீரோட்டமாய்த் தளும்புகிற கண்களில், எப்படியாவது இந்த மழைக்காலக் குளிரைக் கடத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் குந்தியிருந்தான் பூவான். பின், சட்டென எழுந்து, “ஏ… காத்தா… காப்பித் தூக்கக் கொண்டா. முக்கத்துக்குப் போயி கடுங்காப்பித் தண்ணி போட்டுருந்தா வாங்கியாறேன்” என்று குரலெடுத்தான் பூவான்.
காத்தாள், பூவானின் இரண்டாவது இதயம். அவனின் துடிப்பாய் இருப்பவள். கோழி அவரையின் குறு மொச்சை அவள் கண்கள். அதில் படமாய்ப் பதிந்திருப்பவன் பூவான். வெடிக்கும் கடுகான அவளின் குரலில் பூவானை, பூவா என்றழைக்கும்போது, காத்தாள் முன், தோப்பிக் கள் அருந்தியவனைப் போல் கிறு கிறுத்து நிற்பான். காத்தாள், பூவானின் தென்னங் கீற்றோலைக் குடிசைக்குள் நின்றெரியும் தீபம். அவள்தான் பூவானின் குரலுக்கு இப்போது பதில் சொல்கிறாள். “எறயாத பூவா. காப்பித் தண்ணிக்கான தூக்கக் காணாம். தேடியாறேன்” என்றாள். கொட்டும் மழைக்கு இதமான கடுங்காப்பித்தண்ணி வாங்கி வரத் துரிதமாய் இருந்தான் பூவான்.
பசுஞ்சோலை கிராமம். இவ்வூரின் வெட்டியான் குலத்தின் தலைமுறை வாரிசு பூவான். ஐந்து வயதிலிருந்தே பிணவாடையைப் பழகிவந்தவன். எரி மேடையைச் சுத்தம் செய்வது, விறகடுக்குவது, சாம்பல் ஒதுக்கி வேகா எலும்புகளைப் பொறுக்கிப் புதைப்பது என்று மயானச் சகிதமாக வளர்ந்தவன். தாகத்திற்குத் தண்ணீர் குடித்து வளர்ந்ததைவிட தோப்பிக் கள் குடித்து வளர்ந்ததே அதிகம். நுரைத்துப் புளித்த கள் கலயத்தை எடுத்து முகரும் போதே கள் வெறி கொள்வான் பூவான். பிணமில்லாத சுடுகாட்டில் கூட இருப்பான். தோப்பிக் கள் இல்லாமல் ஒருநாளும் இருந்ததில்லை பூவான். ஊரின் தலைமுறை வகையாறா அத்தனையும் அத்துப்படி அவனுக்கு. கோயில் குடியிலிருந்து தொழிலாளிக் குடியின் அத்தனை வாரிசு வரலாற்றையும் அறிந்தவன் அவன். நெஞ்சுரம் கொண்டவன். எதையும் நேர் நின்று பேசுபவன். சுடுகாடு வந்த எந்த உடலுக்கும் பாகுபாடு காணாதவன். அவன் தாத்தன், வேம்பன் கையிலிருந்து மயானக் கோலைப் பெற்றவன். வேம்பனுக்குப் பிறகு ஒற்றையாளாய் எரிமேடையில் நின்று பசுஞ்சோலையில் நல்லடக்கம் சமைப்பவன் பூவான்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then