இலக்கை அடைந்த புரட்சியா? திராவிட இயக்கத் தலைவர்களும் திராவிட இயக்கமும் ஓர் ஆய்வு

ரூபா விஸ்வநாத் | தமிழில்: அரவிந்தன் கண்ணையன்

(Economic and Political Weekly பத்திரிகையில் “A Revolution Achieved? The Latest Study of the Dravidian Movement Follows its Leaders” என்ற தலைப்பில் பேராசிரியர் ரூபா விஸ்வநாத் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம். இக்கட்டுரையைப் பிழைதிருத்தம் செய்வதில் உதவியோர் கவிஞர் பெருந்தேவியும் எழுத்தாளர் சித்ரா பாலசுப்ரமணியனும். இருவருக்கும் என் நன்றிகள்.)

ராஜன் குறை கிருஷ்ணன், ரவீந்திரன் ஸ்ரீராமசந்திரன், வி.எம்.எஸ்.சுபகுண ராஜன் ஆகியோர் எழுதிய ‘Rule of the Commoner: DMK and the Formations of the Political in Tamilnadu, 1949-1967’ புத்தகத்தின் முதன்மை நோக்கம், தொன்றுதொட்டு நிலவிய சாதிய ஆதிக்கத்தைச் சுதந்திர இந்தியாவில் கருத்தியலாகவும் நடைமுறையாகவும் திட்டவட்டமாக முறியடித்தது திராவிட இயக்கமென்றும், குறிப்பாக அதனின்று கிளைத்த முதல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் நிரூபிக்க முயல்வதே. தமிழகத்தில் 1949 முதல் 1967 வரையிலான காலத்தில் சாமானியர்களைத் திரட்டி ஜனநாயகப் பண்பாட்டை மக்களிடையே பரப்பி ‘சாமானியர்களின் ஆட்சி’ வெற்றிகரமாக நிறுவப்பட்டது என்ற வாதம் இந்நூலில் முன்வைக்கப்படுகிறது. இத்தகைய கட்டமைப்புக்கு ஆசிரியர்கள் சார்ந்திருப்பது கடந்த இருபதாண்டுகளில் எர்னஸ்டோ லக்லவ் (Ernesto Laclau), சண்டால் மூஃப் (Chantal Mouffe) ஆகிய இருவர் முன்வைக்கும் கருத்தியல். ஐரோப்பாவிலும் இலத்தீன் அமெரிக்காவிலும் வலதுசாரிகளிடம் தோல்விகளைத் தழுவியபோது இடதுசாரி கட்சிகள் வெகுஜன அரசியலைத் தந்திரோபாய மாற்றாகக் கைக்கொள்ள வேண்டுமென்ற கருத்தியலை மூஃப் முன்வைப்பதற்கு முன்பே 1960களில் தமிழகத்தில் அதைக் காண முடிந்தது என்பதே இவர்களின் மையக் கருத்து.1 அப்படித் திராவிட இயக்கக் கருத்தியலை முன்நிறுத்திய தலைவர்களான ஈ.வெ.ரா.பெரியார், சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி ஆகியோரை மதிநுட்பம் உடையவர்களாகச் சித்திரிப்பதோடு அவர்களின் எழுத்துகள் ‘தைரியமானவை’, ‘புதுமையானவை’, ‘கவனிக்கத்தக்கவை’, ‘என்றும் பசுமையானவை’ என்றும் அதிபுகழ்ச்சி செய்கின்றனர்.2

இப்புத்தகத்தில் என் கவனத்தை ஈர்த்த விஷயங்கள் பல இருந்தாலும் முதன்மையான கருத்துகள் ஏற்கெனவே மார்கரெட் ராஸ் பார்நெட், வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை, அருண் சுவாமி, நரேந்திர சுப்ரமணியம் ஆகியோரால் அடையாளப்படுத்தப்பட்டவை. திராவிட இயக்கத்தின் பங்களிப்பென்று இவர்கள் சுட்டிக்காட்டுபவை: நகரமைய தொழில்களிலும் நவீன கல்வி நிலையங்களிலும் பிராமணர்களின் ஆதிக்கம் கேள்விக்குட்படுத்தப்பட்டு மட்டுறுத்தப்பட்டது; பழங்காலத்தில் ஆதிக்கம் செலுத்திய மேட்டுக்குடியினர் புறந்தள்ளப்பட்டுச் சாமானியர் இடம் பிடித்தது; அரசியலில் அதுவரை பங்குகொள்ளாத புதியவர்கள் பங்கெடுத்தது; தன் அமைப்புகளில் ஜனநாயக முறையில் முடிவெடுக்கும் பண்பாட்டைத் (கட்சிப் பிளவுகளை எதிர்நோக்கியபோது இது நடக்கவில்லை எனினும்) திமுக கைக்கொண்டது போன்றவை. அக்கருத்துகளையே இப்புத்தகமும் சொல்கிறது.3 சாதியத்துக்கு எதிரான ‘சாமானியர்களின் ஆட்சி’யின் சாதனை என்பது வெறுமனே பிராமணர்களைப் புறந்தள்ளுவதல்ல, வெகுஜன இயக்கம் மூலமாகக் கழகம் சமூகமெங்கும் ஊடுருவியது என்கிற புதியதோர் கோணத்தை இப்புத்தகம் முன்வைக்கிறது. திராவிட இயக்கம் ஏற்கெனவே நிலைபெற்றுவிட்ட நகர்மய தொழிலாளர் வர்க்கத்தை (Professional class) புதியதோர் வணிக இடைநிலை வர்க்கம் (Petit bourgoise) எதிர்கொள்வதற்கான ஓர் அரசியல் விசை என்று சித்திரித்த டேவிட் வாஷ்ப்ரூக் (David Washbrook), பார்நெட் ஆகியோரை மறுப்பதே இப்புத்தக ஆசிரியர்களின் நோக்கம்.4 பிராமண ஆதிக்கம் எதிர்க்கப்படுவது சமூகத்தை ஜனநாயகமாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், சாதியத்தின் மீதான விமர்சனம் அந்த அளவிலேயே நின்றுவிடுவது சாதி எதிர்ப்பில் ஒரு போதாமையை ஏற்படுத்துகிறது. வாஷ்ப்ரூக், பார்நெட் ஆகியோர் திராவிட இயக்கம் பற்றிய தங்கள் சித்திரிப்புகளில், தலித்துகளின் நலன்களுக்கு ஊறு விளைந்தாலும், பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்டவர்களைத் திரட்ட, நிலவுடைமையாளர்களையும் சிறுநகர வணிகர்களையும் திராவிட இயக்கத்தார் ஆதரித்தனர் என்கிறார்கள். காலனிய காலத்தின் இறுதிக் காலம் முதல் இன்றுவரை தலித் செயற்பாட்டாளர்களும் அறிவுஜீவிகளும் இதுபோன்ற வாதங்களை முன்வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.5 இந்த விமர்சனங்களோ அதனை முன்வைத்தவர்களோ இப்புத்தகத்தில் எங்கும் சுட்டிக்காட்டப்படாதது அவலம்.

கருத்தியலாக்க வரலாறு

இப்புத்தகம் வழக்கத்திலேயே இல்லாத புதியதோர் முறைமையை முன்வைத்துத் தொடங்குகிறது. தேர்தல் அரசியலில் திராவிட இயக்கத்தின் ஈடுபாடு முக்கியமான மாற்றத்தை உருவாக்கியது என்று இவர்கள் அறுதியிட்டுச் சொன்னாலும், “தரவுகள் அடிப்படையிலான (empirical) திமுக வரலாற்றை எழுதுவது எங்கள் நோக்கமல்ல” என்கிறார்கள்6; மாறாக, திமுக சாதியை எதிர்கொண்டு மக்களை ஒருங்கிணைத்த ‘அரசியல் முறை’யைப் (Political Process) பகுத்தாராய்ந்து ‘வரலாற்றுப் புரிதலை’, தரவுகள் அடிப்படையிலான வரலாறாக எடுத்தியம்பாமல் அளிப்பதே நோக்கம் என்கிறார்கள்.7 தரவுகள் அடிப்படையிலான விசாரணைக்கு அப்பால் அரசியல் முறையைப் பகுத்தாராய்வதென்றால் அது என்ன? அது யூகங்களையும் அனுமானங்களையும் கொண்டு ஓர் அரசியல் நிகழ்வு எப்படி நடந்திருக்கலாம் என்று அரசியல் சார் கருத்தியலாக யூகிப்பது. இவ்வகையான கட்டமைப்பில் ஆசிரியர்கள் தத்தளித்திருக்கிறார்கள். தாங்கள் விவரிக்கும் அரசியல் முறைமையின் பலனாகத்தான் 1967இல் திமுக ஜெயித்ததென்றும் அது தமிழ்ச் சமூகத்தையே மாற்றி அமைத்ததென்றும் வாதிடுகிறார்கள்: “திமுகவின் வரலாறே அடிமட்ட குடிமகனை ஈர்த்துத் தொகுப்பாக்குவதே” (பக்கம் 262). தரவுகள் அடிப்படையிலான வரலாற்றெழுத்து வகையல்ல என்று சொன்னாலும், தேர்ந்தெடுத்த தரவுகளைச் சார்ந்தே எழுதியிருக்கிறார்கள். அப்படியான சில தரவுகளைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை விளக்காமல் மேலே சென்றுவிடுகிறார்கள்.

தரவுகள் அடிப்படையில் எழுதும் பாணியை நிராகரிப்பது, தாங்கள் கட்டமைக்கும் கதையாடலுக்கு இடையூறு செய்யும் சிக்கலான கேள்விகளைப் புறந்தள்ள ஆசிரியர்களுக்கு உதவுகிறது. உதாரணத்துக்குத் தலித்துகளின் பங்கேற்புக் குறித்துக் கேள்வி எழுப்பிவிட்டு, “திமுகவின் அணிதிரட்டலில் தலித்துகளின் பங்கேற்பைக் களத் தரவுகளின் மூலம் ஆராய்வது கடினமான ஒன்று”8 என்கிறார்கள். அணிதிரட்டலில் தலித்துகள் ஒதுக்கப்பட்டமையை விவாதிக்காததன் மூலம் தலித்துகள் தொடர்பான தொடர் ஒடுக்குதல், சமூக அநீதி, அவர்கள் மீதான வன்முறை ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டிய சங்கடமான சிக்கலைத் தவிர்த்துவிடுகிறார்கள்.

இந்தப் புத்தகம் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாகத்திலும் நான்கு அத்தியாயங்கள் உள்ளன. முதல் பாகம் ‘கருத்தியல் உருவாக்கம்’ (Ideation) என்ற தலைப்பில் ஆரம்பகால திராவிட இயக்கத்தின் அரசியல் கருத்தியல்களை விவரிப்பது. இந்தப் பாகத்தில் அண்ணாதுரை, கருணாநிதி போன்ற தலைவர்களின் எழுத்துகள் புதிய கோணத்தில் (creatively interpreted) விளக்கப்படுகின்றன. அவை திராவிட இயக்கம் பற்றிய பிற ஆய்வாளர்களின் மாற்றுக் கருத்துகளை, அதாவது விதந்தோதாத எதிர்மறை கருத்துகளை, மறுப்பவையாக இருக்கின்றன. உதாரணத்துக்கு, திராவிட இயக்கத்தின் ஆதரவாளர்களும் தொண்டர்களும் திராவிட நாடு ஒரு பிராந்திய சுயராஜ்யம், தனி நாட்டுக்கான கோரிக்கை என்றே நம்பினார்கள் என்றாலும் இந்த ஆசிரியர்கள் அது அப்படியான கோரிக்கையே அல்ல என்றும் ஆரியம் என்பதற்கு எதிர்தன்மைக் கொண்ட சாதிய இடையீடாகத் திராவிட நாடு கோரிக்கையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற புதியதோர் வாசிப்பைக் கோருகிறார்கள்.9 இது படிப்பதற்குச் சுவாரசியமாக இருக்கிறது என்பதைத் தாண்டி வேறொன்றும் சொல்வதற்கில்லை. (இவ்விளக்கம் நிஜத்தில் ஆசிரியர்கள் சொல்லும் ‘அரசியல் செயல்பாட்டு முறை’ மூலம் நம்மால் அறுதியிட்டு உண்மைத் தன்மையை அறியக் கூடியதாக இல்லை).

தமிழ் மீதான பற்று, மொழியை அடிப்படையாகக் கொண்ட தேசியவாதமல்ல என்று வாதிடப்படுகிறது. திராவிட இயக்கம் மீது பற்றுடைய ஆய்வாளர்களே தமிழ்ப் பற்றுப் பகுத்தறிவற்ற ஆதிமுதல் தன்மைக் கொண்ட (primordialist elements) குணாதிசியம் என்று சித்திரிப்பதை மறுப்பதற்கு அந்த விவாதக் கோணம் உதவுகிறது. அதற்கு வலு சேர்க்கத் திராவிடச் சித்தாந்தத்தில் தமிழ் எனக் குறிக்கப்படுவது தமிழ் மொழி மட்டுமல்ல, மாறாக அது பிராமணரல்லாத கருத்தியல்: அதாவது மொழிசார் தேசியவாதம் போல் தோற்றமளிப்பது உண்மையில் பிராமணரல்லாதார் அரசியல்தான் என்கிறார்கள். இந்த மாற்றுப் பார்வை கூட ஒரு குறிப்பாகத்தான் உணர்த்தப்படுகிறது. அக்கருத்தை நிறுவ மாநிலம் தழுவிய அரசியல் மாற்றத்தில் அதன் பங்கு என்று எதையும் நிறுவாமல் தேர்ந்தெடுத்த தலைவர்களின் சில எழுத்துகள் மூலமே நிறுவ முயல்கிறார்கள். மூன்றாவது அத்தியாயத்தில் அண்ணாதுரையின் கடவுள் பற்றிய சொல்லாடலை பெரியாரின் நாத்திகத்தைக் கைவிட்டதாகவோ மதச்சார்பின்மையைக் கைவிட்டதாகவோ பார்க்கக் கூடாதென்றும்; மாறாக மக்களின் மத நம்பிக்கைகளைச் சாதுர்யமாக உள்வாங்கி அதன் சொல்லாடலை மனித நேயம் சார்ந்ததாக மாற்றிய ஞானியாகவே அவரைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள்.10

இந்த அத்தியாயங்களிலுள்ள மன்னிப்புக் கோரல் தொனி மேற்சொன்ன இடத்தில் உச்ச நிலையை அடைகிறது. அண்ணாதுரையின், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கோஷமும் திமுக தலைவர்களின் கடவுள் பற்றிய சொல்லாடல்களும் ஒரு திருப்பத்தை அடைந்ததைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாதென்று உணர்ந்து, இது புது வகையான இறையியல் கருத்தாடல் என்று சொல்கிறார்கள். இந்தப் புதிய இறையியல் சொல்லாடலில் இறைத்தன்மை லோகாயத ரீதியாக, உள்ளுறை உணர்வாகத் (human immanence) தோன்றும் நிலையைக் குறிக்கிறதென்றும் வாதிடுகிறார்கள் (அண்ணாதுரை சொல்லும் ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்ற சொற்றொடர் அதற்கு உதாரணம் – மொழிபெயர்ப்பாளர் சேர்க்கை). ஆனால், இதற்கு மேலதிக ஆதாரங்களைக் கொடுக்க முடியாமல் அவர்களே, திமுக இப்படியான இறையியலுக்கு எந்த விரிவான தத்துவத்தையும் அளிக்கவில்லை என்று ஒப்புக்கொள்வதோடு இது தொடர்பாக பெரியாரின் பார்வையையும் அண்ணாதுரையின் பார்வையையும் யூகிக்க மட்டுமே முடியுமென்கிறார்கள்.!11 முடிவாக, திமுகவின் எழுச்சியில் யதார்த்த அரசியல் அல்லது தேசியவாதத்தின் நிழல் அல்லது மதம் சார்ந்த பிரச்சாரத்திலான மாற்றங்களைச் சுட்டிக்காட்டும் ஆய்வாளர்களின் முடிவுகள் தங்களுக்கு ஒவ்வாததாக இருக்கும்போது அவை அந்த ஆய்வாளர்களின் உளவியல் போதாமை என்று புறந்தள்ளிவிடுகிறார்கள். உதாரணத்துக்கு, “இதுவரையிலான ஆய்வுகளுக்கும் விவாதங்களுக்கும் திமுகவின் ‘மிக ஆச்சரியப்படத்தக்கச்’ செயல்பாடு அசௌகரியமாக (அவர்கள் எதிர்பார்க்கும் தோல்விக்கு மாறாக இருப்பதால் – மொழிபெயர்ப்பாளர் சேர்க்கை) இருப்பது போல் தோற்றமளிக்கிறது” என்கிறார்கள்.12

 

 

கேள்விக்குரிய நம்பகத்தன்மைக் கொண்ட கருத்தியலும், பிழையான பயன்பாடும்

மேலே சொன்ன “ஆச்சரியப்படத்தக்கச் செயல்பாடு” என்ன? மூஃபேயின் இடதுசாரி வெகுஜன அரசியல் உருபெரும் முன்பே அதன் ஒரு வடிவைத் திமுக செயல்படுத்தியது என்பதையே மையக் கருத்தாக ஆசிரியர்கள் வைக்கிறார்கள். மார்க்ஸியத்துக்கு அப்பாலான கருத்தியல் (Post-marxism) என்று சுட்டப்படும் நுணுக்கமான கருத்தியல்களோடு அதிகப் பரிச்சயமில்லாத பொது வாசகனுக்கு ஆசிரியர்கள் எந்த விளக்கத்தையும் அளிக்காமல் தீர்க்கதரிசன தொனியிலான பிரகடனங்களையே தருகிறார்கள். உதாரணத்துக்கு ஒன்று: “மக்களைக் குறிக்கும் பெயராகத் தமிழ் என்ற சொல்லைப் பயன்படுத்தினால், அது ஆதிக்கத்துக்கு எதிரான நிலப்பரப்பைக் குறிக்கும் சொல்லாகத் தமிழ் இருப்பதை நீர்த்துப் போகச் செய்யக்கூடும். அப்படியான புரிதலைத் தடுக்கப் பிராமணரல்லாத திராவிடர்களைத் தமிழர்கள் என்று குறிப்பதோடு அச்சொல் திராவிடக் குடியரசை இந்தியத் தீபகற்பத்தின் முழுமைக்குமான குறிக்கோள் என்ற தமிழகத்தின் முன்னெடுப்போடு சேர்த்திடல் வேண்டும்” (“If the name of the people, Tamil, is not to eclipse the internal frontier necessary for the counter-hegemonic assertion, the catachrestic naming of non-Brahmin Dravidian as Tamil is to be complemented by the synecdochic claim of TN to aspire for a Dravidian republic that spread all over peninsular India.” Page-63).

மூஃபேயின் கருத்தியலோ மிக எளிமையானது. விலக்குதல்களைக் (exclusionary) கொண்ட வலதுசாரி அரசியலை எதிர்க்க இடதுசாரி வெகுஜன அரசியலை (populist) முன்வைத்தது அது. அதன்படி பல்வேறு வெகுஜன தரப்புகளும் முற்போக்கு அரசியல் தரப்புகளும் நீள்வாக்கில் (horizontal movement) ஒரு பொது எதிரியை – அது அரசியல் ஆதிக்கம் செலுத்துபவர்களையோ, தன்னலக் குழுக்களையோ, இந்தப் புத்தகத்தின் கருத்தியலின்படி பிராமணர்களையோ, ஆரியர்களையோ – உருவகித்து அதற்கு எதிரான அணியாகத் திரள்வது.

மூஃபேயின் சட்டகத்தை ஏற்போர் அதற்கு உதாரணமாகத் திராவிட இயக்கத்தை ஏற்கத் தயங்குவார்கள். அவரது கருத்தியலை விமர்சிப்போர் அதன் முக்கியக் குறையாகச் சுட்டிக்காட்டுவது, ஏற்கெனவே இருக்கும் வெகுஜனவாதம் தேர்தல் அரசியலுக்குள் வரும்போது, “ஒரு மைய முரண்பாடுடையதாகிறது. அது மக்களிடம் அதிகாரம் என்று தொடர்ந்து உதட்டளவில் மட்டுமே பேசிவிட்டு நிஜத்தில் குறுங்குழு அரசியல்வாதிகளின் கையிலேயே அதிகாரத்தைக் குவிக்கிறது.”13 பல தரப்பினரையும் உள்ளடக்கிய நீள்வாக்கான (horizontal) வெகுஜன அரசியல் என்று பேசினாலும் நிஜத்தில் தலைவர்களை மையப்படுத்திய செங்குத்தான (vertical) அதிகார திரள்வாதமயமான திராவிட இயக்கத்தின் தன்மை மூஃபேயின் விமர்சகர்களுக்குத்தான் எடுத்துக்காட்டாக இருக்குமே தவிர மூஃபேயின் கருத்தியலுக்கு எடுத்துக்காட்டாகாது. தொண்டர்கள் ‘சாமானியர்கள்’ என்போரிடமிருந்து வெகுவாக விலகி, உயரத்தில் இருக்கும் தலைவர்களுக்கே கணிசமான பொருளும் பணமும் நிதியாக அளிக்கிறார்கள்.14 அம்மாதிரி தலைவர்கள் கட்டமைக்கப்பட்ட ஒரு குழுவாக இருக்கிறார்கள் – பெரும் சிந்தனையாளர் (பெரியார்), அறிவில் சிறந்த மூத்த சகோதரர் (அறிஞர் அண்ணாதுரை), கவித்திறன் மிக்கவர் (கலைஞர் கருணாநிதி), மீட்பர் (எம்.ஜி.ஆர்), அம்மா (ஜெயலலிதா) போன்ற அடைமொழிகளுடன். மேலும், அவர்கள் வழிநடத்திய கட்சிகள் தொடர்ந்து அவர்களின் வாரிசுகளையே தலைவர்களாகக் கொண்டிருக்கின்றன. இது மூஃபே முன்வைத்த நீள்வாக்குச் செயல்பாடல்ல. தேர்ந்தெடுத்த தலைவர்களின் சில எழுத்துகளையே சமூக மாற்றத்துக்கான காரணம் என்று கட்டமைப்பதின் போதாமையை நான் ஏற்கெனவே சுட்டிக்காட்டினேன். யூகங்களின் மீது எழுப்பப்பட்ட கருத்துருவாக்கத்தின்படி கூட இப்புத்தகம் வாசகனுக்கு நம்பகத்தன்மையளிப்பதில்லை. தலைவர்களை மையப்படுத்திய செயல்பாட்டினைக் குறித்த விமர்சனத்தை எதிர்கொள்ளாமல், அதை ஏற்றுக்கொள்கிறது.

இந்நூலின் ஆசிரியர்கள் மூஃபேயின் கருத்தியலைத் திமுக, அக்கருத்தியலின் உருவாக்கத்துக்கு முன்பே, கைகொண்டதென்று வாதிடும்போது இன்னொரு தவறையும் செய்கிறார்கள். மூஃபேயின் நீள்வாக்கான பல்தரப்பு இணைப்பில் ஒவ்வொரு தரப்பும் தனக்கான தனித்துவமான கோரிக்கைகளை, மற்றவர்களின் கோரிக்கைகளோடோ மொத்தக் கொள்கையோடோ முரண்படாமல், முன்வைத்துக் கைக்கோக்கிறார்கள். பெண்ணியவாதிகள், சூழலியலாளர்கள், பாலினச் சிறுபான்மையினர் ஆகியோர் சமத்துவத்தின் பொருட்டுக் கைக்கோப்பதை அதற்கான உதாரணமாகக் கொள்ளலாம். ஆனால், இப்புத்தகத்தின்படி திராவிட இயக்கத்தில் உள்ள பல்வேறு தரப்பினரையும் கொள்கைகள் இணைப்பதில்லை, சாதிய அடையாளங்களே இணைக்கின்றன. சாதி பலவித உள்முரண்கள் கொண்ட மக்கள் தொகுப்புகளை உள்ளடக்கியது. இதை எப்படி “இடதுசாரி” வெகுஜன செயல்பாடு என்று சொல்லமுடியும் என்பது தெளிவாக இல்லை. வாசகருக்கு விளக்காதது ஒன்றுண்டு, திராவிட இயக்கத்தின் அரசியல் செயல்பாடுகள் சாதியத்தை முறியடிக்காததோடு அதனை நிலைபெறவே செய்தன என்பதே அது. திராவிடக் கட்சிகளின் தேர்தல் வெற்றிகள் சாதி அடிப்படையிலான குழுக்களுக்கு அரசு இயந்திரத்தின் மூலம் சலுகைகள் அளிப்பதன் மூலமே சாத்தியமாகிறது என்பது வெளிப்படையான இரகசியம். திராவிடக் கட்சி ஆதரவின் பலனை வடதமிழகத்தில் வன்னியர்களும் தென்தமிழகத்தில் தேவர்களும் அறுவடை செய்கின்றனர். இவ்விரு சாதிகளும் தலித்துகளுக்கு எதிரான வன்முறையில் முன்நிற்பவை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இலக்கிய கற்பனா உலகம்

‘கற்பனை’ என்று தலைப்பிட்ட பகுதி தலைவர்களின் புனைவெழுத்துகளை ஆழ விவரிக்கிறது. பொது அபிப்ராயத்தில் திமுகவின் பரப்புரைகளுக்குப் பெரிதும் உதவியது மேடைப் பேச்சுகளும் சினிமாவுமே என்ற கருத்து இருப்பதாகவும் அதனைத் தாங்கள் மறுப்பதாகவும் ஆசிரியர்கள் சொல்கிறார்கள். திராவிட இயக்கத்தின் நுட்பமான கருத்தியல்கள் தலைவர்கள் எழுதிய நாவல்களிலும் நாடகங்களிலும்தான் இருக்கிறதென்கிறார்கள். அது உண்மையென்று ஏற்றாலும் அது வேறு கேள்விகளை எழுப்புகிறது. தங்கள் தொண்டர்களில் சிறுபான்மையினரை நோக்கி மட்டுமே எழுதப்பட்ட இவற்றைப் பொதுஜனத் தளத்துக்கென்று முன்வைத்த சினிமாக்களில் சொன்னவற்றைவிட அதிக ‘உண்மைத்தன்மை’ இருப்பதாக ஏன் நாம் ஏற்க வேண்டும்? அதுவும் வெகுஜன அரசியல் சார்ந்த செயல்பாட்டினை விளக்கும்போது அவ்வாறு செய்வது முறையா?

நிஜ வாழ்வில் கருத்தியல்களின் தாக்கங்களை அளவிடுவது கடினமானதென்பதால் திராவிட இயக்கக் கருத்தியல்களின் தாக்கம் எந்த அளவு மக்கள் மனங்களை மாற்றியது என்பது போன்ற கேள்விக்கு ஆசிரியர்களால் பதில்கள் அளிக்க முடியாததை நாம் பெரிதும் பொருட்படுத்தத் தேவையில்லை. ஆயினும் அவர்கள் எடுத்துக்கொள்ளும் சாதி போன்ற கருத்தியல்களிலேயே திராவிட இயக்கத்தின் பங்களிப்புப் பற்றிய புரிதல் பிழையானதாகவே இருக்கிறது. கருத்தியல்களின் அர்த்தங்களை அதனளவிலேயே புரிந்துகொள்வது முழுமையாகாது. மாறாக அந்த முன்னெடுப்புகளும் சொல்லாடல்களும் அன்றாட வாழ்வில் எவ்வாறு நிலைபெறுகிறதென்பதை ஆராய்ந்து அதனையும் சேர்த்தே கருத்தியலின் தாக்கம் பற்றிய மதிப்பீட்டைக் கட்டமைக்க வேண்டும். நிஜ வாழ்வில் கருத்தியல்கள் எப்படி மாற்றமடைகின்றன, என்ன நுட்பங்கள் தொலைந்து போகின்றன, சமூகத்தின் எந்த அங்கத்தினர் அக்கருத்தியலால் திரள்கிறார்கள் என்பன போன்ற கேள்விகளையும் கேட்பதே அரசியல் ஆய்வு முழுமைப் பெற உதவும். திராவிட இயக்கத்தின் மிக முக்கியச் செயல்பாடான சாதி எதிர்ப்புப் பற்றிய விவாதங்களை எடுத்துக்கொண்டால், அவை தேர்தல் அரசியலில் ஒரு பெரும்பான்மைத் தொகுதியோடு (electoral majority) இயைந்து இருக்கும் வகையிலேயே அமைந்தன.

திராவிட இயக்கத் தலைவர்களின் எழுத்துகளைத் தேர்தல் பெரும்பான்மைக்கான அரசியல்சார் பிரகடனங்களாகப் பார்க்காமல் சாதியைப் புரிந்துகொள்வதற்கான சட்டகங்களாகவே ஆசிரியர்கள் பார்க்கிறார்கள். இந்திய வரலாற்றிலும் தொன்மங்களிலும் சமூக மோதலுக்கு உருவகமாகச் சொல்லப்படும் சூத்திர அரசர்களுக்கும் அவர்களைச் சார்ந்து வாழ்ந்த பிராமணர்களுக்கும் இடையேயான உரசல் எனும் தேய்வழக்கையே தங்கள் கதைகளின் கருக்களாகத் திராவிட இயக்கத் தலைவர்கள் எடுத்துக்கொண்டார்கள், அதையே இவர்களும் வாசகருக்கு எடுத்துக்காட்டுகின்றனர். இக்கதைகளின் நாயகர்களான சூத்திர அரசர்கள் போர்களின் மூலம் உருவாக்கியவையே ராஜ்ஜியங்கள் என்றாலும் தாங்கள் முடிசூட்டுவதால்தான் அரசர்களின் அதிகாரம் நிலைபெறுகிறதென்ற கருத்தியல் மூலம் பிராமணர்கள் அரசர்களுக்கும் மேலாகத் தங்கள் நிலையை ஸ்தாபித்துக்கொள்வதாகச் சித்திரிக்கப்படுகின்றனர். அவ்வப்போது சாஸ்திர ரீதியான தீண்டாமை, பிராமணர்களுடனான உறவில் மட்டும் விமர்சனத்துக்கு உள்ளாகிறது. தலித்துகள் சாதியச் சமூகம் முழுமைக்கும் தொழில் ரீதியாக அடிமைப்பட்டிருந்தது விமர்சிக்கப்படுவதில்லை. இந்த வாழ்வியல் யதார்த்தத்துக்கு மாறாக ஆண்மை மிக்கச் சூத்திர அரசனுக்கும் முறையற்ற வழியில் அதிகார நிலை வகிக்கும் பிராமணருக்கும் இடையேயான அடையாளப் போராட்டமே நமக்குக் காணக் கிடைக்கிறது. திராவிட இயக்கக் கருத்தியலாளர்கள் “சாதியப் பிரச்சனையை மக்களின் அறிவை மயக்குமுறச் செய்யும் ஆரியர்கள் அல்லது பிராமணர்களின் சாமர்த்தியம்… ஆரியர்கள் அல்லது பிராமணர்கள் எனும் பிரச்சினை கருத்தியல் சார்ந்த ஒன்று (ideational one)” என்றே புரிந்துகொண்டார்களென்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.

மேலே சொன்ன சாதிப் பற்றிய பார்வை தமிழகத்தின் அறிவுத் தளத்திலும் அரசியல் தளத்திலும் பிரதானமாக நிலைப்பெற்றிருக்கிறது. எனினும் சாதிப் பற்றிய இன்றைய ஆய்வறிஞர்களின் கருத்து, சாதி கருத்தியல் சார்ந்ததோ சாஸ்திர படிநிலைச் சார்ந்ததோ இல்லை என்பதே. பிராமணர்கள் தாங்கள் பிரம்மனின் தலையிலிருந்து தோன்றியவர்கள் என்ற புராண கதையைக் கட்டமைத்துத் தங்கள் ஆதிக்கத்தை நிறுவியது எதிர்க்கப்படுவது நியாயமே. அதே சமயம் பிராமணர்கள் அப்படிச் சொல்லிக்கொண்டதாலேயே மற்றவர்களும் சாதிய அமைப்பை ஏற்றுக்கொண்டார்கள் என்று சொல்ல இயலாது. ஏன் அவர்கள், குறிப்பாக தலித் அல்லாதார், சாதிய முறையை ஏற்றனர் என்ற கேள்வி முக்கியமானது. சாதி அகமண உறவுமுறை (endogamous) அடிப்படையிலான சமூக அமைப்பு; பொருள் ஈட்டலுக்கும் வாய்ப்புகளையும் அந்தஸ்தையும் ஆதிக்கக் குழுக்களுக்குள் வைத்திருக்கவும் உதவும் அமைப்பு என்கிற பார்வை ஆய்வாளர்களுக்கு இருக்கிறது. இன்றும் இந்தியாவில் விவசாயத்தின் அடிப்படையாக இந்தச் சாதி அமைப்பே செயல்படுகிறது.

தலித்துகளுக்கும் மற்றவர்களுக்கும் – உபரியை (surplus) உற்பத்திச் செய்தாலும் பாரம்பரியமாக நிலமற்றவர்களுக்கும் மற்றவர்களுக்கும் – இடையேயான உறவே தமிழகத்திலும் இந்தியாவிலும் இருக்கும் மிக முக்கியமான சமூகப் பிளவு. தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் சாதி இந்துக்களுக்கு ‘ஊர்’ என்றும் தலித்துகளுக்குச் ‘சேரி’ என்றும் தனித்தனி வசிப்பிடங்களுண்டு. இதனை நகரத்திலும் காண முடியும். விவசாய உற்பத்தியைச் சாதிப் பற்றிய கருத்துருவாக்கத்திலிருந்து முற்றாக ஒதுக்கினால்தான் புதிதாக உருவாக்கப்பட்ட ‘பிராமணரல்லாதார்’ என்கிற தொகுப்புக்குள் பிளவுகள் இருப்பதையோ, அவற்றுள் இருக்கும் முரண்களையோ, இல்லாதது போல் சித்திரித்து முற்போக்கு அரசியலை, பிராமணியத்தின் ஆபத்தான வசீகரத்தைப் பற்றி மட்டுமே பேசி முன்னெடுக்க முடியும். இந்தக் கதையாடலின் சாகசம் சாதாரணமானதல்ல.

புத்தகம் முழுமையிலும் ஒரேயொருமுறைதான் ஆசிரியர்கள் விவசாய உற்பத்தி பற்றிக் குறிப்பிடுகிறார்கள், அதுவும் விவசாய உற்பத்தியின் பின் இருக்கும் வர்க்கப் பேதங்களைப் பூசி மெழுகும் திராவிட இயக்கக் கருத்தியலே நிஜம் என்று நிறுவும் வகையில் இருக்கிறது. “பிராமணிய – சாதிய ஆதிக்கம் விவசாயத்தில் ஈடுபடும் வகுப்புகளுக்கிடையேயான உறவைத் தீர்மானிக்கிறது” என்கிறார்கள் (பக்கம் 262). இது தமிழகத்தில் நிலவுடைமையாளர்களாகவும் ஆதிக்கம் செலுத்துவோராகவும் பிராமணர்களே இருந்தனர் என்ற பொய் பிம்பத்தை அளிக்கிறது. ஆனால், பெரும்பான்மை நிலவுடைமையாளர்கள் பிராமணரல்லாதார்17; அவர்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கியது தலித்துகளை.18 திராவிட இயக்கக் கருத்தியலை அடியொற்றி இந்நூலின் ஆசிரியர்களும் தலித்துகளின் ஒடுக்குமுறையை மறைத்துப் பிராமணரல்லாதாரை ஒடுக்கப்பட்டவர்கள் என்கிறார்கள். இதில் சாதி இந்துக்களுக்கும் தலித்துகளுக்கும் இருக்கும் பிளவு பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதாருக்குமாகத் திரிக்கப்படுகிறது.19

சாதியும் பொருள்முதலும்

புத்தகத்தில் மிகுந்த நம்பிக்கையளிக்கக் கூடிய பகுதி இந்தக் கடைசிப் பகுதிதான். ஆசிரியர்கள் மற்ற இடங்களில் சுட்டுவது போல் சித்தாந்த சூத்திரம் மட்டுமே திமுக வெற்றிக்குக் காரணம் என்பது போலல்லாமல் இவ் அத்தியாயங்கள்தாம் முதன்முதலாகத் திமுகவின் வெற்றிக்கு, சந்தர்ப்ப வரலாற்றுக் காரணங்களைச் சுட்டிக்காட்டுகிறது.20 1960களில் உணவுப் பொருள் விலையேற்றமும் அது உண்டாக்கிய பரவலான அதிருப்தியும், முக்கியமாக மாணவர்களின் உக்கிரமான இந்தி எதிர்ப்புப் போராட்டமும், அது வளர்ந்துவரும் இளம் தளகர்த்தர்களை முடுக்கிவிட்டதும் வரலாற்றுச் சூழல் காரணங்கள். அந்த இளம் தலைவர்களில் பலர் பிற்காலத்தில் கட்சியில் தலைமைப் பதவிகளுக்கு வந்தனர்.

இப்பகுதிதான் சமூகநீதிக்கான பயணத்தில் திராவிட இயக்கம் எதிர்கொண்ட சிக்கல்களை அங்கீகரிக்கிறது. திமுக சமாளிக்க முடியாத சிக்கல்களாக மூன்று சிக்கல்களை ஆசிரியர்கள் அடையாளப்படுத்துகின்றனர்: கட்சியைப் பிளவுப்படுத்திய தலைமைகளுக்குள்ளான போட்டிகள், சாதி வேற்றுமைகள், தேர்தல் நிதிச் சேகரிப்புக்காக மக்கள் நலத்திட்டங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டது ஆகியவை. இம்மூன்றில் நாம் கடைசி இரண்டையும் – நீடித்து நிற்கும் சாதி வேற்றுமை, வறுமையை எதிர்கொள்வதில் கண்ட தோல்வி – உற்று நோக்குவோம். நீடிக்கும் வறுமைக்கும் ஏற்றத்தாழ்வுக்கும் ஆசிரியர்கள் அநேகக் காரணங்களை அடுக்குகிறார்கள். சில நேரங்களில் திராவிட இயக்கம் மகத்தான சாதனைகள் புரிந்ததாகச் சொல்லப்படுகிறது,21 வேறிடத்தில் முதலாளித்துவமே மாநிலத்தில் பிரச்சினைகளை உண்டாக்குகிறதென்றும், முதலாளித்துவத் தேரின் கீழ் தமிழகம் நசுங்குவதாகவும் அதற்கு எதிராக மக்களைக் காப்பது திராவிட இயக்கமே என்றும் அதனால் அவ்வியக்கத்தைக் குறைகளுக்குப் பொறுப்பாக்குதல் கூடாது என்கிறார்கள்.22 இப்பார்வையின்படி பொருளாதாரச் சுரண்டலால் பாதிக்கப்பட்டவர்கள் திராவிட இயக்கத்துக்கு நன்றியுடன் இருக்க வேண்டும். அவ்வியக்கம் இல்லையென்றால் விளைவுகள் இன்னும் மோசமாக இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. முதலாளித்துவம் அரசியலுக்கு அப்பாற்பட்ட தானியங்கி விசை என்று சித்திரிப்பது பிழையானது. முதலாளித்துவம் வளர நவீன அரசுகள் உருவாக்கும் சட்டங்கள் துணைபுரிந்தால்தான் முடியும். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பொருளாதார அழுத்தங்களையும் சூழல்களையும் வரலாற்றுக் காரணங்களையும் கணக்கில் எடுக்காமல் மாநில அரசைப் பொருளாதாரத் தோல்விக்கோ வெற்றிக்கோ தனித்துக் குற்றம் சாட்டவோ புகழவோ கூடாது.

முதலாளித்துவம் தன்னகத்தே பொருளைக் (capital) குவித்துக்கொள்வதை அரசுகள் ஓரத்தில் நின்று வேடிக்கை பார்க்காது. திராவிட இயக்க ஆதரவாளர்களே கூட இந்த ஆட்சியின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் முதலாளித்துவத்தின் வளர்ச்சி வெற்றிகரமாக நடந்தது என அங்கீகரித்துள்ளனர். மாநிலத்தின் பொருளாதார நிலைக்குத் திராவிட இயக்கத்தைப் பொறுப்பாளி ஆக்குவதற்கு எதிரான மிக ஆச்சரியமான வாதத்தைப் புத்தகத்தின் இறுதியில் ஆசிரியர்கள் முன்வைக்கிறார்கள்: திராவிட இயக்கங்கள் பணக்காரர்களின் நலனைப் பாதுகாத்ததே சாமர்த்தியமான சாதனை23 என்று சொல்லப்படுகிறது. ஏழைகளுக்கானவர்கள் என்று தங்களை முன்வைத்துக்கொண்டே தேர்தலில் ஜெயிப்பதற்காகப் பணக்காரர்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் இலாவகம்தான் ஆசிரியர்களால் ‘நீதியின் தாக்கம்’ (‘justice effect’, pp 259-60) என்று நாமகரணம் சூட்டப்படுகிறது. “சோஷலிஸத்தைத் தைரியமாகவும் உள்ளூர்ச் சூழலுக்கேற்பவும் சுவீகரித்தது” திராவிட இயக்கம் என்று சொல்லப்படுவதை அவர்கள் கண்கொண்டு பார்த்தால் நமக்கும் தெரியுமோ என்னமோ?

காணாமல் போன தலித்துகள்

சாதி என்பதை வெறும் வசீகரமான பொய் தத்துவங்கள் என்று கட்டமைப்பதன் மூலம் ஏழைகளுக்கான திட்டங்களில் ஏற்பட்ட சமரசங்கள் எப்படித் தலித்துகளைப் பாதித்தன என்று விவாதிக்காமல் ஆசிரியர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். ஏழைகளை மையப்படுத்திய திட்டங்களிலிருந்து பின்வாங்கும்போது கிராமப்புறங்களில் அது தலித்துகளுக்கான திட்டங்களைக் கைவிடல் எனலாம். அதேபோல் நில உரிமைகளில் மாற்றங்கள் கொண்டுவரும்போது நிலமற்றவர்களுக்கு அது உதவவில்லையெனில் சாதிய உறவுகளில் ஒரு சாராரின் சார்பாக மட்டுமே செயல்பட்டதாக மாறிவிடுகிறது.

சரி, சாதிய வேற்றுமைகள் குறித்தும் சாதியச் சுரண்டல்கள் பற்றியும் நேரடியான மதிப்பீடு ஏதாவது புத்தகத்தில் இருந்ததா என்று பார்ப்போம். ஆரம்பம் முதல், ஏற்கெனவே சுட்டிக்காட்டிய மாதிரி, திராவிட இயக்கம் மீதான தலித் அரசியல்வாதிகளும் அறிவுத்தரப்பினரும் முன்வைத்த விமர்சனங்களைப் பெரும்பாலும் ஆசிரியர்கள் கண்டுகொள்ளவில்லை. புத்தகத்தின் ஆரம்பத்தில் அரைப் பக்கத்தில் தலித்துகள் விலக்கப்பட்டார்கள் என்பதை மறுத்துப் பொருள்முதல் (capital) வெளியிலிருந்து வருவதென்று சொல்கிறார்கள். மேலும், முன்பு குறிப்பிட்டதைப் போல், திராவிட இயக்கத்தில் தலித்துகள் பங்கேற்பை மதிப்பிடுவது ‘சவாலானது’ என்று சொல்லி முடித்துக்கொள்கிறார்கள். புத்தகத்தின் முடிவில் இன்னும் சுருக்கமாகத் “தலித்துகளின் வெகு பரிச்சயமான (திராவிட இயக்கம் பற்றிய) விமர்சனங்கள்” தோற்றவை என்று சொல்கிறார்கள் (பக்கம் 268); இன்னோர் இடத்தில் திராவிட இயக்கத்தின் சாதனைகளையும் தோல்விகளையும் “சாதிக் குழுக்கள் அடிப்படையில் விளக்க முற்படுவது தேவையற்றதும் விரயமானதும்” (பக்கம் 273) என்கிறார்கள். இத்தகைய வாதம் தலித்திய விமர்சனங்களுக்கான பதில் என்று கொள்ள முடியாது; மாறாக, 1960கள் முதல் இன்றுவரை வெளிவந்த இனங்கள் பற்றிய கள ஆய்வுகள் தமிழகத்தில் அன்றாட வாழ்வில் தலித்துகள் மீதான சாதிய ஒடுக்குதலைச் சுட்டிக் காட்டிய உண்மையை விவாதிக்காமல் திசைத் திருப்பவே உதவுகிறது.

சுயாதீனமான தலித் அரசியல் செயற்பாட்டாளர்கள் திராவிட இயக்கத்தின் தோற்றத்திற்கு முன்பிருந்தே செயல்பட்டுவந்ததோடு, அவர்கள் தொடர்ச்சியாகத் திராவிட இயக்கத்தின் மீது விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள் – ஆயினும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள் பொதுவில் சொல்லப்படும் தலித்துகளின் விமர்சனங்களே திராவிட இயக்கத்தால் உருவான ஜனநாயகத்தால் “சாத்தியமானது” என்கிற பொய்ப் பரப்புரையை மீட்டுச் சொல்கிறார்கள் (பக்கம் 268)! மேலும், சத்தியவாணி முத்து, இளம்வழுதி இருவரும் திராவிட இயக்கத்தில் முக்கியமான இடத்தை அடைந்தனர் என்று வாசகனுக்குத் தவறான தகவல் அளிக்கின்றனர். இதனை சத்தியவாணி முத்து படித்திருந்தால் ஆச்சரியப்பட்டிருப்பார். ஏனென்றால், அவர் கட்சியில் பல காலம் பணியாற்றிவிட்டு 1974இல் கருணாநிதி மீதும் கட்சியின் மீதும், தலித்துகளின் நலன்கள் கவனிக்கப்படவில்லையென்றும், தனக்கான மரியாதைக் கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டி விலகினார்.24 சத்தியவாணி முத்துவின் சுயசரிதையில் இவையெல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இரண்டு தலித்துகள் மட்டுமே ஒரு வாக்கியத்துக்கு மேலாக இடம்பெறுகிறார்கள், இருவரும் கட்சி விசுவாசிகள். ஒருவர் எழுத்தாளர் இமையம், இவருக்கு முடிவுரையில் சில பத்திகள் கிடைக்கின்றன. ஆசிரியர்களின் கூற்றுப்படி இமையம் “தன் இருத்தலே கட்சியினால்தான்” என்கிறார், தான் எழுத்தாளராக இருந்ததும் கட்சியாலேயே சாத்தியமானதென்கிறார். ஒன்றிரண்டு உதாரணங்கள் விதிவிலக்குகள்தானே தவிர மாதிரியல்ல என்பார்கள் ஆய்வாளர்கள். “அவரை மாதிரி கோடிக்கணக்கில் இருந்தார்கள்” என்று அடித்துச் சொல்வதாலேயே அது ஆதாரத்தின் அடிப்படையிலானதாக மாறிவிடாது (பக்கம் 275).

ஒரு வாக்கியத்துக்கு மேல் இடம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் கட்சியின் வாழ்நாள் தொண்டரான பண்ணன் (Pannan). கட்சியின் பன்முகத்தன்மைக்குப் பண்ணன் உதாரணமாகக் காட்டப்படுகிறார். உடுமலை நாராயணன் ஒரு தேர்தலில் தனக்குதவ பண்ணனை அழைத்து வந்தபோது அவரது அரசியல் வாழ்வு தொடங்கிற்று. பண்ணன் அழைத்துவரப்பட்ட காரணத்தை வெளிப்படையாக ஆசிரியர்களே சொல்கிறார்கள், நாராயணன் போட்டியிட்ட தொகுதியில் “பண்ணனின் உறவினர்களும் சாதியைச் சேர்ந்தவர்களும் கணிசமாக இருந்தனர்” (பக்கம் 195). பண்ணன் கட்சிக்கு விசுவாசமாக உழைக்க ஆரம்பித்தார். ஆனால், “அவருடைய செல்வாக்கு பல உள்ளூர் முக்கியஸ்தர்களுக்கு, அவர் சாதியின் காரணமாக, எரிச்சலை அளித்தது.” பண்ணன் உயிருக்கே ஆபத்தான சூழல் இருந்தது. ஆரம்பத்தில் கட்சி அவருக்கு மெய்க்காப்பாளர்களை நியமித்தாலும் அவரை அச்சுறுத்திய சக்திகளை வெளிப்படையாக எதிர்கொள்ள கட்சி உதவவில்லை. கடைசியில் “வணிக வகுப்பினரைக் கட்சிக்குள் சேர்க்க முயலும் நேரம்” பண்ணனின் “சமரசமற்ற” நிலைப்பாடு சிக்கல்களைக் கொடுக்கவும், அவரை வேறு ஊரிலேயே குடியமர்த்தினார்கள் (பக்கம் 198). இரண்டு கட்சித் தொழிற்சங்கங்களிடையேயான வன்முறை மோதல் ஒன்றில் பண்ணன் மயிரிழையில் உயிர்தப்பினார் என்று அவர் பற்றிய நினைவுக் கூரல் முடிகிறது. பண்ணன் அந்த மோதலில் காயமின்றித் தப்பியது நாராயணனுக்கு “ஏமாற்றம்” தருகிறது. ஏனென்றால் “எதிர்க்கட்சித் தொழிற்சங்கத்தின் தலைவர்கள் பலர் பண்ணனின் சாதியினர். பண்ணன் காயப்பட்டிருந்தால் அவர்கள் திராவிட இயக்கச் சங்கத்திற்குத் தாவியிருப்பார்கள்” என்ற கணக்குதான். இந்தச் செய்திகளை விவரிப்பதன் மூலம் ஆசிரியர்கள் தங்கள் மையக் கருத்தே அடிபட்டுப் போகிறதென்பதை உணரவில்லை.

பண்ணனின் அரசியல் பிதாமகனுக்கு, பண்ணனின் உயிருக்கே ஆபத்தென்றாலும், அவர் தன் சாதியினரைத் திரட்ட மட்டுமே தேவைப்பட்டார். தலித்துகளைச் சேர்த்துக்கொள்வதென்பது சமூகநீதியை ஒட்டி அல்ல, தேர்தல் கணக்குகளை மனத்தில் கொண்டே.

முடிவாக, தலித்திய விமர்சனங்களை ஆசிரியர்கள் நேரடியாக எதிர்கொள்ள மறுக்கிறார்கள், கட்சி சார்புடன் பொய்களை முன்வைக்கிறார்கள், ஒருவிதமான ஆதிக்க உறவையே கட்சி தலித்துகளுடன் கொண்டிருந்தது என்கிற ஆதாரம் கண் முன்னே இருப்பினும் அதனைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் திராவிட இயக்கத்தைக் காலனிய ஆட்சிக்கு எதிரான பிராமண ஆதிக்கமும் இந்திமயமானதுமான இந்தியத் தேசியத்தோடு ஒப்பிட்டு முன்னதற்குத் தார்மீக உயர்வும் அரசியல் படைப்பூக்கமும் இருந்ததென்று வாதிட்டு நிறுவுவதே ஆசிரியர்களின் நோக்கமாக இருக்கிறது. ஆனால், இந்த ஒப்பீடே, எளிதில் வீழ்த்தக்கூடிய ஒன்றோடு தனக்கு வேண்டியதை ஒப்பிடும் ‘Strawman’ வகை. திமுகவின் தொடக்கக் காலத்தில் அதன் எதிர்க்கட்சிகளால் அரைகுறைகள் என்று எள்ளி நகையாடப்பட்டதையும் இன்று இந்துத்துவத் தரப்பைச் சார்ந்த தமிழ்ப் பிராமணக் கருத்தியலாளர்கள் திராவிட இயக்கத்துக்கு எதிராகக் களமாடுகிறார்கள் என்பதையும் கல்விப் புலம் சார் ஆய்வாளர்களின் திராவிட இயக்கம் மீதான விமர்சனத்தையும் ஒன்றாகக் பாவித்து புறந்தள்ளுவது முறையல்ல. மேலும் கல்விப் புலம் சார்ந்து திராவிட இயக்கம் பற்றி எழுதிய பலர் அவ்வியக்கத்துக்கு ஆதரவாகவே எழுதியிருக்கின்றனர். திராவிட இயக்கம் பற்றி எழுதிய நரேந்திர சுப்ரமணியன், அருண் சுவாமி, வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை, கலையரசன், விஜயபாஸ்கர் போன்றவர்களும், இப்புத்தக ஆசிரியர்களைப் போலவே அடித்தள மக்களைத் திராவிட இயக்கமே முன்னேற்றியதென்று நம்பிய எம்.எஸ்.எஸ்.பாண்டியன் போன்றவரும்தாம் கல்விப் புலத்தில் அதிகம்.25 திராவிட இயக்கத்தின் குறைபாடுகள் பற்றிய முக்கியமான விமர்சனங்கள் மேட்டுக்குடியினரிடமிருந்தே வந்திருக்கின்றன எனப் புத்தக ஆசிரியர்கள் கட்டமைப்பதற்கு மாறாக, ஒடுக்கப்பட்டவர்களிடமிருந்தே காத்திரமான விமர்சனங்கள் வந்திருக்கின்றன. ஆனால், இப்புத்தகம் அவ்விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றாததோடு திராவிட இயக்கம் மீதான ஆய்வுகளை விரிவாக்கமும் செய்யவில்லை.

Notes:

1. Mouffe, Chantal For a Left Populism, New York and London: Verso, 2018.

2. For example, bold: p 100; stunning: pp 72, 131; ingenuity: pp 72, 81, 107; brilliant: p 36; rem- arkable: 80, 150, 157, 193; evergreen: p 110.

3. Marguerite Ross Barnett, The Politics of Cultural Nationalism in South India (Princeton: Princeton University Press, 1976); V Geetha and S V Rajadurai, Towards a Non-brahmin Millennium: From Iyothee Thass to Periyar (Kolkata: Samya 1998); Narendra Subramaniam, Ethnicity and Populist Mobilization: Political Parties, Citizens, and Democracy in South India (London: Oxford University Press, 1999); Arun Swamy, “The Nation, the People and the Poor: Sandwich Tactics in Party Competition and Policy Formation, India, 1931-96,” PhD Dissertation, University of Cali- fornia, Berkeley, 1996.

4. David Washbrook, “Caste, Class and Domi- nance in Modern Tamil Nadu: Non-Brahminism, Dravidianism and Tamil Nationalism,” Francine Frankel and M S A Rao, eds, Dominance and State Power in Modern India: Decline of a Social Order (New Delhi: Oxford, 1989), pp 204-64.

5. An incomplete list of primary and secondary sources that nevertheless demonstrates the range and scope of Dalit critique since the colo- nial period to the present day includes: Gajendran Ayyathurai, “Foundations of Anti-caste Consciousness: Pandit Iyothee Thass, Tamil Buddhism and the Marginalised in South India,” PhD Dissertation, Columbia University, 2011; J Balasubramaniam, Sooriyothayam Muthal Uthayasuriyan Varai: Dalit Ithalgal 1869-1943, (Nagercoil: Kalachuvadu, 2017); Marguerite Ross Barnett and Steven Barnett, “Contemporary Peasant and Postpeasant Alternatives in South India: The Ideas of a Militant Untouchable” Annals of the New York Academy of Sciences (220) 6, 11 March 1974, pp 385-410; Raj Shekhar Basu, Nandanar’s Children: The Paraiyans’ Tryst with Destiny, 1850-1956 (New Delhi: Sage, 2011); Karthikeyan Damodaran and Hugo Gorringe, “The DMK Has Been Two-faced in Its Commitment Towards Social Justice,” Wire, 19, August 2018; https://thewire.in/politics/dmk-ka- runanidhi-tamil-nadu-caste-politics; Eugene Irschick, Politics and Social Conflict in South India: The Rise of Non-brahminism and Tamil Separatism, 1916-29 (Berkeley: University of California Press, 1969); T P Kamalanathan, Mr K Veeramani, MA, B L, is refuted and the historical facts about the scheduled caste’s struggle for emancipation in South India, (Ambedkar’s Self Respect Movement: Tirupattur, 1985); Sathiavani Muthu, Enathu Porattam (Madras: The Justice Press, 1982); D Ravikumar, “Iyothee Thass and the Politics of Naming,” The Sunday Pioneer, 28 September 2005, www.countercurrents.org/dalit-ravikumar280905.htm; Stalin Rajangam, Elutha Kilavi: Valimarikkum Vara- lattru Anupavankal (Nagercoil: Kalachuvadu, 2017) and Netuvali Vilakkukal: Dalit Alumaikalum Porattankalum, (Nagercoil: Kalachuva- du, 2022); P Sivakami, Unmaikku Munnum Pinnum (Chennai: Uyirmai Patippakam 2012); Thol. Thirumavalavan, trans. Meena Kandasamy, Talisman: Extreme Emotions of Dalit Liberation (Kolkata: Bhatkal and Sen 2003); Rupa Viswanath, The Pariah Problem: Caste, Religion and the Social in Modern India (New York: Columbia University Press, 2014). Furthermore, even a cursory reading of legislative assembly re- cords as well as newspapers from the period— mainstays of historical research on politics avoided by our authors—demonstrates the ubiquity of Dalit political dissent in Tamil Nadu.

6. Krishnan R K, Sriramachnadran R and Subagunarajan V M (2022): “Rule of the Commoner: DMK and the Formations of the Political in Tamil Nadu,” London: Cambridge University Press, p 6.

7. Krishnan R K et al (2022), p 7.

8. pp 7-8. Here, nota bene, they reveal a further fundamental methodological mistake in the way they pose the problem of Dalit exclusion. 21 They confine themselves to speaking of how challenging an assessment of Dalit participation within the party would be, not even raising the issue of Dalit exclusion from the party, or from its policy initiatives, which would be impossible to glean if research is limited to loyal cadres, Dalit or otherwise.

9. Cf Barnett, op cit.

10. This chapter also contains a series of highly contested assumptions about religion and human society, following from the evolutionary sociology of Robert Bellah and the philosophical speculations on humankind and modernity formulated by Charles Taylor. Our authors posit as truth such unverifiable claims as the idea that humans have a species specific need to “fill a lack” with higher conceptions of “the Good,” and that as modernity develops, persons have to replace their disenchanted world with bits and pieces of tradition to fill the gap once filled by god or gods. These arguments from social-psychological “necessity” are metaphysical and linked to long-discredited strands of “modernisation theory” (a view that posited religion and other forms of tradition would naturally disappear with the onset of modern states and market economies). These views have also been criticised for their Eurocentric “application” of theory derived from the European and North American experience to the histories and politics of the global South. The authors appear surprisingly unaware of thiswhen they write, for instance, that if the leaders of the DMK had remained firmly committed to atheism, the Tamil people’s social psyschology, unable to cope, would have broken out “widespread schizophrenia” (p 73). The most astute critic of these flawed universal theories of religion remains Talal Asad: see Genealogies of Religion: Discipline and Reasons of Power in Christianity and Islam (Baltimore: Johns Hopkins, 1993) and Formations of the Secular: Christianity, Islam, Modernity (Stanford: Stanford University Press, 2003).

11. p 82; further evidence of the speculative character of this argument is revealed on the same page in phrases such as, “Annadurai appears to have taken recourse,” and “Annadurai and his colleagues apparently found” (emphases mine).

12. p 72, emphasis mine.

13. Michael Hardt and Antonio Negri, Assembly, (Oxford: Oxford University Press, 2017), p 23

14. Bernard Bate, Tamil Oratory and the Dravidian Aesthetic: Democratic Practice in South India, (New York: Columbia University Press, 2009).

15. There is even one novel highlighted that to this reader seems to oppose an anti-caste agenda, because it ends in celebrating a “cross-cousin” marriage, a paradigmatic instance of caste endogamy that is also culturally valorised as specifically Tamil See discussion of Puthaiyal, pp 169-71.

16. p 150, emphases mine.

17. Washbrook, op cit.

18. Cf Dharma Kumar, Land and Caste in South India: Agricultural Labour in the Madras Presidency During the Nineteenth Century, (Cambridge: Cambridge University Press, 1965); Benedicte Hjelje, “Slavery and Agricultural Bondage in South India in the Nineteenth Century,” Scandinavian Economic History Review, 15 (1-2) 1967, pp 71-126; Rupa Viswanath, The Pariah Problem: Caste, Religion and the Social in Modern India (New York: Columbia University Press, 2014).

19. Barnett, pp 316-18.

20. See fn 23.

21. For example, p 272. Here they cite in support of their position the recent book by A Kalaiyarasan, and M Vijayabaskar: The Dravidian Model: Interpreting the Political Economy of Tamil Nadu (Cambridge: Cambridge University Press, 2021). That book’s positive conclusions, however, have been shown to be mistaken in reviews by John Harriss and Judith Heyer: see Harriss, “The Politics of Dignity and Development: The Tamil Nadu Story,” Economic & Political Weekly, (57), 17, 23 April 2022, pp 69-71; Heyer, “Inclusivity and Growth under the ‘Dravidian Model’: Controversial Omissions and Claims,” Economic & Political Weekly, (57) 8, 19 February 2022, pp 28-30. As Heyer notes, and in common with the book under review, The Dravidian Model “ignores the deep seated hostility towards Dalits seen in discrim- ination against them and caste atrocities con- tinuing to the present day. Tamil Nadu is known for its casteism, with very strong antagonism to Dalits and severe infighting among other caste groups” (p 29).

22. p 12: Dravidianism’s “formation of the political… [is] a mitigating influence on the violent processes of capital accumulation.”

23. The book frequently resorts, as here, to a peculiar argumentative style in which historically contingent change is redescribed as logical- political necessity. The DMK’s ideology, in the authors’ vision, was carefully designed by its leaders, who knew exactly how much to stress their anti-caste, pro-poor, atheist credentials, and how much to temper them in service of political viability; Dravidianist mobilisation repre- sents the unfolding of an ingenious political “logic.” The bizarre idea that political processes could be described as following a universal logic is derived from the work of Laclau and Mouffe. In their oeuvre, “logic” is not used in the ordinary sense of the term. It is a metaphor- ical usage, where “logic” means what must happen in human politics—must, that is, according to a metaphysical doctrine of human social psychology based on Lacanian psycho- analytic principles as interpreted by Laclau and Mouffe. Cf Andrew Norris, “Laclau and the Logic of ‘the Political,’” Philosophy and Social Criticism, 32 (1), 2006, 111-34.

24. See Muthu, Enathu Porattam.

25. The party was indeed derided as rabble by political competitors when it first emerged, and Tamil Brahmin ideologues today are at the forefront of Hindutva campaigns against Dravidianism. But it is sloppy at best and dis- ingenuous at worst to assimilate this stance to that of scholars on the topic like Narendra Subramanian, Arun Swamy, V Geetha and S V Rajadurai, Kalaiyarasan and Vijayabaskaran, and most influentially, M S S Pandian, who, like the authors themselves, have unanimously celebrated Dravidianism’s alleged promotion of the underdog.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!