இலக்கியமும் மொழிபெயர்ப்பும் – அசதா

இலக்கியத்துக்கான வரையறைகள் காலத்துக்கேற்ப மாறிவந்திருக்கின்றன. ஆதியில் வாழ்வை எப்படி வாழ வேண்டுமென்று போதிப்பவையாக இருந்து இன்று தன்போக்கில் நிகழும் வாழ்வை உணர்வின் தளத்தில் பிரதிபலித்துச் செல்பவையாக இலக்கியங்கள் இருக்கின்றன. இன்னும் பலதரப்பட்ட வரையறைகளை இலக்கியத்துக்குப் பொருத்திப் பார்க்கலாம். நவீன வாழ்வின் எல்லா வகைமைகளும் இலக்கியத்துக்கும் பொருந்திப் போகின்றன. கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் என மனிதனின் அகத்தை விண்டு பார்த்து மொழிக்குள் அதனைப் பொதியும் சூக்குமமே இலக்கியமாகிறது.

சமயங்களில் நல்ல இலக்கியப் படைப்பு நம்முன் ஒரு கண்ணாடியைப் பிடிக்க மட்டுமே செய்கிறது. கணமேனும் அதில் நம்மையே நாம் காண்கிறோம். மொழிபெயர்ப்பு இலக்கியம் என்பது சற்றே பெரிய கண்ணாடி. அதில் உங்களுக்குப் பக்கத்தில் உங்களைப் போல இன்னொருவரைப் பார்க்கிறீர்கள். அவர் உங்களைப் போல இல்லை, உங்கள் மொழியைப் பேசவில்லை, உங்கள் உணவையொத்து இல்லை அவரது உணவு, அவரது உடைகள் உங்களுடைய உடைகளினின்று வேறுபட்டிருக்கின்றன. ஆனால், மெல்ல அது நிகழ்கிறது. உங்களது பிம்பமும் அவனுடைய பிம்பமும் ஒன்று கலக்கின்றன. கடைசியில் உங்களை அவனிடமிருந்து பிரித்தறிய முடிவதில்லை. மொழிபெயர்ப்புச் செய்யும் ரசவாதம் இதுதான். அது சுவர்களை உடைக்கிறது. எல்லைகளை அழிக்கிறது. உலகின் மானுடர் அனைவரும் ஒருவரே என்கிறது.

மொழிபெயர்ப்பு, இலக்கியத்தின் ஓர் அங்கம். அது படைப்பிலக்கியத்துக்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல. மனித இனத்துக்கு மொழி இன்றிமையாதது போலவே மொழிபெயர்ப்பும் முக்கியமானதாகிவிட்டது, பேபல் கோபுரத்திலிருந்தே அதன் தேவை தொடங்கிவிட்டது.

மொழியும் மொழிபெயர்ப்பும்

மொழியானது எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ளும் சங்கேதம் என்பதிலிருந்து அது புழங்கும் நிலப்பரப்பின் வாழ்க்கை முறை, சமூக உணர்வு, சிந்தனைப் போக்கு, அரசியல், கலாச்சாரம், நம்பிக்கைகள் ஆகியவை உட்பொதிந்த சிக்கலானதோர் அமைப்பாக மாறியிருக்கிறது. அன்றாடப் பேச்சு முதல், கலை, அறிவியல், தத்துவம் எனப் பல்வேறு புல வெளிப்பாடுகளுக்கும் மொழியே பிரதான வெளிப்பாட்டுக் கருவி. சமகால அரசியலும் சிந்தனையும் மொழியைக் கூர்மையாக்குகின்றன அல்லது இவற்றின் பாதிப்பில் மொழியின் பரிமாணங்கள் விரிவுகொள்கின்றன. காலத்துக்கேற்பவும் மனிதனது சிந்தனை விரிவுக்கேற்பவும் மொழி தன்னைத் தகவமைத்துக்கொள்கிறது. இன்னொரு பக்கம் மொழியுடன் ஒரு மனிதன் கொள்ளும் உறவு ஒரே நேரத்தில் வெளிப்படையானதாகவும் அந்தரங்கமானதாகவும் இருக்கிறது. ஒரே மொழியினை அறிந்த இருவேறு நபர்களிடத்தும் மொழி ஒன்றேபோல இயங்குவதில்லை. ‘எனது மொழி எல்லை என்பது எனது உலகின் எல்லை’ என விட்ஜென்ஸ்டைன் குறிப்பிடுவதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

மொழியின் ஆதார இயங்கியலை விளங்கிக்கொள்ளும் ஒருவரால் மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தையும் விளங்கிக்கொள்ள முடியும். மொழிபெயர்ப்பு என்பது வார்த்தைகளை மாற்றி வைப்பது மட்டுமல்ல என்பதும் புரியும். யோசே ஸரமேகோ என்னும் போர்ச்சுகீசிய எழுத்தாளர், “எழுத்தாளர்கள் பிராந்திய இலக்கியங்களைப் படைக்கிறார்கள், மொழிபெயர்ப்பாளர்கள் பிரபஞ்ச இலக்கியங்களைப் படைக்கிறார்கள்” என்கிறார்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger