பண்டிதர் அயோத்திதாசரைப் பற்றிப் பரவலாக நமக்குத் தெரிந்த தகவல்கள் அவர் ஒரு சித்த மருத்துவர்; திரு.வி.க.வின் முடக்கு வாதத்தைக் குணமாக்கியவர்; பௌத்தம் தழுவியவர்; இந்திய – தமிழக வரலாறு பற்றி நிலவிவந்த கதையாடலுக்கு மாற்றுப் பெருங்கதையாடலை உருவாக்கியவர் போன்றவையே. இத்தருணத்தில் அவரது சிந்தனைகளைக்குப் புதிய வாசகனாக நுழைந்திருக்கும் நான், ஆய்வு மாணவன் என்ற நிலையிலும், பண்டிதர் வாழ்ந்த அதே மண்ணில் வாழ்ந்துகொண்டிருப்பவன் என்ற நிலையில் இருந்துகொண்டும் அவரது சிந்தனைகளை வாசித்ததின் மூலம் நானறிந்த சில தகவல்களைப் பகிர விரும்புகிறேன்.
பண்டிதரை வாசிக்கும் எவருக்கும் கவனத்தை ஈர்ப்பது அவர் உருவாக்கும் பௌத்த மாற்றுக் கதையாடல் தளமே. இக்கதையாடலை உருவாக்க அவர் எடுத்துக்கொள்ளும் நூல்களும் அவர் பயன்படுத்தும் மொழியாராய்ச்சியும் அதில் முக்கியப் பங்கு வகிப்பவை. திருக்குறளைத் ‘திரிக்குறள்’ என்று வாசித்து முப்பாலுக்கும் பௌத்த உரை எழுத முனைந்தவர். அதேபோல ஆத்திச்சூடிக்கும் கொன்றைவேந்தனுக்கும் புதிய உரைகள் கொடுத்தவர். வள்ளுவரையும் ஔவையையும் பௌத்தச் சட்டகத்தில் நிறுத்துவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதற்கான புலமையும், பரந்த வாசிப்பும், சமஸ்கிருதம், பாலி முதலிய மொழிகளில் அவருக்கிருந்த பரிச்சயமும் ஒருசேர இருந்தாலும் அத்தகைய வரலாற்று மீட்டுருவாக்கம் ஒரு பெருஞ்செயலே. இச்சாதனையில் ஒரு சிறிய கூறான மொழியை மட்டுமே எடுத்து உற்று நோக்க விரும்புகிறேன்.
மொழி என்ற தளத்தில் பண்டிதர் ஆற்றிய இயக்கம் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட்டுள்ளது. ‘அரோகரா’, ‘இழவு’, ‘மடாதிபதி’, ‘கார்த்திகை தீபம்’, ‘தீபாவளி’ போன்ற வழக்குகள் தொடங்கி ‘தையல் சொல் கேளேல்’ என்ற ஆத்திச்சூடி வரி வரை அவர் நிகழ்த்தியிருக்கும் சொல்லாராய்ச்சியும் அதற்கு அவர் அளித்திருக்கும் ஆதாரங்களும் எளிதில் புறக்கணிக்க இயலாதவை. ‘ஆதித் தமிழர்’ என்ற அடையாளத்தைப் பண்டிதர் உருவாக்கியிருந்தாலும் ‘தமிழர்’ என்ற அடையாளம் இன்று நாம் வழங்குவதுபோல் மொழிசார் அடையாளமாக இன்றிப்
பண்பாடுசார் அடையாளமாக விளங்குகிறது. சமஸ்கிருதம், பாலி போன்ற மொழிகள் பண்டிதர் மீட்டுருவாக்கும் இந்தப் பண்பாட்டு வெளியில் தமிழுடன் இணைந்து புழக்கத்தில் உள்ளன, இன்று நாம் பேசும் தமிழில் ஆங்கிலமும் உருதுவும் இந்தியும் வேறு பல மொழிகளும் உள்ளதுபோல. இவ்விதத்தில் இந்தத் தமிழர் நாடு என்பது எப்போதும் பல மொழிகளும் பண்பாடுகளும் கூடித் திளைக்கும் களமாகவே விரிகிறது.
பண்டிதர் நிகழ்த்தும் சொல்லாராய்ச்சியைப் புரிந்துகொள்ள இருபத்தியோராம் நூற்றாண்டில் இருக்கும் நாம், நமக்குப் பரிச்சயமான ஒரு தமிழ்ச் சொல்லை ஆராய்ந்தால் அவரின் அணுகுமுறை சற்றே எளிதில் விளங்கும்.
“இன்றைய மாணவர்கள் தேர்வுகளை மிகவும் அசால்ட்டாக எடுத்துக்கொள்கிறார்கள்.” இந்தத் வாக்கியத்தில் தமிழ் அகராதியில் இடம்பெறாத சொல் ஒன்று உள்ளதல்லவா, ‘அசால்ட்’ என்ற சொல்லைச் சற்றுக் கூர்ந்து நோக்குவோம். அசால்ட் என்ற சொல்லின் பொருள் ‘துச்சமாக’ அல்லது ‘எளிமையாக’ என்று நமக்குப் புரிகிறது. நமது இலக்கியங்களிலும் அகராதிகளிலும் இல்லாத இச்சொல் பேச்சு வழக்கில் மிகவும் பொதுவாகி அன்றாட வாழ்வில் கலந்திருக்கிறது. இச்சொல்லை நான் மீண்டும் மீண்டும் தமிழ்ச் சொல் என்று கூறக் காரணமிருக்கிறது. இதே ஒலியுடன் ‘அசால்ட்’ என்றொரு ஆங்கிலச் சொல்லும் உண்டு. ஆனால், அதற்குத் ‘தாக்குதல்’ என்ற பொருள் மட்டுமே உள்ளது. இராணுவத்திலோ, கைகலப்பிலோ, வாக்குவாதத்திலோ முன்வைக்கும் தாக்குதலை ஆங்கிலத்தில் ‘அசால்ட்’ என்று குறிக்கின்றனர். இச்சொல்லுக்கும் நாம் முன்னர் பார்த்த தமிழ் ‘அசால்ட்’டுக்கும் பொருள் ஒற்றுமை இல்லை. இருப்பினும் பேச்சுவழக்கில் கூட ஆங்கிலேயர் காலத்துக்கு முன்பு இப்படியொரு தமிழ்ச் சொல் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்காது.
அப்படியானால் இந்தத் தமிழ் ‘அசால்ட்’ எங்கிருந்து பிறந்தது? இதை ஊகிக்க நமக்கொரு வழியுண்டு. எந்தவொரு மொழியிலும் பயன்பாட்டில் திரிபுகள் நிகழ்வது இயல்பே. ஆங்கில மொழியியல் ஆய்வாளரான டேவிட் கிறிஸ்டல் ஒருபடி மேலே சென்று “ஒரு மொழி உயிருடன் இருப்பதற்கான அடையாளமே இத்தகைய மாற்றங்கள்தாம்” என்கிறார். அத்தகையதொரு திரிபாலும் ஆங்கிலத்துடன் நமக்கிருந்த பரிச்சயத்தாலும் ‘அசட்டை’ என்ற சொல் ‘அசால்ட்’ என்று திரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. ‘சட்டை’ என்ற சொல்லுக்கு ‘மதிப்பு’ அல்லது ‘மரியாதை’ என்ற பொருள் உண்டு. ‘அசட்டை’ என்பது ஒரு பொருள் / மனிதர் / செயலுக்கு உரிய மரியாதையை அளிக்காமல் இருப்பது என்ற அர்த்தம் உள்ளது. அதாவது, “அசட்டையாகச் செய்து முடிப்பது” என்ற தொடரை, நமது ஆங்கில அனுபவமும் பேச்சு வழக்கிற்கே உரித்தான மழுங்கல்களும் இணைந்து ‘அசால்ட்’ என்று மாற்றிவிட்டது எனக் கொள்ளலாம்.
இச்சொல்லின் தமிழ் உருவாக்கத்திற்கு இன்னொரு வரலாறும் உண்டு. சட்டத்தில் குற்றப்பிரிவுகளில் கொலைக்கு அதிகபட்ச தண்டனையும் தாக்குதலுக்குச் சற்றே குறைந்த தண்டனையும் உண்டு. ஒருவரைக் கொலை செய்யாமல் அவர் மீது தாக்குதல் மட்டும் நடத்துவது என்பது ரவுடிகளுக்கு மத்தியில் சுலபமான செயலாகவும், அதற்குப் பழக்கப்படாத ‘கை’களைக் கூடப் பயன்படுத்தலாம் என்ற கருத்தும் உள்ள சூழலிலிருந்து இந்த ‘அசால்ட்’டின் பொருள் வந்திருக்கலாம். “அசால்ட் செய்தல்” என்பது சட்டப்படி குறைந்த தண்டனை உள்ள ஒரு குற்றத்தைச் செய்தல் என்ற பொருளில் வழங்கிவந்து, அதுவே காலப்போக்கில் “அசால்ட்டாகச் செய்தல்” என்று ஒரு சுலபமான செயலைச் செய்தல் என்ற பொருள் பெற்று இன்று ‘அசால்ட்’ என்ற சொல்லே ‘எளிதாக’ என்ற பொருளைப் பெற்றிருக்கிறது. இந்த வரலாற்றிற்கும் சான்றுகள் கிடையாது.
இவ்வாறு அசட்டை என்ற தமிழ்ப் பொருள் அசால்ட் என்ற ஆங்கில ஒலியுடன் இணைந்ததாலோ அல்லது ‘அசால்ட்’ என்ற ஆங்கிலச் சொல் தமிழில் புதிய பொருள் ஏற்றதாலோ உருவாகியுள்ள இந்தப் புதிய சொல்லுடைய உரிமை யாருக்கு?
ஒரே ஒலியுள்ள பல சொற்கள் பல மொழிகளில் இருந்தாலும் பொருளைக் கொண்டே நாம் அச்சொல் எந்த மொழியைச் சேர்ந்தது என்பதை நிறுவுகிறோம். ‘ரண’ என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்… இச்சொல்லைக் கேட்டவுடன் உங்களுக்குப் ‘புண்’ அல்லது ‘காயம்’ என்ற பொருள் தோன்றியதென்றால், நீங்கள் இந்திய அல்லது ரோமானிய அல்லது பல்கேரிய மொழியில் சிந்திப்பவராக இருக்க வேண்டும். அதுவே ‘ரண’ என்ற சொல் தவளையை நினைவுபடுத்தியிருந்தால் உங்களுக்கு ஸ்பானிஷ் தெரியும் என்று எடுத்துக்கொள்ளலாம். ‘ரண’ எனும் ஒலி தவளையைக் குறிக்கும்போது ஸ்பானியச் சொல்லாகவும் புண்ணைக் குறிக்கும்போது இந்திய அல்லது ரோமானிய அல்லது பல்கேரிய மொழிச் சொல்லாகவும் மாறுகிறது. இதேபோல ‘அசால்ட்’ என்ற சொல் தாக்குதலைக் குறிக்கையில் ஆங்கிலச் சொல்லாகவும் ‘எளிமை’ என்ற பொருளைக் குறிக்கையில் தமிழ்ச் சொல்லாகவும் மாறுகிறது என்று கொள்ளலாம்.
இருப்பினும் ‘அசால்ட்’, தமிழில் ஒரு தனிப் பொருள் கொண்ட சொல் என்று நிறுவ நம் ஊகத்தைத் தவிர ஆதாரம் ஏதுமில்லை. கடந்த அரை நூற்றாண்டுக்குள் பிறந்து நம் மொழியில் இயல்பாகப் பயன்பட்டுவரும் இச்சொல்லுக்கான வரலாறே இத்தகைய சந்தேகத்திற்குரிய கட்டுமானத்தின் மீதுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இதில் கடந்த அரை நூற்றாண்டில் மொழியியல் பற்றிய அறிவும், மொழியில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தெளிவும், அவற்றைக் குறிப்பெடுக்கும் கருவிகளும் நம்மிடம் பெருகியே வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை மீறி ‘அசால்ட்’ போன்ற எண்ணற்ற தமிழ்ச் சொற்கள் ஆதி அறிய இயலாதவாறு உருவாகியுள்ளன.
இப்போது 19ஆம் நூற்றாண்டுக்கு நகர்வோம். பண்டிதரின் சிந்தனைகளுக்குள் நுழையும் முன் அவர் எந்தத் தளங்களையெல்லாம் தொட்டுள்ளார் என்பதை அறிய அந்தப் புத்தகங்களின் ‘உள்ளடக்கம்’ என்ற பகுதியைப் பார்த்தாலே தெளிவு கிடைக்கும். அயோத்திதாசரின் பல கட்டுரைகளின் தலைப்புகளில் ‘மொழி’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதைப் பேராசிரியர் அழகரசன் சுட்டிக்காட்டினார். பண்டிதரின் சிந்தனைகள் அவரது ‘தமிழன்’ நாளிதழில் வெளிவந்தபோது ‘மொழி’ என்ற சொல் இடம்பெற்ற சில தலைப்புகளைக் காண்போம்:
- இந்து என்னும் மொழி
- சாதித் தொடர்மொழிகள் சாஸ்வதமாமோ?
- இன்னும் சுதேசிய முயற்சியென்னும் மொழி ஏனோ
- கிறீஸ்துவின் சத்திய மொழி
- ஐரோப்பியர் எல்லோருங்கூடி துருக்கியைப் பிடிக்கப் பார்க்கின்றார்கள் என்னும் மொழி பிசகு
- ஓம் என்னும் மொழி
இந்த 6 தலைப்புகளில் உள்ள ‘மொழி’ என்ற சொல்லை மட்டும் கூர்ந்து கவனித்தால் அச்சொல்லின் பன்முகம் புரியத் தொடங்கும். மொழி என்ற சொல் தற்கால வழக்கில் பாஷை என்ற பொருளிலேயே பெரிதும் பயன்பட்டுவருகிறது. ‘பழமொழி’ என்ற சொல் இன்னும் புழக்கத்தில் இருப்பதால் ‘மொழி’ என்ற சொல் ஒரு வாக்கியத்தையும் குறித்திருக்கலாம் என்று புரிகிறது. பண்டிதரின் பயன்பாட்டின் வழியே அவரது காலத்தில் ‘மொழி’ எனும் சொல் எவ்வகையான கோணங்களில் பெருவாரியாக அறியப்பட்டிருந்தது என்பது விளங்குகிறது. ஏனெனில், இவை அவரது பயன்பாட்டைக் கடந்து அவருக்கு இந்தியத் துணைக்கண்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் எழுதிய வாசகர்களின் மொழியிலும் பிரதிபலிக்கிறது. ஆகவே இத்தலைப்புகளைப் பண்டிதரின் காலத்து மொழியின் வெளிப்பாடாகக் கூடக் கொள்ளலாம்.
‘இந்து என்னும் மொழி’ என்ற தலைப்பில் உள்ள கட்டுரையில் வாசகர் ஒருவர் ‘இந்து’ என்ற சொல்லின் வரலாறைப் பற்றித் தர்க்க விளக்கங்களுடன் பதிலளிக்குமாறு பண்டிதரைக் கேட்டிருக்கிறார். இக்கட்டுரையின் வழியே ‘மொழி’ என்ற சொல்லை ‘சொல்’ அல்லது ‘வார்த்தை’ என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளது புரிகிறது. ‘சொல்’ என்ற சொல் எப்படிப் பேச்சு வழக்கை முன்னிலையாகக் கொண்டு பேச்சில் மிகச்சிறிய அங்கமான வார்த்தையைக் குறிக்கிறதோ அதேபோல ‘மொழி’ என்ற சொல்லும் ‘மொழிதல்’ என்ற வினைச்சொல் வழியே வார்த்தை என்ற பொருளைக் கொண்டிருப்பது விளங்குகிறது. இந்தப் பொருளே இன்று நாம் பயன்படுத்தும் தமிழுடன் ஒப்பிடுகையில் புதிதாகப் படுகிறது.
‘சாதித் தொடர்மொழிகள் சாஸ்வதமாமோ?’ என்ற கட்டுரையில் ஒருவர் தொழிலிலிருந்து பிறந்த, இன்று நாம் குடும்பப் பெயர் என்றும் குலப்பெயர் என்றும் கூறும், சாதியைச் சுட்டும் பெயர்கள் தேவையா என்ற வினாவை எழுப்புகிறார் பண்டிதர். இதில் இன்று நாம் குலப்பெயர் என்று சுட்டும் பெயருக்கு அவர் பயன்படுத்தும் சொல் ‘தொடர்மொழி’ என்பது. ஒருவரது பெயரைத் தொடர்ந்து மொழியும் சொல்லாதலால் அதற்குத் தொடர்மொழி என்று பொருள் கொள்ளலாம். இந்தப் புரிதல் கிட்டுவதற்கு நாம் பெரிதும் முயற்சி செய்ய அவசியமின்றி “உத்தியோகப் போக்கினாலும், விவகாரப் பெருக்கினாலும் சீனிவாசச் செட்டியென்றோ சீனிவாச ராவென்றோ ஓர் தொடர்மொழியைச் சேர்த்து வழங்கிக்கொள்ளுவது இயல்பாம்” என்று பண்டிதர் குறிப்பிடும்போதே ‘தொடர்மொழி’ என்று அவர் எதைக் குறிக்கிறார் என்பது விளங்கிவிடுகிறது. இங்கு ‘மொழி’ என்ற சொல் பெயரைக் குறிப்பது நமது இன்றைய புரிதலின்படி வியப்பளிப்பதாய் உள்ளது.
‘இன்னும் சுதேசிய முயற்சியென்னும் மொழி ஏனோ’ கட்டுரையில் விவசாயத்தையும் கைத்தொழிலையும் மேம்படுத்தாது, அத்தொழில்களில் ஈடுபட்டுவரும் பூர்வகுடிகளை மேம்படுத்தாது, சாதித் தளைகளை அறுத்தெறியாது ஆங்கிலேயரிடமிருந்து மட்டும் நாட்டை மீட்டெடுக்கும் முயற்சி பயனளிக்காது என்று அயோத்திதாசர் நிறுவுகிறார். “சுதேசிய முயற்சி” என்ற தொடரை ‘மொழி’ என்று பண்டிதர் கூறுகையில் இதற்கு முன் நாம் கண்ட ‘சொல்’ அல்லது ‘வார்த்தை’ என்ற வட்டத்தை மீறி ‘மொழி’ என்ற சொல் சற்று விரிவாவது தெரிகிறது. மீண்டும், பேச்சை முதன்மையாகக் கொண்ட வரலாற்றுப் பார்வையில் சொல்லும் சொற்றொடர்களும் மொழிதல் என்ற வினையின் பொருட்டு ‘மொழி’ என்றாவது விளங்குகிறது.
‘கிறிஸ்துவின் சத்திய மொழி’, ‘ஐரோப்பியர் எல்லோருங்கூடி துருக்கியைப் பிடிக்கப் பார்க்கின்றார்கள் என்னும் மொழி பிசகு’ ஆகிய கட்டுரைகளில் சொல், சொற்றொடர், வாக்கியம் என்ற சட்டகக் கட்டுப்பாடுகளைக் கடந்து ‘மொழி’ என்ற சொல்லை ‘வாக்கு’ அல்லது ‘கருத்து’ என்ற பொருளுடன் பயன்படுத்துகிறார் பண்டிதர். இவையும் பண்டிதரின் சிறப்புப் பயன்பாடுகளாய் மட்டும் இல்லாமல் இத்தளங்களில் வினாக்களை எழுப்பியவர்களின் பயன்பாட்டில் உள்ள பொருளாகவும் உள்ளன.
‘ஓம் என்னும் மொழி’ கட்டுரையில் ‘மொழி’ என்ற சொல்லின் பயன்பாடு ஒரு பத்திக்குள் பல பொருட்களில் தோன்றி பண்டிதரின் காலத்தில் ‘மொழி’யின் பன்முகத்தை வெளிக்காட்டுகிறது. இக்கட்டுரையின் தலைப்பில் உள்ள ‘மொழி’ என்ற சொல் துவக்கத்தில் ‘சொல்’ என்ற பொருளைக் கொடுப்பது போல் தோன்றினாலும் கட்டுரையின் முடிவில் அது “ஓம் என்னும் ஒலி” என்ற பொருளைத் தருவதாகவே இருக்கிறது. இப்பத்தியை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கையில் அயோத்திதாசர் பயன்படுத்தும் ‘மொழி’ எனும் சொல்லின் பன்மை புரிகிறது. அப்பத்தியைப் பலமுறை வாசிப்பதால் மட்டுமே ஒவ்வொரு ‘மொழி’க்கும் உள்ள பொருளும் விளங்குகிறது.
ஓம் என்னும் மொழி
‘ஓம்’ என்னும் மீரட்சரம் ஒரு மொழியா? மொழியாயின் அதன் பொருளென்ன? அதனை ஒருவன் உச்சரிப்பதால் பயனென்ன?
அன்பரே! தாம் வினாவிய சங்கை மிக்க விசேஷித்ததன்றாம். ‘ஓம்’ என்னுமீரட்சரம் ஓர் மொழியுமாகாவாம். அதற்கோர் பொருளுங் கிடையாவாம். அதனை உச்சரிக்கும் மக்களுக்கோர் பயனுந்தாராவாம். அரோகரா அரோகரா என்னும் பொருளற்ற வெறுமொழிபோல் இதுவுமோர் குறைச்சொற்கிளவி. முதல்மொழியற்றத் தொடரட் சரங்களென்னப்படும்.
அதாவது அறிவோம், தெரிவோம், முடிப்போம், எடுப்போம், நடப்போம், வருவோமென்னு மீருகெடாது துடர்ந்தொலிக்கும் இருவடி வேயாம். இஃது சிரமற்றவுடல்போன்ற வீரட்சரமாதலின் அஃதோர் மொழி முதலற்று குணமும் பொருளற்றது கொண்டு பயனுமில்லை என்பதே துணிபு.
The Utterance Called ‘Om’
(Is the two-lettered ‘Om’ a word (மொழி)? If it is a word, what is its meaning? And what benefit does one reap from pronouncing it?
Dear (reader), the question you have raised is not a very curious one. The two-lettered ‘Om’ is not a word (மொழி). It doesn’t have any meaning either. One does not reap any benefits from pronouncing it either. Like the meaningless utterance (வெறுமொழி) ‘Arokara Arokara’, this too is a semi-word (குரைச்சொற்கிளவி), or a series of letters without a root(முதல்மொழி).
That is, it is the tail-sound in words like ‘arivom’, ‘therivom’, ‘mudippom’, ‘eduppom’, ‘nadappom’ and ‘varuvom’. Therefore it is certain that this word, like a body without a head, is a two-letter combination without a root or meaning, and hence without any use.)
‘மொழி’ என்ற சொல்லிற்கு இணையாக இன்று நாம் கருதும் ‘பாஷை’ என்ற சொல்லும் வேறு பொருளில் வழங்கிவந்திருக்கிறது. ‘சுதேசிகளென்போர் யார்! சுயராட்சியம் என்பது என்னை!’ என்ற கட்டுரையில் பண்டிதர் இவ்வாறு கூறுகிறார்: “அவர்கள் யாரென்னில் தமிழ் பாஷையிற் பிறந்து, தமிழ் பாஷையில் வளர்ந்து, தமிழ் பாஷைக்கு உரியோர்களாக விளங்கும் பூர்வ திராவிடக் குடிகளேயாகும்.” இங்கு ‘பாஷை’ என்பது தமிழ் மொழியை விடுத்து தமிழ் நிலத்தைக் குறிப்பதாகத் தெரிகிறது. இவ்வாறு மொழி ஆகுபெயராக வழங்கிவந்துள்ளதும் பண்டிதரை வாசிக்கையில் புலப்படுகிறது.
‘மொழி’ என்ற ஒற்றைச் சொல் பொருளற்ற ஒலியில் தொடங்கி வாக்கியம், கருத்து என்ற பொருள் வரை விரியும் வகையை அயோத்திதாசரின் காலத்து வழக்கில் காண்கிறோம். நாம் முன்னரே பார்த்த ‘அசால்ட்’ என்ற தமிழ்ச் சொல்லுக்கும் அயோத்திதாசரின் பயன்பாட்டில் ‘மொழி’ என்ற சொல்லின் விரிவிற்கும் உள்ள தொடர்பை எப்படிப் புரிந்துகொள்வது? இவ்விரு சொற்களின் பயன்பாடுகளையும் விளங்கிக்கொண்டால் பண்டிதரின் சொல்லாராய்ச்சி வழிமுறையின் தர்க்கமும் ஆழமும் விளங்கிக்கொள்ள முடியும்.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குள் தோன்றி வெகுசன பயன்பாட்டில் உள்ள ‘அசால்ட்’ போன்றதொரு சொல்லின் வரலாறு இருளில் இருப்பதும் கடந்த நூறு ஆண்டுகளுக்குள் பண்டிதர் பயன்படுத்திய ‘மொழி’ என்ற சொல்லின் பல பரிமாணங்கள் வழக்கில் குறைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதே காலத்தில் மொழியியல் பற்றிய அறிவும் மொழியில் ஏற்படும் மாற்றங்களைப் பதிவு செய்ய வழிகளும் பெருகியிருப்பதையும் நாம் நினைவுகூர வேண்டும். பல மொழிகளும் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு பண்பாட்டுத்தளத்தில் இந்த மொழியியல் சார்ந்த அறிவிற்கும் அப்பாற்பட்டுப் பல சொற்கள் புதிய பொருள்களை ஏற்று வழங்கிவருகின்றன. இந்த மொழியே நம் சிந்தனைகளையும் கருத்துருவாக்கங்களையும் பெரிதும் பாதித்தும்வருகிறது.
வாழும் மொழிகளின் இயல்பு இவ்வாறிருக்க, தனது சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகள் பலவும் சில நூற்றாண்டுகளாக வளர்ந்துவரும் கதையாடல்களால் வேரூன்றியிருப்பதைப் பார்க்கிறார் பண்டிதர். அந்நம்பிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கும் நூல்கள் பழைமையானவை அல்ல என்பதையும் உணர்கிறார். சில நூற்றாண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட நூல்களின் எச்சங்களை மட்டுமே ஆதாரமாய்க் கொண்டு ஒரு பெருங்கதையாடல் நிலவிவரும் நிலையில், மொழியின் தன்மையறிந்து அதனை மாற்றுப்பார்வையில் காண்பதே அயோத்திதாசரின் அணுகுமுறையாக இருந்துள்ளது. தமிழ் நிலத்தின் வரலாற்றில் சமஸ்கிருதம், பாலி, தமிழ் போன்ற பல மொழிகள் கூடி வழங்கிவந்திருப்பதை அறிந்து, தன் சமகால நம்பிக்கைகளையும் சிந்தனைகளையும் கருத்துகளையும் அம்மொழிகளின் வாயிலாக மீள்கட்டுமானம் செய்கிறார் பண்டிதர். இதையே திரிக்குறளுக்கும் ஆத்திச்சூடிக்கும் அவர் அளிக்கும் மாற்று உரைகளில் பார்க்கிறோம். இந்த அணுகுமுறையைப் பண்டிதரின் பண்பாடு மற்றும் பௌத்தம் சார்ந்த அணுகுமுறைகளோடு பொருத்திப் பார்ப்பதும் அவரது சிந்தனைகளைப் புரிந்துகொள்வதற்கான ஒரு வாயிலைத் திறக்கிறது.
(மே மாதம் நீலம் புக்ஸ் அரங்கில் நடைபெற்ற அயோத்திதாசர் பிறந்தநாள் நிகழ்வில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்.)