மனிதர்கள் தங்கள் தேவைக்கென்று உருவாக்கிய அமைப்புகளில் அடிப்படையான – நகைச்சுவையான பண்டம் மொழி. மொழி பற்றி மனிதர்கள் நாம் அதிகம் பேசிவிட்டோம் – அரசியல், பண்பாடு, அறிவியல், மெய்யியல் என்று அனைத்துத் தளங்களிலும் பேசியாகிவிட்டது. மொழியைச் சார்ந்தே மனிதர்களின் சமூக – பண்பாட்டு விழுமியங்கள் கட்டமைக்கப்படுகின்றன. மொழியை அடிப்படையாகக் கொண்டே தேசியங்களும், எல்லைகளும், பண்பாட்டு அடையாளங்களும், ஒழுக்கக் கோட்பாடுகளும் வரையறைச் செய்யப்படுகின்றன. மனிதர்களின் வாழ்வில் பிரிக்கவே முடியாதபடி ஒன்றியிருக்கிறது மொழி.
மனிதர்கள் மட்டுமே மொழியைக் கண்டுபிடித்தார்களா என்றால் – நாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் அளவு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. உலகில் இருக்கும் அனைத்துப் பருப்பொருட்களும் ஒன்றுடன் ஒன்று தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன. தகவல் பரிமாற்றமே உலக இருப்பின் அடிப்படை விதி என்கிறது அறிவியல். தகவல் பரிமாற்றம் இல்லாத பொருள் என்று இந்த உலகில் எதுவுமில்லை. ஒவ்வொரு பருப்பொருளும் தங்களின் உள்ளார்ந்த இருப்பின் தேவைக்கு ஏற்பத் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன.
சூரியனுக்கும் பூமிக்கும் மற்ற அனைத்துக் கோள்களுக்கும் இடையே அடிப்படையில் இருப்பது ஒளி எனும் மின்காந்த அலை மற்றும் வெப்பம் எனும் ஆற்றலின் தகவல் பரிமாற்றம் – அந்த அடிப்படைப் பரிமாற்றம் உயிர்கள் உட்பட மற்ற அனைத்துச் சாத்தியங்களையும் உருவாக்குகிறது அல்லது இல்லாமல் செய்கிறது. ஒளியும் வெப்பமுமே இல்லாமல் சூரியக் குடும்பம் என்ற ஒன்றே இல்லை. அதன் இருப்புக்கு இவையே அடிப்படையாக இருக்கிறது. இப்படியான தகவல் பரிமாற்றம் அண்டத்தில் இருக்கும் அணுக்கள் முதலான அனைத்துப் பொருட்களின் அடிப்படையாகவும் இருக்கிறது.
மனிதர்களும் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள கண்டுபிடிக்கப்பட்ட, அவர்கள் அளவில் நுட்பமான ஒர் ஒலி வடிவம் ‘மொழி’. அப்படியான இந்த ஒலி வடிவம், நம் இருப்பின், அடையாளத்தின் அடிப்படையாக இருக்கிறது. மொழி எனும் மனித அமைப்பின் கவர்ச்சித் தன்மை அதன் வடிவத்தில் இருக்கிறது. மொழி வழுவழுப்பானது. பொருள், காலம், இடம், சூழலுக்கு ஏற்ப எப்படியும் மாறக் கூடியது. மொழி ஒரு பச்சோந்தி என்று கவித்துவமாக எழுத முடியும். மொழி பற்றிய அடிப்படை உண்மையும் அதுதான். மொழியின் விதிகளின்படி ஒரு சொல்லுக்கு இதுதான் பொருள் என்று வரையறை செய்யப்பட்டாலும், அந்தப் பொருளுடனே சமூகத்தில் அச்சொல் எப்போதும் பயன்பாட்டில் இருப்பதில்லை. மாறாக, ஒவ்வொரு சொல்லும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் புவியியல் பண்பாட்டு அரசியல் சூழலைச் சார்ந்தே இயங்குகிறது.
எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் இருக்கும் ஓர் உருவகமான ‘cold hearted’ என்பதின் உணர்வுபூர்வமான பொருளினை ஐரோப்பியக் குளிரை உணர்ந்தால் மட்டுமே அறிய முடியும். மாறாக, வெப்பமண்டல நிலப்பகுதியைச் சார்ந்த நாம் ஐரோப்பியத் தட்பவெட்பத்துடன் இணைத்துப் பொருள்கொள்ளும் பல பதங்களைச் சரியான ஆங்கிலத்தைப் பேசுவதாய் நம்பி பயன்படுத்துகிறோம். ‘warm hug’ எனும் பதத்தின் உள்ளார்ந்த பொருள், மைனஸ் டிகிரி குளிர் நிலங்களில் மட்டுமே புலப்படும். ஆனால், குளிருக்குத் தொடர்பே இல்லாத வெப்பமண்டல சூழலில் நாம் ‘cold hearted’ என்றும் ‘warm hug’ என்றும் ஆங்கிலம் பேசுகிறோம். குதிரைமொழிதேரியின் நண்பகல் வெக்கையில் காதலின் பொருட்டுக் கட்டியணைப்பது கூட ஒவ்வாமையானதுதான்.
இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் பயன்பாட்டில் இருக்கும் பல சொற்கள், வேறு பொருளில் பெரும்பாலும் இழிவான சொல்லாடல்களாகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. அடக்குமுறைகளுக்கு எதிராக உருவான சில சொற்களும் கூட, இணையவெளியில் வேறு அர்த்தம் கொண்டு பரிகாசம் செய்யப் பயன்படுகின்றன. மனித மாண்புக்கு எதிரான அல்லது மனித மாண்பை மீட்டெடுக்கும் போராட்டத்துக்கான அறைகூவல்களான அச்சொற்கள் கிண்டலான தன்மையில் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் என்று சொல்லப்படுபவர்களாலேயே பயன்படுத்தப்படுவதுதான் மொழி எனும் பச்சோந்தியின் அபத்தம்.
அந்தச் சொற்கள் பற்றிப் பேசுவதற்கு முன், ஏன் சொற் பயன்பாடுகளின் முக்கியத்துவம் குறித்துப் பேச வேண்டியிருக்கிறது என்பதை அறிய, இணையத்தில் பிரபலமாக இல்லாத ஆனால், ஆங்கில உலகில் பொதுப் பயன்பாட்டில், மக்களை இழிவான அல்லது ஒதுக்கி வைக்க பொருள் தரும் ஒரு சொல்லைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. இந்தக் குறிப்பிட்ட சொல்லைப் பற்றிப் பேசுவதற்குக் காரணம், இது காலனிய ஆட்சி காலத்தில் மனிதர்களைச் சிறுமைபடுத்த, அல்லது ஒதுக்கிவைக்கபட்ட ஒருவரைக் குறிப்பிட, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அந்தச் சொல் ‘pariah’.
pariah* எனும் சொல்லின் தோற்றமும், அது எந்தக் காரணத்தால் இழிவான சொல்லாக ஆங்கிலத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது என்பது பற்றியும் நீண்ட விவாதமெல்லாம் தேவையில்லை. சக மனிதர்களைத் தீண்டப்படாதவர்களாகக் கருதும் சாதி இழிநிலையின் வெளிப்பாடே இச்சொல். இதன் அபத்தம் என்னவெனில், நாம் கொண்டாடும் டோனி மாரிசன், பெர்னார்டின் எவரிஸ்டோ உட்பட பல கறுப்பின எழுத்தாளர்களும் தங்கள் எழுத்துகளில் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதுதான்.
ஆங்கில உலகம் செய்யும் இதே தவறைத்தான் தமிழிலும் நாம் செய்கிறோம். குறிப்பாக, சமூக ஊடக வெளிகளில் செய்கிறோம். Boomer, Cringe என்றொரு நீண்ட பட்டியல் இருந்தாலும், குறிப்பாக இரண்டு பதங்களைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. அவை ‘Nibba, Nibbi*’, ‘Woke’.
Nibba, Nibbi எனும் சொற்களும் தமிழ் இணைய வெளியில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, முற்போக்காளர் என்று சொல்லிக்கொள்ளும் சிலரும் இச்சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். Negro* எனும் சொல்லின் இணைய வடிவமே இவை – பாலின அடையாளங்களுடன் இரண்டு சொற்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
இச்சொல்லின் மூலத்தை அறிய, பதினைந்தாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வழி தேடி கப்பலில் பயணித்த போர்த்துகீசியர்களிடம் செல்ல வேண்டியிருக்கிறது. இந்தியா என்று நம்பி அவர்கள் ஆப்பிரிக்காவில் தரைதட்டியபோது அவர்கள் பயன்படுத்திய போர்த்துக்கீசிய சொல்தான் Negro. அதன் பொருள் கறுப்பு. பின்னாளில் அடிமை வர்த்தகத்துடன் இணைக்கப்பட்ட இச்சொல் மனிதர்களைச் சிறுமைப்படுத்தும் இழிசொல்லாக மாறியது. சென்ற நூற்றாண்டு வரை பொதுப் புழக்கத்திலும் இருந்தது.
இன்று ஆங்கில உலகைத் தேசமாகக் கொண்ட பெரும்பான்மை கறுப்பினத்தவர்கள், Black எனும் சொல்லோடு தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவே விரும்புகின்றனர். ஒரு கறுப்பு அமெரிக்கர் தன்னை Black American என்றும், கறுப்பு பிரிட்டிஷ்காரர் Black British என்றுமே அடையாளப்படுத்திக்கொள்கின்றனர். Afro எனும் அடையாளத்தைக் கூட அவர்கள் நிராகரிக்கிறார்கள். காரணம், அவர்கள் ஆப்பிரிக்கர்கள் அல்ல, அமெரிக்கர்கள் அல்லது பிரிட்டிஷ்காரர்கள்.
n*** எனும் போர்த்துகீசிய, எஸ்பானோல் சொல் தரும் அதே பொருளைத்தான் Black எனும் ஆங்கிலச் சொல்லும் கொடுக்கிறது. ஆனால், மனித சமூகம் இரண்டு சொற்களுக்கும் வெவ்வேறான மதிப்பீடுகளைக் கொடுத்திருக்கிறது. ஒன்று மனிதர்களைக் கீழ்மைப்படுத்துகிறது, மற்றொன்று இழந்த மனித மாண்பை மீட்டெடுக்கிறது.
நாம் Warm Hug அல்லது Cold Hearted போன்ற உயர்வு நவிற்சி உருவகங்களை உள்ளார்ந்து எந்த உணர்வும் இல்லாமல் நுனிநாக்கு ஆங்கிலம் பேசுவதாய் நம்பி பயன்படுத்துவதைப் போன்றேதான், இந்த இரண்டு இணைய n சொற்களையும் பயன்படுத்துகிறோம். இணையத்தில் பரவலாக இருக்கும் சொற்களைப் பயன்படுத்துவது என்பது மேட்டிமையின் அடையாளம் மற்றும் பொதுச் சமூகத்தில் இணைந்து பங்கெடுப்பதின் அடையாளம். மனித உரிமைக்குக் குரல் கொடுப்பதாய்ச் சொல்லும் சிலரும் இந்தச் சொற்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் மொழி எனும் அமைப்பின் முரண் நகை.
சமகாலத்தில் பழைமைவாதிகள், முற்போக்காளர்கள் என்று அனைவரும் இணைந்து அதிகப்படியான சுரண்டலுக்கு உட்படுத்திய ஒரு சொல் woke. பழைமைவாத அமெரிக்கத் தலைவர் டொனால்ட் டிரம்பும் woke எனும் சொல்லை நையாண்டி செய்யப் பயன்படுத்துகிறார். உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் முற்போக்காளர்களும் பரிகாசமான சொல்லாகவே அதைப் பயன்படுத்துகின்றனர். பரிகாசம் செய்யும் முன் அச்சொல்லின் தோற்றத்தை அறிவது ஏதேனும் ஒருவகையில் உதவியாக இருக்கலாம்.
கறுப்பு அமெரிக்கர்களின் ஆங்கில மொழி வழக்கில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பயன்பாட்டில் இருக்கும் சொல் Woke. அமெரிக்கச் சமூகத்தில் தங்களுக்கு எதிராகப் பரவியிருக்கும் நிறவெறிக்கு எதிராக விழிப்பாக இருக்க வேண்டிய அறைகூவல் Woke. Awake எனும் சொல்லுக்குப் பதிலீடாகப் பெரும்பான்மையான கறுப்பு அமெரிக்கர்கள் பயன்படுத்திவரும் சொல். இருபதாம் நூற்றாண்டு மற்றும் இந்த நூற்றாண்டின் முதல் பத்து பதினைந்து ஆண்டுகள் வரை, அரசியல் விழிப்புடன் இருக்க வேண்டியதின் பிரகடனமாக இந்தச் சொல்லை கறுப்பினத்தவர், பால்புதுமையினர் உட்பட அடக்குமுறைக்கு ஆளான பல்வேறு சமூகங்கள் பயன்படுத்திவந்தனர்.
2013இல் தொடங்கிய Black Lives Matter இயக்கத்துடன் பரவலானது #staywoke எனும் இணைய குறிச்சொல். Black Lives Matter இயக்கத்துக்கும் கறுப்பினத்தவருக்கும் எதிரான வன்மமாக வெள்ளையின பழைமைவாதிகளால் அதே காலகட்டத்தில் கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டது இச்சொல். எப்போதும் போல் அதிகாரம் நிரம்பிய வெள்ளையாதிக்கம் மிக இலகுவாக இதைப் பரிகாசச் சொல்லாக இணையத்தின் உதவியுடன் உலகமெங்கும் கொண்டு சேர்த்தது. இன்று Woke Politics, Woke Capitalism என்று பல்வேறு சொற்கள் உருவாகி பொதுப் பயன்பாட்டில் இருக்கிறது. அதை மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும், முற்போக்காளர்களும் வெகு சாதாரணமாகப் பயன்படுத்திவருகிறோம்.
மனிதவுரிமை மறுக்கப்பட்டு, அடக்குமுறைகளுக்கு உள்ளான மக்கள் தங்கள் மாண்பை மீட்டெடுக்கும் அறைகூவலாய் இரண்டு நூற்றாண்டுகளாகப் பயன்படுத்திவந்த ஒரு சொல், கடந்த பத்து வருடங்களில் கிண்டலான ஒரு பதமாக – இணையத்தால், இணையத்தின் நுகர்வு வேட்கையால், அதனுடன் இணைந்த வெள்ளையின மேலாதிக்கத்தினால் – மாறிவிட்டது. இச்சொல்லைக் கிண்டல் செய்யப் பயன்படுத்தும் ஒவ்வொருமுறையும், ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய பல லட்சம் கறுப்பினத்தவர்கள் கிண்டலுக்கு உட்படுத்தபடும் அவலம், பயன்படுத்துபவரின் பிரக்ஞை இல்லாமலேயே நிகழ்கிறது.
Woke எனும் சொல் ஒருவேளை வெள்ளையின பழைமைவாதிகளோ அல்லது வெள்ளையின முற்போக்காளர்களோ முதலில் பயன்படுத்தியிருந்தால் இந்த அளவு கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகியிருக்குமா என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஓர் எளிமையான பதிலுக்கான வினா.
இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் எழுதியதைப் போல், மனிதர்கள் தங்களிடமிருக்கும் தகவல்களை இன்னொருவருக்குக் கடத்திக்கொள்ள, ஒலியைக் கொண்டு உருவாக்கிக்கொண்ட ஓர் எளிய வழிமுறைதான் மொழி. பின்பு அது ஒரு வலிமையான அமைப்பாக உருமாறியது. மனிதர்களுக்குக் குரல்வளை இல்லாமல் இருந்திருந்தால் வேறொரு வழியைக் கண்டுபிடித்திருப்போம். நமது பரிணாம தேவைகளுக்காக நாம் கண்டடைந்த அந்த அமைப்பு, காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் பச்சோந்தி. அதை அதீத கவனத்துடன் கையாளுவது மிகவும் முக்கியமானது என்று கருதுகிறேன்.
* – சக மனிதர்களை இழிவுபடுத்த அல்லது ஒதுக்கிவைக்கப் பயன்படுத்தும் இந்தச் சொற்களைக் கட்டுரையில் பயன்படுத்தியமைக்கு மன்னிப்பு கோருகிறேன். இவற்றைத் தவிர்த்துவிட்டு இந்தக் கட்டுரையை எழுத முடியாத என் இயலாமையின் காரணமாக அவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
] elavenhil@gmail.com




