சொன்னபடி கேக்கலைன்னா
ஒன்னைய அலாக்கத் தூக்கி
ஊசியில ஒக்கார வச்சுருவேன்
கழுமரத்தைக் காட்டி மிரட்டும் அம்மா இயற்கையாகிவிட்டாள்.
பச்சைப்பசும் குரும்பைகளைக் கொறித்து
எளுறெங்கும் ஊறும் துவர்ப்பு எச்சிலால்
கழுமரத்தைத் திட்டுகிறேன்.
மடிநிறைய அள்ளிவந்த ஈரஞ்சுண்டிய தென்ன நெத்துகளால்
கழுபீடத்தின் திரியொளிகளை உடைக்கிறேன்.
வெற்று நத்தைக்கூடுகளின் பதத்தால்
கழுத்தோலில் வரிக்கோடுகள் கிழிக்கிறேன்.
கற்கொம்பு கிடாவை முட்டவிட்டு
கழுச்சதையை ரத்தங்கட்ட விடுகிறேன்.
கீத்தாய்ப் பிளக்கப்பட்ட வெள்ளரிப்பிஞ்சுகளின் விதைகளை
பற்களாக ஏவிவிட்டுக் கழுமுகத்தைப் பார்த்து
கேவலமாகச் சிரிக்க வைக்கிறேன்.
வெண்குருதி ஓடும் எருக்கஞ்செடியை
அடியோடு அகழ்வது மாதிரி
உதிரமரத்தைப் பிடுங்கி
தூர் மேலேயும் கழுவூசி கீழுமாக மாற்றி ஊன்றுகிறேன்.
சொல்பேச்சுக் கேட்காத எனது நடத்தைகளுக்குத்
தண்டனை வழங்க
கண்ணீரெனும் தொல்திரவமான
அம்மா வரவேயில்லை.
நீரலையில் பூச்சிகளைக் காக்கும்
நரம்புகள் நொடிந்த அரசயிலையொன்று
மண்ணேறி வந்து எனை அலாக்கத் தூக்கித்
தூரில் உட்கார வைக்கிறது.
அம்மா இயற்கையில் இலையாகிவிட்டாள் போல.