விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நிலவுடைமைச் சமூகக் காலத்தில் உற்பத்திக்குத் தேவையான ‘அறிவு’ பூட்டி, பூட்டன், பாட்டி, தாத்தா, தாய், தந்தை, பெரியம்மா, பெரியப்பா, சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா, சகோதரி, சகோதரன் எனக் குடும்பம்வழி உறவுகளால் கற்பிக்கப்பட்டது. குடும்பங்களில் மூத்தோர் கற்பிப்போராகவும் இளையோர் கற்போராகவும் இருந்தனர். உற்பத்தியோடு பிணைந்திருந்த இக்குடும்பவழிக் கல்வியானது செய்முறையால் கற்பிக்கும் முறையியலைப் பின்பற்றியது. நவீனக் கல்வி போன்று கோட்பாடும் செயல்முறையும் தனித்தனியானது அல்ல. குடும்பவழிக் கல்வியில் உற்பத்திக்குத் தேவையான எழுத்து, எண், கணக்கு என – மொழித் திறன் – அவர்களிடமிருந்தது. வயல்வெளியும் பட்டறையும் கற்பிக்கும் கூடங்களாக இருந்தன. இதைக் ‘குடும்பவழிக் கல்வி’ என வரையறுக்கலாம். இவ்வுற்பத்தியறிவைப் பண்டையக் காலந்தொட்டு இயற்கையோடு வினையாற்றிப் பட்டறிவு வழிப் பயின்றனர். இக்குடும்பவழிக் கல்வி உற்பத்திக்கானது; அதிகாரத்துக்கும் ஆதிக்கத்துக்கும் இங்கு இடமில்லை. ஜாதியக் கட்டமைப்பில் உற்பத்தியில் ஈடுபடாத சுரண்டும் ஆதிக்க ஜாதிகள் உற்பத்தியறிவைத் தீட்டு என வரையறுத்து இவ்வுற்பத்தியாளர்களைச் சுரண்டியதால் இதிலிருந்து விடுபடுவதற்கான நவீனக் கல்வியைக் கைக்கொண்டனர்.
நவீன மேற்கத்தியக் கல்வியானது பிரித்தானிய ஏகாதிபத்திய நிர்வாகத்துக்கான அதிகாரிகளையும் அலுவலர்களையும் உருவாக்கும் அதிகாரத்திற்கான கல்வியாகவும் இருந்தது. இதற்குக் ‘கட்டணம்’ நிர்ணயிக்கப்பட்டுக் கல்விக்கூடங்களில் ‘கோட்பாடாகக்’ கற்பிக்கப்பட்டது. முதலாளித்துவம் அறிமுகமாக்கிய உழைப்புக்கான கூலியைப் பணமாகக் கொடுக்கும் முறையானது, கல்வியை விலைக்குக் கற்கும் சூழலை ஏற்படுத்தியது. படிநிலை ஜாதியச் சமூகத்தில் சுரண்டுகின்ற ஆதிக்க ஜாதியினர் அதிகாரத்தைக் கைப்பற்றவும், சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்ட உழைக்கும் சமூகத்தினர் சமூக விடுதலைக்காகவும் கற்பது தவிர்க்க இயலாததாக மாறியது. இக்கல்வியைக் கற்றோர் நவீன வாழ்க்கை முறையைக் கைக்கொண்டதோடு ஒடுக்குமுறையில் சிக்குண்ட தங்கள் சமூகத்தாரை விடுவிக்க அவர்களைக் கற்பிக்க முற்பட்டனர். சமூக விடுதலைக்கான கற்றலானது மேற்கத்தியக் கல்வி முறையின் பாடத் திட்டத்துக்கு வெளியே நவீன அச்சு வடிவில் புத்தகம், பத்திரிகை, வார, மாத இதழ் போன்றவற்றில் பனுவல்களாக இருந்ததால் பட்டறிவிலிருந்து படிப்பறிவுக்குப் பரிணமிக்கும் தேவை உருவானது.
உலகளவிலும் உள்ளூரளவிலுமான அரசியல் ஆளுமைகளும் அறிஞர்களும் – அம்பேத்கர், நெல்சல் மண்டேலா, லெனின், சார்லி சாப்ளின், மார்டின் லூதர் கிங், ஆபிரகாம் லிங்கன், பகத்சிங், ஜூலியஸ் சீஸர், இங்கர்சால், பிரான்சிஸ் பேக்கன் போன்றோர் – சமூக விடுதலையில் புத்தகத்தின் முக்கியத்துவத்தைக் கூறினர். ‘சிறையில் தனக்கு வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம்; புத்தகம் வாசிக்கச் சுதந்திரம் வேண்டு’மெனக் கோரினார் நெல்சல் மண்டேலா. தூக்கிலிடும் இறுதிநொடி வரை பகத் சிங் புத்தகம் வாசித்தார். விடுதலையானது வாசிப்புப் பண்பாட்டோடு பிணைந்திருப்பதால் புத்தகங்களும் இவற்றைச் சேகரிக்கும் நூலகங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. நூலகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த அறிஞர் ஒருவர் “ஒரு நூலகம் திறக்கப்படும்போது நூறு சிறைச்சாலைகள் மூடப்படும்” எனக் கூறினார். உலகத்தைப் பற்றி உலகம் முழுவதிலும் இதுவரை அறியப்பட்டவை, அறியப்படாதவை, அறியமுற்படுபவை, அறிய இயலாதவை போன்றவை நூற்களாக நூலகத்தை வந்தடைகின்றன. கருத்துமுதல்வாதம் X பொருள்முதல்வாதம், ஆத்திகம் X நாத்திகம், பகுத்தறிவு X மூடநம்பிக்கை, புராணம் X அறிவியல், வரலாறு என உடன்பாடான, முரண்பாடான அறிவையும் அரசியல் நிலைப்பாடுகளையும் உள்ளூர் முதற்கொண்டு உலகளவிலான போக்குகளையும் படித்தறிந்து அறிவைச் செம்மையாக்குவதில் நூலகம் முக்கியப் பங்காற்றுகிறது. நூலகத்துக்கும் அறிவாக்கத்துக்குமான உறவைப் பிரிக்க இயலாது. நூலகத்தை அறிவாக்கச் செயலின் அங்கம் எனலாம். ஒரு துறையை மட்டுமன்றிப் பல துறைகளின் ஒத்த, வேறுபட்ட, முரண்பட்ட அறிவு நூல்கள் நூலகங்களில் அடுக்கப்படுகின்றன. புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த கோ.பெ.கோயில்பிள்ளை, தாம் வளர்ந்த கோட்டைவிளையில் ‘பாரதி படிப்பகம்’ நிறுவினார்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then