இந்தப் பின்னலாடை மாநகரத்தில் அமர்ந்து
உலக உடல்களின் ஆடை தைப்பவன்
ஒரு ரூபாய் கூலி உயர்வுக்கு நிற்கிறான்
நூல்கண்டு விலை ஏறிவிட்டது
பண்டிகை கழியட்டும் என்றவுடன்
வயிற்றை மிஷினுக்குள் ஓடவிடுகிறான்
பண்டிகை கழிந்து
புது தேசத்தை நாட்டுப் பிரதமர் பெத்துப் போட்டான்
வரிகள் கூடியதால்
மிஷின்களுக்கு எண்ணெய் ஊற்றிச் சரியும்
அவனின் நெஞ்சத்தின் துளைகளைச் சரிசெய்ய ஊசிகளில்லை
நீங்கள் கொண்டாடும் பண்டிகைகளில்
எத்தனை கூலிகளின் உதிரமென்று அறியாதவர்கள் நிலத்தில்
தினம் ஒருவர்
இந்த மாநகர மையத்தில் தூக்கிலிடப்படுகிறார்
தன் வாழ்நாள் கூலியைப்
பிரதமர் நெற்றிக்கிட்டு…
↔↔↔↔↔↔↔↔↔↔
இந்த ஆலையில்
இரும்பை உலையிலிட்டு
எங்கள் உழைக்கும் கரங்களால் உருக்குகிறோம்.
நெருப்பில் குளிக்கும் எங்கள் உடல்
உழைப்பைத் தங்கமாக மாற்றி
ஊதியத்தைக் கரியாக வழங்குகிறது.
நான் நிற்கும் மையத்திற்கு வெகு அப்பால் பெய்யும் மழையே
உன் வருகையை உணர்கிறேன்.
எங்கள் தோலை எரிக்கும் தீச்சுவாலை சாமரம் வீசுகிறது.
நிலத்து எறும்புகள் அதன் விளிம்பில் நின்று விளையாடும்.
வா மழையே
எங்கள் உடலை உடுத்திக்கொள்
உனக்கும் சாமரம் வீசட்டும் தீ.
↔↔↔↔↔↔↔↔↔↔
நீங்கள் ஓர் அழகிய பின்னலாடையை அணியும்போது
காதுகளற்ற அரசியல்வாதிகளின் ஊரிலிருந்து
பல மைல் தூரங்களைக் கடந்து
டாலர் சிட்டியில் கூலி மனிதர்கள் இறங்குகிறார்கள்.
அவர்களுக்கென்று தனிப் பெயர்கள் இல்லை
நூல்களில் தங்கள் வாழ்வைக் கோத்துக்கொள்கிறார்கள்
வீடு திரும்பும் போது நூல் ஆயிரம் கைகளையும் கால்களையும் அறுத்துவிடும்.
ஒரு பைசா கூலி கேட்கும் குரல்வளைகளை
நூல் தூக்கிலிடுகிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா?
இந்த மாநகரத்தில்
வீதியெங்கும் நின்றுகொண்டிருக்கும் சத்ரபதியின் வாள்கள்
வலிமையுடையோர்களிடம் வழக்கிடாதே
செல்வமுள்ள முதலாளிகளிடம் சண்டையிடாதே.
உழைப்பவனின் சுத்தியல் வாள்களின் கூர்மையை மழுங்கடையச் செய்யும்.
நீங்கள் ஓர் பின்னலாடையை அணியும் போது
தினமும் “அங்கிள் ஹவ் ஆர் யு” எனக் கொஞ்சி நலம் விசாரிக்கும்
ஒரு சிறுமியின் தந்தையை நோய்களோடு வழியனுப்பி விட்டுத் திரும்பும் போது
இந்த மாநகரத்தின் கண்கள் இறுக மூடிக்கொள்கின்றன.
நீங்கள் ஓர் அழகிய பின்னலாடையை அணியும்போது
நாட்டின் தலைவன் தன் சூலாயுதத்தால் நொய்யல் நதியைக் கொன்றான்.